இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Story Thread

Status
Not open for further replies.

saaral4150

Moderator

கதைக்கு முன்

டல்ஹவுசி

ஐந்து மலைகள் கொண்ட மலைப்பிரதேசமாகும் டல்ஹவுசி! கடல் மட்டத்திலிருந்து 1970 மீட்டர் உயரத்தில் உள்ளது! இவ்வருடம் டல்ஹவுசியை குளிர் வாட்டி எடுத்தது! சுற்றுலா மாந்தர்களின் வருகை கம்மியாக இருந்தாலும், அங்கேயே வாழும் மக்களின் அன்றாட பிழைப்புக்கு ஏதாவது ஒரு வழி இருந்துக்கொண்டே தான் இருந்தது!​

குளிரெல்லாம் அந்த மண்ணின் மாந்தர்களுக்கு பாதிப்பெல்லாம் தரவில்லை! அழகிய இளங்காலையில் சாலை சீரமைப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்!​

இமாச்சல பிரதேசத்தின் பள்ளத்தாக்கு வழியாக மலை மற்றும் மரங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் சாலை தான் பனிகேத் – டல்ஹவுசி சாலை!​

சில தினங்களாக நடந்த விபத்துகளால் சாலையோர முனையில் பாரபெட் எனப்படும் சின்னஞ்சிறு மதில்சுவர் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்!​

“ஹேய் ரூஹான்! ஆவோ... கர்மா கரம் சாய் பியோ... அவுர் காம் தேக்கோ!!!” என்று மதில்சுவருக்கு மேல்பூச்சு பூசிக்கொண்டு இருக்கும் தனது நண்பனை தேநீர் பருக அழைத்தான் குஷால்!​

“ஹான்! ஹான்! மெய்ன் ஆத்தி ஹூன்!” என்று பள்ளத்தாக்கு பக்கமிருக்கும் பூச்சினை கண்ணெடுக்காமல் எக்கி பூசிவிட்டு எழுந்த ரூஹான், குஷாலை நோக்கி ஒரெட்டு வைக்கும் பொழுது தெரியாத்தனமாய் முன்னேயிருந்த அவன் எப்பொழுதும் அமரும் சிறு டப்பாவின் மீது கால் பட்டுவிட, அதுவோ பள்ளத்தினை நோக்கி உருண்டது மட்டுமில்லாமல், அதனின் மேல் கால்வைத்த ரூஹானையும் நிலை தடுமாற வைத்திருந்தது!​

சடுதியில் ரூஹான் அந்த பள்ளத்தை நோக்கி குனிந்து விழப்போகும் முன் குஷால் ஓடிவந்து அவனைத் தாங்கி, சாலையின் பக்கம் நண்பனோடு வந்தவன், நடக்கவிருந்த விபரீதம் கண்டு மிரண்டுதான் போனான்!​

“ஹேய் ரூஹான்! பார்த்து வரமாட்டியா? கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் என்ன ஆகியிருக்கும்?”​

பதட்டத்தோடும், அக்கறையோடும் கடிய, ரூஹானிடம் பதில் மொழியே இல்லை! நொடி நேரம் என்றாலும், ரூஹானது கண்கள் அந்த பள்ளத்தாக்கின் அடியாழம் வரை தொட்டு சென்றிந்தது!​

அவன் கண்கள் அங்கே கண்டது என்ன? உண்மையில் தான் கண்டது சரிதானா? இல்லை ஏதும் மனப்பிரம்மையா?​

கண்கள் அலைப்புற, கைகள் நடுங்க, அந்த குளிரிலும் நொடியில் நெற்றியில் உண்டான வியர்வை முத்துகளோடு நண்பனது பிடியில் விடுப்பட்டு மீண்டும் பள்ளத்தாக்கின் பக்கமே ஓடியிருந்தான் ரூஹான்!​

“டேய்! என்ன பண்ணுற?” குஷால் வார்த்தையாலும் செயலாலும் தடுத்தும் ரூஹான் நிற்கவில்லை!​

நண்பனது பின்னோடு தானும் ஓடிய குஷால், “ரூஹான்! என்னடா ஆச்சு உனக்கு?” என்று கேட்டான்!​

