இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சலிலோ தள அட்மினின் தனிசெய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.

மீண்டு(ம்) வந்த சிலையே!- கதை திரி

Anjana Subi

Active member
இந்த எபியின் கருத்துக்களை இந்த லிங்கில் தெரிவிக்கவும் 🤗

 

Anjana Subi

Active member
மீண்டு(ம்) வந்த சிலையே !
IMG-20220713-WA0042.jpg
சிலை - 6

"என்னப்பூ! வெல்லனே எந்திருச்சுட்டே? காபி தண்ணி ஏதாச்சு தரவா…" என்ற தாய் அஞ்சுகத்துக்கு ஒரு தலையசைப்பை தந்துவிட்டு, அந்தப் பெரிய வீட்டின் வரவேற்பறையில் வந்து அமர்ந்தான்.

தன் போக்கில் அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டு இருந்த அவனுக்கு, அப்போது பார்த்து அறையில் சார்ஜ் போட்டுவிட்டு வந்த கைபேசி இசைத்து, அவனுக்கு அழைப்பு விடுத்தது.

தான் மறந்து அதை அறையிலேயே வைத்துவிட்டு வந்தது உறைக்க, அலுவல் சம்மந்தப்பட்ட முக்கிய அழைப்பாக இருக்குமோ என எண்ணி, மாடிபடிகளில் தாவி ஏறச் சென்றவனைநிறுத்தியது,

"ஏன்டா, அடங்கவே மாட்டியா நீ! சிவன் சொத்து குல நாசம்டா. இப்படிதே உங்கப்பாரு எம்பேச்சை கேட்காம போய் இடி விழுந்து செத்தாரு. நீயும் அந்தாளு மாதிரி விளங்காம போகப் போறியா?" என்ற அஞ்சுகத்தின் சத்தத்தில், ருத்ரேஷ்ஷின் கால்கள் பிரேக் போட்டது போல அனிச்சையாய் நின்றது.

தாயின் குரலில் இழையோடிய ஆதங்கம் நிறைந்த கோபத்தில், தன் செவியை கூர்மையாக்கினான், ருத்ரேஷ்.

"சும்மா உம்ம அருமை மகன் வந்துட்டான்னு சலம்பாதம்மா. அப்படி கோயில் சொத்து ஆட்டய போட்டவனெல்லாம் என்ன செத்தா போயிட்டான். நல்லாத் தானே இருக்கான். எங்க அப்பாருக்கு ஆயுசு முடிஞ்சது போய் சேந்துட்டாரு. சும்மா பெணாத்திகிட்டு..." என்று அலட்சியமாக பதிலளித்த அண்ணன் விஜயபாண்டியன் அறையை விட்டு வெளியேறும் அரவம் கேட்கவும்,

மாடிப்படி ஓரம் மறைந்து நின்று கொண்டான், ருத்ரேஷ்.

வேட்டியை மடித்துக் கட்டியபடி அவசரமாக வெளியேறிய அண்ணனைக் காண காண, அவனுக்குள் ஒரு அபாய மணி அடித்தது.

அதைத் தொடர்ந்து அறைக்குள் இருந்து கேட்ட தாயின் விசும்பல் ஒலி மனதைக் கிழிக்க, மெதுவாக அறைக்குள் சென்றான்.

அவனைப் பார்த்தவுடன், வேறுபுறம் திரும்பி கண்களை அழுந்த துடைத்த அஞ்சுகம், தன் முகத்தை சரி செய்ய அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார்.

அருகில் சென்று அவர் தோளில் கை வைத்த ருத்ரேஷ், தன்னை நோக்கி தாயை திருப்பினான். விடுமுறைக்கு வந்திருக்கும் சின்ன மகனிடம் ஏதாவது சொல்லி அது பிரச்சனையில் முடிந்து விட்டால் என்ன செய்வது என பயந்தவர்,

"கண்ணுல தூசி விழுந்துடுச்சு அப்பூ. அதேன் உறுத்தித் தொலையுது…."

என தன் தடித்து சிவந்திருந்த கண்களை சேலை முந்தானை கொண்டு அழுந்த தேய்த்தபடி, அங்கிருந்து நகர முற்பட்டார்.

அது வேறு சேதி சொன்னது. தந்தையும் அண்ணனும் கட்டப்பஞ்சாயத்து அடி தடி என்று அலைந்தது, அவனுக்கு நன்றாகத் தெரியும். அதில் மனம் வெறுத்து தான் அவன் அங்கிருந்து சென்றதே.

இப்போது தன் அன்னையின் பேச்சும் கண்ணீரும் அவனுக்கு பிரச்சனையின் தீவிரத்தை எடுத்து உரைக்க செய்வதறியாது நின்றான், ருத்ரேஷ்.

அன்னை மீது உயிரையே வைத்திருப்பவனுக்கு, தனியாக இவர்களுடன் அவரை போராட விட்டுச் சென்ற தன் இமாலயத் தவறு, காலம் கடந்து புரிய, தன்னையே நொந்து கொண்டான்.

"என்னமா நடக்குது இங்க? அண்ணன் ஏதாவது தப்பு பண்ணுதா?" என்று வினவினான்.

எப்போதும் தன் துக்கத்தையும் மன துயரத்தையும் தனக்குள் விழுங்கிக் கொண்டு நடமாடி பழக்கப்பட்ட அஞ்சுகமும், இளைய மகனின் கேள்வியில்,

"வேண்டாப்பூ என் வாயை கிளறாதீக. எல்லா என்னோட போகட்டும்…" என கேவிக் கொண்டே சமையலறை நோக்கி நடந்தார்.

தாயின் கண்ணீரும் அண்ணன் விஜய பாண்டியனின் பேச்சும், ருத்ரேஷின் மனதில் நெருடலை ஏற்படுத்தியது.

அன்னை தன்னிடம் சொல்ல மறுத்த விஷயத்தின் தன்மையை பற்றியே யோசித்தபடி நின்றவன், விஜய பாண்டியனின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடிவு செய்தான்.

தன் அறைக்குச் செல்ல எத்தனித்த நேரம் "மாமி… மாமி…. ஆத்துல யாராச்சு இருக்கேளா?" என தேவ கானமாய் கேட்ட குரலில், ருத்ரேஷின் சிந்தனை தடைபட்டது.

"வாடாம்மா. என்ன இம்புட்டு வெல்லனே வந்திருக்க?" என்ற அஞ்சுகத்திடம், சில 500 ரூபாய் நோட்டுகளை நீட்டி,

"அப்பா இந்த மாசம் அபிஷேகப் பாலுக்கு காசு கொடுத்து விட்டா. வாங்கிக்கோங்கோ…." என மொழிந்த தேன் குரலுக்கு சொந்தக்காரியின் முகத்தை பார்க்கும் ஆர்வத்தில் வரவேற்பறை தாண்டி நடந்து வந்தான், ருத்ரேஷ்.

"வேணாங்கண்ணு இருக்கற பாவம் பத்தாதுன்னு, இனி சாமி பாலுக்கு காசு வாங்கி, அந்தப் பாவத்தை தனியா நான் எங்க போய் கரைக்கறது…." என்ற அஞ்சுகத்தின் பதிலின் உட்பொருள் புரியாமல்,

"அச்சோ! இப்ப நீங்க காசு வாங்கிக்கலைனா, அப்பா என்னை தான் திட்டுவார்…" என்று முயல்குட்டியாய் மிரண்டு நின்றாள், அவள்.

அவள் தலையை செல்லமாக ஆட்டிய அஞ்சுகமும் "நான் உங்க அப்பாரு கிட்ட பேசிக்கிடுறேன், ஆத்தா. நீ வெசனபடாம வீட்டுக்குப் போ கண்ணு…" என விடாப் பிடியாக அந்தப் பணத்தை வாங்க மறுத்தார், அஞ்சுகம்.

சரியாக அந்நேரம் ருத்ரேஷ் அஞ்சுகத்துக்கு பின்னால் வந்து நின்று, இவர்கள் சம்பாஷனைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.

அஞ்சுகத்துக்கு பின்னால் தெரிந்த நெடியவனின் தலையைக் கண்ட காயத்ரி,சிரித்துக் கொண்டே,

"சார் தான் அமெரிக்காவுல டாக்டரா இருக்கற உங்க பிள்ளையாண்டானா… " என்று சிநேகமாகக் கேட்டாள்.

அவளின் கவர்ச்சியான தெத்துப்பல் சிரிப்பிலும் எழில் முகத்தில் ஒய்யாரமாய் ஜொலி ஜொலித்த சிவப்பு நிற ஒற்றைகல் மூக்குத்தியிலும், ஒருநிமிடம் லயித்து நின்றான், காளை.

பார்க்க தந்த நிறத்தில் ஐந்தரையடி சிற்பம் கணக்காக ஒரு முழுக்கை சல்வார் அணிந்து நின்றவளின் அழகு, மதிமயங்கச் செய்யாமல் இருந்தால் தான் அதிசயம்.

"ஆமாம் கண்ணு. மூணு மாச லீவுக்கு வந்திருக்கான்…." என்ற அன்னையின் பதிலில் தரை இறங்கினான் தனையன்.

"இது தான் நம்ம கோயில் குருக்களோட பொண்ணு காயத்ரி…" என அவளை அறிமுகப்படுத்தவும், மரியாதை நிமித்தம் ருத்ரேஷுடன் சில நிமிடம் இன்முகத்துடன் பேசிவிட்டு, அன்றைய அபிஷேகத்துக்கான பாலை வாங்கிக் கொண்டு சென்றாள், காயத்ரி.

அவளது ஸ்கூட்டி தங்கள் வெளிவாசலை தாண்டும் வரை பார்த்திருந்தவன், ஏதோ தோன்ற,

"நம்ம வைத்தியநாதன் ஐய்யருக்கு கல்யாணம் இல்லையே! அப்புறம் எப்படி பொண்ணு…" என அருகில் நின்ற அன்னையிடம் வினவினான்.

அக்கேள்வியில் பதட்டத்தை பூசிக் கொண்டது அஞ்சுகத்தின் முகம். மகனுக்கு முதுகு காட்டி செடிகளுக்கு நீர் ஊற்றுவது போல பாவனை செய்தவர்,

"அவர் இறந்து ஆறு மாசம் ஆச்சு தம்பி. இப்ப இந்தப் புள்ளை காயத்ரியோட அப்பா சாம்பசிவ ஐயர் தான், பூசை எல்லாம் பாக்குறாங்க. நம்ம வைத்தியநாதன் ஐய்யருக்கு இவிங்க ஒன்னு விட்ட சொந்தமாம்…."

எனக் கூறி முடிப்பதற்குள் வார்த்தை தந்தியடித்தது.

அவர் தடுமாற்றத்தை ருத்ரேஷின் மனமும் குறித்துக் கொண்டது.

அடுத்து மகன் ஏதாவது கேள்வி கேட்கும் முன்னர் "கூப்பிட்டியா செல்வி…" என பணிப் பெண் அழைப்பதாக பெயர் செய்து கொண்டு, அவசரமாக உள்ளே சென்று விட்டார் அஞ்சுகம்.

*************

அந்த ஞாயிற்றுக் கிழமை கதிரேசனின் இருபது பேர் கொண்ட மாணவர் குழுவுடன் இணைந்து விராட்டிபத்து கிராமத்தை நோக்கிச் சென்றது, சர்வேஷ்வரனின் அகழாய்வுக் குழு.

அந்த ஊருக்குச் செல்லும் சின்ன மினிபஸ்ஸில் ஏறியவர்கள், ஆளுக்கு ஒரு பக்கமாக கிடைத்த இடத்தில் அமர்ந்தனர். ஞாயிற்றுக்கிழமை ஆதலால் பஸ்ஸில் அவ்வளவு கூட்டம் இருக்கவில்லை.

மாணவர்கள் அனைவரும் தங்கள் பள்ளிக் கதைகளை சலசலத்துக் கொண்டு வர, சர்வேஷ்வரனும் கதிரேசனும் படியில் நின்றபடி, நாட்டு நடப்பை அலசிக் கொண்டு வந்தனர்.

திதியனும் நித்யாவும் அஷோக் அவந்திகாவின் தோளில் தூங்கி வழிந்தபடி வர, அதைப் பார்த்து லேசாக இதழ் பிரித்து புன்னகைத்தாள், மாதங்கி.

ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள், பஸ்ஸில் ஒலித்த,

'திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்


திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்


திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்'

என்று பாடகி P.சுசிலாவின் குரலில் உருகி கரைந்திட, தன்னை மறந்து அப்பாடல் வரிகளை முணுமுணுத்தாள்.

அப்போது அவள் அருகில் யாரோ அமரும் அசைவு உணர்ந்து திரும்ப, பக்கத்தில் வந்து அமர்ந்தார், அம்முதிய பெண்மணி.

பேகி பேண்ட் மற்றும் முழுக்கை டீசர்ட் அணிந்த மாதங்கியை ஆவென்று ஏதோ ஏழாவது அதிசயத்தை பார்ப்பது போல பார்த்து "ஊருக்கு புதுசாத்தா?" என்று கேட்க,

அவளும் 'ஆமாம்' என்று தலையாட்டினாள்.

