இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

வரமும் தவமும் நீயே - (டைரக்ட் புக்) டீசர்ஸ்

Status
Not open for further replies.

Thulasi Raj

Moderator
வணக்கம் நட்பூஸ்..

வரமும் தவமும் நீயே.. அடுத்த வருடம் ஜனவரியில் வர இருக்கும் நேரடி புத்தகம் ஆகும். அதிலிருந்து சிறு துளிகள் இங்கே பதிவிடுகிறேன்.

அன்புடன்
துளசி ராஜ்
 

Thulasi Raj

Moderator

332497458_890853075514466_8689413954217349128_n.jpg

கதையின் தலைப்பு : வரமும் தவமும் நீயே

நாயகன் : ரகுவீர பாண்டியன், ரத்தினவேல் பாண்டியன்

நாயகி : சீதாலட்சுமி, மகாலட்சுமி

டீசர் 1


கூடி இருந்த ஊர் மக்களை ஒரு பார்வை பார்த்த ரகுவீர பாண்டியன் "என்ன பஞ்சாயத்து" என்று கணீர் குரலில் கேட்க​

"பெரிய மருது.. இந்த பொன்னைய்யன் கையை அடிச்சி உடைச்சிட்டான்" என்றார் ஊர் பெரிய மனிதர் ஒருவர்​

கைக்காலில் கட்டு போடப்பட்டு நிற்க கூட முடியாமல் மனைவியின் தோளை பிடித்துக் கொண்டு நின்று இருந்த பொன்னைய்யனை மேலிருந்து கீழ் வரை பார்த்த ரகுவீர பாண்டியனுக்கு பாவமாக இருந்தது.​

"எதுக்கு அடிச்சானாம்?"​

"ஆங்.. என் வீட்டு பின்வாசல்ல வந்து நின்னு கையில கஞ்சி வாங்கி குடிக்குற வக்கத்த நாயி.. நான் வீதியில போகும் போது வணக்கம் வைக்காம ஏகத்தாளமா நின்னு பீடி புடிச்சிட்டு இருந்தான். அதான் அடிச்சி கையை உடைச்சேன்" என்று திமிராக சொன்ன பெரிய மருது காலரை தூக்கிவிட்டான்.​

"ஐயா சாமி.. அப்படியெல்லாம் இல்லங்க" என பதட்டமாக கூறினான் பொன்னைய்யன்.​

இவன் ஒன்று சொல்ல, பதிலுக்கு மருது உடைய ஆட்கள் வேறொன்று சொல்ல என்று பஞ்சாயத்து பெரியதாகிக் கொண்டே போக, ரகுவீர பாண்டியன் எழுந்து நின்றான். சட்டென அனைவரும் அமைதியாகிவிட்டனர்.​

"மரியாதையங்குறது தானா மனசுல இருந்து வரணும். அதை கேட்டு வாங்குறது பிச்சையை விட கேவலம்" என்று கூற, மருதுவின் முகம் அவமானத்தில் சிவந்து போனது.​

"கையை உடைச்சதுக்கு பிராயச்சித்தமா மருது பொன்னைய்யனுக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும், மேற்கொண்டு அவனுக்கு கைக்கான மருத்துவ செலவையும் பார்த்துக்கணும்​

இருதரப்பையும் நன்கு விசாரித்து விட்டு நியாயத்தைக் கூறிய ரகுவீர பாண்டியன் இறுதியாக "இது தான் என்னோட தீர்ப்பு" என்று அழுத்தமாக சொல்லி விட்டு எழுந்து நிற்க, பெரிய மருதுவும் சின்ன மருதுவும் அவனை தீயாய் முறைத்துப் பார்த்தார்கள்.​

அவர்களின் அனல் பார்வையை ரகுவீரன் அமைதியாகக் கடந்து செல்ல, "ஒத்த புள்ளைய பெத்துக்க துப்பில்ல. இவனெல்லாம் வந்துட்டான் பஞ்சாயத்து பண்றதுக்கு" என வேண்டுமென்றே கத்தி சொன்னான் சின்ன மருது.​

அதை கேட்ட ரகுவீரனின் நடை நின்றது. தம்பியைத் தொடர்ந்து அண்ணனும் வாய் கூசாமல் பேசினான். ரகுவீரனுக்கு ஆத்திரம் அணை உடைத்து கொண்டு வர, கையில் இருந்த தங்கக் காப்பை ஏற்றி விட்டு கோபமாகத் திரும்பினான்.​

ரகுவீரனுக்கு முன்பாகவே அவனுடைய தம்பி ரத்தினவேல் பாண்டியன் பாய்ந்துச் சென்று சின்ன மருதுவைத் தாக்க, பெரிய மருதுவின் மேல் கை வைத்தான் கதிரவன். அடுத்த நொடியே பஞ்சாயத்து கலவர பூமி ஆனது.​

மேலும் அங்கு நிற்க விரும்பாது வீட்டிற்கு சென்றுவிட்டான் ரகுவீரன்.​

நடு கூடத்தில் தேக்கு மர சோபாவில் அமர்ந்து இருந்த ரகுவீரனின் முகம் பாறை போல் இறுகி இருந்தது.​

"என்ன தைரியம் இருந்தால் ஊரு சனம் கூடி இருக்க என் புள்ளைய பார்த்து நாக்கு மேல பல்லை போட்டு பேசி இருப்பான் அந்த எடுப்பட்ட பையன். அவனுங்களை சும்மாவாடா விட்டுட்டு வந்தீங்க?" விஷயம் அறிந்த வடிவுகரசி கொதித்து எழுந்துவிட்டார்.​

