இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

பூவிழி அசைவிலே கதை திரி

Status
Not open for further replies.

Bala Raji

Moderator
FB_IMG_1659092875137.jpg


பூவிழி அசைவிலே - 1

காலை தென்றல் தீண்டியதன் மூலம் செவ்வானம் நாணம் கொண்டு ஆதவனின் வரவை ஊருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான்.

பெங்களூருவில் ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் வளர்ந்து உயர்ந்த கட்டிட மாட, மாளிகைகளுக்கு நடுவில் ஒரு வீட்டின் தனியறையில் அழகே உருவாய் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் போல் துயில் கொண்டிருந்தான் விதார்த்.

“பாரு மணி என்ன ஆகுதுனு? இன்னும் சின்னபுள்ள மாதிரி தூக்கம், எழுப்பி ஏதாவது கேட்டா வேல, மீட்டிங், வொர்க்குனு என்னத்தையாவது பிணாத்த வேண்டியது. டேய் விது எழுந்திருடா. இன்னும் எவ்ளோ நேரம் தூங்குவ”.

“புஜ்ஜுமா, புஜ்ஜுமா இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்”.

“விது நீ இப்டிலாம் சொன்னா அடங்கமாட்ட, உன்னை...”. யோசனை முடிச்சோடு விறு விறுவென்று அங்கும் இங்கும் நடந்தவள், ஒரு முடிவோடு அவன் ஸ்மார்ட் போனை எடுத்து,

"கண்ணழகா, காலழகா,
பொன் அழகா, பெண் அழகா"...

சிணுங்கி கொண்டே எழுந்து அவன் உள்ளம் கவர் கள்ளியை பார்த்தவன்,
"புஜ்ஜுமா இதென்ன கேள்வி, ஓ கண்ண பாத்துதான இந்த விது விழுந்தே. சோ உன்னோட கண்ணுதா எப்பவும் அழகு”.

இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள், "டேய் விது போதும் ஓவரா ஐஸ் வப்பே, இந்த கண்ணு உனக்கு அழகாக்கும், உன்னோட
கண்ண விட இது அழகாடா”.

“ஏய் என்னடி இப்டி கேக்குற,
உன்னோட கண்ணு”, அவளை மெத்தையில் இருந்தபடியே இழுத்து இறுக்கி அணைத்து, அவள் மேனியை காற்றுக்கு கூட நோகாமல் வாசம் பிடித்து,

"கடவுளின் வரத்தில் கூர்மையான ஆயுதம் எதுவென்று கேட்டேன் கண்ணே, அவன் உடனே பதில் தந்தான், நான் படைத்த படைப்பில் உன் (பெண்ணின்) கண்தான் சிறந்த ஆயுதம் என்று. வானத்து நிலவின் ஒளியை மிஞ்சும் ஒளி, உன் பூவிழி ஒளி, நட்சத்திரத்தின் மினுமினுப்பை கூட்டும் ஒளி உன் விழி ஒளி, கடவுளின் கருவறையில் இருக்கும் கண்ணின் ஒளியை விட அழகு கொண்ட விழி உன் விழி, என்னை உன்வசம் ஈர்த்த விழி இந்த பூவிழி, உன்னிடம் என்னை மயங்கி கிறங்க வைத்த விழி இந்த பூவிழி, உன் பூவிழி அசைவிலே மனம் கிறங்கி நான் பித்தாய் மாறி போனேனடி, பித்தனின் பித்து மனம் தெளிய உன் விழி அசைவினால் ஒரு முத்தம் கொடுத்து என் உயிரை மீட்டுதா என் கண்ணே...”.

அவனை விலக்கிவிட்டு எழுந்தவள், "என்ன விது காதல் பைத்தியம் முத்திடுச்சா. விழி அசைவினால் முத்தம் தரவா. நல்லா சொன்ன போ. உனக்கு முத்தமும் இல்ல மொத்தமும் இல்ல, சீக்கிரம் கெளம்பி கீழ வா”.

“ஏய் புஜ்ஜீ நில்லுடி நில்லுடி, உன்னோட கண்ண வச்சு என்கிட்ட பேசாம போகாத. பூவிழி அசைவழகி நில்லுடி”.

கையை நீட்டி அவளை அணைக்க போன விதார்த்தின் மீது மழை பெய்ய, "ஆஹா நம் காதல் பற்றியும், உன் கருவிழி அசைவு பற்றியும் சொல்ல நம் வீட்டிற்குள் மழை ஊற்றெடுக்கிறது பார்".

மழை ஊற்றெடுக்குதா மன்னாங்கடி. “டேய், ‘போண்டா சேவல்’, எழுந்துருடா. அந்த கண்ணபாத்து நெஜத்துல எங்கள கொன்னது பத்தாதுன்னு இப்போ காலங்காத்தாலையே கனவு வேற. அதோட ஐய்யாவுக்கு இலக்கிய நடை எழுதுற புலவர்னு நினைப்போ. கவிதையோட தூய தமிழ் வேற. ப்ச்... உதயாக் நல்லாவே இல்ல. நீயெல்லாம் பெங்களூரோட டாப் பிஸினஸ் மேன்னு சொல்லாத வெளில கேட்டா எல்லாரும் சிரிப்பாங்க”, விதார்த்தின் தலையில் பக்கெட் தண்ணீரை கொட்டி, பக்கெட்டையும் அவன் தலையில் கவிழ்த்தி கொண்டு அவனை பார்த்து பொறுமி கொண்டிருந்தாள் அவனின் தங்கை சாத்விகா.

பக்கெட்டை தலையில் இருந்து எடுத்தவன், "ஏண்டி குட்டி பிசாசே இப்போதா அவ கண்ணபாத்து காதல் சொல்லி டூயட் பாட ட்ரை பண்ணிட்டு இருந்தே. எல்லாத்தையும் தண்ணி ஊத்தி கெடுத்துட்டு பேச்சா பேசுற, உன்னை”.

“டேய் அண்ணா வேணாம்டா சொன்னா கேளு, அப்பா கிட்ட சொல்லிடுவே. நீ போயி காந்த கண்ணழகி ஓ புஜ்ஜுமா கூட ரொமான்ஸ் பண்ணு. நா காலேஜ் போகணும்டா, ப்ளீஸ்டா விட்ரு". ரூமை சுற்றி ஓடிய அவளை தூக்கி கொண்டு பாத்ரூம் சென்றவன் அவளை பாத்டப்பில் தூக்கி போட்டான்.

டேய் "போண்டா சேவல்" ப்ளீஸ், அவள் கெஞ்சி கொண்டிருக்கும் போதே விதார்த் அவளை தூக்கி பாத்டப்பில் போட்டான்.

ஆஆஆஆஆஆ, சாத்விகா கத்த...

“ஹாஹ்ஹா, ஹாஹ்ஹா... வெற்றி... ஏண்டி குட்டி சாத்தான் நா உனக்கு போண்டா சேவலா, இப்போ நீதாண்டி ஈமு கோழி மாதிரி இருக்க”.

அவளை பார்த்து அவன் பின்னால் திரும்பி குலுங்கி குலுங்கி சிரிக்க, பின்னாடி திரும்பி நின்ற அவன் பின்பக்கத்தை பார்த்து, கோவத்தோடு விட்டாள் ஒரு மிதி.

“அம்மே அம்மே அம்மம்மே”, சுவற்றில் மோதி திரும்பி நின்று அவளை முறைத்தவன், “என்னையவா மிதிச்ச உன்னை”, அவன் பாத்டப்பில் குதித்து அவள் மேல் நீரை வாரியிறைத்து, அதிலேயே அவளை மூச்சு முட்ட செய்ய, அவளும் பதிலுக்கு விடாது அவனின் தலைமுடியை கொத்தாய் பிடித்து இழுத்து அவனை மொத்தி கொண்டிருந்தாள்.

“அவன போயி எழுப்பிட்டு சீக்கிரம் வாடினு சொன்னா இவளையும் காணோம், அவனையும் காணோம், ரெண்டுல ஒன்னாவது எம்பேச்சை கேக்குதா", வாய் விட்டு புலம்பியபடி விதார்த்தின் அறைக்கு சென்றார் அவனின் தாய்.

நேரே ரூமிற்குள் நுழைந்தவர் விதார்த்தையும், சாத்விகாவையும் தேட, பாத்ரூமில் அடிதடி சத்தம் கேட்கவும் உயிர் வெறுக்க ஓடிச்சென்று அங்கு பார்க்க,

இரண்டு இம்சைகளும் இன்னும் குடுமிபிடி சண்டையை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

“ஏய் எருமைகளா, ரெண்டு பேரும் காலங்காத்தால இப்டி அக்கப்போறு கூட்டீட்டு இருக்கிங்க, உங்க ரெண்டு பேத்தையும்", தன் பருத்த உடலோடு அவர்கள் இருவரையும் அடிக்க வர, விதார்த், சாத்விகா இருவரும் பாத்டப்பில் கை கோர்த்து எழுந்து நின்று, கோரசாய் கையை விலக்கி நிற்க, அவர் கையை தூக்கியவாறு சுதாரிக்க முடியாமல் பாத்டப்பிலேயே விழுந்தார்.

“ப்பூ... அய்யோ காஞ்சு பேபி இப்டி அநியாயமா வழுக்கி விழுந்துட்டியே. நானும், ஈமு கோழியும் விளையாடும் போது நீ தனியா இருந்தா எப்டி. சாத்து”...

சொல்லு,"போண்டா".

“ம்... அமுக்குடி காஞ்சுவ உள்ள", இருவரும் கையையும், காலையும் பிடித்து தண்ணீருக்குள் அமுக்க,
தன் பருத்த உடலோடு மூச்சு வாங்க சிரமபட்டு கொண்டிருந்தார் காஞ்சனை.

“அடேய், அடியேய் விடுங்க ரெண்டு பேரும். ஒங்கப்பா வந்தா கத்த போறாரு. டேய் விது விடுடா அம்மாவ. எம்மா மூச்சு விட முடியலேயே”...

“காஞ்சு பேபி உன்ன அப்டிலாம் விடமுடியாது. நீயாதான வந்த உன்னை நாங்களா கூப்டோம்", விதார்த் சொல்ல,

“ஆமாமா நீயாதான வந்த, சோ சேந்து என்ஜாய் பண்ணலாம்”, சாத்விகாவும் சொல்ல, காஞ்சனை திணறி கொண்டிருந்தார்.

“என்ன நடக்குது இங்க”, கர்ஜித்தவாறு உள்ளே வந்தார் சந்திர மோகன்.

மூவரும் செய்வதறியாது அவரை பார்த்து திணறி நிற்க,

“ம்... ஆர்த் உனக்கு இன்னும் சின்னபுள்ளைன்னு நினைப்பா,
நா உனக்கு பொண்ணு தேடி ஓஞ்சு போயி கெடக்கேன். நீ பாட்டுக்கு இப்டி ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க. சாத்வி உன்னலாம் நாலு சாத்து சாத்தணும் அப்போதா நீயெல்லாம் அடங்குவ, அடக்க ஒடுக்கமா பொண்ணு மாதிரியா நடந்துக்குற".

இருவரையும் வாட்டிவிட்டு காஞ்சனையிடம் வந்தவர், “புள்ளைங்கள நீ வளக்குற லட்சணம் இதுதானா, அதுங்களோட சேந்து நீயும் இப்டி”...

அவர் பேசிக்கொண்டே இருக்க, சந்திர மோகனை பார்த்து மூவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

“ஏய் என்ன பாத்தா எப்டி தெரிது”.

“சத்தியமா வில்லன் மாதிரி தெரில டாட் வில்லன விட மொக்க பீஸ் மாதிரி தெரிரிங்க", விதார்த் சொல்ல,

“ம்... அப்டியா இருக்கு".

“உங்க மொகத்த ரெண்டு நிமிஷம் கண்ணாடில பாத்தா நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பிங்க, இதுல நீங்க எங்க மூணு பேத்தையும் மெரட்டுறீங்களோ. போங்க சந்து”, காஞ்சனை சொல்ல, சந்திர மோகன் அசடு வழிய சிரித்து வைத்தார்.

“நானும் எப்டிலாமோ ட்ரை பண்றே உங்ககிட்ட வில்லனா ஆக ஆனா முடியல. அப்பாவால அது மட்டும் முடியாம போயிடுது”.

இதே மாமனிதர் ஒரு சூழ்நிலையில் குடும்பத்திற்கே வில்லனாக மாற போவது தெரியாமல் கூறினார்.

சாத்விகா இன்னும் சந்திர மோகனை முறைத்து கொண்டு நிற்க,

“செல்ல பொம்மைக்குட்டி, எதுக்குடா அப்பாவ மொறைக்குற. ஓ... உன்னை கொஞ்சம் ஹார்ஷா திட்டுனதுக்கா. சரி ஸாரி. ஏ அம்மால கொஞ்சம் சிரி".

அவள் அப்படியும் முறைத்து கொண்டு நிற்க, கோட் சூட்டோடு நின்றவர் பாத்டப்பில் குதித்து தண்ணீரை அவள் மேல் வாரியிறைக்க,

கொஞ்சம் கோபம் தனிந்தவளாய், “டாட்... என்ன காரசாரமா திட்டுனதுக்கு பனிஷ்மெண்ட், என்னை இந்த போண்டா சேவல் பாத்ரூம்ல இருந்து குதுர சவாரி கூட்டிட்டு போகணும்”.

சாத்வி கேட்தற்கு விதார்த்தும், காஞ்சனையும் ஒருவரை ஒருவர் பார்த்து ஹைபை கொடுத்து சிரித்துக் கொண்டனர்.

“சரிடா சாத்து குட்டி, வா போகலாம்", பாத்டப்பில் இருந்து இறங்கியவர் ஊர்ந்து செல்ல, அந்த மூவரின் செல்ல ராட்சசி சந்தோஷமாய் தந்தையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“டேய் ஆர்த் சீக்கிரம் குளிச்சு முடிச்சு உன் புஜ்ஜுமாவ கொஞ்சிட்டு வா”, காஞ்சனை சொல்லிவிட்டு முன்னே சென்றார்.

விதார்த் குளித்து முடித்து வெளியே வந்தவன், தன் பெட்ரூமின் நாலுபக்க சுவற்றை பார்க்க, அதில் அவன் புஜ்ஜுமா அழகாக கண்ணை காட்டி அவனை சித்தம் பிதற்றி தடுமாற வைத்து கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் அவளின் அழகிய விழியை ரசித்தவன், அதி கம்பீரமாய் கிளம்பி கோட், சூட்டோடு, கண்ணில் கூலரோடு டைனிங் டேபிள் நோக்கி வந்தான்.

