இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Episode -28

Janani Naveen

Administrator

அத்தியாயம் - 28​

அன்று விடியல் அவர்களின் குடும்பத்திற்கு நல்ல விதமாக விடிய வில்லை. முதல் நாள் இரவு மேனகாவைத் திட்டி அனுப்பி விட்டு, அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் அறைக்குச் சென்றவன், உறங்கிய சில மணி நேரத்திலேயே...​

“அச்சோ, படுபாவி இப்படி பண்ணிக் கிட்டாளே. இப்போ நான் என்ன பண்ணுவேன்?” என்ற மல்லிகாவின் அலறலில் தான் நாள் விடிந்தது.​

ஆம். மேனகா தூக்க மாத்திரை விழுங்கி இருந்தாள். மயக்கத்தில் இருந்தவளை அள்ளி எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தனர், அவளது அண்ணனும் தந்தையும்.​

அவர்களுடன் கிளம்பத் தயாரான விதுரனை வேதலிங்கம் தடுத்து விட்டு, அவரும் கிரிஜாவும் மட்டும் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினர்.​

பதட்டத்துடன் வாசலுக்கு வந்து விசாரித்த முரளியி்டம், மருத்துவ மனையில் இருந்து தகவல் அனுப்புவதாகக் கூறி விட்டுச் சென்றார்.​

விஷயம் தெரிந்து அவர் பின்னோடு வெளியே வந்த திலோவுக்கும், இது அதிர்ச்சி தான். விதுரனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள், பெண். அவளது முறைப்பை உணர்ந்து,​

‘அவ ஒரு அரைப் பைத்தியம்னா, நான் கட்டி இருக்கறது முழுப் பைத்தியம்’ என்று மனதோடு புலம்பியவன், மருத்துவ மனையில் இருந்து அழைப்பு வருவதற்காகக் காத்திருந்தான்.​

மேனகாவின் நிலை என்னவோ என்று, அனைவருமே சற்று பதட்டத்துடன் தான், அமர்ந்திருந்தனர்.​

விதுரனுக்கு வருத்தத்தையும் மீறிய குற்றக் குறு குறுப்பு. தன் மீது தவறில்லை. அவள் மனதில் இத்தனை தூரம் தன் பால் எண்ணம் வரும் வகையில், அவன் அவளிடம் தனிப்பட்ட முறையில் நடந்து கொண்டது இல்லை. அப்படி இருந்தும், இந்தப் பெண் இப்படி செய்து கொண்டாளே, தன்னால் தானோ என்று மனம் வருந்தியது.​

“பைத்தியக்காரி. முளைச்சு மூனு இலை விடலை. அதுக்குள்ள அப்படி என்ன காதல். அதுவும் தன்னை காதலிக்காதவனுக்காக தற்கொலை செய்யும் அளவுக்கு.” என்று மெலிதாக முணு முணுத்து அவளைச் சாடும் போதே, அவனது மனசாட்சி அவனை எள்ளி நகைப்பது போலத் தோன்ற, தலையை இடவலமாக அசைத்து, அழுந்த தலை கோதிக் கொண்டவனின் மனது, மேனகாவுக்கு ஒன்றும் நேர்ந்து விடக் கூடாதே என்று பிரார்த்திக்கத் தொடங்கியது. அவனது வருத்தம் அவனது கண்களில் அப்பட்டமாகப் பிரதிபலிக்க​

‘தேவையாடா இப்படி காதலை இழந்துட்டு தவிக்கற? என் ராசி உன்னையும் இப்படி பாதிச்சு இருக்கு.’ என்று மனதோடு வருந்தினாள், அவனது மனையாள்.​

நிமிடங்கள் கரைந்து சில மணி நேரத்திற்குப் பின் வேதலிங்கத்திடம் இருந்து, மேனகா பிழைத்துக் கொண்டாள் என்ற செய்தி வந்ததும் தான், அனைவரும் நிம்மதியாக உணர்ந்தனர்.​

முரளி மருத்துவமனைக்குக் கிளம்ப, திலோவும் உடன் வருவதாகக் கூறினாள். மல்லிகா வருத்தத்தில் என்ன வேண்டு மானாலும் பேசக் கூடும் என்ற காரணத்தினால் தான், விதுரனை வர வேண்டாம் என்று விட்டுச் சென்றார், வேதலிங்கம்.​

இப்போது திலோ சென்றால் அவளை ஏதாவது கூறி விடக் கூடும் என்று அவளிடம் நேரடியாக,​

“திலோ, மல்லி அத்தை ஏதாவது தப்பாப் பேசிட வாய்ப்பு இருக்கு. மாமா மட்டும் போகட்டும் நீ இரு.” என்றான் தன்மையாக.​