"அது எப்படி விடுவோம். அண்ணனை பேசுன வாயை அடிச்சி உடைச்சிட்டு தான் வந்து இருக்கோம்" என்று கோபம் குறையாது கூறினான் ரத்தினவேல் பாண்டியன்.​

"அடிச்சதோட விட்டு இருக்க கூடாது. அங்கேயே கொன்னு புதைச்சி இருக்கணும்" என்ற வடிவுகரசியின் பார்வை கூடத்தில் ஓரமாக நின்று கணவனைப் பயப்பார்வைப் பார்த்துக் கொண்டு இருந்த சீதாலட்சுமியின் மீது படிந்தது.​

"எல்லாம் இந்த விளங்காதவளால வந்தது" என்று முணுமுணுத்தவர் விடுவிடுவென்று அவள் அருகே சென்று அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு பின்பக்கம் சென்றவர் அவளை வசை பாடி தீர்த்துவிட்டார். அத்தனையும் மௌனமாகக் கேட்டுக் கொண்ட சீதாலட்சுமி உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக் கொண்டாள்.​

அவளுக்கு மட்டும் குழந்தையைப் பெற்று கொள்ள ஆசை இல்லையா என்ன.. ஏனோ அவளின் வயிற்றில் கரு உருவாகவே இல்லை.​

**********​

சீதாலட்சுமிக்கு குழந்தை இன்மையைக் காரணம் காட்டி அவளுடைய தங்கை மகாலட்சுமியை ரகுவீர பாண்டியனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார் வடிவுகரசி. விஷயம் அறிந்த சீதாலட்சுமி நிலைக்கொள்ளாமல் தவித்தாள்.​

உறவினர்கள் அனைவரும் நடு கூடத்தில் அமர்ந்து இருக்க, அப்போது தான் வீட்டுக்கு வந்த ரகுவீர பாண்டியன் கைக்காலைக் கழுவி விட்டு நிமிர, அவன் முகத்திற்கு நேராக துண்டை நீட்டினாள் அவனுடைய மனையாள். அவன் திரும்பி அவளின் முகத்தைப் பார்க்க, அவள் முகம் தரையை நோக்கி இருக்க, அவளின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வெளியேறியது.​

"என்னாச்சு" என்று அவன் கேட்க, அவள் ஒன்றுமில்லை என்பது போல தலை ஆட்டி விட்டு சென்றுவிட்டாள்.​

ரகுவீர பாண்டியன் வீட்டிற்குள் செல்ல, அவனுக்கு அனைத்தும் புரிந்து போனது. திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டு அவன் படியேறி அவனது அறைக்கு செல்ல சீதாலட்சுமி உயிரோடு மறித்துப் போனாள்.​

அன்றிரவு அறைக்குள் நுழைந்த சீதாலட்சுமி கட்டிலில் தன் உடலை குறுக்கிக் கொண்டு படுக்க, ரகுவீரனின் கைகள் அவளை தன்னருகே இழுத்துக் கொண்டது. அவன் அவளைத் திருப்பி அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து தன் தேடலைத் தொடர, அவள் ஜடம் போல் படுத்து இருந்தாள்.​

அவளின் நிலையை உணர்ந்தவன் விலகி எழுந்து விளக்கை போட்டு விட்டு அவளை நோக்கினான். அவனின் பார்வை அவளை துளைக்க, அவள் "உ..உங்க கூ..ட கொ..ஞ்சம் பே..சணும்" என்றாள் திக்கி திணறி.​

"என்ன"​

"நிஜமாவே என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?" அவள் தவிப்புடன் கேட்க​

அவன் அவளையே அழுத்தமாக பார்த்து இருந்தானே தவிர எதுவும் சொல்லவில்லை.​

"நான் ஒரு பைத்தியக்காரி. நீங்க சம்மதம் சொல்லி இருக்கவே தானே நிச்சயம் வரைக்கும் வந்திருக்குது" என்று அவள் தன் போக்கில் கூறினாள்.​

"அவ்ளோ கஷ்டமா இருந்தால் நீயே எனக்கொரு குழந்தையை பெத்து கொடுக்க வேண்டியது தானே டி" அவன் காட்டமாகக் கேட்டான்.​

அவள் அவனை அடிப்பட்டப் பார்வை பார்க்க, விழியில் கண்ணீர் பொங்கியது. எவ்வளவு நேரம் தான் அவன் அவளின் அழுகையை வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பான். "ப்ச்.. எனக்கு நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு. சீக்கிரம் கிளம்பிப் போகணும். இஷ்டம் இருந்தால் இங்கே படு. இல்லன்னா எழுந்து போடி" என்று எரிச்சலைக் கொட்ட​

அவளின் அழுகை சட்டென நின்றுவிட்டது. கணவனின் பேச்சில் அதிர்ந்து விழித்தவள் அசையாது படுத்து இருக்க, முழுதாக ஒரு நிமிடம் கடந்து சென்ற பின்பும் அவள் எழுந்து செல்லாததால் விளக்கை அணைத்து விட்டு அவள் மீது படர்ந்தான் ரகுவீர பாண்டியன்.​

எதை எதையோ சிந்தித்தவளின் கைகள் தானாக உயர்ந்து அவளவனின் முதுகில் படர்ந்தது. அவன் மென்மையாக தொடங்கிய கூடல் அவளின் ஒத்துழைப்பில் வேகம் எடுத்து வன்மையாக மாறியது.​

