இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சலிலோ தள அட்மினின் தனிசெய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.

மீண்டு(ம்) வந்த சிலையே!- கதை திரி

Anjana Subi

Active member
மீண்டு(ம்) வந்த சிலையே…!
IMG-20220731-WA0033.jpg
சிலை 9

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா துறைமுக 'ஃப்ரீபோர்ட்டில் (free port)' …


மிக பரபரப்பாக காணப்பட்டது அந்த ஃப்ரீபோர்ட்டின் வாடகைக்கு எடுக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட 'க்ளை மேட்டிக் கண்ட்ரோல்' கிடங்குகளில் ஒன்று.

அக்கிடக்கில் திடீரென்று குளிரூட்ட பயன்படுத்தும் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு, ஒரு தீ விபத்தை அரங்கேற்றி இருந்தது. சின்ன அளவில் சேதாரம் நடந்திருந்தாலும், சுவிஸ் துறைமுக அதிகாரிகள் சற்று பதற்றமாகவே காணப்பட்டனர்.

கலந்தாய்வு அறையில் துறைமுக தலைமை அதிகாரி ஸ்டேன்லி வில்லியம்ஸ் மற்ற அதிகாரிகளுடன் இச்சம்பவம் குறித்து அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

இங்கு இப்படி ஒரு தீ விபத்து நிகழ்வது இதுவே முதல் முறை.

தீ விபத்து நடந்த கிடங்குகளின் எண்ணை இயம்பியவரின் முகம் பயத்தை அப்பட்டமாகக் காட்டியது.

பின்னர் இத்தீ விபத்து குறித்த தகவல் மட்டும் வெளியே கசிந்தால், அவர்களின் பல மில்லியன் டாலர் வர்த்தகங்கள் பாதிக்கப்படுமே!

ஆனால், குரல் பிசிற பேசுபவரின் பயம் பாதுகாப்பு அதிகாரி மைகேலுக்கு சற்று அதிகப்படி என்றே தோன்றியது.

"இட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடண்ட். ஒய் டூ யூ மேக் இட் ஆன் மிக் இஷ்ஷு…"

என்று அலட்சியமாகக் கேட்டு, பிரச்சனையின் தீவிரம் அறியாது பேசி வைத்தார்.

அதில் விலுக்கென்று அவர் பக்கம் திரும்பிய வில்லியம்ஸ், விபத்து ஏற்பட்ட கிடங்குகளை வாடகைக்கு எடுத்துள்ள நபர்களைப்பற்றி விவரிக்க ஆரம்பிக்கவும், மைக்கேலின் முகம் வெள்ளைக் காகிதமாய் வெளுத்தது.

அதற்கு காரணம் அதை வாடகைக்கு எடுத்தவர்கள் அனைவரும் சர்வதேச சிலை கடத்தல்காரர்கள். சுவிஸ் வங்கி கள்ளப் பணப் பதுக்கல் போல சுவிஸ் துறைமுகத்தில் மற்றொரு வகையான பதுக்கலும் நடந்தேறிக் கொண்டிருந்தது.

கருப்புப் பண முதலைகள் பலர், இந்திய கலைப் பொருட்களை மில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டி வாங்கி, இக்கிடங்குகளில் அந்நாட்டு அரசின் ஆதரவோடு பதுக்கி வைக்கிறார்கள்.

எனவே அக்கலைப் பொருட்களுக்கு சேதாரமானால் அதிகாரிகளும் அந்நாட்டு அரசும் தான் சம்மந்தப்பட்டவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற வில்லியம்ஸ்ஸின் கூற்றில், மைக்கேலின் வயிற்றில் சுரந்த பித்த நீர் தொண்டை வரை வந்து சென்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அனைவரையும் கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட வில்லியம்ஸ், துறைமுகத்தின் மேற்பார்வையாளரான லிண்டா மேத்யூஸிடம் நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு பணியை அதிகரிக்கும் படி பணித்தார்.

**************

பெங்களூரில் உள்ள ஹர்ஷவர்தனின் கெஸ்ட் ஹவுஸில்,

தன் அலுவல் அறையில் கையில் மதுக் கோப்பையுடன் அமர்ந்து நண்பன் ஹரிபிரசாத்துடன் பேசிக் கொண்டிருந்தார், ஹர்ஷவர்தன்.

அப்போது அவருக்கு ஒரு பிரைவேட் எண்ணில் இருந்து அழைப்பு வரவும், புருவம் சுருங்க ஏற்று 'ஹலோ' என்றவரின் காதில்,

"என்கிட்ட இருந்து இதை ஏன் மறைச்ச வர்தன். கேர்புல்லா இருக்க வேண்டாம். சரக்குக்கு ஏதாவது ஆகிருந்தா என்னாகுறது?"

என்ற சிம்மக்குரல் ஒலித்தது.

ஹர்ஷவர்தனும் "இந்த சின்ன விஷயத்தை ஏன் பெரிசாக்கனும்னு தான் சொல்லலை ஜி.அதான் சரக்கு சேஃபா தானே இருக்கு…"

என இரைஞ்சலாக குரலை தழைத்துப் பேசினார்.

"திஸ் இஸ் தி பர்ஸ்ட் அண்ட் லாஸட் வார்னிங்.இனி ஒழுங்கா ஷிப்பை செக் பண்ணி அனுப்பு…" என்ற கண்டிப்புடன் அந்த அழைப்பு துண்டிக்கப் பட்டது.

முகத்தில் குடிகொண்ட சிந்தனை ரேகைகளுடன் வெகு நேரம் தன் கைபேசியை வெறிக்கும் நண்பனிடம், அதன் காரணத்தைக் கேட்டார், ஹரிபிரசாத்.

அவரும் ஒரு ஐந்து மாதத்துக்கு முன்னர் கடத்திய சிலைகளை வழக்கம் போல அவர்களின் 'இம்பீரியல் எம்பையர்' சரக்கு கப்பல் வழியாக அமெரிக்காவுக்கு ஜி யின் ஆர்ட் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்ததை நினைவு கூர்ந்தார்.

பாதி வழியில், ஜி யின் ஆர்ட் நிறுவனத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி வரவும்,

அப்போதைக்கு கப்பலில் கடத்திய சிலைகளை தங்கள் சுவிஸ் கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலையை விவரித்தார்.

மேலும் சிலைகளை தாங்கிய கப்பல் சுவிஸ் துறைமுகத்தை அடையும் தருவாயில், இயந்திரக் கோளாறால் அதிக வெட்பமடைந்து திடீரென்று தீ விபத்துக்கு உள்ளானது.

துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளைஆதலால்,ஆட்களால் தீயை அணைப்பதும் பொருட்களை எந்த சேதாரமும் இன்றி மீட்பதிலும் துரிதமாக செயல்பட முடிந்தது.

தங்கள் ஆட்கள் மூவரை தீக்கு காவு கொடுத்தாலும், கடந்தப்பட்ட சிலைகள் காப்பாற்றப்பட்டதில் அவருக்கு நிம்மதி உண்டானது, உண்மை. உயிர் போனால் பாதகம் ஒன்றும் இல்லை.

ஆனால், சிலை போனால் மில்லியன் கணக்கில் பணமும் போகுமே? பெருமதிப்பு பெற்ற அச்சிலைகளை கைபற்ற வேண்டி எத்தனை தகிடுதத்தங்கள், எத்தனை கொலை குற்றங்கள் செய்திருப்பார்? ஆனால், இந்தத் தீ விபத்து அவரே எதிர்பாராதது.

இது குறித்து கேள்விப்பட்ட சர்வதேச கடத்தல் புள்ளியான தங்கள் தலைவன் 'ஜி' அதிருப்தி அடைந்ததைப் பற்றி, ஹரி பிரசாத்திடம் கூறி முடித்தார்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ஹரிபிரசாத்தின் மனதில் குழப்ப மேகம் சூழ்ந்து கொண்டது. மெல்ல தயங்கியவாறு,

“இந்தத் தொடர் தீ விபத்துகளுக்கு காரணம் அந்த கண்ணகி அம்மன் சிலையாக இருக்குமோ?”என்ற வினாவை எழுப்பினார்.

அதில் பெரிய ஹாஸ்யத்தை கேட்டது போல பெருங்குரலெடுத்துச் சிரித்த ஹர்ஷவர்தன்,

"மதுரையை எரிச்ச கண்ணகி தான் அமெரிக்காவுல இருக்குற ஆர்ட் கேலரியையும் நம்ம ஷிப்பையும் எரிச்சா அப்படீங்கிறியா பிரசாத்? அப்போ, அவ சிலையை திருடுன உன்னையும் என்னையும் மட்டும் ஏன் விட்டு வைச்சாலாமா?"

என்ற வக்கனையான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் ஊமையாக நின்றார், ஹரிபிரசாத்.

இடது விரலிடுக்கில் பாதி ஊதித் தள்ளிய சிகரெட்டுடன், அவர் பக்கத்தில் அழகுக்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையாரின் ஐம்பொன் சிலையை தன் வலக்கரத்தால் வருடியவர்,

"கலைநயம் கொண்ட சிலைகள் எல்லாம் ரசிக்க மட்டும் தான், பிரசாத். படைக்கும் திறமை இருக்குறவன் தான் கடவுள்னா, இந்த சிலைகளை வடிச்ச மனுஷன் தானேடா கடவுள். உன் படைப்புக்கு நீயே இறை அந்தஸ்து தரதெல்லாம் முட்டாள் தனத்தின் உச்சமா தெரியலை உனக்கு?"

எனக் கூறி, தன் கையில் இருந்த சிகரெட்டை பக்கத்தில் இருந்த ஆஷ் டிரேவில் தட்டினார்.

இன்னும் தெளியாத நண்பனின் முகம் கண்டு, "அவ்வளவு பெரிய தீ விபத்தை, கேவலம் ஒரு கற்சிலை ஏற்படுத்த முடியுமா பிரசாத்?" என எள்ளி நகையாடினார்.

அச்சமயம் அவர் கைபேசி அதிர்ந்து கட்டியம் கூற, திரையில் மின்னிய அந்த வெளிநாட்டு எண்ணைக் கண்டு, ஒரு புருவச்சுளிப்புடன் உயிர்பித்து,

"ஹலோ சொல்லு லிண்டா…" என்றார் ஹர்ஷவர்தன்.

எதிர்புறம் சுவிஸ் கிடங்கில் வேலை பார்க்கும் அவரது தீவிர விசுவாசியான லிண்டா மேத்யூஸ், கூறிய செய்தியில் அவரது மனம் ரயில் பெட்டியாய் தடதடத்தது.

அவர்கள் இந்தியாவில் இருந்து கடத்திய பல மில்லியன் டாலர் மதிப்பு பெற்ற ஐம்பொன்சிலைகளையும் கல் சிலைகளையும் பதுக்கி வைத்திருக்கும் கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதாக சொன்ன செய்தியில், ஹர்ஷவர்தனின் முகம் பேயறைந்தது போல ஆனது.

"நல்ல வேளையா தீ விபத்து நடந்த கிடங்குகள்ல இருக்கும் பொருட்களுக்கு எந்தவித சேதாரமும் ஆகலை…" என தொடர்ந்து பேசிய லிண்டாவின் பேச்சு, அவர் வயிற்றில் பால் வார்த்தது.

அப்படி ஏதாவது அசம்பாவீதம் நடந்திருந்தால், அதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட ஹர்ஷவர்தனுக்கு உடல் உதறி நடுக்கம் எடுத்தது.

கப்பலில் ஏற்பட்ட விபத்தை கேள்வியுற்றதற்கே தன்னை எச்சரித்த ஜி, கிடங்கில் இருக்கும் சிலைகள் மட்டும் தீக்கு இரையாகி இருந்தால், கண்டிப்பாக அதற்கு பொறுப்பு ஏற்றிருக்கும் தன்னை உயிரோடு சமாதி கட்டிவிடுவார் என உணர்ந்த அவரின், நெஞ்சுக்கும் தொண்டைக்கும் நடுவில் ஒரு பயப்பந்து உருண்டது.

அருகில் இருந்த கோப்பையில் தளும்பிய மதுவைக் குடித்து,

'ஒருவேளை ஹரிபிரசாத் கூறியது போல இதற்கும் அந்த கண்ணகி அம்மன் சிலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ?'

என்ற ஆழ்மனதின் பயத்தை தணிக்க முயன்றார், ஹர்ஷவர்தன்.

சுவிஸ் கிடங்கில் இருக்கும் பொருட்களை ரகசியமாக பாதுகாக்கும் பொருட்டு உயர் தர பாதுகாப்பு தொழில்நுட்பங்களான ரோபோக்களை ரோந்துப் பணிக்கு நியமித்திருந்தது, அந்நாட்டு அரசு.

மனித உடலின் தட்ப வெட்பத்தை நிகழ் நேர கேமரா (infrared camera) சென்சார் மூலம் கண்டறியும் ரோபோக்கள், அலாரம் எழுப்பி எச்சரிப்பது மட்டுமல்லாது திருடர்களை சுட்டுத் தள்ளும் வகையிலும் புரோகிராம் செய்யப் பட்டுள்ளது பற்றி ஹர்ஷவர்தன் நன்கு அறிவார்.

அப்படி இருக்க இந்த தீ விபத்தை, அவரால் எதிரிகளின் திட்டமிட்ட சதி என்று நினைக்க முடியவில்லை. இதையும் தற்செயலான நிகழ்வென்றே கருதினார்.

எனினும் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாத இறுதியில் கிடங்கில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நண்பன் ராபர்ட்டின் ஆர்ட் கேலரிக்கு அனுப்பி வைக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளுமாறு தன் ஆட்களுக்கு உடனடியாக கட்டளையிட்டார்.

இப்படி அனைவரின் மன கிலேசங்களுக்கும் காரணமான கண்ணகி அம்மன் சிலையோ, அமைதியாக சுவிஸ் கிடங்கின் ஒரு மூலையில் ஆஸ்திரேலியா செல்ல தயாரான நிலையில் துயில் கொண்டிருந்தது.

************

ஹர்ஷவர்தனும் ஹரிபிரசாத்தும் கிடங்கில் இருந்து சிலைகளை ஆஸ்திரேலியா அனுப்புவது பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரம், அங்கு பிரசன்னமானார், அவர்களின் கூட்டாளியான ஹிதேந்தர் சிங்.

உள்ளே வந்ததும் வராததுமாக,

"கல்வெட்டு கேட்டு கேஸ் போட்டப்பவே சொன்னேன், அந்த மாதங்கியை போட்டுத் தள்ளிடலாம்னு. ரெண்டு பேரும் கேட்டீங்களா?இப்ப பாருங்க, முதலுக்கே மோசமாகிடும் போல…" என்று காட்டுக் கத்தல் கத்தினார்.

"என்னமோ டிரை பண்ணாத மாதிரி சொல்ற. கூடலூர்லயே பாம்பு விட்டு கடிக்க வைக்க அடெம்ட் பண்ணியாச்சு. ஆனா தப்பிச்சுட்டாளே…!" என பதிலளித்தார் ஹரிபிரசாத்.

அவர் பேச்சில் நிமிர்ந்த ஹர்ஷவர்தன், தன் ரிம்லெஸ் கண்ணாடியை கழற்றியபடி,

"அவளையும் அவ க்ரூப்பையும்தான், கேஸ்ல இருந்து திசை திருப்பச் சொல்லி, வீரராகவனுக்கு லம்ப்பா அமௌண்ட் கொடுத்தாச்சே…" என சொன்னவாறு தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார்.

"கிழிச்சீங்க…." என்ற ஹிதேந்தர் அவர்கள் விராட்டிபத்து சென்று கண்ணகி அம்மன் கோயில் சிலைகளை போலி என்று கண்டுபிடித்ததையும், போதாததற்கு தங்களுக்கு அந்த சுற்றுவட்டாரத்தில் சிலை கடத்தலில் உதவும் விஜயபாண்டியனின் மறைவிடத்தை கண்டுபிடித்து, அவன் பதுக்கிய சிலைகளை கைப்பற்றியதையும் இயம்பினார்.

மேலும் "கோர்ட் ஆர்டர்க்கு கட்டுப்பட்டு, தமிழக அரசுகிட்ட ஒப்படைச்ச கல்வெட்டு நகல்கள்ல ஆறு மாசத்துக்கு முன்னாடி படி எடுத்த கண்ணகி அம்மன் கோயில் கல்வெட்டு நகல் மட்டும் மிஸ்ஸிங்னு, அதை தேடித் தரச் சொல்லி சர்வேஷ்வரன் மூலமா நம்ம மைசூர் நிறுவனத்துக்கு பயங்கர ப்ரெஷர் தந்துட்டு இருக்கா…." என சொன்னார்.

அந்தச் செய்தியில் ஹரிபிரசாத்தின் முகத்தில் ஈயாடவில்லை. எனினும்

"அப்போ மாதங்கிக்கு, அங்க புதையல் இருக்கறது எப்படியோ தெரிஞ்சிருக்குமோ? அது தான் கேட்கறாளோ?" என தன் ஐயத்தை முன்வைத்தார்.

"அதுக்கு சான்ஸே இல்ல, பிரசாத்" என உறுதியாக மறுத்தார் ஹர்ஷவர்தன்.

காரணம் கேட்ட நண்பர்களிடம்,

"நம்ம நிறுவனம் அந்தக் கோயிலை படி எடுத்தப்பவே,அங்க கிடைச்ச புதையல் குறிப்புகள் கொண்ட கல்வெட்டுகளையும்,அம்மனோட சிலைகளையும் விஜயபாண்டியன் உதவியோட தட்டித் தூக்கிட்டேன்…"

என்றவரின் பதிலில் நண்பர்கள் இருவரின் முகத்திலும் பரம சந்தோஷம்.

அவர்களது முகபாவங்களை ஒரு சிறு புன்னகையுடன் அவதானித்தபடி,

"கண்ணகி அம்மன் கோயில்ல புனரமைக்கிற வேலை நடந்தப்ப, மண்ணுக்குள்ள இருந்து அம்மன் சிலையோட கிடைச்ச செப்பேடுகள்ல கோயில் புதையலை அந்த சுற்றுவட்டாரத்தில் எங்கயோ தான் மறைத்து வச்சுருப்பதா,ஒரு குறிப்புச் செய்தி இருந்தது.

நம்ம ஜியோட பொண்ணு அனாமிகா தான், அதை கண்டுபிடிச்சு கண்பர்ம் பண்ணாங்க…" என உரைத்தார்.