அவனை முறைத்துவிட்டு “அவங்க பொண்ணு வாழ்கையை தூக்கி தான் எனக்குக் கொடுத்து இருக்காங்க. அவங்க என்ன திட்டினாலும், நான் வாங்கித் தான் ஆகனும்.” என்றாள் கோபத்துடன்.​

“மண்ணாங்கட்டி” என்று முணு முணுத்தவன், “மாமா, ஒரு பத்து நிமிஷம் இருங்க. ரெடி ஆகிட்டு வரேன்.” என்றவன் அவளை ஒரு முறை முறைத்து விட்டு உள்ளே சென்றான்.​

சொன்னது போல, அடுத்த பத்து நிமிடங்களில் கிளம்பி வந்தான்.​

மருத்துவமனையில் அப்போது தான் கண் விழித்திருந்த மேனகாவிடம், “ஏன்டி இப்படி என் உயிரை வாங்கற? எங்களை பத்தி எல்லாம் நினைச்சுப் பார்த்தியா?” என்றார் மல்லிகா அழுகையுடன்.​

விடாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த மேனகா, மல்லிகாவைப் பார்த்து முறைத்து விட்டு, “எ..என்னை ப..பத்தி யாராவது நினைச்சுப் பா..பார்த்தீங்களா? இல்லைல்ல? அ..அப்புறம் நான் எதுக்கு உங்களைப் பத்தி நி..நினைக்கணும்?” என்றாள் திக்கித் திணறி.​

“லூசு மாதிரி உளராத மேனகா. அம்மா அப்பா யாரு என்னான்னு தெரியாத அனாதைப் பயலை கல்யாணம் பண்ணி வைக்காமல் இருந்தோமேன்னு நானே நிம்மதியா இருக்கேன். நீ என்னன்னா இன்னும் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க.” என்று மல்லி அவளிடம் கடிந்து கொள்ள,​

அருகே அதுவரை தாய் மகள் இருவரின் சம்பாஷனையில் தலையிடாமல் ஒதுங்கி இருந்த வேதலிங்கமும் கிரிஜாவும், அவரது பேச்சில் கொதித்துப் போயினர்.​

அதிலும் அந்த ஒரு வார்த்தை, கிரிஜாவின் வறட்டுப் பிடிவாதத்தை தகர்த்தெரிந்து, தாய்ப் பாசத்தை வெளிக்கொண்டு வரப் போதுமானதாக இருந்தது.​

வேதலிங்கம் பேசும் முன் முந்திக் கொண்ட கிரிஜா,​

“யாரைப் பார்த்து அண்ணி அனாதைப் பயன்னு சொல்றிங்க? அவனுக்கு குத்துக்கல்லு மாதிரி, அம்மா அப்பான்னு நாங்க இருக்கோம். என் வயத்துல பொறக்கலன்னாலும் அவனை மார்லையும் தோளிலேயும் போட்டு வளர்த்தது நாங்க.​

உங்களுக்கு அண்ணன் வீட்டு உறவும், எங்க அண்ணனுக்கு அவரோட தங்கச்சி உறவும் வேணும்னா, இனி ஒரு தடவை அவனை நீங்க அனாதைப் பயன்னு சொல்லக் கூடாது.” என்றாள் கண்ணீருடன் மூக்கு விடைக்க.​

மல்லிகாவை அழுத்தமான பார்வை பார்த்தபடி வேதலிங்கம், “நான் அந்த சபையில் உண்மையைச் சொல்லாமல் இருந்திருந்தா, இந்நேரம் அந்த கல்யாணம் நடந்து இருக்காது. அதிர்ச்சியில் உங்க அண்ணி வாயை அடைக்கவும், இந்த குடும்பம் உடையாமல் இருக்கவும் தான், உண்மையைச் சொன்னேன். நான் உண்மையைச் சொல்ற வரை அவனை மாப்பிள்ளைன்னு தலையில் தூக்கி வெச்சு ஆடிட்டு, இப்போ, இப்படி தூக்கி எரிஞ்சு பேசற பார். இது தான் உன் புத்தி.”​

என்றவரிடம் பதிலுக்கு எடக்காகப் பேச வாய் திறந்த மல்லிகாவை, ஒரு கண்டனப் பார்வையில் அடக்கி விட்டு,​

“நீங்க வருத்தப்படாதிங்க, மாமா. எப்படி இருந்தாலும் விது நம்ம பையன். அவ இனிமே எதுவும் பேச மாட்டா.” என்றார் சுந்தரம் சமாதானமாக.​

