இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சலிலோ தள அட்மினின் தனிசெய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.

மீண்டு(ம்) வந்த சிலையே!- கதை திரி

Anjana Subi

Active member
⚠️ DISCLAIMER ⚠️

இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. மேலும் இவை ஏதாவது உண்மையான நபர்கள் (வாழும் அல்லது இறந்த), இடங்கள், கட்டிடங்கள் மற்றும் தயாரிப்புகளுடன் ஒத்து இருப்பின் அது முற்றிலும் தற்செயலானது ஆகும்.

இக்கதையில் வரும் சிகரெட் புகைக்கும் மது அருந்தும் காட்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது. எனவே நிஜ வாழ்வில் இது போன்ற கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாதிருப்பது நலம்.மீண்டு(ம்) வந்த சிலையே! ….✨🔱

சிலை 1


அன்று வெள்ளிக்கிழமை , வந்தவர்கள் அனைவரும் அந்த நாடி ஜோதிட நிலையத்துக்கு முன்னர் கூட்டமாக அமர்ந்திருந்தனர். நாடி ஜோதிடம் ஒருவரின் கட்டைவிரலின் ரேகையை கொண்டு பழங்கால தொன்மையான ஓலைச்சுவடிகளை அடிப்படையாக வைத்து பலன் கூறப்படும் ஜோதிட முறை என்பது அனைவரும் அறிந்ததே.

'ஸ்ரீ மீனாட்சி அம்மன் நாடி ஜோதிட நிலையம்' வடவள்ளி செல்லும் வழியில் காந்தி மண்டபம் அருகில் அமைந்திருந்தது..கோவை சுற்று வட்டாரத்தில் சற்று பிரசித்தி பெற்ற ஜோதிட நிலையம் என்று பெயர் வாங்கியது.

வெளியில் போடப்பட்ட பிளாஸ்டிக் இருக்கைளில் தன் தந்தை நந்தகோபன் நாயுடுவுடன் அமர்ந்திருந்தார், 'நந்தன் மோட்டார்' உதிரி பாக உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் அச்சுதானந்தன். திருப்பூரில் விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களுள் ஒருவர்.

'ச்சே..வந்து ஒரு மணி நேரம் ஆச்சு..இன்னும் எவ்ளோ நேரம் செய்வாங்களோ?' என்று சிறு முக சுணக்கம் காட்டி தன் மணிகட்டில் இருந்த கைகடிகாரத்தை பார்த்தவர்,

சற்றும் குறையாத எரிச்சலுடன் "ச்சு... ஏன் பா நம்ம ஊர்ல இல்லாத ஜோசியரா? ஒரு போன் பண்ணா வீட்டுக்கே வர ஜோசியருங்க எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா? ஏன் பா இங்கேயே வரணும்னு கூட்டி வரிங்க…" என்று அலுத்துக் கொண்டார்.

மகனின் பேச்சில் வெடிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்த நந்தகோபன்,

"டேய் அச்சுதா, எல்லாரும் தான் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் மேணுபாக்சர் பண்றாங்க. ஏன் நம்மலயே மக்கள் தேடி வராங்க? நம்ம தரத்துனால தானே? அதுபோல தான்டா.." என்றவர் ,

சற்று குரலை தாழ்த்தி,

"இந்த மனுஷனோட வாக்குபலித்தமும் தெய்வ சக்தியும் கோயம்புத்தூர் பேமஸ். அதுமட்டுமா இவர் அந்த பொதிகைமலை தேவராஜ சித்தரோட சிஷ்யனும் கூட… இவர் கரெக்ட்டா சொல்லுவார் நம்ம பாப்பாக்கு ஏன் கல்யாணம் தள்ளி போகுது ?எப்போ நடக்கும்னு…" என்று கிசுகிசுத்தார்.

தந்தையின் பதிலில் கொஞ்சம் சலித்துக் கொண்டாலும் பொறுமை காக்க முயன்றார் அச்சுதானந்தன்.

நான்கு தலைமுறைகளாக பெண் பிள்ளைகளே பிறக்காத வம்சம் நந்தகோபருடையது. அப்படி இருக்க பல வருடங்கள் மழலைச் செல்வத்துக்காக ஏங்கிய பிறகு அச்சுதானந்தன் - யஷோதரா தம்பதியரின் துயர் தீர்க்க பிறந்தாள் ஒற்றை பெண் வாரிசான ராஜமாதங்கி.

'தங்கள் குலக் கொழுந்தான ராஜமாதங்கிக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போகுதே' என மனதில் எண்ணி அச்சுதானந்தன் கவலை கொள்ளாத நாளே இல்லை.

அதனால் 'தந்தை கூட்டி வந்த இந்த ஜோதிடராவது நல்ல பதில் கூறிவிடமாட்டாரா?' என்ற ஏக்கத்தில் மனதில் புழுங்கியபடி அமைதி காத்தார்.

செய்யாத பரிகாரம் இல்லை ஏறாத கோயில் படி இல்லை. இருந்தும் எல்லாம் பேசி வரன் கைகூடி வரும்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு திருமணம் நின்றுவிடும். இதில் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானது அச்சுதானந்தனின் தாய் கிருஷ்ணவேணி தான்.

அவர் ஆசையாக வளர்த்த அருமை பேத்தியின் திருமணப்பேச்சு ஒவ்வொருமுறையும் பாதியில் நின்றால் அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா?

அதுவும் இந்த வருடத்துடன் அவளுக்கு அகவை இருபத்து எட்டு ஆகிறது. 'இந்த காலகட்டத்தில் இருபத்தி எட்டெல்லாம் ஒரு வயதா? திருமணத்துக்கு இப்போதே என்ன அவசரம் ' என்று கேட்கலாம் தான்.

ஆனால் இவள் வயது பிள்ளைகள் எல்லாம் திருமணம் ஆகி கணவன் குழந்தைகள் என்று வாழ்வதை பார்க்கும் பெரியவர்களுக்கு தங்கள் மகளுக்கும் அதை போல் வைபவங்கள் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றுவது இயல்பு தானே!

இப்படி தந்தையும் மகனும் தங்களுக்குள் மூழ்கி, மனதினுள் விவாதித்துக் கொண்டிருக்க, அவர்களை தாண்டி ஒரு வேக நடையுடன் உள்ளே சென்றார் கங்காதர தீக்ஷிதர்.

ஒவ்வொரு வேதத்தையும் கற்றுத் தேர்ந்தவர்கள் வேத விற்பனர்களாயின், அவங்களையே உருவாக்கும் உயர்ந்த தகுதி படைத்த ஆசான்களை தீக்ஷிதர்கள் என்பர். அவ்வரிசையில் கங்காதர தீக்ஷிதர் பிறரின் ஞானத்தை அளந்து தீக்ஷை தருவதில் மட்டுமல்ல ஜோதிட சாஸ்திரத்திலும் கரை கண்டு சிறந்து விளங்குபவர்.

