இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

பிழையில்லா கவிதை நீயடி - கதைத்திரி

Status
Not open for further replies.

geethusri

Moderator
கதையின் நாயகன் : தேவ் சக்ரவர்த்தி

கதையின் நாயகி : மிருதுளா.

மிருதுளா பெயருக்கேற்றாற் போல மென்மையானவள். அன்பிற்காக ஏங்கி கொண்டிருந்தவளின் வாழ்வில் தேவ் புயலை போல நுழைகிறான். அவன் ஏன் அவள் வாழ்வில் நுழைந்தான்? அதன் பிறகு அவள் வாழ்க்கை என்னவானது? என்பதையெல்லாம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 1 :



நிச்சயம் நான் கண்டது கனவுதான்… என்னுடைய தேவ் எப்படி என்னை பற்றி அப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்வான்… அவன் என் மீது கொண்ட அன்பு ஒரு தாய் தன் குழந்தை மீது கொண்ட அன்பை போல மாசுமருவற்றது… அந்த அன்பு எப்படி பொய்த்துப் போகும்…



என் அம்மா இறந்த பிறகு பாலைவனமாய் மாறிய என் வாழ்க்கையில் அன்பெனும் மழையை கொட்டி தீர்த்து சோலை வானமாய் மாற்றியவன் அவனல்லவா? இப்போது அவை அனைத்தும் கானல் நீராய் எப்படி மாறிப்போனது? அவன் என்னை தன் உயிராய் நேசிப்பதாக சொன்னது அனைத்தும் பொய்யா?



இல்லை… நிச்சயம் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை…



நான் தான் அவன் பேசிய வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொண்டு கண்டபடி யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆம். நிச்சயம் அப்படி தான் இருக்க வேண்டும். தேவ் பேசிய அனைத்தையும் கேட்ட பிறகும் அவன் காதல் பொய் என்று நம்ப முடியாமல் தனக்குத்தானே ஏதோ சமாதானம் செய்து கொண்டிருந்தாள் மிருதுளா.



அப்போது அவர்கள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. யார் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அதுவரை தனக்குத்தானே புலம்பியபடி அமர்ந்திருந்தவளின் முகம் சட்டென்று ஒளிர்ந்தது.



ஒருவேளை தான் கேட்டது அனைத்தும் உண்மையாக இருந்தால் தேவ் எப்படி இப்போது வந்திருப்பான். அப்படி என்றால் நான்தான் எதையோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறேன் என்றுதானே அர்த்தம் என்று நினைத்தவள் இதுவரை தான் அவனை தவறாக நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தது அவனுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்து அருகில் இருந்த வாஷ் பேசின் சென்று தன் முகத்தை தண்ணீர் அடித்து கழுவி விட்டு அருகில் இருந்த துண்டால் முகத்தை துடைத்தபடி கதவைத் திறக்கச் சென்றாள்.



விரிந்த புன்னகையுடன் கதவைத் திறந்தவள் அவன் முகத்தை உற்றுப் பார்த்தபடியே “வா தேவ்” என்று அழைத்தாள்.



அவன் முகம் வழக்கம் போல இயல்பாய் இருந்தது. அதில் எந்த குற்ற உணர்ச்சியும் தெரியவில்லை என்பதை கண்டு கொண்டவள் நிச்சயம் தான்தான் எதையோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் என்று முடிவே செய்து விட்டாள்.



நேராக சென்று வராண்டாவில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் ஒரு நொடி அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன் பின்னர் நிதானமாக, “இந்நேரம் அழுகையில கரைஞ்சி போயிருப்பேன்னு நெனச்சு வந்தேன்… ஆனா உன்ன பார்த்தா அப்படி ஏதும் தெரியலையே…” என்று நக்கலாக கேட்டான்.



தேவ் அப்படி நக்கலாக பேசியதும் ஒரு நொடி அவள் மனம் துணுக்குற்றது. ஒருவேளை அவன் தன் நண்பனுடன் பேசிய வார்த்தைகளை தான் கேட்டு விட்டதை அறிந்து கோபத்தில் தான் இப்படி சொல்கிறானோ? இப்போது நாம் செய்த காரியத்திற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டுமோ? சொல்லித்தான் ஆக வேண்டும்... மேலும் அவனை தவறாக நினைத்ததற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று நினைத்தவள்



“இல்ல… அது… அது வந்து… நான் உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்ல வந்தன்… அப்போதான் நீயும் உன்னோட நண்பனும் பேசியதைக் கேட்க வேண்டியதா போயிடுச்சு… அப்போ அந்த நேரம் நீ பேசியதை கேட்டதும் ரொம்ப அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது… அதான் உன்னை பார்க்காமலேயே திரும்பி வந்துட்டேன்… சாரி தேவ்… சில மணி நேரம் என்றாலும் நான் உன்ன பத்தி தப்பா நெனச்சுட்டேன்… நல்லா யோசிச்சு பார்த்த பிறகுதான் நான் தான் எதையோ தவறா புரிஞ்சுகிட்டேன்னு எனக்குத் தோணுச்சு… ஒட்டு கேட்பவர்கள் நல்லதை கேட்பதில்லை என்று சும்மாவா நம்ம பெரியவங்க சொன்னாங்க… ஐ அம் சாரி… நான் உன்ன தப்பா நெனைச்சதுக்கு…” என்று அவள் வருத்தத்துடன் சொன்னாள்.



“ஏய் மிருதுளா… எதுக்காக ஒரு சாரியை வேஸ்ட் பண்ற… நீ கேட்ட எதுவுமே பொய் கிடையாது… அத்தனையும் நிஜம்… எப்படியும் இன்னும் ஒரு இருபது நாள் கழித்து நானே உன்கிட்ட இத பத்தி சொல்லலாம்னு தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்… ஆனா இன்னைக்கே உனக்கு தெரிய வந்துடுச்சு… அதனால என்ன பரவாயில்லை… நான் பேசினத நீ கேட்டதால உன்கிட்ட விளக்க வேண்டிய நேரம் மிச்சம்… ஆமா ஏதோ சந்தோஷமான விஷயத்தை சொல்றதுக்காக வந்தேன்னு சொன்னியே… அது என்ன…” என்று மீண்டும் நக்கலாக கேட்டவன்



தன் வார்த்தைகளால் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து நின்றிருந்தவளின் முகத்தை பார்த்து, “நீ கர்ப்பமா இருக்கேன்னு சொல்ல தான வந்த… நான் சொன்னது கரெக்ட்டா… ஆனாலும் நீ ரொம்ப டியூப்லைட் மிருதுளா… எனக்கு இத பத்தி சந்தேகம் வந்து கிட்டத்தட்ட பத்து நாள் ஆகுது… உனக்கு இன்னைக்கு தான் சந்தேகம் வந்து இருக்கு போல… நல்லவேளை நீயே டாக்டர்கிட்ட போய் உறுதி பண்ணிட்ட… இல்லன்னாலும் நான் உன்ன இந்த வார இறுதியில் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போலாம்னு தான் முடிவு பண்ணியிருந்தேன்…” என்று சொன்னவன் தன் கையில் வைத்திருந்த கோப்பை தனக்கு முன்பிருந்த மேஜை மீது போட்டான்...



அது ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்... மதியம் அவன் தன் நண்பனிடம் சொன்ன விஷயங்களை கேட்டு அதிர்ந்தவள் தான் நின்றிருந்த இடத்துக்கு அருகில் இருந்த மேஜை மேல் வைத்த ரிப்போர்ட்டை எடுக்க மறந்து அப்படியே வந்துவிட்டாள்... அது தான் இது...



“இந்த விஷயம் உனக்கு சந்தோஷமான விஷயமான்னு எனக்கு தெரியாது… ஆனால் நிச்சயம் எனக்கு சந்தோஷமான விஷயம்தான்… இந்த நாளுக்காக தான் கிட்டத்தட்ட ஆறு மாசமா நான் காத்துகிட்டு இருந்தேன்… இன்னையோட உன்ன தொடற வேலையில இருந்து எனக்கு விடுதலை… பிடிக்காத பெண்ணோட படுக்கையை பகிர்ந்து கொள்வது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதமா அந்த கொடுமையான நரகத்தில் தான் நான் உழன்று கொண்டிருந்தேன்… பரவால்ல கடவுளுக்கு என் மேல ஏதோ கொஞ்சம் கருணை இருக்கு… அதனாலதான் இதுல இருந்து எனக்கு விடுதலை கொடுத்துருக்கார்” என்று சற்றும் இரக்கமின்றி சொன்னான்.



என்னது? என்னை அவனுக்கு பிடிக்காதா? பிடிக்காமல் தான் கிட்டத்தட்ட மூன்று மாதமாக என்னை தொட்டானா? அது கூட தெரியாமல் தான் நான் அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேனா?



மிருதுளாவிற்கு தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது…. அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு உடலெல்லாம் தீப்பற்றி எரியும் உணர்வு…



என்னை பிடிக்காது என்பவன் எதற்காக என் பின்னே சுற்றினான்? கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் விடாமல் என்னை பின்தொடர்ந்து என் மனதை கலைத்து என்னுடைய பலவீனமான தருணத்தை எதற்காக பயன்படுத்திக் கொண்டான்?



எதற்காக? இதெல்லாம் எதற்காக?
 

geethusri

Moderator
அத்தியாயம் - 2 :

எதற்காக? இதெல்லாம் எதற்காக செய்தாய்? என்று அவள் தேவ்விடம் கேட்க நினைத்தாள். ஆனால் அவள் தொண்டைக்குழியை விட்டு வார்த்தைகள் வெளிவரவில்லை. இப்போது இருக்கும் நிலையில் அவள் கஷ்டப்பட்டு பேச முயற்சித்தாலும் பேச்சு வரும் என்றும் அவளுக்குத் தோன்றவில்லை.



மாறாக தன் காதல் பொய்த்துப் போனதை நினைத்து தன் நெஞ்சில் வார்த்தையெனும் அமிலம் ஊற்றியவன் முன்பே கதறி விடுவோமோ என்று அவள் பயந்தாள். இதற்கு முன்பு அவள் அவன் முன் அழுததில்லை என்று சொல்வதற்கில்லை. நிறைய முறை அழுதிருக்கிறாள். அதுவும் அவன் தன் கற்பைக் காக்க காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவனுக்கு சுயநினைவு திரும்பிய அடுத்த நொடி அவன் கைகளைப் பற்றிக் கொண்டு கதறி இருக்கிறாள்.



அப்போது இருந்த தேவ் அவளின் கண்ணீரை துடைத்து அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான். ஆனால் இப்போது அவள் கண்முன் நிற்பவன் அப்படி செய்வான் என்று தோன்றவில்லை. மாறாக ‘நீலிக்கண்ணீர் வடிக்கிறாயா?’ என்றுதான் கேட்கக்கூடும்.



ஏற்கனவே அவன் முடிந்தவரை தன்னுடைய வார்த்தைகளால் அவளை அவமானப்படுத்தி விட்டான். இப்போது தான் அவன் முன்பு அழுது வைத்தால் அதற்காக வேறு அவன் தன்னை கேவலமாக பேசுவதை அவள் விரும்பவில்லை. ஆனால் அவள் வாய் கேட்க மறுத்த கேள்வியை அவளின் கண்கள் கேட்க தயங்கவில்லை.



மூன்று மாதங்கள் அவளின் பின்னே சுற்றி மூன்று மாதங்கள் அவளுடன் குடும்பம் நடத்தியவனுக்கு அவள் கண்களின் வார்த்தைகள் புரியாதா என்ன?



“ நான் ஏன் இப்படி எல்லாம் பண்ணனும்னு தானே தெரிஞ்சுக்க நினைக்கிற…? நிச்சயம் அதுக்கு எல்லாம் என்கிட்ட காரணம் இருக்கு… ஆனா அந்த காரணத்தை நான் உன்கிட்ட சொல்ல விரும்பல… ஒருவேளை நீ அதை தெரிஞ்சுக்க விரும்பினா உன்னோட அப்பா டாக்டர் தனசேகர் இருக்கிறாரே அவர் கிட்ட போய் கேட்டுக்கோ… நான் ஏன் இப்படி பண்ணன் என்கிற காரணத்தை அவர் உன்கிட்ட சொல்லுவாரு…”



அதுவரை பிரம்மை பிடித்தவள் போல நின்றிருந்த மிருதுளா தன் உணர்வுக்கு திரும்பியவள், “அப்பாவா? அவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க பண்ண தப்பை மறைப்பதற்காக என்னோட அப்பா மேல பழி போடுறீங்களா?”