அவரிடம் தலை அசைத்து விட்டு, மேனகாவிடம் திரும்பிய வேதலிங்கம்,​

“இங்க பார் மேனகா, விதுரனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. திலோ தான் அவனோட பொண்டாட்டி. இதை யார் மாத்த நினைச்சாலும் விது மாத்த விட மாட்டான். இந்த கிறுக்குத் தனத்தை எல்லாம் விட்டுட்டு, உன் மனசை மாத்திக்கும் வழியைப் பார்.” என்றார் சற்று காட்டமாகவே.​

அவள் பதில் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு கண்ணீர் சிந்த, இதை ஒரே நாளில் சரி செய்து விட இயலாது. கொஞ்சம் கொஞ்சமாகப் பேசித் தான் புரிய வைக்க வேண்டும் என்று உணர்ந்து, “கொஞ்ச நேரம் தூங்கட்டும், அவளை விடுங்க.” என்று கூற, அனைவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.​

அப்போது சரியாக முரளியும் திலோவும் விதுரனுடன் வந்து சேர்ந்தனர்.​

சற்று முன் அண்ணனின் பேச்சிலும் கணவனின் கண்டனப் பார்வைக்கும் சற்று பயந்து அடங்கி இருந்த மல்லிகா, எடாக்காக எதையும் பேசாமல் வாய் மூடி நின்றார்.​

“இப்போ, எப்படி இருக்கு புள்ளைக்கு.” என்று உண்மையான அக்கறையுடன் பதறிக் கொண்டு வந்த முரளியின் பதட்டம் புரிந்தவராக, சுந்தரம் அவருடன் பேசத் தொடங்கினார்.​

அங்கு இருந்த இருக்கையில் சென்று அமர்ந்திருந்த கிரிஜாவுக்கு, விதுரனின் பின்னே நின்றிருந்த திலோவைக் கண்டு கோபம் கோபமாக வந்தது.​

‘ஒருத்தி என்னடான்னா என் புள்ளைக்காக மருந்தைக் குடிச்சுட்டு சாகக் கிடக்குறா. இவளுக்கு என்னன்னா, அவனோட வாழக் கசக்குது. பிடிக்காதவளைப் பிடிச்சு என் பையன் தலையில் கட்டி, அவன் வாழ்க்கையே போச்சு.’ என்று நொந்து கொண்டு, அவளைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, திரும்பிக் கொண்டார்.​

அவரது முறைப்பை கவனித்த திலோ, ‘இவங்க அண்ணன் பொண்ணு மருந்தை குடிச்சதுக்கு, இவங்க என்னைப் பார்த்து முறைச்சு வைக்கறாங்க. ஞாயத்துக்கு விதுவை ஒதுக்கறதுக்கு நான் தான் இவங்களைப் பார்த்து முறைக்கணும்.’ என்று மனதோடு நொடித்துக் கொண்டவள்,​

“பெரியப்பா நான் போய் மேனகாவை பார்த்துட்டு வரேன்” என்று அனுமதி வேண்டிய அவளிடம், மனைவியின் கடுப்பை புறம் தள்ளிவிட்டு,​

“நாலு நல்ல புத்தி சொல்லிட்டு வாம்மா” என்று கூறி அனுப்பி வைத்தார்.​

அந்த அறைக்குள் சென்ற திலோ, சக்தி எல்லாம் வடிந்து சோகமே உருவாக படுத்திருந்த மேனகாவைப் பார்த்து மனம் வருந்தியவள், “மேனா” என்றாள் பரிவுடன்.​

அவளது குரல் கேட்டு திலோவை நிமிர்ந்து பார்த்தவள், முகத்தை திருப்பிக் கொண்டாள்.​

ஒரு கையில் செலைன் ஏறிக் கொண்டிருக்க பார்வை விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தாலும், கண்கள் விடாமல் கண்ணீர் பொழிந்த வண்ணம் இருந்தது, மேனகாவுக்கு.​

அருகே இருந்த திலோ, அவளது முகம் பற்றி திருப்ப, மேனகாவின் கண்களில் திலோவை கண்டு கோபமும் வெறுப்பும் கொப்பளித்தது.​

“கோபப் படாத மேனா. நடந்தது எனக்கும் அதிர்ச்சி தான். எ..எதுவும் பேச முடியாத நிலைமையில் இருந்தேன். தப்பு தான் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” என்றாள் நைந்த குரலில்.​