பார்த்தவுடன் எழுந்து நின்று கைகூப்பி வணங்கச் சொல்லும் தெய்வீக தோற்றம். நரைத்த தலைமுடி, நெற்றியில் வீற்றிருக்கும் திருநீற்றுப்பட்டை, உடலில் தரித்த பூநூல், கழுத்தில் தவழ்ந்த அடுக்கடுக்கான ருத்திராட்ச மாலை என காட்சி தந்தவரை யாரும் கண்டவுடன் கூறிவிடுவர் அவர் ஒரு சிவ பக்தர் என்று.

"டேய் அவர் கிட்ட ஏடாகூடமா கேள்வி கேட்டு வைக்காதே… நீ அமைதியா இரு. நான் பேசிக்கிறேன்…" என்று மகனின் குதர்க்கப் பேச்சு பற்றி நன்கு அறிந்தவராகக் கூறினார் நந்தகோபன்.

அதற்கு அச்சுதானந்தன் ஏதோ பதில் பேசப் போக, அப்போது பார்த்து தீக்ஷிதரின் சிஷ்யன் அவர்களை நோக்கி,

"ஐயா, தீக்ஷிதர் உங்கள உள்ளார வரச் சொன்னார்" என்று பவ்யமாகக் கூறிவிட்டு சென்றான்.

அதில் அவசரமாக கொண்டு வந்த தங்கள் பெண்ணின் ஜாதகம் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு தந்தையும் மகனும் உள்ளே சென்றனர்.

அங்கு கண்மூடி தியானத்தில் இருந்த கங்காதரனை கைகூப்பி வணங்கிய இருவரும் அவர் முன்னால் அமர்ந்தனர்.

மெல்ல கண் திறந்தவர் , "யாருக்கு ஜோதிடம் பார்க்கனும்? அவங்க கட்டை விரல் கைரேகையை கொடுங்க?" என்று கேட்டார்.

அவர் கேட்டதை கொடுத்ததும் "என்ன பலன் பார்க்கனும் ஜாதகிக்கு? " என்று கேட்க ,

"பொண்ணுக்கு திருமண வரன் அமையுறது பற்றி தெரிஞ்சுக்க வந்திருக்கோம் ஐயா?" என்றார் நந்தகோபன்.

மேலும் பயபக்தியுடன் தொடர்ந்து "போன வாரமே நீங்க கேட்ட விவரம் எல்லாம் கொடுத்திருந்தோம். அதனால ஜாதகக் கட்டை மட்டும் எடுத்து வந்திருக்கோம்ங்க…" என்றார்.

ஒரு ஆமோதிப்பான சிறு தலையசைப்பை தந்த கங்காதரன் பக்கத்தில் இருந்த மாதங்கிக்கு பொருந்தி வந்த ஓலைச் சுவடியை வரிசையாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

அவள் பிறந்த வம்சம், பெற்றவர்கள், அவள் செய்யும் தொழில் ,அவளின் வாழ்க்கை தரம் என ஒவ்வொன்றாக கூறிக் கொண்டே வர அச்சுதானந்தன் கொஞ்சம் அசந்து தான் போனார்.

திடீரென்று ஒரு இடத்தில் படிப்பதை நிறுத்தியவர், கண்களை அழுந்த மூடி "சர்வேஷ்வரா" என்று முணுமுணுத்தார்.

அவர் பார்வை ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கு அனுதினமும் தான் பூஜிக்கும் பாண லிங்கத்தின் மீது படிந்து மீண்டது.

பின்னர் அவசரமாக நந்தகோபர் கொடுத்த மாதங்கியின் ஜாதகத்தை ஒரு முறை புரட்டி பார்த்தவரின் முகம் யோசனையை தத்தெடுத்தது .

ஒருவித படபடப்புடன் ஓரமாக வைத்திருந்த சோழிகளை கையில் எடுத்து "ஓம் நமச்சிவாய" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து உருட்டியவரின் கண்கள் தானாக விரிந்து கொண்டது.

அதை பார்த்த நந்தகோபனுக்கு 'எதுவோ சரி இல்லை' என்று மனம் வெகுவாக இடித்துரைக்க,

உடனே கங்காதரனிடம் " ஏதாவது பிரச்சனையா சாமி?" என்று பதறினார்.

அதற்கு பதிலளிக்காமல்,

"உங்க பொண்ணை கட்டிக்க போற பிள்ளையாண்டா அவளை தேடி வருவான்...நீங்க தேடி போக வேண்டாம்…" என்றார்.

அவரது பொடி வைத்த பதிலில் கொஞ்சம் கொஞ்சமாக தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தார் அச்சுதாநந்தன்.

"ஏதாவது இடிஞ்ச பெண் தெய்வத்தோட கோயிலை புனருத்தாரணம் பண்ணுங்கோ...மற்றதெல்லாம் தானா நடக்கும்…" என்றவர், அதற்கு மேல் கூற எதுவும் இல்லை என்பது போல படித்துக் கொண்டிருந்த ஓலைச்சுவடியை மூடி வைத்தார்.

இதை கேட்ட அச்சுதானந்தத்துக்கு தான் மண்டை காய்ந்தது. 'நம்ம வீட்டுப் பொண்ணோட திருமணம் பற்றி கேட்க வந்தா, இவரு சம்பந்தமே இல்லாமல் கோயிலை புதுப்பிப்பதை பற்றி பேசுறாரு' என்று மனதுக்குள் பொரிந்தவர்,

அதை சற்றும் மறையாமல் "ஏன் சாமி நாங்க என்னவோ கேட்க வந்தா? நீங்க சம்பந்தமே இல்லாம என்னவோ சொல்றீங்க?" என்றவரின் வார்த்தைகளில் உஷ்னம் தகித்தது.

தன்னை தடுத்து ஏதோ சொல்ல வந்த தந்தையிடமும்,

"விடுங்கப்பா நம்ம வீக்னஸ்ஸை இவங்க எல்லாம் காசு பண்ண பாக்குறாங்க. எத்தனை பரிகாரம்? எத்தனை தானதர்மம் செஞ்சாச்சு. இப்ப வந்து புதுசா இவர் ஒன்னை சொல்றார். வேற வேலை இல்லை?"

என்று கத்திவிட்டு எழுந்துச் சென்றார்.

அச்சுதானந்தன் பேசிய அதிகப்படியான வார்த்தைகளுக்கு வருந்திய நந்தகோபன்,

"மன்னிச்சுக்கங்க சாமி..புள்ளைக்கு கல்யாணமாகலேங்கற ஆதங்கத்துல பேசிட்டு போறான்..தப்பா எடுத்துக்காதிங்க…" என குரல் கம்ம தீக்ஷிதனிடம் மன்னிப்பை யாசித்தார்.