அதுமட்டுமின்றி, அப்புதையலை தேடும் பணியில் ஜியும் ஓலைச்சுவடியல் படிப்பதில் தேர்ச்சி பெற்ற அவர் மகளும் ஆட்களை அனுப்பி முனைப்புடன் செயல்பட்டு வருதாக, கூடுதல் தகவலையும் நண்பர்களிடத்தில் மொழிந்தார்.

எனவே மாதங்கி அந்த கல்வெட்டுகளை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என அடித்துப் பேசினார். இருந்தும் என்ன காரணத்துக்காக மாதங்கி அக்கல்வெட்டு நகல்களை தேடுகிறாள் என்பது தான், அம்மூவருக்கும் விளங்கவில்லை.

எது எப்படியோ இனியும் மாதங்கியை உயிரோடு விட்டு வைத்தால், கண்டிப்பாக தங்கள் திட்டம் தவிடுபொடியாவது உறுதி என்று அறிந்து, அவர்கள் அவளை தீர்த்துக்கட்ட முடிவாற்றினர்.

ஹர்ஷவர்தனின் வாய் மொழியாக நடந்தவற்றை கேட்ட ஹிதேந்தருக்கு,

"ஜிக்கும் அவர் பொண்ணுக்கும்முன்னாடி, நாம அந்த புதையலை கைப்பற்றிட்டா என்ன?" என்று கண்களில் பேராசை தாண்டவமாடக்கேட்டார்.

"எப்படியும் ஜியும் அவர் பொண்ணும் புதையலை கண்டுபிடிச்சா, ஏதோ நாயிக்கு எலுப்பு துண்டு வீசுறது போல கிள்ளி கொடுக்கப் போறாங்க. ஆனா, நாமளே அதைக் கண்டு பிடிச்சா முழுசா அள்ளிக்கிட்டு வந்துடலாம்…"

என குதூகலித்த ஹிதேந்தரின் வார்த்தைகளை வழிமொழிந்த ஹரிபிரசாத்தும், விஜயபாண்டியன் மற்றும் அவர்களின் விசுவாசிகள் மூலம் தேட, ஆயத்தங்கள் செய்யலாம் என யோசனை சொன்னார்.

தன் நண்பர்கள் இருவரும் கூறுவது போல "எத்தனை நாளைக்குத் தான் குதிரைக்கு கேரட் காட்டி ஓடவிடும் ஜியின் கீழ் இருப்பது…" என்ற எண்ணம் ஹர்ஷவர்தனின் மனதில் தலைதூக்கியது.

இம்முறை நண்பர்களுடன் செயல்பட்டு மொத்த புதையலுடன் ஏதாவது அயல்நாட்டில் போய் குடியேறிவிட வேண்டும் என திட்டம் தீட்டினார், ஹர்ஷவர்தன்.

எனவே நண்பர்களின் திட்டத்தை முழுமனதாக வரவேற்றார்.

************

ஹர்ஷவர்தனும் அவரது நண்பர்களும் விராட்டிபத்து கிராம சுற்றுவட்டார கோயில் சிலைகளை தங்கள் ஆட்களுக்கு கைமாற்றும் இடைத்தரகராக, முன்னேறி இருந்த விஜயபாண்டியன் மீது உண்டான பெருத்த நம்பிக்கையில், புதையல் கண்டறியும் வேலையை அவனிடம் ஒப்படைத்தனர்.

அவர்களுடன் சேர்ந்து தன் பாவக் கணக்கை இன்னும் கொஞ்சம் ஏற்றிக் கொள்ள ஆயத்தமானான், விஜயபாண்டியன்.

இவ்வாறாக விஜயபாண்டியனின் தலைமையில் ஹர்ஷவர்தனின் ஆட்களும், ஜியின் மகள் அனாமிகாவின் ஆட்களும் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் புதையல் வேட்டையில் ஈடு பட்டனர்.

மேலும் அனாமிகாவிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, தான் பத்திரப்படுத்தி வைத்த கண்ணகி அம்மன் கோயில் மூலச்செப்பேடு மற்றும் கல்வெட்டுகளில் இருந்து நகல் எடுத்த குறிப்பை, விஜயபாண்டியனிடம் கொடுத்து தேடப் பணித்தார், ஹர்ஷவர்தன்.

அதில்,

"ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ப நாயக்கரின் மகளும், மேற்கு மதுரை சமஸ்தானத்தின் இளவரசியுமான மீனாட்சி தேவியார், கண்ணகி அம்மனுக்கு கொடுத்த கொடையாக, வைர வைடூர்ய அணிகலன்கள்,பொற்காசுகள் இரண்டு வெள்ளியும், மூன்று முத்துக்கள், நான்கு மாணிக்கம் ஒரு மூட்டைகளும்,மரகதம் ஒன்று, கலை பொக்கிஷங்களும்ஐம்பொன் சிலைகளும், உள்ளலை குத்துவிளக்குகளும், 4 ஏக்கர் நிலங்களும், இரண்டு பொன் காற்சிலம்புகளும், இருபத்தி ஆறு பசுக்களும், 50 ஆடுகளும் கொடுத்தற்கான தானப் பட்டையம்."

என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏனோ அக்குறிப்பின் நம்பகத்தன்மையை ஆராயாமல் பணியில் ஈடுபடுவது வீண் என்று விஜயபாண்டியனுக்குத் தோன்றியது.

"இப்படி மொட்ட தாசன் குட்டைல விழுந்தா மாதிரி, தலையும் இல்லாம வாலும் இல்லாம ஒரு தகடு வச்சு எப்படி சார்தேடுறது?" என்றவனின் வார்த்தைகளில் இருந்த நியாயம் அம்மூவருக்கும் புரிந்தது.

தங்கள் குழு அக்கோயிலை படி எடுக்கச் சென்ற போது முகலாய படை எடுப்பால் கோயில் கட்டுமானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதையும், அதுவரை பொக்கிஷங்கள் கோயிலில் பாதுகாக்கப்பட்டு மக்கள் நலப்பணிக்கும் கோயில் அறப்பணிக்கும் பயன்பட வேண்டும் என்ற கல்வெட்டுச் செய்தியை படித்து அறிந்தனர்.

எனவே ஏன் அப்படையெடுப்பில் கோயில் செல்வங்கள் எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற விஜயபாண்டியனின் சந்தேகம், ஹர்ஷவர்தனையும் தொற்றிக் கொண்டது.

எனவே கண்ணகி அம்மன் கோயிலின் தோற்றம், வரலாறு, மீனாட்சி தேவியார் கொடுத்த கொடையின் உண்மை தன்மை, முகலாய படை எடுப்பில் நடந்த கொலை கொள்ளை என்று அனைத்தையும் ஒரு தனி குழு அமைத்து அலசி ஆராய்ந்து, ஒரு அறிக்கையை தயார் செய்தனர்.

அதில் புதையல் எங்கோ கோயிலில் தான் மறைந்திருக்க வேண்டும் என்பது உறுதியானது.

அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட விஜயபாண்டியனும் ,அடுத்த முறை புதையலோடு சந்திப்பதாக வாயெல்லாம் பல்லாக கூறிச் சென்றான்.

********

அன்று காலை விஜயபாண்டியனின் அறையைத் தாண்டிச் சென்ற ருத்ரேஷின் காதுகளில் விழுந்தது, அண்ணனின் உரையாடல்.

'கண்ணகி அம்மன் கோயில் வரலாறு' என்ற ஒரு வார்த்தையில் தன் காதுகளை கூர்மையாக்கிய ருத்ரேஷ்,ஒரு நிமிடம் அறைக்கு அருகில் தேங்கினான்.

விஜயபாண்டியனின் வாய்மொழியாக கோயில் கட்டுமான பணியை நிறுத்தியது, அம்மன் சிலைகள் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள விக்கிரஹங்களை கடத்தியது, இப்போது புதையல் வேட்டையில் இறங்கி, அதற்காக கோயில் பற்றிய வரலாற்று அறிக்கையை ஹர்ஷவர்தன் க்ரூப்பிடம் இருந்து பெற்றது வரை, யாரோ நண்பனிடம் வாக்குமூலம் தந்து கொண்டிருந்தான்.

மேலும் அந்த அறிக்கையை நண்பனுக்கு வாட்ஸ்ஆப் செய்தவன், "புதையல் மட்டும் கிடைக்கட்டும். எடுத்துட்டு மலேஷியா சிங்கப்பூருக்கு கம்பி நீட்டிரனும். இப்பவே பாஸ்போர்ட் வீசா ரெடி பண்ணிடு…" என சில கட்டளைகளை பிறப்பித்துவிட்டு, அழைப்பைத் துண்டித்தான்.

அவன் அறையை விட்டு வெளியே வரும் அரவம் கேட்டதும், நல்ல பிள்ளையாக அப்போது தான் அங்கு வந்தது போல பாவனை செய்தபடி, அவனுடன் இணைந்து உணவு மேசை நோக்கி நடந்தான், ருத்ரேஷ்.

உணவுண்டபடி ஏதோ ஒரு யூ டியுப் வீடியோவில் மூழ்கிய விஜயபாண்டியனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான், ருத்ரேஷ்.

அன்னை பரிமாறிய உணவை கொறித்துக் கொண்டே தமையன் கைபேசியில் பதிவிட்ட கடவுச்சொல்லை கண்டறிந்தான்.

உணவை முடித்துவிட்டு வெளியே செல்ல எத்தனித்த விஜயபாண்டியன், ஏதோ கோப்பு ஒன்றை தேடி தன் அறைக்கு சென்ற சந்தர்ப்பத்தை தனதாக்கிய ருத்ரேஷ் அவன் கடவுச்சொல்லை இயக்கி, அந்த அறிக்கையின் பிடிஎஃ பைலை கைபற்றி இருந்தான்.

இது எதுவும் அறியாத விஜயபாண்டியனும், ஒரே குறிக்கோளாக புதையலை மீட்கும் பணியை இயன்றவரை துரிதப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஆனால், வெளி வரப் போவது புதையல் மட்டுமா? இல்லை, புதைந்து போன ரகசியங்களுமா? என்ற கேள்விக்கு தான் பதில் இல்லை.

சிலை மீண்டு(ம்) வரும்…
IMG-20220725-WA0004.jpg

 

Premakameswaran

New member
மிரட்டி இருக்க டா... எவ்ளோ effort... Oru பக்கம் ஸ்விஸ் வருது... ஒரு பக்கம் சிலை கடத்தல் ரெண்டுக்கும் நடுல சுத்த தமிழ்.... Wow da... Great work
 

Anjana Subi

Active member
மீண்டு(ம்) வந்த சிலையே…!
FB_IMG_16587644363528979.jpg
சிலை – 10

மதுரை கமிஷனர் அலுவலகம்,


"என்ன பிரகாஷ் செஞ்சு வச்சிருக்க நீ? அழகர் கோயில் சிலைங்களை திருடப் போறானுங்க. இப்பவே புரொடெக்ஷன் போடுன்னு சொன்னேன், கேட்டியா? இப்ப பாரு, மொத்தமா ஆட்டையப் போட்டுட்டானுங்க…"

என தன் முன்னால் நின்றிருந்த பிரகாஷைவெளுவெளு என்று வெளுத்துவாங்கிக் கொண்டிருந்தார், ஐஜி வாஞ்சிநாதன்.

"மீடியா காரனுங்க நம்ம டிப்பார்ட்மெண்ட் மானத்தையே சந்தி சிரிக்க வச்சுட்டானுங்க…" என்றவாறு தன் லேப்டாப்பில் இருந்த 'அழகர்மலை சிலை திருட்டு. தூங்குகிறதா போலீஸ்' என்ற கொட்டை எழுத்துக்களில் இருந்த ஒரு யூ-டியூப் காணொளியின் தலைப்பை அழுத்தி ஓட விட்டார்.

அதை சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷைக் கண்டு கடுப்புற்றவர், தன் முன்னால் இருந்த தண்ணீர் குவளையை எடுத்து அருந்தி, தன் தாகத்துடன் மன வெம்மையையும் தணிக்க முயன்றார். அவர் காட்டிய காணொளியை, யாருக்கு வந்த விருந்தோ என்று பார்த்தவன்,

"விடுங்க சார். தங்கமா வைரமா? ஐம்பொன் சிலை தானே…!" என விட்டேற்றித்தனமாக பதிலுறைத்தான்.

மகனாயிற்றே என பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்த வாஞ்சிநாதனும், தன் பொறுமையை இழந்து,

"பிரகாஷ் எனஃப். நாலு கேஸை சால்வ் பண்ணிட்டா பெரிய இவன்னு நெனப்போ? உன் வயது என் அனுபவம்டா. எண்ணி ஒரு மாசத்துல அந்த அக்யூஸ்டுங்களை கேங்கோட பிடிக்கற, இல்லை, மகன்னு பாக்க மாட்டேன். சீட்டை கிழிச்சிடுவேன்…" என கழுத்து நரம்புகள் புடைக்கக் கத்தினார்.

அவர் பேச்சில் கிர்ரென்று தலைக்கேறிய சினத்தை, தன் முஷ்டிகளை அழுந்த மடக்கி அடங்கியவன், தன் கையில் இருந்த காப்பை இழுத்துவிட்டுக் கொண்டு,

"ஒரு மாசத்துல அவனுங்களைப் பிடிக்கலைனா, நானே வேலையை ரிசைன் பண்ணிடுவேன்…" என கொம்பு சீவிய காளையாய் சிலிர்த்து நின்றான்.

அறையை விட்டு வேக நடையுடன் வெளியேறப் போனவனை, "ரிசைன் பண்ணிட்டு கோயில்ல மணி அடிக்கப் போறியா?" என சீண்டியது வாஞ்சினாதனின் குரல்.

பதிலுக்கு தன்னை முறைத்த தனையனிடம், "கேஸ் விஷயமா போன இடத்துல, அய்யா பொண்ணு பாத்துட்டு வந்திருக்கீங்கனு கேள்வி பட்டேன்.." என்றவரின் குரலில் இருந்த நக்கல் பிரகாஷை கட்டிப் போட்டது.

அந்நேரம் பார்த்து வாஞ்சிநாதனிடம் கோப்பு ஒன்றை தருவதற்காக கதவை தட்டிக் கெண்டு உள்ளே நுழைந்தான், குமரவேல்.

தன்னை அனல் கக்கப் பார்க்கும் பிரகாஷின் பார்வையை உணர்ந்த குமரவேலும்,'ஆத்தி, சார் பார்வையே சரி இல்லையே. நமக்கெதுக்கு வம்பு கண்டுக்காம போயிடுவோம்…' என மனதோடு பேசியபடி, கண்டும் காணாது தன் வேலையை முடித்துவிட்டு வெளியேறினான்.

குமரவேலின் முதுகை துளைத்த பிரகாஷின் பார்வை படையை கண்டித்து,

"அவனை ஏன் முறைக்கிற? அய்யர் பொண்ணா இருந்தா என்ன? உனக்கு பிடிச்சிருந்தா ஓகே. பேசி முடிச்சரலாமா?" என ஆர்வமாக வினவியவரைப் பார்க்க, பாவமாக இருந்தது பிரகாஷுக்கு.

என்ன தான் வேலை நேரத்தில் இருவரும் முட்டிக் கொண்டாலும், அவனுக்கு இருக்கும் ஒரே சொந்தம் தந்தை மட்டுமே. அதுவும் காதல் மனைவியின் மறைவுக்கு பிறகு, அவனுக்காகவே வாழ்ந்தவரின் காதல் அவனை எப்போதும் பிரமிக்க வைத்ததுண்டு. அவரைப் பார்த்து வளர்ந்தவன், அதே போன்றதொரு காதல் வாழ்வுக்கு ஆசைப் படுவது தப்பில்லையே.

இருந்தும் பெண் அவளின் மனதை கொய்யாது, திருமண பந்தத்தினுள் செல்ல விருப்பமற்றவன்,

"எனக்கும் உங்களுக்கும் பிடிச்சாப் போதுமா? அவளுக்கு பிடிக்க வேணாம்?"

என எங்கோ பார்த்தபடி உரைத்தான். மேலும் அவரிடம் விடை பெறும் போது,

"கொஞ்சம் டைம் குடுங்க பா. இந்த கேஸ் முடிய அவங்க வீட்ல பேசலாம்…"

என கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக நகர்ந்துவிட்டான்.

அதுவும் இந்த அழகர் கோவில் திருட்டுக்குப் பிறகு, மகனின் நடவடிக்கைகளில் ஏதோ இனம் காண முடியாத மாற்றத்தை உணர்ந்த அந்த பாசக்கார தந்தையும், விட்டுப்பிடிக்க எண்ணி அமைதி காத்தார்.

சிலை திருட்டு வழக்கு விஷயமாக அலைந்து கொண்டிருக்கும் மகனை வாஞ்சிநாதன் கண்ணார கண்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆனது. அதுவும் திருடர்களை பிடிக்கச் சென்ற காட்டு பகுதியில் மகன் வழி தவறி தொலைந்து , ஒருவாரம் கழித்து திரும்ப கிடைத்ததை எண்ணியவரின் நெஞ்சு பதறி துடிதுடித்தது.

மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மகனை தேடி ஓய்ந்து கை விரித்த நேரம் அவர் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்லவே. காவல்துறை அதிகாரியின் வாழ்வு பூரண ஆயுசு நித்திய கண்டம் என்பதை அறிந்திருந்தவருக்கு திடீரென்று

"இந்த ஜாதகனுக்கு இப்ப மாரகாதிபதி தசை நடக்குது. கண்டிப்பா மரணத்தை ஒத்த கண்டம் சமீபிக்க வாய்ப்பு இருக்கு." என்ற வார்த்தைகள் நேரம் கெட்ட நேரத்தில் காதில் ஒலிக்க, சப்தநாடியும் ஒடுங்கியது.

இவை அனைத்தும் பிரகாஷின் அலட்சிய போக்கால் விளைந்தது என அறிந்தவர், அதனால் தான் அவனை உண்டு இல்லை என ஆக்கி இருந்தார்.

'ஒரு நிமிடம் மகனுக்கு பதிலாக இந்த வழக்கை வேறு யாரையாவது கையாள சொல்லலாமா?' என யோசித்தவர், தன் அபத்தமின எண்ணவோட்டத்தை தலையை உதறி கட்டுக்குள் கொண்டு வந்து முயன்று பிற வேலைகளில் கவனம் செலுத்த முயன்றார்.

வெளியே வந்த பிரகாஷின் கண்கள் குமரவேலை தீர்க்கமாகப் பார்க்க 'சொன்னா மகன் முறைக்கிறான். சொல்லாட்டா அப்பன் கடிக்கிறான். என்ன பொழப்புடா இது' என்று மனதில் நொந்தபடி வராத கைபேசி அழைப்பை ஏற்று பேசுவது போல நடித்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்று,

"யோவ்… ஆள் இல்லாத கடைல டீ ஆத்துனது போதும். வந்து ஜீப்பை எடு.." என்ற பிரகாஷூடன் அசடு வழிய சிரித்துக் கொண்டே நடந்தான், அவனது கூட்டாளி.