“என்னது நான் பழி போடறேனா? ஏன் சொல்ல மாட்ட நீ? உன்னோட அப்பா அந்த உத்தம டாக்டரோட அன்புக்குரிய மகளா நீ இல்லாம இருந்திருந்தா உன்ன மாதிரி ஒருத்தி பின்னாடி நான் காதலை சொல்லிக்கிட்டு சுத்தி இருப்பேன்னு நினைக்கிறியா? இல்ல உன்ன போல ஒருத்தியை தொட்டு இருப்பேன்னு நினைக்கிறியா? டாக்டர் தனசேகரன் மகள் என்பதை தவிர என் கண் பார்வை உன் மேல விழ கூட தகுதி இல்லாதவ நீ… தினமும் உன்ன நீயே கண்ணாடியில பார்க்கிற தானே… ஒரு ஆணை கவரக்கூடிய முன்னழகும் பின்னழகும் உன்கிட்ட இருக்கா நீயே சொல்லு… மொத்த உடம்பும் எந்த மேடு பள்ளமும் இல்லாம சரிசமமா இருக்கு… இப்படி ஒரு சாதாரண ஆணை கூட கவரக்கூடிய எந்த தகுதியும் இல்லாத உன்கூட கிட்டத்தட்ட மூணு மாசமா குடும்ப நடத்த நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்… அப்பேற்பட்ட தியாகியா பாத்து உன் அப்பா மேல பழி போடுறேன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்…” என்று அவன் நக்கலாக சொன்னதும் மிருதுளா கூனி குறுகி போய் நின்றாள்.



“இங்க பாரு… இதுக்கும் மேல உன் கூட பேச எனக்கு விருப்பமில்லை… கிட்டத்தட்ட ஆறு மாதமா நான் நடித்த நாடகம் இதோ இந்த நிமிஷத்துல முடிவுக்கு வந்துவிட்டது… இனி என்னோட விளையாட்டுக்கு நீ தேவையில்லை… நாளைக்கு காலைல எட்டு மணிக்கு தயாராக இரு… மகாதேவன் சார் வந்து உன் வயித்துல வளர்ற குழந்தையை அபார்ஷன் பண்ண மருத்துவமனைக்குப் கூட்டிட்டு போவாரு…”



அதுவரை தன் காதல் பொய்த்துப் போல வேதனையில் உழன்று கொண்டு இருந்தவள் அவன் வயிற்றில் வளரும் குழந்தையை அபார்ஷன் செய்ய வேண்டும் என்று சொன்னதும் மனம் துடிக்க தன் வயிற்றை கைகளால் இறுக்கி பிடித்தாள்.



‘ இல்லை… இது என் குழந்தை… இதை அழிக்க நான் விடமாட்டேன்… அவன் காதல் பொய்யாய் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்… அவன் என்னிடம் காதல் நாடகம் நடத்தியதாகவே இருக்கட்டும்… ஆனால் எனது காதல் உண்மைதானே… இனி என் வாழ்வின் ஆதாரமே என் வயிற்றில் வளரும் குழந்தை தான்… என்ன பாடுபட்டேனும் இதை மட்டும் காப்பாற்றி விடவேண்டும்…’ என்று நினைத்தவள் தொண்டையில் அடைத்த வேதனையை விழுங்கிக்கொண்டு



“தேவ்… நீ என்கூட பழகி என் வயித்துல குழந்தையை கொடுத்தது என் அப்பாவை பழி வாங்குவதற்காகவே இருக்கட்டும்… ஆனால் என் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஏன் அழிக்க நினைக்கிற… இனி என் வாழ்க்கையோட ஆதாரமே இந்தக் குழந்தைதான்… அதனால ப்ளீஸ் குழந்தையை மட்டும் கலைக்க சொல்லாத… ஒருவேளை என் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் நான் அத வச்சி உன்னை நெருங்க முயற்சிப்பேன் என்று நினைக்கிறியா… நிச்சயமா நான் அப்படி பண்ண மாட்டேன்… சத்தியமா ஒரு போதும் நானோ என்னோட குழந்தையோ உன்ன தேடி வர மாட்டோம்… ஒருவேளை உனக்கு என் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லன்னா நான் வேணும்னா பத்திரத்தில் கூட எழுதித் தருகிறேன்… அது மட்டும் இல்ல… நீ என்ன செய்ய சொன்னாலும் செய்யுறேன்… ஆனால் குழந்தையை மட்டும் கலைக்க சொல்லாத…” என்று மன்றாடினாள்.



தவறு செய்தவன் தலைநிமிர்ந்து அழுத்தத்துடன் பேச… அவனால் ஏமாற்றப்பட்டவளோ தன் குழந்தைக்காக அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். தேவ்வை பற்றி மிருதுளாவிற்கு நன்றாகவே தெரியும்… அவன் ஒன்றை நினைத்து விட்டால் அதிலிருந்து அவனை பின்வாங்க வைக்க முடியாது… அதே நேரம் அவனை எதிர்ப்பதும் அவளுக்கு சாத்தியமில்லாதது…



தன்னை எதிர்ப்பவரை எந்த எல்லைக்கு சென்றேனும் தன் காலடியில் மண்டியிட்டு கதற வைக்கும் வல்லாளன் அவன்… அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்ததாலேயே ஒரு மிருதுளா அவனை எதிர்க்காமல் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்…




ஏய் மிருது செல்லம்… எதுக்காக நீ என்கிட்ட இப்படி கெஞ்சிகிட்டு இருக்க…” என்று சாதாரணமாக பேச தொடங்கியவன் பின்னர், “ அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்தக் கருவை அழிக்க வேண்டாமேன்னு நீ கேட்டா மட்டும் நான் விடுவேனா என்ன?” என்று ஒருவித அழுத்தத்துடன் முடித்தான்.



அவன் சொன்னதைக் கேட்ட மிருதுளா மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து நின்றாள்.



‘ அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதா… என்ன சொல்கிறான் இவன்…?’



இதுவரை அவன் பேசியதிலிருந்து தன் தந்தையை பழிவாங்க தன்னை காதலித்து தன் வயிற்றில் குழந்தையை கொடுத்து தன்னை கைவிட்டு விடுவதே அவனின் நோக்கம் என்று அவள் நினைத்திருந்தாள். அவன் குழந்தையை கலைக்க வேண்டும் என்று சொன்ன போது கூட குழந்தையை வைத்து தான் அவனை நெருங்க முயல்வோம் என்று எண்ணி அவன் அப்படி சொல்வதாக நினைத்தாள். ஆனால் அவன் தன் வயிற்றில் வளரும் கருவை அழிப்பதற்காகவே அதை உருவாக்க முயன்றான் என்பதை அவன் வாய் மொழியாகவே கேட்டவளுக்கு நெஞ்சை அடைத்தது.



எப்படிப்பட்ட கல்நெஞ்சகாரன் இவன்…



கடந்த ஆறு மாதமாக அவளிடம் அன்பே உருவாக நடந்து கொண்ட வனுக்கும் இப்போது தன் முன் நிற்பவனுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்?



இவன் என் தந்தையை பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவரிடம் நேரடியாக மோதி இருக்க வேண்டும்… அதை விட்டுவிட்டு அவரை வீழ்த்த என்னை பயன்படுத்த நினைக்கிறான்… ஆனால் அவன் நினைப்பது ஒருபோதும் நடக்காது என்று அவனிடம் யார் சொல்வது?



இப்போது நான் அதை பற்றி சொன்னால் கூட குழந்தையை காப்பாற்ற அப்படி சொல்வதாக தான் நினைப்பான்… சும்மாவே அவன் ஒன்றை செய்ய நினைத்தால் அதை மாற்றுவது கடினம்… இதில் பல மாதமாக திட்டமிட்டு செயல்படுத்தியதை இறுதி நொடியில் மாற்ற சொன்னால் செய்வானா என்ன? என்று விரக்தியுடன் நினைத்தாலும் கடைசியாக ஒருமுறை அவனிடம் பேசி பார்க்க முடிவெடுத்தாள்…

“தேவ் இப்போது நீ அழிக்க நினைக்கிறாயே அது என்னோட குழந்தை மட்டுமல்ல… உன்னோட குழந்தையும் தான்… அதனால கொஞ்சம் யோசி தேவ்…” என்று கெஞ்சலாக சொன்னாள்.



அவள் சொன்னதைக் கேட்ட தேவ் ஒருநொடி இறுகி நின்றவன் பின்னர், “ நீ என்ன சொன்னாலும் என்னோட முடிவுல மாற்றமில்லை… நாளைக்கு காலையில தயாரா இரு… மகாதேவன் உன்னை வந்து கூட்டிட்டு போவாரு.. இதுதான் நான் உன்ன பார்க்கிற கடைசி தடவை… இனி உன் முகத்திலேயே விழிக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன்…” என்று சொன்னவன் வீட்டை விட்டு வெளியேற நடக்கத் தொடங்கினான்.

நான்கு அடி எடுத்து வைத்தவன் அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே, “நைட்டோட நைட்டா எங்கயாவது கிளம்பிப் போய்விடலாம்… இல்ல டாக்டர்கிட்ட கருவை கலைக்க உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லி ஏதாவது பிரச்சனை பண்ணலாம் என்று தப்பு கணக்கு போடாதே… உனக்கு அபார்ஷன் நடக்கிற வரைக்கும் என்னோட கண்காணிப்பு உன்னை சுத்தி இருந்துகிட்டே இருக்கும்… நீயும் ஒத்துழைச்சா உனக்கு எந்தவித கஷ்டமும் இல்லாம எல்லாம் முடிஞ்சிடும்... ஒருவேளை நீ ஏதாவது முரண்டு பண்ணா உன் கையை காலை கட்டி உன்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போக கூட தயங்க மாட்டேன்... ஒருவேளை நான் சொன்னத மீறி நீ நடக்க முயற்சி பண்ணா அதுக்கான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்…” என்று சொன்னவன் வீட்டை விட்டு வெளியேறினான்.



அவன் சொல்லிவிட்டு சென்றது போலவே அடுத்த நாள் சரியாக எட்டு மணிக்கு அவளை வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகாதேவன் அவளுக்கு அபார்ஷன் நடக்கும் வரை மருத்துவமனையிலேயே இருந்து அவளுக்கு அபார்ஷன் செய்யப்பட்டு விட்டதை உறுதிபடுத்திய பின்பே மருத்துவமனையிலிருந்து சென்றார்.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 3 :

தேவ் ‘சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸின்’ தலைமையகமாக செயல்படும் மவுண்ட் ரோடில் அமைந்திருக்கும் பத்து மாடிக் கட்டிடத்தில் அவனுக்குரிய அறையில் அமர்ந்து கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது அறை கதவு மெலிதாக தட்டப்பட்டது.

அந்த சப்தம் காதில் விழுந்ததும் “எஸ் கம் இன்” என்றவன் கணினியில் இருந்த தனது கவனத்தை சிதற விடாமல் தொடர்ந்து வேலை பார்த்தான்.

அவன் தன் அறைக்குள் நுழைய அனுமதி கொடுத்ததும் உள்ளே வந்த மகாதேவன் “சார்” என்றழைத்தார்.

“சொல்லுங்க மகாதேவன்… மிருதுளாவிற்கு அபார்ஷன் முடிஞ்சிடுச்சா…” என்று கணினியில் இருந்த தனது பார்வையை விலக்காமலே கேட்டான்.

அவன் உண்மையிலேயே வேலை பார்க்கிறானா அல்லது தன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வேலை பார்ப்பது போல பாவனை புரிகிறானா என்று மகாதேவனுக்கு தெரியவில்லை. ஆனால் தனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியிடம் அவர் தன் சந்தேகத்தை கேட்கவா முடியும்?

அதனால் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை மனதிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்தவர், “முடிஞ்சிருச்சு சார்… டாக்டர் வந்து என்கிட்ட சொன்ன பிறகுதான் நான் கிளம்பி வந்தேன்… இன்னைக்கு ஒரு நாள் மிருதுளா மருத்துவமனையில் இருக்கணுமாம்… நாளைக்கு காலையில டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க…”

“ஓ… அப்படியா… நல்லது… நாளைக்கு காலையில நீங்க போய் மிருதுளாவை டிஸ்சார்ஜ் செய்து என்னோட அப்பார்ட்மெண்டில் விட்டுட்டு வந்திருங்க… அப்படியே வரும்போது அடுத்த ஒரு வாரத்திற்குள் அவள் அந்த அப்பார்ட்மெண்டை காலி செய்யணும்னு நான் சொன்னதா சொல்லிடுங்க… அதுக்கு மேல அவளுக்கு என்னால டைம் கொடுக்க முடியாதுன்னும் நான் சொன்னதா சொல்லிருங்க… சரி இப்போ நீங்க போய் உங்களோட வேலைய பாருங்க…” கணினியின் மீது பதித்திருந்த தன் பார்வையை அகற்றாமலேயே தேவ் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

ஏதோ பேசுவதற்காக வாய் திறந்த மகாதேவன் பின்னர் என்ன நினைத்தாரோ தான் சொல்ல வந்ததை அப்படியே விழுங்கி விட்டு, “சரிங்க சார்” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு அகன்றார்.

அவர் தன் அறையை விட்டு சென்று விட்டதை உறுதி படுத்திய தேவ் தன் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியவனின் கண்ணுக்குள் கண்ணீரில் மிதந்த இரண்டு விழிகள் தோன்றின.

சட்டென்று தன் கண்களை திறந்தவன் எங்கே மீண்டும் கண் மூடினால் அந்த விழிகள் தன் கண்ணுக்குள் தோன்றுமே என்று பயந்தவனைப் போல தன் மனதை அடக்கி விட்ட வேலையை தொடர்ந்தான்.