விதார்த்தின் அழகு பற்றி சொன்னால்,

வஞ்சியவன் பாதம் பார்த்தால் வஞ்சிகொடியென இருக்கும்
எந்த பூவையும்
காதல் கொண்டு
கவிபாடதான் நினைப்பாள்,

தேக்கு மரம்தான் இவனின்
வனப்பு தேகம்,
தேன் கொண்ட மங்கை
இந்த தேக்கு மர தேகம் கண்டு
கவிழாமல் செல்லமாட்டாள்,

செந்நிறம் கொண்ட உதடு
செந்நிற குருதியின் அழகை விட
மிதமிஞ்சிய அழகு,
செந்நிற மங்கையும்
செஞ்சுடலை கன்னியும்
செங்காந்தள் மலர் போல்
விரிந்து தான் போவாள்
அந்த இதழ் மயக்கத்தில்,

மன்மதனின் மறுஉருவம் இவன்
மங்கை கன்னி மணக்க என்னும் தேவன் இவன்
பூலோக மண்ணில் பிறந்த
பூவிழியின் அழகிய சொந்தக்காரன் இவன்.
பூவிழிக்காகதான் காத்திருக்கிறான்....
பூவிழியால் எங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?.

டைனிங் டேபிள் வந்தவன், காஞ்சனை சாப்பாடு பரிமாற அன்றைய பிஸினஸ் டீலிங்சை பற்றி யோசித்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

விதார்த் எம்பிஏ படித்து முடித்த கோல்டுமெடலிஸ் பட்டதாரி. பெங்களூருவின் டாப் பிசினஸ் மேன் வரிசையில் குறுகிய காலத்தில் உயர்ந்து நிற்பவன் இவன் ஒருவனே. கண்ணுக்கு தெரியும் எதிரியும், கண்ணுக்கு தெரியாத எதிரியையும் சாமர்த்தியமாய் கையாள தெரிந்த பிஸினஸ் தந்திரி இவன்.

காஞ்சனை-சந்திர மோகன் இருவரும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். சந்திர மோகன் சொந்தமாய் ஒரு ஷேர் மார்க்கெட் பிஸினஸை ஆரம்பித்து அதில் கொஞ்சம் அல்ல நிறைய தோய்வு கண்டு இருக்க, அந்த சமயம் பார்த்து விதார்த் பிறந்தான். அவரின் நல்லநேரம் அவன் பிறந்த நொடியில் இருந்து அவரின் ஷேர்ஸ் அனைத்தும் நல்ல விலையில் உயர, தன் ஆருயிர் அதிர்ஷ்ட புதல்வன் எது கேட்டாலும் தட்டாது செய்து பழகினார். அப்படி விதார்த் கேட்டு அடம்பிடித்து வந்த அழகிய குளிர் பூமிதான் பெங்களூர். ஸ்கூல் படிக்கும் சமயம் விதார்த் குடும்பத்தோடு பெங்களூரு சென்று அங்கேயே வசிக்க சொல்ல, சந்திரமோகனும் - காஞ்சனையும் அவன் விருப்பமே பிராப்தம் என்று இங்கு வந்து செட்டில் ஆகிவிட்டனர்.

பெங்களூர் வந்த இரு ஆண்டுகள் கழித்து பிறந்தவள்தான் சாத்விகா. டாக்டர் ஆவது ஒன்றுதான் தன் வாழ்வின் லட்சியம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இன்று சந்திர மோகனோடு பெங்களூருவின் புகழ் பெற்ற ஒரு மருத்துவ கல்லூரியில் அப்ளிகேஸன் அளிக்க தான் தயாராகி கொண்டிருக்கிறாள்.

சாப்பிட்டு கொண்டிருந்த விதார்த்திடம், “ஆர்த் இன்னிக்கு ஈவினிங் பொண்ணு பாக்க போகணும். சோ உன்னோட வொர்க் எல்லாம் பாஸ்டா முடிச்சுட்டு பொண்ணு அட்ரஸ் சென்ட் பண்றே அங்க வந்துரு ஓக்கேவா”.

“டாட்... சரியா பாத்திங்களா ஏ புஜ்ஜுமா மாதிரிதான இருப்பாங்க".

“மே பி இருக்கலாம் ஆர்த். நா அப்டி இருக்கணும்னுதா நினைக்குறே. உன்னோட மாமும் டெம்புள் டெம்புளா போயி ரொம்ப டையர்டாகிட்டா”.

“ஆமா இந்த போண்டா சேவல் பெரிய நினைத்தேன் வந்தாய் விஜய், ரம்பாவுக்கு இடுப்புல மச்சம் இருக்குற மாதிரி, இவரு அந்த கனவுல வர்ற கண்ண பாத்துதா தாலி கட்டுவாரு. இதோட நீங்க பாக்குற பொண்ணு நூத்தி ஒன்னுப்பா. இவளையும் இவே ரிஜெக்ட் பண்ணதா போறான். நீங்களும், அம்மாவும் தேவையில்லாம போயி அலைஞ்சுட்டுதா வர போறீங்க”, சாத்விகா கூறியபடியே மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.

“ஏய் என்னடி, அவங்கிட்ட எதுக்கு இப்டி சொல்லுற. அவனுக்கு அவே கனவுல வர்ற ஏ செல்ல மருமக புஜ்ஜுமாவதா புடிச்சுருக்கு. போற எடத்துல எல்லாம் அந்த பொண்ணு இல்லாம இருக்கவும் இவே வேண்டாம்னு சொல்லுறான் அவ்ளோதா”, காஞ்சனை தன் மகனுக்கு வக்காலத்து வாங்க,

“அதான்மா அந்த புஜ்ஜீமாவ பாக்க காத்திருக்கிற உன்னோட பையே, பாக்க போற பொண்ணுங்கள போட்டோல பாத்தா அந்த பொண்ணு வீட்டுகாரங்களுக்கு செலவாவது மிச்சம் ஆகும்ல”.

“அப்டி பாக்கலாந்தா ஈமு கோழி ஆனா அந்த அழகான கண்ண நேர்ல போயி பாக்கணும் அது தனி கிக் தெரியுமா". ஒரு வாய் சாப்பாட்டை அள்ளி வாயில் வைத்தவன், “ம்... வாரே வா... அது எம்புட்டு அழகான கண்ணு தெரியுமா. ஐ லவ் மை புஜ்ஜுமா, அந்த பூவிழிய பாக்கதான காத்திருக்கே".

“டேய் போதும்ண்டா சாப்டுட்டு கெளம்பு, ஈவினிங் வந்து மீதி பேசிக்கலாம்", சந்திர மோகன் சொல்ல,

“ஊருல உள்ள பொண்ணு எல்லாம் இவே பின்னாடி சுத்துனா, இவே உயிரோட இருக்காளா, இல்லையானு தெரியாத ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கான். ஹைய்யோ, கொடுமடா”, சாத்விகா மனதில் நினைத்து தலையில் அடித்து கொண்டாள்.

நீலவிழி கொண்ட
நீர்த்திவலை கண்ணழகி
நீலகண்ணன் மனம் அறிந்து
நீண்டநாள் சந்தோஷமாய் வாழ வருவாளா.

விதுவின் விழி அழகா
விழியின் விழி அழகா.

நித்தம் இரவில் வலை எனும்
வாள்வீசி கொல்லும்
பூவிழியை என்று காணும்
காலம் வாய்க்குமோ.

பூவிழி நீ
பாவிழி நான்
பாவலராய் கரைந்து நிற்கிறேன்
பாதை தெரியாமல் உறைந்து நிற்கிறேன்.

விதார்த் உறைந்து நிற்க காரணமானவள் வருவாளா?


ஆசைவுகள் தொடரும்...[/ICODE]
 

Bala Raji

Moderator

பூவிழி அசைவிலே-2

அகரம் கொண்ட அகன்ற நதி
காவிரியில் கை கோர்த்து
கவியில் நிந்தனை வைத்து
சிகையில் சிந்து பாடி
மதியில் மையம் கொண்டு
மத்தியில் நிற்போரை பித்தாய் மாற்றி சித்தம் குழைய வைக்குமாம்.

கண் எனும் பொன்மலர் கொண்டு காண்போர் எவரையும் பித்தாய் ஆக்கும் அழகிய பொன்வனப்பு கொண்ட சிங்கார ஊர்தான் குளித்தலை.

கடம்பவனம் என்ற பெயர் கொண்டு நவிழப்பட்ட, குளிர் வனப்பகுதியான “குளிர் தண்டலைதான்”, காலப்போக்கில் மறுவி குளித்தலை என்றாகி போனது.

கரூர் மாவட்டத்தின் மத்தியில் முசுறிக்கு அடுத்து அமைந்துள்ள ஓர் அழகிய சிற்றூர். காவிரியின் தென்பென்னை வஞ்கம் இல்லாமல் வாஸ்து செய்யும் பூமி. கர்நாடகாவின் குடகுமலை பகுதியில், “ஆடு தாண்டும் காவிரி”, என்று கூறப்படும் காவிரி, குறுகிய வடிவில் குளித்தலை நுழையும் போது, “காகம் கடக்கா காவிரி”, என்ற சிறப்புடன் பரந்து விரிந்து காட்சி தருகிறது.

இந்த பூமியில் விவசாயம் தான் பிராப்தமாக இருக்கிறது. வாழை, கரும்பு, நெல், வெற்றிலை இது நான்கும் தான் பக்குவம் பார்த்து இந்த பூமியில் பயிரிடப்படுகிறது.

மும்மாரி பெய்யும் மேகம்
மூன்று போகம் விளைவிக்க நினைத்தால்
முந்நூறு நாட்கள் மூச்சடக்கி
முன்னவர் (கடம்பவனேஸ்வரர்) சொல் கேட்டு
பன்னீர் சொட்டை
முல்லை கொடி போல் பொழியுமாம்.

இங்கு விளையும் பல்வகை வாழை மிக சிறப்பு மிக்கது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு இங்கு விளையும் வாழையைதான் வீட்டு விசேஷம், மருத்துவம் சம்மந்தபட்ட பல தேவைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். வீட்டுக்கு வீடு எது இருக்குமோ, இல்லையோ ஆனால் மருத்துவ சிறப்பு மிக்க வாழை கண்டிப்பாக இருக்கும்.

முதலில் பயிரிடப்படும் வாழைக்கு பின் கரும்புதான் இப்பகுதியில் பிராப்தம். இங்கு சுற்று வட்டார பகுதியில் சர்க்கரை ஆலை மிகுதி என்பதால் கரும்பு பயிரிடப்படுகிறது.

நெல்...
காவிரி ஆற்று நீரில் விளையும் நெற்களஞ்சியம் பற்றி சொல்லத்தான் வேண்டுமோ?. குவிந்து நிற்கும் நெற்களஞ்சியம் குளித்தலையின் கூரான மணிக்களஞ்சியம்.

வெற்றிலை...
தண்டுக்கும் நோகாமல்
தண்டை தழுவி வளரும்
நுனிக்கும் நோகாமல்
தனஞ்சயனுக்கு அள்ளி அள்ளி சந்தோஷத்தை வழங்குவதே வெற்றிலை.

குளித்தலையில் கடம்பவனேசுவரர் கோயில் சிறப்பும், கடாட்ச்சமும் நிறைந்த கோயில். இந்த கடம்பவனேசுவரருக்கு வருடத்தில் தைத்திங்கள் மட்டும் அறுவடை செய்த முதல் போகத்தை படையலிட்டு தை பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. தை பூச திருவிழாவின் போது விரதம் காத்து பக்தி சிரத்தையாய் இருக்கும் கன்னி பெண்களுக்கு ஓராண்டுக்குள் திருமணம் நடக்கும் என்பது கடம்பவனேசுவரர் வாய் மொழி கூற்று. ஊரை பற்றி பறை சாற்றிய தகவல் போதும். விதுவின் விழியழகியை காண செல்லலாமா.

அதிகாலை 4 மணி.

கனவில் வரும் கள்ளி யாரென அறியாமல்,
கள்வன் காதல் கொள்ள நினைக்கிறான்,
ஆனால் கன்னியோ...

ஆழ்ந்த நித்திராதேவியை ஆரத்தழுவி உறங்கிக் கொண்டிருந்தாள் விதுவின் அழகி.


வஞ்சினம் கொண்டு
வல்லினம் கண்டு
மெல்லினம் மென்று
மெலிர் கொடியால் செய்யப்பட்டவள்
இந்த பூம்பாவை,


சந்திர ஒளியில்
சமஒளி எடுத்து
சந்திர திலகம் இடப்பட்ட
கூர்மையான நெற்றி,


மேகத்தின் நீலநிறம் போல்
நீலத்தை கொட்டி வார்க்கப்பட்ட
நீலநிற பூவிழி,


மங்கையின் இதழ்
மலரிதலும் அல்ல
உலரிதலும் அல்ல
அலரில் கலந்த பூவிதழ்.....


இடை எனும் கொடி
அல்லிக்கொடியும் அல்ல
மல்லிக்கொடியும் அல்ல
மரகதகற்கள் பதிக்கப்பட்ட
மாணிக்கதேர் அவை.


பால்நிறம் அல்ல இந்த பூவழகி,
பால் வண்ண நிறம் கூட பொறாமை படும் தேன் வண்ண அழகி. தேனில் ஊறிய மதுகிண்ண அழகி. தேன் உண்டும் வண்டையே தேன் எடுக்க தூண்டும் தேர் விழியழகி. பிரம்மனின் அழகிய படைப்பு இவள்
பிரம்மனின் அழகிக்கு கூட கிடைக்காத அரிய படைப்பு இவள். கண்ணின் ஒளி பார்த்தால் கண்ணன் கூட மயங்கிதான் போவான். இந்த தேவதை அழகை கண்டு பாற்கடலில் துயில் கொள்ளும் பரந்தாமனே மெய் மறக்கும் போது பாற்கடல் வேந்தன் கனவில் உளருவதற்கு தகும் தானே.

சிரித்த முகமாய் துயில் கொள்ளும் இவளின் அழகை பார்த்தால் ஸ்ரீதேவி கூட மெய்மறந்து தன்னை தொலைத்து போவாள். பாரம்பரியம் சூழ பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரிய வீடு. நடுமுற்றத்தில் பெரிய அகன்ற தூண் வைத்து கட்டப்பட்டது. பல அறைகளும், மேல் மாடி சுற்றமும் வைத்து கட்டப்பட்டவை. கீழறையில் இருக்கும் வலது பக்க அறையில் துயில் கொண்டிருந்தாள் விழியழகி.

அவளை நோக்கி வந்தது ஒரு பருத்த உருவம். மேனி முழுவதையும் நகைகள் மறைத்திருக்க, வெற்றிலை போட்டு போட்டு சிவந்து உமிழ்ந்து போயிருந்த பருத்த அதரங்கள் மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க, அழகியை முறைத்து கொண்டு நின்றார், வள்ளி, மரகதவள்ளி.

விழியழகி அருகில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்தவர் ஆவேசத்தோடு அவள் முகத்தில் விசிறியடித்தார்.

அடித்து பிடித்து எழுந்தாள் விழியழகி, நீலவிழி கண்கள் பட்டாம்பூச்சி போல் மின்ன, இமை மறைத்தாடும் கார்மேக குழல் காற்றின் வேகத்திற்கு ஏற்றது போல் அசைந்தாட, வெண்டை விரல் வெள்ளரி பிஞ்சு போல் தளர்ந்து நிற்க, நீலநிற விழி அசைவால் மரகதவள்ளியை ஊற்று பார்த்துவிட்டு,

"சி... சி... சித்தி... என்ன ஆச்சு... ஏ தண்ணிய மொண்டு மேல ஊத்து...”,

“அடி.... எடுபட்ட சிறுக்கி மவளே... விடிஞ்ச அம்புறம் தூக்கி போட்டு இப்போ கேள்வி வேற கேக்கியோ... ஆத்தாள முழுக்குனவளே எழுந்து போயி பால கற. சொசுட்டி வண்டி வந்துரும்”.