"அப்பாகிட்ட பொண்ணை பத்தி மட்டும் தான் உளறுனியா இல்லை கேஸைப் பத்தியும் ஏதாச்சு உளறுனியா?" என்றவனின் கேள்வியில்,

"எந்த கேஸ் சார்?" என பாவமாகக் கேட்டான், குமரவேல்.

ஒரு நிமிடம் நடையை நிறுத்தி, இடவலமாக தலையை ஆட்டி 'கிழிஞ்சது போ' என முணுமுணுத்துக் கொண்டு ஜீப்பை நோக்கி நடந்தான்.*************

சர்வேஷ்வரனின் மூலம் கண்ணகி அம்மன் கோயில் கல்வெட்டு நகல்களை மீட்க முயன்ற அவளுக்கு, மிஞ்சியது எல்லாம் தோல்வி மட்டும் தான்.

கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க, தங்களிடம் இருந்த எல்லா கல்வெட்டு நகல்களையும், தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கைவிரித்தது, மைசூர் கல்வெட்டியல் நிறுவனம்.

கண்ணகி அம்மனின் கோயில் கல்வெட்டுகள் பற்றி குறிப்பாகக் கேட்டதற்கு, ஒரு இரண்டு பக்க மேலோட்டமான அறிக்கையை நீட்டியவர்கள்,

"நாங்க படி எடுக்க போனப்ப, கோயில் புனருதான வேலை நடந்துட்டு இருந்துச்சு சார். அதனால இவ்வளவு தான் எடுத்தோம்…" என மெத்தனமாகமொழிந்தனர்.

அந்த அறிக்கையைப் படித்த மாதங்கிக்கு கோபம் சுறுசுறுவென நடு உச்சிக்கு ஏறியது. அக்குறிப்புகளில் கோயிலின் வரலாற்றைச் சொல்லும் தகவல்கள் கூட குறிப்பிடப்படவில்லை என்பதே காரணம்.

‘அவர்கள் தரவில்லை என்றால் என்ன? இவளால் கண்டு பிடிக்க முடியாதா?’அவள் ராஜமாதங்கி. அகழ்வு ஆராய்ச்சியையே உயிர்மூச்சாக சுவாசிப்பவளுக்கு, இதெல்லாம் ஒரு பொருட்டா? தன் கையே தனக்கு உதவி என்று, இதோ களம் இறங்கி விட்டாள் மாது.

************

அந்த வார விடுமுறையில் கண்ணகி அம்மன் கோயில் கல்வெட்டுகளை படி எடுக்க, அவந்திகாவிடம் உதவி கோரினாள், பெண்.

அரைமனதாக சம்மதித்த தோழியிடம்,

"ஒன்னும் ஆகாதுடி. நான் தான் கூட இருக்கேன்ல…" என பேசி பேசி சம்மதிக்க வைத்து அழைத்து வந்திருந்தாள்.

அக்கோயிலின் வெளித் தோற்றத்தைப் பார்த்து நடுங்கிய அவந்திகா,

"ஸ்மால் டவுட் மாது…." என்றவளை,

'என்ன' என்பது போல பார்த்தாள், மாதங்கி.

"அங்க நித்யா அஷோக் திதியன்னு இவ்ளோ பேரு இருக்கறப்ப, என்னை மட்டும் ஏன்டி கூப்பிட்டுட்டு வந்த?" என கேட்டவளின் குரல் பிசிரடித்தது.

தோழியின் நடுக்கத்தைக் கண்டு கொடுப்புக்குள் சிரிப்பை அடக்கியபடி,

"அதுவா, ஏன்னா ஓலைச்சுவடி படிக்கறதுல நீ தான் பிஸ்து. அதான் கல்வெட்டு எழுத்தும் உனக்கு ஈசியா படிக்க வரும்னு உன்னை கூப்பிட்டேன்…"

என்ற தோழியின் பதிலில்,

"ம்க்கும் இந்த லாஜிக்குக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…" என முனகியவள்,

'ஓலைச்சுவடியியலை ஸ்பெஷலைசேஷனா எடுத்தது ஒரு குத்தமாடா! அவ்வ்வ்…' என மானசீகமாக தலையில் அடித்தபடி, மாதங்கியுடன் கோயிலுக்குள் காலடி எடுத்து வைக்க முற்பட்டாள்.

அச்சமயம் கேட்ட, "ஆரு கண்ணு அது…." என்ற முதிய குரலில், பெண்கள் இருவரது நடையும் பிரேக் அடித்தது போல நின்றது.

கோயில் அருகில் இருந்த அந்த அரசமர நிழலில் ஒரு சாயம் போன துண்டை விரித்து, படுத்தபடி குரல் கொடுத்தார் அந்தப் பெரியவர்.

பெண்கள் இருவரையும் பார்வை மங்கிய தன் கண்களை இடுக்கி,

"ஏங்கண்ணு அசலூரா நீங்க? என்ன சோளியா அந்த கோயிலுக்குள்ளாரே போறீங்க…" என தன் தளர்ந்த குரலில் விசாரித்தபடி, தான் படுத்திருந்த துண்டை உதறி முண்டாசாக தன் தலையில் கட்டினார்.

அவர் சம்மன் இல்லாமல் ஆஜராவது எரிச்சல் தந்தாலும், கல்வெட்டுகளை நகலெடுக்க வந்திருப்பதாக, பதிலளித்தாள்.

தன் காதுக்கு பின் சொருகி இருந்த துண்டு பீடியை எடுத்து பற்ற வைத்தவர்,

"அந்த கோயிலுக்குள்ள போக எளந்தாரி பசங்களே பயப்படுவானுங்கத்தா. உள்ளாருக்க பத்தடில பாம்பு ஒன்னு உலாத்தது. நம்ம ராம தேவ சித்தர் அம்சமுனு பேசிகிடுதாங்க. கோயிலுக்குள்ளாரே போனவங்கள காவு வாங்காம உடாது…"

என அவர்களுக்கு தெரிந்த கதையையே திரும்பப் படிக்கவும், மாதங்கிக்கு கொஞ்சம் சலிப்பாக இருந்தது.

"சித்தரை தொந்தரவு பண்ணாம எங்க வேலையை முடிச்சுகிடுறோம். நீங்க விசனப்படாதீங்க…." என அவரைப் போலவே பேசி, தெனாவெட்டாக உள்ளே போனவர்கள், உயிருடன் திரும்பக் காத்திருக்க ஆரம்பித்தார், அந்த முதியவர்.

************

அவந்திகாவும் மாதங்கியும் கருமமே கண்ணாக தங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காற்றில் திருநீரின் நறுமணம் கமழ, அதிசயமாக உணர்ந்தாள், மாதங்கி.

ஒரு ஓரத்தில் அவந்திகா தன் மூக்குக்கு ஒரு துணியை கட்டிக் கொண்டு, கையில் இருந்த கேமராவில் முக்கியமான கல்வெட்டு தகவல்களை படமாக சேமித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

"அவந்தி, உனக்கு ஏதாச்சு ஸ்மெல் வருதா?" எனக் கேட்க

"ஸ்மெல் இல்ல மாது, நாத்தம். வௌவால் டுட்டூ. பின்ன மணக்கவா செய்யும்?" என கடுப்படித்தபடி தன் வேலையில் கவனமாக இருந்தாள், அவந்திகா.

"ம்ச்சும்…." என்ற மாதங்கியின் நாசியை மீண்டும் துளைத்த அந்த பிரத்யேகமான திருநீரின் மணத்தோடு சேர்த்து, ஒரு இனிய நறுமணமும் மனதைக் கொய்தது.

மெல்ல கோயிலைச் சுற்றி நடந்தவள், ஒரு உந்துதலில் குளக்கரை மண்டபத்தை அடைந்தாள். இப்போது அந்த சுகந்தமான மணம் தூக்கலாக இருந்தது.

மாதங்கி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு நாகம் விறுவிறு என்று லிங்கத்தை ஒருமுறை வலம் வந்து, எங்கோ சென்று மறைந்தது.

அதைக் கண்டவளின் மனம் ஒருமுறை நின்று துடித்தது. அந்த மண்டபத்தின் படிகளில் ஏறியவள், அப்போது தான் பிரம்ம கமலப் பூக்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டிருப்பதையும் அருகில் சுடர்விட்டு எரியும் அந்த பஞ்சமுக விளக்கையும் கண்டாள்.

லிங்கத்தின் மீது சாற்றப்பட்ட பிரம்ம கமலப்பூக்களில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தவளுக்கு, ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

காரணம், இது ஆண்டுக்கு ஒருமுறை பவுர்ணமி இரவில் மலர்ந்து, மறுநாள் உதிரும் தன்மை பெற்றது. இது கள்ளி வகை செடியானாலும், பரவலாக இமயத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த மலர் பூக்கும் நேரத்தில் மனதில் நினைக்கும் காரியம் ஈடேரும் என என்றோ, தன் பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது.

அப்போது அனிச்சையாக லிங்கத்துக்கு பின்னால் இருந்த கருங்கல் சுவற்றைக் கண்டவளது கண்களில் அதீத கூர்மை.

பச்சை படிந்து வௌவால்களின் எச்சத்தின் நடுவில் தெரிந்த அந்த எழுத்துக்களைக் கண்டு, அருகில் சென்று உற்று நோக்கியவள், தன் துப்பட்டாவை கொண்டு அந்த கல் வெட்டின் ஓர் பகுதியை அழுந்த துடைத்தாள். இப்போது ஓர் அளவு எழுத்துக்கள் கண்களுக்கு புலனானது.

மெல்ல இதழ் அசைத்து,

"வாடை கொண்டல் திகையும் கூடி


கூடல்புரத் தரசனை போற்றி – அவன்…"

என மேல படிப்பதற்குள்,

"மாதங்கீ…ஈ…." என கூச்சலிட்டாள் அவந்திகா.

அந்த சத்தம் அந்த கருங்கற்களில் பட்டு எதிரொலிக்க, சுற்றி இருந்த மரங்களில் தஞ்சம் புகுந்திருந்த பறவைகள் எல்லாம் சடசடவென பறந்தன.

இது எதுவும் என்னை பாதிக்கவில்லை என்பது போல, கல்வெட்டின் அடுத்த பகுதியை லேசாக துணி கொண்டு துடைத்தவளின் நேத்திரங்கள் கண்ட,

"பொன்னடி புகலாப் ……"

என்ற அடுத்த வார்த்தைகளை மனம் உள்வாங்குவதற்கு முன்,

"மாதூ… இங்க வாயேன்….!" என்ற தோழியின் குரலில் கவனம் சிதறியது.

அக்குரலில் தொனித்த அபாயத்தை உணர்ந்து தலை தெறிக்க ஓடிய மாதங்கி, ஒரு பெரிய கல்லை கையில் வைத்துக் கொண்டு நின்ற தோழியைக் கண்டு அதிர்ந்தாள்.

"என்னடி ஆச்சு…" என கேட்ட மாதங்கியிடம்,

"ஊர்ல பேசிக்கிறது எல்லாம் உண்மை தான் மாது. சந்திரமுகி படத்துல வரது போல ஒரு பெரிய்ய பாம்பு ஒன்னு, கொஞ்ச முன்னாடி தான் அந்த கருவறைக்குள்ள படம் எடுத்து நின்னுச்சு. நான் பார்த்து நடுங்கிட்டேன். அடிக்க கல்லை தூக்குனா, அதுக்குள்ள ஆளைக் காணோம்…."

என்ற தோழியை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்து,

"பர்ஸ்ட் கல்லை கீழே போடுடி…" என கடிந்த தோழியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாது, சொன்னதை செய்தாள்.

எனினும் கண்கள் கலங்க அச்சத்தில் உடல் நடுங்கிய தோழியிடம், தன் தண்ணீர் பாட்டிலை நீட்டி அருந்தச் செய்தாள். அவள் முதுகை நீவி,

"ஈசி ஈசி. ஹேய் இதென்ன, பர்ஸ்ட் டைம்மா நாம பாம்பை பார்க்குறது. நாம இதை விட மோசமான இடங்களை எல்லாம் எக்ஸ்க்கவேட் பண்ணப் போயிருக்கோம் தானே?" என ஆசுவாசப்படுத்த முயன்றாள்.

"அய்யோ! என் வாழ்க்கையிலேயே இவ்ளோ பெரிய பாம்பை நான் பார்த்ததில்லடி…" என கிலி பிடிக்கச் சொன்னாள், அவந்திகா.

தோழியின் மனநிலை அறிந்த மாதங்கியும் "சரி இன்னைக்கி படி எடுத்த வரை போதும், எல்லாம் எடுத்து வை கிளம்பலாம்…" என ஆணையிட,

விட்டால் போதும் என எல்லா உபகாரணங்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள், அவந்திகா.

அந்நேரம் அவள் கைபேசி அதிர்ந்து தன் இருப்பை உணர்த்தியது.

திரையில் மின்னிய அன்னையின் எண்ணை உயிர்பித்த அவளிடம் "மாது ஒரு சம்பந்தம் வந்திருக்குடா. உனக்கு புடிச்சா கண்டிப்பா பேசிடலாம்." என்ற குரல் விட்டு விட்டு கேட்டது.

"ஹலோ… ஹலோ…" என சிக்னல் கிடைக்காமல் கோயிலின் வாயிலை நோக்கி நடந்தபடி பேசிக் கொண்டே வந்தாள், மாதங்கி.

***********

தன் அலைஅலையான கேசத்தை ஜெல் வைத்து படிய வாரி, யூ எஸ் போலோ டி சர்ட் கார்கோ பேண்ட் அணிந்து கண்களை கூலர்ஸ் மறைக்க வந்தான், ருத்ரேஷ்.

மாதங்கியின் கைபேசி இருமுறை அழைத்தும் எடுக்கப்படாததால், அவள் மதுரையில் தங்கி இருக்கும் விலாசத்துக்கு செல்லலாமா என சிந்தனையில் லயித்தபடி அந்த சிதிலமடைந்த கோயிலைத் தாண்டி தன் புல்லட்டை ஓட்டிச் சென்ற ருத்ரேஷின் கை, தானாக பிரேக்கை அழுத்தியது.

சிலை திருட்டு பிரச்சனை ஓர்அளவு ஊர் வாய்க்கு அவலாகி அடங்கி இருந்ததால், கோவில் காவலுக்கு வந்து கொண்டிருந்த இரண்டு காவலாளிகளையும் வரவேண்டாம் என பிரகாஷ் நிறுத்தி இருந்தான்.

அவன் மடத்தனத்தை மனதில் வசவு பாடியபடி, வண்டியின் இயக்கத்தை மெல்ல குறைத்தான்.

அப்பாழடைந்த கோயிலுக்கு முன்னால் இருந்த அவந்திகாவின் செருப்பைப் பார்த்தவன் நெற்றிப் பொட்டு சுருங்க, வண்டியை திருப்பிக் கொண்டு வந்து அந்த அரசமரத்தடியில் நிறுத்தினான்.

அவன் வண்டிச் சத்தத்தில் தூக்கம் கலைந்த அம்முதியவரிடம், கோயிலுக்குள்ளே யாராவது சென்றார்களா என விசாரித்தான்.

அவரும் "பொட்ட புள்ளைங்க ரெண்டு பேரு, நான் சொல்ல சொல்ல கேட்காம உள்ளார போயிடுச்சுங்க. போய் ரொம்ப நேரமாச்சு…." என நீட்டி முழங்கினார்.

அவர் கூறிய சேதியில் ருத்ரேஷின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசமானது.

வேகமாக கோயிலின் வாயில் அருகே சென்றவன், அவந்திகாவின் செருப்பருகே தன் செருப்பை விட முற்பட்ட போது, ஏன் என்று சொல்லத் தெரியாத ஒரு வித மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி அவன் மனதை திசைக்கு ஒருபுறம் இழுத்துக் கொண்டிருக்க, அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான், அந்த ஆறடி ஆண்மகன்.

"அம்மா இங்க சிக்னல் இல்ல. எனக்கு சரியா கேட்க மாட்டேங்குது. அப்புறம் பேசுறேன்…" என அன்னையின் அழைப்பை துண்டித்தவளின் கண்களில் விழுந்தான், கோயில் நுழைவாயிலில் சிலையாய் சமைந்து நின்ற ருத்ரேஷ்.

உச்சிமேட்டுக்கு ஏற்றிய புருவத்துடன், "அட டாக்டரே! நீங்க எங்க இங்க?" என கேட்டுக் கொண்டே அவனை நெருங்கினாள் மாதங்கி.

அவள் குரலில் தன்னிலை அடைந்தவன், "மேடம்க்கு போன் பண்ணா எடுக்கற வழக்கம் இல்லையா?" என புன்னகைத்தான்.

அதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டவள், தன் கைபேசியை வேலைக்கு இடையூறு தரக் கூடாதென்று சைலெண்ட் மோடில் வைத்தது பற்றிக் கூறினாள்.

மேலும் அவனின் இரண்டு தவறிய அழைப்புகளைக் கண்டவள் தன் கண்களை சுறுக்கி நாக்கைக் கடித்து,

"சாரி வர்க் பிஸில கவனிக்கல?" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறுவதைக்கண்டு ருத்ரேஷுக்கு சிரிப்பு பீறிட்டது.

மாதங்கி இங்கு தனியாக வந்ததன் காரணம் கேட்டவனிடம், கல்வெட்டு நகலுக்கு முயற்சித்து தோல்வி உற்றதையும், அதனால், தானே படி எடுக்க முடிவு செய்து தோழியுடன் வந்ததாக இயம்பினாள்.

அவள் பேச்சில் இழையோடிய கையாலாகாத்தனத்தையும் வருத்தத்தையும் போக்கத் தயாரானான், ருத்ரேஷ்.

தலை சாய்த்து மார்புக்கு குறுக்கே கட்டிய கரங்களுடன் "நான் இந்த கோயிலோட மொத்த ஹிஸ்ட்ரியும் தந்தா, எனக்கு என்ன தருவீங்க?" என ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி பேரம் பேசினான்.

பதிலுக்கு கண்களில் லேசான சந்தேகத்துடன்,

"நீங்க கொடுக்குற இன்போர்மேஷன் ஜென்யூன்னு எப்படி தெரியும்?" என்று திருப்பி கேள்வி கேட்டாள், மாதங்கி.