அன்று மட்டுமல்ல அடுத்து வந்த நாட்களிலும் இதுவே தொடர்கதை ஆனது.​

****************​

அனைவரும் கோவிலில் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்திற்கு செல்ல ஆயத்தம் ஆகிக் கொண்டு இருக்க, சீதாலட்சுமி மட்டும் பரிதவிப்புடன் அறையில் அமர்ந்து இருந்தாள்.​

காலையிலேயே வயலுக்கு சென்று பார்த்து விட்டு வந்த ரகுவீரன் மனைவியின் முகத்தைப் பார்த்து "என்னடி நீ இன்னும் ரெடி ஆகாமல் இருக்க?" என்று கேட்டான்.​

"இல்ல.. நான் வரல"​

"ஏன்"​

"தலை வலி"​

"எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. இங்கே இருக்குற கோவிலுக்கு தானே போறோம். கிளம்பி வாடி" என்று அதிகாரமாக சொன்னவன் "நான் குளிக்குறதுக்கு வெந்நீர் வச்சியா" என்று கேட்டான்.​

"ம்ம்.. வெச்சி இருக்கேன். இருங்க.. கொண்டு வரேன்" என்று முணுமுணுத்தவள் அறையில் இருந்து வெளியேறினாள்.​

அடுத்த சில நிமிடங்களில் "ஆ.. அம்மாஆஆஆ.." என்ற சீதாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்க, ரகுவீரன் உட்பட அனைவரும் பதறி அடித்துக் கொண்டு ஓடினர்.​

சீதாலட்சுமி வேண்டுமென்றே காலில் வெந்நீரை ஊற்றி கொண்டு இருப்பதை ஒரு நொடியில் கண்டு கொண்ட ரகுவீரன் அவளை ஆழ்ந்து பார்க்க, அவள் கணவனின் பார்வையை தவிர்த்து விட்டு "ஆ.. ஐயோ.. அம்மா வலிக்குதே" என்று கதறினாள்.​

வடிவுகரசி "அடியேய்.. வெலங்காதவளே.. ஒரு வெந்நீரை பத்திரமா எடுத்துட்டு போக முடியாதா உன்னால.." என்று சீதாலட்சமியைத் திட்ட தொடங்க,​

ரகுவீரன் சட்டென்று திரும்பி அன்னையை பார்த்த பார்வையில் அவரது வாய் அப்படியே கம் போட்டது போல ஒட்டிக் கொண்டது.​

"அதான் ஒன்னும் ஆகலல்ல. எல்லாரும் போய் ரெடி ஆகுங்க" என்ற மற்றவர்களை பார்த்து சொன்ன ரகுவீரன் மண் தரையில் அமர்ந்து இருந்தவளை தன் கைகளால் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்றான்.​

 
Last edited:

Thulasi Raj

Moderator

டீசர் 2

சீதா கிணற்றடியில் இருந்த துணி மேடையில் அழுக்குத் துணிகளை துவைத்துக் கொண்டு இருந்தாள். வாய் அதன் போக்கில் முணுமுணுக்க, கை தன் போக்கில் துணியை துவைத்தது.​

"ஆத்தா சீதை.. நீ இங்கன என்ன தாயி பண்ற?" என்றபடி அங்கே வந்தார் சீதாவின் அம்மா.​

அம்மாவின் குரல் கேட்டத்தும் சீதாவின் கை இன்னும் வேகமாக துணியை வெளுத்தது.​

"உள்ளார கண்ணாலத்துக்கு புது சீலை வந்து இறங்கி இருக்கு. வந்து நல்லதா நாலு சீலையை எடுப்பீயா.. அதை வுட்டு போட்டு இங்கன வந்து அழுக்குத் துணியை வெளுக்குற"​

"நீயெல்லாம் ஒரு அம்மாவா.. என்னை இந்த வயித்துல தான் பெத்தயா இல்ல தவுட்டுக்கு வாங்கிட்டு வந்தீயா" என்று ஆத்திரத்துடன் கேட்டாள் சீதா.​

"ஏன்டி இப்படி பேசுற"​

"என் வாழ்க்கையை கெடுக்க என் தங்கச்சியவே அனுப்புற உன்ன வேற எப்படி பேச சொல்ற.. சாப்பிடுற பொருளை பங்கு பிரிக்குற மாதிரி புருஷனையும் பங்கு போட்டுக்கணுமா நாங்க" சீதா கோபமாக கத்தினாள்.​

"என்ன என்னடி பண்ண சொல்ற.. உன் மாமியார் வந்து.." என்று நடந்ததை கூற போக​

"அவங்க கெடக்கிறாங்க. உனக்கு எங்கே போச்சு புத்தி" என்று சீதா கேட்கும் போது அவர்களை தேடி மகா அங்கு வந்தாள்.​

"அக்கா.. புடவை எடுக்கலாம் வா" என்ற மகா, சீதாவை இழுத்துக் கொண்டு சென்றாள்.​

நடு கூடத்தில் பட்டுப்புடவை கடை விரிக்கப்பட்டு இருக்க, வடிவு நாற்காலியில் அமர்ந்து இருந்தார். "என்னங்கடி வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க. வந்து சட்டுப்புட்டுன்னு புடவையை எடுங்க. நிறைய சோலி கிடக்கு" என்றார் வடிவு.​