“இனிமே என்ன புரிஞ்சு என்ன ஆகப் போகுது.​

அதான், மாமா எனக்கு இல்லைன்னு ஆகிப் போச்சு.” என்ற போது அவளது குரல் விம்மியது.​

“இ..இல்லை மேனகா. அ..அப்படி நினைக்காத. நா..நான் சீக்கிரம் விலகிப் போயிடுறேன். விது எப்பவும் உன் விது தான். நான் உன்கிட்டயே கொடுத்துட்டுப் போய்டறேன்.” என்று அவள் கூறும் போது, மேனகாவின் கண்கள் பிரகாசித்தது.​

நம்ப முடியாமல், அவள் முகத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் போட்டி போட்டது.​

“நிஜமா?” என்றாள் மற்ற கையை திலோவின் புறம் நீட்டி.​

அந்தக் கையின் மீது கை வைக்கும் முன், பின்னால் இருந்து தொண்டையை கணைக்கும் சத்தம் கேட்டு, இருவரும் திரும்பி பார்க்க, அங்கு மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு, தனது முழு உயரதிற்கும் நிமிர்ந்து நின்றான், விதுரன்.​

முகம் உணர்வுகளை துடைத்து இருந்தாலும், கண்கள் மட்டும் அளவுக்கு அதிகமான கோபத்தை திலோவின் மீது வீசியபடி இருந்ததை, திலோ புரிந்து கொண்டாள்.​

ஏனோ, தவறு செய்த குழந்தையாக மனம் பட படத்தது. இருந்தும் ‘நான் என்ன தப்பு செஞ்சேன்?’ என்னும் விதமாக நிமிர்ந்து நின்றவளிடம் எதுவும் பேசாமல்,​

அவனுடன் நின்ற தீபனிடம், “உன்னோட பெரிய தங்கச்சியை கூட்டிட்டுப் போய் வெளிய நில்லு, மச்சான். மேனகா கிட்ட ரெண்டு நிமிஷம் பேசிட்டு வரேன்.” என்று கூற, திலோவும் தீபனும் வெளியே சென்றனர்.​

“இதுவரை நீயா புரிஞ்சுப்ப, உனக்கும் மெச்சூரிட்டி வரும் திருந்திடுவன்னு கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லி இருக்கேன். ஆனால், நீ திருந்தற மாதிரி தெரியலை. என் பொண்டாட்டிங்கற இடத்தில், திலோ மட்டும் தான் இருக்க முடியும். அவ இல்லைன்னா, வேற எவளும் இல்லை. அதனால இனிமே இந்த தற்கொலை டிராமா போடுறதா இருந்தால், ஒரேடியா போய் சேர்ர மாதிரி போடு. இப்படி இழுத்துட்டு உங்க அப்பா அம்மா உயிரை வாங்காத.” என்றான் காட்டமாக.​

“மாமா” என்று அதிர்ந்தவளிடம், “அத்தை பொண்ணா உன்னை எனக்குப் பிடிக்கும். உனக்கு ஒன்னுன்னா முன்னாடி வந்து நிப்பேன். அதுக்கும் மேல, வேற எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை” என்று திட்டவட்டமாக அவளிடம் கூறிவிட்டு,​

வெளிய வந்த விதுரன், தீபனிடம் தலை அசைத்து விடை பெற்றபடி,​

“அப்பா, இந்தாங்க கார் சாவி. மாமாவையும் அம்மாவையும் கூட்டிட்டு வாங்க. உங்க பைக் சாவி தாங்க. நான் திலோவை கூட்டிட்டுப் போறேன்.” என்று அவள் மறுக்க இடம் கொடுக்காமல்,​

வேதலிங்கத்திடம் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு, திலோவுடன் வெளியே வந்தான்.​

அவன் பைக்கை கிளப்பியதிலேயே அவனது கோபம் தெரிந்தது. இருந்தும், மேனகாவின் நிலையை பார்த்து விதுரனின் மீது அவளுக்கும் கோபம் தான். அதனால் பேசாமல் வந்தவள், வீடு வந்து சேர்ந்ததும் நேராக மாமனின் வீட்டிற்குச் செல்லாமல், தனது வீட்டிற்கு சென்று, தனது அறையில் தஞ்சம் அடைந்தாள்.​

பின்னாடியே வீட்டினுள் புயல் போல் வந்த விதுரனைப் பார்த்து திகைத்த தாமரை,​

“என்ன ஆச்சுப்பா? இப்போ தான் அவ அவளோட ரூமுக்குப் போனா” என்றார் பதட்டமாக.​

“நீங்க டென்ஷன் ஆகாதிங்க அத்தை. மெத்த படிச்சு உங்க பொண்ணுக்கு, மண்டைக்கு உள்ள நட்டு கழண்டு போச்சு. அதை சரி பண்ண, இந்த கார் மெக்கானிக் தான் சரி” என்றவன் அவளது அறைக்கு சென்று,​