அவர் மகனின் ஏச்சுக்கள் ஏதும் தன்னை பாதிக்க வில்லை என்பது போல அமைதியே உருவாக அமர்ந்திருந்த தீக்ஷிதனோ,

"சர்வம் சிவமயம்…நான் சொன்னதை நீங்க செய்யாட்டியும், நேரமும் காலமும் கண்டிப்பா உங்களை செய்ய வைக்கும்…" என இதழ்களில் புன்னகை கசிய, ஒரு அர்த்தப் பார்வையுடன் கூறினார்.

அவர் பேச்சின் உள்ளர்த்தம் விளங்காமல் முழித்த நந்தகோபனிடம், தான் பூஜிக்கும் பாண லிங்கத்தின் காலடியில் இருந்து ஒரு பஞ்சமுக ருத்திராட்சத்தை எடுத்து எதையோ ஜபித்து, "இதை உங்க பேத்திகிட்ட கொடுங்கோ…" என்று சிறிது திருநீருடன் தந்தார்.

பதிலுக்கு தட்சணையாக ஐந்து 500 ரூபாய் தாள்களையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் தான் கொண்டு வந்த வெற்றிலை பாக்கு பழம் எலுமிச்சைபழத்தை நீட்டினார் நந்தகோபன்.

கங்காதரன் ஒன்றும் பேசாமல் அந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் எலுமிச்சை பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, "மாதங்கிக்கு திருமணநாள் குறிக்கும் போது முழு தட்சணையையும் வாங்கிக்கிறேன்.." என கூறி அனுப்பிவிட்டார்.

அவரிடம் விடைபெற்று அறை வாசலை தாண்ட முற்பட்ட நந்தகோபனை

"ஒரு நிமிஷம்" என்று நிறுத்தியவர் ,

"ஒரு இடிஞ்ச பெண் தெய்வத்தோட கோயிலை புதுப்பிக்காம இந்த ஜாதகியோட கழுத்துல மாங்கல்யம் ஏறாது. அப்படி ஏறுனாலும் தங்குமாங்கறது சந்தேகம் தான்.." என்ற கங்காதரனின் குரலில் ஆணி அடித்தது போல நின்றார் நந்தகோபன்.

"கண்டிப்பாக நீங்க சொன்னதை எப்பாடு பட்டாச்சும் செய்யுறோம்ங்க ஐயா…" என கூறிவிட்டு விடைபெற்று மகன் அமர்ந்திருந்த தங்கள் காரை நோக்கிச் சென்றார்.

அவரிடம் பேசியத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல "நமச்சிவாயம்" என்ற கங்காதரனின் இதழ்களில் ஒரு மர்மப் புன்னகை குடிகொண்டது.


*************************

கோவையில் இருந்து திருப்பூர் வரும் வழி எல்லாம் தந்தைக்கும் மகனுக்கும் ஒரே வாக்குவாதமாக இருந்தது.

"நீங்க ஆயிரம் சொல்லுங்கப்பா நான் இதெல்லாம் ஒத்துக்கவே மாட்டேன். நான் கோயிலுக்கு பணி செய்யறதை தப்பே சொல்லலை. ஆனா, சம்பந்தமே இல்லாம இப்படி ஒரு கல்யாண பரிகாரத்தை சொல்றவரை எப்படி நம்பறது? இதென்னப்பா ரொம்ப சீப்பான பேரமா இருக்கு நான் உனக்கு கோயில் கட்டுறேன் நீ என் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைங்கறதெல்லாம் உங்களுக்கே அபத்தமா இல்லை?"

என்ற மகனின் கத்தலில் பொறுமை இழந்தார் நந்தகோபன்.

அப்போது அவர்களது வெண்நிற பென்ஸ் கார் திருப்பூரின் கே.பி.என் நகருக்குள் புகுந்தது.

மகன் பேச்சில் கோபமுற்றவர்,

"காரணம் இல்லாம காரியம் இல்லைடா. மாதுக்கு கல்யாணம் தட்டி போறதும் ஏதோ நல்லதுக்கு தான்னு தோணுது…இடிஞ்ச கோயிலை கட்டிக் குடுக்கறதெல்லாம் புண்ணிய காரியம் டா…அதுனால நம்ம வீட்ல நல்லது நடக்கலைனாலும் கண்டிப்பா கெட்டது நடக்காது…"

என்று பதிலுக்கு எகிறவும், கார் 'நந்தனம்' என்ற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்ட பெயர் பலகையை தாங்கிய வில்லா டைப் வீட்டின் முன் நிற்கவும் சரியாக இருந்தது.

அவசரமாக காரை விட்டு இறங்கி, வாசலில் பொருத்தப்பட்ட நவீன தண்ணீர் குழாயில் தன் காலை கழுவிக் கொண்டிருந்த நந்தகோபனின் மனவெம்மையை குளிர்வித்தது ,

இமையா துயிரா திருந்தாய் போற்றி


என் சிந்தை நீங்கா இறைவா போற்றி

உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி

ஊழியே ழான வொருவா போற்றி

அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி

ஆதி புராணனாய் நின்றாய் போற்றி

கமையாகி நின்ற கனலே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி

என காற்றில் மிதந்து, செவியை தீண்டிய மனைவியின் கனீர் குரலில் இசைத்த தேவார போற்றித் திருமுறை. அதில் மனம் சற்று சாந்தமடைய, மெதுவாக வீட்டுக்குள் சென்றார்.

நந்தகோபன் கிருஷ்ணவேணி தம்பதியினர் என்ன தான் வைணவ வம்சத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாகவே திகழ்ந்தனர்.

அப்போது முகத்தை திருப்பிக் கொண்டு ஆளுக்கொரு திசையில் நிற்கும் கணவனையும் மாமனாரையும் குடிக்க நீருடன் நெருங்கினார் மனைவி யஷோதரா.

தண்ணீர் சொம்பை நீட்டியபடி, "போன காரியம் என்னாச்சுங்க?" என்று மெதுவாக அச்சுதானந்தனிடம் வினவினார் யஷோதரா.

அதற்கு, "ஆஹ் மண்ணா போச்சு. அதை உங்க மாமானார் கிட்டயே கேளு…" என்று எரிந்து விழுந்துவிட்டு விருவிருவென தங்கள் அறை நோக்கி சென்றார் அச்சுதானந்தன்.

மகனின் கடுமையில் விக்கித்து நின்ற மருமகளை பார்க்க நந்தகோபனுக்கு பாவமாக இருந்தது. "விடுமா அவன் கெடக்குறான்…" என்று சமாதானம் செய்ய முயன்றார் அவர்.