மாமியாரை பார்த்த பின்பு தான் சீதாவுக்கு குரலே எழும்பாதே. அவள் விருப்பமே இல்லாமல் சென்று வெறுமனே அமர, மகா தான் புடவையைப் பார்த்தாள்.​

மகாவிற்கு தங்க நிறத்தில் சின்ன பார்டர் கொண்ட இளஞ்சிவப்பு நிற புடவை மிகவும் பிடித்திருக்க, அதை கையில் எடுத்து பார்த்தவள் அக்காவிடம் காட்டி “அக்கா.. இந்த புடவை அத்தானுக்கு பிடிக்குமா?” என்று கேட்டாள் ஆர்வமாக.​

“அவருக்கு இந்த கலரே பிடிக்காது. நீ வேற எடு” என வெடுக்கென்று கூறினாள் சீதா​

உண்மையில் ரகுவீர பாண்டியனுக்கு இளஞ்சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும் தான். அந்த நிறத்தில் சீதா புடவை கட்டும் போதெல்லாம் ரகுவீர பாண்டியன் அவளிடம் மயங்கி போவான். அதனை நினைத்துப் பார்த்த சீதா வேண்டுமென்றே தான் மகாவை வேற புடவையை எடுக்க சொன்னாள்.​

மகாவுக்கு அந்த புடவையை கீழே வைக்கவே மனமில்லை. அவள் ஏக்கமாக பார்த்துக் கொண்டு இருந்த போது ரகுவீர பாண்டியன் வீட்டிற்கு வந்தான்.​

புடவையை எடுத்துக் கொண்டு அவனிடம் ஓடியவள் “அத்தான்.. நான் இந்த புடவையை எடுத்துக்கவா. எனக்கு இந்த புடவையை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கெஞ்சலாக கேட்க​

அவனோ “பிடிச்சிருந்தா எடுத்துக்க வேண்டியது தானே. அதை எதுக்கு என் கிட்ட கேட்குற” என்றான்.​

“இல்ல.. உங்களுக்கு இந்த கலரே பிடிக்காதுன்னு அக்கா சொன்னா” என்று மகா இழுக்க​


உடனே ரகுவீரனின் பார்வை மனைவியை துளைத்தெடுத்தது. சீதா மாட்டிக்கொண்ட உணர்வுடன் அசடு வழிந்தாள்.​


“சரியா தான் சொல்லிருக்கா. வர வர இந்த கலர பார்த்தாலே எரிச்சலா இருக்கு” என்று மனைவியை ஆழ்ந்துப் பார்த்து கொண்டே அவன் ஜாடையாக சொல்ல, சீதா திகைப்புடன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.​

 

Thulasi Raj

Moderator

டீசர் 3

நகர வங்கிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினான் ரகுவீர பாண்டியன். வழியில் மருத்துவச்சி நடக்க முடியாமல் நடந்து செல்வதைக் கண்டவன் தனது கருப்பு நிற ஜீப்பை நிறுத்தினான்.​

“என்ன ஆத்தா.. இந்த வெயில்ல நடந்து போயிட்டு இருக்க..” என்று அவன் கேட்க​

“இப்போ தான்ய்யா பொண்ணு வூட்டுல இருந்து வாரேன். இந்த சின்னவனை வர சொல்லி இருந்தேன். அவனை ஆளையே காணோம். இருந்து இருந்து பார்த்துப் போட்டு நடந்தே ஊர் போய் சேரலாம்னு நடக்க ஆரம்பிச்சேன். முடியல.. வயசாயிடுச்சுல” என்று கூறினார் மருத்துவச்சி.​

“சரி.. வா.. வண்டியில ஏறு. வீட்டுல விட்டுடுறேன்” என்று ரகுவீரன் கூற, மருத்துவச்சி வாயெல்லாம் பல்லாக வண்டியில் ஏறி அமர்ந்தார்.​

ஜீப் கிளம்பியது. சிறிது தூரம் சென்றதும் “ஆமா.. பொண்ணுக்கு பிரசவம் பார்க்க தானே ஊருக்கு போன ஆத்தா.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா” என்று ரகுவீரன் கேட்க​

“ஹான்.. நல்லபடியா முடிஞ்சுது” என்று குரலில் சுரத்தே இல்லாமல் கூற,​

“ஏன் ஆத்தா.. ஒரு மாதிரி சோகமா சொல்ற?”​

“பொறந்தது பொம்பளப் புள்ள ஆச்சேய்யா. பொட்டைப் புள்ளையை பெத்துட்டீயேடின்னு மாமியாக்காரி நித்தமும் என் புள்ளையை வையுறாளே. அதை கேட்க முடியாம தான் நான் மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு வந்துட்டேன்” என்றார் மருத்துவச்சி.​

அதற்கு ரகுவீர பாண்டியன் ஒன்றும் சொல்லவில்லை. சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, மருத்துவச்சியே பேச்சை தொடங்கினார். “சீதாம்மா.. எப்படிய்யா இருக்கு?” என்று அவர் முகமெல்லாம் பூரிப்பாக கேட்க​

அதை கேட்ட ரகுவீரனின் முகம் சட்டென இறுகிப் போனது. “அவளுக்கு என்ன.. நல்லா தான் இருக்குறா” என்றான் அவன்.​