மறுநாள் காலை தேவ் சொன்னபடியே மருத்துவமனைக்குச் சென்ற மகாதேவன் முதலில் டாக்டரை சந்தித்து மிருதுளாவை டிஸ்சார்ஜ் செய்யலாமா என்று கேட்டு உறுதி படுத்தியவர் டாக்டர் டிஸ்சார்ஜ் செய்ய அனுமதி கொடுத்ததும் நேரே வரவேற்பறைக்கு சென்று பணத்தை கட்டியவர் ரசீதைப் பெற்றுக் கொண்ட பிறகே மிருதுளா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு சென்றார்.

அவர் மிருதுளாவின் அறைக்குள் நுழையும் போது அவள் தனக்கு எதிரே இருந்த சுவரை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தாள். அவளை இந்த நிலையில் பார்க்க அவருக்கும் சங்கடமாக தான் இருந்தது. ஆனால் அவரிடமும் வேறு வழி இல்லை. தேவ் சொன்ன பணியை அச்சுப் பிசகாமல் செய்ய வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.

மிருதுளா தான் வந்ததை உணரவில்லை என்பதை கவனித்தவர் தன் தொண்டையை லேசாக கணைத்துவிட்டு அந்த அறையில் அவளுக்கு துணையாக இருந்த நர்சிடம் அவளுக்கு கொடுக்கப்பட வேண்டிய மாத்திரை மருந்துகளை பற்றிய விபரங்களை கேட்கத் தொடங்கினார்.

அனைத்து விபரங்களையும் கேட்டு முடித்ததும் மிருதுளாவின் புறம் திரும்பியவர் “மிருதுளா… நாம கிளம்பலாம்…” என்றார்.

அவள் வாய் திறந்து ஏதும் பேசவில்லை. ஆனால் கண்களில் கேள்வியுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

“உன்ன டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி டாக்டர் சொல்லிட்டாங்க… அதான் உன்ன கூட்டிட்டு போக நான் வந்து இருக்கேன்…” என்று மிருதுளாவிடம் சொன்னவர் பின்னர் நர்சிடம், “சிஸ்டர்… மிருதுளாவோட மாத்திரை, மருந்துகளை ஒரு பையில் போட்டு கொடுக்க முடியுமா ப்ளீஸ்…” என்றார்.

அவர் சொன்னபடியே நர்ஸ் அவளின் மாத்திரை மருந்துகளை ஒரு பையில் போட்டுக் கொடுப்பதற்குள் மிருதுளா தன் உடலில் இருந்த சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி படுக்கையிலிருந்து இறங்கி நின்றாள்.

நேற்றுதான் அபார்ஷன் செய்திருக்கும் நிலையில் உடல் பலவீனத்தில் இருப்பவள் எங்கேனும் விழுந்து விடுவாளோ என்று பயந்த மகாதேவன் அவளுக்கு உதவுவதற்காக அவளை நோக்கி அடி எடுத்து வைக்கத் தொடங்கினார்.

ஆனால் அவரின் முயற்சி புரிந்தவளை போல அவரை கைநீட்டி தடுத்த மிருதுளா தன்னால் நடக்க முடியும் என்று சைகையிலேயே அவரிடம் சொன்னவள் மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து நடக்க தொடங்கினாள்.

மருத்துவமனை கட்டிடத்தை விட்டு அவர்கள் வெளியே வரும்போது பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தவள் “மழை பெய்யுது” என்றாள்.

அவளுக்கு அருகிலேயே சற்று இடைவெளிவிட்டு நடந்து வந்த மகாதேவன் மழைக்காலத்தில் மழை பெய்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைத்தார். ஆனாலும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தவள் இப்போதாவது வாய் திறந்தாளே என்ற சந்தோஷத்தில், “ஆமா… மழை பெய்யுது…” என்றார்.

அதன்பிறகு மிருதுளா மீண்டும் அமைதியாகி விட்டாள். சிறிது நேரம் மழை பொழிந்து கொண்டிருந்த வானத்தையே வெறித்துப் பார்த்தவளின் உதடுகளில் கசப்பான புன்னகை தோன்றியது. அதற்கு நேர் மாறாக அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அவள் தன் காதல் பொய்த்துப் போனதற்காக அழுதாளா? அல்லது தன் குழந்தை தன் தந்தையாலேயே அழிக்கப்பட்டதை நினைத்து அழுதாளா? யாமறியோம்…

மகாதேவன் அவளை மருத்துவமனையில் இருந்து தேவ்வின் அபார்ட்மெண்டுக்கு அழைத்து வரும் வரை மிருதுளா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவள் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த காட்சிகளை வெறித்துப் பார்த்தபடி வந்தாள்.

மகாதேவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அவருக்கும் அவளின் நிலை தெரியும் தானே?

மிருதுளாவை அழைத்து வந்து தேவ்வின் அப்பார்ட்மெண்டில் விட்டவர் பின்னர் அவளிடம் மருந்துகள் அடங்கிய பையை கொடுத்தார்.

அவர் இப்போது தேவ் சொன்ன விஷயத்தை அவளிடம் சொல்லியாக வேண்டும். ஆனால் முடுக்கி விட்ட பொம்மை போல அவள் இருந்த நிலையை பார்த்தவருக்கு தொண்டையை விட்டு வார்த்தைகள் வெளிவர மறுத்தது.

தான் மிருதுளாவை பார்த்து பரிதாபப்பட்டு இப்போது தேவ் சொன்னதை சொல்லாமல் சென்றால் அவன் மற்றவர் தன்னை பார்த்து பரிதாபப்படும் நிலையை உருவாக்குவான் என்பதை அறிந்திருந்த மகாதேவன் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு மிருதுளாவிடம் தேவ் சொன்னதை சொல்லிவிட்டார்.

சற்றும் இடைவெளி விடாமல் ஒரே மூச்சில் அவன் சொன்னதை சொன்னவர் மிருதுளாவின் பதிலுக்காக காத்திருக்கத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட ஒரு நிமிடம் தன் கீழ் உதட்டை கடித்தபடி அமைதியாக இருந்தவள் “போய் விடுகிறேன்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள்.

அதற்கு மேல் அங்கு நிற்க மகாதேவனுக்கும் சங்கடமாக இருந்தது. அதனால் அவளிடம் தலையசைத்து விடைபெற்றவர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

தேவ் சொன்னபடியே ஒரு வாரத்திற்குள் அவன் அப்பார்ட்மெண்ட்டை விட்டு கிளம்பிய மிருதுளா கடந்த ஒரு வாரமாக தேவ்வை பார்க்க முடியாமல் ஏங்கி இருந்தவள் தான் கிளம்புவதை சொல்லும் சாக்கில் அவனிடம் பேசலாம் என்று நினைத்து அவன் எண்ணிற்கு அழைப்பு எடுத்தாள்.

அழைப்பது யார் என்று பார்க்காமலேயே அழைப்பை ஏற்றவன் “ஹலோ தேவ் ஹியர்” என்றான்.

அவனது கம்பீரமான குரலை ஒரு நொடி கண் மூடி அனுபவித்தவள் பின்னர், “நான் மிருதுளா பேசறன்…” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

ஒரு நொடி ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தவன் “என்ன விஷயம்?” என்று அவளின் பெயரைக்கூட உச்சரிக்காமல் கேட்டான்.

அதை மிருதுளாவும் கவனிக்கவே செய்தாள். தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கிக் கொண்டு மெல்லிய குரலில், “நான் இன்னைக்கு கிளம்பறேன்” என்றாள்.

“ஓ… அப்படியா… சரி… வேற எதுவும் விஷயமும் இல்லல்ல… நான் போனை வைக்கிறேன்…” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதை அறிந்த மிருதுளாவிற்கு அழுகையாக வந்தது. தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்று அவளுக்கு புரியவில்லை.

தன் அப்பாவைபழிவாங்குவதற்காக தன்னை காதலிப்பது போல நடித்ததாக அவனே சொல்லிய பிறகும் தன் மனம் ஏன் இன்னும் அவனையே நாடுகிறது? காதல் கொண்ட மனம் அவன் முகத்தை பார்க்க ஏன் ஏங்குகிறது? தன் மனம் ஏன் அவனை வெறுக்க மறுக்கிறது? பொய்யான நேசம் என்று தெரிய தெரிந்த பிறகும் அந்த நேசத்தில் குளிர்காய ஏன் விரும்புகிறது?

அவள் மூளை கேட்கும் எந்த கேள்விக்கும் அவள் மனதிடம் விடை இல்லை. அவள் மனதிடம் உள்ள ஒரே பதில் நான் அவனை விரும்புவது உண்மை. ஒருவேளை நான் அவனை விரும்புவதை நிறுத்திவிட்டால் என் இதயம் துடிப்பதை நிறுத்தி விடும் என்பதே.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 4 :



தேவ்வின் அனுமதிபெற்று அவன் அறைக்குள் நுழைந்த மகாதேவன், “சார் எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு… நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டார்.



கணினியியல் வேலை செய்து கொண்டிருந்த தேவ், “சரி… கிளம்புங்க மகாதேவன்…” கணினியில் பார்வை பதித்தபடி பதில் சொன்னவன் பின்னர் ஏதோ நினைவு வந்தவனை போல வேலை செய்வதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்து, “மகாதேவன் அபார்ட்மெண்ட்டை கிளீன் பண்ணி பெயிண்ட் பண்ண சொல்லி இருந்தேனே… அந்த வேலை முடிஞ்சிடுச்சா…?” என்று கேட்டான்.



“ வேலை முடிந்துவிட்டதாக மதியமே காண்ட்ராக்டர் போன் பண்ணி சொல்லிட்டார் சார்… ஆனா நான்தான் நேர்ல போய் பார்த்துவிட்டு கன்ஃபார்ம் பண்ண பிறகு உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சு சொல்லல… சாரி…” என்றார்.



“ஓ… அப்படியா… சரி நீங்க கிளம்புங்க மகாதேவன்… இன்று இரவு நான் அப்பார்ட்மெண்டில் தங்கலாம் என்று தான் நினைத்து இருக்கிறேன்… அதனால பெயிண்டிங் வேலை எல்லாம் நல்லா பண்ணி இருக்காங்களான்னு நானே சரி பார்த்து கொள்கிறேன்…” என்றவன் அவரை அந்த அறையில் இருந்து செல்லுமாறு கைகளால் சைகை செய்தான்.



அவர் அந்த அறையை விட்டு சென்றதும் விட்ட வேலையை தொடர மனமில்லாமல் தன் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கண் மூடினான்.



‘ அப்பார்ட்மெண்ட் முழுக்க சுத்தப்படுத்தி… புதுசா பெயிண்ட் அடித்து விட்டால் மட்டும் அந்த வீட்டில் நிரம்பியிருக்கும் மிருதுளாவின் நினைவுகளை உன்னால் விரட்டி விட முடியுமா?’ என்று அவன் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டது.



அந்தக் கேள்விக்கு அவனிடம் விடையில்லை… விடை தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை… மிருதுளா சம்பந்தப்பட்ட எதையும் அவன் நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை… அவளைப் பற்றி நினைக்கத் தொடங்கினால் அவளின் அப்பாவும் சேர்ந்து அவன் நினைவுக்கு வருகிறார்… கூடவே அவர் செய்த படுபாதகமான செயல்களும் நினைவுக்கு வந்துவிடுகிறது…



அவர் செய்த செயல் நினைவுக்கு வரும் போதெல்லாம் அவனிடம் இருக்கும் மனிதத் தன்மை அழிந்து மிருக தன்மை வெளிவந்து விடுகிறது… அவர் செய்த செயலுக்கு அவரின் மகள் மூலமாகவே தான் ஏற்கனவே அவருக்கு பலத்த அடி கொடுத்து விட்டோம்… இனி அவர் செய்த செயலை மறந்து தனக்கான வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்று அவன் நினைத்தான்.



அதற்கு முதல் படியாக மிருதுளாவும் அவனும் சேர்ந்து வாழ்ந்த அப்பார்ட்மெண்ட்டை அவள் காலி செய்த அடுத்த நாளே புதிதாக பெயிண்ட் அடித்து சுத்தப்படுத்த சொன்னான். மிருதுளாவிற்கு அபார்ஷன் முடிந்த பிறகு அவள் அங்கு தங்கியிருந்த ஒரு வார காலமும் அதன்பிறகு பெயிண்ட் அடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட இரண்டு நாட்களும் அவன் தனது மாளிகையில் தான் தங்கி இருந்தான்.



ஆம். அவனுடையது சாதாரண வீடல்ல மாளிகை. ஆறு மாதத்திற்கு முன்பு வரை அவன் அந்த மாளிகையில் தான் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். அவன் தங்கை இறந்த பிறகு அவன் பாட்டி அந்த மாளிகையில் இருக்கப் பிடிக்காமல் தனது சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார். தன் தங்கையும் பாட்டியும் இல்லாத வீட்டில் தனியாக தங்க விருப்பமில்லாத தேவ் விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்காக வாங்கி வைத்திருந்த அப்பார்ட்மெண்டில் தங்கிக் கொண்டான்.