இரவெல்லாம் மாவாட்டி மாவாட்டி கன்றி போயிருந்த கைகள் அசைக்க முடியாமல் கூட ரணமாய் வலிக்க, இவள் பால் கறக்க மாட்டேன் என்று காரணம் சொல்லியா மறுக்க முடியும். ராட்சசி அதற்கும் அல்லவா வார்த்தையால் கர்ணம் வீசி கொல்லுவாள். நீண்டு காற்றில் ஆடிய கூந்தலை அள்ளி சொருகியவள் கொல்லைபுறம் சென்று முகம் அலம்பி வீட்டு வாசலில் சாணி கலந்து தெளித்துவிட்டு, கோலம் போட்டவள், பாத்திரத்தை எடுத்து கொண்டு மாட்டு தொழுவத்திற்கு சென்றாள்.

“லட்சுமி. ஸாரிடா செல்லம் நைட் கொஞ்சோ வேலை இருந்துச்சா அதா சீக்கிரம் எந்திக்கமா தூங்கிட்டேன். இரு ஓ பாப்பாவ அவுத்துவிடுறே”. பசுவின் முதுகை தடவிவிட்டு அதன் கன்று குட்டியை அவிழ்த்துவிட்டாள். இளங்கன்றுகுட்டி தாயின் மடியை முட்டி முட்டி குடிக்க, அந்த சந்தோஷ தருணத்தை ரசித்தபடி சற்று நேரம் அமர்ந்திருந்தாள் விழியழகி.

“ஏய், இன்னும் என்னடி பண்ற? பால் கறந்துட்டியா? இல்லியா? மரகதவள்ளி வீட்டிற்குள் இருந்து கத்தினார்.

“சே.... எப்போ பாத்தாலும் இந்த சித்தி நொய்யி நொய்யினு. லட்சுமி நா பால் கறந்த அப்புறோம் பாப்பாவ அவுத்து விடுறேன். இப்போ பாப்பாவ புடிச்சுக்கிறேன்”.

அது தன் குட்டியை ஏக்கமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் நாக்கால் நக்கிவிட்டு அவள் பால் கறக்க விலகி நின்றது.

தான் கட்டியிருந்த தாவணி பாவாடையை எடுத்து சொருகியவள், லட்சுமியின் மடியை தண்ணீர் கொண்டு சுத்தபடுத்திவிட்டு, இரண்டு கைகளிலும் விளக்கெண்ணை தடவி இரண்டு சொட்டு பாலை பூமாதேவிக்கு விட்டுவிட்டு மிச்ச பாலை கறந்தாள். அவள் வெண்நுரை ததும்பும் பாலை கறந்து முடிக்கும் முன் அவள் வாழ்க்கை புத்தகம் ஓர் அலசல்.

விழியழகியின் தாய் - தந்தை, சுந்தரம் - இலக்கியவதி. சுந்தரத்திற்கு திருமணமான கொஞ்ச நாட்களில் அவருடைய தாய், தந்தையர் காலமாகிவிட இலக்கியவதிதான் சுந்தரத்திற்கு எல்லாம். சுந்தரத்திற்கு உடன்பிறந்தவர்கள் ஒருவரும் இல்லை. ஆனால் இலக்கியவதிக்கு, மரகதவள்ளி என்ற தங்கையும், அவருக்கு அடுத்து சோலைமலை என்ற ஒரு தம்பியும் உண்டு.

இந்த காலத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலே சண்டை வரும் நேரத்தில் வாயும், வயிறும் வேறு வேறாகி போகும். அப்படி இருக்க, இலக்கியவதியின் தந்தைக்கு இரு தாரம். இதில் இலக்கியவதி மூத்த தாரத்துக்கு பிறந்த பெண். மரகதவள்ளியும், சோலைமலையும் இளைய தாரத்திற்கு பிறந்தவர்கள்.

இரண்டாம் தார பிள்ளைகள் அவர்கள் என்று இலக்கியவதி ஒரு தடவை கூட பாரபட்சம் பார்த்தது கிடையாது. அவர்கள் இருவரையும் தன் தாய் வயிற்றில் பிறந்த சொந்தம் போல் பாசம் காட்டி வளர்த்தார்.

விழியழகிக்கு ஐந்து வயது இருக்கும் சமயம் இலக்கியவதிக்கு என்னவென்று அறிய முடியாத தீராத வியாதி வர, அவர்களின் குக்கிராமத்தில் இருந்த மருத்துவ வசதிக்கு அவரை பிழைக்க வைக்க முடியாது என்று அத்தனை மருத்துவர்களும் கைவிட்டுவிட, சுந்தரம் சல்லி சல்லியாய் உடைந்து போனார். ஐந்து வயது குழந்தைக்கு என்ன தெரியும், தன் தாய் சீக்கிரம் தன்னை விட்டு பிரிந்து விடுவார்கள் என்றா? அப்படியே பிரிந்தாலும் திரும்பி வரமாட்டார்கள் என்று சொல்லியா புரிய வைக்க முடியும். சுந்தரம் உடைந்து நின்ற போது மரகதவள்ளியின் மனம் புத்திசாலி தனமாய் திட்டம் தீட்ட தொடங்கியது.

வீட்டிற்கு ஒரு வாரிசு இவள், சுந்தரத்தின் சொத்து ஓரளவு பெருகி கிடக்கிறது ஆண்டு அனுபவிக்க நம் பிள்ளை இருந்தால் எப்படி இருக்கும் என்று மரகதவள்ளியின் மனம் திட்டம் தீட்ட, சோலைமலையும் அந்த திட்டத்திற்கு உதவி செய்தான்.

இலக்கியவதியிடம் சென்று பேசியவர் அவர் மகளை தன் மகளாய் பார்த்து கொள்வதாய் சொல்ல, இலக்கியவதி தன் பிள்ளையை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து, சுந்தரம் - மரகதவள்ளியின் கையில் ஒப்படைத்தார். அடுத்த ஒருவாரத்தில் திருமணம் அரங்கேறி போனது. சுந்தரத்திற்கு இலக்கியவதி இருக்கும் போது மரகதவள்ளியை மணந்தது மனதிற்கு ஒப்பாமல் இருக்கவே, மரகதவள்ளியிடம் இருந்து விலகியே இருந்தார்.

ஒரு மாதம் வரை இன்பமாய் அந்த வாழ்வை ஏற்று கொண்ட மரகதவள்ளிக்கு சுந்தரத்தின் பாரமுகம் கோபத்தை தர, வீட்டில் யாருமில்லா நேரத்தில் இலக்கியவதியிடம், கொடுஞ்சொல் கொண்டு அவரை வார்த்தையால் வதைக்க, தன்னவனையும், தன் பிள்ளையையும் கூட கண்ணில் காணாது அவர் உயிர் பூலோகத்தை விட்டு பிரிந்தது.

வயலுக்கு சென்றுவிட்டு வந்த சுந்தரம் இலக்கியவதி மேல் விழுந்து கதற, விழியழகி அவரையும், இலக்கியவதியையும் பார்த்து பார்த்து அழுக, அதன்பின் சுந்தரம் நடைபிணமாகி போனார்.

அவர் மொத்த உலகமும் அழகி மட்டும்தான். மரகதவள்ளியையோ, சோலைமலையையோ அவர் ஒரு பொருட்டாகக் கூட கண்டு கொள்ளமாட்டார்.

பல காலங்கள் பொறுமை காத்த மரகதவள்ளியால் விழியழகி பருவ வயதை அடையும் சமயம் பொறுமையாக இருக்க முடியவில்லை.

சுந்தரத்திடம் சென்றவர் விழியழகியை காட்டி சண்டையிட, சுந்தரத்திற்க்கும் - மரகதவள்ளிக்கும் சண்டை முற்றி போக ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே இலக்கியவதி இல்லாமல் நடை பிணமாய் வாழ்ந்தவர் வள்ளியின் சுடு சொல் தாங்காமல் அதீத மன உளைச்சலில் இருந்தவருக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிவிட விழியழகி நிலைதான் கவலைகிடமாகி போனது.

காலை நான்கு மணிக்கு எழ வேண்டும், வீட்டில் உள்ள அனைத்து வேலையையும் செய்ய வேண்டும். மாலை சீக்கிரமே வீட்டிற்கு வர வேண்டும். இதுபோல் இன்னும் பல இம்சைகள். அனைத்தையும் தன் தந்தைக்காக பொறுத்து கொண்டாள் விழியழகி.

பாலை கறந்து முடித்தவள் சொசைட்டி வேனில் பாலை ஊற்றிவிட்டு திரும்ப, சோலைமலை தள்ளாடியபடியே வந்தான்.

“ஏ அழகி... ஏ பொண்டாட்டி. என்னடி பண்ற. மாமே வந்துருக்கே ஆசையா கிட்ட வந்து”... விழியழகி முகம் சுழித்து நிற்க,

“என்னடி ஆத்தாள முழுங்குனவளே, நீ இப்டி கோணிக்கிட்டு பாத்தா நா சும்மா விடுவேனா. வாடி இங்க”, சோலை, விழியழகியின் கை பிடித்து இழுக்க நினைத்து கையை கொண்டு போக, அதற்க்கு முன் அவன் பிடதியில் விழுந்த அடியில் பொறி கலங்கி கீழே விழுந்தான்.

புஜம் இரண்டும் திமிறி துடிக்க, தீப்பொறி கண்கள் இரண்டும் கோவத்தில் சிவக்க, களை வெட்டி உரமேரிய கை வேட்டியை இழுத்து பிடித்து மடித்து நிற்க, செதில் செதிலாய் இருந்த விரிகோடுகள் கொண்ட வயிற்று பகுதி அணிந்திருந்த வெள்ளை பணியனை தாண்டியும் விரைத்து புடைத்து திமிறி தெரிய, தலையில் கட்டிய துண்டோடும், கலைந்து நின்ற கேசத்தோடும், பட்டரையாய் இருந்த மார்பு கோவத்தில் ஏறி இறங்க சோலையின் வயிற்றில் ஓங்கி ஒருமிதி.

குடித்த சரக்கு அனைத்தும் வெளியே வாந்தியாய் கொட்ட, கூளம் கட்டி வைத்திருந்த சாட்டையை எடுத்து சக்கை சக்கையாய் பிழிந்தான் அவன்.

“நிலவணா சொன்னா கேளுங்க. மாமாவ விடுங்க செத்துட கித்துட போகுது”.

“நீ சும்மா இரு அழகி. எம்புட்டு தெனாவெட்டு இருந்தா உன்னைய கட்டிக்க சொல்லி கேப்பான். ஓ வயசு என்ன, அவே வயசு என்ன. பிச்சைக்கார பய. இன்னிக்கு அவன ரவ ரவையா உரிக்குறதுதே ஏ மொத வேலையே”.

“அய்யோ அண்ணா கேளுங்க சித்தி வந்துட போகுது. விடுங்க அண்ணா”.

அவன் அப்படியும் விடாமல் சோலையை மாற்றி மாற்றி சாத்த,

“ப்ச்... போச்சு போச்சு விட்டா அண்ணே இவன அடிச்சே கொன்னுடும். இப்போ துகி இங்க வந்தாதா அண்ணன சமாதானபடுத்த முடியும்”.

வேகமாய் கொள்ளைபுற சந்தில் ஓடியவள் இரண்டு வீடு தள்ளி கோலம் போட்டுக் கொண்டிருந்த துகிராவை அழைத்தாள். “அடியே... அடியே துகி”...

அனிச்ச மலர் குழல் அழகி, அகன்ற விழி பார்வை அழகி, வெள்ளை நிற பூவழகி, தென்றலே கொஞ்சி விளையாட தோன்றும் மேனி அழகி. தன் பருவ அழகை மறைத்து வைத்தவள் சிரித்த முகமாக திரும்பி பார்த்தாள்.

“ஏ அழகி என்னா புள்ள, எதுக்கு இப்டி மூச்சு வாங்குற. என்ன விஷயம்”.

“சீக்கிரம் வீட்டுக்கு வாடி, அங்க ஓ பொழில் மாமா”...

“ப்ச்... ஆரம்பிச்சுருச்சா. ஓ மாமாவ போட்டு மிதிச்சுகிட்டு இருக்கா? இதுக்கு எப்போ பாத்தாலும் இதே வேலைதா. யாரையாவது காலைல தூக்கி போட்டு மிதிச்சாதா அதுக்கு காலம்பர பொழுதே விடியும்”, துகிரா அலறிக்கொண்டே விழியழகியின் கை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

அங்கே பொழில் நிலவன், சோலைமலையை இன்னும் வெறி கொண்டு புரட்டி எடுத்து கொண்டிருக்க,

“ஏ மாமா, ஏ மாமா. காலம்பர எதுக்கு இப்டி அக்கப்போறு கூட்டுற, வா இந்தபக்கம்”, துகிரா அவனை பிடித்து இழுத்தாள்.

“ஏய், விடுடி தங்கச்சிய அசிங்கமா பேசுன இவன”... துகியின் கையை விடுவித்துக் கொண்டே ஓடிவந்து சோலையின் சங்கில் ஒரு மிதி.

“ஏய் என்னடி இந்த பக்கம் ஒரே சத்தமா இருக்கு”, மரகதவள்ளி கேட்டுக்கொண்டே வந்தார்.

துகிரா அதற்குள் பொழில் நிலவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்த கிணற்றடி பக்கம் மறைய,

“ஐய்யோ ஐய்யோ, எய்யா ராசா, எந்தம்பி உனக்கு என்னய்யா ஆச்சு. ஏ சிறுக்கி புள்ள எதுக்குடி இப்டி கெடக்குறான், என்னடி ஆச்சு. நீ ஏதாவது செஞ்சியா”.

மரகதவள்ளி அழகியை பார்த்து கேள்வி கேட்கவும், துகிரா, நிலவனை முறைத்து, “பாரு மாமா எல்லாமே உன்னாலதா, இப்போ மட்டும் அழகிக்கு உன்னால ஏதாவது பஞ்சாயத்து வரட்டும், உன்னை வெளுத்து கட்டிறேன்”.

மூச்சு காற்று மேலே தீண்டும் அளவு நெருங்கி நின்று அவனை வசைபாடிக் கொண்டிருந்தாள் துகிரா. அவள் பேச பேச இடையோடு ஆரத்தழுவி அவளை இறுக்கி அணைத்தவன், “ன்னாடி வந்ததுல இருந்து கட்டிக்க போறவேன்னு மரியாத கொஞ்சுங்கூட இல்லாம, மீன்குஞ்சு மாதிரி துள்ளுறவ”.

அவனை இன்னும் அதிகமாய் இறுக்கி அணைத்தவள், “பணியனை இழுத்து பிடித்து அவன் மூச்சு காற்றின் வாசம் வாங்கி கொண்டே, ‘டேய் காட்டான்’.