"வாயத் தொறந்து பேசுனா முத்தா உதுந்துரும். அப்புறம் என்ன சோலியா வந்திருக்கீக, நம்ம ஊருக்கு?" என்று உரிமையாக நொடித்துக் கொண்டவரின் பேச்சில் பக்கென சிரித்து விட்டாள், மாதங்கி.

அந்த கிராமத்து கோயில் கல்வெட்டு சிற்பங்கள் பற்றி ஆராயவும், அதைப் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுக்கவும் வந்திருப்பதாகக் கூறியவளை கண்டு அதிர்ந்தவர்,

"இப்படித்தே ஒரு 6 மாசத்துக்கு முன்னவும் கோயிலை சரி பண்ணுறோம், கல்வெட்ட படிக்கிறோம்னு வந்து மண்ணுக்குள்ள தூங்கிட்டு இருந்த கண்ணகி அம்மனை எழுப்பிவுட்டானுங்க. உடுவாளா ஆத்தா, வரிசையா காவு வாங்கிபுட்டா இல்ல…."

என தன் போக்கில் பேசியபடி, இடுப்பு சுருக்கு பையில் இருந்து இரண்டு வெற்றிலைகளை எடுத்து காம்பு கிள்ளினாள் முதியவள்.

அதுவரை அசுவாரஸ்யமாக அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மாதங்கியும், மெல்ல அவர் வாயை கிளர ஆரம்பித்தாள்.

அவரும் அந்த ஊரின் பாழடைந்த கண்ணகி அம்மன் கோயிலைப் பற்றியும்,

அதில் வாழும் புற்று சர்ப்பத்தை பற்றியும் கதை கதையாக அளந்தார்.

காம்பு கிள்ளிய வெற்றிலையில் சுண்ணாம்பை பக்குவமாக தடவியவர், கண்ணகி அம்மன் சிலை கிடைத்ததில் இருந்து, அந்த ஊரில் வரிசையாக சம்பவித்த குருக்கள் மற்றும் தனக்காரரின் துர்மரணம் வரை சொல்லி முடித்தார்.

அதற்குள் பேருந்தும் அந்த கிராமத்தின் எல்லையை அடைந்தது.

வாயில் வெற்றிலை பாக்கை மென்றபடி அந்த நேரத்தில் ஊரில் நிகழ்ந்த சாவுகளை கண் காது மூக்கு வைத்து அம்மன் கோபத்தினால் விளைந்ததென்று நீட்டி முழங்கிய அவரின் பேச்சு, அவ்வூரின் பேருந்து நிலையத்தில் பஸ் நின்றதும் தான் ஓய்ந்தது.

பேருந்தில் இருந்து இறங்கியவளிடம், தன் பெரிய கூடையை அலேக்காக தூக்கி தலையில் வைத்தபடி

"அந்த கோயில் பக்கம் மட்டும் போயிடாதே கண்ணு. உசுருக்கு உத்தரவாதமில்ல…."

என ஒரு வெடி குண்டை வீசிவிட்டு, இவர்களுக்கு எதிர்புறம் நடக்க ஆரம்பித்தார் அந்த வயதான பெண்மணி.

அவர் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டு நின்ற மாதங்கியை நினைவுக்கு கொண்டு வந்தது,

"போலாம் ரைட்…" என விசில் ஊதிய கண்டெக்டரின், விசில் சத்தம்.

அவர் கதை சொன்னதோடு நின்றிருந்தால் கூட மாதங்கி அமைதியாகச் சென்றிருப்பாளோ என்னவோ?

'அங்கு செல்லாதே' என்று கூறவும், அப்படி அந்த கோயிலில் என்ன தான் இருக்கிறதென்று சென்று பார்த்தே தீருவது என முடிவு செய்தாள், ராஜமாதங்கி.

ம்ம்ஹ்ஹும் விதி யாரை விட்டது?

***********

விராடிபத்து கிராம சிவன் கோயில்,

முன்பே சர்வேஷ்வரனும் கதிரேசனும் கோயில் நிர்வாகத்திடம் தங்கள் வரவைப் பற்றிக் கூறி இருந்ததால், தயங்காமல் சாம்பசிவ அய்யரும் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய, தன் மகள் காயத்ரியை துணைக்கு அனுப்பினார்.

ஒரு வித ஆளுமை நிறைந்த குரலில், இன்முகமாக மாணவர்களுக்கு அந்த கோயிலின் கல்வெட்டுகளை பற்றி விளக்கிக் கொண்டிருந்தான், சர்வேஷ்வரன்.

அப்போது ஒரு மாணவன்,

"ஒரு ஆராய்ச்சியாளனா, கண்ணுல பார்த்திடாத உருவமில்லாத கடவுளை ஒரு சிலையா உருவம் தந்து வழிபாடு செய்யுறது, தேவை அற்றது என்று உங்களுக்கு எப்பவாவது தோனி இருக்கா, சார்?" என சர்வேஷ்வரனிடம் கேட்டான்.

அக்கேள்வி கதிரேசன் உட்பட அனைவரையும் வரையறுக்கப்படாத அமைதியில் (undefined silence) ஆழ்த்தி தர்ம சங்கடப்படுத்தியது.

அதுவும் கோயிலில் நின்று கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்டவனுக்கு, மாதங்கி மட்டும் மனதில் ஒரு "சபாஷ்" போட்டாள்.

இருப்பினும் சர்வேஷ்வரனின் பதிலுக்காக ஆர்வமாக அனைவருடன் சேர்ந்து காத்துக் கொண்டிருந்தவளின் கண்களில், ஒரு குயுத்தி எட்டிப் பார்த்தது.

"ஆராய்ச்சிங்கறதே நம்ம வாழ்க்கையோட ஒரு அங்கம் தானே தம்பி. வெறும் ஆராய்ச்சிக்குள்ள வாழ்க்கையை அடக்காம, வாழ்க்கையோட ஆராய்ச்சிக்கான தேடல்ல ஈடுபடனும்னு நான் நினைக்கிறேன்…" என்றவரின் பார்வை ஒரு நிமிடம் மாதங்கியை தொட்டு மீண்டது.

'உன்னை நான் அறிவேன் பெண்ணே!' என கண்களால் பதில் மொழி தந்தவன்,

அந்த மாணவனின் தோள் தட்டி,

"சரி நான் ஒரு கேள்வி கேட்கறேன்? நம்ம உடம்புல இருந்து உயிர் பிரிஞ்சதும், உடம்பை எரிப்போம். இல்ல, புதைப்போம் இல்லையா?" என கேட்க,

"ஆமாம்" என்று தலையாட்டினான் சிறுவன்.

"அப்போ இந்த உடம்புக்கான அடையாளம் அதுக்குள்ள வாசம் செய்யுற உயிர். அப்படி மனுஷனான நமக்கே ஒரு அடையாளம் இருக்குறப்ப, உருவமாகி அருவமாகி அதையும் கடந்த ஒரு ஆதி சக்தியை அடையாளப் படுத்தி சுலபமா புரிஞ்சுக்க உருவம் கொடுக்கறதுல என்ன தப்பு இருக்கு?" என்ற சர்வேஷ்வரனின் வாதம் அம்மாணவனின் சிந்தனையை நெம்பியது.

மேலும் ஒரு இளநகை பூத்து, தன் கால்சராயின் பாக்கெட்டில் கை நுழைத்தபடி,

"இப்பெல்லாம், நம்ம ஊர்ல சிலை வழிபாடு தேவை இல்லைனு மறுத்தவங்களோட சிலைகள் தான் தம்பி ரொம்ப ஜாஸ்தி…" என்று தொடர்ந்தவனின், கருத்தின் பிறழ்ச்சிக் கோணம், அந்த பதின்ம பருவ பாலகனை மட்டுமல்லாது, அங்கிருந்த மற்றவர்களையும் சிந்திக்க வைத்தது.

மாதங்கி மட்டும் விடாமல், "அப்போ தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பாங்கறதெல்லா.. பொய்யா? எங்கும் நிறை பரம்பொருள்னா, ஏன் அந்த இறை அம்சத்தை கோவில் சிலைகளில் மட்டும் கும்பிடறீங்க? ஒருவேளை உங்க சாமி கோயில்ல மட்டும் தான் அருள் தருவாரோ?" எனகேள்வியால் மடக்கினாள்.

அவள் விதண்டாவாதத்தில், இல்லாத பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான், சர்வேஷ்வரன்.

தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து, "நீ மூச்சு விடுறதும் காற்று தான். நான் மூச்சு விடுறதும் காற்று தான். ஆனா, அந்த காற்றை ஒரு குறிப்பிட்ட வளிமண்டல அழுத்தத்துல டையர்ல அடைச்சா தான், அது வண்டியை நகர்த்த பயன்படும்…

நம்ம எல்லாத்துக்கும் இந்த உலகத்துக்கான இயக்கமே சூரிய சக்தி தாங்கறது தெரியும். அந்த சூரிய ஒளியை பூதக்கண்ணாடி வழியா ஒருங்கிணைத்தா தான் அது ஒரு சுட்டெரிக்கும் தீயா மாறும்.

அது போல தான் எல்லா இடத்துலயும் கடவுள் இருந்தாலும், பிரத்தியேகமா கோவில்களில், சில நியதிகளுடன் வடிக்கப்பட்ட உருவச் சிலைகள், அதன் கையில் இருக்கும் முத்திரைகள், அச்சிலைகளை பிரதிஷ்டை செய்ய உச்சரிக்கப்பட்ட மந்திரங்கள்னு ஒன்னோட ஒன்னு பின்னிப் பிணைந்து, அங்க ஒரு நல்ல சக்தி சூழலை உருவாக்கும். அது நம்ம உடம்பையும் மனசையும் ஆன்மீகப் பாதைல நடத்த உதவும்…" என்றவனின் விளக்கத்தை அலட்சியப் படுத்தியவள்,

"சாமி பெயரால நம்மள நாமே ஏமாத்திக்க ஒரு அளவு வேண்டாம். ஆக, இந்த கோயில்களெல்லாம் ஒரு பேட்டரி சார்ஜ் பண்ற பவர் ஹவூஸ் மட்டும் தான். இறை நம்பிக்கைங்கறது இங்க செகெண்டரி தான்…" என அப்போதும் இளப்பமாகப் பேசினாள்.

இதற்கு மேல் அவளிடம் பேசினால் வீன் வம்பு என உணர்ந்தவன், 'ஆளை விடுடா சாமி' என மாணவர்களின் சந்தேகங்களைக் களையும் பணியில் தன்னை முனைப்பாக ஈடு படுத்திக் கொண்டான்.

சர்வேஷ்வரனின் அந்த வசீகரப் பேச்சின் விளங்கங்களில், தன்னை மறந்து ஆழ்ந்திருந்தாள், காயத்ரி.

அப்போது தனக்கு பின்னால் இருந்து கேட்ட, "என்ன எங்க சர்வேஷ் சாரை டாவு உட்றயா?" என்ற குரலில் காயத்ரிக்கு தூக்கி வாரிப் போட்டது.

குரல் வந்த திக்கில் அவசரமாக திரும்பிப் பார்த்த காயத்ரியை கண்களில் குறும்பு கூத்தாட கண்சிமிட்டியபடி நோக்கினாள், ராஜமாதங்கி.

ஏதோ கேட்கக் கூடாததை கேட்டுவிட்டதை போல "சிவ சிவ அப்படி எல்லாம் பேசாதீங்கோ. நான் நல்ல பொண்ணு தெரியுமோ…" என்று விழி விரித்து காதில் ஜிமிக்கிகள் ஆடக் கூறிய காயத்ரியின் வெகுளித்தனத்தில், வெகுவாக கவரப்பட்டாள், மாதங்கி.

பொங்கி வந்த சிரிப்பை கொடுப்புக்குள் அடக்கியபடி, 'ஆஹா நமக்கொரு அடிமை சிக்கிடுச்சு டோய்…' என அவள் தோளில் கைபோட்டு உடன் நடந்தியவள், "ஆமாம் உங்க ஊர்ல இது ஒன்னு தான் கோயிலா?" என மெல்ல பேச்சை வளர்த்தாள்.

மாதங்கியின் நோக்கம் புரியாது அவள் விரித்த தூண்டிலில், "இல்லையே! இன்னொரு கோயில் இருக்கு. ஆனா, அங்க யாரும் போக மாட்டா…" என்று பதில் தந்து தானாக போய் சிக்கிக் கொண்டாள், காயத்ரி.

"அப்படியா! ஏன்?" என்று எதுவும் தெரியாதது போல மாதங்கி வினவ,

காயத்ரியும் அவள் தந்தையும், இந்த ஊருக்கு வந்ததில் இருந்து கேட்ட அத்தனை கதைகளையும் அள்ளி விட்டாள்.

அதை ஊன்றிக் கவனித்த மாதங்கியும், "சரி, நீ என்னை அங்க கூட்டிட்டுப் போறியா?" என்று கேட்டது தான் தாமதம், தன் தோளில் இருந்த மாதங்கியின் கையை வெடுக்கென விலக்கி விட்டாள், காயத்ரி.