மிருதுளாவிடம் அவள் அப்பாவை பழி வாங்குவதற்காகவே அவளைக் காதலித்து ஏமாற்றியதாக அவன் சொன்ன பிறகு அவனுக்குள் லேசாக குற்ற உணர்வு எழுந்தது தான். ஆனால் தான் செய்தது தான் சரி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் அந்த குற்ற உணர்வை போக்குவதற்காக தான் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த மாளிகைக்கு சென்று தங்கினான்.



இப்போது மட்டுமல்ல மிருதுளா விஷயத்தில் எப்போது அவனுக்குள் குற்றவுணர்வு தோன்றினாலும் தான் செய்தது சரிதான் என்பதை தனக்குத்தானே அறிவுறுத்தி கொள்ள அவன் அப்படி தான் செய்வான். அங்கு சென்றால் தாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த மாளிகை இப்போது இப்படி வெறிச்சோடி இருக்க காரணமான மிருதுளாவின் அப்பாவின் செயல் நினைவுக்கு வந்து தான் செய்து கொண்டிருப்பது தவறல்ல என்ற முடிவுக்கு அவன் மனது வந்துவிடும்.



இன்று ஏனோ அவனுக்கு அந்த அப்பார்ட்மெண்டில் சென்று தங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதன் காரணம் என்னவென்று அவனுக்கு விளங்கவில்லை. அதனால் இன்று அங்கேயே தங்கலாம் என்று முடிவெடுத்தவன் கணினியில் தான் செய்து கொண்டிருந்த வேலையை முடித்திருந்த வரை சேவ் செய்துவிட்டு கணினியை அணைத்த பிறகு தன் அறையை விட்டு கிளம்பினான்.



அவன் தன் அறையை விட்டு கிளம்பும் போதே தன்னுடைய டிரைவருக்கு போன் செய்து காரை பார்க்கிங்கில் இருந்து கொண்டு வந்து அலுவலக வாயிலின் முன்பு நிறுத்துமாறு சொல்லியிருந்தான். அதனால் அவன் அலுவலகக் கட்டிடத்தை விட்டு வெளியே வரும்போது அவன் கார் அங்கு நின்றிருந்தது.



அவன் வருவதை கவனித்த டிரைவர் அவனுக்காக காரின் பின் இருக்கை கதவைத் திறந்தவர் அவன் அமர்ந்ததும் கதவை மூடிவிட்டு காரை சுற்றிக் கொண்டு சென்று டிரைவர் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் காரை கிளப்பியவர், “சார் எங்க போகணும்?” என்று கேட்டார்.



“அப்பார்ட்மெண்ட் போங்க?” என்று சொன்ன தேவ் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.



அடுத்த அரை மணி நேரத்தில் டிரைவர் அவனுடைய அப்பார்ட்மெண்ட் இருக்கும் கட்டிடத்தின் நுழைவாயிலின் முன்பு காரை நிறுத்திவிட்டு ஹாரன் அடிக்க தொடங்கினார்.



அடுத்த சில நொடிகளில் நுழைவாயிலின் கதவைத் திறந்த வாட்ச்மேன் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த தேவ்வை பார்த்து, “வணக்கம் சார்” என்றார்.



தன் கண்களைத் திறந்து அவரைப் பார்த்து தலையசைத்தவன் ஏதும் பேசவில்லை.



“சார்… நம்ம மிருதுளா அம்மா…” என்று வாட்ச்மேன் சொல்ல தொடங்கியதும் ஒரு நொடி உடல் விறைத்தவன் பின்னர் வாட்ச்மேன் சொல்வதை கவனமாக கவனிக்கத் தொடங்கினான்.



“அவங்க கடந்த மூன்று நாளா தினமும் இங்க வராங்க… ஆனா உங்க அப்பார்ட்மெண்ட் போகாம இந்த சாலைக்கு எதிர் புறம் இருக்க பென்சில் நான்கு… ஐந்து மணி நேரம் உட்கார்ந்து இருக்கவங்க அப்படியே கிளம்பி போயிடறாங்க… இன்னைக்கு கூட வந்து இருக்காங்க சார்…” என்று அவர் சொல்லி முடித்ததும்



“ஆமாம் சார்… நம்ம மிருதுளா மேடம் எதிர் புறம் இருக்க பெஞ்சில் உட்கார்ந்து இருக்காங்க…” என்று டிரைவரும் காரின் கண்ணாடி வழியே பார்த்து விட்டு சொன்னார்.



காரில் இருந்த ரியர் வியூ கண்ணாடி வழியாக மிருதுளா அமர்ந்திருப்பதைப் கவனித்தாலும் ஒன்றும் சொல்லாமல் தேவ் காரை நேராக பார்க்கிங்கை நோக்கி செலுத்த சொன்னான்.



அன்று மட்டுமல்ல… அடுத்த நாள் அவன் வரும் போதும் மிருதுளா அங்கேயே அமர்ந்து இருந்து அவன் கார் உள்ளே நுழைவதை பார்த்திருந்தாள்… அதற்கு அடுத்த நாளும் இதே கதை தொடரவே இனியும் கண்டும் காணாமல் செல்வதில் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து அவள் முன்பு சென்று நின்றவன், “ஏய்… இங்கே என்ன பண்ற நீ…” என்று அவளை அதட்டினான்.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 5 :



அவன் அதட்டியதும் உடல் நடுங்க எழுந்து நின்றவள், “சும்மாதான் இங்க உட்கார்ந்திருக்கன்…” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.



அவள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாள் என்ற காரணம் தேவ்விற்கு நன்றாகவே தெரியும்… அவள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் அவன் அப்பார்ட்மெண்டின் வராண்டா ஜன்னல் நன்றாகவே தெரியும்… தினமும் வேலை முடிந்து வந்த பிறகு சிறிது நேரம் அந்த ஜன்னல் அருகே அமர்ந்து வெளியில் தெரியும் காட்சிகளை வேடிக்கை பார்ப்பது தேவ்விற்கு மிகவும் பிடித்தமான விஷயம்… அவனின் இந்தப் பழக்கம் அவளுக்கு நன்றாகவே தெரியும்… அதனால் அந்த சிறிது நேரம் தன் முகத்தை பார்ப்பதற்காகவே அவள் இங்கு அமர்ந்து இருக்கிறாள் என்பதை அவளை இங்கு பார்த்த முதல் நாளே அவன் கணித்து விட்டான்…



அவளை அவன் பார்த்து விடுவானோ என்று அவள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை… ஏனென்றால் அவள் தன் துப்பட்டாவை தலையை சுற்றி போட்டு அதை நெற்றி வரை இழுத்து விட்டபடி தான் மூன்று நாட்களாக அமர்ந்திருக்கிறாள்… தன்னுடைய கணிப்பு சரியா என்பதை தெரிந்து கொள்வதற்காக தேவ் கடந்த இரண்டு நாட்களாக தன்னுடைய வழக்கத்தை மாற்றாமல் வேலை முடிந்து வந்ததும் சிறிது நேரம் அந்த ஜன்னல் அருகே நின்று வேடிக்கை பார்த்தான்…



அவன் கணித்தது போலவே அவன் அங்கு நின்றிருந்த நேரம் முழுக்க மிருதுளா அவனை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்… தன்னுடைய கணிப்பு சரியாக இருந்ததை நினைத்து தேவ்வால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை… மாறாக அவனுக்கு கடுப்பாக இருந்தது…



கடந்த ஆறு மாதமாக தன் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு இனியாவது தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் குறைந்தபட்சம் நிம்மதியாக வாழலாம் என்று அவன் நினைத்திருந்தான்… ஆனால் இந்த மிருதுளாவோ தான் அவள் அப்பாவை பழி வாங்குவதற்காகவே அவளை காதலிப்பது போல நடித்ததாக சொன்ன பிறகும் உரிமையாளன் எட்டி உதைத்த பிறகும் அவன் காலை சுற்றிவரும் நாய்க்குட்டியை போல இப்படி செய்வது அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை…



அதுமட்டுமின்றி ஒரு பெண் இரவு நேரத்தில் இப்படி தினமும் வந்து இங்கு அமர்ந்து இருப்பது நல்லதல்ல… இந்த இடம் பாதுகாப்பானது தான் என்றாலும் இங்கிருந்து அவள் இப்போது தங்கியிருக்கும் இடத்திற்கு (அவள் இப்போது எங்கு தங்கியிருக்கிறாள் என்ற விஷயம் தேவ்விற்கு தெரியாது… தனக்கும் அவளுக்கும் இடையே இருந்த உறவு முடிந்து விட்டதாக அவன் அவளிடம் சொன்ன பிறகு அவளைப் பற்றிய எந்த விவரங்களையும் அவன் அறிந்து கொள்ள விரும்பவில்லை…) செல்லும் வழியில் அவளுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் என்ன ஆவது? என்று அவன் நினைத்தான்.



‘நீ அவளை நினைத்து இப்படி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை… அவ உன் எதிரியோட பொண்ணு… அத நீ மறந்துட்டியா… உனக்கு எதுக்கு அவ மேல இவ்வளவு அக்கறை?’ என்று அந்நேரம் அவன் மனது கேள்வி எழுப்பியது.



‘இல்ல… எனக்கு அவ மேல எந்த அக்கறையும் கிடையாது… ஒருவேளை அவள் போகும் வழியில் அவளுக்கு ஏதாவது நிகழ்ந்தால் போலீஸின் முதல் சந்தேகப் பார்வை என் மீதுதான் விழும்… இனியாவது நிம்மதியாக வாழலாம் என்று முடிவெடுத்து இருக்கும் இப்போது இந்த தொல்லை வேறு தேவையா? என்று தான் நான் நினைக்கிறேன்… அதற்காகவே அவளின் இந்த செயலைத் தடுக்க நினைக்கிறேன்…’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் அதை நிறைவேற்றுவதற்காக இப்போது மிருதுளாவின் முன்பு நின்றிருந்தான்.



“என்னது சும்மாவா…. சும்மா மட்டுமில்ல ஏதாவது காரணம் இருந்தாக்கூட நீ இந்த திசைக்கே வரக் கூடாது புரிஞ்சுதா… நீ இப்போ எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிகிட்டு இருக்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா… என்னோட இரக்கத்தை தூண்டி என் பார்வை மீண்டும் உன் மேல விழ வைக்கணும்னு நினைக்கிற அப்படி தானே… ஆனால் நீ ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கணும் மிருதுளா… என் வாழ்க்கையில நான் என்ன நினைக்கிறேனோ அது மட்டும் தான் நடக்கும்… நீ இந்த மாதிரி என் வீட்டு முன்னாடி தவம் கிடந்தா மட்டும் ‘அய்யய்யோ இந்த பொண்ணு நம்ம மேல எவ்வளவு அன்பு வச்சிருக்குன்னு நெனச்சு நான் உன்னை மீண்டும் என் வாழ்க்கைகுள்ள அனுமதிப்பேன்னு நினைக்கிறியா… அப்படி ஒரு விஷயம் எப்போவும் நடக்காது… அதனால இனி இப்படி இங்கு வந்து அமர்ந்து இருக்கும் வேலையை விட்டுடு…” என்று அவன் அழுத்தமாகச் சொன்னதும்



“என் மனசுல அப்படி எந்த எண்ணமும் இல்லை… நான் உங்ககிட்ட சொன்னது போல சும்மா தான் இங்க உட்கார்ந்து இருக்கேன்… நான் இங்க உட்கார்ந்து இருந்தா உங்களுக்கு என்ன?” என்று அவள் தலை குனிந்தவாறு பதில் சொன்னாள்.



“ஏய்… நீ இல்லைன்னு சொன்னா நான் நம்பிடுவேனா… என்கிட்ட உன் நடிப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது… உன்ன பாக்கவே எனக்கு எரிச்சலா இருக்கு… நீ இனி என் கண்ணிலேயே படக்கூடாது… அதையும் மீறி என் முன்ன வந்தேன்னா நீ என் கண் பார்வையில் வராம இருக்க என்ன பண்ணணுமோ அதை நான் பண்ணிடுவன்…” என்று அவன் சொன்னதும் அதுவரை தலை குனிந்து நின்றபடி இருந்தவள் மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.



‘என்ன செய்வாய்?’ என்ற அவள் கண்களில் இருந்த கேள்வியை சரியாக படித்தவன், “இவனால அப்படி என்ன பண்ண முடியும்னு நினைக்கிறியா? உன்னை என் வாழ்க்கைகுள்ள கொண்டு வருவதற்காக உனக்கு தினமும் பூக்களை அனுப்பி… உனக்கு உடம்பு சரியில்லாத போது உன்மேல அக்கறை இருக்க மாதிரி கவனிச்சி… உனக்காக ஒவ்வொன்னா பார்த்து பார்த்து செய்து… உன்னை கற்பழிக்க முயன்றவர்களிடமிருந்து என்னை காப்பாற்றுவது போல நடித்து… இப்படியெல்லாம் செய்த எனக்கு உன்னை என் கண் பார்வையில் இருந்து அகற்ற என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா என்ன?” என்று அவன் அலட்சியமாக கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்ட மிருதுளா திடுக்கிட்டாள்.



