சந்தம் - 2
கல்லூரிகால நினைவுகள்...
வானத்தில் இரவெல்லாம் தன் பணியை செவ்வனவே செய்து முடித்த சந்திரன் தன் இடத்தை செங்கதிர் செல்வனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, ஓய்வெடுக்க வேண்டி மேக மூட்டத்திற்குள் தன்னை மறைத்துக் கொண்டான்.
குயில்களின் கூவலை கேட்டு செங்கதிரோன் இப்புவியை தன் ஒளிக் கரங்களால் அரவணைத்துக் கொள்ள, அந்த ரம்மியமான காலைப் பொழுதினில் மகாவின் தாயார் சாரதா பூஜை அறையில் இருந்து பூஜையை முடித்து வெளியே வந்தார்.
அவர் கையில் இருந்த தீபாராதனையை தழுவி கண்களில் ஒற்றிக் கொண்ட மகாலக்ஷ்மிக்கு தன் கல்லூரி வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்கிற வேண்டுதலை தவிற மனதில் வேறெதுவும் இல்லை!
அவள் அருகில் கண் மூடி நின்றிருந்த அவளின் தந்தை தயாளனுக்கும் அதே வேண்டுதல் தான்! கண்களை திறந்து மகளை பார்த்து புன்னகைத்தவர், தானும் ஜோதியை கண்களில் ஒற்றிக் கொண்டார்.
"எல்லாம் எடுத்து வாச்சாச்சு தான மஹா. ஏதும் மறந்து போகலையே?" என்று வினவ, "எல்லாம் எடுத்து வைச்சிட்டேன் ப்பா. எல்லாம் சரியா இருக்கு" என்றாள் மகள்.
"அப்பா , நான் தான் அக்காக்கு எல்லா திங்ஸும் பேக் பண்ண ஹெல்ப் பண்ணேன். அதான் அவ எல்லாத்தையும் சீக்கிரம் பேக் பண்ணா" என்று தந்தையிடம் தான் உதவிக் கரம் நீட்டிய விஷயத்தை பெருமையாக கூறினாள் அந்த வீட்டின் கடைக்குட்டி மகாவின் செல்ல தங்கை மதுமிதா! ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் இளம் குருத்து!
அவள் தலையை செல்லமாக ஆட்டிய மகா, "எதாவது பெருமை அடிக்கலேன்னா உனக்கு தூக்கம் வராது! நீ தான் இடுப்பு ஒடியிற அளவுக்கு நேத்து நைட் கண் முழிச்சு எனக்கு எல்லா வேலையும் பாத்து கொடுத்த மாதிரி பில்டப் விடுற!"
"நான் அப்படித் தான் பில்டப் விடுவேன்!நீ என்னடி பண்ணுவ..?" என்று சண்டைக்கு தயாரானாள் இளையவள்.
"டி...சொல்லாதன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்" என்று மல்லுக்கு நின்றாள் மூத்தவள்.
"அப்படி தான்டி உன்னை 'டி டி'ன்னு கூப்பிடுவேன்டி. என்னடி பண்ணுவடி மகாஆஆடி.........!!" வார்த்தைக்கு வார்த்தை 'டி' போட்டு அழைத்து வம்பிழுக்க முடிவு செய்து விட்டாள் மதுமிதா!
"அம்மா...பாருங்கமா இவளை!!! என்னை டி போட்டு கூப்பிடுறா...! இவளை விட நான் மூணு வருஷம் மூத்தவ! இப்போ காலேஜ் போக போறேன். இப்போ கூட என்னை டி போட்டு தான் கூப்பிடனுமா?" என தாயிடம் புகார் பத்திரம் வாசித்தாள் மகாலக்ஷ்மி.
"மது.. இந்த வாய கட்டினா என்ன? அவ தான் இன்னைல இருந்து காலேஜ் போக போறால்ல! இப்போவாச்சும் வாய அடக்குறயா....?" தாய் தன்னை திட்டியதும் மூஞ்சியை சுருக்கிய மது, "இன்னைக்கு மட்டும் தான் உன் ராஜ்யம். நீ ஹாஸ்டல் போனதுக்கு அப்புறம் வீட்டுல என் ராஜ்யம் தான். அப்போ என்ன பண்ணுவ? என்ன பண்ணுவ" என்று ஆட்காட்டி விரலை மடக்கி கொக்கானி காட்ட,
"எனக்கு ஒரு அழகான குட்டி பாப்பாவ உங்கள பெத்து தர சொன்னேன். எங்க அம்மா எனக்கு ஒரு அழகான குட்டி சைத்தான எனக்கு தங்கச்சியா பெத்து கொடுத்திட்டாங்க..." என்று மகா முணுமுணுக்க, அது துல்லியமாக மதுவின் செவியில் விழுந்தது.