ஒருமுறை உடல் தூக்கிப் போட, "என்ன விளையாடறேளா? எங்க தோப்பனாருக்குத் தெரிஞ்சது என்னை கொன்னுடுவார்…" என்று நடுநடுங்கியபடி பதிலளித்தாள், பெண்.

அதற்கும் மாதங்கி, "தெரிஞ்சா தானே கொல்லுவார். நாம தெரியாமப் போவோம்…" என நயமாகப் பேசி, மீண்டும் அவள் தோளை அணைத்தபடி நடந்தாள்.

காயத்ரியோ கைகளை உதறி, "அய்யோ! அங்க சந்திரமுகி பாம்பு இருக்கு. அங்க போறவாளை கடிக்காம விடாது…" என்று கண்களில் அச்சம் விரவ மொழிந்தாள்.

ஒரு நிமிடம் தன் நடையை நிதானித்து "ஆமாம். அதென்ன பாம்புக்கு தலைவர் பட பேரெல்லாம் வச்சுருக்கீங்க…" என மாதங்கி நிஜமாகவே புரியாமல் கேட்டு வைத்தாள்.

அதில் மாதங்கியை ஏற இறங்கப் பார்த்த காயத்ரி, தன் கைகளை நீட்டியும் அகட்டியும்,

"இவ்ளோ நீளத்துள அவ்ளோ அகலத்துல சந்திரமுகி படத்துல வர மாதிரி, ஒரு பாம்பு இருக்குக்கா அங்க.

அது ராமதேவ சித்தர் அம்சமாம். தியானத்துல இருக்குற அவரை டிஸ்டப் பண்ணா கடிச்சிடுமாம்.."

என கண்களை உருட்டிக் கூறியவளின் தோரணையில், அவள் கன்னம் கிள்ளி,

"அய்யய்யோ. அப்போ கண்டிப்பா அந்த சந்திரமுகியை பார்த்தே ஆகனுமே. டிஸ்டப் பண்ணா தானே கடிக்கும். நாம டிஸ்டப் பண்ணாம, கோயிலைச் சுத்திப்பார்ப்போம்…" என்றவளின் அலட்சியமான பதிலில் செய்வதறியாது திருதிருத்தாள், காயத்ரி.

'இன்னைக்கி காலம்பர கேலண்டர் பார்க்கறச்சேவே என் ராசிக்கு சந்திராஷ்டமம்னு போட்டிருந்தா. நான் தான் கண்டுக்கலை. இப்போ அனுபவிக்கிறேன்' என்று மனசுக்குள் காயத்ரி பயந்து குமுறினாலும், மாதங்கியின் துணிச்சலும் பேச்சும் காயத்ரியை கவர்ந்திழுத்தது.

அதற்குள் உணவுண்ணும் நேரம் வந்திருக்க, அதிகாரிகள், கோயில் மண்டபத்தில் அன்ன தானத்துக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அமர்ந்து உணவுண்ணும் விரிப்புகள் போதாததால்,

"காயு மடப்பள்ளிக்குப் பின்னாடி இருக்க பழைய சாமான் போட்டு வைக்கற அறைல இருந்து உட்கார ஜமக்காலம் எடுத்துண்டு வாம்மா, நாழியாரது…" என துரிதப்படுத்தினார் சாம்பசிவம்.

வேகமாக அந்த அறைச் சாவியை காயத்ரியிடம் தந்தவர், "கொழந்தை செத்த அவளோட தொணைக்கு போயிட்டு வாமா…" என மாதங்கியிடம் கேட்டுக் கொண்டார்.

மாதங்கியின் வித்தியாசமான பார்வையில் "என் பொண்ணு கொஞ்சம் பயந்த ஸ்வபாவம். நைட்டு தனியா பாத்ரூம் போகவே யோசிப்பா…" என்று சிரித்துக் கொண்டே கூற,

'அது சரி' என முனகியபடி காயத்ரியுடன் போனாள் மாதங்கி.

*************

புழங்கப்படாத அவ்வறையை திறந்தாள், காயத்ரி. ஆங்காங்கே ஒட்டடை படிந்து சிலந்தி வலை தொங்க காணப்பட்டது அவ்வறை. சுத்தம் செய்யாததால் அறையில் படிந்திருந்த தூசி நாசியில் ஏற,

'லொக் லொக்' கென இருமியபடி, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

இருட்டாக இருந்த அறையின் விளக்கை உயிர்பிக்க, ஸ்விட்ச்சை தட்டப் போனாள், மாதங்கி.

"எலி ஏதோ வயரை கடிச்சிடுத்து போலக்கா. அதனால லைட் வேலை செய்யாது.." என காயத்ரி பதிலளிக்கவும்,

எங்கிருந்தோ ஒரு எலி காயத்ரி மேல் விழுந்து ஓடவும் சரியாக இருந்தது.

அதில் கத்தியவளைக் கண்டு முறைத்து,

"கத்தித் தொலையாதே, எலி அப்புறம் பயந்துடப் போகுது?" என கேலி பேசியபடி,

தன் கையில் இருந்த கைபேசியின் டார்ச் லைட்டை உயிர்பித்தாள், மாதங்கி.

அவர்கள் தேடி வந்த விரிப்பு பரண் மேல் இருந்தது. அவ்வறையின் மூலையில் இருந்த ஒரு சிறு ஏணியைப்போட்டு ஏறி அதை எடுத்தவள், கீழே நின்று கொண்டிருந்த காயத்ரியிடம் ஒவ்வொன்றாகக் கொடுத்தாள்.

அச்சமயம் சலேரென, ஏணியில் இருந்து கீழே இறங்கப் போனவளின் முழுக்கை சட்டை நுனி ஏதோ பெட்டியில் பட்டு இழுபட்டது.

"ச்சே, இது வேற…" என சிறு கடுப்புடன் சிரமப்பட்டு விடுவிக்க முயன்று கொண்டிருந்தாள், பாவை. அவள் பார்வை வட்டத்துக்குள் அப்போது அனிச்சயாக விழுந்தது, சரியாக மூடப்படாத அந்த பெட்டிக்குள் இருந்து வெளியே நீட்டிக் கொண்டு தெரிந்த, ஏதோ ஐம்பொன் சிலையின் கை பகுதி.

ஒருவழியாக தன் சட்டையை விடுவித்தவள், ஆர்வம் உந்தித் தள்ள, அந்த சிலையை கைகளில் எடுத்து முன்னும் பின்னுமாக திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள், மாதங்கி.

கீழே நின்று கொண்டு தன் போக்கில், விரிப்புகளில் இருந்த தூசியை உதறியவாறு, "அக்கா, போகலாம் வாங்கோ. அன்னதானத்துக்கு நாழி ஆயிடுத்து.." என வாய் திறக்க முயன்ற காயத்ரி, மாதங்கியின் கையில் இருந்த சிலையைக் கண்டு விதிர் விதிர்த்தாள்.

மாதங்கி கையில் இருந்த சிலையைக் கண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தவள்,

"அச்சோ! அதை எடுக்காதேள். அங்கயே வச்சுடுங்கோ. நான் இவ்ளோ நேரமா கதை கதையா சொன்னது, இந்த அம்மன் விக்ரஹத்தைப் பத்தி தான்…"

என கூறி முடிப்பதற்குள், நாக்கு மேலன்னத்துடன் ஒட்டிக் கொண்டது.

அந்நேரம் அங்கு வந்த சர்வேஷ்வரன் காயத்ரியை அவள் தந்தை அழைப்பதாகக் கூற, அவனிடம் சாவியை தந்து, அறையை பூட்டிவிட்டு மாதங்கியுடன் வருமாறு கூறிவிட்டு, விரிப்புடன் வேகமாக ஓடினாள், காயத்ரி.

அந்த பரண் மேல் இருந்த சில ஐம்பொன் சிலைகள் மற்றும் ஒரு கற்சிலை அடங்கிய பெட்டியை சர்வேஷ்வரனின் துணையுடன் கீழே இறக்கினாள், மாதங்கி.

அந்த ஐம்பொன் சிலைகளை கையில் எடுத்தவளின் கண்களில் படர்ந்த அதிர்ச்சியை அவதானித்தபடி நின்றவனின் பார்வை, அச்சிலைகளை ஆராய ஆரம்பித்தது.

மெல்ல இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தப் பார்வை பார்த்துக் கொண்டனர். அதன் பிறகு தன் கைபேசியில் யாரோ சிலருக்கு அழைத்துப் பேசிய சர்வேஷ்வரன்,

"அன்பிலீவபிள் மாதங்கி" என்று தன் தலையை கோதிக் கூறினான்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இருந்தது, அவர்களின் அனுபவங்கள்.

முடிவில் வெளிப்பட போவது பூதமா? இல்லை, தெய்வமா என்ற கேள்விக்குத் தான் இன்னமும் பதிலில்லை.

சிலை மீண்டு(ம்) வரும்…

silai epi 3.jpg
picture courtesy : monisha​
 
Last edited:

Anjana Subi

Active member
இந்த எபியின் கருத்துக்களை இந்த லிங்கில் தெரிவிக்கவும் 🤗
 

Anjana Subi

Active member
மீண்டு(ம்) வந்த சிலையே…!
FB_IMG_16587644363528979.jpg
சிலை - 7


விராடிபத்து கிராம எல்லைக்குள் நுழைந்தது, அந்த காவல்துறை ஜீப். ஜீப்புக்குள் கசிந்து கொண்டிருந்த,

'நினைவாலே சிலை செய்து


உனக்காக வைத்தேன்

திருகோவிலே ஓடி வா ஆ…

திருகோவிலே ஓடி வா!நினைவாலே சிலை செய்து

உனக்காக வைத்தேன்

திருகோவிலே ஓடி வா ஆ…

திருகோவிலே ஓடி வா '


என்ற பாடலுக்கு, கண்மூடி தாளம் போட்டுக் கொண்டு வந்தான், பிரகாஷ்.

திடீரென்று சிலை கடத்தல் தொடர்பாக ஐஜி அலுவலகத்தில் இருந்து தகவல் வரவும், நேராக விராடிபத்து கிராமத்துக்கு விசாரனை நிமித்தம் கிளம்பி இருந்தான்.

கோயிலின் முன் ஜீப் நின்றது கூட உணராமல் 'திருக்கோயிலே ஓடிவாஆ…' என மெய் மறந்து பாடிக் கொண்டிருந்தவனை கலைத்தது,

"சார் கோயில் வந்தாச்சு…" என்ற குமரவேலின் குரல்.

"அதுக்குள்ள வந்துடுச்சா. அவளோ ஸ்பீடாவா வண்டி ஓட்டுனீங்க. இதெல்லா ரொம்ப தப்பு குமாரு…" என தோள் தட்டிவிட்டு ஜீப்பைவிட்டு இறங்கினான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த குமரவேலுக்கு, சில நாட்களுக்கு முன்பு "யோவ் இப்படி வண்டியை உருட்டிட்டு வந்தா, எப்படிய்யா திருடனை பிடிக்கிறது…" என பிரகாஷ் எரிந்து விழுந்தது நினைவுக்கு வந்து இம்சித்தது.

'முன்னாடி போனா முறைக்கிறான். பின்னாடி வந்தா உதைக்கிறான். இவனோட ஒரே அக்கப்போரா இருக்குடா முருகா…' என மனதில் அவனை அர்ச்சித்தபடி ஜீப்பை பார்க் செய்தார் .

அன்னதானம் தடபுடலாக நடந்து கொண்டிருக்க கதிரேசனின் மாணவர் குழாமும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது கண்களை மறைத்த கூலர்ஸுடன், குமரவேல் பின் தொடர கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தான், பிரகாஷ்.

அந்தப் பழமையான கோயிலில் வாடிக்கையாய் வரும் ஜனதிரள் எப்போதும் போல இருந்தது. உச்சிக் கால பூஜை நடந்தேறியதற்கு சாட்சியாக, கர்ப்ப கிரகத்துக்குள் சர்வ அலங்காரத்துடன் அமர்ந்திருந்தார், ஈசன்.

அப்போது சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்த மக்கள் சிலரது பார்வை, காக்கி சீருடையில் தன் கழுகுப் பார்வையால் அக்கோயிலை அலசிக் கொண்டிருந்த பிரகாஷை தொட்டு மீண்டது.

அவனது ஆராய்ச்சிப் பார்வையில் கலவரம் அடைந்த கோயில் அதிகாரிகளும் சாம்பசிவ குருக்களும், அவனை நோக்கி விவரம் கேட்க ஓடி வந்தனர்.

தீபாராதணை தட்டுடன் வந்த சாம்பசிவ குருக்கள், "சார் தர்சனத்துக்கு வந்திருக்கேளா?" என தயங்கி தயங்கி பேச்சை ஆரம்பித்தார்.

ஒரு நிமிடம் கருவறையில் அமர்ந்திருந்த இறைவனை தீர்க்கமாகப் பார்த்த பிரகாஷ், தன் கையில் இருந்த காப்பை இழுத்துவிட்டுக் கொண்டு, குமரவேலுக்கு கண் காட்டினான்.