தனக்கு பதில் தராமல் பள்ளத்தாக்கின் விளிம்பு நோக்கி சென்று அங்கு குத்துக்காலிட்டு அமர்ந்து எக்கி எக்கி பார்க்கும் ரூஹானின் மேல் கோபம் வந்தாலும், ‘அப்படி என்னத்தை பார்க்கிறான்?’ என்று புரியாமல் நண்பனது பார்வையை தொடர்ந்து தானும் அந்த இடத்தை நோக்கி பாதுக்காப்பாய் சென்று பார்வையிட்டான்!!!​

அங்கோ... அவன் கண்டது...​

அத்தனை ஆழம் செல்லும் பள்ளத்தாக்கின் ஒரு பக்க நடுவில்... மலை இடுக்குகளில் வீற்றிருக்கும் பெரிய காட்டுமரம் ஒன்றின் தடிமனான பிடியில்... பிணந்தின்னி கழுகுகள் வட்டமிட்டுக்கொண்டிருக்க, ஒருவன் உடல் முழுவதும் ரத்தம் உறைந்துப்போன காயங்களுடன் நிலைத் தடுமாறி தலைகீழாக தொங்கியபடி இருப்பதை தான்!​

“டேய் ரூஹான்? யாரோ செத்துக்கிடக்குறாங்கடா...”​

குஷாலின் கண்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது!​

ரூஹானது கண்களோ நொடியும் இமைக்காமல், “இல்லை... உயிரோடத்தான் இருக்கான்!” என்று அவனை சொல்ல வைத்தது மட்டுமல்லாமல், அந்த ‘அவனின்’ லேசாய் அசையும் கைவிரல்களின் மேலேயே பார்வையை வீற்றிட செய்திருந்தது!!!​

 

saaral4150

Moderator
1​


சிங்காரச் சென்னையின் அழகான பருவ மழைக்கால விடியல் தார் சாலைகளில் ஈரப்பதத்தை இன்னும் மிச்சம் வைத்திருந்தது. சிலுசிலுவென்ற காலைநேர காற்று வேப்பமர இலைகளின் ஊடே புகுந்து அந்த பிரமாண்ட பங்களாவின் தோட்டப்பகுதியில் அமர்ந்திருந்த இரு பெண்களின் தேகங்களை சிலிர்க்கத்தான் செய்தது!​

“அந்த ஆக்சிடென்ட் நடந்து ஏழு வருஷம் ஆச்சு! யூ ஆர் இன் சேவ் ஹேண்ட்ஸ்! இன்னமும் அதிலிருந்து வெளிவராம இருந்தா எப்படி? போனதெல்லாம் விட்டுட்டு புதுசா உன் கண்ணு முன்னாடி இருக்க இந்த வாழ்க்கையை அழகா ஆனந்தமா அனுபவி!” என்று புன்னகையோடு அறிவுறித்தினார் மனநல மருத்துவர் ஏஞ்சலின்!​

அவரின் எதிரில் கண்கள் பணிக்க அமர்ந்திருந்தவளின் காதோர கற்றை முடிகளை காற்றின் தழுவல்கள் சிணுங்கலோடு விடுவிக்க செய்ய, அதை மீண்டும் காதோரம் செருகியவளோ...​

“என்னால முடியலை! சந்தோசமா வாழமுடியலை! எனக்கு எல்லார்கிட்டயும் நல்லா பழகணும்ன்னு தான் இருக்கு! ஆனா... ஏதோ ஒரு பிம்பம் இன்னமும் என்னை சுத்தியிருக்க மாதிரி ஒரு ஃபீல்! அது என்னை அப்படியே முழுங்கிருமோன்னு பயமாவே இருக்கு டாக்டர்!” என்று தனது மனக்கவலையை முன் வைத்தாள்!​

“நித்திலா! இன்னும் உன்னோட இறந்துப்போன ஹஸ்பன்ட் பத்தி நினைக்கிறயா?”​

சிறு அமைதிக்குப் பின் கேட்கப்பட்ட அந்த கேள்வியின் தாக்கம் நித்திலாவின் நெஞ்சம் வரை ஊடுருவியது!​

“எப்படி நினைக்காம இருக்கமுடியும்?” என்று அவரிடமே பதில் கேள்வி எழுப்பியவள்...​

“அதேநேரம்... என் குழந்தையை பத்தியும் நினைக்கிறேன்!!! அன்னைக்கு நான் எடுத்த முடிவு தப்போன்னு எனக்கு தோணுது! இப்போ அந்த குழந்தை இருந்தா எனக்கு நிம்மதியா வாழ முடிஞ்சிருக்குமோ என்னவோ?” என்று தடுமாற்றத்தோடு குழப்பமும் சேர்ந்து உரைத்தாள் நித்திலா!​

