இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

A3 House of Publishing November 2023 Release

Status
Not open for further replies.

Andal Arugan

Administrator
Staff member
டீசர் 4
இன்னிங்ஸ் 1

“கிரிக்கெட்டே பார்க்கறது இல்லைன்ற உன்னோட ஆர்கியுமென்ட்ஸ்க்கு மாறா என்னைப் பத்தியும், என் விளையாட்டைப் பத்தியுமான அப்டேட்ஸ நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்க, குட்!” என்றவன், ஒரு பக்கத்தில் மட்டும் நீளமாய் தவழ்ந்த அவள் கூந்தலை ஒதுக்கி விட்டுவிட்டு,

“நீ சொல்றது எல்லாம் சரியா தப்பானு எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, யாரோ எங்கிட்ட ஒன்னு சொன்னாங்க… ‘IF YOU WANT TO WIN A BOXING FIGHT, FIRST YOU HAVE TO BE INSIDE THE RING’னு! இதுவும் ஒரு ஃபைட்தான், நீ சொன்ன அந்த எல்லா மாற்றத்துக்கான ஃபைட் தான்! இதை விட்டு நான் வெளியே வந்து இதை எதிர்த்து சண்டை போடறதை விட, இதுக்குள்ள இருந்து ஃபைட் பண்ணா தான் மாற்றம் வரும். அண்டர்ஸ்டாண்ட்? ஆனா, நான் மட்டும் தான் ஃபைட் பண்றேன், இத்தனை வருஷமா! கொஞ்சம் சோர்வா தான் இருக்கு. லோன்லியா இருக்கு. எனக்கு ஃபைட் பண்ண தெம்பு வேணும், அதுக்கு கூடத் துணை வேணும்!” என்று மெதுவாய் சொன்னவன், அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு ஆன்ட்ரூவின் புறம் திரும்பி,

“மே ஐ ஹாவ் அனதர் ட்ரிங்க்?” என்றான்.

லெனி அவனது இந்தப் பொறுமையையும், அமைதியையும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது விளையாட்டை அவள் விமர்சிக்கும்பொழுது, அவன் எப்பொழுதும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காமல் சண்டையிட்டுச் சென்று விடுவது வழக்கம்.

இவள் தான் பின்னே சென்று சமாதானம் பேசுவாள். அதே போல், இப்பொழுதும் அவனது தன்மானத்தைச் சீண்டினாள் என்றால் அங்கிருந்து விருட்டென்று சென்று விடுவான் என்று எண்ணியவளை, அவனது இந்த அமைதியும், பொறுமையும் வாயடைக்கச் செய்தது.

சட்டென்று அங்கே மூச்சு முட்டுவது போல் இருக்க, அவசரமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

வெதுப்பகத்தின் வெளியே கடல்காற்றில் அவள் சுவாசம் சீரடைய, என்ன செய்ய என்று புரியாமல், ஒரு பெருமூச்சுடன், கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு மீண்டும் உள்ளே சென்றாள்.

லெனி சென்ற பின், அங்கே இயல்பு நிலை திரும்ப ஆன்ட்ரூ இசை நிகழ்ச்சியை மீண்டும் துவங்கச் செய்திருந்தான். எல்லோரும் அவரவர் விருப்ப பாட்டை பாட சொன்னார்கள் அந்தப் பெண்ணை. ரிஷியை சொல்ல கேட்க, அவன் ஒரு சீட்டில் ஏதோ எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்தான்.

அவனையே பார்த்துக்கொண்டு கையில் இருந்த ஷேம்பெயின் குழலுடன் லெனி சாய்ந்து நின்றிருந்த தூணுக்கு எதிரே இருந்த மற்றொரு தூணில் சாய்ந்து நின்றான் ரிஷி. அங்கே இருந்த சிறிய மேடையில் கிட்டாருடன் ஒரு ஒற்றைக்கால் இருக்கையில் அமர்ந்த பெண், கிட்டாரின் நரம்புகளை மீட்ட எல்லோரின் கவனமும் அங்கே சென்றது.

பாடல் ஆரம்பித்த நேரம், ரிஷியின் விழிகளும், லெனியின் விழிகளும் அவரவரின் கட்டுப்பாட்டையும் மீறி சந்தித்து, ஸ்தம்பித்து நின்றது.

மாலை நேரம்
மழைத்தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒருப் போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்

ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழிமாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இதுதான் வாழ்க்கையா
ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே

ஓ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே
இதம் தருமே

உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இருகரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்

காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது

ஒரு காலையில் நீயில்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என..

என்று அவள் பாட, அதற்கு மேல் தன் நெஞ்சின் வலியை மறைக்க முடியாமல், கலங்கிய விழிகளுடன் தன் கிச்சன் ஏரியாவிற்கு செல்ல வேகமாய் நடந்தாள் லெனி.