அவன் சண்டியர் முழி பெரிதாய் விரிய, “ன்னாது காட்டானா உன்னை...”, பொழில் நிலவன் கையை ஓங்க,

“அடிச்சுருவியா, அவ்ளோ சண்டியர் தனம் இருந்தா நிலவே பொண்டாட்டிய தொடுறா”.

“ஏய் என்னடி அடிக்கமாட்டேன்னு உனக்கு நினைப்பா. இழுத்து புடிச்சு செவில்ல ஒன்னு விட்டேன்னு வையு”.

“மாமா செவுல்ல விடுவியா. பாப்பா பாவம் இல்ல. ஏ கண்ண பாத்து உனக்கு காதல் வரல. உம்...”.

“ஏ போதும்டி மனுஷே அவஸ்த புரியாம, முத்தம், கித்தம்னு ம்ஹூம்”. தலையில் கிடந்த துண்டை எடுத்து உதறி அவளை விலக்கி நிற்க வைக்க, அவள் இன்னும் பசை போல் பசக்கென்று அவனை ஒட்டிக்கொண்டாள்.

இருவரும் சூழ்நிலை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்து தொலைந்து நின்றார்கள். (ஹீரோ, ஹீரோயின் காதலுக்கு முன்னாடி இதுங்க லவ் சீன் பயங்கரமா இருக்கோ, அடுத்த சீன்ல கம்மி பண்ணிடலாம்...)

ஊரின் பெரிய தலைக்கட்டு கடம்பவன் - கோதையின் ஒரே ஒரு ஆசை புதல்வன்தான் பொழில் நிலவன்.

உலகநாதன் - தாமரை செல்வி இருவரின் இரு செல்வங்கள் தான் வெய்யோன், துகிரா.

கடம்பவனும், தாமரை செல்வியும் உடன்பிறப்புகள். கோதையும், உலகநாதனும் உடன்பிறப்புகள். இவர்கள் பரம்பரையில் பெண் குடுத்து பெண் எடுக்கும் வழக்கம்தான் காலந்தொட்டு காலம் பின்பற்றபட்டு வருகிறது.

“ஏ சொல்ல போறியா இல்லையாடி. சிறுக்கி. எதுக்கு இப்டி கடம்பே கோயிலு நிலை கல்ல திண்ணவ மாதிரி நிக்குற”.

“சி... சி... சித்தி... அது வந்து, நா பால் கறந்துட்டு கிணத்து பக்கம் வந்தேனா, வந்து பாக்கும் போது மாமா கீழ விழுந்து கிடந்துச்சு. எனக்கு வேற எதுவும் தெரியாது. நல்லா குடிச்சதால அதுக்கு நிதானம் தெரில”.

“ஏ உன்னை... புள்ள கீழ வழுக்கி விழுகுற வரை சும்மாவா இருந்த. தடிமாடு, தண்டசோறு”.

“அக்கா. குறுக்கு ஒடஞ்சுருச்சு போல, வா வந்து தூக்கு. ஆமா எனக்கு என்ன ஆச்சு”.

“ஆ... வெண்ணை விளக்கெண்ணை ஆச்சு. இந்த காலங்காத்தாலையே உனக்கு எப்டிடா சரக்கு கிடச்சுச்சு. அதுவும் இம்புட்டு போதை ஆகுற மாதிரி. எவே தோப்புல ஏறி கள்ளு எறக்குன, இன்னிக்கு எவ எவ வந்து வீட்டு வாசல்ல கத்த போறாளோ. டேய் டேய் எழுந்திச்சி தொலடா”.

கையை கிணத்தடி மேட்டில் ஊன்றி தட்டும், தடுமாறியும், எழுந்தும் எழ முடியாமலும் சோலை எழ, மரகதவள்ளி ஓடிவந்து அவனை பற்றி தூக்க, சோலை அவரையும் இழுத்து கொண்டு பட்டாபட்டியோடு தடுமாற, இந்த சந்தர்பத்தைத்தான் லட்சுமி எதிர்பார்த்து காத்திருந்தது போலும், முன்னத்திங்கால் இரண்டையும் மண்ணில் தேய்த்து, கொம்பை எக்க சக்க சக்கமாய் சிலுப்பிவிட்டு கழுத்தில் மணி குலுங்க பாய்ந்தோடி வந்து, இருவரின் பின்பக்கத்தில் ஒரே பாய்ச்சல்...

“அய்யய்யோ... அய்யோ, ஐய்யையோ... இந்த பாவிய தூக்க வந்து தேவையா எனக்கு இது. எங்க அவே”. மரகதவள்ளி கிணற்றின் மேல் பிடியில் தொங்க சோலை அவரின் காலை பிடித்து ஊஞ்சல் ஆடுவது போல் தொங்கி கொண்டிருந்தான்.

“பெரிய ஊஞ்சல்ல கயிறு கட்டி ஆடுற சின்னபுள்ளன்னு நினைப்பு. டேய் கிணத்து திண்டு மேல தொங்குனா எதுக்குடா சேலைய புடிச்சு இழுக்கவே. அழகி, அழகி அடியே எங்கடி போன. இதுதா நேரம் பாத்து பழி வாங்குறதா. அடியே கைல சிக்குன...”, லட்சுமி தலையை திருப்பி கொம்பை மீண்டும் சிலுப்ப வள்ளியும், சோலையும் கிணற்றுக்குள் விழுந்தனர்.

இந்த பக்கம் அழகியும், வெய்யோனும் விழுந்து விழுந்து சிரிக்க, “அண்ணா பாவம்ணா போயி தூக்கிவிடலாம்”.

“வேணா விடு அழகி கொஞ்சநேரோ ரெண்டு பேரும் முங்கு நீச்சல் கத்துக்கட்டும். உன்ன எவ்ளோ கொடுமை படுத்திருக்குதுங்க இந்த ரெண்டும். அதுக்களுக்கு நல்லா வேணும்”, வெய்யோன் கூறிவிட்டு அழகியை பார்த்து சிரிக்க, லட்சுமி இந்த கூட்டணியில் இணைந்து தலையை சிலுப்பி ஆட்டியது.

“ஆமா இதுங்க ரெண்டும் எங்க இன்னுமா சைட் அடிக்குதுங்க”.

மெல்ல பம்மி முன்னால் சென்ற வெய்யோன், நிலவன் காதில் கத்த,
“ப்ச்.... ஆ எவண்டா அவே இந்த நேரம் மனுஷே உசுர வாங்குறது”. எட்டி ஒரு மிதி, காதோடு சேர்த்து ஒரு அப்பு.

“என்ன மண்டைக்கு மேல குருவி பறக்குது. இன்னும் பொழுது சரியாவே விடியலேயே அப்புறம் எப்டி குருவி. ஆமா நா அங்கதான இருந்தே எப்டி புதருக்குள்ள வந்தே”, இரண்டு நிமிடம் பொறிகலங்கி நிதானம் வந்த பிறகு, “ஓ சண்டியர் ராசா டிஸ்டப் பண்ணோம்னு அடிச்சுபுட்டாரோ. என்ன அடி. எங்கப்பாரு கூட இப்டி அடிக்கமாட்டாரு. பொண்ணையும் குடுத்துட்டு இவங்கிட்ட இனாமா மிதி வாங்குற ஆளு நானாதா இருப்பேன்”. வெய்யோன் கன்னத்தில் கை வைத்தபடியே புலம்பினான்.

அழகி அவர்கள் இருவரின் மோன நிலையையும் கலைத்து நிகழ் காலத்திற்கு கூட்டி வந்தாள்.

“என்னண்ணா, வெய்யோன் அண்ணாவ இப்டி அடிச்சு தள்ளிட்டிங்க. பாருங்க குப்பை எது, அண்ணே எதுனே தெரில”.

“ன்னாது... மச்சான் இங்க வந்தானா அவன அடிச்சுபுட்டேனா. டேய்... டேய்... டேய் மச்சா... எங்கவே இருக்க. தெரியாம கை பட்டுருக்கும்வே. வா இங்க வந்துரு”.

“அண்ணா, டேய் அண்ணா. இனிமே வரதட்சனைக்கு ப்ரீயா அடி குடுக்காதேனு மாமாகிட்ட சொல்லிடுறேண்டா. எங்கடா இருக்க, வாடா”.

தலையை போட்டு அழுத்தி கொண்டிருந்த குப்பையை தூக்கி எறிந்தவன், “நா இங்க இருக்கேன். டேய் மாப்பிள்ளை உன்னலாம் நம்பி புள்ளைய கட்டி குடுக்க கூடாது. இப்டியா அடிப்ப”.

“நாங்க பேசிட்டு இருக்கும்போது நீ ஏன்டா உள்ள வந்த”, துகிரா சொல்ல,

அவளை முறைத்தவன், “நீங்க பேசிட்டு இருந்திங்க”.

“ஹா... ஆமா பேசிட்டு”.

அருகில் இருந்த சுவற்றில் முட்டியவன், "உனக்கும் ஒரு வத்தலோ, தொத்தலோ இருந்துருந்தா இப்டிலாம் இது என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு இருக்குற மாதிரி இருக்குமா”, வெய்யோன் கோவத்தோடு எழுந்து போக,

நிலவன் அவனை சமாதானம் செய்து கொண்டு பின்னே செல்ல, துகி, அழகியை கட்டிக்கொண்டாள்.

விழியழகிக்கு சிறுவயது முதலே உற்ற தோழியாய், தாயாய், பாதுகாவலனாய் கண்ணுக்கு கண்ணாய் இமைக்குள் வைத்து பொத்தி பாதுகாத்தவள் துகிரா. ஒருவருக்கொருவர் இக்கட்டான சூழ்நிலையில் தளர்ந்து போய் நிற்கும் போது ஒருவர் மற்றொருவரை கைபிடித்து தூக்கிவிடும் ஓர் அழகிய உன்னதமான உறவுதான் இவர்கள் இருவருக்குள்ளும்.

தன் தாய்க்கு என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியாமல் தானே அவர்கள் உயிரை விட்டார்கள். அதனால் தானே நான் நிற்கதியாய் நிற்கிறேன். என் நிலை எந்த பெண் பிள்ளைக்கும் வரக்கூடாது. வரவே கூடாது. வர விடமாட்டேன். தமிழகத்தில் நடந்த ப்ளஸ் டூ பொது தேர்வில் இவள் தான் நம்பர் ஒன். அதற்கு அடுத்த இடம் துகிரா. இருவரும் பெங்களூருவின் மருத்துவ கல்லூரியில் சென்று படிக்கத்தான் ஆசையாய் காத்து கொண்டிருக்கிறார்கள்.

பெங்களூருவில் ஒருவன் இவளை நினைத்து சித்தம் கலங்கி தவிக்கிறான்.

இவளை நேரில் பார்க்கும் நாளுக்காக துடியாய் துடிக்கிறான்...

இவளும் அங்குதான் செல்ல போகிறாள்...

ஆனால்...

அசைவுகள் தொடரும்...
 

Bala Raji

Moderator
பூவிழி அசைவிலே - 3

“என்னவே மச்சா எதுக்குவே இம்புட்டு கோவமா போறேவே. நா என்ன வேணும்டேவாடே பண்ணே, நில்லுவே, நில்லுவே, அட நில்லுவேனு சொல்லுறே". பொழில் நிலவன் அரற்றிக் கொண்டே வெய்யோன் பின்னே செல்ல,

“போடா சண்டியரு. எங்கூட பேசாத காலம்பரவே என்னைய அடிச்சுபுட்டேள”.

“என்னவே அடிச்சே அடிச்சேன்னு. சும்மா கை பட்டுருச்சுவே”.

நடந்து சென்றவன் திரும்பி நின்று நிலவனை பார்த்து, "சும்மா கை பட்டுருச்சாக்கும். சும்மா... ம்... சும்மா. ஏ மாப்பிள இல்ல நீ கொஞ்சம் கோவமாத்தேன் அடியே”.

“மச்சா நெசமாவே அடிக்கவாவே”.

“சண்டியரே ஒரு பேருக்கு மச்சா சொன்னேனா அடிக்கவானு கேப்பியா. ம்ஹும்... போடா நீ அந்த குட்டி சாத்தான் ஓ பொண்டாடிய கொஞ்சிகிட்டு இரு. நா போறே”.

“என்னவே மச்சா. உன்ன இப்போ கொஞ்சவாக்கும்”.

“அய்யடா... உன்னோட கொஞ்சல் எனக்கு வேண்டா சண்டியரு”.

“மச்சா ஒரண்ட பேசிக்கிட்டே ஜோலிய மறந்துட்டேன் பாத்தியா. வெள்ளனே கெளம்புவே. பெங்களூரு போவானும்”.

“பெங்களூருக்கா எதுக்கு மாப்பிள்ள, எதுவும் முக்கிய ஜோலியா”.

“ஆமாவே துகி பிள்ளைக்கும், அழகி பாப்பாவுக்கும் போயி சீட்டு வாங்குனத குடுத்துபுட்டு வந்துடுவோம். பேச நேரம் இல்லவே, வெள்ளன கெளம்பு. காலம்பர போயிட்டு மதியானத்துக்குள்ள வரணும். பஞ்சன வர சொல்லிருக்கே வாழைக்கு நாட்டு மருந்து தெளிக்கணும். ம்... போவே போயி கெளம்பு”.

பொழில் நிலவன் அவதி அவதியாய் சொல்லி கத்திவிட்டு, தான் கட்டியிருந்த கைலியின் மடிப்பை பின்பக்கமாய் காலை தூக்கி எடுத்துவிட்டு, சீறி பாயும் ஜல்லிக்கட்டு காளை போல் ஓடினான்.

“ம்... துகி சாத்தானும் குடுத்து வச்சவதா. இந்த சண்டியர கட்டிக்க”. வெய்யோனும் வீட்டிற்கு சென்று கிளம்ப ஆரம்பித்தான்.

நீலநிற சட்டையும், கருமைநிற பேண்டும் என வெகு நேர்த்தியாய் கிளம்பி, வலது கையில் ஒரு பை இருக்க, இடது கை அவனின் கேசத்தை களைத்து குதித்து விளையாடி கொண்டிருக்க, கண்ணில் மாட்டியிருந்த கூலர் கண்ணை மறைத்து இருக்க, நிலவன் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி வந்தான்.

“மாமா... மாமா... மாமா, துகிரா மூச்சிரைக்க ஓடிவந்தாள்”.

“என்னவே மச்சா, உன்ட தங்கை இம்புட்டு வேமா ஓடி வாரா, என்னவாம்”.

“ம்.... ஒங்கூட இப்டியே ட்ரெய்ன் ஏறி ஊரவிட்டு ஓடி போக போறாலாம் மாப்பிள்ள. அதா சாத்தான் இம்புட்டு அவசரமா ஓடி வருது”.

“டேய் மச்சா. எம் பொண்டாட்டிய பத்தி இப்டி மருக்கா மருக்கா சொல்லாதேணு உனக்கு எத்தன தடக்கா சொல்லுறது". ஒற்றை விரல் நீட்டி மிரட்டியவன் கைமுட்டிகள் சத்தமிடுவது போல் ஆழ்ந்து முறுக்க,

“எப்பா ராசா போதும் ஓவரா முறுக்கு புழியாத, நா அவள ஒன்னும் சொல்லல”.