‘என்ன சொன்னான் இவன்? என்னை கற்பழிக்க வந்த கயவர்களிடம் இருந்து இவன் என்னை காப்பாற்றியது தற்செயல் நிகழ்வு கிடையாதா? அதுவும் இவன் நாடகத்தில் ஒன்றா?’



மீண்டும் தன் உணர்வுக்கு திரும்பியவள், “அப்போ… அப்போ… அவங்க…” என்று பேச தொடங்கியவளால் அதற்கு மேல் தான் கேட்க நினைத்ததை கேட்க முடியவில்லை.



கண்கள் கலங்கி உதடுகள் நடுங்க பேச முயற்சித்தவளை அலட்சியமாக நோக்கியவன் அவள் கேட்க வந்ததை புரிந்து கொண்டு, “ஆமா அதுவும் என்னோட நாடகத்தில் ஒரு பகுதிதான்… அவங்க எல்லாம் நான் ஏற்பாடு பண்ண ஆட்கள் தான்” என்று பதிலளித்தான்.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 6 :



“ஏன் தேவ் அப்படி பண்ண…. அன்னைக்கு நீ வர கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் அவங்க… அவங்க… என்னை…”



அதற்குமேல் மிருதுளாவால் பேச முடியவில்லை… அன்று நடந்ததை நினைத்தால் இப்போதும் அவள் உடல் நடுங்கியது…



“நீ என்ன சொல்ல வரேன்னு புரியுது… அன்னைக்கு நான் வர கொஞ்சம் தாமதம் ஆகி இருந்தாலும் அவன் உன்னோட கன்னித்தன்மையை அழிச்சு இருப்பான்… எனக்கும் அது தெரியும்… ஒருவேளை அப்படியே நடந்து இருந்தாலும் அதையும் நான் உன்ன என்கிட்ட வரவழைப்பதற்க்காக பயன்படுத்தியிருப்பேன்… ‘உன் உடல் தான் களங்க பட்டிருக்கு… மனது கிடையாது… எனக்கு வேண்டியது உன்னோட மனது தான்…’ அப்படி இப்படின்னு பேசி நடந்த விஷயத்தை எனக்கு சாதகமாக பயன்படுத்தி இருப்பேன்… எப்படி இருந்தாலும் உன்ன விடற ஐடியா எனக்கு கிடையாது மிருதுளா… ஏன்னா ஒருநாள் பலாத்காரத்தால் உன் வயிற்றில் குழந்தை உண்டா விடுமா என்ன?... என்னோட குறிக்கோளே உன்னோட வயித்துல ஒரு குழந்தையை கொடுத்து பின்னர் அந்தக் குழந்தையை கலைத்துவிட்டு நமக்கு இடையே எல்லாம் முடிஞ்சிடுச்சு என்று சொல்வது தான்…”



“ ஏன் தேவ்? ஏன்? நீ என் அப்பாவை பழிவாங்குவதற்காக என்னை காதலித்து ஏமாற்றியதை கூட என்னால தாங்கிக்க முடிஞ்சிது… ஆனா என்ன உன்கிட்ட வரவழைப்பதற்காக உன்னால எப்படி இப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியத்தை பண்ண முடிஞ்சுது… எனக்கு என்ன ஆனாலும் உனக்கு ஒண்ணுமே இல்லையா?”



“நான் என்ன பண்றது மிருதுளா… இது எல்லாமே நீயே இழுத்து கிட்டது… உன்ன நான் காதலிக்கிறதா சொன்னபோதே நீ என்னோட காதலை ஏத்துக்கிட்டு இருந்திருந்தா நான் ஏன் இதெல்லாம் பண்ண போறன்…. கிட்டத்தட்ட இரண்டு மாதமா தினமும் உனக்கு பூக்களை அனுப்பினேன்… உன் மேல அக்கறை இருக்க மாதிரி தினமும் மெசேஜ் பண்ணுனேன்… உனக்கு உடம்புக்கு முடியாம இருந்த போது உன் பக்கத்துல இருந்து கவனிச்சுகிட்டேன்… உனக்காக ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து பண்ணன்… ஆனா நான் என்ன பண்ணாலும் நீ என்ன பிடிச்சிருக்குன்னு தான் சொன்னியே தவிர என்ன காதலிக்கிறேன்னு சொல்லல… அந்த பிடித்தத்தை காதலா மாற்றணும்னா உனக்கு இப்படி ஏதாவது ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தால்தான் சரிப்படும்னு நினைச்சு நான் அப்படி பண்ணன்… நீயே சொல்லு… என் மேல என்ன தப்பு இருக்கு… சரி அதை விடு… அதெல்லாம் பழைய கதை …ஆனா இப்போ நான் சொன்னதை நீ மறந்துடாத… இனி என் கண் பார்வையிலேயே நீ படக்கூடாது… நான் சொன்னத மீறி நீ என் முன் வந்தா அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு கிடையாது… உன்ன என்கிட்ட வரவழைக்க நான் என்னவெல்லாம் பண்ணினேன்னு உன்கிட்ட சொல்லிட்டேன்… ஒருவேளை இப்போ நான் சொன்னதை நீ மீறினா நான் உன்ன என்ன பண்ணுவேன்னு மூளை இருந்தா நீயே யோசிச்சுக்கோ…” என்றவன் அவளை திரும்பிக்கூட பார்க்காமல் தன்னுடைய அப்பார்ட்மெண்ட் இருக்கும் கட்டிட வளாகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.



தனக்கு முதுகு காட்டியபடி நடந்து செல்பவனை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவளின் கால்கள் நிற்க முடியாமல் தள்ளாடின. தன்னை அவனிடம் வரவழைக்க என்னவெல்லாம் செய்து இருக்கிறான்… நடந்த எதையும் அறியாமல் கடந்த மூன்று மாதமாக தான் அவனுடன் ஈருடல் ஓருயிராய் வாழ்ந்ததை நினைத்து அவளுக்குத் தன் மீதே கோபமாக வந்தது…



அவளை அறிந்த அனைவரும் அவளை அறிவாளி என்று நினைத்திருக்க அவளோ படு முட்டாளாக இருந்திருக்கிறாள்… அங்கிருந்த பெஞ்சில் தலையைத் தொங்கப் போட்டவாறு தரையை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் மனதில் அவளின் கடந்தகாலம் வலம் வரத் தொடங்கியது…



மிருதுளா வீட்டிற்கு ஒரே பெண்… அவளின் பத்தாவது வயதிலேயே அவள் அம்மா இறந்துவிட்டார்… அவள் அப்பா தனசேகரன் இதயநோய் நிபுணர்… அவரது துறையில் கைராசிக்காரன் என்று பெயர் பெற்றவர்… அதனால் எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பார்… எப்போதுமே குடும்பத்தை கவனிக்க அவரிடம் நேரம் இருந்ததில்லை…



மிருதுளாவின் அம்மா உயிரோடு இருந்தவரை அவளைத் தன் கண்ணின் மணியாக பார்த்துக்.கொண்டார்… அதனால் மிருதுளாவும் தந்தையின் அருகாமைக்காக பெரிதாக ஏங்குவதில்லை… ஆனால் அவள் அம்மா இறந்த பிறகு மிகவும் தனிமையை உணர்ந்தவள் தந்தையின் அன்பிற்காக ஏங்கத் தொடங்கினாள்… மற்றவர்களின் இதயத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடிந்த அந்த மருத்துவரால் தன் மகளின் இதயத்தில் உள்ள ஏக்கத்தை தீர்க்க முடியவில்லை…



ஆம்… அதுதான் உண்மை… மிருதுளாவின் அம்மா இறந்த பிறகு கூட அவர் தன் மகளின் தனிமையை உணர்ந்து அவளுடன் நேரம் செலவிட்டது இல்லை… எப்போதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்தார்… மிருதுளா வேலையாட்களின் துணையோடு தன்னுடைய நாட்களை கடத்தினாள்… ஆனால் மிகுந்த புத்திசாலியான மிருதுளா தன் தந்தையின் கவனம் தன் மீது திரும்பாது என்பதை வெகு சீக்கிரமே புரிந்து கொண்டாள்… அதற்காக அவள் தன் தந்தையிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை என்று அர்த்தமல்ல… என்றாவது ஒருநாள் நிச்சயம் தன் அப்பாவின் அன்பு தனக்கு கிடைக்கும் என்று அவள் நம்பினாள்…



அவள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த போது தன் தந்தையை போலவே மருத்துவம் படிக்கலாமா என்று யோசித்தாள்… ஆனால் பின்னர் தன்னுடைய குணத்திற்கு மருத்துவத் துறை சரிப்படாது என்று நினைத்தாள்… ஆம்… உண்மையில் அவளின் குணத்திற்கு அந்தத் துறை அவளுக்கு ஏற்றதல்ல தான்… ஏனென்றால் மிருதுளா ஒரு தனிமை விரும்பி…



அவள் அம்மா இறந்த பிறகு அவள் அப்பாவின் பாசமும் அவளுக்கு கிடைக்காத நிலையில் அவள் மீது திணிக்கப்பட்ட தனிமையை பின்னர் அவளே விரும்பி ஏற்றுக் கொண்டாள்… அவள் தனிமையில் இருப்பதையே விரும்புவாள்… பள்ளியில் கூட தன்னிடம் வந்து பேசுபவர்களுக்கு தகுந்த பதில் அளிப்பவள் தானாக சென்று யாரிடமும் பேச மாட்டாள்… அதனாலேயே அவளுக்கென்று நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை…



அதன் பிறகு என்ன படிக்கலாம் என்று மூளையை கசக்கி பிழிந்து யோசித்தவள் சிஏ படிக்க முடிவெடுத்தாள். மருத்துவத்துறையை நிராகரித்ததற்கு காரணம் இருந்தது போல அவள் இந்தத் துறையை தேர்ந்தெடுக்கவும் காரணம் இருந்தது… சிஏ படித்து முடிக்க நிறைய உழைக்க வேண்டும்… ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பதினைந்து மணி நேரங்கள் படித்தால் மட்டுமே ஒருவரால் முதல் முறையிலேயே அனைத்து நிலை தேர்வுகளிலும் வெற்றி பெற முடியும்… அதாவது தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் ஒரு தவம் போல படிக்க வேண்டும்…



அந்தக் காரணத்திற்காகவே மிருதுளா இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தாள்… தூங்கும் நேரம் தவிர மீதம் இருக்கும் நேரம் அனைத்தும் செய்வதற்கு வேலை இருந்தால் தான் எதை நினைத்தும் ஏங்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைத்ததால் மட்டுமே அவள் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தாள்.



மிகுந்த அறிவாளியான மிருதுளா முதல் முறையிலேயே சிபிடி மற்றும் இன்டர் போன்ற தேர்வு நிலைகளில் பாஸாகியவள் பின்னர் இறுதித் தேர்வு எழுதுவதற்கு முன்பே இன்டர்ன்ஷிப்பிற்காக ஒரு மிகப்பெரிய ஆடிட்டரிடம் வேலைக்கு சேர்ந்தாள்… சிஏ இறுதித் தேர்வு எழுதுவதற்கு இந்த இன்டர்ன்ஷிப் மிக முக்கியமான ஒன்று… மூன்று வருட காலம் ஒரு ஆடிட்டரிடம் வேலை செய்தால் மட்டுமே இறுதித் தேர்வை சிஏ படிப்பவர்களால் எழுத முடியும்…



அவள் ஆடிட்டரிடம் இன்டர்ன்ஷிப் சென்று கொண்டு இருந்த போதுதான் ஒருநாள் அவள் அப்பா அவளிடம் பேச வேண்டும் என்றார்… அவர் அப்படி சொன்னதும் மிருதுளாவிற்கு மிகுந்த ஆச்சரியமாய் இருந்தது… இருக்காதா பின்னே…



அவளே அவரிடம் ஏதாவது பேச முயன்றால் கூட அவரின் செயலாளரிடம் முதலில் பேசி அவர் சொல்லும் நேரத்தில் தான் பேச முடியும்… அந்த அளவிற்கு அவளின் அப்பா தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்… எப்போதாவது அவர் அவளை பார்க்கும் நேரம் அவள் என்ன படிக்கிறாள்… எப்படி படிக்கிறாள்… என்பது போன்ற விவரங்களை கேட்டுக் கொண்டாலும் அவள் சொல்லும் பதில்கள் அவரின் மனதில் பதிந்து இருக்குமா என்ற கேள்விக்கு இன்றுவரை மிருதுளாவிற்கு பதில் தெரியாது… தாமரை இலை தண்ணீராய் தான் அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு நிலவியது…



அப்படி தான் பெற்ற பெண்ணையே யாரோ தெரிந்தவரை போல மட்டுமே கையாளும் தன் தந்தை தானாகவே அவளிடம் வந்து பேசினால் ஆச்சரியமாக இருக்காதா?
 

geethusri

Moderator
அத்தியாயம் - 7 :



“மிருதுளா நான் வெளிநாடு போய் செட்டில் ஆகிடலாம்னு நினைக்கிறன்…” சுற்றி வளைக்காமல் தனசேகரன் நேரடியாக தன் பெண்ணிடம் தான் சொல்ல வந்த விஷயத்தை சொன்னார்.