“அன்னைக்கு நீ எடுத்த முடிவு ரொம்ப சரி தான் நித்திலா! இதுக்குமேல இந்த விஷயத்தை பேசி உன்னை நீயே வருந்த வைச்சுக்காத!” என்று லேசான கோபத்தோடு சொன்ன ஏஞ்சலின்,​

“உன்னோட குழந்தை... அதாவது அந்த மூணு மாச கரு சரியான க்ரோமோசோம் வளர்ச்சில இல்லை! அண்ட் யூ வேர் இன் ய ஹெவி ப்ளீடிங் டூ! அபார்ஷன்னு ஒன்னு பண்ணாட்டி அது உன்னோட உயிரையும் பெரிய ரிஸ்க்ல கொண்டு தள்ளியிருக்கும்! அதுக்கும் மேல கருவும் உன்னோட கர்ப்பப்பைலயும் இல்லை... சோ... அது சரியான முடிவு தான்!” என்று அழுத்தமாய் உரைத்து நித்திலாவிற்கு புரிய வைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்!​

இன்னமும் கண்ணீரோடு அவரை ஏறிட்டவளிடம், “கொஞ்சம் ப்ராக்டிக்கலா இரு நித்திலா! அந்த கரு கர்ப்பப்பைல இருந்திருந்தாலும், அது பிறந்திருந்துச்சுனா சரியான வளர்ச்சில இருந்து இருக்காதும்மா! பிறந்ததுக்கு அப்பறம் நிறையவே கஷ்டப்பட்டிருக்கும்! அப்படியொரு கஷ்டத்தோட அது வளரட்டும்ன்னு நீ நினைக்கிறயா?” என்று கேட்டு அவளிடமே பதிலை வரவைக்க முயற்சி செய்தார் ஏஞ்சலின்!​

“அப்படி கல்நெஞ்சம் படைச்சவ நான் இல்லை...! ஆனாலும் என்னால தாள முடியலையே! ஒரு உயிரை கொன்னுட்டேன்னு என்னையவே எனக்கு பிடிக்கலை!” என்று சொல்லிவிட்டு தலைகுனிந்து குலுங்கி அழுதாள் நித்திலா!​

அவளின் மனது ஏஞ்சலினுக்கும் புரியத்தான் செய்தது!​

‘இந்த பெண்ணுக்கு இதற்கு மேலும் என்ன சொல்லி புரியவைப்பது?’ என்று எண்ணியவர் அவரறியாமல் ஒரு பெருமூச்சை வெளியிட்டார்!​

“முதல்ல அழறதை நிறுத்து நித்திலா! உன்னை கஷ்டப்படுத்தணும்ன்னு இப்படி பேசலை! நீ எனக்கு ஒரு பொண்ணு மாதிரி! உன் கண்ணு முன்னாடி பரந்த உலகம் இருக்கு! நீ புத்தியுள்ள பொண்ணு! நிதானமா யோசிச்சு செயல்படு... ஆனா நல்லவிதமா யோசி... அதுமட்டும் தான் என்னோட அட்வைஸ்!” என்று ஆறுதலோடு தைரியமும் வழங்கினார் அந்த அன்பான பெண்மணி!​

சில நிமிடங்களுக்கு பிறகு நிமிர்ந்தவள், “புரியுது டாக்டர்!” என்று கண்களை துடைத்துக்கொண்டு, “உங்களோட டயத்தை ரொம்ப எடுத்துக்கிட்டேன்!” என்று சொன்னாள்!​

“ச்சே! யூ மேக் மை டைம் ப்ரெஸ்யஸ்! எனக்கும் உன்கூட பேசினது கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு! பாரு வீட்டுல நாலு பேரும் வேலை, காம்ப்ன்னு போயாச்சு! ஒரே தனிமை...” என்றார் ஏஞ்சலின்!​

“ஜோ?”​

“ஜோ பத்தி தான் உனக்கு தெரியுமே... அவ ஒரு உலகம் சுற்றும் வாலிபி...!” என்று மகளை பற்றி சிலாகிப்பாக உரைத்தார்!​

சின்ன சிரிப்பினை அவருக்கு பதிலாய் தந்தவளோ, “ஃபீஸ்...” என்று இழுத்தாள்!​

"டோன்ட் பீ சில்லி... பொண்ணு அம்மாக்கு ஃபீஸ் தருவாளா?” என்று பணம் வேண்டாமென்று மறுத்தவர், “ஒரு டீ குடிச்சிட்டு போ!” என்று அவளுக்கு விருந்தோம்பல் புரிந்தார் ஏஞ்சலின்!​