எல்லா வேலைகளும் முடிந்து ஊழியர்களை அனுப்பியிருந்தவள் விளக்குகளையும் அணைத்திருந்தாள். ஒரே ஒரு விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. மனதில் வலி தாளாது, அங்கே இருந்த பளிங்கு மேடையைப் பற்றி நின்றவளின் தலை முன்னே சாய்ந்து குலுங்கியது.

கண்களின் நீர் அந்தப் பளிங்கு மேடையில் சொட்ட, உதடுகளைக் கடித்து மௌனமாய் குமுறினாள். வாழ்வில் தன் ஆழ்ந்த காதலை மறக்கவும் முடியாமல், அது திரும்பிக் கிடைக்கும்பொழுது ஏற்றுக் கொள்ளவும் இயலாமல், சிக்கித் தவித்த தனது முட்டாள்தனத்தை எண்ணி அழுது கரைந்தவளின் தோள்களில் குறுக்காக அவன் கை படர்ந்தது.

அவன் அவள் பின்னே வருவான் என்று அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது.

அழுகையில் குலுங்கிய அவள் மேனியை அப்படியே தன் மேல் சாய்த்திருந்தான். அவன் மார்பின் மேல் முதுகை சாய்த்து நின்றவள், அவள் மேல் இருந்த அவன் கையைப் பற்றித் தலையைப் பின்னால் சாய்த்து, விழி மூடி விசும்பலானாள்.

கோபம், துயரம், ஏமாற்றம் என்று வந்து போன உணர்வுகள் அவள் மனதை கொதித்தெழச் செய்தது.

“கப் கேக், லெட் கோ!” என்று மெல்ல அவள் காதில் அவன் கிசுகிசுத்த வேளை, சட்டென்று அவள் திரும்ப, அதற்குத்தான் அவன் காத்திருந்தது போல், அவள் இடை பற்றி இழுத்து, அவள் இதழ்களில் தன் இதழைப் பொருத்தியிருந்தான்.

பின்னே கேட்டது பாடலின் மீதி வரிகள்…

ஒரு முறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன

இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்துக்கொண்டால் என்ன
இரு திசைப்பறவைகள் இணைந்தே
விண்ணில் சென்றால் என்ன

ஆழ்ந்த முத்தத்தில் திளைத்து நின்ற இருவரும், ஒருவரை ஒருவர் சலிக்காமல் நாட, அங்கே இதழ்கள் திறந்து நாக்கள் மோதி, உயிர்கள் தன் இணையைத் தேடின.

பல ஜென்மம் கிடைக்காத பொக்கிஷம் கிடைத்தது போல் அவன் அவள் சுவையை ஆழ்ந்து அனுபவித்தான். அவனுக்குப் பிடித்த அந்த வாசம்! காபியும், சாக்லேட்டும் கலந்த அவளின் வாசம்! இருவருக்கும் பிற துணைகள் இருந்த காலங்களில் கிட்டாத மன நிம்மதி, இந்த ஒற்றை இதழணைப்பில் கிட்டியது… பல வருடம் முன் தொலைந்த அவர்களின் நிம்மதி!

என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இருவிழிப் பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன

என்று லெனியின் காதுகளில் எட்டிய வரிகளில் ஆழ்ந்து திளைத்த முத்த சங்கமத்தில் இருந்து மெல்ல விலகி நின்றாள் லெனி.

அவள் நெற்றியோடு நெற்றி முட்டி நின்றவனிடம்,

“ஐகான்ட் டு திஸ், யூ நோ இட்!” என்றாள் மெல்ல.

“ஏன்?” என்றான்.

இருவரின் விழிகளும் மூடி இருந்தது. ஒருவரின் சுவாசம் மற்றொருவர் மீது படர, அந்த உஷ்ணத்தில் வார்த்தைகள் கிசுகிசுப்பாய் வந்தன.

“உன் இ..இ..இ..இமேஜ் பாதிக்கும் ரிஷி, வேண்டாம்!” என்றவளிடமிருந்து விலகாமல்,

“லிசன், இந்தத் தடவை நான் எங்கையும் போகப் போறது இல்ல, நம்பு!” என்றான்.

அவள் கன்னத்தின் இரு புறமும் கைகளை வைத்திருந்தவனின் கைகள் மேல் அவள் கரங்கள் இருக்க, அவன் அப்படிச் சொன்ன நொடி, எக்கிப் பிடித்து அவனை இறுக கட்டிக்கொண்டாள்.

ஒரு நொடி அவளின் செய்கை நம்பிக்கையை அவனுக்கு அளிக்க, மறுநொடி அவனை விட்டு மெல்ல விலகிச் சென்று பின்னெட்டுக்கள் வைத்தாள்.

அவன் விழிகளைப் பார்த்தபடி, ‘இல்லை’ என்பது போல் தலையசைத்து உறுதியாய் விலகினாள்.


மீதி புத்தகத்தில்!
 
Status
Not open for further replies.
Top