அவர் சொன்னதைக் கேட்டு ஒருநொடி திகைத்த மிருதுளா பின்னர் மீண்டும் தன் உணர்விற்கு திரும்பியவள், “ஆனா அப்பா என்னோட இன்டர்ன்ஷிப் இப்போதான் தொடங்கி இருக்கு… அது முடிஞ்சி இறுதித் தேர்வை எழுதினா தான் என்னால ஒரு ஆடிட்டர் ஆக முடியும்… எப்படியும் அதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தேவைப்படும்… அப்புறம் எப்படி நம்மால வெளிநாடு போய் செட்டில் ஆக முடியும்… நாம வேணும்னா மூன்று வருடம் கழித்து போகலாமா…” என்று கேட்டவளிடம்



“மிருதுளா நான் சொன்னத நீ சரியா கவனிக்கலன்னு நினைக்கிறன்… நான் தான் போய் செட்டில் ஆகப் போறன்… உன்ன என்னோட வர சொல்லல… அதேசமயம் நீ என்னோட வந்தாலும் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்… சாய்ஸ் இஸ் யுவர்ஸ்… ஆனா நான் போறதா முடிவு பண்ணிட்டேன்…” என்று அவர் சொன்னதும் மிருதுளா தன் அப்பாவை வெறித்து பார்த்தாள்.



என்னதான் அவர் தன் அருகில் இருந்து தன்னை கவனித்து பார்த்துக் கொள்ளாவிட்டாலும் தன் மகள் என்ற பாசம் அவருக்கு கொஞ்சமாவது இருக்கும் என்று அவள் இத்தனை நாள் நினைத்திருந்தாள். ஆனால் இன்று அந்த நினைப்பு பொய்த்துப் போனது.



வயது பெண்ணை தனியாக விட்டுவிட்டு தான் மட்டும் வெளிநாடு செல்ல நினைக்கிறார்… இவரெல்லாம் என்ன மாதிரி தகப்பன்… அப்போது நான் இவருக்கு ஒரு பொருட்டே இல்லையா? என்று பல கேள்விகள் அவள் மனதில் எழும்பியது.



“அப்பா எனக்காக ஒரு மூணு வருஷம் வெளிநாட்டில் செட்டில் ஆகறத தள்ளிப் போடக் கூடாதா…” என்று மிருதுளா கெஞ்சும் குரலில் கேட்டாள்.



ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தாலும்… தன் தந்தைக்கு தான் பொருட்டே அல்ல என்பது அவளுக்கு புரிந்தாலும்… இப்போதைக்கு இந்த உலகில் அவளுக்கு இருக்கும் ஒரே உறவான அவள் அப்பாவுடன் இருப்பதையே அவள் விரும்பினாள்.



“மிருதுளா குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாத… கொஞ்சமாவது வளர்ந்த பொண்ணு மாதிரி நடந்துக்கோ… நான் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டேன்… நீ வந்தா உன்னை கூட்டிட்டு போவேன்… வரலைன்னா நீ நம்ம வீட்லயே தங்கி இருந்து என்ன படிக்கணும்னு நினைக்கிறாயோ அதை படித்து முடி… படித்து முடித்த பிறகு உனக்கு விருப்பம் இருந்தால் அங்க வரலாம்… இல்லன்னா இங்கேயே இருந்துக்கலாம்… நான் எதுக்காகவும் உன்ன கம்பெல் பண்ண மாட்டேன்… பணத்தை பத்தி கவலை படாதே… உன் செலவுக்கு வேண்டிய பணம் மாதாமாதம் உன் அக்கவுண்டில் போடப்பட்டு விடும்…” என்றவர் அத்துடன் பேச்சு முடிந்தது என்பதை குறிக்கும் விதமாக எழுந்து நின்றார்.



மிருதுளாவிற்கு இனியும் தன் தந்தையிடம் பேசி பயனில்லை என்பது புரிந்து விட்டது. அதனால் எழுந்து நின்றவரை பார்த்து, “சரிப்பா உங்க இஷ்டம்… ஆனா என்னோட மாதாந்திர செலவுகளுக்காக நீங்க பணம் போட வேண்டிய அவசியம் இல்லை… இத்தன வருடமா நீங்க என் அக்கவுண்டில் போட்ட பணத்திலேயே சில லட்சங்கள் இன்னும் மீதம் இருக்கு… மேலும் இப்போது கொஞ்சமா இருந்தாலும் எனக்குன்னு ஒரு வருமானம் வருது… அதனால நீங்க பணம் போட வேண்டிய அவசியம் இல்லை…” என்று அவள் சொன்னதும் உன்னிடம் என்பதைப்போல அவர் தோள்களை குலுக்கினார்.



தான் அவரின் பணம் வேண்டாம் என்று சொன்னதும் அவர் பெயருக்காகவாவது உன்னுடைய செலவுகளுக்கு நான் பணம் அனுப்பிய தீருவேன் அதை எடுத்து செலவு செய்வதும் அல்லது அப்படியே வைத்திருப்பது உன்னுடைய விருப்பம் என்று சொல்வார் என்று நினைத்தாள். அவர் அப்படி சொல்லாதது மட்டுமல்ல உனக்கு என்ன வருமானம் வருகிறது என்று கூட கேட்கவில்லை…



ஆம்… உண்மையில் மிருதுளா தன் தேவைகளுக்கு இப்போது சம்பாதிக்கிறாள்… அவள் வேலை பார்ப்பது மிகப்பெரிய ஆடிட்டரிடம் என்பதால் இன்டர்ன்ஷிப்பிற்கே மாதம் இருபது ஆயிரம் ரூபாய் அவளுக்கு வருகிறது… அவள் எப்போதுமே ஆடம்பரமாக வாழ நினைக்க மாட்டாள்… அதனால் அவள் சம்பாதிக்கும் பணமே அவளுக்கு போதுமானது…



மேலும் அவள் அப்பாவிடம் அவள் சொன்னதும் உண்மையே… அவர் இத்தனை நாளாக அவளுடைய செலவுக்கு என்று மாதாமாதம் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்த தொகையில் பெரும்பகுதி அப்படியே அவள் கணக்கில் இருக்கிறது… இத்தனை நாள் அவரின் பணத்தை செலவு செய்ய அவள் சற்றும் தயங்கியதில்லை… ஆனால் இப்போது அவரிடம் பணம் வாங்க அவளுக்கு மனம் வரவில்லை… எப்போது தன்னை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையோ பிறகு அவரின் பணம் மட்டும் தனக்கு எதற்கு என்று நினைத்தாள்…



அவளின் அறையை விட்டு அவர் வெளியேற தொடங்கும் போதுதான் ஏதோ நினைவு வந்தவளைப் போல, “அப்பா நீங்க வெளிநாடு போனதும் நானும் ஏதாவது ஒரு அப்பார்ட்மெண்டிற்கு வாடகைக்கு போய்டலாம்னு இருக்கன்… இவ்வளவு பெரிய வீட்டில் நான் மட்டும் தனியா இருக்க விரும்பல… இவ்வளவு நாளும் நான் அப்படி தான் இருந்தேன் என்றாலும் நீங்க அட்லீஸ்ட் தூங்கறதுக்காகவாவது இந்த வீட்டுக்கு வருவீங்க… ஆனா இப்போ அப்படி இல்லையே… அதனால வீட்டுக்கு காவலா வாட்ச்மேனை மட்டும் வச்சிக்கிட்டு மத்த எல்லா வேலைக்காரங்களையும் நிறுத்திவிடலாம்… நான் அப்பப்போ வந்து வீட்டை சுத்தம் பண்ணி வச்சுடறன்… நீங்க என்ன சொல்றீங்க…”



“உன்னோட இஷ்டம் மிருதுளா… நீ என்ன நினைக்கிறாயோ அதை பண்ணிக்கோ… ஏன்னா இனி இந்தியா பக்கம் வர ஐடியா எனக்கு கிடையாது…”



“அப்பா இன்னொரு விஷயம் கேட்கணும்… என்கிட்ட வெளிநாடு போறதா மட்டும்தான் சொன்னீங்க… எந்த ஊருன்னு சொல்லலையே…”



“இன்னும் முடிவு பண்ணல… நிறைய நாடுகளில் இருந்து எனக்கு ஆஃபர் வந்திருக்கு… எந்த நாடுன்னு முடிவு பண்ணிட்டு உன் கிட்ட சொல்றேன்…” என்றவர் அவள் அறையில் இருந்து வெளியேறிச் சென்று விட்டார்.



அதுவரை அவரிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த மிருதுளாவிற்கு இப்போது அழுகை வந்தது… என்ன மாதிரியான மனிதர் இவர்… இப்படிக் கூட விட்டேத்தியாக ஒரு மனிதரால் இருக்க முடியுமா? பொதுவாகவே ஆண்களுக்கு தன் மகளின் மீது பாசம் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் சொல்வது எல்லாம் பொய்யா… அப்படி அது உண்மையாய் இருந்தால் இந்த மனிதருக்கு ஏன் என் மீது துளிக்கூட பாசம் இல்லை…



பாசம் இல்லாவிட்டாலும் தன்னைக் குறித்த கடமை கூட அவருக்கு கிஞ்சித்தும் இருப்பதுபோல நடந்து கொள்ள மாட்டேன் என்கிறாரே… ஒருவேளை அவருக்கு வெளிநாடு செல்வதில் தான் விருப்பம் என்றால் செல்லட்டும்… அதை யார் தடுக்கப் போகிறார்கள்… ஆனால் ஒரு மூன்று வருடம் கழித்து அவர் சென்றால் நானும் அவருடன் செல்லலாமே…



அன்று இரவு முழுவதும் அழுகையில் கரைந்த மிருதுளா பின்னர் தன்னைத் தேற்றிக் கொண்டாள்… அடுத்த ஒரு வாரத்திலேயே அவளின் அப்பா லண்டன் பறந்து விட்டார்… அப்போதுதான் மிருதுளாவிற்கு அவர் ஏற்கனவே அனைத்தையும் முடிவெடுத்து விட்டு தன்னிடம் சம்பிரதாயத்திற்காக சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தது… ஆனால் இப்போது ஏனோ அவளுக்கு அழுகை வரவில்லை… மாறாக கசப்பான புன்னகை ஒன்று அவளின் இதழோரம் தோன்றியது… இனி தனக்கென்று யாருமில்லை… தன் வாழ்க்கை தன் கையில் என்பது மட்டும் அந்த நொடி அவளுக்கு புரிந்தது…



அவள் அப்பாவிடம் சொன்னது போலவே ஒரு மாதம் சம்பளம் கொடுத்து அவர்கள் வீட்டில் வேலை பார்த்த அனைத்து வேலை ஆட்களையும் வேலையை விட்டு நிறுத்தியவள் பின்னர் வீட்டை காலி செய்து கொண்டு ஒரு அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு குடியேறினாள். அந்த அப்பார்ட்மெண்டில் பாதுகாப்பு வசதிகள் பலமாக இருந்ததால் தனியாக வசிப்பதில் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் நேரவில்லை.



அடுத்த இரண்டு வாரங்கள் இன்டர்ன்ஷிப், படிப்பு என்று வேகமாக ஓடியது.



அப்போது ஒருநாள் அவளை அழைத்த அவளின் ஆடிட்டர் மகேஷ் "நாளை நீ சக்ரவர்த்தி குரூப் ஆப் கம்பனிஸின் தலைமையகத்திற்கு செல்ல வேண்டும்" என்று சொன்னார்.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 8 :



“சரிங்க சார்…” அவர் சொன்னதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்ட மிருதுளா பின்னர் அவரிடம் “சார் நாம இதுவரைக்கும் சக்கரவர்த்தி குரூப்புக்கு ஆடிட் பண்ணது இல்லையே… நம்மளோட புது கிளைண்ட்டா சார்…” என்று கேட்டாள்.