“அச்சோ! வேணாம் டாக்டர்...” என்று நித்திலா மறுக்க,​

“என் டீ ரொம்ப நல்லாயிருக்கும்ன்னு என் பையன் சொல்வான்! ஒரு ட்ரை பண்ணேன்!” என்று அழைத்து தேநீர் வார்த்து பருகவைத்தார் ஏஞ்சலின்!​

உண்மையில் தேநீர் அருமையாய் இருந்தது! துளி இஞ்சியின் காரமும், ஏலக்காயின் வாசமும், சற்று தூக்கலாக போடப்பட்ட சக்கரையின் துளி தித்திப்பும் இன்னுமின்னும் தேநீர் வேண்டும் என்று அவளின் நாவை தூண்டியது!​

“டீ ரொம்ப நல்லாயிருக்கு!” புன்னகையோடு சொன்னாள் நித்திலா!​

“ஹ்ம்ம்... தாங்க்ஸ் ய லாட்!” என்று பதில் புன்னகை தந்தார் ஏஞ்சலின்!​

“நான் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்! யாருன்னே தெரியாத எனக்கு நீங்க எல்லாரும் அளவுக்கு அதிகமான உதவி செஞ்சுருக்கிங்க! படிக்க வைச்சு... வேலைக்கு ஏற்பாடு பண்ணி... நல்ல மனுஷங்கள் சூழ இருக்கமாதிரி அரவணைச்சுன்னு... இந்த உதவி எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்கமாட்டேன்... மறக்கக்கூடாது!” நித்திலாவின் குரல் நன்றிப்பெருக்கோடு ஒலித்தது!​

“ஒரு டீக்கா இவ்ளோ எமோஷனலா பேசுவ?” என்று கிண்டல் செய்தவர்,​

“நீ ரொம்ப யோசிக்கிற. கடவுள் மனுஷங்களை படைச்சதே ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா அனுசரணையா இருக்கணும்ன்ற காரணத்துனால தான்! அவர் படைப்பை நான் சரிவர செய்றேன்! நீயும் அதுபோல யாருக்காவது செய்! அது போதும்! மத்தபடி இந்த நன்றியெல்லாம் வேண்டாம் பொண்ணே!!” என்று நித்திலாவின் தோளில் தட்டி உரைத்தார் ஏஞ்சலின்!​

“நான் வரேன் டாக்டர்! இன்னைக்கு லேட் ஆகும்ன்னு எங்க மேடம்கிட்ட சொல்லிட்டேன்!” என்று ஏஞ்சலினிடம் விடைப்பெற்று தனது ஆக்டிவாவில் அலுவலகம் புறப்பட்டாள் நித்திலா!​

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவரது கண்களிலிருந்து அவள் மறைந்தாலும், அவரின் எண்ணத்திலிருந்து அவள் மறையவில்லை!​

‘தான் சொன்னதை கேட்டு நடப்பாளா? அல்லது... நடந்து முடிந்த பழைய நாட்களை நினைத்து மருகுவாளா?’​

நித்திலாவின் நல்வாழ்வுக்காக கடவுளிடம் ஜெபம் செய்ய புறப்பட்டார் அவர்!​

******​

அதேநேரம்... போட் க்ளப் பகுதியின் மற்றொரு தெருவில் இருக்கும் ஒரு டூப்ளெக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து...​

“அஜய்! உன் பையனை வந்து என்னன்னு கேளு! நான் என்ன கொடுத்தாலும் வாயையே திறக்க மாட்டிக்கிறான்!” என்று புகார் வாசித்தார் அஜய் அன்னையும், இப்படி அவரை புலம்ப வைத்துக்கொண்டிருக்கும் ஒன்றரை வயது ஆதிபனின் பாட்டியுமான வாஸந்தி!​

அந்த காலை வேளை எப்பொழுதும் நடப்பது தான்! எப்பொழுதும் உதவிக்கு வரும் கணவர் ஹரிஹரனோ கிளைமேட் நன்றாக இருக்கிறது என்று அவரது பிசியோதெரபி குழுவோடு நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டார்!​