அதற்குள் துகி நிலவன் அருகில் வந்து அவன் துரு துரு மீசையை பிடித்து திருகிக் கொண்டே, “மாமா, மாமா, பெங்களூருக்கா போற”.

“ம்... பேங்காக்கு போறோம்”.

“ப்ச்... நா உங்கிட்ட கேட்டேனா ஓ வேலைய பாருடா எரும".

“ஆமாமா நீங்க ரெண்டு பேரும் எருமைக்கு பெருமை மேய்க்கும் போது நா ஏ வேலையதா பாக்கணும்".

“டேய், உனக்கு அம்புட்டுதா மரியாதை. ஓ மரியாதைய நீயே கெடுத்துக்காத".

“ஏ மரியாத கெடுற மாதிரி என்னடி பண்ணுவ குட்டி சாத்தான்”.

மாமா, கையை, காலை உதறி சிணுங்கிக் கொண்டே அவனை அழைத்தவள், "ஓ முன்னாடி எப்டி சொல்லுறான்னு பாரு. அவன என்னனு கேக்காம நிக்குற. ஹும். ஹூம்ம்”.

“ஸ்... இதுங்க ரெண்டும் இருக்கே. டேய் மச்சா”...

“அய்யா சாமி வெண்கல கம்பி, கோடாரி கம்பி நா இனி எதுவும் சொல்லல, அவள அப்டிக்கா கூட்டிட்டு போயி பேசிட்டு வா. ம்ஹும்... விட்டா இதுங்க எனக்கு லவ்வுசு பண்ண சொல்லி தந்துரூம். இனி அதுங்க வாற வரைக்கா நாம காவலுக்கு நிக்கணும்”, வெய்யோன் புலம்பிக் கொண்டே காத்திருக்க, துகியை மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்றான் பொழில் நிலவன்.

“என்னவே பெங்களூருக்கு போறியான்றத கேக்கவாவே அங்க இருந்து இம்புட்டு தொல ஓடிவந்த, அதுவும் காலுல செருப்பு கூட போடாம”.

“ப்ச், அதவிடு மாமா. கேட்டதுக்கு பதில் சொல்லு”.

“ஆமாடி பெங்களூருதா போறே. உனக்கும், அழகி பாப்பாவுக்கு சீட்டு வாங்குனத குடுத்துட்டு வர போறேன்”.

அவனை விடாது நெருக்கமாக இறுக்கிக் கட்டிக் கொண்டவள், “மாமா, நா பெங்களூரு போகல, உன்னை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது”.

அவளை தள்ளி நிறுத்தி, அவள் கன்னங்களை கைகளில் தாங்கியவன், "நாலு வருஷம்தாவே கண்ண மூடி தொறக்குறதுக்குள்ள போயிடும். நீ இல்லாம அழகி பாப்பா எப்டி இருக்கும்வே, பாப்பாக்கு எல்லாமே நாமதான. வீட்டுக்கு போவே, நா போயிட்டு உனக்கும், பாப்பாக்கும் வேணும்றத வாங்கிட்டு வாறே. போவே, போ”.

அவன் தோளை பிடித்து தள்ளவும், திரும்பி பார்த்தவள், "டேய் காட்டான், வீட்டுக்கு ஒரு டாக்டரு பத்தாதா. ம்கும். போடா லூசு”. அவள் உதடு சுழித்து சொல்லிவிட்டு சென்றுவிட,

“இவ இருக்காளே. இவளெல்லாம் நாஞ்சொல்லுறத முழுசா கேட்டுட்டா. ஹும்... இவ படிக்க போற இடம் எப்டி இருக்க போகுதோ. அங்க போயி எந்த புள்ள உசுர வாங்க காத்திருக்காளோ”, நிலவன் ஒரேயடியாய் சலித்துக் கொண்டான்.

இங்கே பெங்களூரூவில்,

“டாட்”,

“சொல்லுடா பொம்மக்குட்டி”,

“இங்க எல்லாத்தையும் சுத்தி பாத்துட்டே சரியாதான் இருக்கு. அப்ளிகேஷன் குடுக்கவும் மெரிட்லயே சீட் கெடச்சுடும்தான”.

“ஆமாடா பொம்மைக்குட்டி, அப்டியே கெடைகாட்டியும், நா அட்மினிஸ்டிரேஷன்ல பேசி சீட் கிடைக்கிற மாதிரி பண்றே. எப்டியும் உன்னோட ஹை மார்க்ஸ்க்கு ரெக்கமென்டேஷன் எல்லாம் தேவையில்லனுதா நினைக்கிறே. சரிடா பொம்மக்குட்டி, நீ கேண்டீன்ல வெயிட் பண்ணு, டாட் மத்த ப்ரொசியூசர் முடிச்சுட்டு வந்துறே”.

“ஓகே டாட்...”.

“டேய் சண்டியரு நீ எல்லாத்தையும் முடிச்சு போட்டு சீக்கிரம் வாவே. எனக்கு பசிக்குது, இங்க சாப்பாட்டு கடை எங்க இருக்கு, அந்தா கொடையெல்லாம் நட்டு வச்சுருக்காவளே அதுவா சாப்பாட்டு கடை. சரி சரி சீக்கிரம் வா. நா சாப்பிட போறே”.

“தங்கச்சிதா லூசுனு பாத்தா அண்ணனும் அப்டிதா இருக்கான். நாஞ்சொல்லவாரத கொஞ்சமாச்சுண்டு கேக்குறானா பாரு. அங்க போயி காடை வேணும், கௌதாரி வேணும்னு எவே மண்டைய ஒடைக்க போறானோ”.

“ஹைய்யோ பட்டர்ப்ளை, சோ கியூட் இன்னிக்கு இத எப்படியாவது புடிக்கணும்". சாத்விகா பட்டாம் பூச்சியை பிடிக்க அலை மோதி கையை உயர்த்தி உயர்த்தி ஓடி கொண்டிருக்க, அந்த பக்கம் வெய்யோன் துகிராவிடம் போன் பேசி கொண்டே வர, இவள் பட்டர்ப்ளை பிடிக்கிறேன் என்று வலது கையை இழுத்து கொண்டு வந்து ஒரு அப்பு, வெய்யோன் ஒரு பக்கம் விழுந்து கிடக்க, அவன் போன் ஒரு பக்கம் சிதறி கிடந்தது.

“என்னடா பொறி கலங்கிருச்சு சண்டியர் திருப்பி அடிச்சுட்டானோ. அப்டியே அவே அடிக்குற அளவு நா ஒன்னுமே பண்ணலையே". சுற்றி முற்றி திரும்பி பார்த்தவன், சாத்விகா மிரண்டு போய் நிற்பதை பார்த்து, "ஓ அடிச்சது இவதான, எங்கிட்ட என்ன கழுத படம் மாதிரி போர்டாடா இருக்கு, என்னை பார் யோகம் வரும் மாதிரி, என்ன அடி யோகம் வரும் அப்டின்னு. அட ராமா இப்பவே கண்ண கட்டுதே”.

சாத்விகா மிரண்டு நிற்க, வெய்யோன் கோபம் கொண்டு எழுந்து வந்தான்.

அசைவுகள் தொடரும்...

கதையின் நகர்வு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றிகளும் & பேரன்புகளும் ♥️♥️♥️
 

Bala Raji

Moderator
பூவிழி அசைவிலே - 4

கன்னத்தில் இடியென அடியை தாக்கியவர் யாரென்று வெய்யோன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு, அங்கே ஓரமாய் நின்ற சாத்விகாவை முறைக்க, அவள் பயத்தில் மின்மினி போல் கருவிழி இமைகளை அடித்துக் கொண்டு மிரட்சியாய் அவனை பார்த்தாள்.

“ஓய்... ன்னா, உனக்கு என்ன கொழுப்பா எதுக்கு என்னிய அடிச்ச”, கை விரல் தூசுகளை தட்டிவிட்டு, கீழிருந்து எழுந்து சாத்வின் முகத்திற்கு அருகே, மிக அருகே நின்று கொண்டு கத்தினான்.

“இ... இல்... இல்ல, அது வந்து”...

“என்னடி இ... ஈனு... ஈ ஓட்டிகிட்டு இருக்க”.

“இதோ பாரு மேன் வாடி, போடினு சொன்ன உனக்கு மரியாதை இருக்காது பாத்துக்கோ”.

“என்னடி பண்ணுவ, என்னடி பண்ணுவ. என்ன பண்ணிருவ”, சாத்வியை நோக்கி அவன் முன்னேற அவள் ஈரடி பின்னே நகர்ந்து கொண்டே,

“டேய்ய்ய்ய்...”, என்று அலற, அவள் கத்திய கத்தில் இவன் அவளை பார்த்து பேய் முழி முழித்தான்.

“அடிங் ங்கொப்பே மவளே. என்னை டேய்னு சொன்ன ஒன்ன இன்னிக்கு பிச்சு உதறல”.

“ஓ பிச்சு உதறுவியா?, இன்னிக்கு ஓ தலைய திருகி உன்னை முதுகு பாக்க நா வைக்கல", சண்டை போடும் சண்டை கோழி போல் அவள் சிலுப்ப,

“ஏய், தப்பு பண்ணது நீ, ஒரு ஆம்பளைய காரணமில்லாம அடிச்சது நீ, இப்போ என்னவோ ஏ மேல தப்பு இருக்குற மாதிரி சண்டை போடுற”.

“நா என்ன வேணும்னா அடிச்சே, பட்டர்ப்ளை பறந்து வந்துச்சி அத புடிக்க வரும்போது தெரியாம கை பட்டுருச்சு, அதுகென்னவோ இப்டி துள்ளுற, தெரியாம பண்ணிட்டேன் ஸாரி".

“என்னாது பன்றதையும் பண்ணிட்டு உனக்கு சாரி(சேலை) வேணுமா. என்ன பாத்தா சாரி விக்குறவே மாதிரியா இருக்கு".

“புல்ஷிட்”, தரையில் காலை ஓங்கி மிதித்தாள் சாத்வி.

“இந்தாம்மா நீ புல்லுல சீட்டையும் விரி, சீட்டியும் ஆடு, அதுக்கு முன்ன அடிச்சதுக்கு ஒரு மன்னிப்பு கேளு”.

அவள் அவனை பார்த்து ‘ஞே’, வென விழிக்க,

“இந்தா ஷாம்பு மண்ட எதுக்கு இப்டி முழிக்குற, ஒரு மன்னிப்புதான கேக்க சொன்னேன்”.

“யு மீன் மீ ஷாம்பு மண்ட”, உதடு கோணி கோவத்தோடு அவள் கேட்க,

“மீன், கோழி எல்லாம் இல்லமா, ஷாம்புமண்ட”, அவள் காதிற்குள் கத்தினான் அவன்.

“வௌவா தலையா, யூ ராஸ்கல் போடா இடியட்”, அவள் கோவத்தோடு திரும்பி நடந்தாள்.

“சே... இந்த சண்டியர் காலைல அடிக்கும் போதே நினச்சேன், இப்டிதா எசக்கு பிசக்கா ஏதாவது ஆகும்னு. ஷாம்பு மண்ட அடிச்சதுக்கு ஒரு மன்னிப்பு கூட கேக்காம எப்டி போறா பாரு குந்தானி. போடி போடி போடி குண்டுபூசணி குந்தானி. உன்னை வேற ஒருநாள் வச்சுக்குறேன்”.

இங்கே அட்மினிஸ்ரேஷனில் பொழில் நிலவன் அட்மிசன் பாமை குடுத்துவிட்டு, எதிர்புறமாய் இருந்த சந்திர மோகனிடம் ஒன்றிரண்டு வார்த்தை பரஸ்பரம் கொண்டு விலக்கிவிட்டு துகிரா பற்றியும், அழகி பற்றியும் சொன்னான்.

“ம்... கேக்கவே இன்ரெஸ்ட்டா இருக்கு தம்பி. கிராமத்து பொண்ணுங்கள இங்க தங்கவச்சு படிக்க வச்சு அவங்க கனவை நிறைவேத்த நினைக்குற உங்கள பாராட்டியே ஆகணும். ஏ பொண்ணும் இங்கதா சேர போறா, நா அவகிட்ட சொல்லிறேன். சோ உங்க பொண்ணுங்க பாதுகாப்பு பத்தி உங்களுக்கு கவல வேணாம். இனி அவங்க எங்க வீட்டு பொண்ணுங்க மாதிரி”.

“நொம்ப சந்தோஷம் சாரே. ஆருமே தெரியாத ஊருல புள்ளைங்க எப்டி இருக்குமோனு பயந்துகிட்டே இருந்தேன். இனி அந்த கவலை இல்ல சாரே. நா போயி ஏ பாப்பா கிட்டயும், துகி கிட்டயும் அல்லா விஷயத்தையும் சொல்லிருறே”.

“ம்... ஓகே நிலவன், ஐ அம் சோ ஹேப்பி. ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது".

“ம்... ன்னா சாரே, தப்பு சரினெல்லாம் பேசிபுட்டு. என்னன்னு கேளுங்க”.

“இல்ல உங்க ட்ரெஸ்ஸிங் சென்ச பாத்தா ரொம்ப படிச்சவரு மாதிரி தெரிது. ஆனா உங்க ஸிலாங்”...

சந்திர மோகனை பார்த்து கொஞ்சமே அழகாய் சிரித்தவன், “உங்க கெஸ்ஸிங் சரிதா சாரே. நா படிச்சவந்தான், கிராமத்துல இருக்குறதுனால இப்புடி பேசி பேசி பழகி போச்சு”.

“ம்... வாவ்... ரியலி யூ ஆர் அ எஜிகேட்டட், என்னப்பா படிச்சுருக்க?”.

"உங்களுக்கு என்ன படிச்சுருப்பேன்னு தோணுது சாரே?”.

“ம்... மே பி சம் ஒன் ஸ்பெசல் டிகிரி".

“ஹாஹ்ஹா... இல்ல சாரே, நா வெட்னரி டாக்டர், படிச்சது எல்லாமே வெளிலதா அஞ்சு வருஷம் தங்கி படிச்சே. அப்போவே துகி புள்ள ரொம்ப அழுகும், ஒவ்வொரு நாளும் ஊருக்கு வரும்போது என்ற அப்பாரு, அம்மைய விட இவள சமாளிக்குறதுதா கஷ்டம். இப்போ என்ன பிரிஞ்சு திருப்பி நாலு வருஷம் இருக்கோணும். என்ன செய்ய காத்திருக்காளோ”.

“வாவ், செம்ம சூப்பர்பா. விருமாண்டி மாதிரி இருக்குற உங்களுக்குள்ள இவ்ளோ அழகா ஒரு காதல் இருக்கா. கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட பையனுக்கு கூட”, சந்திர மோகன் விதார்த் பற்றி சொல்லும் முன் அவரை அழைத்தவாறு வந்தாள் சாத்விகா.

“டாட்...”,

“அடடே வாடா, கேண்டீன்ல வேணும்ன்றத சாப்டியா".

“ப்ச்... நோ டாட்”.

“வொய் பேபிமா எனிதிங் சம்”.

“எனிஹவ் நோ டாட்... ப்ராஸஸ் மோர் ஓவர் ஓக்கேனா நாம கெளம்பலாம். ஓவர் ஹெட் பெயினா இருக்கு”.