அவளது கைகளை முரட்டுத் தனமாக பற்றி இழுத்து சுவற்றில் சாய்த்து நிற்க வைத்தவன், அவளது இரு புறமும் கைகள் ஊன்றி,​

“என்ன அக்காவும் தங்கச்சியும் என்னை வெச்சு டீல் பேசிட்டு இருக்கிங்களா? சொல்லுடி?” என்று அவன் கோபத்தில் இரைந்தான்.​

அவனைப் பார்க்காமல் வேறு புறம் பார்க்க “என்னைப் பாருடி” என்று பற்களை கடித்துக் கொண்டு, வார்த்தையை அவன் கடித்துத் துப்பினான்.​

அவனை திரும்பி ஏறிட்டவளின் விழிகளோடு விழிகள் கலந்தபடி, அவளது சுடிதாருக்குள் இருந்த தாலியை முரட்டுத் தனமான இழுத்து, அவளின் முகத்துக்கு நேரே பிடித்து ஆட்டிய படி,​

“இது உண்மையான தாலி தான். நமக்கு நடந்தது உண்மையான கல்யாணம் தான். நான் தான் உன் பாவப்பட்ட புருஷன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை முழுசுக்கும் இந்த ஒரே ஒரு கல்யாணம் தான்.” என்றவன் பக்கவாட்டில் திரும்பி தலையை அழுந்த கோதிக் கொண்டு, மீண்டும் அவளது விழிகளில் விழிகள் புதைத்து,​

“என் கூட நீ வாழ்ந்து தான் ஆகணும்னு உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன், அது உன் விருப்பம். உனக்கு என்னை பிடிக்கலைன்னா, இவன் கூட வாழ பிடிக்கலைன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு, என்னை தூக்கிப் போட்டுட்டு போய்க் கிட்டே இரு. ஆனால், என்னை தூக்கி எவ கிட்டயும் கொடுக்க, உனக்கு எந்த உரிமையும் இல்லை. புரிஞ்சுதா?” என்றான் கோபத்தில் கொதித்தபடி.​

கண்கள் முழுதும் வெறுப்பும் கோபமும் நிரம்பி வழிந்தது.​

“எனக்காக உன் காதலை இழக்க வேண்டாம், விது. சொல்றதைக் கேளு.” என்றாள் புரிந்து கொள்ளாமல்.​

அவள் பக்கம் இருந்தும் தவறில்லை. அவன் காதல் வந்து விட்டது என்று சொன்னதும், மேனகாவாகத் தான் இருக்கும் என்று அவளே நினைத்துக் கொள்ள, இவனும் அந்த நினைப்பு தவறு என்று அவளிடம் எடுத்துக் கூறவில்லை. அதனால் தனக்காகத் தான், அவனது காதலை உதறி விட்டான் என்று தான் நினைத்தாள்.​

அவளைப் பார்த்து பற்களைக் கடித்தவன்,​

“அந்த ஈர வெங்காயத்தை எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ உன் வேலையை மட்டும் பார்.” என்றவன் அதே கோபத்தோடு வேலைக்குக் கிளம்பிச் சென்றான்.​

வாழ்க்கையில் அடுத்து என்ன? எப்படி அவளை அணுக என்ற சிந்தனை, அவனது அகம் எங்கும்.​

அதற்கு அவசியமே இல்லை என்னும் அளவிற்கு, அவனுக்கும் சேர்த்து அவனது தந்தை யோசித்து ஒரு முடிவுக்கு வந்து, அதை பற்றி கிரிஜாவிடம் கூறிக் கொண்டிருந்தார்.​

“அது என்ன நீங்களா எப்போ பார் என் பையன் விஷயத்தில் முடிவு எடுக்கறது? அவனை வீட்ட விட்டு அனுப்பிட்டு, நமக்கு இங்க என்ன வேலை? அவன் விஷயத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு சொல்றீங்களா?” என்றார் கிரிஜா கோபமாக.​

“அவனோட நல்லதுக்குத் தான் சொல்றேன், கிரிஜா” என்றார் வேதலிங்கம் பொறுமையாக.​

“இந்த விஷயம் தெரிஞ்சதில் இருந்து, எனக்கு இருந்த குழப்பத்தில் என் பையன் கிட்ட பேசக் கூட இல்லை, நான். அவன் மனசு என்ன பாடு பட்டு இருக்கும்? அவன் வரட்டும், அவன் கிட்ட பேசணும். அவனை நான் எங்கேயும் போக விட மாட்டேன்.” என்றார் பிடிவாதமாக.​