அவர் இருந்தாலாவது, இதோ... இப்பொழுது இவரை படுத்திக் கொண்டிருக்கும் இந்த குட்டிக் கண்ணனை சமாளித்துவிடுவார்! அப்படியொன்றும் அவன் சுட்டியில்லை!!! அழகான சமர்த்துப்பையன் தான்!​

ஏதோ எப்பொழுதாவது... அவனுக்கு பொழுது போகவில்லை என்றால் இப்படி ஆட்டம் காட்டுவது வழக்கம்!!! அது கூட செய்யவில்லை என்றால் என்ன குழந்தை அவன்?​

அப்படி என்ன செய்கிறான்?​

செப்பு உதடு பிதுக்கி, “புர்ர்ர்ர்... புர்ர்ர்ர்...” என்று சொல்லி, அங்குமிங்கும் தலையையாட்டியவன், அமர்ந்திருக்கும் குழந்தைகள் நாற்காலியில் குனிந்து அப்படியே தலையை வேகமாக சுழற்ற ஆரம்பித்துவிட்டான்!​

“அடேய்! ஆதிக்கண்ணா... இப்படி செய்யக்கூடாதும்மா! தலை வழிக்கும்!” என்று பேரனிடம் மழலைக் குரலில் மிழற்றியவர்,​

“உங்கப்பன்காரன் சீக்கிரம் வந்தா தான் என்னவாம்? எதுக்கு தான் இப்படி என்னை காக்க வைக்கிறானோ?” என்று தனக்குள்ளேயே புலம்பிய நொடி... இறங்கி வந்தான் வாஸந்தியின் ஆருயிர் மகன் அஜய் பார்கவ்!​

ஆறடி மூன்றங்குல உயரத்தில், மனதின் வெறுமையை தவிர்க்க அவன் விடாமல் செய்யும் உடற்பயிற்சியினால் இறுகிப்பிடித்த தசைகோளங்கள் அவனது உடல் உறுதியினை மட்டுமல்ல, எந்தவொரு சவால்களையும் சந்திப்பவன் என்று எடுத்துக்காட்டியது! கூர் நாசியின் முனை தொட்டால் கத்தி போல கீறுமோ? யாருக்குத் தெரியும்?​

அடர்ந்த தாடி மீசையுடன், படிய வாரப்பட்ட அடர்ந்த சிகையிலும் ஒன்றிரண்டு கற்றைகள் காற்றின் வருகையால் அகன்ற நெற்றியில் விழ, அதை ஒதுக்கியவாறே அன்னையை கண்டவனது விழிகள் எப்பொழுதும் போல லேசான சோம்பலும், அதைத் தவிர்த்து எந்தவித உணர்வினையும் காட்டாத சலனமில்லா கண்களாகவே தென்பட்டது!​

அவனது லேசான பழுப்பேறிய நிறத்திற்கு (TAN SKIN) உடுத்தியிருந்த கருநிற சட்டையும், சார்கோல் நிற ப்ளேயிட் கால்சராயும் அத்தனை அம்சமாய் பொருந்தியிருந்தது!​

வாஸந்தியின் நெஞ்சமோ மகனது வனப்பான தோற்றம் கண்டு பெருமையில் விம்மிய அதேநேரம்... வேதனையிலும் தள்ளியது!​

‘எப்படி சந்தோஷமாய் வாழ வேண்டியவன்? கடவுள் இப்படியா இவனை கவலையில் தள்ளுவார்? அவருக்கு என்ன கண் இல்லையா? இந்த முப்பத்தி இரண்டு வயதில் கண்ணுக்கு நிறைவாய் வாழவேண்டிய இவனை தனிமரமாக்க அவருக்கு எப்படி தான் மனம் வந்தது?’ என்று கடவுளை திட்டியபடி இருக்க, அவரருகில் உடை கசங்கினாலும் பரவாயில்லை என்று கீழே கார்பெட்டில் சம்மணமிட்டு அமர்ந்தான் அஜய்!​

அன்னையின் கையிலிருந்த உணவு கிண்ணத்தை வாங்கி, மகனுக்காக அன்னை மசித்துவைத்த இட்லி சாம்பார் கலவையை கரண்டியில் சின்னதாக எடுத்து மகனுக்கு ஊட்ட ஆரம்பித்தான்!​

வாஸந்தியோ இது அறியாமல் மகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்! எத்தனை நிமிடங்கள் கடந்ததோ? அவரின் கன்னத்தை ஆதிபன் தனது பிஞ்சு விரல்களால் எக்கித் தட்ட, அப்பொழுது தான் சுயத்துக்கே வந்தார்!​