“வேளா வேளைக்கு புள்ள நல்லா சாப்பிடுதாய்யா.. இல்ல சோர்ந்து போய் படுத்துக் கெடக்குதா?” என்று மருத்துவச்சி கேட்கவும் தான் நேற்று அவன் படுக்கை அறைக்குள் நுழைந்த போது சீதா குளியலறையில் வாந்தி எடுத்து விட்டு வந்து சோபாவில் படுத்துக் கொண்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது.​

அதை அவன் மருத்துவச்சியிடம் கூற.. “இப்போ அப்படி தான் இருக்கும். கொஞ்ச நாள் போச்சுன்னா.. மசக்கை எல்லாம் நின்னுடும்” என்றார் அவர்.​

“மசக்கையா.. என்ன உளர்ற ஆத்தா.. வெயில்ல நடந்து வந்ததுல மண்டை காஞ்சிப் போச்சா உனக்கு..” என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்க​

“என்னய்யா சொல்ற.. சீதாம்மா புள்ளத்தாச்சியா இருக்குறது உனக்கு தெரியாதா?” என்று மருத்துவச்சி குழப்பத்துடன் கேட்க, ரகுவீரன் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.​

அவன் புரியாமல் மருத்துவச்சியை ஏறிட்டுப் பார்க்க, அவர் நடந்தவற்றை எல்லாம் ரகுவீரனிடம் கூறினார். அதை கேட்க கேட்க அவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. மீண்டும் வண்டியை கிளப்பியவன் மருத்துவச்சியை அவரது வீட்டில் விட்டுட்டு நேரே அவனது வீட்டிற்கு தான் சென்றான்.​

புயல் வேகத்தில் வந்த ஜீப் வீட்டு வாசலில் பிரேக் போட்டு நிறுத்த, அந்த இடத்தில் புழுதி பறந்தது. ஆவேசமாக தாவி இறங்கிய ரகுவீர பாண்டியன் “சீதா.. சீதா..” என்று கத்த, அவளை தவிர வீட்டில் உள்ள அனைவரும் நடு கூடத்தில் வந்து நின்றனர்.​

“என்னப்பா.. என்னாச்சு.. வந்ததும் வராததுமா ஏன் அவளை கூப்பிட்டு இருக்க??” என்று வடிவுகரசி கேட்க​

அவன் அதை காதிலே வாங்கி கொள்ளவில்லை. “ஏய்.. சீதா எங்கேடி இருக்க” என்று அவன் மாடிப்படியைப் பார்த்து கத்த​

“டேய்.. நான் தான் அவளை கொள்ளப்பக்கமா போய் மாட்டுக்கு தண்ணீ காட்டிட்டு வர சொன்னேன்” என்று வடிவுகரசி கூறிய நொடி அவன் வீட்டின் கொள்ளப்புறத்திற்கு ஓடினான். அவனை தொடர்ந்து அனைவரும் வேகமாக சென்றனர்.​

அங்கே கிணற்றில் இருந்து தண்ணீரை சேந்தி பித்தளைக் குடத்தில் ஊற்றிய சீதாலட்சுமி அதை தூக்கி இடுப்பில் வைக்க போக, ரகுவீரன் ஓடி வந்து அந்த கனமான குடத்தைப் பிடுங்கிக் கொண்டவன் அதை தூக்கி எறிந்தான்.​

சீதாலட்சுமி கணவனது ஆவேசத்தைக் கண்டு பயந்துப் போனவள் கிணற்றோடு ஒட்டி நின்று கொண்டாள். அவளது ஒரு கை வயிற்றைப் பற்றிக் கொண்டது. “ரகுவீரா.. என்னடா பண்ற..” என்று வடிவுகரசி கத்திக் கொண்டே அவ்விடம் வர, அவனின் பார்வையோ மனைவியின் வயிற்றில் அழுத்தமாக பதிந்தது.​

அவளது வயிறு சற்று பெரியதாக இருப்பது வெறுமென பார்த்தாலே தெரிந்தது. ‘இதை எப்படிடா கவனிக்காம விட்ட’ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டவன் மானசீகமாக நெற்றியில் அறைந்து கொண்டான்.​

“நீ கர்ப்பமா இருக்குற விஷயத்தை ஏன்டி சொல்லாம மறைச்ச” என்று அவன் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கேட்க, சீதாலட்சுமி அதிர்ந்தாள்.​

“கேட்குறேன்ல.. பதில் சொல்லுடி..” என்று ரகுவீரன் பெருங்குரல் எடுத்து கத்த, சீதாலட்சுமி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.​

ஆழ்ந்து மூச்சை இழுத்து வெளியே விட்ட சீதாலட்சுமி மெதுவாக கண்களை திறந்து கணவனை நேருக்கு நேர் பார்த்தவள் “ஏன் சொல்லணும்” என்று நிதானமாகக் கேட்க, ரகுவீரனின் புருவங்கள் கேள்வியோடு முடிச்சிட்டது.​

“நான் இந்த வீட்டுல சம்பளமே இல்லாத வேலைக்காரி தானே” என்று அவள் கேட்க, ரகுவீர பாண்டியன் அவளை அனல் தெறிக்க முறைத்தான். அவனின் பின்னாடி நின்று இருந்த வடிவுகரசியோ ‘அடிப்பாவி’ என்று வாயில் வைத்துக் கொண்டார்.​