“அவனோட நல்லதுக்குத் தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நாள் இப்படியே இரு. அவனுக்குன்னு அவ மட்டும் தான் இருக்காங்கற நினைப்பு, திலோக்கு வரணும். அதுவே அவளை அவன் கிட்ட நெருங்கி வர வைக்கும். அவன் அவனோட பொண்டாட்டி கூட நல்லபடியா வாழனும்னா, இதை நீ செஞ்சு தான் ஆகனும்.” என்றவர் தொடர்ந்து​

“அவங்க வேற எங்கேயும் போகலை. நம்ம தோட்ட வீட்டுக்கு தான் போறாங்க. இங்க இருந்தா, அவ ஒரு பக்கம் அவன் ஒரு பக்கம்ன்னு இருக்காங்க. அவன் அவனோட இஷ்டத்துக்கு வேலை விட்டு வரான், போறான். இவ ஒரு பக்கம் சுருண்டு இருக்கா. இது எல்லாம் சரி வராது. மேனகா பார்வையில் படாமல் இருந்தா ,அவ மனசும் மாறும்னு காரணம் சொல்லி தனியா வைப்போம். அவங்க ரெண்டு பேர் தான், ஒருத்தருக்கு ஒருத்தர்னு அவங்களுக்குள்ள ஒரு அன்யோன்யம் வரும். குடும்பத்தை பொறுப்பா எடுத்து நடத்துவாங்க. தனியா அனுப்புவோம்.” என்றார் முடிவாக.​

அவர் சொல்வது சரியாகப் பட்டாலும், மகன் பிரிந்து செல்வது, மனதுக்கு வருத்தமாகத் தான் இருந்தது.​

பெற்ற மகனாக இருந்தால், எப்படியும் ரத்த உறவு பிரிந்து விடாது என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கும். வளர்ப்பு மகன் என்று ஆனதும், எங்கே மனதளவில் மகன் விலகிச் சென்றிடுவானோ என்ற பயம் ஆட்கொண்டது.​

அதிலும், இந்த ஒருவார காலமும் உண்மை தெரிந்து கொண்ட அதிர்ச்சியில், அவனிடம் பேசாமல் ஒதுக்கிய மூடத் தனத்தை நினைத்து நொந்து கொண்டார்.​

அடுத்து வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எல்லாம் பேசி, திலோவும் விதுரனும் தனிக் குடித்தனம் போக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டது.​

இரண்டு ஏக்கர் தென்னை மரங்களுக்கு நடுவே இருந்த ஒற்றை படுக்கை அறை வசதியுடைய சிறிய வீடு. அருகிலேயே தோட்டத்தை பராமரிக்கும் முருகனின் குடும்பம் தங்கி இருந்தது. இவர்கள் வீட்டில் இருந்து இருபது நிமிடப் பயணத்தில் இருந்தது, அந்த தோட்ட வீடு. வாரக் கடைசியில் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் செல்ல, ஏதுவாகவும் இருந்தது.​

வீட்டை புதுப்பித்து, புதிதாக வர்ணம் பூசி, மேல் வேலைகள் அனைத்தும் முடிந்ததும் தான், விதுரனிடமும் திலோவிடமும் விஷயம் பகிரப் பட்டது.​

இதுவும் நல்லது தான் என்று விதுரன் நினைக்க, எதுவும் எதிர்த்துப் பேசும் நிலையில் இல்லாத திலோ, பேசாமல் இருந்தாள்.​

ஆனாலும், மனது இப்போது விதுரனுக்காகக் கொதித்தது. ‘அண்ணன் மகளுக்காக, அவனை வீட்டை விட்டு அனுப்புவது என்ன நியாயம்? இதுவே விஷ்வா மாமாவாக இருந்தால், இப்படி தனியா அனுப்பி இருப்பாங்களா?’ என்ற கேள்வி எழுந்து, அவளை அவனுக்காக வருந்த வைத்தது.​

நல்ல நாளில் மல்லிகா மற்றும் மேனகாவைத் தவிர, அனைவரும் சென்று பால் காய்ச்சி விட்டு வந்தனர். கணவன் மனைவியாக எல்லா பூஜைகளுக்கும், விதுரன் மற்றும் திலோவையே முன் நின்று செய்ய வைத்தனர்.​