அது புரிந்தது போல அனைவரையும் நோக்கி,

"இங்க கோயில் சிலை காணாமப் போச்சுன்னு கால் பண்ணது யாருங்க?" என்றவரது குரல் ஓங்கி ஒலித்தது.

அதை கேட்ட மக்கள் கூட்டத்திடம் ஒரு சலசலப்பு.

ஆனால் சாம்பசிவமோ, "சார்வால் உங்களுக்கு யாரோ ஏதோ தப்பான தகவல் தந்திருக்கானு நெனக்கிறேன். அப்படி எனக்கு தெரிஞ்சு இங்க எந்த சிலையும் திருடு போகலையே…" என்றவரின் குரலிலும் முகத்திலும் குழப்ப ரேகைகள்.

தன் மீசையை முறுக்கிய பிரகாஷ், தன் கண்களை சுருக்கி,

"தெரிஞ்சு தொலையலை சரி… தெரியாம களவு போயிருந்தா?" என கேட்டு நிறுத்த,

குருக்களின் ஆரத்தி தட்டு ஏந்திய கைகள் நடுக்கம் கண்டது. அவன் கேள்வியில் ஏதோ விபரீதம் அரங்கேறி இருப்பதை மட்டும் உணர்ந்தார், குருக்கள்.

கூலர்ஸை கழற்றி சட்டைக்கு நடுவில் சொருகியவனின் பார்வை, அனிச்சையாய் கருவறையில் அமர்ந்திருக்கும் ஈசனை தொட்டு மீள, அவன் உடலில் ஒரு மெல்லிய சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

அதன் காரணத்தை ஆராய்வதற்குள், "தள்ளுங்கய்யா தள்ளுங்க…" என கூட்டத்தை விளக்கிக் கொண்டு சர்வேஷ்வரனும் மாதங்கியும் அவன் முன் நின்றனர்.

"ஹலோ சார், நான் பிரஃபசர் சர்வேஷ்வரன். இவங்க என் கலீக் மாதங்கி. நாங்க தான் உங்களுக்கு கால் பண்ணோம்…" என தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டவன்,

அந்த காவலனின் சட்டையில் பொறித்திருந்த பெயர் அட்டையை பார்த்து "மிஸ்டர் ச…" என்று வாய் திறப்பதற்குள் "கால் மீ பிரகாஷ்…" என மரியாதை நிமித்தம் கைகுலுக்கினான்.

மாதங்கியின் புறம் திரும்பி ஒரு தலையசைப்பை மட்டும் தந்தவன், தன் விசாரணையை துவங்கினான்.

மாதங்கியும், சிலைகளை கோயில் மடப்பள்ளி அருகில் இருந்த அறையில் கண்டெடுத்தது முதல், அது போலி என்பது வரை ஒரே மூச்சாகக் கூறி முடித்தாள்.

அதை கேட்டுக் கொண்டிருந்த பிரகாஷ் புருவங்கள் முடிச்சிட "அது போலினு எந்த டெஸ்ட்டும் பண்ணாம, இவ்ளோ அழுத்தமா எப்படி சொல்றீங்க…." என்று அவளிடம் சந்தேகமாகக் கேட்டான்.

பொதுவாக மண்ணுக்குள் வருடக் கணக்கில் புதைந்திருக்கும் ஐம்பொன்சிலைகளின் மீது 'பேட்டினா' (patina) என்ற பச்சை நிற படிமானம் படிந்திருக்கும். இயற்கையாக படியும் அப்படிமானம் அச்சிலைகளை பாதுகாக்க வல்லது. மேலும் அதன் அளவை பொறுத்தே, அச்சிலைகளின் விலைமதிப்பும் தொன்மையும் நிர்ணயிக்கப்படும்.

ஆனால், மாதங்கி கோவிலில் கண்டெடுத்த சிலைகளின் மீது இருக்கும் படிமானம் செயற்கையான பூச்சு என்றும், அவை நாள் பட சிலைகளை அரித்துவிடும் என்று இயம்பினாள். மேலும் தன் கையில் இருந்த சிலைகளை, அந்தப் போலி பூச்சு அரித்ததை சுட்டிக் காட்டவும் செய்தாள்.

அதுமட்டும் இன்றி அம்மனின் கல் விக்கிரஹத்தின் உருவத்தையும் முக அமைப்பையும் வைத்தே, அது போலிச் சிலை தான் என்று அறுதியிட்டுச் சொன்னாள்.

'நாட் பேட் பாஃர் ஆ உமன். குட் ஜாப்' என்று மனதில் மெச்சிக் கொண்டவன்,

"மேடம் பெரிய ஷர்லாக் ஹோல்ம்ஸ் போலயே…" என்று லேசாக இதழ் வளைத்தான்.

மேலும் சர்வேஷ்வரனுடன் பொதுப்படையாக பேசிய படி ஏனைய சிலைகளை பார்வையிட முன்னால் சென்ற பிரகாஷை வெறித்த மாதங்கி,

அவன் குரலில் தொனித்தது பாராட்டா? இல்லை பரிகாசமா? என மனதில் ஒரு பட்டி மன்றமே நடத்தத் தொடங்கினாள்.

அதே நேரம் பிரகாஷிடம், "சார், நீங்க தானே அழகர் கோயில் சிலை திருட்டு கேஸை ஹேண்டில் பண்ணது. நியூஸ்ல பார்த்தேன்…" என திடீரென ஞாபகம் வந்தவனாகச் சொன்னான், சர்வேஷ்வரன்.

பதிலுக்கு பிரகாஷ் பட்டு கத்தரித்தாற் போல் "இந்த பிரச்சனையை பத்தி மட்டும் பேசலாமே.." என நேருக்கு நேர் பார்த்துக் கூறினான்.

அதில் சர்வேஷின் முகம் விழுந்து விட்டது.

அழகர் கோயில் சிலைகளை கொல்லையடித்த கும்பல் பற்றி வெளியான செய்தியை சில நாட்களுக்கு முன்னர் மாதங்கியும் அறிவாள்.

பிரகாஷ் தன்னிடமும் சர்வேஷிடமும் பேசிய விதம் சினமூட்ட, அவனை மட்டம் தட்டும் விதமாக,

'குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலை சார்…' என்றவளின் குரலில் சலேரெனத் திரும்பினான், பிரகாஷ்.

அவளை அம்பென துளைத்தவனின் பார்வையை எதிர் கொண்ட பாவையும் விடாது "அவ்ளோ பெரிய கோயிலோட சிலைகளையும் நகைகளையுமே இன்னும் கண்டு புடிக்க முடியாம இருக்கீங்க. இதுல இந்த சிலைகளை மட்டும் அப்படியே கண்டு புடிச்சிட்டு தான் மறுவேலை…." என்றவளின் இளக்காரமான பேச்சு, ஆண்மகனின் ஈகோவை தட்டி எழுப்பியது.

தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி அவள் விழி பார்த்தவன்,

"சரி நான் எல்லாத்தையும் கண்டு புடிச்சு தந்துட்டா, என்ன தருவீங்க ஆர்க்கியாலஜிஸ்ட் மேடம்?"

என்றவனின் குரலில் இருந்த பேதத்தை, மாதங்கி உணர்ந்தாலோ, இல்லையோ? சர்வேஷ்வரன் நன்றாக உணர்ந்தான்.

வேகமாக "மாது, கொஞ்சம் அஷோக்கை நான் கூப்பிட்டேன்னு சொல்லு…" என அவசரம் காட்டி கட்டளையிட்டு, அழகாக அங்கிருந்து அவளை அப்புறப்படுத்தினான்.

விழிகளால் வாள் போரிட்ட மங்கை அங்கிருந்து நகர்ந்து செல்லவும்,

சர்வேஷ்வரனை 'உன் தந்திரத்தை நான் அறிவேன்' என்பது போல பார்த்த பிரகாஷ்,

"நைஸ் மூவ். பட் எல்லா நேரமும் இது பலன் தராது…" என இருபொருள் படப் பேசினான்.

அவன் பேச்சின் உள்ளர்த்தம் புரியாவிடிலும்,

"சாரி சார், ராஜமாதங்கி கொஞ்சம் வாய் துடுக்கா பேசிடுவாங்க. நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க…" என சமாதானம் செய்ய முனைந்தான், சர்வேஷ்வரன்.

**************

"ராஜமாதங்கி ம்ஹூம்ம்ம்…." என அவள் பெயரை இழுத்து உச்சரித்தவனின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைய, அங்கிருந்த சிலைகளை தன் கைகளில் ஏந்தி சோதிக்க ஆரம்பித்தான்.

அவற்றை புகைப்படம் எடுத்து பத்திரப்படுத்தியவாறு, சில கைபேசி அழைப்புகள் செய்து பேசினான்.

தொடர்ந்து பேசியவனின் தொண்டை கமற விக்கல் எடுத்தது.

அதைப் பார்த்த சர்வேஷ்வரன் "காயத்ரி காயத்ரி கொஞ்சம் குடிக்க தண்ணீ எடுத்துட்டு வாமா…" என குரல் கொடுத்தான்.

அவன் முன்னால் நெயில் பாலிஷ்ஷில் பளபளத்த விரல்கள், நீர் சொம்பை நீட்டிய படி நடுங்கிக் கொண்டிருந்தது.

அதைக் கண்டு இதழ்களில் குடிகொண்ட புன்சிரிப்புடன், அந்த மென் கரங்களை லேசாக தீண்டி வாங்கச் சென்றவனின் ஸ்பரிசத்தில் சொம்பை தவற விட்டாள், அவள்.

இதை எதிர்பார்க்காத சர்வேஷ் "பார்த்துமா காயத்ரி…" என கூறி, தானே நீர் எடுத்து வரச் சென்றான்.

ஆண்மகனது காக்கிச் சட்டையும் முரட்டு உருவமும் காயத்ரியை அதீத அச்சம் கொள்ள வைத்தது. குனிந்த தலை நிமிராது அவன் காலடியில் கிடந்த சொம்பை எடுத்துக் கொண்டு, நகர முனைந்தவளின் செயல்களை கூர்ந்து அளவெடுத்தான், பிரகாஷ்.

அவன் கூரிய பார்வையில், தையல் அவளும் எங்கு திட்டி விடுவானோ என பயந்து, யாருக்கும் கேட்காத குரலில் ஒரு சிறு மன்னிப்பை யாசித்துவிட்டு ஓடி மறைந்தாள்.

அச்சமயம் அவள் சென்ற திக்கையே வெறித்துக் கொண்டிருந்தவனிடம், முகத்துக்கு நேராக தண்ணீர் புட்டியை நீட்டிய படி நின்றிருந்தாள், மாதங்கி.

அதில் கவனம் கலைந்தவன் 'தேங்க்ஸ்' கூறி அதை வாங்கிப் பருகினான்.

கையில் தண்ணீருடன் எதையோ துழாவும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனை, ஒரு மார்க்கமாகப் பார்த்த மாதங்கி, "சரியான அலைஞ்சான் கேஸ் போல…." என முணுமுணுத்தது, அவன் செவியில் நன்றாக விழுந்தது.

அதில் "வாட், கம் அகெயின்…" என்று அவளை உறுத்து விழிக்கவும்,

மக்கள் சிலர் அதற்குள் அவனை சூழ்ந்து கொள்ளவும் சரியாக இருந்தது.

"ஏன் சார் சாமி நகையை ஆட்டையப் போட்டு போலி நகையை வச்சாக் கூட அர்த்தம் இருக்கு. பிஸ்ஸாத்து ஐம்பொன் சிலையை எதுக்கு சார் ஆட்டையப் போடப் பொறானுவுங்க…" என்று அலட்சியமாகக் குரல் எழுப்பினர்.

சத்தம் வந்த திசையை நோக்கி,

"அப்ப நீங்க கும்பிடுற சாமியை விட, அது கழுத்துல இருக்கற நகைக்கு தான் வேல்யூ. அப்படி தானே? சாமியை கும்பிடுறீங்க, ஆனா சாமி மூர்த்தங்களை மட்டும் அலட்சியப்படுத்துனா எப்படிங்க.."

என்றவனின் வில்லங்கமான கேள்வியில், வாயடைத்து போயினர் கூட்டத்தினர்.

சர்வேஷ்வரனும் தன் பங்கிற்கு,

"சாதாரண ஐம்பொன் சிலை தானே? அறுத பழசை தானேனு, இதை எடுத்தவனுக்கு வேற வேலை இல்லனு இவ்ளோ அறியாமையோட இருக்கறதால தான், நம்ம பொக்கிஷத்தை எல்லாம் ஈசியா திருடி காசு பார்க்கறதுக்கு என்றே ஒரு கூட்டம் அலையிது…" என்று தன் மனக்குமுறலைக் கொட்டினான்.

மேலும் தொலைந்து போன சிலைகளின் பெருமதிப்பை சர்வேஷ்வரனின் வாயிலாகக் கேட்ட ஊர் மக்களின் முகத்தில் ஈயாடவில்லை.