“ஆமாம்மா மிருதுளா… சக்கரவர்த்தி குரூப்புக்கு இதுவரை ஆடிட்டராக இருந்த மிஸ்டர் சுந்தரம் தன் மகனோட வெளிநாடு போய் செட்டில் ஆக போறதா சொல்லிட்டாராம்… அதனால சக்கரவர்த்தி குரூப் என்ன அப்ரோச் பண்ணாங்க… நானும் ஒத்துக்கிட்டேன்… நாம மட்டும் அவங்களுக்கு திருப்தி தர மாதிரி வேலை பார்த்து கொடுத்தா அவங்க தங்களோட குரூப்க்கு கீழே உள்ள அனைத்து கம்பெனிகளுக்கும் நம்மையே ஆடிட் பண்ண நியமிக்கறதா சொல்லி இருக்காங்க… அதனால நாம இந்த வேலைய நல்லபடியா முடிக்கணும் மிருதுளா…”



“ஓகே சார்… என்னோட யார் வராங்க…” என்று மிருதுளா கேட்டதும்



“உன்னோட அமிர்தா வந்திருக்கணும் மிருதுளா… ஆனா அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அவளின் நிச்சயதார்த்தத்திற்காக போன வாரமே அவ என்கிட்ட ஒரு வாரம் விடுமுறை வேணும்னு கேட்டா… நானும் ஓகே சொல்லிட்டேன்… அருணும் ஷங்கரும் பெங்களூர் போயிருக்காங்க… ஷீலாவும் ரகுவும் டெல்லி போயிருக்காங்க… அவங்க திரும்பி வர எப்படியும் பதினைந்து நாட்களாவது ஆகும்… அதனால இப்போதைக்கு நீ மட்டும் போ மிருதுளா… அமிர்தா விடுமுறை முடிந்து வந்த பிறகு உன்னோட ஜாயின் பண்ணிப்பா…” என்று அவர் சொன்னதும்…



“சார்… அவங்க எவ்வளவு பெரிய குரூப்… அங்க நான் மட்டும் போனா அவங்க நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்க… என் கூட யாராவது வந்தா பதினைந்து நாளில் முடிக்க வேண்டிய வேலையை நாங்கள் ஒரு வாரத்தில் முடித்து விடுவோம்… அவங்களுக்கும் நம்ப மேல நல்ல அபிப்ராயம் ஏற்படும்… அதனால டெல்லி அல்லது பெங்களூரில் இருந்து யாரையாவது வரவழைக்க முடியுமா சார்…” என்று சற்று தயங்கியபடி கேட்டாள்.



‘ ஐயோ கடவுளே… கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம பேசுதே இந்த பொண்ணு… இந்த விஷயம் எல்லாம் எனக்குத் தெரியாதா… ஆனா அந்த மகாதேவன் மிருதுளா தான் வரணும்… அதுவும் கூட வேற யாரும் வராத மாதிரி பாத்துக்கணும்ன்னு சொல்லிட்டாரு… இந்த விஷயம் எதுவும் தெரியாம இந்த பொண்ணு துணைக்கு ஆள கேட்குதே… நான் என்ன பண்றது….’ என்று மானசீகமாக தலையில் கை வைத்தவர்



பின்னர் அவளை பார்த்து, “மிருதுளா அவங்கள வரவழைக்க முடிஞ்சிருந்தா நான் வரவழைத்து இருப்பேனே… இப்போதைக்கு அவங்க இங்க வர முடியாது… முதலில் நீ மட்டும் போய் வேலையை தொடங்கு… ஒரு வாரம் கழித்து அமிர்தா உன்னோட வந்து ஜாயின் பண்ணிப்பா… நான் அவங்க கிட்ட பேசிக்கிறன்… அவங்க நம்மோட சூழ்நிலையை புரிஞ்சுப்பாங்க…” என்றதும் மிருதுளாவும் மறுப்பேதும் சொல்லாமல், “சரிங்க சார்… அப்போ நான் நாளைக்கு காலையிலேயே போயிடறன்…” என்றவள் அவரின் அறையை விட்டு வெளியேறினாள்.



தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவள் வேலையை தொடராமல் ஏதோ யோசனையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த அமிர்தா, “என்ன டார்லிங்… சக்ரவர்த்தி குரூப்புக்கு எப்படி தனியா போறதுன்னு யோசிக்கிறியா…” என்று கேட்டாள்.



அமிர்தாவின் பேச்சில் தன்னுணர்வு திரும்பிய மிருதுளா, “ஆமா அமிர்தா… இதுவரைக்கும் நான் எந்த கம்பெனிக்கும் தனியா ஆடிட் பண்ண போனது இல்ல இல்லையா…. அதான் ஒரு மாதிரியா இருக்கு…”



“என்ன ஒரு மாதிரியா இருக்கு…. இல்ல என்ன ஒரு மாதிரியா இருக்குன்னு கேக்கறன்… இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் எல்லாம் எப்பவாவது ஒரு முறை தான் வாழ்க்கையில் வரும் தெரியுமா? உனக்கு எங்க அதைப் பற்றியெல்லாம் தெரியப் போகுது…” என்று சொன்ன அமிர்தா போலியாக பெருமூச்சை வெளியேற்றினாள்.



“ஏய்…. வாய மூடு… எப்போ பார்த்தாலும் லூசு மாதிரி எதையாவது உளறுவதே உனக்கு வேலையா போச்சு… உன்னோட வேலையையும் சேர்த்து நானே பாக்கணும்… இதுல என்ன அதிர்ஷ்டம் இருக்கு… உண்மையிலே இது என்னோட துரதிர்ஷ்டம்தான்…” என்று அமிர்தாவை பார்த்து கடுப்புடன் சொன்னாள்.



“இப்போ உனக்கு தான் நான் என்ன சொல்ல வரேன்னு புரியலை… சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸின் ஹெட் ஆஃபீஸ்க்கு ஆடிட் பண்ண போற… அப்போ சக்ரவர்த்தி குரூப்போட சிஇஓ தேவ்வை பார்த்து பழகுற சந்தர்ப்பம் உனக்கு கிடைக்கும்… அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா… அவர பார்க்கிற வாய்ப்பு நமக்கு கிடைக்கிறதே நாம பண்ண அதிர்ஷ்டம்… அவர் அவ்வளவு அழகா இருப்பாராம்… அவர தன்னோட வலையில வீழ்த்த எத்தனை பொண்ணுங்க வலை விரிக்கிறாங்கன்னு உனக்கு தெரியுமா… அப்பேர்பட்ட ஆணழகனை பார்த்து பழகுற சந்தர்ப்பம் கிடைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்… இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் என்னோட மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க ஒத்திருந்திருக்க மாட்டேன்… என்ன பண்ண நான் இப்ப கமிட் ஆயிட்டேன்… ஆயிரம் இருந்தாலும் நான் தமிழ்நாட்டு பொண்ணு இல்லையா… கல்யாணம் பண்ண போறவனுக்கு துரோகம் பண்ண மனசு வரல… இதே நான் சிங்கிளா இருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் தேவ் என்கிற அந்தப் பெரிய திமிங்கலத்தை வலைவீசி பிடிக்க முயற்சி பண்ணி இருப்பேன்… என்ன பண்ண… எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்… எனக்கில்ல… தேவ் எனக்கில்ல…” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டவளைப் பார்த்து மிருதுளா வாய்விட்டு சிரித்தாள்.



“ஏய்…. போதும் நிறுத்து உன்னோட நாடகத்தை… இந்த தேவ் மட்டும் இல்ல பில்கேட்ஸ் வந்தாக்கூட நீ அவரைத் திரும்பிப் பார்க்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்… எப்படி எப்படி உன் மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க ஒத்திருந்திருக்க மாட்டியா… வயசுக்கு வந்த நாள்ல இருந்து விடாம உன் மாமா பையனை சைட் அடிச்சு… அப்புறம் லவ்வ சொல்லி… இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நீ… அப்படிப்பட்ட நீ உன் மாமா பையனை விட்டுட்டு தேவ்வை வலைவீசி பிடிக்க முயற்சி பண்ணி இருப்பியா… அந்த தேவ் எப்படிப்பட்ட ஆணழகன்… அவனுக்கு மார்க்கெட்டில் எந்த அளவிற்கு டிமாண்ட் இருக்கு… இத பத்தி எல்லாம் என்கிட்ட சொல்ல விரும்பினால் நேரடியா சொல்லிட்டு போ… அதை விட்டுட்டு எதுக்கு இப்படி தலையை சுற்றி மூக்கைத் தொடற… அதுவும் உன் வண்டவாளம் எல்லாம் தெரிஞ்ச என்கிட்டயே…” என்று மிருதுளா சொன்னதும் அமிர்தா அவளைப் பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.



ஆம்… மிருதுளா சொல்வது உண்மைதான்… சிறு வயதிலிருந்தே தன் மாமா பையனை விரும்பிய அமிர்தா அனைவரின் சம்மதத்துடனும் இன்னும் மூன்று மாதங்களில் அவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறாள்… அப்போது அமிர்தாவுக்கு அவள் போனில் அழைப்பு வரவே அவள் அதை எடுத்து பேச தொடங்கினாள்… அதன் பிறகு அவர்கள் இருவருக்குமே பேச நேரம் கிடைக்கவில்லை…



மறுநாள் சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸின் தலைமையகத்துக்கு சென்ற மிருதுளா அங்கு வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தான் மகேஷ் அசோசியேட்ஸில் இருந்து வந்து இருப்பதாக சொன்னதும் அவர் மிருதுளாவை மகாதேவனை சென்று சந்திக்கச் சொன்னார்.



பொதுவாக தேவ் இதுபோல் ஆடிட் பார்க்க வருபவரை எல்லாம் சந்திப்பது இல்லை… ஆனால் மிருதுளாளை இங்கு வரவழைப்பதற்காகவே அவளின் ஆடிட்டரை தங்கள் கம்பெனியின் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்காக அப்ரோச் செய்து அவரிடம் பேசி மிருதுளாவை இங்கு வரவழைத்தவன் அவளை பார்த்து பேசாமல் இருப்பானா என்ன?



மிருதுளா மகாதேவனை சென்று சந்தித்ததும் அவர் அவளை தேவ்வின் அறைக்கு அழைத்து சென்றார். மிருதுளாவிற்கு அவரின் இந்த செயல் வினோதமாக பட்டது… பொதுவாக சிறிய நிறுவனங்களுக்கு அவள் ஆடிட் செய்ய நேரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியை அவளால் சந்திக்க முடியும்… ஆனால் இது போன்ற பெரிய நிறுவனங்களில் அதற்கு சாத்தியமில்லை…. அவர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கோ அல்லது அந்த கட்டிடத்திற்குள் அவர்கள் வரும்போதோ… இது போன்ற தருணங்களில் தான் நிறுவனத்தின் முதலாளியை பார்க்க முடியும்… அதனால்தான் மகாதேவனின் செயல் அவளுக்கு வினோதமாக பட்டது… ஆனால் மிருதுளா அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை… ஒருவேளை அவள் அப்போதே அதைப் பற்றி இன்னும் தீவிரமாக யோசித்திருந்தால் அவளுக்கு இந்த நிலை வந்திருக்காது என்னவோ?



மிருதுளா அந்த கட்டிடத்திற்குள் நுழைந்ததில் இருந்து அவளையே சிசிடிவி கேமிரா வழியாக பார்த்துக் கொண்டிருந்த தேவ்வின் கண்கள் தனது இரையை பார்த்துவிட்ட சந்தோஷத்தில் மின்னியது… மகாதேவனை சென்று சந்தித்த மிருதுளாவை தான் சொன்னபடி அவர் தனது அறைக்கு அழைத்து வருவதை கேமரா வழியாக பார்த்தவன் அவர்கள் தன் அறையை நெருங்கிவிட்டதை உணர்ந்ததும் தன்னுடைய கணினியில் மும்முரமாக வேலை பார்ப்பவன் போல நடிக்க தொடங்கினான்.



மகாதேவன் அவன் அறைக் கதவை தட்டியதும்,” கம் இன்” என்று சொன்னவன் அப்போதும் வேலை பார்ப்பதைப் போலவே நடித்துக் கொண்டிருந்தான்.



‘என்னமா நடிக்கிறார்…’ என்று நினைத்த மகாதேவனால் அதை வெளியே சொல்லி விட முடியுமா என்ன?



“சார்… இவங்க மிஸ் மிருதுளா… மகேஷ் அசோசியேட்ஸில் இருந்து வந்து இருக்காங்க… நம்முடைய புதிய ஆடிட்டரிடம் இருந்து வருபவர்களை உங்க கிட்ட கூட்டிட்டு வர சொன்னீங்களே…” என்று மகாதேவன் சொன்னதும் கணினியின் புறம் இருந்த தன் பார்வையை மிருதுளாவின் புறம் திருப்பியவன் தன் கண்களில் ஒரு நொடி தென்பட்ட குரூரத்தை உடனடியாக மறைத்தவன் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி “டேக் யுவர் சீட் மிருதுளா…” என்றான்.



பின்னர் மகாதேவனை பார்த்து, “மகாதேவன் மேம்பாலம் கட்ட கவர்மெண்ட் கொட்டேஷன் கேட்டு இருந்தாங்களே… இன்னைக்குதான் கொட்டேஷன் சப்மிட் பண்ண வேண்டிய கடைசி நாள்… கொட்டேஷன் தயாராகி விட்டதா பாருங்க…” என்று அவன் சொன்னதும்



அவன் வார்த்தைகளின் இடையே இருந்த அர்த்தத்தை படித்த மகாதேவன், “ கொட்டேஷன் தயாராகிவிட்டதா என்று பார்த்துட்டு வந்துடறேன் சார்…” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.