"அப்பாஆஆஆ.... நான் இவளுக்கு சைத்தானா....." மதுமிதா பல்லைக் கடிக்க, "ஹையோ........ ராமா.... விடிஞ்சதும் விடியாததுமா அக்காளும், தங்கச்சியும் ஏன் இந்த அலுச்சாட்டியம் பண்றீங்க. ஒழுங்கா கிளம்புங்க நேரமாகுது! இப்ப கிளம்பினா தான் சாயங்காலத்துக்குள்ள மகா காலேஜுக்கு போக முடியும்" என்று அவர்களை விரட்டினார் சாரதா!
அதன் பிறகு அனைவரும் மடமடவென்று கிளம்பி லக்கேஜ்களை காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர்!
நாளை தான் மகாலக்ஷ்மி கல்லூரியில் முதல் முறையாக தனது கால்தடத்தை பதிக்கப் போகிறாள். பள்ளிச் சீருடையை பறக்க விட்டு, வண்ண வண்ண சுடிதார் அணிந்து கொண்டு கல்லூரியில் சிறகடித்து பறக்கப் போகும் பதின் வயது பருவப் பெண்!
இன்று அவளை கல்லூரி விடுதியில் விட்டு விட்டு வர தான் அனைவரும் கிளம்பி இருந்தனர். காரினுள் மகாவும் மதுவும் போட்ட சண்டைகளை சமாளிப்பதற்குள் சாரதா தான் ஒரு வழியாகிப் போனார்!
கல்லூரியை வந்தடைந்ததும் தான் அவர்களின் வாய்க்கால் சண்டை முடிந்தது. கார் கல்லூரியை தொட்டதும், மகா ஆர்வமாக எட்டிப் பார்த்தாள். தான் படிக்கப் போகும் கல்லூரி! நினைக்கவே இனித்தது அவளுக்கு!
கல்லூரி நுழைவாயிலில் 'ரெயின்போ' வடிவிலான பெரிய ஆர்ச் ஒன்று கல்லூரியின் பெயரை தாங்கி இருக்க, கண் எட்டும் தூரம் வரை நீண்டு சென்ற பாதையின் இரு மருங்கிலும் அழகான மரங்கள் வரிசையாய் அணிவகுத்து நின்றது.
'உஸ்' என்று காற்றின் மூலம் உற்சாகமாய் ஒலி எழுப்பி தங்களின் கிளைகளை அசைத்து அனைத்து புது மாணவ மணிகளையும் மகிழ்ச்சியுடன் தலை அசைத்து வரவேற்றது அப்பசுமை நிறைந்த மரங்கள்!
"ரொம்ப அழகா இருக்குங்க", சாரதா கண்ணிற்கு குளிர்ச்சியை அளித்த அந்த மரங்களை சிலாகித்தபடி தன் கணவரிடம் சொல்ல, "ஆமா, சாரதா. நல்ல என்விரான்மெண்ட் உள்ள காலேஜ்!" என்று தானும் அதை ஆமோதித்தார் தயாளன்.
"அப்பா.. இந்த காலேஜ் சூப்பரா இருக்கு. நானும் இதே காலேஜில் தான் படிப்பேன்.ஓகே வா?" என்று மது உற்சாகமாக கூற, "ஓ..! அப்பா உன்னை படிக்க வைக்கிறேன் மது!" என்று மகளின் ஆசைக்கு சம்மதித்தார் தயாளன்.
தன் குடும்பம் பேசுவதை எல்லாம் கவனிக்காது, கண்களை அந்த இயற்கை அழகிற்கு கொடுத்து விட்டு அதில் லயித்து இருந்தாள் மஹா!
"என்ன மஹா? காலேஜ் பிடிச்சிருக்கா!" என்று தயாளன் கேட்டதும் கண்களை அந்த இயற்கை அழகில் உறவாட விட்டபடி "ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குப்பா" என்று மகிழ்ச்சியாக கூறினாள்.
"உனக்கு எப்போவுமே தி பெஸ்ட் தான் அப்பா கொடுப்பேன்" என்றார் கர்வம் நிறைந்த குரலில்!