அம்மக்களின் பேச்சுக்கள் எல்லாம், சும்மாவே ஆடும் மாதங்கியின் காலில் சலங்கை கட்டி விட்டது போல ஆனது.

"பொன்னார் மேனியனே மழபாடியுள் மாணிக்கமேனு எல்லாம் பாடி சாமி கூட தங்கமும் வைரமுமா இருக்கறதை தான், மனுஷனோட சிந்தனையும் கற்பனையும் விரும்புது போல…"

என்றவளது கூற்று, குத்தீட்டியாய் அங்கிருந்தவர்களை குத்திக் கிழித்தது.

"நீங்க கும்பிடுற சாமிக்கே விலை வச்சு தான் அதோட மதிப்பை நிர்ணயம் செய்யறிங்க. என்ன தெய்வ நம்பிக்கையோ?" என சலித்துக் கொண்டவளின் பேச்சு, குறிப்பாக சாம்பசிவ குருக்களுக்கு ரசிக்கவில்லை.

இருப்பினும் கூட்டத்தில் வாக்குவாதம் செய்து ரசாபாசம் ஆகி விடக்கூடாதென அமைதி காத்தார்.

அப்போது, "கும்பிடுற தெய்வத்தோட மதிப்பை நிர்ணயிக்கிறது, அவனை சரணாகதி அடையற மனுஷனோட உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் பொருத்தது மேடம்…" என்ற குரலில் விலுக்கென்று நிமிர்ந்தாள், பெண்.

அங்கு வந்திருந்த சிலையின் தொன்மையை கணிக்கும் இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த பிரகாஷின் காதுகளை, அவளது நிந்தனைகள் எட்டவும், அவளுக்கு தக்க பதிலடி தந்திருந்தான்.

இருவரின் பார்வையும் நேர் கோட்டில் சந்தித்து மோதிக் கொண்டது.

தன் இதழ்களில் தவழ்ந்த ஒரு மர்ம புன்னகையுடன் "திருநாவுக்கரசர் அப்படி பாடவும் காரணம் இருக்கு மேடம்…" என்றவன்,

கண்கள் சுருங்க "தங்கத்தை உருக்கி எப்படி வேணாலும் வளைக்கிறது போல, அவனை அன்பால் உருக்கி வளைப்பது சுலபம். அந்த வரபிரசாதியை நம்மள்ள ஒருத்தனா நினைக்கிறதால தான், நமக்கு விலை உயர்வா தோணுற பொருட்கள் கொண்டு வர்ணிச்சி இருக்காங்க.." என கர்ப்பகிரஹத்தை நோக்கி கை நீட்டிக் கூறினான்.

அதில் கண்களில் அலட்சியத்தை காட்டி,

'எனக்கு கடவுள் மீது பயம் இல்லை. அவரை நம்புபவர்களின் மேல் தான் பயம் - சொன்னது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ்' என மிதப்பாக உரைத்தாள், மாதங்கி.

பதிலுக்கு,

'உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் - இதை சொன்னது எழுத்தாளர் ஜெயகாந்தன்'

என்றவனின் மந்திரப் புன்னகையில், மாதங்கியின் காதில் புகை வராதது ஒன்று தான் குறை.

அவள் தெய்வத்தை பற்றி பேசி இருந்தால் அமைதி காத்திருப்பான். அவள் தெய்வ நம்பிக்கையையே வசைபாடவும்,

அதை கண்டிக்க எண்ணி,

"எவ்ளோ துன்பம் வந்தாலும் நல்ல வழியில வாழ்ந்தா கடவுள் ஏதோ ஒரு ரூபத்துல உதவுவாருங்கற நம்பிக்கைல போராடுற ஒருத்தன், அந்த நம்பிக்கைனாலேயே வாழ்க்கைல உயர்ந்தா, அவனோட அந்த நம்பிக்கையை பொய்னு சொல்ல முடியுமா? அப்போ, அது போன்ற நம்பிக்கைக்கு துணை போன விவேகானந்தரும் வள்ளலாரும் முட்டாள்களா?" என ஏற்ற இறக்கத்துடன் வினவிய கேள்வியில் வழுக்கியது மாதங்கியின் மனம்.

"ஒரு சராசரி மனுஷனோட நல்ல சிந்தனைக்கு செயல் வடிவம் தருவது தான் பக்தி. என்ன நாம இருக்கற இந்த ஜெனரேஷன்ல வரட்டு பக்தியும் முரட்டு பகுத்தறிவும் கூடாது. அவ்ளோ தான்…"

என்றவனின் கைபேசி அப்போது பார்த்து

'ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும் ….

நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்….'


என இசைக்க, அதை உயிர்பித்து தனியாக ஒதுங்கினான்.

மேலும் அச்சிலைகளின் போலித் தன்மையை அதிகாரிகள் ஊர்ஜிதப்படுத்த, அந்த செய்தி காட்டுத் தீ போல ஊர் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

கோயில் அதிகாரிகள் குருக்கள், அங்கு வழக்கமாக வரும் பக்தர்கள் சிலர் என்று அனைவரிடமும் விசாரனை நடத்திய பிரகாஷ், புதிதாக யாராவது நபர்கள் அந்த கோயில் சிலை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வந்தனரா? சந்தேகிக்கும் வகையில் ஏதாவது நிகழ்வுகள் நடந்ததா என்று கேட்டறிந்தான்.

அதற்கு ஒரு பெரியவரும் சிலை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நடந்த தொடர் துர்மரணங்களை பற்றி உரைத்து, அது அம்மனின் செயல் என்று முடித்துக் கொண்டார்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பிரகாஷும், யார் மேலாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் தன்னை அழைத்துக் கூறும் படி தன் கைபேசி எண்ணை கோயில் சுவற்றில் ஒட்டிவிட்டு, கோயிலின் வெளிப்புற வாயிலை நோக்கி நடந்தான்.

**************

அந்நேரம் பார்த்து கோயிலின் நுழைவாயிலுக்குள் காலடி எடுத்து வைத்தான், ருத்ரேஷ்.

அவனைக் கண்ட காயத்ரி "ருத்ரேஷ் சார்…" என ஓடிச் சென்று பேசினாள்.

சிரிக்க சிரிக்க அவனோடு பேசிக் கொண்டிருந்த காயத்ரியையும், அந்தப் புதியவனையும் கண்ட பிரகாஷின் நடை நிதானப்பட்டது.

அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்த குமரவேலும், கோயில் வாயிலில் அமர்ந்திருக்கும் காவலாளி சத்யமூர்த்தியிடம் அவர்களை கை காட்டி விசாரித்தான்.

"அதுங்களா, நம்ம செத்து போன தனக்காரர் வேலாயுதத்தோட ரெண்டாவது மகனுங்க. அமெரிக்காவுல பெரிய டாக்டரா இருக்காருங்க…" என்றார்.

அதை கேட்ட பிரகாஷ் தன் பார்வையை அவர்கள் மேலிருந்து விலக்கிக் கொள்ளாமல்,

"ஆஹான், கூட நிக்கற பொண்ணு யாரு?" என்று கேட்க,

"அது நம்ம சாம்பசிவம் அய்யர் பொண்ணு காயத்ரிங்க…" என்றார் அவர்.

'காயத்ரி நைஸ் நேம்' என இதழ் பிரிக்காமல் முணுமுணுத்தவன், சடாரென அவர்களுக்கு முன்னர் நந்தியாக சென்று நின்றான். பக்கத்தில் நிழலாடவும் இருவரும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, அவனை திரும்பிப் பார்த்தனர்.

முதலில் சுதாரித்த ருத்ரேஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவன் சாக்கிச் சட்டையின் பெயர் அட்டையை படிக்க எத்தனிப்பதற்குள்,

"ஐபிஎஸ் ஆபிசர் பிரகாஷ், ஐடல் விங்க், மதுரை…" என கைகுலுக்கினான்.

பிரகாஷ் அம்மன் சிலை திருட்டை பற்றி சுருக்கமாக சொல்லச் சொல்ல பதட்டத்தை பூசிக் கொண்டது, ருத்ரேஷின் முகம்.

ஆனால், அதை கவனிக்க வேண்டியவனின் பார்வை என்னவோ பாவை அவளை சுற்றி வட்டமிட்டது.

அவன் பார்வையில் மான் குட்டியாக மிரண்ட காயத்ரி, ருத்ரேஷின் பின்னால் ஒளிந்துக் கொண்டாள்.

அவன் பார்வையில் இருந்து தப்பிக்க, மெதுவாக நகர்ந்து கோயில் வெளி வாசலுக்கு வந்தவள், அர்ச்சனை தட்டு வாங்கும் கடைக்கு அருகில் இருந்த செருப்பு ஸ்டேண்டில் தன் செருப்பை தேடிக் கொண்டிருந்தாள்.

சிலைகளை பற்றி அறிந்த மக்கள் பலர் கோயிலின் நிலவரம் தெரிந்துக் கொள்ள படை எடுக்க ஆரம்பித்திருந்தனர். சிலர் எப்போதும் போல தரிசனத்துக்காகவும் வந்தனர். எனவே கோயிலே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

மாதங்கிக்கு உள்ளுக்குள் 'எப்படியாவது காயத்ரி கூறிய பாழடைந்த கோயிலுக்குச் சென்று பார்த்தால் ஏதாவது துப்பு கிடைக்கக் கூடும்' என்று உள்ளுணர்வு கூறிக் கொண்டே இருந்தது.

அவளைக் கண்களால் தேடிக் களைத்தவள், தூரத்தில் காயத்ரி கோயில் வளாகத்தை தாண்டி வெளியே செல்வது தெரிய, அவளை உரக்க அழைத்துக் கொண்டே வந்தாள்.

அவளது குரல் காயத்ரியை எட்டியதோ, இல்லையோ? பிரகாஷிடம் முதுகு காட்டி பேசிக் கொண்டிருந்த ருத்ரேஷை திரும்பிப் பார்க்க வைத்தது.

அவளை எதிர்பார்க்காமல் சந்தித்ததில் இனிமையாக அதிர்ந்தான், ருத்ரேஷ். அவன் முகபாவங்களை கண்ணுற்ற பிரகாஷும்,

"டாக்டர் சார்க்கு, இங்க கேர்ள் பிரண்ட்ஸ் அதிகம் போல…" கேலி போல கூறிச் சிரித்தான் .

அதில் "நோ நோ, ஷி இஸ் ஜஸ்ட் அன் ஆக்வின்ட்டென்ஸ் (acquaintance - சாதாரண அறிமுகம்). பிளைட்ல ஒரு வாட்டி மீட் பண்ணோம். அவ்ளோ தான்…" என்று வெண்பற்கள் மின்ன இயம்பும் ருத்ரேஷின் பார்வை மாதங்கியையே வட்டமிட்டது.

"ஓகே! தென் டேக் கேர் மிஸ்டர் ருத்ரேஷ். ஏதாச்சுனா கால் பண்ணுங்க…" என தன் கைபேசி எண்ணைத் தந்த பிரகாஷிடம், "நாம இதுக்கு முன்னாடி சந்திச்சிருக்கமா?" என கேட்டான் ருத்ரேஷ்.

சற்று தூரத்தில் நின்ற மாதங்கியை ஒருமுறை கண்களால் கூர்ந்த பிரகாஷூம், "இல்லை. இது தான் முதல்முறை. ஆனா இனி அடிக்கடி சந்திப்போம்னு நினைக்கிறேன்." என பூடகமாக சொல்லி விட்டு, ஜீப் நோக்கி விரைந்தான். பிரகாஷ் சென்ற அடுத்த நிமிடம் மாதங்கி நோக்கி வந்தான் ருத்ரேஷ்

தன் பின்னால் இருந்து கேட்ட "மேடம் கோயில்ல என்ன பண்றீங்க. ஒருவேளை ஆத்திகவாதியா மாறீட்டீங்களோ?" என்ற குரலில் திரும்பிய மாதங்கியின் கயல்கள், ருத்ரேஷைக் கண்டு வட்டமாக விரிந்தது.

"என்ன டாக்டர் சார் இந்த பக்கம்?" என்றவளது கேள்வியும் முக பாவனையுமே சொன்னது, அவள் அவனை இங்கு எதிர் பார்க்கவில்லை என்று.

கைகளை தன் பரந்த மார்புக்குக்குறுக்காகக் கட்டியவன் தலை சாய்த்து,

"அந்தக் கேள்வியை நான் கேட்கனும். நீங்க என்ன மேடம் பண்றீங்க, எங்க ஊர்ல? எதுக்கு எங்க ஊர் பொண்ணை வேற கூவி கூவி கூப்பிடுறீங்க? அந்தப் பொண்ணையும் உங்களைப் போல மாத்திடாதீங்க…"

என்றவனின் பேச்சில் ஒரு சிறு குத்தல் இருந்ததோ? அவன் பேச்சின் பின் பகுதியை ஒதுக்கியவள், ஒரு அழகிய புன்னகையை பூத்து, காலையில் இருந்து நடந்து முடிந்த நிகழ்வுகளை விரிவாக விளக்கினாள்.