“காலையில எழுந்ததும் கொள்ளப்புறத்தை கூட்டி பெருக்குனேனா.. சமையல்க்கட்டு நின்னு யார் யாருக்கு வேணும்னு கேட்குறாங்களோ அதை சமைச்சி போட்டேனா.. எல்லாரும் தின்னுட்டு போனதுக்கு அப்புறம் சமையல்க்கட்டை சுத்தம் பண்ணிட்டு மீந்துப் போன சாப்பாட்டை நாலு வாய் அள்ளித் தின்னோமா.. பொழுது போனதும் மூலையில படுத்து தூங்கணுமான்னு.. ஒரு வேலைக்காரியா தானே இந்த வீட்டுல நான் நடமாடிட்டு இருக்கேன்.​

எனக்கு தாலி கட்டுன மனுஷன் என்னை அப்படி தானே இந்த வீட்டுல வச்சி இருக்கார். என்னோட விருப்பத்திற்கும் வெறுப்புக்கும் இங்க மதிப்பு இருக்கா என்ன? பின்னே ஏன் நான் கர்ப்பமா இருக்குற விஷயத்தை உங்கக்கிட்ட எல்லாம் சொல்லணும்?” என்று நீளமாக பேசி முடித்தவள் கீழே கிடந்தப் பித்தளைக் குளத்தை எடுத்து வந்து கிணற்று சுவரின் மீது வைத்து தண்ணீரை சேந்தி அதில் ஊற்ற, ரகுவீரன் ஆத்திரத்துடன் குடத்தை எட்டி உதைத்தான்.​

பித்தளைக் குடம் கிணற்றினுள் விழுந்து விட, சீதாலட்சுமி அசராமல் நின்றாள். கோப மூச்சுக்கள் வெளியேற நின்று அவளை முறைத்தவன் விறுவிறுவென்று திரும்பிச் சென்று விட, சீதாலட்சுமியின் கண்கள் கலங்கிப் போனது.​

 

Thulasi Raj

Moderator

டீசர் 4

சீதாலட்சுமியின் இரண்டாவது தங்கை தனலட்சுமிக்கு ரகுவீர பாண்டியனின் வீட்டிலேயே மஞ்சள் நீராட்டு விழாவுக்கு கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு ஊர் மொத்தமும் திரண்டு இருந்தது.​

தன் நிறைமாத வயிற்றை ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டு நடந்து வந்த சீதாலட்சுமி தங்கைக்கு நலங்கு வைத்து ஆசீர்வதித்து விட்டு திரும்பியவளின் கண்ணில் ஒரு புறம் கணவனும் மாமியாரும் நின்று பேசிக் கொண்டு இருப்பதும், மற்றொரு புறம் தாயும் மகாலட்சுமியும் நின்று இருப்பது தெரிந்தது.​

தூணைப் பிடித்துக் கொண்டு படி இறங்க வந்தவளுக்கு ஒரு கரம் நீண்டது. அது அவளது கணவனுடையது தான். ஊர் மக்களின் முன்பு அவனை தலை இறங்க வைக்க அவளால் முடியாது அல்லவா..​

எனவே அவனது கையைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினாள். வெகு நாட்கள் கழித்து மனைவியின் அருகாமையை உணர்ந்தவனுக்கு அதை விட முடியவில்லை. அவள் இறங்கிய பின்பும் அவளது கையை விடாமல் அழைத்து சென்றவன் தன்னருகிலேயே மனைவியை நிறுத்தி வைத்துக் கொண்டான்.​

அவள் சாதாரணமாக அவனது புறம் திரும்பியவள் “என் கையை விடுங்க” என்றாள் மெல்லியக் குரலில்.​

“விட முடியாதுடி” என்று குறும்புப் புன்னகை உடன் கூறிய ரகுவீர பாண்டியன் பிடித்து இருந்த அவளது கையை உயர்த்தி தன் வாய் அருகே கொண்டு சென்று அதில் இதழ் பதித்து மீள, சீதாவின் உடல் வழக்கம் போல இறுகிப் போக, கண்கள் கலங்கிப் போனது.​

“அன்னைக்கு நான் கெஞ்ச கெஞ்ச விட்டுட்டு போயிட்டு இன்னைக்கு வந்து காதல் வசனம் பேசுனா உருகி போகுறதுக்கு நான் பழைய சீதா இல்ல” என்று அவள் சொல்ல,​

“சரி தான் போடி.. கோபமாவே இரு” என்றவன் அவளது கையை உதறி விட்டு தனியாகச் சென்று நின்றுக் கொண்டான்.​

சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிய உறவினர்களை தவிர ஊர் மக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்துச் சென்றனர்.​

அப்போது ஒரு வயதான பாட்டி மகாலட்சுமியிடம் வந்தவர் “ஆமா.. உனக்கு கல்யாணம் ஆகி ஆறேழு மாசம் ஆகுதுல.. விஷேசம் ஒன்னும் இல்லையா??” என்று கத்திக் கேட்க,​

மகாலட்சுமி சங்கடத்துடன் “இன்னும் இல்ல பாட்டிம்மா” என்றாள்.​

“அதெல்லாம் காலா காலத்துல நிக்கோணும்டி. இல்லாட்டி நாள பின்ன உன்னை ஒதுக்கி வச்சிட்டு வேற ஒருத்தியை இழுத்துட்டு வந்திடுவாங்க” என்ற கிழவி ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டே சென்றுவிட, வடிகரசி மகாலட்சிமியை கரித்துக் கொட்ட ஆரம்பித்துவிட்டார். இப்போது எல்லாம் சீதாவிற்கு பதில் வடிகரசியின் வாயில் அரைப்படுவது மகா தான்.​