கேள்விக்கு கேள்வியால் பதிலளிக்கும் அவள் யுக்திக்கு மனதுக்குள் ஒரு சபாஷ் போட்டவன், 'ஆண்டவன் அழகையும் அறிவையும் ஒரு சேர தந்துட்டா இதான் பிரச்சனை…' என மனதில் நொடித்துக் கொண்டான் .

"ஜென்யூனா இல்லையானு படிச்சா தெரிஞ்சிடப் போகுது…" என்றவன், தான் விஜயபாண்டியனிடம் இருந்து எடுத்த பிடிஎஃபின் அச்சுப் பிரதியை அவளிடம் நீட்டினான்.

சிறிது நேரம் அவன் பேசிவிட்டுச் செல்ல, அந்த மரத்தடியில் படுத்திருந்த அம்முதியவர், தன் அழுக்கு சட்டையின் உள்பாக்கெட்டில் இருந்த கைபேசியில் இவ்வளவு நேரம் தான் பதிவாக்கிய காணொளிக் காட்சியை, யாருக்கோ வாட்ஸ்ஆப் செய்தார்.

ருத்ரேஷ் கிளம்பவும், அவந்திகா தங்கள் பொருட்களுடன் கோயில் வாயிலுக்கு வரவும் சரியாக இருந்தது.

"அம்மா தாயே! இனி உனக்கொரு கும்பிடு. இந்த கோயிலுக்கு ஒரு கும்பிடு…." என்ற தோழியை சமாதானம் செய்தபடி, அவளுடன் நடந்தாள் மாதங்கி.

************

மாதங்கியை பார்த்து விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தான், ருத்ரேஷ். அந்த முன் அந்தி மாலைப் பொழுதில், வீதியில் வேர்க்க விறுவிறுக்க நடந்து போய் கொண்டிருந்தாள், காயத்ரி.

அவள் நடையில் இருந்த பதட்டத்தை கவனித்த ருத்ரேஷ், வண்டியை மெல்ல அவளருகில் நிறுத்தி,

"ஹேய் காயத்ரி! எங்க இவ்ளோ டென்ஷனா நடந்து போறீங்க?" என வினவினான்.

"உங்காத்துல இருந்து பால் வாங்கிட்டுவரச்சே, வழில வண்டி நின்னு போயிடுத்து. அதான் வண்டியை நம்ம அன்னாச்சி கடையாண்ட நிறுத்திட்டு நடந்து வந்தேன். அபிஷேகத்துக்கு வேற நாழி ஆயிடுத்து. அப்பாக்கு கால் பண்ணி சொல்லலாம்னா, போன்ல சார்ஜூம் காலி ஆயிடுத்து.." என கையைப் பிசைந்தாள்.

சிறுபிள்ளையாய் மிழற்றியவளின் அவஸ்தை சுவாரஸ்யம் தர, "அதான், பீடி உஷா மாதிரி ஓடிட்டு இருக்கியோ?" என வினவினான்.

அவன் கேலியில் முகம் சிவந்தவள், "கிண்டல் பண்ணாதேள்…" என கண் கலங்க,

"ஓகே ஓகே கூல்…." என்றவன், சாம்பசிவ ஐயரின் எண்ணை அவள் சொல்லச் சொல்ல, தன் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு அனைத்தையும் கூறி, தானே ஒரு இருபது நிமிடத்தில் அவளை அழைத்து வருவதாகச் சொன்னான்.

"தம்பி, செத்த காயு பக்கத்துல இருந்தா அவகிட்ட கொடுக்கறேளா?" என கேட்கவும்,

"இந்தா உங்கப்பா பேசறார்…" என கைபேசியை அவள் புறம் நீண்டியவன், வண்டியில் ஏறும்படி செய்கை செய்தான்.

ஆபத்துக்கு பாவமில்லை என மறுப்பு கூறாது தந்தையுடன் அவன் கைபேசியில் உரையாடியவாறு, பால் தூக்குடன் பின்னால் அமர்ந்தாள். காரிகை அவளை ஏற்றிச் செல்லும் பாக்கியத்தை பெற்றதாலோ என்னவோ, ருத்ரேஷ்ஷின் முரட்டு இயந்திரம் என்றும் இல்லாத திருநாளாக பறந்து சென்றது.

இருபது நிமிடத்தில் கோயிலை அடைந்தது, ருத்ரேஷின் புல்லட்.

"தேங்க்ஸ்" என கண்கள் படபடக்கமொழிந்தவளிடம், பழுது பார்த்து அனுப்புவதாகக் கூறி ஸ்கூட்டியின் சாவியை பெற்றுக் கொண்டான், ருத்ரேஷ்.

"ஹய்யோ உங்களுக்கு ஏன் சிரமம்…" என மறுத்தவளிடம் விடாப்பிடியாக வண்டிச் சாவியை பெற்றுக் கொண்டவன், வண்டி சரியானதும் தானே எடுத்து வருவதாகக் கூறி, அவள் பதிலை எதிர்பார்க்காது வண்டியை கிளப்பிச் சென்றான். அவன் சென்ற திக்கையே ஒரு சிரிப்புடன் கண்கள் பளபளக்க வெறித்துக் கொண்டிருந்த காயத்ரி, கோயில் மணியோசை சத்தத்தில் நடப்புக்கு வந்தாள்.

*************

அன்று இரவு உணவருந்தி விட்டு வந்த ராஜமாதங்கி, ருத்ரேஷ் அனுப்பிய கண்ணகி அம்மனின் கோயில் வரலாறு அடங்கிய அறிக்கையை எடுத்துப் புரட்ட ஆரம்பித்திருந்தாள்.

அவள் படித்துக் கொண்டிருப்பது கண்ணகி அம்மனின் வரலாற்றை மட்டுமா? அல்லது தன் முன் ஜென்ம சாசனத்தையும் சேர்த்தா?

சிலை மீண்டு(ம்) வரும்…
received_763200348383442.jpeg
 

Anjana Subi

Active member
மீண்டு(ம்) வந்த சிலையே...!

IMG-20220713-WA0042.jpg

சிலை - 11

கி.பி. 1737 தமிழகத்தில் விஜயநகரத்து நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தின் இறுதிக் கட்டங்கள்….


பண்டைய பாண்டிய நாட்டின் பெரும் பகுதி நாயக்க மன்னர்களின் ஆளுகையில் இருந்தாலும், அவற்றை நேரடியாக ஆட்சி செய்யாமல், மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாகப் பிரித்து, பாளையக்காரர்களை கொண்டு நிலமானிய அமைப்பு மூலம் நிருவகித்தனர்.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர்கள் வம்சத்தின் கடைசி வாரிசும், ராணிமங்கம்மாளின் பேரனுமான, விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்த நேரம்.

திருமலை நாயக்கரின் ஆட்சியில் செழித்த மதுரை பூமி திறை, வரி என்ற பெயரில் கடுமையான அநீதிகளையும் கலவரத்தையும் சந்திக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக பாளையங்களை ஆண்ட பாளையக்காரர்களும் மக்களும் மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகினர்.

இப்படியான சமயத்தில் நேர்ந்த விஜயரங்கனின் மறைவு, பாளையக்காரர்களை குடியரசாக அறிவித்து, ஆட்சி புரியும் சுதந்திரத்தை வழங்கியது.

இந்த அதிகார சுதந்திரத்தை தங்கள் சுயநலத்துக்காகவும் உல்லாச வாழ்க்கைக்காகவும் ஒருசில பாளையக்காரர்கள் துஷ்பிரயோகம் செய்தனர். அந்தப் பட்டியலில் முன்னிலை வகித்தவர், மதுரையின் சில பகுதிகளை ஆண்ட வீரப்ப நாயக்கர்.

செல்வச் செழிப்பான சுகபோக வாழ்க்கையில் புரளும் வீரப்ப நாயக்கருக்கும், ஆண்டவன் ஒரு குறையைத் தந்தான். ஊராரின் சாபமோ, இல்லை அன்னமிட்ட கைக்கு செய்த துரோகத்தின் பலனோ? பல வருடங்களாக அவருக்கும் மனைவி அலமேலம்மாளுக்கும் மழலைச் செல்வம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

பார்க்காத வைத்தியம் இல்லை, இருந்தும் பலன் என்னவோ பூஜ்யம் தான். அவ்வப்போது இத்துயரின் காரணம் கணவனின் வினைபயன்தான் என்ற எண்ணம் தலைதூக்கி, அலமேலம்மாளின் மனதை கூறு போடும்.

தோன்றாதா பின்னே! 18 ஆண்டு காலம் மதுரைச் சீமையை ஆண்ட தெலுங்கர் குலவிளங்கான ராணி மங்கம்மாளை சூழ்ச்சியாக விஜயரங்கன் அரண்மனை சிறை எடுக்க உதவியவன் அல்லவோ, அவள் கணவன்.

தான தர்மங்கள் தாராளமாய் செய்து சாலைகள் அமைத்து, சத்திரம் சாவடிகள் கட்டி, அறச்செயல்கள் பல செய்த புண்ணியவதியை அன்னம் தண்ணீர் கொடுக்காமல் கொன்ற கொடும்பாவிக்கு துணை போனதன் பாவம் தானோ என்னவோ, இன்று வரை அவர்கள் வம்சம் தழைக்கவில்லை என நினைத்து மறுகினாள், அலமேலம்மாள்.

அப்போது வீரப்பன்-அலமேலம்மாளின் இந்நிலையை பயன்படுத்தி ராஜியத்தை அபகரிக்க கஜானா காப்பாளன் பெருமாள் செட்டியாருடன் சேர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான், தளபதி வேலப்ப நாயக்கன்.

அவ்விருவரும் துர்போதனைகள் பல செய்து படிப்படியாக மன்னனின் மனதைக் கலைத்து, தங்கள் கைப்பாவையாக ஆட்டுவிக்கத் தொடங்கினர்.

விளைவு, மந்திர ஆலோசனைக் கூடத்தில் அமர்ந்திருந்த மன்னனிடம் ராஜ்யத்தை ஆள வாரிசு இல்லாததை சுட்டிக் காட்டி,

"ஏன் அரசே!தங்களுக்கும் வயது கூடிக் கொண்டே போகிறது. ராணியாரும் பார்க்காத வைத்தியம் இல்லை.அரண்மனை வைத்தியனும் இனி ராணிக்கு பிள்ளைபேறு என்பது சாத்தியமில்லை என கைவிரித்தாயிற்று…" என உச்சுக் கொட்டி கூறிய மாத்திரத்தில் சலேரென நிமிர்ந்து பார்த்தான் வீரப்பன்.

எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த வேலப்பனின் கண் சமிஞ்ஞையில், முயன்று வரவழைத்த நயந்த குரலில், "எப்படியும் தங்கள் அந்தப்புர லீலைகளை கண்டு கொள்ளாத ராணியும் அவரது தமையனும், இரண்டாவதாக தாங்கள் மணம் புரிவதை விரும்ப மாட்டார்கள் கடுமையாக எதிர்ப்பார்கள்…." என சற்று இடைவேளை விட்டான் பெருமாள்செட்டி.

அதைக் கண்ட வேலப்பனின் அர்த்தம் பொதிந்த புன்னகையில், பெருமாள் செட்டி மன்னனின் ஆத்திரத்தை இன்னும் கொஞ்சம் விசிறி விட்டான்.

"தங்களுக்கு இப்படியே பிள்ளை இல்லாமலே போனால், பிற்காலத்தில் அலமேலம்மாளின் அண்ணன் கிருஷ்ணப்ப நாயக்கன் கண்டிப்பாக அவனுக்கு பிறக்கும் வாரிசைக் கொண்டு, நம் ராஜ்யத்தை அபகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு…"

என வீரப்பனின் மனதில் அக்கறையாகச் சொல்வது போல, ஒரு அச்சுறுத்தலை விதைத்தான், பெருமாள் செட்டி.

பெருமாள் செட்டி கூறுவதில் உள்ள உண்மை வீரப்பனுக்குப் புரியாமல் இல்லை.

மேற்கு மதுரை பகுதியை ஆளும் அலமேலம்மாளின் தமையன் கிருஷ்ணப்ப நாயக்கன், மிகுந்த மக்கள் செல்வாக்கு படைத்தவன்.

அதைவிட அவனது படைபலம் மற்றும் பராக்கிரமத்துக்கு முன்னால் தங்களது வீரம் செல்லுபடியாகாது. அவனை பகைத்துக் கொண்டால், இரண்டு பகுதிகளுக்கும் இடையே நடைபெரும் வாணிபம் போக்குவரத்து என எல்லாம் பாதிக்கப்படும் என்பதை நன்றாகவே அறிந்தான், வீரப்ப நாயக்கன்.

எனினும் வன்மம் தலைதூக்க, "யார் ராஜ்யத்தை யார் கைபற்றுவது பார்த்துவிடுகிறேன்…" என உடைவாளை உருவியவனின் உணர்ச்சி வேகத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்தனர் இருவரும்.

"கொஞ்சம் புத்திசாதுர்யத்துடன் நடந்தால், நம் ராஜ்யத்தை காப்பாற்றிவிடலாம் அரசே! இந்நிலையில் கத்தியை தீட்டுவதை விட புத்தியை தீட்டுவதே சாலச் சிறந்தது. அதனால்..." என நிறுத்திய கபடதாரி வேலப்பனின் மனம் புரியாமல்,

"அதனால், என்ன செய்யலாம் என்கிறீர்கள்? மென்று விழுங்காமல் முழுதாகக் கூறி முடியுங்கள்.." என்ற வீரப்பனின் குரலில் அகங்காரம் அப்பட்டமாகத் தெரிந்தது.

மன்னனிடம் அடுத்த வார்த்தை கூறத் தடுமாறிய வேலப்பனுக்கு உதவியாக வந்து விழுந்தது, "அதனால் தாங்கள் ஏன் நம் வேலப்பனின் மகன் விஜயகுமாரனை தத்துப் பிள்ளையாக சுவீகாரம் செய்து கொள்ளக் கூடாது?" என்ற பெருமாள் செட்டியின் வார்த்தைகள்.

வீரப்பனின் மனம் பெருமாள் செட்டியின் வார்த்தைகளை யோசனையுடன் அசை போட ஆரம்பித்தது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகருமாம், வீரப்பனின் மனம் மாறாதா என்ன?

வேலப்ப நாயக்கன் தன் இனத்தைச் சேர்ந்தவன், மேலும் பலமுறை போர்களில் தன்னைக் காக்க, தன் உயிரைப் பணையம் வைத்த ராஜவிசுவாசி. எனவே, அவன் மகனை சுவீகாரம் செய்து கொள்வதில் வீரப்பனுக்கு ஆட்சேபம் பெரிதாக இருக்கவில்லை. அதற்கு கிருஷ்ணப்ப நாயக்கன் மீது அவர் கொண்ட சினமும் பொறாமையும் வலு சேர்த்தது.

ஆனால், இதற்கு தன் மனைவி அலமேலம்மாளும் கிருஷ்ணப்பனும் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கக் கூடும் என்று யூகித்தவர், அப்போதைக்கு அமைதி காத்து திரைமறைவு உள்ளடி வேலைகளில் மூழ்கினார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து மூன்று திங்கள்களில் ராணி அலமேலம்மாள் கருவுற்றாள். அதைக் கேட்ட வீரப்ப நாயக்கனே கொஞ்சம் தன் மனதுவேஷத்தை எல்லாம் விடுத்து அகமகிழ்ந்து பூரித்தான்.

இதைக் கேள்வியுற்ற மாத்திரத்தில் தான் கட்டிய மனக் கோட்டை எல்லாம் தகர்ந்து தூள் தூள் ஆவதை தாங்க மாட்டாமல் தவித்தான், வேலப்பன். எனவே தங்கள் திட்டத்துக்கு குறுக்கீடாகத் திகழ்ந்த, ராணி அலமேலம்மாளின் கருவில் வளரும் சிசுவை அழிக்க பல சதி திட்டங்களை வகுத்தான்.

தனக்கும் தன் வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் அரண்மனையில் பாதுகாப்பு இல்லை என்பதை நன்கு அறிந்திருந்த அலமேலம்மாள், தன் அண்ணன் கிருஷ்ணப்பனுக்கு ஓலை அனுப்பி உதவி கோரினாள்.

அப்போது பார்த்து முகலாய படையை எதிர்க்க படையுடன் புறப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கன், தன் நிரந்தர விசுவாசியும், மெய்காப்பாளனுமான சங்கரய்யாவிடம் தங்கையின் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றான்.

"மாமன் துணை இருந்தால் மலை மேல் கூட ஏறலாம்…" என கூறுவதற்கு ஏற்ப, அலமேலம்மாளுக்கும் அவள் வயிற்றுப் பிள்ளைக்கும் அரணாக இருந்தார் கிருஷ்ணப்பனின் விசுவாசி, சங்கரய்யா. இன்னமும் போர் அபாயம் முழுதாக நீங்கி இருக்காத நேரமது.

சங்கரய்யாவின் துணை கொண்டு, தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சதித் திட்டங்களை முறியடித்து, எப்படியோ பேறு காலம் வரை வந்துவிட்டார், அலமேலம்மாள்.

கிருஷ்ணப்பன் இன்னும் போரில் இருந்து திரும்பியிராத நேரம் அது. ஒரு மழை இரவில் தன் அந்தபுரத்தில் நிறை மாத கர்ப்பினியாக நடை பயின்று கொண்டிருந்த ராணி அலமேலம்மாளுக்கு ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடக்கப் போவதாக ஆழ்மனம் எச்சரித்துக் கொண்டே இருந்தது.

சாளரத்தின் வழியே சட சடவென பெய்த பேய் மழை அலமேலம்மாவுக்குள் ஒரு நடுக்கத்தை விதைத்தது. அச்சமயம் மின்னல் வெட்டியது போல ஒரு வலி, தன் முதுகுத்தண்டில் மின்னி மறைய, "மந்தாகிணி" என்றவளின் குரல் வெளியே முழங்கிய இடியின் மேளதாளத்தில் அடங்கியது.

அந்தக் கதறலில் ஓடி வந்த அவளது அந்தரங்கத் தோழியும் அந்தப்புர தலைமை சேடிப்பெண்ணுமான மந்தாகிணிக்கு, பார்த்ததும் அது பேறுகால வலி என புரிந்துவிட்டது. உடனடியாக மருத்துவச்சிக்கு தகவல் பகிர்ந்தவள், வீரப்ப நாயக்கனுக்கு சேதி சொல்ல, தானே புறப்பட்டாள்.