"அப்போ எனக்கு..." என்று இளையவள் வேக வேகமாக கேட்க, "உனக்கும் தான் மது! ரெண்டு பேருக்கும் அப்பா பெஸ்ட் தான் கொடுப்பேன். எப்பவும்!" என்றார் கர்வம் விலகாத குரலில்.
பெண்கள் தங்கி இருக்கும் விடுதியின் முன்பு ஓட்டுனரை வண்டியை நிறுத்த சொல்லி விட்டு, இவர்கள் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு அங்கே பணி புரியும் வார்டனிடம் விசாரித்து, நோட்டீஸ் போர்டினில் மகாவின் அறை எண்ணை அறிந்து கொண்டு அவளது அறைக்கு சென்றனர்.
அறைக்குள் ஏற்கனவே இரண்டு மாணவிகள் வந்து தங்களின் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, அவர்களுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் மகாலக்ஷ்மி.
"ஹாய். நான் மகாலக்ஷ்மி. இது என்னோட அம்மா,அப்பா. அப்புறம் இது என்னோட சிஸ்டர்!" என்று புன்னகையுடன் தன் குடும்பத்தை அறிமுகம் செய்ய, அவர்களும் தங்களையும் தங்களின் குடும்பத்தையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
பரஸ்பர அறிமுகத்திற்கு பின்னர், அனைவரும் சகஜமாக பேச, அங்கே புதிய நட்பூக்கள் பூக்கத் தொடங்கின. சற்று நேரம் பொருட்கள் அனைத்தையும் ரூமில் அடுக்க மகாவிற்கு உதவி விட்டு அவளோடு இருக்க, அதன் பின்னர் பெற்றோர்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்து விடவே கிளம்பினார்கள் மகாவின் குடும்பத்தினர். மகளுக்கு அறிவுரை சொல்லிச் செல்லவும் தவறவில்லை.
"பத்திரமா இருக்கணும் மகாமா. ஒழுங்கா படிக்கணும். நல்ல பெர்செண்டேஜ் எடுக்கணும். நல்ல சிவில் என்ஜியனாரா வரணும்!" என்று தயாளன் மகளிடம் சொல்ல,
"கண்டிப்பா அப்பா" என்று அவருக்கு நம்பிக்கையூட்டும் அளவில் பதில் கூறி தன் தங்கையிடம் மீண்டும் ஒரு செல்லச் சண்டை போட்டு , தாயை அணைத்து அவர்களுக்கு விடை கொடுத்தாள் மகாலக்ஷ்மி.
பொதுவாக பெண்கள் கட்டுமானப் பணிகள் சார்ந்த படிப்பை எடுப்பது அரிது தான். சிலர் ஆர்வமாக எடுத்து படிப்பதும் உண்டு! மகாவும் அந்த வகை தான். மகாவிற்கு கட்டிடப் பொறியியல் மேல் அதிக ஆர்வம். ஆகையால் தான் விரும்பியே B.E. civil engineering படிப்பை தேர்ந்தெடுத்தாள்.
இந்த விருப்பத்திற்கு காரணம் அவளின் தந்தையும் அவர் செய்யும் தொழிலும் தான்.
தயாளன் தானாக முன்னேறிய சுயம்பு!
முதலில் கட்டுமானப் பணியில் வேலை செய்து கொண்டு இருந்தவர் பிறகு படிப்படியாக முன்னேறி இப்பொழுது சொந்தமாக ஒரு 'வெற்று செங்கற்கள் ' என்று சொல்லப் படும் 'ஹாலோ பிளாக் கற்கள்' உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்.
மஹாவிற்கு தந்தை என்றால் அதிக இஷ்டம். எப்பொழுதும் தங்களின் நலன் கருதி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் தந்தையை அவளுக்கு பிடிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்!
தயாளன் எப்போதுமே தன் மகள்களுக்கு சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர். அதே போல் தான் செய்தும் வருகிறார். ஏனோ இந்த சிறந்த விஷயம் அனைத்திலும் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!!!! என்ன செய்வது? விதி வலியது தானே???
மறுநாள் காலை கல்லூரியின் முதல் தினம்! இனிய பரவசத்துடனும் ரேகிங் பற்றிய சிறு பயத்துடனும் கல்லூரியை நோக்கி கால்களை எட்டிப் போட்டனர் மாணவ மக்கள்.