சிலைகள் கண்டெடுக்கப்பட்ட அந்த பாழடைந்த கோயிலுக்குச் சென்றால், கண்டிப்பாக தொலைந்து போன சிலைகள் பற்றி ஏதாவது தெரிய வரலாம் என்றும், அதற்கு தான் காயத்ரியின் துணை நாடியதாகக் கூறி முடித்தாள்.

அதைக் கேட்டவன் பாராட்டுதலாக "அடேங்கப்பா, பெரிய ஆள் தான் நீங்க…" என மனமாரச் சொன்னான்.

ஏனோ அந்த வார்த்தைகளை பிரகாஷ்ஷின் "பெரிய ஷர்லாக் ஹோல்ம்ஸ் தான் நீங்க.." என்றதோடு ஒப்பிட்டுப் பார்த்து படபடத்த மனதை, பத்திரமாக மடித்து வைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் யோசித்த ருத்ரேஷ், சுரீர் என்ற உணர்வு மனதை தாக்க.. பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை, தானே அந்த கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறவும்,

வேகமாக அவனுடன் புல்லட் நிறுத்தம் நோக்கி நடந்தாள், ராஜமாதங்கி.

அவ்விருவரும் புல்லட்டில் ஏறிப் பறந்ததை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள், செருப்பு ஸ்டேண்ட் அருகில் நின்ற காயத்ரி.

அப்போது அவள் செவிகளை நிறைத்தது "காத்திருந்தவன் பொண்டாட்டியை, நேத்து வந்தவன் கொண்டு போனானாம்…" என்ற பிரகாஷின் வில்லங்கமான வார்த்தைகள்.

ருத்ரேஷின் புல்லட் சென்ற திக்கையே உறுத்தபடி நின்ற ஆறடி ஆண் மகனை சடாரென்று திரும்பிப் பார்த்தவள், முதலில் திகைத்து பிறகு முறைத்தபடி கலவரமடைந்தாள்.

அவள் முறைப்பை எல்லாம் தூசு போலத் தட்டியவன்,

"என்ன பச்சைக் கிளி, உன் ஆளு அந்த மயிலோட ஓடிட்டானா…" என குரலில் நக்கலும் நையாண்டியும் சடுகுடு விளையாடக் கேட்டான்.

அவன் சொற்களால் மூண்ட எரிச்சலில் முகத்தை வெட்டிய பெண்ணின் மனம் தீயாய் காய்ந்தது. அவள் முகத் திருப்பலில் காது ஜிமிக்கிகளும் சேர்ந்தே ஆட, அதை சுண்டிவிட்டு

"என்கிட்ட எல்லாம் பேச மாட்டியோ? சீக்கிரம் உன்னை வாய் திறக்க வைக்கிறேன், காயூ பேபி…" என்று கூறிச் சென்றான் காளை.

அவன் பார்வை மொழியிலும் செயலிலும் திக்பிரம்மை பிடித்தது போல நின்றாள், காயத்ரி.

**********

ஜீப்பில் ஏறிய பிரகாஷ் தன் கைபேசியில் என்றோ பதிவாக்கிய சில புகைப்படங்களையே மென்புன்னகையுடன் பார்த்திருந்தான்.

ஓரக் கண்ணில் அவனை நோட்டம் விட்டவர் 'கேஸை விசாரிக்கற வேலையத் தவிர, எல்லா வேலையும் பாத்தாச்சு' என்று மெல்லிய குரலில் தனக்குத் தானே முனகினார்.

பிரகாஷும் தன் கைபேசியில் இருந்து கண்ணை அகற்றாமல் "இங்க நடந்த விஷயம் ஏதாச்சு, ஐஜி காதுக்கு போச்சு. நாளைக்கு கேஸை விசாரிக்க நான் இருப்பேன். ஆனா நீங்க இருக்க மாட்டீங்க குமாரு.." என விளையாட்டாகக் கூறினான்.

அதில் பதறி "அய்யோ சார், நான் எதுவும் பார்க்கலை. எனக்கு எதுவும் கேட்கவும் இல்லை…" என்ற குமரவேலின் பேச்சில், பலமாகச் சிரித்தான் அந்தக் குறும்பன்.

ஒரு குலுங்கலுடன் ஜீப்பை கிளப்பிய குமரவேல் 'இவன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடிய மாட்டேனுதே' என மனதில் அரற்றினார்.

பின்னர் இன்று மாதங்கிக்கு தெய்வ நம்பிக்கையை பற்றி பிரசங்கம் செய்தவன், இறுதியில் பக்தியையும் பகுத்தறிவை பற்றிக் கூறிய கருத்தில் குழம்பினார், குமரவேல்.

"பக்தியும் இறை நம்பிக்கையும் வேற வேறயா சார்.." என அவனிடமே கேள்வி எழுப்ப,

ஒரு வெடிச் சிரிப்பை உதிர்த்தவன்,

"கடவுளை சூட்சம உருவமா சிலர் பார்க்கறாங்க, சிலர் எங்கும் நிறை சக்தினு சொல்றாங்க, இன்னும் சிலர் அறநெறி கோட்பாடா கருதுறாங்க. எப்படி கும்பிட்டாலும் அந்த பக்திங்கற நதி போய் சேருகின்ற இடம் கடவுள் நம்பிக்கைங்கற கடல்ல தான்யா. அவ்ளோ தான். இதை தான் எல்லா மதமும் அடிப்படையாச் சொல்லுது…" என்றவன்,

தொடர்ந்து, "ஆனா பக்திங்கற பேருல ஏமாத்து சித்தார்த்தங்களை பரப்புறதும், அருள் வாங்க பெண் பிள்ளைங்களை தனியா கூப்பிடுறதையும் தான், வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எடுத்து எறியனும்…" என்றவனின் பேச்சில் உஷ்ணம் தகித்தது.

வெகு நாட்களாக இவன் தேவாலயம் மசூதி கோயில் என்று எல்லா வழிபாட்டு இடங்களுக்கும் செல்வதை ஆச்சரியமாகப் பார்த்திருந்த அவருக்கு, அவன் இறை நம்பிக்கையையும் பக்தியையும் ஒரு எல்லைக்குள் அடைக்க விரும்பவில்லை என்பது இப்போது புலனானது.

மேலும், "நல்லது கெட்டதை பிரிச்சு பார்த்து அதுபடி நடந்துக்கறது தான் பகுத்தறிவு. அப்படி நல்ல வழில வாழ ஒருத்தன் தேர்ந்தெடுக்குற இறை நம்பிக்கையை ஆதரிக்காட்டியும் அதை அவதூறு பேசாம இருக்கலாம் இல்லயா? என்னை பொறுத்தவரை, அதான்யா உண்மையான பகுத்தறிவு

அடுத்தவன் நம்பிக்கை நமக்கு ஒத்து வரலயா, முரட்டுத் தனமா அசிங்கமா வசைபாடி அவங்க மனசை காயப்படுத்தி நோகடிக்காம இருந்தாலே போதும்… "

என்றவனின் கோட்பாட்டை உணர்ந்தவருக்கு அவன் மேலான மதிப்பு இரட்டிப்பானது.

நம்பிக்கை, ஆசை, ஆர்வம், துடிப்பு, தவிப்பு என இவை அனைத்தும் காலசுழற்சிக்கு ஏற்ப மனிதனுக்கு மனிதன் மாறுபடும். இதை உணரும் பக்குவம் இனிமேலாவது வருமா? இல்லை, இம்முறையும் வாழ்வு ஏக்கத்தில் முடியுமா?

சிலை மீண்டு(ம்) வரும்…
IMG-20220725-WA0006.jpg
picture courtesy : umauma and Monisha
 

Anjana Subi

Active member
மீண்டு(ம்) வந்த சிலையே!
IMG-20220711-WA0018.jpg
சிலை - 8


அந்தச் சிதிலமடைந்த கண்ணகி அம்மன் கோயிலின் முன்பு நின்றது, ருத்ரேஷின் புல்லட். அக்கோயிலைக் கண்ட ஷணத்தில், யாரோ மாதங்கியின் உயிரை கொத்தோடு உருவி எடுப்பது போன்று ஒரு உணர்வு.

நெஞ்சம் 'தடக் தடக்' என அடித்துக் கொள்ள,

"இறங்குங்க மாதங்கி. இதான் அந்த கண்ணகி அம்மன் கோயில்…" என்ற ருத்ரேஷின் பேச்சில், அவள் உணர்வுகள் காட்டாற்று வெள்ளமாய் ஆர்ப்பரித்தது. தன் நெஞ்சை அழுந்த நீவியபடி, தனக்குள் ஓங்கரித்த உணர்வுகளை ஆராய நேரமில்லாது, அக்கோயிலுக்குள் நுழைந்தாள், மாதங்கி.

செருப்புக் காலுடன் உள்ளே செல்ல எத்தனித்த மாதங்கி, "உள்ளே புதர் மண்டி இருக்கு. பூச்சி பொட்டு ஏதாச்சு கடிச்சிட்டா, நான் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை…" என ருத்ரேஷிடம் கூறிவிட்டு முன்னேறினாள்.

அவள் வார்த்தைகளில் சத்தமாகச் சிரித்த ருத்ரேஷ், "ஏன் மாதங்கி உயிர் மேல அவ்ளோ ஆசையா?" எனக் கேட்டபடி தன் செருப்பை ஓரமாகக் கழற்றி விட்டுவிட்டு கோயிலுக்குள் காலெடுத்து வைத்தான்.

அதில் மாதங்கியின் நடை தடைபட, "என்றும் நினைவில் கொள்! மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது - கார்ல் மார்க்கஸின் வார்த்தைகள் இது" என அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளின் வார்த்தைகள், அவனுக்குள் ஒரு புது உத்வேகத்தை உண்டாக்கி இருந்தது.

உள்ளே சென்றவர்களின் காலடிச் சத்தத்தில், ஓணான்களும் பெருச்சாளிகளும் திசைக்கு ஒரு பக்கம் பாய்ந்து ஓடின. ஆங்காங்கே புதர் மண்டி, பாசி படிந்த சுவர்களையும் பார்த்தாலே தெரியும், அது விஷ ஜீவராசிகள் பல தாராளமாக புழங்கிக் கொண்டிருக்கும் வாசஸ்தலம் என்று.

அதை அலட்சியப்படுத்தியபடி, கோயிலைச் சுற்றி மெல்ல நடக்க ஆரம்பித்த ருத்ரேஷின் கண்களில், ஆங்காங்கே உரிந்து கிடந்த கருநாகத்தின் சட்டை, ஒரு மாதிரியான ஒவ்வாமையை மனதில் விதைத்தது.

உடன் நடந்தபடி ருத்ரேஷின் முக உணர்வுகளை அவதானித்த மாதங்கியும், பார்வையால் அவனை எச்சரித்தபடி முன்னேறிச் சென்றாள்.

அந்தக் கோயிலைச் சுற்றி வந்தவளின் கண்கள், அந்த பச்சை படிந்த குளத்தை ஒட்டி அமைந்த மண்டபத்தின் மீது நிலைத்தது.

அப்போது அவள் காதில் யாரோ "மீனாட்சி தேவி" என்று அழைப்பது போல இருக்க, விசுக்கென்று திரும்பிப் பார்த்தாள்.

அங்கு அந்த தல விருட்சத்துக்குக் கீழ், ஒரு பன்னிரண்டு வயது சிறுமி ஒருத்தி, பட்டுப்பாவாடை சட்டை அணிந்து, ஒற்றை கால் சிலம்புடன், தலை விரிக் கோலமாகக் காட்சி அளித்தாள்.

அச்சிறுமியின் அஞ்சன விழிகளில் கண்ட பிரகாசத்தில், தன்னை தன் சுற்றத்தை என அனைத்தையும் மறந்தாள், ராஜமாதங்கி.

அச்சிறுமியோ "வா… மீனாட்சி! வா…!" என தன் ஒளி பொருந்திய கண்களால் தன் திருகரங்கள் நீட்டி அவளை அழைத்தாள்.

அச்சிறுமி தன் செந்தூரப் பாதங்களால் வழிநடத்த, அந்த குளக்கறை மண்டபத்தை அடைந்தாள், மாதங்கி. அந்த மண்டபத்துக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத் திருமேனியையே கண்ட மாதங்கி, தானாக காலணிகளை கழற்றி ஒரு ஓரமாக விட்டுவிட்டு அருகே சென்றாள்.

அப்போது அவள் சட்டையைப் பிடித்து இழுத்து,

"என்னை எப்போது மீண்டும் அழைத்து வருவாய் மீனாட்சி?"

எனக் கேட்ட சிறுமி கலகலத்துச் சிரித்தாள்.

அச்சிரிப்பு அந்த நிசப்தமான சூழலில் ஓங்கி ஒலித்தது. உணர்வற்ற சிலையாய் மாதங்கி நின்றிருக்கும் போதே, அந்த சிறுமி திடீரென்று எங்கோ ஓடி மறைந்தாள்.

நடப்பை உணர்ந்து மீண்டு வர முயன்று "ஏய் பாப்பா! நில்லு…" என குரல் எழுப்ப முனைந்தாள், மாதங்கி.