“ஓக்கேடா, ஜஸ்ட்ட மினிட், இதோ பாரு இந்த தம்பி வெட்னரி டாக்டர். இவரு தங்கச்சியும், இவரு கட்டிக்க போற பொண்ணும் இங்கதா ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணி படிக்க போறாங்களாம். அவங்க நேம் கூட, அழகி, துகிராவாம்”.

“ஓக்கே டாட், நா அவங்க வரவும் பாத்துக்குறேன். ஹாய் சார், ஐ யம் சாத்விகா. நைஸ் டூ மீட் யூ”.

“ஓக்கேமா தங்கச்சி நா என்ற பாப்பாகிட்டயும், துகி கிட்டயும் சொல்லிபுறே. நீங்க கெளம்புங்க. சாரே பாத்து சூதானமா போங்க”.

“இவரும் கிராமத்து ஆளு மாதிரிதா இருக்காரு ஆனா எவ்ளோ மெச்சூர்டா பேசுறாரு ஆனா அந்த வௌவா தலையே, ம்ஹூம். தனியா சிக்கட்டும் கொத்து கறி குருமா வாக்கிறேன். தண்டம்”.

“சாத், ம்... டாட் சொல்லுங்க”.

“என்னடா யோசன தம்பி பேசிட்டு இருக்காரு யோசிச்சுக்கிட்டே இருக்க”.

“நத்திங் டாட், வாங்க போகலாம்”.

“ஓக்கே அண்ணா கெளம்புறோம். திருப்பியும் மீட் பண்ணலாம்”.

“ஓக்கே மக்கா போயிட்டு வாங்க”.

இங்கே சாத்விகா திட்டிவிட்டு சென்ற பின் வெய்யோன் கேண்டீனை ஒருவழி ஆக்கிக் கொண்டிருந்தான்.

“ப்ச்... லூசு பயலுகளா ஒரு காடை இல்ல, கௌதாரி இல்ல, என்ன சாப்பாட்டு கடை வச்சுருக்கிங்க. அருவாள எடுத்து ஏ சண்டியர் மாப்பிள்ளைட்ட குடுத்து உங்க எல்லார் தலையவும் சீவ சொல்லிருவே. ஒழுங்கா கேட்டத கொண்டு வாங்க”.

“இந்த ஆளலாம் எவே உள்ள அலோ பண்ணது. சுத்த காட்டான். என்ன கத்து கத்துறான்”, கேண்டீனில் உள்ள ஒருவர் வெய்யோனை வறுத்தெடுத்தார்.

சரியாக வேலையெல்லாம் முடித்துவிட்டு பொழில் நிலவன் அங்கு வந்து சேர்ந்தான்.

“டேய் மச்சா எதுக்குவே இங்கன வந்து கூப்பாடு போட்டுகிட்டு இருக்கவே. கொஞ்சம் அடங்குவே”.

“இல்ல மாப்பிள்ள திங்குறதுக்கு கறி கேட்டா இல்லன்னு சொல்லுறாய்ங்க. அதா கோவம் வந்துருச்சு”.

“டேய் மச்சா என்ன நீயி, இங்கன என்ன இருக்கோ அததான அவே தருவான். வா உனக்கு வெளிய போயி நிறையா வாங்கிதாரே வா போவோம்”.

“ம்... அப்டியா சொல்லுற. மச்சா என்ன கேட்டாலும் வாங்கி தருவியா”.

“தருவேவே வா போவோலாம்”.

“சே... அரகிருக்கு முழுகிருக்குலாம் கேன்டீன் வந்து ஏ உசுர வாங்குது. நல்லவேள அவே கூட வந்த மனுஷே வந்து இழுத்துட்டு போனாரு. அதுவர சந்தோஷம்”.

இங்கே விதார்த்தின் ஆபிஸில்:

டேபிள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அதை நாலாபக்கமும் சுழற்றிக் கொண்டு, ஒரு கை அவனின் மேவாயை தாங்கி இருக்க, மற்றொரு கை அவனின் அழகிய புஜ்ஜிமா கண்ணை ரசனையாய் பார்த்து கொண்டிருக்க, இவன் கனவில் மிதந்து கொண்டிருந்தான்.

“ப்ச்... இன்னிக்கு பாக்குற பொண்ணாவாவது நீ இருப்பியா புஜ்ஜிமா. உன்னை கனவுல மட்டும்தா பாக்குறேன், நெஜத்துல எப்போ பாக்க. எனக்கு கனவு வர்ற மாதிரி, உனக்கும் என்ன பத்தி கனவு வருமா. ஐ லவ் யூ புஜ்ஜிமா. சீக்கிரம் ஈவ்னிங் வரணும் நா ஓ கண்ண பாத்து கவி சொல்லி உன்ன கட்டிக்கணும். இன்னும் என்ன என்னவோ. ம்ஹிம்... ம்ஹூம்... உம்மா”, அந்த கண்களை தன் முகத்திற்குள் பொதிந்து வைத்து இறுக்கிக் கொண்டிருந்தான்.

இங்கே அழகி அவள் தாயின் போட்டோவை எடுத்து வைத்து கொண்டு அதனிடம் பேசி கொண்டிருந்தாள்.

“அம்மா, என்னை நீ நினைக்குறியா. உன்னோட பாசமான முத்தம் எனக்கு கிடைக்கிற மாதிரி தோணுதுமா”, கண்ணீர் கரைபுரண்ட விழியை துடைத்துக் கொண்டே,

“என்னை விட்டுட்டு போகும் போது நீ ரொம்ப துடிச்சேலமா. எனக்கு தெரியும், இங்க யாரு என்ன நல்லா பாத்துப்பானு கூட நீ வருத்தப்பட்டுருப்ப. நா நல்லா இருக்கேன்மா, கடம்பவன் மாமா, கோதை அத்த, நிலவன் அண்ணா, (நிலவன் அழகிக்கு மாமா முறைதான் ஆனால் சிறுவயதில் இருந்து அவனை அண்ணனாய் கூப்பிட்டு பழகிவிட்டாள், காலம் கடந்தும் சிலவற்றை மாற்ற முடியாது அல்லவா, அதுபோல் தான் இதுவும்) உலகநாதன் பெரியப்பா, செல்வி பெரியம்மா, வெய்யோன் அண்ணா, துகி எல்லாரும் என்ன ரொம்ப நல்லா பாத்துக்குறாங்கம்மா. எனக்கு நீ இல்லைன்ற குறை தெரியாம ரொம்ப சந்தோஷமா...”, கண்ணில் துளிர்த்த நீரை மீண்டும் தட்டிவிட்டவள்,

“லவ் யூ அம்மா, மிஸ் யூ அம்மா. ஆயிரம் சொந்தம் வந்தாலும் அம்மா போல...”, அதற்கு மேல் முடியாமல் மெத்தையில் விழுந்து நீலநிற விழி சிவப்பு நிறமாய் மாறும் அளவு கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.

“புஜ்ஜிமா எதுக்காகவாது பீல் பண்றியா என்ன? அச்சோ செல்லம் டோன்ட் பீல். ஐ யம் ஆல்வேஸ் வித் யூ. இந்த நீலநிற விழில நா எப்பவும் கண்ணீர பாக்கவே கூடாது. ம்... உன்னோட கண்ண வச்சு பேசிக்கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது. அப்பா அட்ரஸ் சென்ட் பண்ணிட்டாரு, இரு கெளம்பி உன்ன பாக்க வர்றேன்”, விதார்த் கிளம்பி செல்ல, அங்கு அழகி அழுதபடியே உறங்கி போனாள்.

மணப்பெண் வீட்டிற்கு வந்து பரஸ்பரமாய் உரையாடி கொண்டிருந்தார்கள் விதார்த்தின் வீட்டினர்.

“உங்க வீட்ல சம்மந்தம் பண்ண நாங்க குடுத்துதா வச்சுருக்கணும் சம்மந்தி, விதார்த் எவ்ளோ பெரிய ஆளு”, மணப்பெண்ணின் அப்பா சொல்ல,

சாத்விகா தாயின் காதை மெல்லமாக கடித்தாள், "என்னமா இவரு குடுத்து வச்சுருக்கணும் சம்மந்தி அது இதுனு சொல்லுறாரு. டாடும் எதுவும் சொல்லாம அமைதியா ‘ஈ’, னு சிரிச்சுகிட்டு இருக்காரு. எப்டியும் அந்த போண்டா சேவல் இந்த பொண்ண பாத்து புடிக்கலேன்னுதா சொல்ல போறான். அதுக்குள்ள இவ்ளோ பேசுறாரு இந்த மனுஷே”.

“அடியேய் வாய வச்சுக்கிட்டு சும்மா இரு. நானே இந்த பொண்ணாவது சரியா அமைஞ்சுரணும்னு கடவுள வேண்டிக்கிட்டு இருக்கேன், நீ வேற”.

வாயை பொத்தி சிரித்தவள், “இந்த பொண்ணு ஓ பையனுக்கு அமைஞ்சுடணும்னு நீ கடவுள வேண்டுறியா? கனவுல வேணா இந்த கோரிக்கைய கடவுள் ஏத்துக்குவாரு”.

“பேசமா இருடி”.

“என்ன சம்மந்தி பொண்ணு என்னா சொல்லுது”.

“அது வேற ஒன்னும் இல்ல, நேரமாச்சே இன்னும் அண்ணன காணோம் சீக்கிரம் போன் போட்டு வரச்சொல்லுங்க அப்டின்னு சொல்லுறா. ஏங்க சீக்கிரம் போன் போட்டு கேளுங்க”. காஞ்சனை சொல்ல, சந்திர மோகன் போனை எடுத்து தட்ட ஆரம்பிக்க அதற்குள் விதார்த் அங்கு வந்திருந்தான்.

“யா டாட், நா வந்துட்டேன், ஸாரி பார்த டிலே”.

பெண்ணாய் இருப்பவள் ஒற்றை பார்வை பார்த்துவிட்டு ஒளிந்து கொண்டாள்.

இவனின் அவசரம் புரியாமல் அவள் ஒளிய இவன் எட்டி பார்க்க,

“மாப்பிள்ள கொஞ்சம் பொறுங்க, நீங்க இருக்குற அவசரத்துக்கு பொண்ண இப்பயே கட்டி தூக்கிட்டு போயிடுவீங்க போல”, பெண்ணின் தோழி சொல்லி சிரிக்க,

விதார்த் அவளை திண்ணக்கமாய் ஒரு பார்வை பார்த்தான்.

டீ எடுத்து கொண்டு எளிய நயனம் பூசிக்கொண்டு பெண் வர, விதார்த் டீயை எடுத்து கொண்டு அவள் விழியையே உறுத்து பார்த்தான்.

பெண்ணிற்கு வெட்கம் பிடிங்கி திண்ண, இவன் கோபம் அவிழ்ந்து தள்ள, டாட் போகலாம். விறுவிறுவென எழுந்து காருக்கு அருகில் சென்றுவிட்டான் விதார்த்.

சந்திர மோகன் சங்கடமாய் அவர்களை பார்த்துவிட்டு, “அவனுக்கு பொண்ணு பிடிக்கல போல, நா வீட்டுக்கு போயிட்டு என்ன ஏதுனு சொல்லுறே, நாங்க கிளம்புறோம்”. அவர்களின் பதிலுக்கு கூட காத்திராமல் காஞ்சனையையும், சாத்வீகவையும் அழைத்துக் கொண்டு போனார் சந்திர மோகன்.

சந்திர மோகன் வந்த காரை டிரைவரை விட்டு எடுத்து வர சொல்லிவிட்டு, விதார்த்தோடு அனைவரும் காரில் சென்றனர்.

விழுந்து விழுந்து சிரித்தாள் சாத்விகா, “நாந்தா சொன்னேனே இவே இந்த ஜென்மத்துல எந்த பொண்ணையும் கட்டிக்கமாட்டான்னு. அந்த பொண்ண குறு குறுனு உத்து பாத்துட்டு அவ வேண்டாமாம். ஹீஹீஹீ... அம்மா இந்த ஜென்மத்துல நீ கோயில் கோயிலா போறதும் நிக்காது. இவே அவே புஜ்ஜிமாவ தேடி அலையுறதும் முடியாது”.

“ஏய் ஈமு கோழி பேசாம வர்றியா இல்ல காருல இருந்து உன்ன புடிச்சு வெளிய தள்ளி விடவா”.

“தள்ளி விட்டுருவியா, எங்க தைரியம் இருந்தா தள்ளு”.

“ப்ச்... ஸ்... ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா வாங்க”.

“ம்மா... எல்லாமே பண்றது இவே, நீ எப்பவும் அவன ஒன்னும் சொல்லமாட்டுற”.

“என்னை என்னடி சொல்லணும், நானெல்லாம் உள்ளத சொல்லிட்டே, நீயெல்லாம் சொல்லுவியா. நா ஏ புஜ்ஜிமாவ தேடி அலையுறேன், ஆனா நீ அப்பா பாக்குற மாப்பிளைக்கு ஓக்கே சொல்லுவேன் சொல்லு பாப்போம்”.

“ஆர்த் அவ ஏ பொண்ணு என்ன மீறி எதுவும் தப்பு பண்ணவும்மாட்டா. தப்பா நடந்துக்கவும்மாட்டா. நா எந்த பையன பாத்து தாலி கட்டிக்கோ சொல்லுறேனோ அவன பாத்து மேரேஜ் பண்ணிப்பா. அப்பா சொல்லுறது சரிதான பொம்மைக்குட்டி”.

“ஆமாபா நீங்க யார சொல்லுறீங்களோ, அவனதா நா கட்டிக்குவேன் இவன மாதிரியெல்லாம் உங்கள அலையவிடமாட்டேன்”.

“ம்... நீ ஏ பொண்ணுடா”.

“அப்போ நா உங்க பையன் இல்லையா?", விதார்த் சிலுப்பிக் கொள்ள, சந்திர மோகனும், காஞ்சனையும் அவனை சமாதானபடுத்திக் கொண்டே வர, சாத்விகா வெளியே சாலையில் தெரியும் பெங்களூருவை ரசித்துக் கொண்டு வந்தாள்.

ஏனோ, திருமணம், மாப்பிள்ளை என்று சொன்னவுடன் அலையா விருந்தாளி போல் வெய்யோனின் முகம் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது. இதற்கு பெயர் என்னவென்று தெரியாமல் அவள் திணறிக் கொண்டிருக்கிறாள்.

இங்கே அழகியின் வீட்டில், அடுத்த யுத்தத்திற்கு ரெடி ஆகி கொண்டிருந்தார் மரகதவள்ளி.

பெட்டில் இருந்து காலை இழுத்து கொண்டு வந்து மரகதத்தின் காலில் விழுந்தார் சுந்தரம்.

அவரை எட்டி மிதித்தவர், “ஏய்யா ஓ மகளுக்கு அந்த ஆத்தாள முழுங்குன சிரிக்கிக்கு அம்புட்டு துணிச்சலா. ஏந்தம்பிய அந்த வெளங்காத பய நிலவன வச்சு அடிச்சுருக்கா. இன்னிக்கு இருக்குயா அந்த சிரிக்கிக்கு. டேய் தம்பி இந்தாள புடிச்சு கட்டுறா, கட்டி கதவ இழுத்து மூடு, இன்னிக்கு இந்தாள முன்னாடி நிறுத்தி வச்சே அவளுக்கு இருக்கு”.