அவர் அறையை விட்டு வெளியேறியதும், “மிருதுளா நீங்க இன்னைக்கு இங்க வருவதாக மகேஷ் சார் சொல்லியிருந்தார்… உங்க கூட வரவேண்டிய அமிர்தா என்பவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்று இருப்பதால் இந்த ஒரு வாரம் முழுக்க நீங்க மட்டும்தான் ஆடிட் பண்ண வருவீங்கன்னு சொன்னார்… பொதுவா இந்த மாதிரி ஆடிட் பண்ண வரவங்களை நான் சந்தித்து பேசுறது இல்ல… ஆனா நீங்க முதல்முறையா இங்க வந்து இருக்கீங்க… அதுவும் தனியா… அதனால ஏதாவது சங்கடமா பீல் பண்ணுவீங்களோன்னு நினைச்சி தான் உங்களை கூப்பிட்டு பேசுறன்… மிருதுளா நான் உங்களுக்கு ஒரு உறுதி தரன்… நீங்க இங்க வேலை பார்க்கும் வரை நீங்க சங்கடப் படுற மாதிரி எதுவும் நடக்காது… ஒருவேளை உங்களுக்கு ஏதாவது பிரச்சினை நேர்ந்தால் நீங்க தாராளமா என்னை நேரடியா அப்ரோச் பண்ணலாம்…” என்று அவன் சொல்லி முடித்ததும்



“சரிங்க சார்… நன்றி…” என்ற மிருதுளா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 9 :



‘இவளுக்கு என்ன தான் பெரிய உலக அழகின்னு நினைப்பா? என்ன பாக்கற பெண்கள் எல்லாம் நான் அவங்க கிட்ட வந்து ஒரு வார்த்தை பேசமாட்டனான்னு ஏங்கிகிட்டு இருக்காங்க…. ஆனா நான் இவளை என்னோட அறைக்கு கூப்பிட்டு வச்சி இவ்வளவு நேரம் பேசினதுக்கு பதிலா இவ ஒத்த வார்த்தையில நன்றி சொல்றா… நாம நினைச்ச மாதிரி இவளை அவ்வளவு சீக்கிரம் கவுக்க முடியாதோ… ஆனா ஆள் பார்க்கவும் அப்படி ஒன்னும் அழுத்தக்காரி மாதிரி தெரியலையே… ஏன் இவர் மற்ற பெண்கள் போல இல்லாமல் இப்படி இருக்கா?’ என்றெல்லாம் யோசித்து தேவ் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டான்…



தேவ் நினைத்தது எல்லாம் சரிதான்… ஆனால் அவன் அறியாத விஷயம் மிருதுளா ஒரு தனிமை விரும்பி என்பது… அவள் பொதுவாகவே யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டாள்… அமிர்தா மட்டுமே அதற்கு விதிவிலக்கு… அவளிடமும் நிறைய எல்லாம் பேச மாட்டாள்… மற்றவர்களைக் காட்டிலும் சற்று கூடுதலாக பேசுவாள் அவ்வளவே… அவளின் இந்த குணம் பற்றி தெரியாத தேவ் கிடைத்த சந்தர்ப்பத்தை பற்றிக் கொண்டு அவள் ஏன் தன்னிடம் பேச்சை வளர்க்க நினைக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தான்.



“ சார்.. அப்போ நான் போய் என்னோட வேலையை பார்க்கட்டுமா…” என்ற மிருதுளாவின் குரலில் தன்னிலைக்கு திரும்பியவன் அதற்குமேல் தானே வலிய அவளிடம் பேச்சை வளர்த்தினால் அவளுக்கு தன் மீது சந்தேகம் எழும் என்று நினைத்தவன், “சரி மகாதேவனை போய் பாருங்க… அவர் உங்கள அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டிற்கு கூட்டிட்டுப் போய் அவங்க கிட்ட உங்களை அறிமுகப் படுத்துவார்…” என்றான்.



அவனிடம் தலையசைத்து விடைபெற்ற மிருதுளா இருக்கையிலிருந்து எழுந்தவள் அந்த அறையை விட்டு வெளியேறுவதற்காக நடக்க தொடங்கினாள்.



அவள் இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள் அதற்குள் "மிருதுளா" என்று அழைத்த தேவ் அவள் திரும்பி பார்த்ததும், “என்னடா பார்த்த சில நிமிடங்களில் இவன் இப்படி சொல்றான்னு என்ன நீங்க தப்பா எடுத்துக்காதீங்க… ஆனால் சொல்லலைன்னா என்னோட மண்டை வெடிச்சிடும்…” என்று புன்னகையுடன் சொன்னவன் மேலும் தொடர்ந்து, “நீங்க பாக்க ரொம்ப அழகா இருக்கீங்க… அதுமட்டுமல்ல இதுவரைக்கும் நான் பார்த்த பெண்கள் எல்லோரும் சந்தர்ப்பம் கிடைத்ததும் என் மேல் விழுந்து பழக தான் முயற்சி பண்ணி இருக்காங்க… ஆனா நீங்க அவங்கள மாதிரி இல்லாம வித்தியாசமா இருக்கீங்க… நானே உங்ககிட்ட பேசின போது கூட கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவங்கள போல நடந்துக்காம ரொம்ப இயல்பா இருக்கீங்க… உங்களோட இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” என்று சொன்னான்.



அவன் சொன்னது அனைத்தும் உண்மை என்று தான் அமிர்தாவின் மூலம் மிருதுளாவிற்கு தெரியுமே … அதனால் அவள் அவன் சொன்ன விஷயத்தை இயல்பாக எடுத்துக் கொண்டு, “என்ன பத்தி நல்ல விதமா நினைச்சதுக்கு நன்றி சார்…” என்றவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்…



அவள் அந்த அறையை விட்டு வெளியேறிய அடுத்த நொடி தேவ்வின் முகம் கோபத்தில் சிவந்தது…



‘என்ன சொன்னாலும் மசிய மாட்டேன் என்கிறாளே… இதே இந்த வார்த்தைகளை நான் வேறொரு பெண்ணிடம் சொல்லியிருந்தால் அவள் குறைந்தபட்சம் என்னைப் பார்த்து வெட்கப்படவாவது செய்திருப்பாள்… ஆனால் இவளோ நான் என்ன சொன்னாலும் அதை இயல்பாக எடுத்துக் கொள்கிறாள்… ஒருவேளை என்மீது நிறைய பெண்கள் விழுந்து பழகுவதை போல அவளிடமும் இதற்கு முன்பு நிறைய ஆண்கள் காதலை சொல்லி இருப்பார்களோ…அவளை புகழ்ந்து பேசியிருப்பார்களோ… அதனால்தான் நான் அவளை புகழ்ந்ததும் அவளால் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு நடக்க முடிகிறதா? சரி… எங்கே போய் விடப் போகிறாள்… எப்படியும் இன்னும் பதினைந்து நாட்களுக்கு இந்த அலுவலகத்தில் தானே இருந்தாகவேண்டும்… முதலில் அவள் எப்படிப்பட்டவள் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்த வேண்டியதுதான்…’ என்று முடிவெடுத்தவன் அதன் பின்னர் தன் வேலைகளை பார்க்க தொடங்கினான். ஆனால் என்ன வேலைகள் செய்த போதும் அவன் மிருதுளாவின் மீது ஒரு கண் வைக்க தவறவில்லை…



நாட்கள் எப்படி கடந்து சென்றது என்று தெரியாமல் கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது… ஆனால் தேவ்வால் கடந்த ஐந்து நாட்களில் ஒரு தடவை கூட மிருதுளாவை சந்திக்க முடியவில்லை… அவன் நினைத்திருந்தால் அவளை தன்னுடைய அறைக்கு வரவழைத்து பேசி இருக்கலாம் தான்…



ஆனால் அவன் அப்படி செய்ய தயங்கினான்… ஏனென்றால் அவன் இன்றுவரை தன்னுடைய அலுவலகத்தில் இப்படி யாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழைத்து பேசியது இல்லை… அவனின் பேச்சுக்கள் அனைத்தும் அந்தந்த டிபார்ட்மெண்ட் தலைமை அதிகாரிகளிடம் மட்டும் தான் இருக்கும்… இப்போது தான் மிருதுளாவை தன் அறைக்கு அழைத்துப் பேசினால் தங்களை பற்றிய வதந்திகள் அலுவலகத்தில் பரவ வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்தவன் அப்படிப்பட்ட வதந்திகள் பரவுவதை விரும்பாமல் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க தொடங்கினான்…



அதற்காக இறுதிவரை அவன் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க நினைத்திருக்கவில்லை… இன்னும் ஒன்றிரண்டு தினங்கள் பார்த்து விட்டு தானே யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அவளை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தான்… ஆனால் அந்த வார இறுதியிலேயே அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அவனுக்கு வாய்த்தது…



அன்று சனிக்கிழமை… வார இறுதி என்பதால் மிருதுளா சற்று நேரம் கூடுதலாக இருந்து வேலை பார்த்துவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தாள்… அவளுக்கு உதவியாக மனோகர் என்பவர் மட்டும் துணைக்கு இருந்தார்… கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணி வரை அவர்கள் இருவரும் வேலை பார்த்தனர்… அதுவரை அனைத்தும் சரியாக போய் கொண்டிருந்தது...



அப்போது திடீரென்று மனோகருக்கு அதிகப்படியாக வியர்க்கத் தொடங்கியது… மூச்சு விட சிரமமாக இருந்தது… அவரின் இடது மார்பின் பக்கம் தோன்றிய வலி பின்னர் தோள்பட்டை, கை என்று பரவத் தொடங்கியது…



வேலையில் கவனமாக இருந்த மிருதுளா முதலில் இதை கவனிக்கவில்லை… ஏதோ உள்ளுணர்வு உந்த மனோகரின் புறம் திரும்பியவள் அப்போதுதான் அவரின் நிலையை உணர்ந்து கொண்டாள்… தன்னுடைய வலது கையால் இடது பக்க நெஞ்சை பிடித்துக் கொண்டு மூச்சுவிட சிரமப்பட்டவரை பார்த்ததும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அவள் புரிந்து கொண்டாள்…



அடுத்த நொடி எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து அவரை நோக்கி ஓடியவள் முதலில் அவரின் சட்டை பட்டனை கழட்டி ஆடைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி நன்கு சுவாசிக்கும் வகையில் படுக்க வைத்தாள். பின்னர் அவரை நன்றாக மூச்சை இழுத்து விட்டு முடிந்தவரை நன்கு இரும்பச் சொன்னாள்… இப்படி செய்வதன் மூலம் நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்லும்… அதோடு இதயம் நிற்காமல் துடிக்கும்…. மருத்துவரின் மகள் அல்லவா? அதனால் அவளுக்கு சில முக்கியமான நோய்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்று தெரியும்…



பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தவள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு போன் செய்யலாம் என்று நினைத்து அவள் எழும்போதே அவளுக்கு அருகில் யாரோ ஒருவர் வந்து நின்றார்… திடீரென்று தன் அருகில் யாரோ ஒருவர் வந்து நின்றதும் முதலில் திடுக்கிட்டவள் பின்னர் உதவிக்கு ஒருவர் வந்து இருப்பதை நினைத்து நிம்மதி அடைந்தாள்…



வந்திருப்பது யார் என்பதை அறிய அவள் தன் முகத்தை உயர்த்தி பார்த்ததும் அது தேவ் என்பதை கண்டு கொண்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது… அவன் எப்படி இங்கு? அதுவும் சரியான சமயத்தில்? என்ற கேள்வி அவளுள் உதித்தது…



அவள் மனதில் தோன்றிய கேள்வியை படித்தவன் போல, “சிசிடிவி கேமராவில் பார்த்துட்டு வந்தேன்…” என்று ஒற்றை வரியில் பதில் அளித்தவன் அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசாமல் மனோகரை தூக்க குனிந்தவன் அவளிடம், “வேகமா கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணிட்டு… பைல்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு… கீழ வா… நான் அதுக்குள்ள இவர கீழே தூக்கிட்டு போறன்…” என்றவன் மனோகரைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினான்…



மறுநொடி எதையும் யோசிக்காமல் அவன் சொன்னது போல வேகமாக கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு பைல்களை எல்லாம் அடுக்கி வைத்தவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக படி இறங்கத் துவங்கினாள்… அவள் நுழைவாயிலின் அருகில் வந்ததும் அவளை பார்த்த தேவ் அவளுக்காக காரின் முன்பக்க கதவை திறந்து விட்டான்… மனோகர் ஏற்கனவே பின்னிருக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்…



அவள் ஏறிய அடுத்த நொடி அவன் கைகளில் கார் சீறிப் பாய்ந்தது… அடுத்த பத்து நிமிடங்களில் அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் மனோகரை அட்மிட் செய்தவன் பின்னர் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பு மருத்துவமனை கட்ட சொன்ன தொகையையும் கட்டி விட்டு வந்த போது மிருதுளா ஐசியூவின் முன்பு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள்…



அப்போது இருந்த சூழ்நிலையில் தேவ்வின் கார் டிரைவர் என்ன ஆனார்? அவன் ஏன் டிரைவரை விடுத்து அவனே காரை ஓட்டி வந்தான்? முக்கியமாக மனோகருக்கு மாரடைப்பு ஏற்பட்ட அந்த நொடி அவன் எப்படி சரியாக சிசிடிவியை பார்த்தான்? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் அவள் மனதில் தோன்றவில்லை…



அப்போது அவள் மனதில் இருந்ததெல்லாம் மனோகருக்கு பெரிதாக ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே… அவருக்காக வேண்டிக் கொண்டவள் தனக்காகவும் வேண்டியிருக்கலாமோ?
 
Status
Not open for further replies.
Top