அந்த நடுநிசி வேளையில் கையில் ஒரு தீப பந்தம் ஏந்தி அந்தப்புர நுழைவாயிலை நெருங்கியவளின் கண்களில் இரண்டு பணிப்பெண்கள், யாரோ ஒரு ஆணிடம் பேசிக் கொண்டிருப்பது போலத் தெரிய, 'இந்த நேரத்தில் அந்தப்புரத்துக்கு விஜயம் செய்த ஆண் யாராக இருக்கும்?' என முனகியபடி, அருகில் இருந்த தூணின் மறைவில் நின்று கவனித்தாள்.

"எப்படியும் ஓர் இரு நாட்களில் அலமேலம்மாவுக்கு குழந்தை பிறந்துவிடும் என ஒற்றன் கூற,“யாம் அறிவோம். குழந்தை பிறந்ததும் அதை எப்படியேனும் கடத்திக் கொண்டு வந்து என்னிடம் தர வேண்டும். புரிந்ததா?" என வெண்கலமணியாக ஒலித்த அக்குரலின் குரூரத்தில், மந்தாகிணியின் கால்கள் வேரூன்றி நின்றது.

அந்த ஆடவனின் கட்டளைக்கு அடிபணிந்து அவர்கள் விடை பெற, சற்று இடைவெளி விட்டு அக்கயவனை பின் தொடர ஆரம்பித்தாள், மந்தாகிணி.

அந்தப்புர வெளிவாசல் தாண்டி நந்தவனத்தில் இறங்கி நடந்தவளின் தீப பந்தமும், அவளுடன் சேர்ந்து மழையில் தொப்பலாக நனைந்திருக்க, அந்த இருட்டை எல்லாம் பொருட்படுத்தாது முன்னேறிச் சென்றாள், அவள்.

அங்கு நித்திய பயன்பாட்டுக்காக இருக்கும் அறைகள், நெல் களஞ்சிகயங்கள் தாண்டி அமைந்த ராணுவ பாசறைக்குள் நுழைந்தது, அவ்வுருவம்.

ஒரு நிமிடம் தாமதித்தவள், முயன்று வரவழைத்த தைரியத்துடன் பாசறையை ஒட்டிய மதில் சுவரின் மீது ஏறி, ஒரு சிறு துவாரத்தின் வழியாக உள்ளே நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.

அறைக்குள் ஒரு ஆகிருதியான அவ்வுருவத்திடம் "உற்சாகமூட்டும் செய்தி. ராணிக்கு பேறுகால வலி ஆரம்பிக்க மருத்துவச்சி வைத்த கெடு இன்று இரவிலிருந்து ஆரம்பிக்கிறதாம். இம்முறை வெற்றி நமதே…" என கொக்கரித்தான் அவள் பின் தொடர்ந்து வந்தவன்.

அதில் சாளரத்தின் பக்கம் நின்று, "சபாஷ், பெருமாள! சபாஷ்! இந்த ராஜ்யத்தை அடையும் என் கனவுக்கு குறுக்கே நின்றால் என்ன ஆகும் என, நாளை பருந்துக்கு விருந்தாகப் போகும் அந்த பச்சிளம் சிசுவின் நிலை கூறும் இவ்வுலகிற்கு…" என ஆர்ப்பாட்டமாக முதுகு காட்டி சிரித்த அவ்வுருவம் திரும்பியது.

அப்போது சாளரத்தின் வழியாகப் பாய்ந்த மின்னலொளியில், "தளபதி வேலப்ப நாயக்கனும் கஜானா காப்பாளன் பெருமாள் செட்டியாருமா?" என முணுமுணுத்த மந்தாகிணிக்கு, ஒரு க்ஷணம் தான் காண்பது கனவா நனவா என்ற ஐயம் எழுந்தது.

வந்த சுவடு தெரியாமல் திரும்ப நடந்தவள், அந்தபுரத்தை அடைந்தபோது, மருத்துவச்சியின் துணையோடு செவ்வனே குழந்தையைப்பெற்று எடுக்க படாத பாடு பட்டுக் கொண்டு இருந்தாள், அலமேலம்மாள்.

சற்று நேரத்தில் எல்லாம் அலமேலம்மாள் ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரட்டை வாரிசுகளை ஈன்றெடுக்க, அதில் பிரசவித்த பெண் மகவு இறந்து விட்டது.

இவ்வளவு ஆண்டுகள் கழித்துக் கிடைத்த மழலை வரத்தில், ஒன்றை அதற்குள் இழந்த துக்கத்தை கூட முழுதாக அனுஷ்டிக்க இயலாதபடி, அவளை மந்தாகிணி மொழிந்த சேதி கட்டிப்போட்டது.

யார் எதிரிகள் என்று உறுதிப்படாமல் இருந்த அலமேலம்மாவுக்கு துரோகத்தின் ஊற்று கண்ணாகத் திகழுவது வேலப்பனின் பதவி மோகம் என தெரிந்து விட்டது.

மேலும் அந்தக் கொடும்பாவிகள் பின்னும் அரசியல் சதியில் இருந்து மகனைக் காக்க, கணவனின் துணை நாடி பிரயோஜனமில்லை என தோன்றவும், இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை குடி கொண்டது.

தன் தமையனும் போரில் இருந்து இன்னும் திரும்பாது இருக்க, உதவி கேட்கக் கூட நாதி இல்லாத தன் நிலையை எண்ணி விசனப்பட்டாள். எனினும், தன் நம்பிக்கையை மட்டும் அவள் நழுவ விடத் தாயாரில்லை.

தன் மகன் தன்னை மட்டுமல்லாது ராஜ்யத்தையும் காத்துக் கொள்ளும் பராக்கிரமசாலியாக வளரும் வரை, இந்த அரண்மனையை விட்டு தள்ளி இருப்பது தான் அவனுக்கு நன்மை என முடிவுசெய்தாள்.

இருள் தாண்டிய வேளை, அரண்மனையின் அத்தனை தீபங்களையும் அணைக்கப் பணித்தாள் அலமேலம்மாள்.மேலும் மந்தாகிணி மூலம் தனக்குப் பிறந்த ஒற்றைப் பெண் மகவையும் மரணதேவன் அழைத்துக் கொண்டதாக அனைவருக்கும் தகவல் பகிரச் சொன்னாள்.

அதுபோல மருத்துவச்சியிடமும் சங்கரய்யாவை தன் அந்தரங்க அறைக்கு அழைத்து வரச் சொன்னவள், இவ்விஷயத்தை பற்றி வெளியே கூற முடியாத படி சத்தியத்தால் அவனை கட்டிப் போட்டாள்.

கையில் இருந்த மகனுடன் இறுதி நிமிடங்களை கழித்தவள்,

"நீ இப்போது வனவாசம் மேற் கொண்டாலும், இந்த ராஜ்யத்தையும் மக்களையும் காக்க மீண்டு(ம்) வர வேண்டும். உனது ஜனனம் நம் நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே இருக்கட்டும்.." என உச்சி முகர்ந்தாள்.

அவள் வார்த்தைகளை ஆமோதிப்பது போல விடிவதற்கு கட்டியம் கூற, விடிவெள்ளி தயாராகிக் கொண்டிருந்தது.

அந்நேரம் மருத்துவச்சியுடன் உள்ளே வந்தார், சங்கரய்யா. நடந்த அனைத்தையும் கூறி, குழந்தையுடன் தன் ராஜ இலச்சனை அடங்கிய மோதிரத்தையும் தந்தார். கிருஷ்ணப்பன் போர் முடிந்து திரும்பும் வரை, கண்காணாத தூரத்தில் வைத்து தன் மகனை பத்திரமாக வளர்க்குமாறு கேட்டுக் கொண்டாள்.

தன் முத்து மாலையை கழற்றி மகனின் கழுத்தில் போட்டவளின் கண்கள், அவன் நெஞ்சில் இருந்த மீன் வடிவ மச்சத்தை வருடியது.

'அதி விசேஷமான மீன் போன்ற மச்சம் எல்லாம் கோடியில் ஒருவருக்கே இருக்கும்' என்று தன் பாட்டன் கூறக் கேட்டது நினைவிலாட, ‘பிறந்தவுடன் தன் உரிமையை துறப்பது தான் விசேஷம் என்றார்களோ?’என்ற கசந்த எண்ணம் அடிமனதில் எழாமலில்லை.

அதற்குள், "நமக்கு அவ்வளவாக நாழிகை இல்லை! துரிதமாகச் செயல்பட வேண்டும்…" என்ற படி மந்தாகிணி ஓடி வரவும், தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, பம்பரமாகச் சுழன்றாள் அலமேலம்மாள்.

அலமேலம்மாவுக்கு வாள் வீசிப் போரிடத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், முடிந்த வரை சமயோஜிதமாக மதிநுட்பத்துடன் மகனைக் காக்கப் போராடும் மனவலு இருந்தது. எந்நேரத்திலும் கணவனும் அவன் சகாக்களும் வரலாம் என யூகித்தவள், அந்தப்புர சுரங்கப் பாதை வழியாக சங்கரய்யாவுடன் தன் குழந்தையை அனுப்பி வைத்தாள்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், வீரப்ப நாயக்கனுடன் வந்த அனைவரும் இறந்த பெண் குழந்தையைக் கண்டு மனம் வருந்தினர். வேலப்பனும் பெருமாளும் தாங்கள் செய்ய விளைந்த வேலையை விதியே முந்திக் கொண்டு செய்ததாக, அகங்காரமாக எண்ணினர்.

வீரப்ப நாயக்கனுக்கும் குழந்தை இறந்து பிறந்தது பெரும் அதிர்ச்சி தான். எனினும் இதில் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று இருந்து விட்டார். ஆனால், அதன் பிறகு விஜயகுமாரனை தத்தெடுக்கும் எண்ணம் அவருக்குள் முன்னை விட வேகமாக வேரூன்றியது.

இதற்கிடையே போரில் வெற்றி வாகைசூடி வந்த கிருஷ்ணப்ப நாயக்கனிடம், எல்லாவற்றையும் கூறி ஆறுதல் தேடச் சென்றாள், அலமேலம்மாள்.

"இன்னும் போர் அபாயம் முற்றும் நீங்கவில்லை,அலமேலம்மா. இச்சூழ்நிலை மாறும் வரை குழந்தை சங்கரய்யாவிடம் இருப்பது தான் நலம். அவன் தன் உயிர் கொடுத்தாவது குழந்தையை பாதுகாப்பான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது…" என கூறிய தமையனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டாள், அந்த அன்னை.

ஆனாலும், தன் உடன்பிறந்தவளின் துயர் கண்டு மனம் வெதும்பிய கிருஷ்ணப்பன், ரகசியமாக தன் ஒற்றன் மூலம் சங்கரய்யாவின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உத்தரவு இட்டிருந்தான்.

சில காலங்கள் இப்படியே கழிய, எங்கு தேடியும் சங்கரய்யாவை கண்டுபிடிக்க முடியாமல் போனது. அதில் மனச்சோர்வு அடைந்த அலமேலம்மாவுக்கு, ஆறுதல் தந்தது தன் அண்ணன் மனைவி கருவுற்ற செய்தி.

மகனையும் சங்கரய்யாவையும் தேடும் வரை பிறந்தகத்தில் அடைக்கலம் அடைந்த அலமேலம்மாள், தன் மனதை ஆலயத் திருப்பணிகளில் திருப்பினாள்.

கணவன் நல்லாட்சி புரியாவிடிலும், தனிப்பட்ட முறையில் தன்னால் முடிந்த அன்னதானம், சுமங்கலிகளுக்கு வஸ்திர தானம், ஆலயங்களுக்கு மானியம் அளித்தல் போன்ற அறச்செயல்களை செய்ய ஆரம்பித்தாள். தன் கணவனின் தவறுகளுக்கு இப்படி பிராயச்சித்தம் தேடினாளோ, என்னவோ?

தர்மம் தலை காக்கும், சரி? தர்மம் தலைமுறை பாவத்தில் இருந்து கூடவா காக்கும்? தன் மதி கொண்டு விதியை தள்ளிப் போடலாமே தவிர, மாற்றி எழுத இயலாதென அப்போது அலமேலம்மாள் அறியவில்லை, பாவம்!

சரியாக தன் மனைவி பேறுகாலத்தை எட்டிய சமயம், மர்மமான முறையில் விஷம் கலந்த உணவை உட்கொண்டு மரணித்தான், கிருஷ்ணப்பன்.

அச்சம்பவத்தில் அலமேலம்மாளின் தைரியம் முழுவதும் ஆட்டம் கண்டது. சங்கரய்யாவிடம் வளரும் தன் மகனை தேடுவது தெரிந்தால், அவன் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்தாள்.

எனவே, ஏதோவொரு கடைக்கோடியில் மகன் உயிருடன் இருந்தால் போதும் என மனதை தேற்றிக் கொண்டாள்.

கணவனின் மரணத்தில் உண்டான துக்கத்தில் தவித்த அவன் மனைவியும், பேறுகாலத்தில் உண்டான சிக்கலால், ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்று விட்டு உயிர் நீத்தாள்.

ரோஜா குவியல் போல இருந்த அந்தப் பெண் குழந்தை இறந்த தன் குழந்தையை ஞாபகபடுத்த, அதை மார்போடு அணைத்துக் கொண்டாள், அலமேலம்மாள்.

இனி அண்ணன் மகளை தானே வளர்க்கப் போவதாகக் கூறி, தன்னுடன் எடுத்து வந்தாள்.

அலமேலம்மாளின் இம்முடிவை ஒருவகையில் ஆதரித்தான் வீரப்ப நாயக்கன். குழந்தையின் பொறுப்பு மட்டுமின்றி, கிருஷ்ணப்பனின் பாளையங்களையும் தந்திரமாக கையகப்படுத்தினான். மேலும் அவற்றை வேலப்பன் மற்றும் பெருமாள் செட்டியைக் கொண்டு நிர்வகிக்க ஆரம்பித்தான்.

அதுமட்டுமின்றி அவசர அவசரமாக வேலப்பனின் மகன் விஜயகுமாரனை சுவீகாரம் செய்ய ஏற்பாடு செய்தான். அதை அறிந்த அலமேலம்மாள், விறுவிறுவென்று, கொலு மண்டபத்தில் அமர்ந்துஇருந்த வேலப்பன் மற்றும் பெருமாளுடன் பேசிக் கொண்டிருந்த கணவனிடம் நியாயம் கேட்க விரைந்தாள்.

"என் வம்சத்தில் உதித்த வித்து இருக்க, மாற்றான் பிள்ளையை தத்தெடுக்க பாளைக்காரர் அவசரம் காட்டுவது ஏனோ?" என உச்சகட்ட உக்கிரத்தில் எரிமலையாக வெடித்தாள், மனைவி.

மனைவிக்கு உண்டான மரியாதை தராமல், "உன்னால் தான் எமது ராஜ்யத்துக்கு ஒரு வாரிசை தர இயலவில்லை. என் ராஜ்யத்துக்கு இப்படியாவது ஒரு வாரிசு கிடைக்கட்டுமே!" என அனைவர் முன்பும் அவளை அவமானப்படுத்தினான், வீரப்ப நாயக்கன்.

முதுகில் குத்துவதில் கைதேர்ந்த அந்தநம்பிக்கை துரோகிகள் முன்னர், தனக்கு நடந்த இழுக்கை எண்ணி குமைந்தது, பெண் உள்ளம்.

அதில் ஆக்ரோஷமாக, "என் தமையனின் ராஜ்யம் வேண்டும். ஆனால், அவர் பெண்ணை சுவீகரித்து உங்கள் வாரிசாக்க மட்டும் கசக்கிறதோ…" என வாயில் அம்பு மழை பொழிய ஆரம்பித்தாள், அலமேலம்மாள்.

அதைக் கேட்டு, "பெண்பிள்ளை அரசாளுவதா? பந்த பாசத்தால் அலைக்கழிக்கப்படாமல் சுயமாக சிந்தித்து ஒரு பெண்ணால் அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த முடியுமா?" என மனதில் இருந்த துவேஷத்தைக் கக்கினான், வேலப்பன்.

அதற்கு ஒத்து ஊதுவது போல, "தந்தை, தனையன், கணவன் என ஆண்களின் துணையின்றி ஒரு பெண்ணால் எவ்வாறு செயல்பட முடியும்? சொல்லுங்கள்…" என முறையிட்டான், பெருமாள் செட்டி.

அவர்களின் இகழ்ச்சியில் மனம் கணத்த பெண், "எந்த ராஜ்யத்துக்காக அக்கயவர்கள் தன் மகனை தன்னிடமிருந்து பிரித்தனரோ, எந்த மண்ணாசையால் தன் தமையனை கொன்றனரோ, அந்த ராஜ்யத்தை தன் கையில் தவழும் பொக்கிஷத்தைக் கொண்டு மீட்டெடுப்பேன்…" என மனதில் சபதம் எடுத்தாள்.

எனினும், எந்த எதிர்வாதமும் செய்யாது, அப்போதைக்கு அமைதி காத்தாள்.

அலமேலம்மாளின் இந்த மௌனம் ஒருவித கிலியூட்டினாலும், மன்னன் விஜயகுமாரனை தத்துப் பிள்ளையாக சுவீகாரம் செய்து கொண்ட மமதையில் சுற்றினான், வேலப்பன்.

*********

தன் கையில் தவழ்ந்த தேவதையை வளர்க்கும் பொறுப்பை ஏற்ற அலமேலம்மாள், தெலுங்கர் மரபில் வந்தவளாகினும், மீனாட்சி அம்மனின் மீது எல்லையில்லா பக்தி கொண்டவள். எனவே தங்கள் ராஜ்யத்தினுள் ஊடுருவிய விஷக்கிருமிகளுக்கு எமகதியை பரிசளிக்கப் போகும் பெண்ணரசிக்கு, மீனாட்சி என்று திருநாமம் சூட்டி மகிழ்ந்தாள்.

மீனாட்சி சிறு வயது முதலே ஒரு ராஜ்யத்தை ஆளத் தேவையான அனைத்து தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள ஆவன செய்தாள், அலமேலம்மாள்.

வாள் பயிற்சி, குதிரை ஏற்றம், கல்வி கேள்விகள் தொடங்கி, பெரிய அரசியல் திட்டங்கள் தீட்டுவது வரை அனைத்திலும் சிறந்து விளங்கினாள், மங்கை.

அதுமட்டுமின்றி ஆலய திருப்பணிகளில் விரும்பி ஈடுபட்டவள், கோயில் சிற்பகலை மீது தீரா மையல் கொண்டாள்.