“வே... வேணாம்டி... எம் பொ... பொண்ணு பாவம், அவ... அவள சும்மா விட்டு... விட்டுரு”, பக்கவாதம் வந்த கையையும், காலையும் இழுத்துக் கொண்டு வாயில் வாநீர் வடிய கெஞ்சிக் கொண்டிருந்தார் சுந்தரம்.

“டேய் கேன பயலே, விட்டா இவே பேசிக்கிட்டே இருப்பான். ம்... காரியம் கெட்டுடும் இழுத்து கட்டுறா”.

அழகி இன்னும் உறங்கி கொண்டிருக்க, சோலை அவள் காலை இறுக்கி பிடிக்க, தீயில் நன்கு பழுக்க காய்ச்சிய சிக்குவாங்கியை வைத்து அழகியின் பாதத்தில் ஒரு கோடு.

அலறி கதறி கொண்டு எழுந்தாள் அழகி. நீலநிற விழி நீண்டு விரிந்து அழ, கால்களில் வைக்கபட்ட சூடு காலை அசைக்க விடாமல் விண் விண்னென்று தெறிக்க, "சி.... சி.... சித்தி என்ன ஆச்...”,

அவளின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்து கீழே தள்ளினான் சோலை.

தரையில் விழுந்து எழுந்து நிற்க முடியாமல் கழுத்தையும், காலையும் பிடித்துக் கொண்டு அவள் மருட்சியாய் விழிக்க,...

சோலையும், மரகதவள்ளியும் கரண்டியில் எடுத்த கங்கோடும், கையில் வைத்திருந்த பெருங்காய தூளோடும் அவளை நெருங்கி வந்தனர்...


அசைவுகள் தொடரும்...

கதையின் நகர்வு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றிகளும் & பேரன்புகளும் ♥️♥️♥️
Thread 'பூவிழி அசைவிலே comments thread' https://saaralnovels.com/index.php?threads/பூவிழி-அசைவிலே-comments-thread.590/
 

Bala Raji

Moderator
பூவிழி அசைவிலே - 5

“அம்மாமாமா.....”, மரகதவள்ளி தரையில் இழுத்து தள்ளிய வேகத்தில் கதவில் சென்று அழகியின் வயிறு இடிக்க, வலியில் துடித்து போனாள் அவள்.

சோலை அழகியின் முடியை பற்றி கொத்தாக இழுக்க,

“சி... சித்தி... மாமா... எதுக்கு அடிக்குறிங்க வலிக்குது விடுங்க”.

அழகியின் வயிற்றில் ஓங்கி மிதித்தார் மரகதவள்ளி.

அவள் வயிற்றை பிடித்துக் கொண்டு உயிர் போகும் வலியில் கத்த,

மரகதவள்ளி அவளின் தோளை இறுக்கி இழுத்து, "ஏண்டி பொசகெட்ட சிறுக்கி ஏ தம்பி உன்னை, கட்டிக்க போறவதானனு கைய புடிச்சு இழுத்தா, நீ அந்த விளங்காத பயல வச்சு புள்ளைய காலம்பர அடிச்சுருக்க, உனக்கு திண்ணக்கம் அதிகமாகி போச்சுடி, இடுப்பு எலும்ப ஒடச்சு ஓ அப்பே கை, கால் விளங்காதவே மாதிரி போட்டாதா உனக்கு புத்தி வரும்”.

“ஏண்டி ஊர் மேஞ்ச சிறுக்கி என்ன கட்டிக்க உனக்கு இல்லாத இடமெல்லாம் வலிக்குது, அந்த சண்டியர பாத்தா மட்டும் இனிக்குதோ, விடமாட்டேன்டி நீ செத்தா கூட ஏ பொண்டாட்டியாதான்டி சாகணும்”.

சோலை கட்டிலில் இழுத்து போட்டு அவள் காலையும், கையையும் சேர்த்து பிடிக்க, மரகதவள்ளி அழகியின் முகத்திற்கு முன் எரிதனலாய் எரியும் கங்கை நீட்டி பெருங்காயதூளை அதில் தட்ட அழகிக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது.

“சித்தி, நா எதுவும் பண்ணல நம்பு. தொகு... தொகு... ஆ.. ம்ம்ம்... சித்தி மூச்சு விட முடியல இத அங்குட்டு எடுத்துட்டு போங்க”.

“எதுக்குடி எடுக்கணும், இப்டியே வெந்து சாகு. டேய் தம்பி இன்னொரு டப்பா தூளு இருந்தா எடுடா”.

“சித்தி இதெல்லாம் பாவ... பாவம், சொன்னா கேளுங்க”.

“ஏய் கூறுகெட்ட சிறுக்கி எது பாவம், எது புண்ணியம்னு எனக்கு தெரியும்டி, நீ ஓ வெளங்காத வாய மூடு".

சோலையும், வள்ளியும் தகாத வார்த்தைக் கொண்டு அவளை வசைபாட, லட்சுமி ஜன்னல் கம்பி வழியாய் அனைத்தையும் பார்த்து கொண்டு அழகியை இந்த மிருகங்களிடம் இருந்து காப்பாற்ற காம்பவுன்ட் சுவர் தாவி குதித்து ஓடியது நிலவன் வீட்டிற்கு.

இங்கே நிலவன் வீட்டில், கோதை சமையல் கட்டில் சமைத்துக் கொண்டிருக்க, கடம்பவன் வெளியே வேலையாட்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

“ஏடே, என்னடே வேல பாக்குற, இத தூக்கி அங்குட்டு வைவே, குருட்டாம்போக்குல ஏதாவது செஞ்சேனு வை, சங்க ஒதுக்கிபுடுவே”.

“இப்ப எதுக்கு இப்டி தொண்டை கிழிய கத்தி அல்லாடுறீரு. வேலை செய்ற அவேங்க கிட்டக்க பதவிசா சொன்னா அல்லாத்தையும் கேட்டுப்புற போறாய்ங்க”, கடம்பவனை பார்த்து கூறிக்கொண்டே கையில் காஃபி கிணத்தை ஏந்தியபடி வந்தார் கோதை.

“சரிங்க எஜமானி அம்மா. நீங்க சொல்லிக்கின்னா சரியா வேலை பாத்துகிட சொல்லிருறே”, சிரித்தவாறே சொன்னார் கடம்பவன்.

“ஏங்க அங்க பாருங்க அது நம்ம லட்சுமிதான எதுக்கு தலைய சிலுப்பிக்கிட்டு ஓடி வாறா".

“என்னனு தெரிலயேடி இரு என்னண்டு பாப்போம்”.

பதறிக் கொண்டே வந்த கோதை அதன் முகம் நீவி, “லட்சுமி, மகாலட்சுமி, ஆத்தா என்னத்தா ஆச்சு?”, என்று கேட்க,

லட்சுமி கண்ணில் வடியும் கண்ணீரோடு நிலவனை தேடியது.

“என்னத்தா நிலவனையா தேடுற?”

அது மண்ணில் கொம்பை குத்தி தலையை ஆட்ட,

“நிலவே அழகி புள்ளைக்கும், எம் மருமவளுக்கும் சீட்டு கட்டவுல்ல போயிருக்கியான்”.

லட்சுமி அழுது கொண்டே அவர்கள் இருவரையும் இழுக்க, "அடி ஆத்தி லட்சுமி எதுக்குத்தா அழுகுற, ஏனுங்க மாமோய் ஏதோ இருக்குது போல லட்சு கன்னு அதுதா அழுகுது, வெரசா வாங்க மாமோய் போயி பாக்காலாம்".

இருவரும், அழகியின் கதறலும், வள்ளி, சோலையின் வசை மொழியையும் கேட்டு வீட்டிற்க்குள் நுழைந்து, அழகியின் நிலை பார்த்து அவளிடம் ஓட,

“ந்தா... நீங்க ரெண்டு பேரு எதுக்கு இங்கன வாறீக, வெளிய போங்க”, வள்ளி கத்தினார்.

“ஏண்டி மேனா மினுக்கி உனக்கு கொஞ்சோண்டு கூடவா அறிவில்ல. தரங்கெட்ட மூதி புள்ள கால சுட்டு, இப்டியா மூக்கு செவக்க அழுக வப்பே”, கோதை சொல்ல,

“இங்காருங்க அவ எங்க வீட்டு புள்ள அவள நானும், என்ற அக்காவும் சேந்து அடிப்போம், மிதிப்போம். நீங்க ஆரும் எதுவும் சொல்லக் கூடாது, மானம், மருவாதைய காப்பாத்திக்கணும்னா வெளியில போங்க”.

கடம்பவன் சோலையை ஓங்கி அறைந்தார். “என்னடே உன்ற இஷ்டத்துக்கு துள்ளுற, இந்நேரம் இங்கன என்ற மவே இருந்தோருக்கணும், உனக்கு தெவசம் பண்ணிபுட்டுதா அடுத்த ஜோலி பாத்துருப்பான். சீ... தரங்கெட்ட நாயே...”.

“ஏய் தூக்குடி, புள்ளைய நம்ம வீட்டுக்கு கூட்டிபுட்டு போவோலாம்”.

“கூட்டிட்டு போய்டுவியாயா பெரிய மனிஷா உனக்கு அம்மா துணிச்சல் இருந்தா அவள தூக்குயா”, சோலை சொல்ல,.

“என்னடே பண்ணிருவ, அழகி வா போவோலாம்”.

“ஏய்ய்ய்ய்...”, ஒற்றை விரல் நீட்டி மரகதம் கத்தி, “இப்போ மட்டும் அவகளோட போன உன்ற அப்பன பொணமாக்கிபுடுவேன்டி”, என்று மிரட்ட,

“மா... மா... மாமா, நீங்க போங்க இதெல்லாம் எனக்கு புதுசா என்ன? எனக்கு எனக்கு எங்க அப்பாரு வேணும் அதுக்காக இதையும் தாங்கிக்குவே”, அழுதவாறே அவள் கூற,

“அழகி இந்த கலிசடைங்ககிட்ட உன்னை விட்டா, உன்னை அடிச்சே கொன்னுடுங்க, வா தாயி போயிடலாம்”, அழகியின் காலை தாங்கியவாறு கடம்பவன் சொல்ல,

“வே... வே ... வேண்டாம் மாமா, நீங்க போங்க இது ஏ... ஏ... தலை... தலையெழுத்து”.

“அதா சொல்லிட்டால்ல போங்கவே ரெண்டு பேரும் வெளிய”, சோலை இருவரையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான்.

மனித உருவில் சீறி பாய்ந்து வந்த இரண்டு கால் சிங்கம் அவர்கள் இருவரையும் தாங்கிக் கொண்டது. லட்சுமி கண்ணீரை தட்டிவிட்டு ஆனந்த கூத்தாட, நிலவன் நெஞ்சம் துடித்து கோபம் கொப்பளிக்க, கண்ணில் ரௌத்திரம் தெறிக்க, புஜம் இரண்டும் திமிரி நிற்க, கன்னங்கள் கோவத்தில் கோவை பழம் போல் சிவக்க, ஒற்றை கை தாய், தந்தையரை தாங்கி நிற்க, மற்றொரு கையால் மீசையை திருகி கொண்டே , "டேய்ய்ய்ய்ய்ய்...”, என்று கத்தினான். கடம்பவன், கோதை இருவரையும் வெளியே நிற்க வைத்துவிட்டு, கோவத்தோடு உள்ளே நுழைந்தான்.

“ஏன்டா எச்சகாள என்ற அம்மா, அப்பாரு மேலயா கைய வச்சா உன்னிய”... ஏர் பிடித்து உழுத கால் கம்மந்தட்டை போல் இருக்க, சோலையின் வயிற்றில் ஓங்கி ஒரு மிதி, அவன் உருண்டு பிரண்டு வள்ளியின் கால்மாட்டில் சென்று விழுந்தான்.

அழகி மெத்தையில் இருந்தபடியே அண்ணா அண்ணாவென்று அழைக்க, நிலவன் ஓடிச்சென்று அவளை கட்டிக் கொண்டான்.

“அண்ணா ம்... ம்... ம்...” வளர்ந்த குழந்தை சிறுபிள்ளை போல் அழுக,

"வலிக்குதாடா தங்கம், காலு இப்டி காச்சு போயிருக்கு, இந்த ரெண்டு கலிசடைகளும் இப்டி சூடு வச்சு, வேணாம்டா வாடா நம்ம வீட்டுக்கு போவோம்”.

“அண்ணா வலிக்குதுணா, ரொம்ப வலிக்குது”.

“பாவிங்களா அவ உங்க வீட்டு புள்ளதான இப்டியா பண்ணுவீங்க. ச்சீ...”, கோதை சிறிது அங்கலாய்க்க,

“அம்மா இங்கன எதுவும் பேசிக்க வேணாம். சும்மா இருங்க. அழகி வாமா போவோலாம்”, நிலவன், அழகியை கைகளில் அள்ளிக்கொள்ள,

“ண்ணா... ண்ணா... ப்... பா... அப்பா...”,

“அவரையும் கூட்டிகிட்டுதாம்மா வா போவோம்”.

நிலவன் அழகியை தூக்கி வைத்தவாறே இரண்டடி முன்னே நகர, “என்னடா இன்னிக்கி ராவுக்கு இவ ஆச்சுனு தூக்கிகிட்டு போறியா?”.

அழகி காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் காதை மூடிக்கொள்ள, கடம்பவனும், கோதையும் சோலையின் முகத்தில் காரி உமிழ,

“எப்பேர்ப்பட்ட வார்த்தையடா சொன்ன?”, அய்யனார் போன்ற ஆணழகன் வெறி கொண்ட சிங்கம் போல் எழுந்து நின்று துடித்த மீசையை அடக்கி கொண்டு அழகி அமர்ந்திருந்த கட்டிலின் ஒருபக்க கட்டையை துண்டாய் தூக்கி எடுத்து அவன் கடைவாயிலேயே ஒரு போடு, ரத்தம் ஆழ்கடல் போல் கொப்புளித்து கொப்புளித்து வெளியே வந்தது.

“என்னடே தகராறு பண்ணணும்னே வந்தியா, என்ற தம்பிய அடிக்க நீ யாருடா?”.

“ஏய்ய்ய்ய்... உன்னலாம் அடிச்சா கேவலம்னு நினைக்குறேன், சீ, த்தூ... போ அந்தபக்கம், அழகி நீ வாடாம்மா”, அழகியை கையில் தூக்கிக் கொண்டு சோலையை ஓங்கி இரண்டு மிதி மிதி மிதித்து ஆவேசம் தீர்த்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றான் நிலவன்.

கடம்பவனும், கோதையும் கதவிலேயே அறைந்து விழுந்து கிடந்த சுந்தரத்தை அழைத்துக் கொண்டு சென்றனர்.

அழகி வீட்டையே ரெண்டாக்கி கொண்டிருந்தாள்.

“அம்மா... ம்மா... அண்ணா, அண்ணா வலிக்குது, வலிக்குது”.