அப்போது அவள் காதில் "ங்ங்ங்ங்ங்ங்" என்ற சப்த அலைகள் பேரிறைச்சலாகப் பிரவாகம் எடுத்துக் கேட்டது.

அந்த ஒலி மாயை, அவள் மூளையை ஆட்கொண்டு மெல்ல மெல்ல அவள் மனதை சுண்டி இழுத்தது.

இரண்டு கரங்களால் காதை பொத்தி, மண்டியிட்டு அமர்ந்த மாதங்கியின் காதில், ஒரு கம்பீரமான பெண் குரல்,

"ராம தேவ சித்தரே! உம் வாக்கை சிவன் வாக்காக ஏற்று யாம் இப்பத்தினிக்கு கோயில் எழுப்பி ஆயிற்று. ஆனால் காரியம் முடியும் தருவாயில், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பீடிக்கப்பட்டுள்ளோம்.

இச்சூழ்நிலை கடந்து யாம் மீண்டும் இவ்வறப் பணியை தொடரும் வரை, நீரும் இந்த ஈசனுமே எங்கள் புதையலுக்குக் காவல். இது அந்த திருஆலவாய் மீனாளின் மீதும், சொக்கனின் மீதும் ஆணை…"

என மீண்டும் மீண்டும் அக்குரல் அவளை விடாமல் துரத்த, அவளது எண்ண அலைகள் அந்தக் குரலின் வசீகரத்தில் சிக்கித் தவித்தது.

கண்களில் கரகரவென கண்ணீர் வழிய அமர்ந்திருந்த அவளின் காதுகளில், மெல்ல அக்குரல் கேட்பது தேய்ந்து ஓய்ந்து, "ஙொய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்…." என்ற ஒலி ஊடுருவ, அப்படியே மயங்கிச் சரிந்தாள், மாதங்கி.

**********

அதே நேரம் வௌவால் எச்சத்தின் நெடியில் முகம் சுளிக்க, தன் போக்கில், கோயிலை வலம் வந்த ருத்ரேஷின் பார்வை வளையத்தில் விழுந்தது, அந்த இடம்.

ஒரு இடத்தில் மட்டும் குவியலாகக் காய்ந்த சருகுகளும் முற்களும் கொண்டு மூடப்பட்டிருக்க, அதை மெல்ல தன் காலால் லேசாக விலக்க ஆரம்பித்தான், ருத்ரேஷ்.

கோயில் சுவரில் காய்ந்த சருகுகளும் முற்களும் கொண்டு மூடப்பட்ட ஒரு துவாரம் தெரிந்தது. கண்ணிமைக்காமல் அதையே கூர்ந்தவனின் நா உலர்ந்து போனது.

உணர்வுகளின் உந்துதலில் தன் காலால் வேகமாக அந்த முற்புதரை தள்ளினான். அப்போது அந்தப் பொந்தில் இருந்து ஒரு கருநாகம் வெளிப்பட்டு, அவன் கால் மேல் ஊர்ந்து, அவசரமாக எங்கோ சென்று மறைந்தது.

அதில் விலுக்கென்று தன் காலை இழுத்துக் கொண்ட ருத்ரேஷுக்கு மூச்சுமுட்ட ஆரம்பித்தது.

ஒரு நிமிடம் நிதானித்து ஆழ்ந்த மூச்சுகள் எடுத்துக் கொண்டவன், பக்கத்தில் இருந்த ஒரு மரக்கிளையை உடைத்து, அதை அந்த துவாரத்தின் வழியாக உள்ளே விட்டான்.

அது எதிலோ சிக்கிக் கொண்டு வருவேனா என்று போக்கு காட்டியது. சற்று யோசித்தவன், துணிச்சலை வர வைத்துக் கொண்டு, அந்தப் பொந்துக்குள் நேராகக் கையை விட்டான்.

அப்போது அவன் கைக்கு ஏதோ ஒரு சாக்குமூட்டை அகப்பட, அதை கஷ்டப்பட்டு வெளியே எடுத்தான். தன் கரங்கள் நடுங்க, அந்த மூட்டையைப் பிரித்தவனைப் பார்த்துச் சிரித்தது, ஆனந்த கூத்தப் பெருமானின் செப்புத் திருமேனி.

தன் கண்களை தானே நம்பாதவன் போல, அச்சிலையையே அதிர்ச்சியுடன் பார்த்தவன்,

"மாதங்கி மாதங்கி" என்று சத்தமாகக் கத்தினான். இச்சிலை எப்படி இங்கே வந்தது என்ற கேள்வி, அவன் மனதை அறுத்தது.

உணர்ச்சிகளின் எழுச்சிகளில் அமிழ்ந்து, நினைவு தப்பி மயங்கிக் கிடந்தவளுக்கு, யாரோ கிணறுக்குள் இருந்து தன்னை அழைப்பது போன்ற உணர்வு உண்டானது.

ஆனால் அவளால் அதற்கு எதிர்வினையாற்ற இயலவில்லை. அவளைத் தேடிக் கொண்டு வந்த ருத்ரேஷ், மாதங்கி பேச்சு மூச்சின்றி கிடப்பதைக் கண்டு ஓடி வந்தான்.

அருகில் இருந்த குளத்தில் இருந்து சிறிது தண்ணீர் எடுத்து வந்து, அவள் முகத்தில் தெளித்து எழுப்பினான்.

முகத்தில் பரவிய ஜில்லிப்பிலும், "மாதங்கி ஆர் யூ ஆல்ரைட்?" எனக் கேட்டு கன்னத்தை தட்டியவனின் தொடுகையிலும் சுயநினைவுக்கு வந்த மாதங்கி,

"அந்தப் பொண்ணு எங்க?" என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கேட்டாள்.

"எந்தப் பொண்ணு? ஹேய்! என்ன உளறுர?" என கேட்டவனை மலங்க மலங்கப் பார்த்து வைத்தாள்.

தனக்குக் கேட்ட குரலையும், அந்த சிறுமி 'மீனாட்சி' என்று அழைத்ததும் கலங்கலாக நினைவில் வந்து தலை கிறுகிறுத்தது.

தன் நினைவுகளில் விரிந்த அக்காட்சி, வெறும் பிரம்மையா உண்மையா என்று புரியாமல் குழம்பி நின்றாள் பாவை.

அப்போது காற்றில் திடீரென்று திருநீற்றின் வாசனை மிதந்து வந்து மூக்கைத் துளைக்கவும், எதேச்சையாக அவன் பார்வை அந்த சிவலிங்கத்தின் மீது நிலைகுத்தி நின்றது.

ஒரு ராஜநாகம் லிங்கத்தின் மீது படமெடுத்து நிற்பதைக் கண்டவன், அவசரமாக மாதங்கியை அங்கிருந்து கோயிலின் முன் பக்கத்துக்கு அழைத்து வந்தான்.

தன் எண்ணங்களில் உழன்றவளிடம், தான் கண்டெடுத்த நடராஜர் சிலையைக் காட்டவும், அதைக் கண்டவளின் கண்களில் பேரதிர்வு. இது எப்படி இங்கு வந்தது என்று இருவரும் பேசியபடி படிகளில் அமர்ந்தனர்.

ஒரு சேர அவர்களின் பார்வை வெறுமையாய் மூர்த்தம் இல்லாமல் காட்சி தந்த கர்ப்பகிரகத்தைக் கண்டு சொல்லொனா துக்கம் அடைந்தது.

இக்கோயிலை யாரோ தங்கள் இழி செயல்களுக்கான இடமாகப் பயன்படுத்துவது, இருவருக்கும் நன்றாகவே புரிந்தது.

கோயிலின் சரித்திரத்தை அறிந்து கொண்டால் இத்தலத்தை சீரமைத்து அதன் அவப்பெயரை களைவது எளிது என்று கூறினான், ருத்ரேஷ்.

"அது அவ்ளோ சுலபம் இல்ல, ருத்ரேஷ். கோயில் வரலாறு அடங்கிய மூலச் செப்பேடையும், சிலையைத் திருடுனவங்க கைபற்றி இருக்கணும்…" எனச் சொன்னவளின் மனதில், இன்று போலிச்சிலைகளுடன் இருந்த செப்பேடுகளில் இத்தலத்தை பற்றிய விபரம் எதுவும் இல்லாதது நினைவில் ஆடியது.

அவள் வாதத்தை ஆமோதித்த ருத்ரேஷூம், "மூர்த்தங்களை திருடினவங்க கண்டிப்பா அதோட தொன்மையும் வரலாறும் தெரிஞ்சு தான் களவாடி இருக்காங்க…" என்று உறுதியாகச் சொன்னான்.

அவன் கூற்றை ஏற்ற மங்கைக்கு, பொறி தட்டியது. ஆறு மாதத்துக்கு முன் இக்கோயிலை புனருதானம் செய்யும் ஆரம்பகட்ட பணியின் போது, மைசூர் நிறுவனம் இக்கோயில் கல்வெட்டுகளை நகல் எடுத்ததாக, காலையில் கதிரேசன் தன்னிடம் கூறியது நினைவிலாட, அந்நகல்களை கைபற்றினால், இக்கோயிலின் சரித்திரத்தை அறிந்துக் கொள்ளலாம் என்று கூறினாள்.

அதைக் கேட்ட ருத்ரேஷ், மனதில் சில நிகழ்வுகளை அலசி ஆராய்ந்தான். ஒரு வழியாக கோயில் புனருதானம் செய்யும் வேலையில் ஈடுபட்டவர்கள் யாரேனும் தான், இதைச் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவனின் மனம் கருக்கென்றிருந்தது.

காரணம், ஏறத்தாள அந்த நேரத்தை ஒட்டியே, அவனது தந்தை மற்றும் குருக்களின் மரணமும் சம்பவித்திருந்தது.

அந்நினைவில், தரையில் விழுந்த மீனாக தத்தளித்தவன், ஒரு முடிவுக்கு வர இயலாமல் மனம் குமைந்தான்.

அவன் மனசஞ்சலம் பற்றி அறியாத காரிகையும், "கல்வெட்டு நகல் சம்பந்தமா நான் சர்வேஷ் சார் கிட்ட உதவி கேட்டுப் பார்க்கறேன்…" என அடுத்தடுத்த காரியங்களை திட்டமிட்டாள்.

அவளிடம் ஒரு தலையசைப்பை தந்த ருத்ரேஷும், தன்னிடம் இருந்த பிரகாஷின் எண்ணுக்கு அழைத்து, சுருக்கமாக விபரம் கூறினான்.

விராடிபத்து கிராம எல்லையை தாண்டி சென்று கொண்டிருந்த பிரகாஷூம், விவரம் அறிந்த முக்கால் மணி நேரத்தில் அங்கு ஆஜரானான், அந்தக் காவலன்.

அவனிடம் நடந்த அனைத்தையும் கூறி முடித்த ருத்ரேஷையும் மாதங்கியையும் மாறி மாறி பார்த்த பிரகாஷின் கண்கள், இறுதியாக மாதங்கி கையில் இருந்த நடராஜர் சிலையின் மீது படிந்தது.

குமரவேலிடம் எதையோ கிசுகிசுத்த அவனின்சந்தேகப் பார்வை மாதங்கியை உறுத்த,

"ஏன் சார் திருடுனவனை விட்டுட்டு, கண்டுபுடிச்சு குடுத்த எங்களை இப்படி சந்தேகமா பார்க்கறீங்க?" என எரிச்சலுற்றாள்.

"ஆனா, அதெப்படி உங்க கைக்கே காணாமப் போற சிலை எல்லாம் கிடைக்குது? உங்கள எப்படி நம்புறது? ஏதாவது ப்ரூஃப் இருக்கா?" என

தன் தாடையை அழுந்த வருடியவனின் இதழ்கள் கேலியாக வளைந்தது.

"ஆஹ் எவ்வளவோ நல்ல ஆபிஸர்ஸ் இருக்கும் போது, உங்களை இந்த கேஸுக்கு போட்டாங்கல்ல. அது போல தான் இதுவும். இல்லாத கடவுள் மேலே வைக்கிற நம்பிக்கைல பாதியை, மனுஷன் மேல வைக்கலாம் தப்பில்லை…"

என சிடுசிடுத்தவளுடன், இன்னும் கொஞ்சம் மோதிப் பார்க்க ஆசை கிளர்ந்தது.

அட்டகாசமாகச் சிரித்தவன், "விஞ்ஞானத்தை நம்பிட்டு, கடவுள் இருக்காரானு தெரிஞ்சுக்க நீங்க ப்ரூஃப் கேட்கலாம். நான் உங்களை நம்ப ப்ரூஃப் கேட்டது தான் தப்பு. இல்லையா?" என்றவனின் சாதுர்யமான கேள்வியில், விக்கித்து நின்றாள் மாதங்கி.