இவர்கள் வரும் அரவம் கேட்டு, அவசர அவசரமாக தன் பூஜையை முடித்துக் கொண்டு வந்த கிருஷ்ணவேணி,

"தீக்ஷிதர் ஏதாவது நல்ல சேதி சொன்னாருங்களா?" என ஆர்வமாக கணவனின் முகம் நோக்கினார்.

தன் பதிலுக்காக காத்திருக்கும் மனைவி மற்றும் மருமகளிடம், லேசான தயக்கத்துடன் ஆரம்பித்து கங்காதரன் இயம்பிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தார் நந்தகோபன்.

கணவன் கூறியவற்றை ஒரு வித யோசனையுடன் புருவம் சுருங்க கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணவேணியோ,

"தீக்ஷிதர் ஒரு விஷயம் சொன்னா கண்டிப்பா அதுல ஏதாவது அர்த்தம் இருக்குங்க…உடனே அவர் சொன்னதை செய்ய ஏற்பாடு பண்ணுங்க…" என உரைத்தார்.

பதிலுக்கு ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து தலையசைத்த நந்தகோபனிடம் ,

"அவர் கிட்ட கொஞ்சம் பொறுமையா நான் பேசி புரிய வைக்கிறேன் மாமா … நீங்க ஆக வேண்டியதை பாருங்க…" என்று தன் பங்குக்கு உறுதி சொன்னார் யஷோதரா.

அதன் பிறகு காரியங்கள் ஜரூராக நடக்க ஆரம்பித்தது. அச்சுதானந்தத்தின் காரியதரிசி நிமலனுக்கு அழைத்த நந்தகோபன் அறநிலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சிதிலமடைந்த கோயில்களின் பட்டியலையும் அவற்றை புனரமைக்க மேற்கொள்ள வேண்டிய விதிமுறை செயல்பாடுகளையும் துரிதமாக கேட்டறிந்து சொல்ல பணித்தார்.

கோயில் புனரமைக்கும் திட்டத்துக்கு அனுமதி கிடைத்து மற்ற விபரங்கள் தெரியும் வரை அச்சுதாநந்தனிடம் இதுபற்றி தகவல் எதுவும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டவர் இணைப்பை துண்டித்தார்.

நம்மை ஆட்டுவிப்பவன் ஆட்டத்துக்கு ஆடிக் கொண்டிருப்பது தெரியாமல் அவரவர் ஒரு கணக்கு போட்டால் நடந்துவிடுமா என்ன?

இவர்களுக்கு எல்லாம் யார் சொல்வது? சிவம் சொல்லாமல் அந்த சவம் கூட நகராது என்று. திருச்சிற்றம்பலம்.

சிலை மீண்டு(ம்) வரும்…

 

Attachments

  • received_763200348383442.jpeg
    received_763200348383442.jpeg
    70 KB · Views: 0
Last edited:

Anjana Subi

Active member
மீண்டு(ம்) வந்த சிலையே
அத்தியாயம் 1
சாரல் தளத்தில் எழுத வாய்பளித்த நகர்வாகி திருமதி. ஜனனி நவீன் அவர்களுக்கும் கேட்டதும் திரி அமைத்து தந்ததற்கு திருமதி. ஆண்டாள் அருகன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றிகள்🤗
 

Priyakutty

Active member
அவர் எதை மனசுல வச்சிட்டு இப்படி சொன்னாரு... 🤔

மாதங்கி அஹ் தேடி ஹீரோ வருவாரா... 🤩

கோவில் பணி நல்லபடியா நடக்குமா...

இறைவன் கணக்கு என்ன...

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
 

Anjana Subi

Active member
அவர் எதை மனசுல வச்சிட்டு இப்படி சொன்னாரு... 🤔

மாதங்கி அஹ் தேடி ஹீரோ வருவாரா... 🤩

கோவில் பணி நல்லபடியா நடக்குமா...

இறைவன் கணக்கு என்ன...

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
பெரியவங்க எப்ப புரியறது போல பேசி இருக்காங்க. மாதங்கி தேடி ஹீரோ வருவார். ஆனா அவரை ஹீரோவா மாதங்கி பார்க்கணுமே🤣 கோவில் பணியும் இறைவன் கணக்கும் ஆடப்போகும் சதிராட்டம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம்🤗 நன்றி டா
 
சூப்பர் சூப்பர்க்கா 🤩🤩🤩🥳🥳🥳🥳நான் தான் இதில் ராஜமாதங்கி என கூறிக்கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Anjana Subi

Active member

மீண்டு(ம்) வந்த சிலையே!

சிலை - 2


தமிழக கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டம், கூடலூர் வண்ணாத்திபாறை காப்புக்காடு வனப்பகுதி,

நந்தன் குடும்பத்தின் அத்தனை களேபரத்துக்கு காரணமான காரிகையோ, இங்கு மங்கலதேவி கோட்டத்தின் கோயில் மதில்களில், ஆங்காங்கே இருக்கும் வட்டெழுத்து கல்வெட்டுகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அவள் 'ராஜமாதங்கி - பீல்ட் ஆர்க்கியாலஜிஸ்ட் , பிரம் யூனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ்.’

மாதங்கி படித்தது எல்லாம் ஹைதிராபாத்தில் உள்ள ஒஸ்மானியா யூனிவர்சிட்டியில் தான்.அங்கு பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் முதுகலை பட்டம் (MA Ancient Indian History Culture And Archaeology) பெற்றிருந்த அவளின், நாட்டம் எல்லாம் கல்வெட்டு ஆராய்ச்சி என்றானது.

அதனால் மெட்ராஸ் பல்கலைக்கழக கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் (Institute Of Epigraphy ,University Of Madras) சேர்ந்து கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வில் முதுகலை டிப்ளமா (Post Graduate Diploma in Epigraphy, Archaeology and Excavation) முடித்திருந்தாள்.

தமிழகக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் பற்றி கடந்த நான்கு ஆண்டுகளாக பேராசிரியர் சர்வேஷ்வரனின் தலைமையில் இளநிலை கல்வெட்டு ஆய்வாளராக (junior epigraphist) ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவள். எப்படியும் ஒரு வருடத்தில் முனைவர் பட்டம் வாங்கியே தீருவது என்ற தீவிரத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.

'ராஜமாதங்கி' பெயருக்கு ஏற்றாற் போல ராஜதோரணை கொண்டவள்.ஐந்தரை அடியில் கோயில் சிற்பம் போன்ற உடல்வாகுடன் மிளிர்ந்தவளின் அழகை, அந்த தொள தொளப்பான பேகி கார்கோ பேண்ட்டும், அழுக்கு டீ சர்ட்டும் மறைக்க முயன்று தோற்றது.