“ஒன்னும் இல்லடா சரியா போயிரும், இங்க பாரு”, நிலவன் அவள் கை பிடித்து ஆறுதல் சொல்ல, கோதை அவளின் வயிற்றில் எண்ணெய்யை ஊற்றி நீவி விட்டுக் கொண்டிருந்தார்.

துகி அவளின் தாய், தந்தை, மற்றும் வெய்யோனோடும் இணைந்து வர, அழகி எழுந்து துகியை கட்டிக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் அழகியோடு துகி இருந்துவிட்டு கோதையை மட்டும் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

“ஏன்டே மருமவனே புள்ளைய இப்டி ஆக்குன அவய்ங்க ரெண்டு பேத்த சும்மாவாவிட்ட”.

“இல்லங்க அத்த ரவ ரவையா அவன உரிச்சுட்டுதா வந்தேன்”.

“மாமா இனி எப்பவும் அழகிய அங்க அனுப்ப வேணாம். கூட்டு மாமா பஞ்சாயத்த, ரெண்டுல ஒன்னு பாத்துடலாம்”.

“எனக்கும் துகி சொல்லுறதுதா சரினுபடுது மாப்பிள்ள. பேசாம பஞ்சாயத்த கூட்டிபுடலாம்”, உலகநாதன் கூற,

“என்ற புள்ளைய கண்கலங்காம இனியாச்சும் இருக்க வைங்க”, சுந்தரம் கைகூப்பினார்.

“என்னவே சுந்தரம் இதுகெல்லாம் போயி கைய எடுத்து கூம்புட்டுகிட்டு, விடுவே நாளம்பர பஞ்சாயத்துல பாத்துக்கலாம்”, கடம்பவன் சொல்ல,

கோதை அழகியை உறங்க வைத்துவிட்டு ஆண்களிடம் வந்தார்.

“என்னமா பாப்பா தூங்கிருச்சா?”,

“தூங்கிட்டாப்பா, காலையும், வயித்தையும் புடிச்சு ரொம்ப அழுக, ப்ச்... அந்தபுள்ளைக்காகவாது கடவுள் இலக்கியாவ விட்டு வச்சுருக்கலாம். இப்டியா கொடுமைப்படுத்துவா, எனக்கு வந்த ஆத்திரத்துக்கு உலக்கைய தூக்கி போட்டுறலாமானு கூட பாத்தேன்”.

“விடு தங்கச்சி எப்பவாது அதுங்க மாட்டுங்க அப்போ எல்லாத்துக்கும் சேத்து வச்சுக்கலாம்”, உலகநாதன் சொல்ல,

“சரி சரி காலம்பர பஞ்சாயத்து கூட்டணும் வெரசா போயி அல்லாரும் தூங்குங்க”, கடம்பவன் சொல்ல எல்லோரும் களைந்து செல்லும் நேரம்,

“அம்மா நா அழகிக்கு துணையா இங்கனயே இருக்கேன்மா”, துகி சொல்ல,

“அடியேய் கல்யாணத்துக்கு முன்ன இங்க எப்டி, நீ அழகிய காரணம் சொன்னாலும் ஊருகாரய்ங்க ஆளாளுக்கு ஒன்னு சொல்லுவாய்ங்க வா நம்ம வீட்டுக்கு போவோம்”.

“மாமா... மாமா சொல்லுங்க நா இங்கேயே இருக்கேனே”, கடம்பவன் மீசை திருகி துகி கெஞ்ச,

“ஏய் குட்டி சாத்தான் சொன்னா கேளு போடி வீட்டுக்கு”.

“நீ என்ன என்னை வீட்டுக்கு போக சொல்லுறது நா போகமாட்டேன் போடா, மாமா நீங்க சொல்லுங்க நா போகவாக்கும்”.

“டேய் வெய்யோனு நீயும், நிலவனும் காட்டுக்கு தானடா தூங்க போவிங்க, துகி இங்கனையே இருக்கட்டும் அழகிக்கு ஒத்தாசையா இருக்கும்”, கடம்பவன் சொல்ல அவர் பேச்சுக்கு மறுபேச்சின்றி எல்லாரும் களைந்து சென்றார்கள்.

லாந்தார் விளக்கை எடுக்க வந்த நிலவன் பின்னாலேயே பம்மி பதுங்கி வந்தாள் துகிரா.

வெளிமுற்றத்தில் நின்றவாறு இதை பார்த்து கொண்டிருந்தான் வெய்யோன்.

“ஆஹா ஆரம்பிச்சுட்டாளா. கூட இருக்குற யார பத்தியும் யோசிக்காம எப்டி மாப்பிள்ள பின்னாடியே போறா பாரு. ம்ஹும். டேய் வெய்யி உனக்கு இன்னிக்கு இங்கதா பொழுது வெய்யனும்னு இருக்கு, பேசாம முக்காடு போட்டு தூங்கு”, துண்டை எடுத்து முக்காடிட்டவாறு அமர்ந்து கொண்டான் வெய்யோன்.

சமயல் கட்டில் லைட்டை கூட போடாமல் லாந்தரை தேடி கொண்டிருந்தான் நிலவன். இருட்டில் பின்னால் நின்றபடியே துகி அவனை அணைக்க,

“ப்ச்... இதுக்குதாண்டி உன்னை வீட்டுக்கு போக சொன்னது. பிடிய விடு, நானே அழகி பாப்பாக்கு இப்டி ஆகி போச்சேனு...”,

அவனை இழுத்துக் கொண்டு முன்னால் வந்தவள் அவன் கண்ணை பார்த்து, “வருத்தபட்டியா மாமா”, என்று கேட்க,

“ஆமாடி பாப்பாவுக்கு இப்டி ஆகவும்”, மீண்டும் அவள் கை கொண்டு அவன் வாயை மூடியவள்,

“அந்த வருத்தம் இல்ல மாமா. அந்த வெளங்காத பய உன்னையும், அழகியையும் சேத்து வச்சு பேசுன அப்போ, நீ...”,

மௌனியாய் தலை குனிந்தவன், துகியை இறுக்கி கட்டிக் கொண்டான். “எனக்கு பாப்பாடி அவ அவள போயி, சீ நினைக்க நினைக்க கூட ஒடம்பும், மனசும் ஒண்ணுசேர கூசுது”.

அவன் முதுகை ஆதரவாய் வருடிவிட்டவள், “கண்ணுல தூசு விழுந்து எடுத்தாக் கூட கேவலமா பாக்குற உலகம் மாமா, நீ கண்டதையும் நினைக்காத. உனக்கும், அவளுக்கும் தாய், மகே அப்டின்ற உறவை தாண்டி வேற ஒன்னும் இல்ல, இதுல கண்ட நாயி கண்டது சொன்னா என்ன?, சொல்லிட்டு போகுது விடு”.

இன்னும் இன்னும் நெருக்கமாய் துகியை கட்டிக் கொண்டவன், அவள் முகத்தை கையில் ஏந்தி, “என்ன எப்பவும் இதே அளவு காதலிப்பியா துகிமா”.

“ஏ உயிரே போனாலும் இதவிட அதிகமா காதலிப்பேன் மாமா”.

சட்டென்று கேட்க கூடாத வார்த்தையை கேட்டவன் அவள் இதழில் தன்னிதழை பொறுத்திக் கொண்டான். மெய்மறந்து துகி நிற்க, அவளை இன்பமாய் சிறை செய்து முத்த போர் நடத்திக் கொண்டிருந்தான் அவன்.

“என்னடா இச்சு இச்சுனு சத்தம் வருது. ஒருவேள நிலவுல வடை சுடுற ஆயா என்ன பாத்து முத்தம் குடுக்குதோ”, வெய்யோன் முக்காடை எடுத்துவிட்டு தலையை தூக்கி நிலவை பார்க்க,

“ம்.... நம்ம கண்ணுக்கு பாட்டியும் தெரில, பாட்டியோட முத்தமும் தெரில, பின்ன எங்க இருந்து சத்தம் வருது. ஒருவேள முதுகுக்கு பின்னாடி மோகினி பிசாஸு இருக்கோ, அழகா அம்சமா நா இருக்கவும் அதுதா முத்தம் குடுக்குதோ. ஏய் மோகினி பிசாஷே அழகா பொறந்தது எந்தப்பா எதுக்கு இப்டி முத்தம் குடுத்து என்ன”, பயத்தோடு வெய்யோன் திரும்பி பார்க்க லட்சுமி அவனை முறைத்து கொண்டு நின்றது.

“ப்பா... மோகினி பேயி”, அலறியடித்து அவன் கீழே விழ,

லட்சுமி புஸ், புஸ்சென்று மூச்சுவிட்டு அவனை முறைத்துக் கொண்டே கொம்பை சிலுப்ப,

“டேய் லட்சுமி கண்ணு நீயா நா வெய்யோனு. கண்ண தொறந்து பாரு. சோலைனு நினச்சு முறைக்கிறயா”.

லட்சுமி இன்னும் அவனை முறைத்துக் கொண்டே இருக்க, “என்ன இம்புட்டு பேச்சு பேசுறோம் இந்த மொற மொறைக்குது. லட்சு கண்ணு”,

லட்சுமி தலையை சிலுப்பி வாசலை பார்க்க, “என்னடா அழகிய பாக்கணுமா”, பூம்பூம் மாடுபோல் அது தலையை ஆட்ட,

“ஏ லட்சுமி இத சொல்லவா என்னை பாத்து இந்த மொறப்பு. சரி வா ரொம்ப நேரம் கழிச்சு இப்போதா தூங்குது பாப்பா, அதனால நீ உள்ள போக முடியாது உன்னோட மணிசத்தம் அவள எழுப்பி விட்டுறும். அதனால பின்னாடி கூடி கூட்டீட்டு போறேன்”.

அது தலையாட்டிக் கொண்டே அவன் பின் போக, வெய்யோன் ஒவ்வொரு கதவாய் திறந்து அழகி தெரிகிறாளா என்று பார்த்து கொண்டே வந்தான். அவனுக்கு முன் சென்று லட்சுமி எல்லா கதவையும் இடித்து கொண்டு பார்க்க, சமையல் கட்டு வரவும் லட்சுமி எட்டி பார்த்துவிட்டு முகத்தை திருப்பி வெய்யோனை இழுக்க,

“இதென்னடா வம்பு, ஏ லட்சுமி இரு நா பாத்துக்குறேன், நீ பாத்தா போதாது, அட இரு லட்சுமி உனக்கு இருட்டுல சரியா தெரிஞ்சுருக்காது”, வெய்யோன் தலையை நீட்டி உள்ளே பார்த்துவிட்டு,

"விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் யாரோ
எனக்கென்று ஒரு வத்தல் இருந்திருந்தால்
இதையெல்லாம் நான் பார்க்க நேருமா?
ஏனென்று கேட்கவும் முறை பெண் இல்லை
நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை”

ஜன்னல் கதவை மூடியவன், “ஏ லட்சுமி இதபாத்தா வெட்கபட்ட, ம்கூம்... ம்கூம்... எனக்கும் இப்டி... ம்ஹீம்”.

லட்சுமி அவன் கன்னத்தை நாவினால் நக்கி இழுத்துக் கொண்டு போனது.

“நல்லவேளை லட்சுமி கன்னத்துல நக்குன அவசரத்துல வாயில எதுவும் பண்ணல”,

அவனை திரும்பி நின்று லட்சுமி முறைக்க, “என்ன உனக்கு முத்தம் குடுத்ததே பெருசு இதுல இந்த நினப்பு வேற இருக்கானுதான மொறைக்குற, ரைட்டு ராடு விடு இனி எதுவும் சொல்லல”,

ம்... சிணுங்கிக் கொண்டே நிலவனை தள்ளி நிறுத்தியவள், “லூசு வெளிய கூப்பாடு போட்டுட்டு இருப்பான் நீ போ மாமா”,

“நா போகதாண்டி நினைக்கிறேன் ஆனா உன்னோட குட்டி சுட்டி உதடு என்ன”, மீண்டும் துகியிடம் நெருங்க,

“டேய் காட்டான் டாக்டாரு கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு, போ போ போ இங்க இருந்து”.

“பொண்டாட்டி கிட்ட எதுவும் தப்பில்ல, உம்... நிலவனை இறுக்கி அணைத்து பலமான பொன் முத்திரை ஒன்றை பதித்தவள், “போதும் போ மாமா”,

நிலவன் அவளை இறுக்கமாக கட்டி முத்த மழை பொழிய போகும் நேரம் அழகி அலறினாள்.

“அம்மாமாமாமா...”,

நிலவனும், துகியும் ஒருவரை ஒருவர் விலக்கிக் கொண்டு உள்ளே ஓடினார்கள்.

“என்ன ஆச்சு அழகி இங்கன பாரு, பாருடி என்ன பண்ணுது”.

“டேய் பாப்பா என்னவே ஆச்சு, கண்ண தொறடா. இங்கன பாரு”.

“அழகி பாரு அழகி எதுக்கு அழுவுற, பாரு லட்சுமி கூட அழுவுது. அழகி”.

“ண்ணா... அண்ணா வயி... வயிறு ரொம்ப வலிக்குது. தாங்க முடியல”, உதட்டை கடித்து அழகி கதற,

“நிலவே, ராசா, தூக்கு ராசா டவுனு ஆஸ்பத்திரிக்கு புள்ள இம்புட்டு துடிக்குறத பாத்தா ஏதோ தப்பா இருக்கு”, கோதை சொல்ல, நிலவன் அழகியை மாட்டு வண்டியில் தூக்கி வைத்துக் கொண்டு கிளம்பினான்.

இன்னும் பல வசதிகள் அந்த கிராமத்தில் சீரமைக்கபடாமல்தான் இருக்கிறது. ரோடு இல்லை, சரியான மகிழுந்து வசதி இல்லை, இன்னும் இதுபோல் ஏராளம்.

இங்கே பெங்களூரூவில் விதார்த் அலறி கொண்டு எழுந்தான். அவன் மேனியில் வேர்வை ஆறு ஓட, கண்ணை சுழலவிட்டு பார்த்தான் தன் வீட்டில் தன் அறையில் இருக்கிறோம் என புரிந்தது. காலை எடுத்து தரையில் வைத்து நடக்க முயன்றான் வலது காலில் பெரிய பெரிய கொப்பளங்கள் கன்றி சிவந்து போய் இருந்தது.

விதி அதன் வழியில் சென்று முடிச்சு போட ஆரம்பித்துவிட்டது.

விதார்த் வாழ்வில் அழகி வந்தாலும் சூறை காற்று வீசும், வராது போனாலும் வீசும். இவர்கள் வாழ்வோடு சேர்ந்து பலரின் வாழ்வு மரணத்தின் பிடியில் நிற்க தான் போகிறது.

அது என்னவோ? எதுவோ?

அசைவுகள் தொடரும்...

கதையின் நகர்வு பிடித்திருந்தால் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றிகளும் & பேரன்புகளும் ♥️♥️♥️.
Thread 'பூவிழி அசைவிலே comments thread' https://saaralnovels.com/index.php?threads/பூவிழி-அசைவிலே-comments-thread.590/
 
Status
Not open for further replies.
Top