வழக்கம் போல மாமியார் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அசட்டையாக நின்று இருந்தாள் மகாலட்சுமி.​

“அம்மா.. இப்போ எதுக்கு கத்துறீங்க?” என்றபடி அங்கே வந்தான் ரத்தினவேல் பாண்டியன்.​

“எல்லாம் உன் பொண்டாட்டி பஞ்சாயத்து தான். நீயே கேளு.. அவளால இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசை பெத்து கொடுக்க முடியுமா? இல்லையா? இருந்து இருந்து அவள் அக்காளே இப்போ தான் உண்டாகி இருக்கா. இவ வயித்துல ஒன்னையும் காணோம். ஒருவேளை இவளும் அஞ்சாறு வருஷத்துக்கு அப்புறம் தான் உண்டாகுவாளோ” என்று வடிகரசி கேட்க​

“நாம ஏன் அஞ்சாறு வருஷம் வரைக்கும் காத்திட்டு இருக்கணும். அதான் அவளோட தங்கச்சி வயசுக்கு வந்துட்டா இல்ல.. வர்ர முகூர்த்தத்துலயே அவளை எனக்கு கட்டி வச்சிடு.. அடுத்த வருஷமே இரட்டைப் புள்ள பெத்து போடுறேன்” என்று சிரித்துக் கொண்டே கூற, மகாலட்சுமி அதிர்ந்து போய் விலுக்கென்று நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள்.​

வடிகரசியோ மகனின் பேச்சில் வாயைப் பிளக்க, “வேலா.. என்னடா இது?” என்று தம்பியை அதட்டினான் ரகுவீர பாண்டியன்.​

“என்னா அண்ணாத்த.. நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?” என்று நக்கலாகக் கேட்டான் ரத்தினவேல் பாண்டியன்.​

ரகுவீரன் உடனடியாக சீதாவின் முகத்தை பார்க்க, அது சாதாரணமாக தான் இருந்தது. தனலட்சுமி அவர்களின் பேச்சைக் கண்டு பயந்து போய் அன்னையிடம் ஓடி வந்தவள் “ஆத்தா.. அவுங்க சொல்ற மாதிரி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடாதே. நான் படிக்கணும். இல்லன்னா செத்து போயிடுவேன்” என்று அழுதாள்.​

மகள் அழுதால் தாயின் மனம் தாங்குமா.. நேரே வடிகரசியின் முன்பு சென்று நின்றவர் “சம்மந்தியம்மா.. மகாவுக்கு இப்போ தானே கல்யாணம் ஆச்சு. ஒரு ரெண்டு மூணு வருஷம் போகட்டுமே. தனலட்சுமி சின்ன பொண்ணு. அவ வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்” என்று சொல்ல​

“என்ன சின்ன பொண்ணு.. அதான் வயசுக்கு வந்துட்டா இல்ல” என்று இறக்கமே இல்லாமல் கேட்டார் வடிகரசி.​

உடனே பெரிய மகளை தவிப்புடன் பார்த்தவர் “ஆத்தா சீதை.. நீயாவது சொல்லுடி” என்று கூற​

“நான் என்னத்தை சொல்றது.. உன் மச்சினன் சரியா தானே கேட்குறார். பெரிய மாப்பிள்ளைக்கு ஒரு நியாயம்? சின்ன மாப்பிள்ளைக்கு ஒரு நியாயமா? நல்லா இருக்கே உன் நியாயம்?” என்று அலட்சியமாகக் கூறினாள் சீதா.​

“ஏய் அவள் உன் தங்கச்சிடி”​

“இவளும் என் தங்கச்சி தான்” என்று மகாவை கைக்காட்டிய சீதா “எனக்கு குழந்தை இல்லன்னு இவளை என் புருஷனுக்கு இரண்டாம் தாரமா கட்டி கொடுத்து என் வாழ்க்கையை கெடுக்க பார்க்கல்ல நீ? உன் கிட்ட எவ்ளோ சண்டை போட்டு இருப்பேன். எனக்காக ஒரு வார்த்தை இவங்கிட்ட பேசி இருப்பீயா நீ? இப்போ உன் செல்லப் பொண்ணுக்கு ஒன்னு என்றதும் பாசம் பொத்துக்கிட்டு வருதோ” என்றாள்.​

அதை கேட்ட மகாவுக்கு இதயமே நொறுங்கிப் போன உணர்வு. ‘இதை மனசுல வச்சிக்கிட்டு தான் இத்தனை நாளா என் கிட்ட பேசாமல் இருந்தீயா அக்கா?’ என்று உள்ளுக்குள் நினைத்தவளின் உதடுகள் கசந்தப் புன்னகையை வெளியிட்டது. அதற்கு மேல் அங்கே என்ன நடந்தால் எனக்கென்ன என்ற மனநிலைக்கு வந்து விட்ட மகா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மாடியேறி அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.​

 

Thulasi Raj

Moderator

டீசர் 5

மீன் குழம்பு வாசணை மூக்கைத் துளைக்க, கண்களை மூடி ஆழ்ந்து நுகர்ந்து விட்டு அடுப்பை அணைத்தாள் சீதா. அத்துடன் சமையல் வேலை முடிந்து விட, வெளியேற எத்தனித்தாள்.​

அங்கே சமையலறையின் வாசலில் அவளின் அன்னை மணியம்மை கவலைப் படிந்த முகத்துடன் கையைப் பிசைந்தவாறு நின்று இருப்பதைக் கண்டவள் "என்னம்மா.. வெயில் நேரத்துல வந்து இருக்கே?" என்று வினவினாள்.​