தன் அடர்த்தியான இடை தொடும் கூந்தலை இழுத்து, உச்சியில் ஒரு மெஸ்ஸி பன் வகை கொண்டை இட்டு, அப்போதும் அடங்காமல் சிலுப்பிக் கொண்டிருக்கும் சில முடிக் கற்றைகளை, ஒரு பேண்டானாவை கொண்டு தலையை இறுக்கி இருந்தாள்.

அந்த வட்ட முகத்தின் மூன்றாம் பிறை நெற்றியும், கூர் நாசியும், அகன்ற வேல் விழிகளும், அந்தக் கருப்பு நிறத்தழகியின் அழகுக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்தது.

இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டுவது போன்று, பெண்ணவளின் பளபளக்கும் செப்பு வாய் மலர்ந்தால், பேசுவதெல்லாம் விஞ்ஞானமும் ஆராய்ச்சியும் மட்டுமே.

மாதங்கி தற்போது பீல்ட் டிரிப்புக்காக வந்திருப்பது பளியங்குடியில் இருந்து சுமார் 6 கி.மீ தூரம் செங்குத்தான மலைப்பாதையில் அமைந்த 'மங்கலதேவி கண்ணகி கோயில்.'

மண்ணுலக வாழ்வு அமங்கலமாக அமைந்து மங்கலதேவி மலையை தஞ்சம் அடைந்த கண்ணகியை, மாலையிட்டு கோவலன் விண்ணுலகம் கூட்டிப் போனான்என்பதால் அக்கோயில் இப்பெயர் பெற்றது என்பது வரலாறு.

தன் போக்கில் கோயிலை சுற்றி வந்தவள், அங்கு கருவறையில் இருந்த கண்ணகி அம்மன் சிலையை நிதானமாகப் பார்வையால் ஆராய்ந்தாள். சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால் இமயத்தில் இருந்து கல் எடுத்துவரப்பட்டு கட்டிய கோயில்.

ஆரிய மன்னர்களை வீழ்த்தி அவர்கள் தலையில் சுமந்து வந்து, கங்கை நீரால் புனிதப்படுத்தி ஒரே கல்லில் வடிக்கப்பட்ட இரண்டடி உயர தேவி சிலை, பராமரிப்பின்றி மோசமான நிலைமையில் இருந்தது. அந்தக் கற்களில் முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துக்களும் காணப்பட்டன.

சிதிலமடைந்த நிலையிலும் முகத்தில் சீற்றத்துடன் கையில் சிலம்பை ஏந்தி இருக்கும் சிற்பத்தைக் கண்டு 'ஒரு நிமிடம் அது சிலை தானா?' என்று ஐயம் கொண்டாள் மாதங்கி.

உயர் குலத்தில் பிறந்து வளர்ந்து, கணவனே கண் கண்ட தெய்வம் என்று அவன் கரம் பற்றியவளை விட்டு வேறொருத்தியை நாட, அவள் கணவனுக்கு எப்படி மனம் வந்தது?

ஏதோ ஒரு பெண்ணிடம் மயங்கி பொன் பொருளை எல்லாம் இழந்து வந்த கணவனை இன்முகத்தோடு எப்படி இவளால் ஏற்றுக் கொள்ள முடிந்தது?

எந்த நம்பிக்கையில் துன்பத்தில் மட்டும் தன்னை நாடிய கணவனை பற்றுகோளாகக் கொண்டு, வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்கச் செல்ல ஒப்புக் கொண்டாள், இவள்?

இவை அனைத்துக்கும் உச்சம்! கணவன் இறந்தான் என்று கேட்டவுடன் “ஒட்டேன் அரசோடு மதுரையை எரிப்பேன்” என்றவள்,

ஏன் கணவன் மாதவியுடன் இருக்கிறான் என்று தெரிந்தும், அவனிடம் தனக்கான நியாயம் கோரவில்லை?

என்ன பதி தர்மமோ?

மண வாழ்வில் துரோகத்தையும் சுயநலத்தையும் அனுபவித்து காலத்தால் வஞ்சிக்கப்பட்டு உயிர் நீத்த பெண்ணுக்கு, இறுதியில் 'பத்தினி' என்ற பெயரும், நாட்டில் ஆங்காங்கே எழுப்பப்பட்ட கோயில்களும் தான் மிச்சம்.

மாதங்கியின் எண்ணவோட்டத்தை அறிந்தால் கருவறையில் அமர்ந்திருக்கும், தேவி,

'என் கணவனைப் பற்றி நீ எப்படி அவ்வாறு நினைக்கலாம் என்று, இவளையும் மதுரையை எரித்தது போல எரித்துவிடுவாளோ என்னவோ?’

நமக்கேன் வம்பு என்று அங்கிருந்து நகர்ந்தாள், மாதங்கி.

அந்நேரம் ராஜமாதங்கியின் மனதில் காதல் திருமணம் என்பதெல்லாம் உணர்வுகளை தூண்டி விட்டு மனதை பலவீனமாக்கும் மாய்மாலம் என்ற எண்ணம் அழுந்த வேரூன்றியது.

என்ன தான் ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறையில் பணி புரிந்தாலும், இன்றுவரை எந்த ஆடவனுக்கும் தன் சிந்தையை ஆதிக்கம் செய்ய அவள் அனுமதி வழங்கியது இல்லை.

அதற்கான காரணத்தை, அந்தக் காலம் தான் சொல்ல வேண்டும்.

நம் ஆழமான எண்ணங்களே செயலாக வடிவு கொள்ளும் வல்லமை பெற்றவை. அது மாதங்கிக்கு வெகுவாகப் பொருந்தும். அவள் எண்ணவோட்டத்தைப் போலவே 'காதல்' என்ற நுண்ணுணர்வும், அவளை தீண்டத் தகாதவளாகவே பாவித்து, இத்தனை வருடம் தள்ளி வைத்தது தான் விந்தை.

ஈர்ப்பு, காதல் என்பதெல்லாம் இனி இந்த 28 வயதில் சாத்தியம் இல்லை என்று உறுதியாக நம்பிய ஒரே காரணத்துக்காக, வீட்டில் வரன் பார்க்க முனைந்த போது, ஒருவித ஆர்வமின்மையுடன் சம்மதித்தாள், ராஜமாதங்கி.

ஆனால் அவள் நேரமோ என்னவோ, எந்த வரனும் அவளுக்கு கைகூடவில்லை. அதனால் விளைந்த குடும்பத்தாரின் மனவுளைச்சல் புரிந்தாலும், தன் மனதில் விரவும் ஆழ்ந்த மன நிம்மதியை மாதங்கியால் தடுக்க முடியவில்லை.

இப்படி தன் மனதில் குதித்து எக்காளமிட்ட எண்ணங்களை, தலையை உதறி சமன் செய்தவள், அக்கோயில் கல்வெட்டுகளை பிரதி எடுக்கும் பணியில் கவனமானாள்.