காலை உணவை ஹாஸ்டல் மெஸ்ஸில் முடித்துக் கொண்டு தோழிகள் ரம்யா மற்றும் ரேவதி இருவருடனும் விடுதியில் இருந்து கிளம்பி இவர்கள் துறை இருக்கும் சாலையை நோக்கி சென்றாள் மகாலக்ஷ்மி.
மூவரும் எதோ பேசிக் கொண்டே வர, "ஹே...மச்சான். புது டிக்கட்ஸ் போலடா. மூணும் நந்தவன தேரு மாதிரி நடந்து வரத பாரு..." என்று அந்த கல்லூரியின் சீனியர் மாணவர்களில் ஒருவன் இவர்களை பார்த்து கேலி பேச, மற்றவர்களும் இவர்களின் புறம் திரும்பினர்.
சிலரை கூப்பிட்டு நிறுத்தி வம்படியாய் ரேகிங் செய்து கொண்டிருந்த இவர்களை கண்ட பெண்கள் மூவரும் பெரும் தயக்கத்துடன் வர மகாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே தன் படபடப்பை காட்டாது நடையை தொடங்கினாள்.
ரம்யா மற்றும் ரேவதியும் அதே நிலையில் இருக்க, அந்த மாணவர்களை கடந்து செல்லும் சமயம், "ஹே.... த்ரீ பியூட்டீஸ்! எங்க போறீங்க? சீனியர்ஸ் இங்க வரிசைக்கு உட்காந்து இருக்கோம். எங்களை தரிசிக்காமல் போனால் முதல் செம்மில் ஃபெயில் ஆவீர் என்று சாபம் விட்டு விடுவோம்! கம் ஹியர்... " என்று ஒருவன் இவர்களிடம் லந்து செய்தான்.
"இ...இல்ல. நாங்க கிளாஸ்க்கு போகனும் டைம் ஆச்சு" என்று படபடப்பை மறைத்து மகா பதிலுரைக்க, "அது எங்களுக்கு தெரியாதா? ஓவரா சீன போடாதீங்க... வாங்க இங்க" என்று அதட்டி அழைத்தான் ஒருவன்.
மூவரும் அசையாது ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க, "அட... வாங்கன்னா பராக்கு பாத்திட்டு நிக்குறீங்க??வாங்க 'மூ'தேவீஸ்.......... " என்றான் அதட்டலாக.
அவனின் அந்த பண்பற்ற பேச்சினால் மூவரும் முகம் சுளிக்க, முதல் நாளே இப்படியா இருக்க வேண்டும்? என்று எண்ணி மகாவிற்கு கலக்கமாக இருந்தது.
'மூ'தேவிஸ் என்ற அம்மாணவனின் பேச்சைக் கேட்டதும் அதுவரை பொறுமையை கடை பிடித்துக் கொண்டு, அவர்களின் பின்னால் நின்றிருந்தவன் சட்டென்று இவர்கள் புறம் திரும்பினான். அந்த கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவன் அன்புச்செல்வன்!
********
கல்லூரியில் சேரும் முன்பே ரேகிங் இருக்கும் என்று அறிந்தது தான்! ஆனால், அதை முதன்முதலில் நேரில் சந்தித்ததும் எப்படி அச்சூழ்நிலையை எதிர் கொள்வது என்றறியாமல் முழித்தனர் தோழிகள் மூவரும்!
ஆனால், அவன் மூதேவிஸ் என்று அழைத்ததும் சட்டென்று கோபம் முகிழ்த்தது மகாவிற்கு!
"ஹலோ... நீங்க எங்க சீனியர் ஸ்டூடண்டா இருக்கலாம். அதுக்குன்னு மரியாதை இல்லாம பேசாதீங்க!" என்றாள் சட்டென்று மூண்ட கோவத்துடன்.
"ஓஹோ.... மேடம் டீசன்சி எக்ஸ்பெக்ட் பண்றீங்க போல! " என்றவன் அருகில் அமர்ந்து இருக்கும் அவன் நண்பனிடம், "டியூட்(dude)... வந்ததில் இருந்து இந்த பார்டி தான் வாய திறந்து பேசி நம்மள மதிக்காம இருக்கு! மத்த ரெண்டு டிக்கட்டையும் அனுப்பி வச்சிருவோம்! இவள மட்டும் வச்சு செய்வோம்.." என்றவன்,
இவர்கள் புறம் திரும்பி "நீ மட்டும் நில்லு! மத்த ரெண்டு பேரும் கிளம்புங்க" என்க , ரம்யாவும் ரேவதியும் மஹாவை கலக்கமாக பார்த்தனர். "அவ்ளோ டீப் நட்பா உங்க ப்ரெண்ட் மேல.. போங்க மா. போங்க! உங்க ஆருயிர் தோழிய நாங்க பத்திரமா அனுப்பி வைப்போம்!" என்றான் அந்த மாணவன் நக்கலாக!