சுற்றும் முற்றும் பார்த்த மணியம்மை "உ..உன்கிட்ட ஒவ்.. ஒ..ரு அய்யாயிரம் இருந்தால் கொடுடி" என்று கெஞ்சலாகக் கேட்க, சீதா அதிர்ந்து நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.​

"அய்யாயிரமா.." என்றவள் அன்னையை முறைத்துப் பார்த்து "நான் இங்கன மகாராணி கணக்குல வாழுறதா நெனப்பா ஒனக்கு?" என்று அடிக்குரலில் சீறினாள்.​

"கோவிச்சுக்காதடி. பையப் (மெதுவா) பேசு" என்று பதறியவர் கண் கலங்கினார்.​

"மய்கானாள் (நாளை) பரிமளம் பொண்ணுக்கு கல்யாணம்டி. அவள் பத்திரிக்கைக் கொடுக்கும் போதே அவள் செஞ்ச அய்யாயிரம் ரூவா மொய்ய திருப்பிச் செய்யலன்னா.. வீடேறி வந்து அசிங்கப் படுத்திடுவேன்னு கறாரா சொல்லிட்டு தான்டி போனாள்" என்று கூற,​

"செய்ய வேண்டியது தானே" என்று பல்லை கடித்தாள் சீதா.​

"கையில் காசு இல்லையேடி. அடுத்த மாசம் தான் விளைச்சலை சந்தைக்கு கொண்டு போக போறேன். உன்கிட்ட இருந்தால் கொடுடி. அப்புறமா திருப்பி தந்திடுறேன்" என்று கெஞ்ச, சீதா தவித்துப் போனாள்.​

அவளிடம் பணம் என்று ஒத்த ரூபாய் கூட கையில் இல்லை. வீட்டின் கொத்து சாவி, நிர்வாகம் முதற்கொண்டு அனைத்தும் வடிவுகரசியின் வசம் தான் உள்ளது.​

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சீதா தன் கையில் இருந்த 2 தங்க வளையல்களை கழட்டி தாயிடம் கொடுத்தாள்.​


"இதை அடமானம் வச்சி மொய்ய திருப்பி செஞ்சிடு" என்றாள் சீதா, வேறு வழி இல்லாததால் மகள் கொடுத்த வளையலை வாங்கிக் கொண்டு சென்று விட்டார் மணியம்மை.​

அன்றிரவு வீட்டிற்கு வந்த ரகுவீரன் மனைவி கையில் கண்ணாடி வளையல் குலுங்குவதைக் கண்டு புருவம் சுருக்க, அவள் ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பி விட்டாள்.​

ஆனால் அவள் கூறியப் பொய் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. அவன் நகரத்திற்குச் சென்றிருந்த போது பேச்சு வாக்கில் அவனது மாமியார் வந்து நகை அடமானம் வைத்து விட்டு சென்றது தெரிந்துவிட்டது.​

"என்ன நகை?" அவன் சாதாரணமாக கேட்க, அந்த நகைக்கடை ஓனர் நகையை கொண்டு வந்தே காட்டி விட்டார்.​

அதைப் பார்த்தவனுக்கு சுர்ரென்று கோபம் பொங்கியது. பணத்தைக் கட்டி விட்டு நகையை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவன் அதே கோபத்துடன் மனைவி தேடினான்.​

"சீதா.. ஏய் சீதா.." என்று அவன் நடுக்கூடத்தில் நின்று கத்த, எல்லோரும் பதறி அடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.​

சீதாவும் அடித்துப் பிடித்து பின்பக்கம் இருந்து ஓடி வந்து நின்றாள். அவளை தீயாய் முறைத்தவன் "கையில் இருந்த வளையல் எங்கேடி?" என்று சீற்றத்துடன் கேட்க,​

"அது.. அது.. உ..உள்ளார தா..ன் க..கழட்டி.." என்று அவள் திக்கி திணறி பதில் அளிக்க, தனது சட்டை பாக்கெட்டில் வைத்து இருந்த வளையலை எடுத்து கோபத்துடன் தரையில் வீசினான் ரகுவீரன். அதைக் கண்டு சீதாவின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.​

மகனின் அருகில் வந்த வடிவுகரசி "என்னப்பா ரகுவீரா.. இங்கன என்ன நடக்குது?" என்று புரியாமல் வினவ, அவன் நடந்தவற்றை மறைக்காமல் கூறிவிட்டான்.​

அதை கேட்டு வாயில் கை வைத்த வடிவுகரசி "கூறுக்கெட்ட மாடு ஏழுக்கெட்ட வைக்கல் தின்னுதாம், கதையா.. யார் வீட்டு நகையை யாருடி அடமானம் வைக்குறது" என்று பல்லை கடித்தவர் மருமகளை கண்டமேனிக்கு திட்டி தீர்த்து விட்டார்.​

தலைக் குனிந்து நின்று இருந்த சீதா இதழ் கடித்து அழுகையை அடக்கிக் கொண்டாள்.​

வடிவுகரசி வாயால் திட்டி தனது கோபத்தைக் கொட்டி தீர்த்து விட, ரகுவீரன் அவளை ஏறிட்டு பார்க்காமல், ஒரு வார்த்தை கூட பேசாமல் அவளை தண்டித்தான்.​

 
Status
Not open for further replies.
Top