“இந்தா திலோ, உன் புருஷனை இந்தக் குடத்தில் தண்ணி நிரப்பிக் கொண்டு வரச் சொல்லு.”​

“திலோ, உன் புருஷனோட சேர்ந்து நின்னு விளக்கேத்து”​

“திலோ, இந்த பாலை உன் புருஷன் கிட்ட கொடு” என்று அடுத்தடுத்து அவளிடம் ஒவ்வொருவராக வேலை சொல்ல,​

ஆரம்பத்தில் சற்று முரணாக உணர்ந்தவளுக்கு, அதுவே பழகியும் போக, மனதை ஒருநிலைப் படுத்தி, சொன்ன வேலைகளை எண்ணையிட்ட இயந்திரம் போல, செய்யத் தொடங்கினாள்.​

அவளது முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த விதுரனுக்கு, வரிசையாக அவளது முகத்தில் வந்து போன மாற்றங்கள், ஒரு மென்புன்னகையைத் தந்தது.​

பால் காய்ச்சி விட்டு, அடுத்த இரண்டு நாட்களில் விதுவும் திலோவும் புது வீட்டிற்குக் குடி போவதாக ஏற்பாடானது.​

மகளுக்காக வீட்டு பொருட்கள் அனைத்தும் வாங்க முரளியும் தாமரையும் திட்டம் தீட்ட,​

“என்னால வாங்கிக்க முடியும், மாமா. நானும் சம்பாதிக்கறேன்.” என்றான் விதுரன் மறுப்பாக.​

“அச்சோ மாப்பிள்ளை! உங்களால வாங்க முடியாதுன்னு நாங்க இதை எல்லாம் வாங்கல. ஊர்வசி லண்டன் போனதால, பார்த்து பார்த்து இது எல்லாம் வாங்கி அனுப்ப முடியலை. திலோக்கு இது எல்லாம் செய்ய முடியாமலே போய்டுமோன்னு பயந்தேன்.” என்று அர்ஷனை திருமணம் செய்து இருந்தால், இவர்கள் செய்யும் சீர் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற நினைவில் கண்கலங்கிய மனைவியிடம்,​

“இப்போ, அந்த பேச்சு ரொம்ப முக்கியமா?” என்று கடிந்து கொண்ட முரளி,​

“எங்க பொண்ணுக்கு செஞ்சு பார்க்க ஆசைடா மாப்பிள்ளை. ஏன்? உன் மாமன் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா?” என்றார் சிரித்துக் கொண்டே.​

“என் பொண்டாட்டியோட அப்பாவாச்சே, பேச உங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்? உங்க இஷ்டப்படி செய்யுங்க” என்றான் விதுரன்.​

அதன் பின் வேலைகள் துரிதமாக நடக்க, அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது.​

உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கும் முன் காலைப் பொழுது, அந்த வெய்யிலின் தாக்கத்தில் முகம் முழுதும் கன்றிச் சிவந்து இருக்க, மொட்டை மாடியில் முழங்கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள், திலோத்தமா.​

“ஏய் என்னடி இங்க வந்து உட்காந்து இருக்க? கிளம்பு நல்ல நேரத்துல உன்னோட வீட்டுக்குப் போகனும். கிளம்பு" என்றாள் ஊர்வசி சற்று கடுப்புடன்.​

“அக்கா, ப்ளீஸ் நீ போ. என்னை கொஞ்ச நேரம் தனியா விடு" என்றாள் எரிச்சலாக.​

இத்தனை நாட்களாக இல்லாத ஒரு பதட்டம் இப்போது மனதில். இதுவரை வீட்டில் அனைவரும் இருக்க, சுலபமாக விதுவுடன் நேரம் செலவிடுவதை தவிர்த்துக் கொண்டு இருந்தாள். இப்போது, அவர்கள் இருவர் மட்டும் இருக்கப் போகும் தனிமை.​

நண்பனாக மட்டும் இருந்த போது, உலகின் எந்த மூலைக்கும் அவனுடன் கை கோர்த்துச் செல்ல, அவள் தயங்கி இருக்க மாட்டாள். அவன் கணவனாக மாறியதில் இருந்து, அந்த இலகுத்தன்மை அவளை விட்டு தூரம் சென்றிருந்தது. காதலனாக வருங்காலக் கணவனாக ஒருவனை மனதில் நினைத்து விட்டு, கரும்பலகையில் எழுதிய எழுத்துக்களை போல துடைத்து எரிவது, அத்தனை சுலபமாகவும் இல்லை அவளுக்கு.​

“நீ எல்லாம் சொல்றவங்க சொன்னா தான் கேட்ப" என்று நோடித்துக் கொண்டு அவள் கீழே இறங்கி சென்ற சில நிமிடங்களில் எல்லாம், மூச்சு வாங்க தாமரை அவள் முன் கோப மூசுக்களுடன் வந்து நின்றார்.​