மீனாட்சி மடந்தை பருவத்தை எய்திய சமயம், அவளிடம் தன் வாழ்வின் முன் கதை பக்கங்களை சுருக்கமாகக் கூறினாள், அலமேலம்மாள்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட சின்னவள், "அதன்பிறகு தாங்கள் ஏன் அத்தானை தேட முயற்சி செய்யவில்லை, அத்தை…" என குரலில் ஆதங்கம் பொங்க வினவினாள்.

"தேட வில்லை என்று யார் சொன்னது?" என்ற அலமேலம்மாள், ஒருமுறை ஒற்றன் ஒருவன் மூலம் அழகர் மலை காடுகளில் சங்கரய்யாவின் தோற்றத்தை ஒத்த ஆளைப் பார்த்ததாக கேள்வியுற்றாள். அதைத் தொடர்ந்து சங்கேத குறிப்பாக செய்தி ஒன்றை சங்கரய்யாவுக்கு, ஒற்றனிடம் தந்து அனுப்பினாள்.

யாருக்கோ அலமேலம்மாள் தூது அனுப்புவதைக் கண்டு கொண்ட வேலப்பனின் ஆட்கள், அவனை சிறை எடுத்து சித்திரவதை செய்தனர். மேலும் ராணியிடம் கொண்ட விசுவாசத்தால் உண்மையைக் கூற மறுத்தவனை கொன்று குவித்தான், வேலப்பன்.

அனைத்தையும் மருமகளிடம் கூறிய அலமேலம்மாளின் மனபாரம், அவள் மருமகளின் மனதையும் சேர்த்து அழுத்த ஆரம்பித்தது.

தன்னைச் சீராட்டி வளர்த்த அத்தையின் மனவேதனையை கண்கொண்டு பார்க்க இயலாத அந்த வீரமங்கை, தன் அத்தானை எப்பாடு பட்டேனும் கண்டுபிடிக்க, தன்னுள் உறுதி கொண்டாள்.

***********

அன்று விஜயகுமாரனுக்கு இளவரசு பட்டம் கட்டுவதற்கான அறிவிப்பு வந்திருந்தது. அக்காட்சியை உப்பரிகையின் ஓரமாக நின்று ஒருவித வெறுப்பு மேலிட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மந்தாகிணியின் தோள் தட்டியது ஒரு வளைக்கரம்.

அக்கரத்துக்கு சொந்தக்காரியின் ஸ்பரிசத்தில், "எப்போது வந்தாய் மீனாட்சி?" என இன்முகமாகத் திரும்பினாள்,மந்தாகிணி.

அவள் முகத்தில் படர்ந்த வருத்தரேகைகளுக்கான காரணம் வினவிய முதியவளிடம், தன் மனபாரத்தை இறக்கி வைத்தாள் பெண்.

மந்தாகிணியும் தன் பங்குக்கு, “சொந்த மகன் எங்கு இருக்கிறான்? என்ன ஆனான்? என்று தெரியாமல் கண்ணெதிரே யாருக்கோ இளவரசு பட்டம் கட்டுவதை கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தோழியின் நிலைக்கு வருந்தினாள்.

"இப்போது மட்டும் உன் அத்தான் இருந்திருந்தால் அவனுக்கு இளவரசு பட்டம் கட்டிய கையோடு, உன்னையும் மணமுடித்து வைத்திருப்பார், உன் அத்தை. ஹூம்ம்…" என ஏக்கப் பெருமூச்சு விடுத்த முதியவளை, விலுக்கென்று திரும்பிப் பார்த்தாள், மீனாட்சி.

சற்று நேரம் தன் அத்தையின் ஆஸ்தான தோழியும் தலைமை பணிப்பெண்ணுமான மந்தாகிணியின் வாயைப் பிடுங்கிய சின்னவளுக்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

மந்தாகிணி கண்கள் பளிச்சிட கூறிய விஷயங்களில் ஒன்று கூட உருப்படியாக இல்லாததில் சலிப்படைந்தாள், மீனாட்சி.

இருந்தும் தன் விசுவாசிகள் சிலரை அனுப்பி, அழகர் மலை காடுகளில் சங்கரய்யாவை தேடப் பணித்தாள். ஆனால் சாதகமான தகவல் எதுவும் கிடைக்காததால் தளர்ந்தாள், பேதை. இனி அந்த அழகர் மலை பெருமாளே இறங்கி வந்து உதவினால் தான், தன் அத்தானை கண்டுபிடிக்க இயலும் போல என மனதில் உதித்த எண்ணத்தில் வெதும்பினாள், மீனாட்சி.

‘நாடி சென்றால், விலகி ஓடும். விலகி ஓடினால் நாடி வரும்.’ இது தான் நியதி.

இது புரியாமல் சலித்துக் கொண்டால் மட்டும் காரியம் நடந்துவிடுமா?

சிலை மீண்டு(ம்) வரும்…
IMG-20220720-WA0035.jpg
 

Anjana Subi

Active member
மீண்டு(ம்) வந்த சிலையே !
FB_IMG_16587644363528979.jpg
சிலை - 12


சில நாட்களாகவே ராணி அலமேலம்மாளுக்கு, துர்சொப்பணம் ஒன்று அடிக்கடி வந்து அடிமனதில் ஒரு சங்கடத்தை விதைத்தது.

தங்கள் சமஸ்தானத்தின் இடிந்து தரைமட்டமான கோட்டைக்கு முன், தலைவிரிக் கோலமாக நின்று, தன் மருமகள் பிச்சியாக பெருங்குரலெடுத்துச் சிரிப்பது போன்ற அக்கனவு, பெரியவளுக்குள்விதிர்விதிப்பை உண்டாக்கியது.

இது பற்றி தன் தோழி மந்தாகிணியிடம் தவறாமல் ஆலோசித்தாள், அலமேலம்மாள்.

"நீங்கள் இப்படி பயந்தால் மட்டும் நடப்பது அப்படியே நடக்காமல் நின்று விடுமா என்ன?" என தேற்ற முயன்றாள்,மந்தாகிணி.

இதே போன்று ஒருமுறை தோழியின் உள்ளுணர்வு நடக்கப் போகும் விபரீதத்தை எச்சரித்ததைத் தொடர்ந்து, நடந்து முடிந்த அனர்த்தங்கள், மூளையில் மத்தளம் வாசித்தது.

'அந்த இறைவனே கதி' என தங்கள் விதியை நிர்ணயித்த அவனிடமே, சரணாகதி அடைந்து முறையிட எண்ணியவர், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும், அழகர் மலையிலும் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால், பூஜைக்கு செல்வதற்கு இரண்டு நாள் முன்னர் இருந்தே, ஒரு வித சுகவீனத்தை உணர்ந்தாள், ராணி. தன் சுகவீனத்தையும் இப்போது அபசகுனமாக எண்ணி, தன் மனதையும் உடலையும் இன்னும் வருத்திக் கொள்ளும் தோழியை,

"நீங்கள் வேண்டுவதெல்லாம் நாட்டு மக்கள், மீனாட்சி மற்றும் பிரிந்த தங்கள் மகனுக்காகத் தானே அம்மா. அப்படி இருக்க மீனாட்சியையே தங்கள் சார்பாக பூஜைக்கு அனுப்பி வையுங்கள்…" என சமாதானப் படுத்தினாள்.

தன் அத்தையின் சுகவீனத்தை கேள்வியுற்று, பதறியடித்துக் கொண்டு அவளறைக்கு வந்தாள், மீனாட்சி.

அப்போது மருத்துவச்சி கொடுத்த கஷாயத்தை ஒரு குவளையில் பருகிக் கொண்டிருந்த அலமேலம்மாளின் மனதாங்கலை, மருமகளிடம் மேலோட்டமாக கோடிட்டு காட்டினாள், மந்தாகிணி.

தன் மோவாயில் கைவைத்து, "சரியாக உண்ணாமல் உபவாசம் இருக்கிறேன் என்று உடலை கெடுத்துக் கொண்டு, அதற்கு சகுனத்தை துணைக்கு அழைப்பது எவ்விதத்தில் நியாயம்? சொல்லுங்கள்…" என தன் மீன் விழிகளை சுழற்றிப் பேசும் மருமகளைக் கண்டு ராணிக்கு மனம் லேசானது.

தன் மருமகளின் உரிமையான கண்டிப்பில் அலமேலம்மாளுக்கு நெக்குருகியது. தான் ஏற்பாடுசெய்த பூஜையைப் பற்றி இயம்பி,

"நான் இப்போதிருக்கும் நிலையில் பிரயாணம் செய்து பூஜைக்குச் செல்வது கடினம். அதனால், என் சார்பாக மந்தாகிணியை அழைத்துக் கொண்டு சென்று வந்துவிடம்மா…" என சின்னவளின் தாடை பற்றிக் கெஞ்சினாள், அத்தைக்காரி.

தன் அத்தை சாதாரணமாகக் கேட்டாலே ஒப்புக் கொள்ளும் மருமகள், செல்லம் கொஞ்சினால் மறுப்பாளா?

அத்தை அழகர்மலைக்கு செல்லப் பணித்ததும், அவள் மனம் தானாக ஒரு மன்றாடலை தான் வணங்கும் ஈசனிடம் வைத்தது.

இருந்தும்,‘இதுவரை கைதேர்ந்த ஒற்றர்களுக்கும், அரச விசுவாசிகளுக்கும் கண்கட்டி வித்தை காட்டிக் கொண்டிருக்கும் அவர்களின் ராஜவம்ச வித்து, இவள் கண்ணில் மட்டும் சிக்கி விடுவானாமாம்?’என்று அவளது எதிர்பார்ப்பை கேலி பேசிய மனசாட்சியை மனதில் திட்டிக் கொண்டாள்.

தன் சம்மதத்துக்காக முகம் பார்த்த அத்தையின் கன்னம் கிள்ளி, "இந்தக் கிழடு கூட்டத்துடன் தாங்கள் சுற்றியது போதாதென்று என்னையும் கூட்டு சேர்க்கப் பார்க்கிறீர்களே…" என மொழிந்து மந்தாகிணியை வம்புக்கிழுத்தாள்.

அவள் வாய் துடுக்கில், "நன்றாக இருக்கின்றதம்மா, உன் நியாயம். நாங்கள் எல்லாம் கிழடுகள். உன் அத்தை மட்டும் குமரியோ…" என சிலிர்த்து எழுந்த மந்தாகிணிக்கு, அளவம் காட்டிவிட்டு, சிட்டாக அறையை விட்டுப் பறந்த மீனாட்சியைத் தொடர்ந்தது,

"அடி கள்ளி, நாளை என்னுடன் தானே வருவாய். அப்போது பார்த்துக் கொள்கிறேன்…" என்றது மந்தாகிணியின் குரல்.

மருமகளின் வாய் பேச்சில் சிரித்துக் கொண்டிருந்த அலமேலம்மாள், தன்னையும் மீறி ஒரு நெடுமூச்சை வெளியிட்டாள்.

*********

நீண்ட நெடிய பின் இரவுப் பொழுது. அம்புலியின் பிரகாசமான ஒளி, அந்த மணி மண்டபத்தினுள் ஊடுருவிக் கொண்டிருந்தது.

ராஜகுரு வடுகநாதனுடன் தீவிர ஆலோசனையில் தளபதி வேலப்ப நாயக்கனும், கஜானா காப்பாளன் பெருமாள் செட்டியாரும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த மணிமண்டபத்தின் இடப்புற சுவர்,'க்ரக் க்ரக் க்ரக்' என்ற சத்தத்தோடு திறந்து மூடியது.

இரண்டு காவலர்கள் புடைசூழ சுரங்கப்பாதை வழியாக அழைத்து வரப்பட்ட ஜோதிடன், அம்மூவரையும் வணங்கி நின்றான்.

"வந்தனம் பட்டரே! அமருங்கள்." என உபசரித்தான், ராஜகுரு வடுகநாதன்.

அதை ஏற்று, பெருமாள் செட்டி அருகில் அரைச் சம்மணமிட்டு அமர்ந்த ஜோதிடனிடம்,

"பாளைத்தாரின் ஜாதகத்தை பார்த்தீர்களா? இளவரசு பட்டம் கட்டிய விஜயகுமாரனை சீக்கிரம் அரியணை ஏற்றிவிடலாம் இல்லையா? இருவரின் கிரகநிலைப்பாடுகள் எப்படி உள்ளது?" என கேள்விகளை வரிசையாக அடுக்கினான், பெருமாள் செட்டி.

"அது…அது வந்து, மன்னனின் ஜாதகம் அவ்வளவு சுத்தம் இல்லை…" என நீட்டி முழங்கிய ஜோதிடனின் பதிலில் பொறுமை இழந்து,

"ம்ம்ம்… சொல்லுங்கள் பட்டரே!" என கண்களில் அதீத பளபளப்புடன் ஊக்கினான், வேலப்பன்.

"பாளையத்தாரின் ஜாதக அமைப்பு படி, அவருக்கு பிறகு இந்த அரசு அழியத் தான் வாய்ப்புகள் அதிகமே தவிர, அதை கட்டிக் காப்பது கடினம். வாரிசு என்று எவர் அரியணை ஏறினாலும், அவர்களும் அழிவைச் சந்திப்பது திண்ணம்…" என ஒரு மாதிரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பேசிய ஜோதிடனின் பதிலில், வேலப்பன் துணுக்குற்றார்.

‘இவ்வளவு நாள் அரியணைக்காக குயுக்தியுடன் போட்ட திட்டங்கள் எல்லாம் வீணானதோ?’என எண்ணி, இருண்ட முகத்துடன் காணப்பட்ட நண்பர்களின் முகம் கண்ட ராஜகுரு,

"இதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா?" என கேட்டார்.

நடக்கப் போகும் விஷயங்களின் நன்மை தீமைகளை பற்றி முன்னோட்டம் தந்து எச்சரிப்பது ஜோதிட சாஸ்திரத்தின் தலையாய கடமை என உணர்ந்தவர், தீமைகளின் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கான மார்க்கத்தை ஆராய முற்பட்டார்.

அந்த ஜோதிடனும் தயங்கி தயங்கி, சில நாட்கள் முன் ராணி அலமேலம்மாள் மீனாட்சிக்கு திருமண பலன் பார்க்க தன்னை அணுகியதை நினைவுகூர்ந்து, அப்பாதகர்களிடம் இயம்ப ஆரம்பித்தான்.

மீனாட்சியின் ஜாதக அமைப்புப் படி, அவள் புதையல் யோகம் கொண்டவள் என்றும், அவளுக்கு நாடாளும் யோகம் உண்டு என்றும் கூறினான்.

ஜோதிடன் இப்பேச்சை பேச வாய் திறக்கும் போதே, அங்கு விஜயம் செய்தான், விஜயகுமாரன்.

அவனுக்கு மரியாதை நிமித்தம் ஒரு வணக்கம் வைத்த ஜோதிடனும், மீனாட்சியின் விசேஷ ஜாதக பலன் பற்றி தொடர்ந்து கூறி முடித்தான்.

தங்கள் பிரச்சனைக்கான தீர்வை மொழிந்த ஜோதிடனுக்கு தக்க சண்மானம் வழங்கி அனுப்பி வைத்தான், பெருமாள் செட்டி.

அவன் சென்றதும் அங்கு ஒரு பூரண அமைதி நிலவியது. அந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ஒலித்தது,

"மீனாட்சிக்கு புதையல் யோகம் இருக்கிறதோ இல்லையோ, எம்மை பொருத்தமட்டில் அவளே ஒரு புதையல் தான்.." என்றவரின் விஷமமான பேச்சில் புருவம் சுருக்கினான், வேலப்பன்.

"அவளை வேற்று பாளையத்துக்கு திருமணம் முடித்தால் அவள் ராஜ்யத்தை அவளிடம் ஒப்படைக்க வேண்டும். இதுவே அவளை விஜயகுமாரனுக்கு மணமுடித்தால், யோகத்துக்கு யோகம், ராஜ்யத்துக்கு ராஜ்யம்…" என பெருங்குரலெடுத்துச் சிரித்தான், ராஜகுரு வடுகநாதன்.

அதைக் கேட்ட ஏனைய மூவரும், "பலே! ராஜகுரு பலே!" என பாராட்டி ஆர்ப்பரித்தனர்.

சிறு வயது முதல் கொல்லைப்புறமாக எப்படி ராஜ்யத்தை அடைவதென்று வேலப்பனின் போதனைகளில் அப்பன் 8 அடி பாய்ந்தால், மகன் 16 அடி பாய்பவனாக விளங்கினான், விஜயகுமாரன்.

மண்ணாசை பொன்னாசை பெண்ணாசையென இம்மூன்றும் ஆட்டி வைக்க, ராஜ்யத்துடன் மீனாட்சியையும் அபகரிக்கும் வெறி கண்களில் பளபளக்க அமர்ந்திருந்தான், விஜயகுமாரன்.

விஜயகுமாரனுக்கு பொன் மானாய் சுற்றித் திரியும் மீனாட்சி என்ற பேரழகுப் பெட்டகத்தின் மீது ஒரு கட்டுக்கடங்காத சபலம் எப்போதும் உண்டு. அதிலும் வேள்வியைப் போன்று சுடர்விடும் அவள் அழகின் மீது, ஒரு மயக்கம் கொண்டவன் நன்றாக அறிவான், ராணி அலமேலம்மாள் கேடயமாக இருக்கும் வரை, அவளை நெருங்குவது கடினம் என்று.

எனவே அரியணை ஏறும் வரை பொறுமை காக்க உறுதிகொண்டிருந்த அவனுக்கு, தன்னை சிம்மாசனத்தில் ஏற்றப் போவதே அவளது ஜாதக அமைப்பு என்பதில் மனம் குதுகலித்தது.

மேலும் ஆலோசனையின் முடிவில், விஜயகுமாரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டும் போதே, அவனுக்கு மீனாட்சியை மணமுடிப்பது பற்றிப் பேச, தீர்மானமானது.

இவை அனைத்தையும் ஒரு புதர் மறைவில் நின்று ஒட்டுக் கேட்ட மந்தாகிணி, ராணியிடம் தகவலை தெரிவித்தாள்.

அவர்களது சதி திட்டம் அறிந்த அலமேலம்மாளால் தாளவே முடியவில்லை. தன் கணவனை கைப்பாவையாக்கி தன் அண்ணனை கொன்று பிள்ளையை பிரிந்ததெல்லாம் போதவில்லையா, இவர்களுக்கு? இப்போது தன் குலப்பெண்ணையும் காவு கேட்கும் கொடூரர்களை எண்ணி பயந்தார்.

'இதே தன் மகன் இருந்திருந்தால், இந்நேரம் மீனாட்சியை அவனுக்கே மணம்முடித்திருக்கலாம்' என்ற எண்ணம் எட்டிப் பார்க்காமல் இல்லை.

அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று தோன்றிய மாத்திரத்தில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டாள், அலமேலம்மாள்.

************

தன்னை பகடையாக்கத் துடிக்கும் வஞ்சகர்களின் திட்டம் அறியாத மீனாட்சியும், அடுத்த நாள் காலை சூரிய உதயத்துக்கு முன் எழுந்து நீராடி, பச்சை பட்டு உடுத்தி, களியாடும் மஞ்ஞையென விரிந்திருக்கும் தன் நீண்ட கார்குழலை அள்ளி முடிந்தாள்.

சிரத்தில் கடிகை சூடி, மணம் கமழும் அதிரல் கொண்டு அலங்கரித்தவளின் பெண்மையின் மென்மையை, ஒட்டி உறவாடிய வைர வைடூர்ய ஆபரணங்கள் அனைத்தும், மூச்சுக் காற்றுக்கு ஏறி இறங்கிய நெஞ்சுக் கூட்டின் அழகில் ஜென்ம சாபல்யம் அடைந்தது.

அவள் சிற்றிடையை இறுக்கிய ஒட்டியாணமும், சிணுங்கி ஓசை எழுப்பி அனைவரையும் அவள்புறம் திரும்பச் செய்யும் கங்கணங்களும்,அந்த இளநூதலில் வீற்றிருக்கும் நெற்றிச்சுட்டியும், அவள் வனப்பை அதிகரிக்கச் செய்தது. மருதாணி இட்டு சிவந்திருந்த விரல்களை குத்தகை எடுத்திருந்த மோதிரங்கள் அனைத்தும், அந்த அழகியின் கைகளில் அமர்ந்து காண்போரை கர்வமாக ஏறிட்டன.

இளவரசி மீனாட்சியின் பயணம் பற்றி அறிந்து, அவளுக்கு படை காவலாகச் செல்ல, மன்னரின் அனுமதி பெற்றான், விஜயகுமாரன்.

இதைக் கேள்வியுற்ற அலமெலம்மா 'பாலுக்கு பூனை காவலா?' என துடிதுடித்தாள்.

எனினும் தன் மனச்சுணக்கத்தை வெளிப்படுத்தினால் மன்னனின் கட்டளையை மீறுவதாக சித்தரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என பொறுமை காத்தாள்.

மேலும் மீனாட்சியின் துணைக்கு மந்தாகிணி உடன் செல்வதால், சற்று தைரியம் வரப்பெற்றாள்.

ஆனால் விஜயகுமாரனோ, வியூகம் அமைத்து, மீனாட்சியை மடக்கி விட்டதாகப் பூரித்தான்.

இப்பயணத்தின் முடிவில், சாம தான பேத தண்டத்தை கையாண்டாவது, மீனாட்சியை தன் வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டான்.

விஜயகுமாரனின் பெண் சகவாசங்களை பற்றி அறிந்தவள் தான், மீனாட்சி. இப்போது அவனை சேர்ந்தவர்களின் சூழ்ச்சியையும் தெரிய வந்ததால், ஒருவித எச்சரிக்கையுடனே அவனுடன் புறப்பட்டாள், பெண்.

மெய் காவலர்கள் புடைசூழ, சிறு படையுடன் தன் பல்லக்கில் பயணமாளனாள், மீனாட்சி. திருஆலவாய் மீனாளையும் சொக்கனையும் பிரார்த்தித்து, தன் அத்தானை தனக்கு அடையாளம் காட்டும்படி மனமுருகி வேண்டி நின்றாள், பாவை.

அவள் அத்தானை அடையாளம் காட்டுமாறு வேண்டிய கண்மணி, அவனுடன் தான் பெருவாழ்வு வாழ, அருள் புரியுமாறு வேண்ட மறந்தாள்.

அப்படி வேண்டி இருந்தால், நிகழப் போகும் விதியின் விளையாட்டை தவிர்த்து இருக்கலாமோ?

தங்கள் தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்து, அழகர் மலை சுந்தரராச பெருமாளிடம் தங்கள் ராஜ்யத்தை காத்து ரக்ஷிக்க வேண்டி முறையிட ஆயத்தமானாள், மீனாட்சி.

சென்ற இடமெல்லாம் மீனாட்சிக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைக் கண்டு விஜயகுமாரனுக்கு காந்தியது. அவளை போல அரசகுலத்தை சேர்ந்தவனாக இருப்பினும், தன் நாயகத்துவம் எங்கும் சோபிக்காமல் போனதில், ஒருவித பொறாமையில் பொசுங்கினான், காளை.

இதற்காக வேணும் இவளை மணம் புரிந்து அவள் கர்வத்தை அடக்க வேண்டும் என்று கருவிக் கொண்டான்.

பதறாத காரியம் சிதறாது என உணர்ந்தவன், அவள் அபிமானத்தைப் பெற, அமைதி காப்பது போல நடித்தான்.

மீனாட்சிக்கு, அவன் ஒரு விஷப்பற்களைக் கொண்ட நாகப்பாம்பு என்பது நன்றாகத் தெரியும். எனவே விழிப்புடனே இருந்தாள், மாது.

ஒரு வழியாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து திருமாலிருஞ்சோலை நோக்கிப் பயணமானது, இளவரசி மீனாட்சியின் பல்லக்கு.

அரண்மனையில் இருந்து அரசகுலத்தவர் வருகை தருகிறார் என்பதை உணர்த்த முன்னிரண்டு குதிரை வீரர்கள், தங்கள் ராஜ்யத்தின் கொடியை ஏந்திப் பிடித்தபடி செல்ல, அவர்களுக்கு பின்னால் உருவிய வாளை பிடித்தபடி வரிசையாக இருபது பேர் கொண்ட வீரர் படை, நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்குப் பின்னால் திரண்ட புஜங்களை கொண்ட எட்டு பேர் சுமக்க, ஒரு பெரிய பல்லக்கில் மீனாட்சி மந்தாகிணியோடு அமர்ந்திருந்தாள். அவர்கள் பல்லக்கின் பின்னால் சீரான தாளலயத்துடன் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்க, சில வீரர்களுடன் வந்து கொண்டிருந்தான், விஜயகுமாரன்.

சித்திரை மாதத்து கத்தரி வெயில் மெதுவாக தன் தாக்கத்தை காட்ட ஆரம்பித்திருந்தது. அதன் காரணமாக பல்லக்கு தூக்கும் மெய்க்காப்பாளர்கள் நடையில் சிறு தள்ளாட்டத்தை வெளிப்படுத்தினர். ஆதவன் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

அப்போது மந்தாகிணி திரைச்சீலையை விலக்கி தங்கள் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த மெய்க்காப்பாளனை அழைத்து,

"அழகர் மலையை அடைய இன்னும் எவ்வளவு நாழிகை ஆகும்என இளவரசி வினவியதாக, உங்கள் படை காவல் தலைமை அதிகாரியிடம் தெரியப்படுத்து…" என கட்டளையிட்டாள்.

அவ்வீரனும் தடதடவென விஜயகுமாரனிடம் தகவல் கேட்க ஓடினான்.

தன் கையில் இருந்த மணற்கடிகையையும் தரையில் விழும் நிழலின் நீள அகலத்தையும் வைத்து, அவர்கள் சோலை மலையை நெருங்கி விட்டதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம் என்றும் கூறினான், விஜயகுமாரன்.

அதைக் கேட்ட மீனாட்சி, வீரர்கள் அனைவரும் மிகவும் களைப்பாகத் தெரியவும், ஓய்வுச் சங்கை முழங்க உத்தரவிட்டாள்.

அதில் சற்று ஆசுவாசமடைந்த வீரர்கள், தாங்கள் கொண்டு வந்த சிறிய அன்ன ரதத்தின் உபயத்தால் உணவுண்டு, கொஞ்சம் இளைப்பாரினர்.

அச்சமயம் ஓய்வுக்காக சற்று கண்ணயர்ந்தவர்களை சுற்றி வளைத்தது, அந்த கள்வர் கூட்டம்.

கள்ளழகனை காண வந்தவர்களிடம் இருந்து, கள்வர்கள் கவர்ந்து செல்லத் துடிப்பது என்னவோ?

சிலை மீண்டு(ம்) வரும்…
received_763200348383442.jpeg
cover pic courtesy : umauma
 
Last edited:

Anjana Subi

Active member
மீண்டு(ம்) வந்த சிலையே…!
IMG-20220713-WA0042.jpg

சிலை - 13

மேகப்பொதிகள் கண்ணுக்கு தெரியாதபடி ஓங்கி அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், ஏழ்பரியோனின் உக்கிர தாக்கம் அந்த வனாந்திரத்துக்குள்ஊடுருவ முடியாதபடி, கேடயமாக தடுத்துக் கொண்டிருந்தது. வீரர்கள் பலர் ஆங்காங்கே உண்ட மயக்கத்தில் கண் அயர ஆரம்பித்தனர். சிலரோ ஆடுபுலி ஆட்டம், தாயம் என்று திண்ணை விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சமயம் வெகுநேரம் பல்லக்கினுள் அமர்ந்திருப்பது சலிப்பு தரவும், சிறிது நடை பயின்றுவிட்டு வருவதாக மந்தாகிணியிடம் கூறினாள், மீனாட்சி.

தொலைதூரம் செல்லக் கூடாது என்ற மந்தாகினியின் பேச்சுக்கு, சம்மதமாக மென்முறுவல் பூத்தபடி, இடையில் சொருகிய குறுவாளும், கையில் பிடித்த உடைவாளுமாக, அந்த அடர்ந்த வனத்துக்குள் புகுந்தாள். சற்று தூரம் நடந்து வந்தவளின் கண்கள், அந்த வனப்பிரதேசதத்தின் ரம்யமான சூழலை தன் மனப்பேழையில் பத்திரப்படுத்தியது.

குளிர்ச்சியான தென்றல் உடலையும் மனதையும் தழுவிச் செல்ல, இருபக்கமும் ஓங்கி உயர்ந்து நின்ற மரங்கள் காற்றில் அசைந்தாடி ஒருவித உற்சாகத்தையும் புத்துணர்வையும் ரத்தநாளங்களில் பரவச் செய்தது.

ஆங்காங்கே கேட்ட பறவைகளின் கீச் கீச் ஒலியின்வசீகரத்தில், மெல்ல நடந்து வந்தவளின் பார்வை வளையத்தில்விழுந்தது, அக்காட்சி. அவ்வழியாக சடாமுடியும் காவி இடை கச்சையும் அணிந்தபடி வேகமாக நடந்து சென்றார், ஒருவர்.

இந்தக் கொடிய விலங்குகள் வாழும் வனாந்திரத்தில் தைரியமாக உலாவித் திரியும் அம்மனிதனை, ஆச்சர்யம்மேலோங்கப் பின் தொடர்ந்தாள், மீனாட்சி.

ஒரு சிறிய மலை முகடு மேலேறி நடந்தவர், அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு சரிவில் இறங்கி மறைந்தார்.

மீனாட்சிக்கு நடப்பது அனைத்தும் மாய மந்திரம் போன்று தோன்றியது. கண் இமைக்கும் நேரத்தில் மறைந்த அந்நபரை ஏதோ மாயாவி என்றே எண்ணினாள். லேசாக மனதை பயம் கவ்வ, வந்த வழி சென்றுவிடலாமா என்று கூட நினைத்தாள்.

ஏனோ, ஆள் அரவமற்ற காட்டில் அம்மனிதர் என்ன தான் செய்கிறார்என தெரிந்துக் கொள்ளும் அவா தலைதூக்கவும், அந்த மர்ம ஆசாமி மறைந்த மலைச் சரிவில் இறங்கி, நடக்க ஆரம்பித்தாள்.

மூச்சு வாங்க தொலை தூரம் நடந்தவள், தான் கண்ட காட்சியில் அப்படியே விக்கித்து நின்றாள். ஒரு மரத்தடியில் வஜ்ராசனத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த அம்மனிதனைச் சுற்றி நாகப்பாம்புகள் சுருண்டு படுத்திருந்தது.

இவளைக் கண்டவுடன் சீறி எழுந்த பாம்புகளைக் கண்டு, தற்காப்பு நிமித்தம் தன் உறைவாளை உருவி உயர்த்தினாள், மீனாட்சி.

தியானத்தில் இருந்த அம்மனிதனுக்கு, இவள் வரவை உணர்த்துவது போல, "உஷ் உஷ் உஷ்" என்று பயங்கரமாக ஒலி எழுப்பின, கருநாகங்கள்.

அதில் தொண்டை உலர்ந்து, சிலையென நின்ற பெண்ணை அதிகம் வாட்டாது, தன் தீட்சண்யம் பொருந்திய நயனங்களைத் திறந்து, மெல்ல அவளை ஏறிட்டார், அம்மனிதர். அவரது ஒளி பொருந்திய பார்வையில் கண்டுண்டவளின் கரங்கள், தானாக உயர்த்திய வாளை இறக்கியது. உடலில் சர்ப்பங்கள் தவழ இதழ்களில் விரிந்த சிரிப்புமாக அமர்ந்திருந்தவர், அவள் கண்களுக்கு சர்ப்ப அணிகலன் பூண்ட பரமேஷ்வரனாகவே காட்சியளித்தார்.

முகத்தில் மின்னிய பிரமிப்பை மறைக்காது, கைகள் இரண்டும் கூப்பி,

"ஐயா! தாங்கள் யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா? உங்கள் செயல்கள் ஏதோ மாயாஜால மந்திர தந்திரமாகத் தோன்றுகிறது…" என அவரை வணங்கி நின்றாள்.

தன் மேல் ஊர்ந்த விஷப்பாம்பை சாதாரணமாகத் தடவிக் கொடுத்தபடி,

"மாயோனை தரிசிக்க வந்த பணியை விடுத்து, இந்த அடியவனைப் பார்த்து மாயம் செய்பவன் என்று கூறுவது நியாயமா, இளவரசி?" என்றவரின் கண்கள் சிரித்தது.

தன் மேல் நெளிந்து கொண்டிருந்த சர்ப்பங்களை கையில் ஏந்தியர்,"கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன். அதுவரை அமைதியாக இருங்கள்…" என வளர்ப்பு பிராணிகளிடம் பேசுவது போல அவற்றைக் கொஞ்சினார். அந்த நாகபாம்புகளும் அவர் பேச்சுக்கு இசைந்து, அவர் மடியில் சுருண்டு படுத்துக் கிடந்தன.

அவர் செயல்களை அவதானித்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு, அவர் சாமானியனாகத் தெரியவில்லை.

‘ஏதோ சித்து செய்து தன்னை இங்கு வர வைத்ததே இவர் தானோ?’, என்ற எண்ணம் மனதை குடைந்தது.

‘உன் சித்து விளையாட்டுகளை கண்டு கொண்டேன்’ என்று சொல்லாமல் சொன்ன பார்வையுடன், "மாயவனை தரிசிக்க வந்தவளை, தங்களை நோக்கி கட்டி இழுத்து வந்தது தான் ஏன் என்று புரியவில்லை, ஐயனே!" என்றவளின் பதில், அவரது இதழ்களை மேலும் விரியச் செய்தது.

தன் தொண்டையை கணைத்து, அவர் மடியில் சுருண்டிருக்கும் விஷ ஜந்துக்களை வெறித்துக் கொண்டிருந்த மீனாட்சியை நினைவுக்குத் திருப்பியவர், தன்னை ராம தேவர் என அறிமுகம் செய்து கொண்டார்.

"ராஜ்யத்தில் பல குழப்பங்கள். உன் அத்தை பெற்ற மலர்களில் ஒன்று, மண்ணில் பிறந்த அன்றே உதிர்ந்தது. மற்றொன்று பிறந்ததும் ராஜ்யத்தை துறந்தது. இது எல்லாம் ஏன் என்று, நீ என்றாவது யோசித்தது உண்டா?" என புதிர் போட்டவரின் பேச்சில், மீனாட்சியின் இதயம் ஒரு முறை நின்று வேகமாக துடித்தது.

எவரும் அறியாத ராஜ ரகசியத்தை சாதாரணமாக இயம்பிய அம்மனிதன், முக்காலத்தையும் உணர்ந்த சத்புருஷனாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பறிந்த பெண்ணவளும், அந்த கேள்விக்கான பதிலை அவரே கூறட்டும் என்பது போல அமைதி காத்தாள்.

"ஒலிக்கு ஏற்ற எதிரொலி உண்டாவது போலத் தான் அம்மா, உங்கள் ராஜ்யத்தின் பிரச்சனைகளும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த உன் மாமனின் வம்சமும், ராஜ்யமும் தழைக்கும் என்று எப்படி நீ எதிர்பார்க்கலாம்?" என தன் வார்த்தைகளால் அவளை அதிர வைத்த ராம தேவரின் கேள்விக்கணைகள் அவளை கிடுக்குப்பிடி போட்டது.

அவள் மாமனின் கயமை தெரிந்தாலும், ஒரு பாவமும் செய்யாத அவளது அத்தையும் அல்லவா தண்டனையை அனுபவிக்கிறாள். அதை மனதில் நிறுத்தி,

"ஒருவர் செய்யும் நன்மை தீமை எல்லாம் அவரைத்தானே சேர வேண்டும்? பெற்றவர்கள் முன்னோர்கள் என அனைவரது பாவ மூட்டையை, அவர்கள் சன்னதியினர் மேல் ஏற்றுவது முறையா?" என்றவளின் சாதுர்யமான பதில் கேள்வியில் தன் தாடியை நீவி நகைத்தார், ராம தேவர்.

"ஏனம்மா, முன்னோர் சேர்த்து வைத்த பேரும் புகழும் அரியணையும் புண்ணியங்களும் மட்டும் உங்களைச் சேர வேண்டும், ஆனால், அவர்கள் செய்த பாவக் கணக்கு மட்டும் உங்களைச் சேராது என்பது மட்டும் முறையாகுமா?" என்று திருப்பினார்.

"நீ என்பதெல்லாம் நீ அல்ல. இந்த உடலும் ஆத்மாவும் சேர்ந்தது தான், நீ என்னும் பொழுது, அந்த உடலை உனக்கு கொடுத்தவர்கள் உன் தாய் தகப்பன் அல்லவா? அப்படி தந்தையின் உயிர்நீரில் ஜனித்து, தாயின் கருவறையில் வளர்ந்த உன்னைத் தானே, அவர்களின் பாவமும் புண்ணியமும் சேர வேண்டும்?" என்றவரின் கூற்றில் தலை கவிழ்ந்தாள், மீனாட்சி.