‘என்ன நடந்தது இங்கே?’ என்று முழிக்கும் போதே, காலி கிண்ணத்தை அன்னையின் கையில் திணித்திருந்தான் அஜய்!​

“என்ன உன் மகன் சாப்பிட்டானா? நான் இவ்ளோ நேரம் அவன்கூட மல்லுக்கட்டிட்டு இருக்கேன்! அதெப்படி உன்கிட்ட மட்டும் அடம் பண்ணாம சாப்பிடுறான்?” என்று சந்தேகத்தோடு மகனிடமே மல்லுக்கு நின்றார்!​

“ஹ்ம்ம்... அதை வளர்ந்ததும் உங்க பேரனே சொல்லுவான்! இப்போ என்னை வாசல் வரைக்கும் வழியனுப்பி விடுங்க!” என்று மகனுக்கு வாய்துடைத்தபடி தூக்கிக்கொண்டு வாசல் நோக்கி சென்றான்!​

ஆதிபனோ, தந்தையின் ஸ்பரிசம் மாலை வரை கிடைக்காதென்று உணர்ந்தானோ என்னவோ? பெற்றவனின் கழுத்தில் இறுக கைப்போட்டு அவனது தோளில் ஒய்யாரமாக வீற்றிருந்தவன், இப்பொழுது கழுத்தோடு முகம் பதித்துக்கொண்டான்!​

அவனை ஆதுரமாக முதுகு தடவிய அஜய்வும், “அப்பா போயிட்டு வரட்டுமா கண்ணு!” என்று மகனிடமே கேட்க, “பப்பா... பா... ப்ப்பா...” என்று கிள்ளை மொழியில் பதில் சொல்லியவன் இன்னமுமே இறுக்கி கொண்டான்!​

பெற்றவள் இருந்திருந்தால் நெகிழ்ச்சியோடு நெஞ்சம் விம்ம இருந்திருப்பாள்! இதோ இந்தக் குட்டிக்கண்ணனது பட்டுக்கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்திருப்பாள்!​

ஆனால் விதி... அவளை கடவுளிடம் அனுப்பிவிட்டு, மகனை தாயில்லாமல் ஆக்கிவிட்டது!​

கண்கள் மூடி தன் நெஞ்சில் உண்டான வலியை குறைத்தவன், தனது அரிசி பற்கள் காட்டி சிரித்த பிள்ளையின் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை பதித்து வாஸந்தியிடம் கொடுத்துவிட்டு, மோடாவில் அமர்ந்து ஷூவை மாட்டினான்!​

“ஈவ்னிங் பார்க் போயிட்டு வாங்க! அப்படியே அப்பாவோட க்ராசரிக்கும் போயிட்டு வந்துருங்க” என்று அஜய் சொல்ல, சரியென்று தலையாட்டினார் வாஸந்தி!​

சில நொடி அமைதிக்கு பிறகு மகனை விளித்தவர், அவன் அவரை ஏறிட்டதும், “ஆதிக்கு... ரெண்டு வயசு ஆகப்போகுது...!” என்றார் மிகவும் தயக்கமும் திணறலும் கொண்டு!​

“இந்த தடவை அவன் பர்த்டேயை கிராண்டா செலேப்ரெட் பண்ணிறலாம்!” என்று சலனமே இல்லாமல் சொன்னவன், அதற்குமேல் அன்னை என்ன கேட்பாரென்று புரிந்துக்கொண்டு அந்த பேச்சுக்களுக்கு தடைப்போடுபவன் போல “நான் வரேன்ம்மா!” என்று லிஃப்ட் நோக்கி கிளம்பினான்!​

வாஸந்தியோ, ‘நான் என்ன கேட்க வரேன்? இவன் என்ன பேசிட்டு போறான்? இவன் நம்ம வழிக்கு வரமாட்டேன்கிறானே? எப்படி போனாலும் தடா போடுறானே? இவனை எப்படித்தான் என் பேச்சை கேட்கவைக்கிறது?’ என்று கடுப்புடன் சிந்திக்க ஆரம்பித்தார்!​

அவரின் எண்ணத்திற்கு உதவிகரமாக இருக்கப்போகிறவனே அவரின் பேரன் தான் என்று தெரிந்திருந்தால் இப்படி கவலைப்பட்டிருக்கமாட்டாரோ என்னவோ?​

 
Status
Not open for further replies.
Top