"சுழற்சி இல்லைனா, பூமில மாற்றமில்லைனு சொல்லுது உங்க விஞ்ஞானம். மாற்றமில்லைனா சுழற்சி இல்லைங்கறது தான் மெய்ஞானம். கொடி அசைந்ததால் காற்று வந்ததா? இல்ல, காற்று வந்ததால் கொடி அசைந்ததானு நிர்ணயிக்க முடியுமா? இது தான் பிரபஞ்ச நியதி…( cosmic order )

இந்த உலகத்துல நடக்குற எல்லா விஷயமும் ஒரு நியதிக்கு உட்பட்டு, ஒன்னை ஒன்னு சார்ந்து இருக்குங்கறது தான் நம்பிக்கை. அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியங்க. ஆனா அதை யார் கிட்ட வைக்கனுங்கற புரிதல் அதை விட முக்கியம்…" என்று மூடுமந்திரமாக உரைத்தான்.

அப்போது மாறி மாறி வார்த்தையாடிய இருவரையும் ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான், ருத்ரேஷ்.

பிரகாஷின் ஆணைக்கு இணங்க யாருடனோ பேசிய குமரவேல், அந்த நடராஜர் சிலையை புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப்பில் யாருக்கோ அனுப்பி வைத்தார்.

சில நிமிடங்களில் வரிசையாக அழைப்புகள் வர, அதை ஏற்றவர் இது பக்கத்து ஊர் சிவன் கோயிலில் காணாமல் போன நடராஜர் சிலை தான் என்று ஊர்ஜிதப்படுத்தினார்.

அதைக் கேட்ட ருத்ரேஷுக்கு "சிவன் சொத்து குல நாசம்வே…" என்று தன் அண்ணனை எச்சரித்த தாயின் வார்த்தைகள் நினைவிலாட, ஒரு வித பயம் நெஞ்சில் ஊஞ்சலாடியது.

விஷயம் தெரிந்ததில் அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க,

மாதங்கியோ "தொலைஞ்சு போன சிவன் கோயில் நடராஜர் சிலை இங்க இருக்குன்னா? இந்த கண்ணகி அம்மன் கோயில் உண்மையான சிலைகள் எல்லாம் எங்க போச்சு? யார் எடுத்திருப்பா?" என்று தனக்குத் தானே பேசுவது போல கேள்வி எழுப்பினாள்.

அதில் ஆண்கள் மூவரும் சிந்தைனைவயப்பட்டனர்.

*************

இவ்விஷயம் ஊர் முழுக்க பரவவும், ருத்ரேஷும் மாதங்கியும் ஹீரோ ஹீரோயின் போல பார்க்கப்பட்டனர். சந்தேகத்தின் பெயரில் இடிந்த கண்ணகி அம்மன் கோயிலுக்கு முன்னால், இரண்டு காவல் அதிகாரிகளை கண்காணிப்புக்கு நியமித்திருந்தான், பிரகாஷ்.

எங்கு போனாலும் இதே பேச்சாக இருந்தது. அன்று வீட்டிற்கு வந்த ருத்ரேஷை எதிர் கொண்ட விஜயபாண்டியன், வேட்டியை மடித்துக் கட்டியபடி,

"இந்தாரு லீவுக்கு வந்தமா, மூணு மாசம் இருந்தமானு இருக்கனும். தேவை இல்லாத ஒரண்டை இழுத்துட்டு வந்த, தொலைச்சிடுவேன் தொலைச்சு…!" என மிரட்டிவிட்டுச் சென்றான்.

அவன் ருத்ரேஷிடம் கத்தியதைக் கேட்டு ஓடிவந்த அஞ்சுகமும்,

"பாவ புண்ணியத்துக்கு எல்லாம் பயப்படுற ஆளில்ல அவன். சொன்னாக் கேளு, அப்பூ. உனக்கெதுக்கு இந்த வீண் வம்பு…" என்று கண்கலங்கினார்.

தன்னை கடிந்து கொண்ட தாயை தீர்க்கமாகப் பார்த்து, "அப்போ, அண்ணன் தான் சாமி சிலையை கடத்திச்சா?" என்றவனின் நெத்தியடி கேள்வியில் துணுக்குற்றார், அஞ்சுகம்.

இனியும் விஷயத்தை ருத்ரேஷிடம் மறைப்பதில் எந்த அர்த்தமுமில்லை என உணர்ந்தவர்,மகனிடம் அவன் தந்தை மற்றும் அண்ணனின் ஈனச் செயல்களையும் அதன் எதிர்வினையையும் தன் துக்கத்தை விழுங்கிக் கொண்டு கூற ஆரம்பித்தார்.

************

ருத்ரேஷின் தந்தை வேலாயுதமும் அண்ணன் விஜயபாண்டியனும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில கோயில்களில் சிதிலமடைந்த பழைய தேர்களை, கோயில் அதிகாரிகளின் உதவியுடன் அடிமாட்டு விலைக்கு ஏலம் எடுத்து, அதிலுள்ள வேலைபாடு மிக்க மரச்சிற்பங்களை தனியாகப் பிரித்தெடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து லட்சகளை ஈட்டியதையும், அது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கோயில் சிலைகளை களவாடி விற்பதில் வந்து நின்றதையும் இயம்பினார்.

இப்படி திருடிய சிலைகளை கைமாற்றும் வரை பதுக்க, அவர்கள் பயன்படுத்திய மறைவிடம் தான் சிதிலமடைந்த கண்ணகி அம்மன் கோயில். அச்சமயம் அறநிலையத்துறையே அக்கோயிலை புனருதானம் செய்ய முன் வரவும், இவர்கள் அடக்கி வாசித்தனர்.

கோயிலின் ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பித்திருக்க, அக்கோயிலின் பின்பக்கம் பூமியைத் தோண்டும் போது ‘டங் டங்’ என்ற சத்தம் எழுப்பவும், அனைவரும் உஷார் ஆகினர்.

அப்போது அதிகாரிகள் மேற்பார்வையில் வெளிப்பட்டது சில ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மற்றும் கண்ணகி அம்மனின் கற்சிலை.

அச்சமயம் மைசூரு கல்வெட்டியல் பிரிவில் இருந்து அக்கோயிலை படி எடுத்தவர்களும், இறுதியில் அது கண்ணகி மதுரையை எரித்து விட்டு நடந்து செல்லும் போது அனைத்தும் எரிந்துவிட்டதா என்று திரும்பிப் பார்த்த இடம் என ஒப்புக் கொண்டனர். எனவே, அது கண்ணகி அம்மனின் உருவச்சிலை என்று முடிவானது.

கோயில் கட்டி முடியும் வரை அச்சிலைகளை அவ்வூரில் இருந்த சிவன் கோயிலில் வைக்க முடிவு செய்தனர், ஊர் மக்கள்.

இதை அனைத்தையும் கவனித்த வேலாயுதமும் விஜயபாண்டியனும் அச்சிலைகளை கைப்பற்றி விட்டு, அதற்குப் பதிலாக போலிச் சிலைகளையும் செப்பேடுகளையும் அப்போதைய குருக்கள் வைத்தியநாதன் உதவியுடன் மாற்றி வைத்துவிட்டனர்.

இதற்கிடையில் அரசுத்துறையில் நடந்த குழப்பங்களின் காரணமாக கோயில் பணி தாமதமாகி, சில காலங்களில் நின்றும் போனது.

எனவே கண்ணகி அம்மனின் போலி கற்சிலையும் மற்ற ஐம்பொன் மூர்த்தங்களும், செப்பேடுகளும் அந்த ஊரின் சிவன் கோயிலில் தஞ்சம் புகுந்தன.

கண்ணகி அம்மன் கடத்தப்பட்ட நாற்பத்தைந்தாம் நாள் மாலை, அலறி அடித்துக் கொண்டு வந்தார் சிலையை கடத்த உதவிய குருக்கள் வைத்தியநாதன்.

அவருக்கு கடந்த ஒரு வாரமாக உடலில் ஏற்பட்ட தோள் எரிச்சல், கடைசியில் உடல் முழுவதும் பற்றி எரியும் அளவு முத்தியது.

வேலாயுதத்திடம் "யாரோ மிளகாயை அரச்சு பூசின மாதிரி காந்தரது நேக்கு…" என புலம்பினார்.

அவரோ "ஏன்யா கத்துற? அதெல்லாம் உன் மனபிராந்தி. பேசாம ஒரு குவாட்டர் வாங்கியத் தரேன், குடிச்சிட்டு படு. சரி ஆகிடும்…" என்று அலட்டிக் கொள்ளாமல் பரிகசித்தார்.

வைத்தியர்களாலும் காரணம் கூறமுடியாத நிலையில், இது அந்த கண்ணகி அம்மனின் தண்டனை என்று ஊகித்தவர், தன் தவறை ஒப்புக் கொள்ளப் போவதாக பயத்தில் பிதற்றினார். அதில் சுதாரித்த வேலாயுதம், இரவோடு இரவாக அவரை வீட்டுடன் எரித்து, அதை தீ விபத்தாகச் சித்தரித்தார்.

இதைக் கண்ட மொத்த ஊரும், அந்த அம்மன் சிலை பூமிக்குள் இருந்து வந்த நேரம் கோயில் குருக்களையே காவு வாங்கிவிட்டதாகக் கருதினர்.

அதோடு கண்ணகி அம்மனை வழிபட்டால் துயரம் வரும். அவள் வழிபாட்டுக்கு உகந்தவள் அல்ல என்று தூற்றி, அம்மனின் போலி விக்கிரகங்களை கூட கண்களில் படாதவாறு கோயிலின் புழங்கப்படாத அறை ஒன்றில் போட்டு அடைத்து வைத்தனர்.

கணவனின் பாவக் கணக்கு ஏறிக் கொண்டிருப்பதை பார்த்த அஞ்சுகத்தால், கை கட்டி வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

குருக்கள் இறந்த மறு வாரத்தில் ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.தன் தோட்டத்து கிணற்றடியில் மது குடித்து விட்டு தள்ளாடியபடி அமர்ந்து இருந்தார், வேலாயுதம்.

அவரைத் தேடி வந்த வேலையாளும் விசுவாசியான ராமையா, அவரை கைத்தாங்களாக பற்ற முயல, அவனை உதறித் தள்ளியவர்,

"இந்த ஊர்ல எவனாச்சு அந்த கண்ணகி அம்மனை மதிச்சானாடா? அம்புட்டு பேசுனாய்ங்க. ஆனா, உங்கய்யா அப்படி இல்ல, பூமிக்குள்ள இம்புட்டு நாளா கஷ்டப்பட்ட அம்மனை பிளைட் ஏத்தி அமெரிக்கா அனுப்பி வச்சுருக்கேன்டா..."

என்று போதையின் பிடியில் வரம்பு மீறி பேசிக் கொண்டிருந்தார்.

அவரை கையாளுவது ராமையாவுக்கு பிரம்மபிரயத்தனமாக இருந்தது. அவனைத் தள்ளி விட்டு, தள்ளாடியபடி நடந்த வேலாயுதம், இயற்கை உபாதையை கழிக்க கொட்டும் மழையில் தோட்டத்து வேலியோரமாக ஒதுங்கினார்.

அச்சமயம் பலத்த சத்தத்துடன் ஒரு இடி வேலாயுதத்தின் மீது இறங்கியது. அதில் கரி கட்டையாக கருகி மாண்டார், அம்மனிதர்.

எதிர்பாராத அவரின் இறப்பை விஜயபாண்டியன் விபத்தாகப் பார்த்தான் என்றால், அஞ்சுகமோ கணவன் செய்த பாவத்துக்கு, அந்த தெய்வம் தக்க கூலி கொடுத்து விட்டதாகவே நினைத்தார்.

அதன் பிறகு தன் தந்தை விட்டுச் சென்ற தொழில்களுடன் அவர் பாவக்கணக்கையும் தொடர ஆரம்பித்தான், விஜயபாண்டியன். அதனுடன் தான் செய்யும் சில பல கொலைகளையும், கண்ணகி அம்மனின் பெயரில் ஏற்றினான்.

இவை அனைத்தையும் அன்னையின் வாய் மொழியாக அறிந்து தலையில் அடித்துக் கொண்டான், ருத்ரேஷ்.

அந்த பாண்டிய மன்னன் கண்ணகியின் வாழ்வை பறித்தான். ஆனால், இவர்கள் அவளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி நாட்டை விட்டே கடத்திவிட்டனர். இதற்கு அவள் மண்ணுக்குள் புதையுண்டே கிடந்து இருக்கலாமோ?

தெய்வமானவளின் தெய்வத்தன்மையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டனர், இக்கயவர்கள்.

இறுதியில் தந்தை மற்றும் அண்ணனின் பாவத்துக்கு பிராயச்சித்தமாக, எப்பாடு பட்டேனும் கடத்தப்பட்ட கண்ணகி அம்மனை மீட்டெடுக்க உறுதி பூண்டான்.

இனிமேலும் தன் தமையனை எந்த பாவச் செயலையும் செய்ய விடக் கூடாது என்று மனதில் குறித்துக் கொண்டான்.

‘இனிமேல் பாவம் செய்யாமல் இருப்பது ஒருபுறம். இதுவரை செய்த பாவத்திற்கு தண்டனை வேண்டாமா?’ யோசிக்க மறந்தான் ருத்ரேஷ்.

சிலை மீண்டு(ம்) வரும்…
IMG-20220725-WA0004.jpg
cover picture courtesy monisha
 
Last edited:
Top