“எல்லாரும் கீழ உனக்காக காத்துட்டு இருக்கோம். இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க? புருஷன் வீட்டுக்கு கிளம்பும் எண்ணம் இருக்கா? இல்லையா உனக்கு?" என்றார் உட்சபட்ச கோபத்துடன்.​

அவரை எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவளைப் பார்த்து,​

“முறைக்காத. இந்த நிலமை நீயே தேடிக்கிட்டது தான். அதனால் ஒழுங்காப் போய் வாழும் வழியைப் பார். மாப்பிள்ளை காத்துட்டு இருக்கார், கிளம்பு" என்றார் அதே கடுப்புடன்.​

“ஆமாம், மாப்பிள்ளை! பெரிய தென்னம்பிள்ளை." என்று முனகிக்கொண்டே அன்னையுடன் கீழே இறங்கிச் சென்றாள்.​

மொத்த குடும்பமும் வாசலில் குழுமி இருக்க, காருக்கு அருகே நின்று எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தவன், தற்செயலாக திரும்ப, சரியாக மாடியில் இருந்து இறங்கி வந்த தன்னவளின் பார்வையை ஒரே நேர் கோட்டில் சந்தித்தது.​

அவளது பார்வையின் வெறுமை, மனதில் முள் தைக்க, சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டான்.​

அவளது பாட்டி தாத்தா பெரியப்பா தீபன் வேதலிங்கம் என்று அனைவரும் நின்றிருந்தனர், கிரிஜாவைத் தவிர.​

சுற்றிப் பார்த்தவள், கிரிஜாவைக் காணாது முகம் கடுத்தாள்.​

“ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்.” என்று விட்டு​

சட்டென்று மாமனின் வீட்டிற்குள் சென்றவள், நேராக கிரிஜாவின் அறையில் சென்று நின்றாள்.​

ஜன்னல் கம்பிகளை இறுக பற்றிக் கொண்டு, இவளுக்கு முதுகு காட்டி நின்ற அத்தையிடம்,​

“நீங்க பெறாமல் இருந்து இருக்கலாம். அதுக்காக அவனை இப்படி தான் உதாசீனப் படுத்துவிங்களா? இதே விஷ்வா மாமாவா இருந்தா, வெளிய போக விடுவிங்களா? அது கூட பரவாயில்ல. தனியாப் போறானே, அட்லீஸ்ட் வாசல் வரை வந்து நல்லா இருன்னு சொல்லலாம் தானே?” என்றாள் பட படவென்று மனதில் அடைத்து வைத்ததை, வெளியே கொட்டிக் கவிழ்த்து.​

அவள் அறியாமல் கண்களை துடைத்துக் கொண்ட கிரிஜா, அவள் புறம் திரும்பி,​

“நான் நல்லா இருன்னு சொன்னா மட்டும், அவன் நல்லா இருந்திருந்திடுவானா? அது எல்லாம் உடமைப் பட்டவங்க கையில் இருக்கு.” என்றார் காட்டமாக.​

அவரது தொனியில் திகைத்து விழித்துக் கொண்டு நின்றாள், பெண்.​

“தாய்க்கு பின் தாரம்னும், அம்மா இல்லாத பசங்களுக்கு பொண்டாட்டி தான் அம்மான்னும் கேள்விப் பட்டது இல்லை?” என்றார் நக்கலாக.​

அதை கேட்டு மேலும் திகைப்பூண்டை மிதித்தது போல நின்றாள், விதுவின் திலோ.​

“இந்த அக்கறை எல்லாம், முதல்ல நீ உன் புருஷன் கிட்ட காட்டு. கல்யாணம் செய்து கொடுத்ததோட எங்க கடமை முடிஞ்சுது.” என்று விட்டு வெளியே சென்றவர், வேதலிங்கத்தின் அருகே நின்று கொண்டார்.​

விதுரனைப் பார்த்த நொடி அவரது கண்கள் கலங்கி விட்டது. இருந்தும் எதுவும் பேசாமல் முகம் திருப்பி நின்றார்.​

தாயை அணைத்துக் கொள்ளத் துடித்தாலும், அவரது முகத்திருப்பல் வேதனை அளிக்க, முகம் இறுகி நின்றவனைப் பார்த்துக் கொண்டே, இனி அவளது பொறுப்புகளும், கடமைகளும் வேறு என்ற நிதர்சனம் உரைக்க, தான் வாழப் போகும் வீட்டிற்குச் செல்ல வெளியே வந்தாள், திலோத்தமா.​

 
Top