அப்போது திடீரென்று "உஷ்ஷ்… உஷ்ஷ்…" என்ற சத்தம் செவியைத் தீண்ட, மெல்ல பணியில் இருந்து கவனம் கலைந்தாள், பெண்.

சுற்றும் முற்றும் பார்த்தபடி சத்தம் வந்த திசையில் நடந்தவளின் கால்களில், காய்ந்த சருகுகள் மிதி பட்டு ஒரு மாதிரி ஓசை எழுப்பியது. அதை சட்டை செய்யாது முன்னேறினாள், மாதங்கி.

அது காட்டுக்குள் அமைந்த கோயில், அதனால் சரியான பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே சிதிலமடைய ஆரம்பித்து இருந்தது.

'எத்தனை எத்தனை தொன்மையான கோயில்கள் இப்படி கேட்பார் அற்றுப்போய் அழிந்ததோ?' என்ற எண்ணம் மேலோங்குவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

சுணங்கிய மனதோடு கோயிலுக்குப் பின்னால் சென்றவளை, சுற்றிலும் மனோரஞ்சிதச் செடிகளும் நாகலிங்க மரங்களும் சூழ வீற்றிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று வரவேற்றது.

அதற்கு பூஜை நடந்ததுக்கான அறிகுறியாக, மஞ்சளும் குங்குமமும் புற்று ஏகத்துக்கு அப்பி இருக்க, அதைக் கண்டவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

பின்னர் ஏதோ கரையாண் கட்டிய புற்றில் தஞ்சம் புகுந்திருக்கும் விஷ ஜீவராசியைப் போய் கடவுளாக வணங்கும் நம்பிக்கையை, அவளால் எப்படி ஏற்க முடியும்?

அவ்வளவு ஏன்? அவள் தாயும் பாட்டியும் கூட தனக்கு சீக்கிரம் திருமணம் கைகூட வேண்டி, ஏதோ புற்றுக் கோயிலுக்கு கூட்டிச் சென்றதும், அவர்களிடம் ஏடா கூடமாகப் பேசி நன்றாக வாங்கி கட்டிக் கொண்டதும், இப்போது நினைவிலாடியது.

மாதங்கி ஒன்றும் அறநெறிகளுக்கு எதிரானவள் அல்ல. ஆனால், எல்லா உயிர்களுக்கும் சமம் என்று சொல்லப்படுகின்ற கடவுள் கோட்பாடு, வெற்றுச்சடங்காக மாறி, மூடநம்பிக்கைகளையும், பேதங்களையும் மனிதர்களுக்குள் விதைப்பதை கடுமையாக எதிர்ப்பவள்.

இப்படி தன் எண்ணம் போன போக்கில் முழ்கி இருந்தவளைக் கலைத்தது, பேராசிரியர் சர்வேஷ்வரனின்,

"மாது, நம்ம கேஸ் அடுத்த மாசம் ஹியரிங் வருது…." என்ற வெண்கலக் குரல்.

சர்வேஷ்வரன் நல்ல கம்பீரமான முன் முப்பதுகளில் இருக்கும் இளைஞன். தொல்லியல் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு மிக்கவன். அதற்கு திருமணம் முட்டுக்கட்டையாய் இருந்திடுமோ என்ற எண்ணத்தில், இந்நாள் வரை திருமணத்தை தவிர்த்துக் கொண்டிருப்பவனும் கூட.

அவனை நேராகப் பார்த்து,

"கண்டிப்பா இந்திய தொல் பொருள் ஆய்வுக் கழகத்தோட (ஏஎஸ்ஐ) (Archaeological survey of India) பிரிவை நம்ம ஊட்டிக்குக் கொண்டு வந்திடனும் சார். அப்போ தான் இதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்கும்…" என கூறி ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தாள்.

"அதுல ஏகப்பட்ட பாலிடிக்ஸ் இருக்கு மாது…இப்பத்திக்கு அது முடியாட்டியும், அட்லீஸ்ட் நம்ம தமிழ் கல்வெட்டுக்கள் மற்றும் இதுவரை எடுத்த நகல்களையும், நம்ம மாநில அரசுகிட்ட ஒப்படைச்சிட்டாக் கூடப் போதும்..." என்ற சர்வேஷ்வரனின் சோர்ந்த குரலில் , ஆதங்கம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அவன் கூற்றில் உள்ள உண்மை புரிந்தாலும், மாதங்கிக்குள் அந்தப் பேச்சு ‘முனுக்' என்ற கோபத்தை விதைத்தது.

இருவரும் அவர்களது வழக்கைப் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டே, கோவிலின் பின் வாசல் பக்கமாக நடந்தனர்.

அப்போது, "மாது மாது…சர்வேஷ் சார்… ரெண்டு பேரும் சீக்கிரம் இங்க வாங்க! லுக் அட் திஸ்…" என்று க்ரீச்சிட்ட குரலில், இருவரின் பேச்சும் தற்காலிகமாகத் தடைபட்டது.

அடுத்த நிமிடம் தன் தோழியும் உடன் பணிபுரிபவளுமான அவந்திகாவின் கூக்குரல் கேட்ட திசையை நோக்கி, சர்வேஷ்வரனை அழைத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்தாள், ராஜமாதங்கி.

"என்னாச்சு? எதுக்கு அவந்தி கூப்பிட்ட?"

என கேட்டபடி வந்த மாதங்கியின் பார்வை, ஒரு பக்கம் அஷோக்குடன் சேர்ந்து, அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த திதியனின் கையில் இருந்த, அந்த இரும்புப் பெட்டியில் ஆர்வமாகப் படிந்தது.

வேகமாக அவர்கள் அருகில் சென்றவள், அந்தப் பெட்டிக்கு எந்த சேதாரமும் நேர்ந்து விடாமல், அதைத் திறக்க திதியனுக்கு உதவினாள். திறந்த அந்தப் பெட்டியை நிறைத்தது, அதற்குள் இருந்த ஏராளமான ஓலைச்சுவடிகள்.

அவற்றை ஒரு வித பிரம்மிப்பும் பரவசமும் சேர கைகளில் எடுத்தவள், அவற்றை அவந்திகாவுடன் சேர்ந்து புரட்ட ஆரம்பித்தாள்.

அச்சமயம் சர்வேஷ்வரன் தன்னை அழைக்கவும்,

"நீ பாரு மாது… நான் இப்போ வந்திடுறேன்…" என்று எழுந்து சென்றாள், அவந்திகா.

மாலை மங்கிய நேரம். லேசாக இருள் கவிழ ஆரம்பித்திருந்தது. மழை எப்போது வேண்டுமானாலும் பூமியை முத்தமிடும் என்பதற்கு அறிகுறியாய் வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டது.