அவரிடம் மேலும் இது குறித்து விவாதிக்காமல், தன் மாமனின் பாவத்துக்கு பிராயச்சித்தம் உண்டா என வினவினாள் இளவரசி.

"சாபத்துக்கு விமோச்சனம் உண்டு, பாவத்துக்கு ஏதம்மா விமோச்சனம்?" என்ற சித்தனின் கேள்வியில், தன்னை வளர்த்து ஆளாக்கிய அத்தையின் வம்சத்தை எண்ணி அவளது ஆவி துடித்தது.

அவர் சொல்வது போல அனுபவித்துக் கழிக்க வேண்டிய கர்மவினைக்கு, குறுக்கு வழியில் விடை காண முனைவது தவறன்றோ! அதுவும் தன் மாமன் சேர்த்து வைத்திருப்பது, பொல்லாத பெண் பாவம் ஆயிற்றே!

என்ன தான் ராணி மங்கம்மாள் இறக்கும் தருவாயில் தன் பேரனான விஜயரங்கனையும் அவனை சார்ந்தவர்களையும் வாழ்த்தி விட்டு உயிர் நீத்திருந்தாலும், அவர்கள் செய்த பாவம் இல்லை என்று ஆகிவிடுமா? அந்தப் பாவத்துக்கு துணை போன வீரப்பனின் வம்ச கர்மவினை மொத்தமும், விதி அவருக்குப் பிறந்த குழந்தை மேல் ஏற்றி இருக்க, அதை நிவர்த்தி செய்வது அவ்வளவு சுலபமல்லவே?

இருப்பினும் பெண் அவளின் பரிதவிப்பு கண்டவர், தேளின் கொடுக்கில் விச்ம் இருந்தாலும், அதன் வாலில் மருந்து இருப்பது போல, ஒரு பெண்ணால் விளைந்த கர்மவினையை நேர் செய்ய, அதே போன்று அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட மாதர் குலவிளக்கான கண்ணகிக்குக் கோயில் எழுப்ப, அப்பாவம் நீங்கும் என வழி கூறினார்.

அவர் கூறிய பரிகாரத்தை எப்பாடு பட்டேனும் செய்வதாகக் கூறிய மீனாட்சியிடம், "அவரவர் பசிக்கு அவரவர் தான் உணவுண்ண வேண்டும். அதனால் இப்பரிகாரத்தை அந்த வம்சத்தின் வாரிசும், அவன் மனைவியும் செய்வதே உசிதம்." என்ற சித்தனின் பதிலில், மீனாட்சிக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலானது.

அவளது மனசஞ்சலத்தை உணர்ந்தது போல, "என்ன தான் கர்மவினை என்ற அஞ்ஞான பாதையில், பரிகாரம் என்ற விளக்கை கையில் பிடித்தபடி சென்றாலும், விதியின் கதிர்வீச்சு மனதை பலகீனமாக்கும்…" என தொடர்ந்தவரின் கூற்றில், தரிகெட்டு ஓடும் மனதை கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள், மீனாட்சி.

அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு, கேள்வியாய் வளைந்த புருவங்களும் குழப்ப ரேகைகள் விரவிய வதனமுமாக காட்சி தந்த மங்கையிடம்,

"நாம் வாழ்வது நவகிரகங்கள். அதன் அதிதேவதைகளுக்கே கட்டுப்பட மறுக்கும் கலி யுகமம்மா. இங்கு உண்மையான பக்தியுடன் செய்தால் மட்டுமே பரிகாரங்கள் பலன் தரும்..." என்றார்.

அவர் வார்த்தைகளின் உட்கருத்து புரிவது போல இருக்க, ஒரு சிறு தலையசைப்பைத் தந்தாள், பெண்.

பின்னர் ஒரு சில வினாடிகள் யோக நிஷ்டையில் அமர்ந்தவர் மெல்ல கண் திறந்து, தன் இடையில் இருந்து ஒரு சுறுக்குப் பையை எடுத்து, அவளிடம் கொடுத்தார்.

உச்சியைத் தொட்ட சூரியனின் ஒளிக் கதிர்கள் அவள் அந்தப் பையைத் திறக்கவும், உள்ளே இருந்த மாணிக்க பரல்களில் ஊடுருவி, தகதகவென ஜொலித்தது.

ஒளி ஊடுருவிய அக்கற்களின் நட்சத்திர வரிவடிவங்களே அவை உயர் ஜாதி தெய்வாம்சம் பொருந்திய மாணிக்கங்கள் என பறைசாற்றியது.

அவள் முகத்தில் குடி கொண்ட பரவசத்தைக் கண்டவர், "உன் கையில் இருப்பது மதுரை அழியக் காரணமான காவிரிபூம்பட்டினத்து மாணிக்கங்கள்…" என்றார்.

அதைக் கேட்ட மீனாட்சிக்கு, வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கிக் கொண்ட உணர்வு.

‘அப்படி என்றால் இவை கண்ணகியின் காற்சிலம்புகளில் இருந்த மாணிக்கப் பரல்களா? எவ்வளவோ நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த சங்க கால நிகழ்வாகக் கருதப்பட்ட ஒரு பெண்ணின் கால் சிலம்புகளில் இருக்கும் பரல்கள், எப்படி காலத்தால் அழியாது, இவர் கைக்கு வந்தது’ என ஐயமுற்றாள்.

அவள் மனதைப் படித்தவர், "நம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது தான் சூக்ஷம அறிவு. அதைக் கொண்டு காலவெளியில் காலத்தைக் கடந்து பயணிக்கலாம்." எனக் கூறவும், நம்ப முடியாமல் அவரையே உறுத்தபடி நின்றாள், மாது.

அவள் கண்களில் ஒளிர்ந்த சந்தேக ரேகைகளை ஒதுக்கித் தள்ளியபடி,

"ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மனதை ஒருமுகப்படுத்தி பஞ்சபூத நுண்ணணுக்களால் ஆன உடலைக் கலைத்து, ககன மார்க்கமாககாலத்தை ஊடுருவி, இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் க்ஷணப் பொழுதில் சென்று வரலாம்." என மொழிந்துவிட்டு, திடீரென்று அவள் கண்ணெதிரே மாயமாய் மறைந்தார்.

முகம் வெளுக்க நின்றிருந்த பெண்ணுக்கு, சிறிது நேரம் போக்கு காட்டி விட்டு, மீண்டும் அவள் முன்னர் இரண்டு தங்கக் கட்டிகளுடன் பிரசன்னமானார். முகம் தெளியாமல் தன் முன்பு நின்று கொண்டிருந்தவளிடம் அதைத் தந்து, கண்ணகி அம்மனுக்கு கோயில் எடுக்கும் போது, இத்தங்கத்தை கொண்டு சிலம்புகள் செய்து, மாணிக்கப் பரல்களையும் சேர்த்துவிடும் படி கூறினார்.

சித்தனின் ஆசியை ஏற்று வந்த வழி திரும்ப முற்பட்டவளிடம், “நீ உன் கடமையை செய். காலம் அதன் பணியைச் செய்யட்டும். ஆனால், விதியை தள்ளிப் போடலாமே தவிர, மாற்றி எழுத இயலாதம்மா. அந்த சக்தி நம்மைப் படைத்தவனுக்கே கிடையாது என்பதை மட்டும் நினைவில் கொள்…!" என அவள் நெற்றியை அழுந்த வருடினார்.

அதில் அவள் உடல் முழுக்க ஒரு மின்னதிர்வு ஓட, காதுகளில் "நம சிவாய" என்ற பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்க ஆரம்பித்தது. ஒரு வித பேரானந்தத்தில் திளைத்தவள், திடீரென்று கண் விழிக்க, அவர்கள் இளைப்பாறிய இடத்தருகே நின்றாள்.

**********

தனக்கு நடந்த அனுபவத்தில் இருந்து இன்னும் வெளிவர இயலாது, இறுதியாக சித்த புருஷர் பேசிய வார்த்தைகளில், சிக்குண்டவளை, நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது, சற்று தொலைவில் அரங்கேறிக் கொண்டிருந்த நிகழ்வு.

அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தைச் சுற்றி வளைத்து இருந்தது, ஒரு கள்வர் கூட்டம்.

விஜயகுமாரனும் படை வீரர்கள் அனைவரும் கைகள் கட்டப்பட்டு, சிரம் தாழ்த்தி மண்டியிட்டிருந்தனர். அவர்கள் சிறிது அசைந்தாலும், எதிரிகள் அவர்களுக்கு வைகுண்ட பிராப்பதத்தை அருளத் தயாராக தத்தமது கைகளில் ஏந்திய ஈட்டியுடன் 30 புரவி மீது அமர்ந்தவாக்கில் காட்சி தந்தனர்.

அனைவரும் ஒன்று போல் மூகமூடி தரித்து, கண்கள் மட்டும் தெரியும் படி சிவப்பு நிற உடை தரித்து, கையில் ஏந்திய நெடுவாளை உயர்த்திய படி நின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்த பொன், பொருள் என அனைத்தும் ஒரு துணி விரித்து அதில் மூட்டை கட்டப்பட்டு ஒரு ஓரமாகக் கிடந்தது.

சித்தன் தன்னிடம் தந்த தங்கத்தையும் மாணிக்கப் பரல்களையும் தன் ஆடைக்குள் மறைத்தவள், தங்கள் வீரர்களை பிணையாகப் பிடித்திருக்கும் கூட்டத்தைக் கண்டு ரத்தம் கொதித்தாள்.

அப்போது எங்கிருந்தோ குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்க, அச்சத்தம் கேட்ட திசையில் தன் கவனத்தைத் திரும்பினாள், மீனாட்சி.

ஆஜானுபாகுவாய் ஒருவன், கையில் வாள் ஏந்தியபடி வெண்ணிற புரவியில் அங்கு வந்து சேர்ந்தான். நெற்றியில் தீட்டிய கருப்பு திலகமும் அக்கூட்டத்தினரை விடுத்து மாறுபட்டு கருப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தவனைக் கண்டதும், கூட்டத்தினர் பவ்யமாகத் தலை வணங்கினர்.

தன் முன்னிரு கால்களை தூக்கிக் கணைத்தபடி நின்ற குதிரையின் அங்கவடியில் கால் பதிக்காமல், ஒரே தாவில் குதித்து இறங்கியவனின் நேத்திரங்களை, மெய் மறந்து நோக்கிய காரிகையின் உடலில், இனம் புரியாத ஒரு சிலிர்ப்பு.

ஈட்டியை விட கூர்மையான அவனது நயனங்கள் சுற்றுப்புறத்தை ஒரு நிமிடம் சல்லடையாய் அலசியது.

அப்போது அக்கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன், "பிறைசூடா! இவர்கள் சோலைமலை சுந்தரபாஹூவை தரிசிக்க வந்திருக்கும், வீரப்ப நாயக்கனின் அரண்மனைவாசிகள். அனைவரையும் சுற்றி வளைத்து, பொன் பொருளையும் கைபற்றியாயிற்று…" என தங்கள் தலைவனின் பொருள் பொதிந்த பார்வையைக் கண்டு வாய் மலர்ந்தான்.

தூரத்தில் இருந்து அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த மீனாட்சியின் மனம், வீரப்ப நாய்க்கனின் பெயரைக் கேட்டவுடன் புதியவனின் கண்கள் கொவ்வைப் பழமென சிவப்பதை மனதில் குறித்துக் கொண்டது.

தன் கூட்டாளி கூறியதைக் கேட்டபடி மீனாட்சியின் பல்லக்கை ஆராய்ந்தபடி தொட்டு வருடியவனின் மனதில், ஒரு மெல்லிய அலைப்புறுதல். தன் மனதில் அலைகடலென பொங்கிப் பிரவாகம் எடுத்த உணர்வுகளை கண்களை அழுந்தமூடி கட்டுப்படுத்தியவன்,

"இந்தப் பல்லக்கில் வந்த பெண்கள் எங்கே?" என்று கேட்டான்.

அவன் கூட்டாளி "அதோ" என கைகாட்டிய திசையில், கைகள் பிசைந்தபடி கலக்கத்துடன் நின்றிருந்த மந்தாகிணி, நொடிக்கொருதரம் பிறைசூடனுக்கு பின்னால் இருந்த வனப்பகுதியை, கவலையுடன் பார்த்தபடி நின்றிருந்தாள்.

மந்தாகினியின் முகபாவங்களை கூர்ந்தபடி, "இவருடன் கண்டிப்பாக வேறுயாரும் வரவில்லையா?" என தன் கூட்டாளி அந்திரனிடம் வினவினான், பிறைசூடன்.

அதை கேட்ட மற்றொரு கூட்டாளியான கதிர்நயனன் "இல்லையே பிறைசூடா!நாங்கள் பார்க்கும் போது இவர் மட்டும் தான் இருந்தார்…" என கூறி முடிப்பதற்குள், ஒரு குறுவாள் பிறைசூடனின் தோளை உரசிய படி சென்று அவன் முன்னால் இருந்த மரத்தில் பாய்ந்தது.

பிறைசூடனின் தோள்பட்டையில் உண்டான ரத்தக் காயத்தை கண்ட மொத்த கூட்டமும், கத்தி பாய்ந்து வந்த திசையை அதிர்ந்து நோக்க,

பிறைசூடனின் கண்கள் மட்டும் 'இதை நான் எதிர்பார்த்தேன்' என்பது போல, வாள் வீசிய ஏந்திழையின் ஆன்மாவை துளைக்கும் பார்வை பார்த்தது.

அங்கு விழுந்து கிடந்த ஒரு மரத்தின் மீது, தன் இடது காலை ஊன்றி, தன் உடை வாளை அதில் குற்றியடி முகத்தில் சீற்றத்தையும் கயல்களில் கர்வத்தையும் தேக்கி ராஜதோரணையுடன் நின்றிருந்தாள், இளவரசி மீனாட்சி.

கோயில் சிற்பமென நின்றிருந்தவளின் பார்வை படை மொழிபெயர்த்த ஈர்ப்பு, வெறுப்பு, சீற்றம் என்ற கலவையான உணர்வுகள் ஆணவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தி, ஆடவனின் கர்வத்தை உடைத்து தூள் தூளாக்கியது.

அந்த ஆரணங்கின் வதனத்தில் நிலைகொண்ட வில்லாய் வளைந்த புருவமும், அஞ்சனம் எழுதிய வேல் விழிகளும், கூர் நாசியில் ஒய்யாரமாய் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்த மூக்குத்தியும், இயற்கையாகவே சிவந்திருந்த செம்பவள கனி இதழ்களும், ஒருவித பரிதவிப்பை ஆண்மகனுக்குள் உண்டாக்கியது.

அந்த ஒளி வீசும் இளநூதலின் நடுவில் தீற்றிய சிவந்த திருமண் திலகமும், அவளை வைணவப் பெண் என்று பறைசாற்ற, காந்தையவளின் வனப்பில் சொக்கி, ஜென்ம ஜென்மத்துக்கும் பிணையாகத் தயாரானான், பிறைசூடன்.

அவள் செய்யத் துணிந்த காரியத்தில் "மீனாட்சி! வேண்டாம் அம்மா. சொல்வதைக் கேள்." என பதற்றமும் கலக்கமும் கலந்து ஓங்கி ஒலித்தது, மந்தாகிணியின் குரல்.

தன் செவியை மதுரமாக நிறைத்த, தையலின் திருநாமத்தை, ஒருமுறை இதழசைக்காமல் மனதில் கூறிப் பார்த்துக் கொண்டான், பிறைசூடன்.

அந்த நிமிடம், இவன் கள்வன் அவள் இளவரசி என்பது எல்லாம் அவன் சிந்தையில் பதியாததன், மாயமென்னவோ?

தன்னை போதை ஏற்றிய அவள் மேனி எழிலையும் அந்த வசீகரிக்கும் வேல்விழிகளையும் சபித்த வேங்கை,

"வைணவ குல நாயக்க வம்சத்தில், ஒரு மலையத்துவச பாண்டியனாரின் குலக்கொழுந்து. ஆச்சர்யம் தான்…" என விஷமமாக மொழிந்தான்.

கள்வனின் நேத்திரங்கள் பெண்ணவளை காந்தமாய் ஈர்க்க, அவன் விழிவீச்சை தகர்க்க முடியாது சிரமப்பட்டாள், இளவரசி மீனாட்சி.

எனினும் அவனால் தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களையும் இளக்காரமான குரலையும் அறவே வெறுத்தவள், வீறுகொண்டு எழுந்து,

"உலகுக்கே படி அளக்கும் ஈசனின் பெயரில் கள்வன் திரியும் போது, வைணவ குலத்தில் மீனாட்சி பிறக்கக் கூடாதா?" எனக் கேட்டு, காற்றில் இருமுறை வாளை வீசினாள்.

காரிகையின் செருக்கும் நிமிர்வும், முகமூடிக்குள் மறைந்திருக்கும் ஆண்மகனின் இதழ்களுக்குள், சிறை இருக்கும், முத்து முரல்களை மின்னச் செய்ய, அதன் தாக்கம் அவனது சுருங்கும் நயனங்களில் வெளிப்பட்டது.

அதை குறித்துக் கொண்ட மீனாட்சியின் மனம் காரணமற்று அலைபாய, அடக்கிட படாதபாடு பட்டாள், பெண்.

இருந்தும் விடாது அவளுடன் வார்த்தையாடியவன், "இந்த சோலை மலையை பொறுத்த வரை, யானே ஈசன்!யானே கள்வன்! தேவியாரே…!" என உடைவாள் பற்றிய கையை விரித்துக் காட்டியபடி மொழிந்தான்.

"நீசச் செயல் புரிபவனெல்லாம் ஈசனாகிட முடியாது. பார்க்கலாம் உன் வீரத்தை. என்னுடன் போரிட்டு ஜெயித்துவிட்டு, நாங்கள் கொண்டு வந்த பொன்னையும் பொருளையும் எடுத்துச் செல்.." என தன் வாளை அவனை நோக்கிச் சுழற்றியபடி முன்னேறினாள், மீனாட்சி.

அச்செயலில் பிறைசூடனின் கூட்டாளிகள் மீனாட்சியை முற்றுகையிடும் நோக்கில் நகர முயல, அவர்களை கண் அசைவில் தடுத்தவன், உருவிய உடை வாளை உயர்த்திப் பிடித்தான்.

திக்விஜயம் சென்ற அந்த மீனாள், சொக்கனிடம் சொக்கி நின்ற கதை அறிவோம்.

வேங்கையிடம் சிக்கிய இந்த அணங்கு, அவனை பிணையாக்குமா? இல்லை, பிணையாகுமா?

சிலை மீண்டு(ம்) வரும்…

silai epi 3.jpg
 
Last edited:
Top