எனவே தாங்கள் கூடாரம் அமைத்துத் தங்கி இருக்கும், பளிஞர் இன மக்கள் வசிக்கும் இடத்துக்குச் சென்று விட்டு, நாளை வந்து பணியைத் தொடர முடிவு செய்ய, அவர்கள் குழுவுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தான், சர்வேஷ்வரன்.

அப்போது, அவந்திகா சென்றது கூட உணராமல் ஓலைச் சுவடிகளில் மூழ்கி இருந்தவளைக் கலைத்தது.

"உஷ்ஷ்…உஷ்ஷ்…" என்ற சத்தம்.

இம்முறை வெகு அருகில் கேட்கவும் 'திக்' என்றது மாதங்கிக்கு.

அவள் சுதாரித்து என்னவென்று பார்ப்பதற்குள், அந்த இரும்புப் பெட்டிக்குள் இருந்து ஒரு கருநாகம் சீற்றத்துடன் படம் எடுத்து ஆடியபடி வெளிப்பட்டது.

அங்கிருந்து விலகிச் செல்ல புத்தி உரைக்க, அதை செயல் படுத்துவதற்குள், அவள் காலில் ஒரு கொத்து போட்டுவிட்டு, இருட்டில் எங்கோ வேகமாகச் சென்று மறைந்தது அந்தக் கருநாகம்.

அச்சத்தில் வீறிட்ட மாதங்கியின் குரல், அந்த காடு முழுவதும் எதிரொளித்தது. அதில் கோவிலின் சுற்றுப்புறத்தை நுணுக்கமாக தங்கள் கேமராவில் ஒளிபதிவாக்கி, பதிவு செய்து கொண்டிருந்த நித்யாவும், ஏனைய குழுவும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

அவள் காலில் பதிந்த பல் தடத்தைக் கண்டு பதறினான், சர்வேஷ்வரன்.

வேகமாக நித்யாவின் ஸ்கார்ப்பைக் கொண்டு உடலில் விஷம் பரவாமல் இருக்க, கடித்த இடத்தைச் சுற்றி இறுக்கக் கட்டினான்.

பின்பு தன் இடுப்பில் அவசரத்துக்கு வைத்திருக்கும் சின்ன கத்தி கொண்டு, கடித்த இடத்தைக் கீறிவிட்டு, விஷம் பாய்ந்த ரத்தத்தை வெளியேற்றினான்.

அதற்குள் அவர்கள் தங்கி இருந்த பளிஞர் இனக் கூட்டத்தின் தலைவன் மாயன், தன் ஆட்கள் இருவருடன் அந்த பக்கம் விஜயம் செய்யவும்,

சர்வேஷ்வரன் முதலுதவி செய்து முடிக்கவும் சரியாக இருந்தது.

மாதங்கிக்கு நடந்ததை அஷோக் கூறக் கேட்ட மாயன், அந்த ஓலைச் சுவடிகள் அடங்கிய பெட்டியின் மேல் கிடந்த பாம்புச் சட்டையை கண்டு பதறினார்.

"அய்யோ சாமி! இந்தப் பொண்ண, கருநாகம் கடிச்சிருக்குங்க…! உடனே விஷக் கடிக்கு மருத்துவம் பார்க்கலன்னா உசுரு பொழைக்கறதே கஷ்டமுங்க…! சீக்கிரம் வாங்க… குடிலுக்கு தூக்கிட்டுப் போலாம்…"

என்று விழுத்தடித்துக் கொண்டு, அவளைத் தன் ஆட்களிடம் தூக்கப் பணிந்தார்.

சர்வேஷ்வரனும் மாயனுடன் இணைந்து வேகமாக நடக்க ஆரம்பிக்க,

ஏனைய குழு ஓலைச்சுவடிகள் அடங்கிய பெட்டியை தூக்கிக் கொண்டு பின்னால் சென்றனர்.

அவர்கள் செல்லும் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தது, கோவில் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த கருநாகம்.

*****************************

மாதங்கி, கண்களை மெதுவாகச் சிரமத்துடன் திறக்க முயன்றாள். உடலின் மொத்த சக்தியையும் உரிஞ்சி எடுத்தது போல இருந்தது, அவளுக்கு. மெல்ல சுற்றிலும் கண்களை சுழல விட்டு, தன் இருப்பிடத்தை ஆராய முற்பட்டாள்.

ஏதோ ஒரு புல்லால் வேய்ந்த படுக்கையில் படுத்திருந்தவள், தன் பலத்தை எல்லாம் திரட்டி எழுந்து அமர்ந்தாள். தன் காலில் பாம்பு தீண்டிய இடத்தை ஏதோ மூலிகை கொண்டு கண்டி இருந்ததை, அப்போது தான் கவனித்தாள், பெண்.

மெல்ல காலை அசைக்க முயன்றவளுக்கு உடல் ஒத்துழைக்க மறுத்தது. வலி உயிர் போக, கண்கள் லேசாகக் கலங்கியபடி அமர்ந்திருந்தவளைக் கலைத்தது,

"எந்திரிச்சிட்டியா தாயீ…" என்ற குரல்.

குரல் கேட்டுத் திரும்பியவளின் கண்களில் பட்டார் அவர். சடாமுடியும் புலித் தோலும் தரித்து, உடல் முழுவதும் சாம்பல் பூசியபடி தண்டத்துடன், நரை திரையின்றி காணப்பட்டவரின் முகத்தில் இருந்த தேஜஸில் கண்களை அவரை விட்டு அகற்ற முடியாமல் திணறினாள், மாதங்கி.

குடிலின் வாசலைத் தாண்டி உள்ளே வந்தவர்,

"இந்தா தாயீ…." என்று ஒரு மண் குவளையை அவளிடம் நீட்ட, மறுவார்த்தை பேசாது அதைப் பெற்றுக் கொண்டாள், பாவை.

அதில் இருந்த பச்சிலை திரவத்தை ஒரு மிடறு பருகியவளின் முகம் அஷ்டகோணலானது.

அதைப் பொருட்படுத்தாது, அந்த சடாமுடி சாமியாரோ, சத்தமாகச் சிரித்து,

"குடிச்சிடு தாயீ...! கொஞ்சம் கசக்கத்தே செய்யும். ஆனா, உடம்புல இருக்கற கொஞ்ச நெஞ்ச விஷத்தையும் இந்தக் கஷாயம் முறிச்சிடும்…" என்று கூறி பிடிவாதமாகக் குடிக்க வைத்தார்.

அதை பருகிய சில நிமிடங்களில் தன் உடலில் இருந்த வலி, சோர்வு அனைத்தும் விலகிச் செல்வதை, மாதங்கியால் உணர முடிந்தது.

‘எப்படி இது சாத்தியம்? ஒரு பச்சிலை திரவத்துக்கு இவ்வளவு சக்தியா?’ என்ற வியப்புடன் அவரிடம் கேள்வி எழுப்பத் தயாரான சின்னவள், அவர் கண்களில் கண்ட ஜ்வாலையில் ஸ்தம்பித்துக் கட்டுண்டாள்.

அவள் எண்ணவோட்டம் அறிந்தது போல மீண்டும் உரக்கச் சிரித்து,

"உன் கர்மக் கணக்கு இன்னும் முடியலை…! நீ தீர்க்க வேண்டிய கணக்கும் முடியலை…! அதான் நாகராஜன் தீண்டியும் பொழச்சுகிட்ட...! அந்த கண்ணகி அம்மன் உனக்குத் துணை இருப்பா…!"

என்று கூறி தன் இடுப்பு சுறுக்குப் பையில் இருந்து, சிறிது திருநீற்றை எடுத்து அவள் நெற்றியில் பூசிவிட்டு, கண் இமைக்கும் நொடிக்குள் மறைந்து போனார்.

தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவர் மாயமாய் மறைந்ததை நம்ப முடியாமல் திகைத்தபடி விழித்தாள், மாதங்கி.

நடந்ததை கனவென்று அவளால் ஒதுக்க முடியவில்லை. அவர் வந்து போனதன் அறிகுறியாக, காற்றில் மிதந்த மூலிகை வாசத்தின் மிச்சம், அவள் நாசியைத் தீண்டி விளையாடியது.

எல்லாம் தன் மனபிரம்மையோ என்று ஒதுக்க முயன்றவளின் கையில் இருந்த காலி மண் கோப்பை, அவளைப் பார்த்துச் சிரிக்க,

தனக்கு நடந்த அனுபவத்தை ஏற்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள், பாவை.

அவர் சென்ற சிறிது நேரத்தில் நித்யா அவந்திகாவை அழைத்துக் கொண்டு, தங்கள் கூட்டத்தின் வைத்தியருடன் மாதங்கியை பார்க்க வந்தார், மாயன்.

சாதாரணமாக எழுந்து அமர்ந்திருந்த மாதங்கியைக் கண்டு அவர்கள் இருவரும் வியந்தபடி நிற்க,

தோழிகள் இருவரும்,

"மாது…எங்களுக்கு எல்லாம் இந்த ரெண்டு நாளா பயங்கரமா பயம் காட்டிட்ட போ…" என மொழிந்து கட்டிக் கொண்டனர்.

தான் சுயநினைவின்றி இரண்டு கிழமைகள் இருந்ததை எண்ணி சற்று நடுங்கித் தான் போனாள், மாதங்கி.

மாயனுடன் வந்த அந்த வைத்தியர், தோழியரை விலக்கி விட்டு, அவளை பரிசோதிக்க ஆரம்பித்தார்.

தன் பரிசோதனைகளை மேற் கொண்டவர், ஒரு வித ஆச்சரியத்துடன்,

"நாகப்பாம்பு தீண்டி இவ்வளவு சீக்கிரம் பொழைச்சவங்கள இப்ப தான் பார்க்கறேன்…" என்று உரைத்தார்.

அதற்குள் தோழிகள் இருவரும் அவர்கள் இன்னும் இரு தினங்களில் சென்னை புறப்பட உள்ளதாக சர்வேஷ்வரன் அறிவித்ததை அவளிடம் இயம்பினர்.

அவர்கள் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாது, புருவம் சுருங்க சிந்தனைவயப்பட்டிருந்த மாதங்கி அவந்திகாவின் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்தாள்.

"ஏதாவது பேசு மாது…." என்று உலுக்கிய நித்யாவிடம்,

‘ஒன்றும் இல்லை' என்பது போல தலையசைத்தாள் மாதங்கி.

நெற்றியில் விழுந்த புருவ முடிச்சுகளுடன், தன் கீழுதடு கடித்து சிந்தனைவயப்பட்டிருந்த மாதங்கியிடம், அப்போது அந்த வைத்தியர் ஒரு குவளையை நீட்டினார்.

அதில் நிகழ் காலம் அடைந்தவள்,

"இப்ப தான், இதே போல ஒரு கஷாயத்தைக் குடிச்சேன்…." என சற்று முன்பு, ஏதோ ஒரு திரவத்தை தனக்கு அருந்தத் தந்தவரின் அடையாளங்களைக் கூறி விவரிக்கவும்,

கேட்டுக் கொண்டிருந்த வைத்தியருக்கும் மாயனுக்கும் கண்கள் விரிந்து கொண்டது.

காரணம் வைத்தியரின் மருத்துவம் பார்க்கும் குடில், மற்ற குடில்களில் இருந்து தள்ளி இருந்தது. அச்சமயம் அனைவரும் முக்கிய கூட்டத்தில் இருந்ததால், மாதங்கி தங்கிய குடிலுக்கு, அவர்கள் ஆட்கள் யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் அவள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து, அது அந்த மலைகளில் உலாவிக் கொண்டிருக்கும் மலைச்சித்தனாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார், மாயன்.

"நீ புண்ணியவதி தாயீ…! அதனால தான் ஐயா தரிசனம் தந்திருக்காரு உனக்கு…. இனி உன் வாழ்க்கைல எல்லாம் ஜெயந்தேன்…" என்றவர், அந்த மலைச் சித்தனின் பெருமைகளை வரிசைப்படுத்தினார்.

"தீர்க்க முடியாத வியாதியைக் கூட சுலபமா தீர்க்கக் கூடிய சக்தி வாஞ்சவரு தாயீ அவரு. ஆனா, அவரா மனசு வச்சால் ஒழிய நம்மால அவரை பார்க்க முடியாது…"

என சொன்னவரின் பேச்சை கேட்டு, மாதங்கிக்கு ஒருமுறை உடல் சிலிர்த்து அடங்கியது.

இருந்தும் அவள் விஞ்ஞான அறிவு தனக்கு ஏற்பட்ட மெய்ஞான அனுபவத்தை, கண்ணை மூடிக் கொண்டு நம்பாமல் பகுத்தறியக் கூறி இடித்துரைத்தது.

அந்த நம்பிக்கையை வைக்கவே தயங்கி புக்தியின் துணையை நாடுபவளுக்கு, இது எல்லாம் ஏதோ 'ஹம்பக்' என்று தானே தோன்றும்!

இந்த மலைச்சித்தனின் சின்ன திருவிளையாடலையே 'ஹம்பக்' என்று ஒதுக்க முயல்பவள், மதுரையில் தனக்குக் காத்து கிடக்கும் அனுபவங்களுக்கு, என்ன பெயர் சூட்டுவாளோ?

சிலை மீண்டு(ம்) வரும்…


cover picture courtesy : monisha​
 

Attachments

  • IMG-20220711-WA0018.jpg
    IMG-20220711-WA0018.jpg
    193.6 KB · Views: 0
Last edited:
Top