அவர்கள் அப்படியே நிற்க,"போங்க பியூட்டீஸ், இல்லைன்னா நீங்களும் இதோட விளைவ சந்திக்க வேண்டியது வரும்" என்று மிரட்டி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்.
மஹாவின் புறம் திரும்பி "சீனியர்ன்ற மரியாதை கூட இல்லாம.. ஒரு 'குட் மார்னிங் சீனியர்'னு வணக்கம் கூட வைக்காம... போக வேண்டியது! ஒரு விஷ் இல்ல...! ஒரு சல்யூட் இல்ல...! ஒரு ஓரப் பார்வை சிரிப்பில்ல...! அதை விட்டுட்டு நீங்க ரெஸ்பெக்ட் வேற எதிர் பார்க்குறீங்க! ஹ்ம்ம்.... முதல்ல எங்களுக்கு விஷ் பண்ணி சலாம் வை!" என்று ரேகிங் படலத்தை ஆரம்பிக்க, சுற்றி தங்களின் வகுப்பை நோக்கி ஓடிக் கொண்டிருந்த சில மாணவர்கள் மஹாவையும் இந்த மாணவர்களையும் தான் பார்த்து விட்டு தங்களுக்கு எதுக்கு வம்பு என்று இதை கண்டுகொள்ளாமல் சென்றனர்!
மகாவிற்கு பயம் மனதை கவ்விக் கொள்ள சட்டென்று கண்களில் கண்ணீர் வந்து நின்று விட்டது! அதுவரை பொறுமையாக இருந்த அன்புச்செல்வன் சட்டென்று இவர்கள் புறம் வந்து நின்றான்.
திடீரன்று அங்கு வந்து ஆஜர் ஆகிய அன்புவை எதிர் பாராத அந்த மாணவர்களும் திகைத்து எழுந்து நின்று விட்டனர்! அவர்களை தீர்க்கமாய் பார்த்த அன்புச்செல்வன் இவர்கள் கல்லூரியின் சீனியர் மாணவன் மட்டுமல்ல! டாப் ரேங்க் ஹோல்டர் மற்றும் ஆன்டி- ராகிங் ஸ்குவாடின் ஸ்டூடண்ட் ஹெட் கூட!
அவர்களின் செயலை கண்டு கோபம் கொண்டவனாய் "ஏன் நிருத்திட்டீங்க.. கன்டிநியூ பண்ணுங்க!" என்றான் அழுத்தமாக! அம்மாணவர்கள் எச்சில் கூட்டி விழுங்கியபடி, "சீனியர்...அது வந்து!..." என்று பயத்தில் இழுத்தனர்.
"ஹ்ம்ம்... கமான்.... என்ன சீனியர்னு இழுக்குறீங்க..? சலாம் வைக்க சொல்லுங்க! ஓரப் பார்வை பார்த்து சிரிக்க சொல்லுங்க! டூ இட் நவ்!"
அவனின் வார்த்தையில் சூடு பரவியது. பயந்து போய் அனைவரும் மௌனமாய் தலை கவிழ்ந்தனர்!
"ஜூனியர் கிட்ட ப்ரெண்ட்லியா பிஹேவ் பண்ண முடியாட்டியும் இப்படி மரியாதை இல்லாம பிஹேவ் பண்ணாதீங்க! இன்னொரு தடவ இப்படி நடந்தது... அப்புறம் ஆன்டி - ராகிங் ஸ்குவாடோட ஹெட்டா நான் உங்க மேல ஆக்ஷ்ன் எடுக்க வேண்டியது இருக்கும்!புரிஞ்சதா?" பார்வையிலேயே கோபத்தையும் அழுத்தத்தையும் தேக்கி அவர்களை எச்சரிக்கை செய்து அவர்களை வகுப்பிற்கு போகச் சொன்னான்.
விட்டால் போதும் என்று அவர்களும் ஓடிப் போயினர்! அன்புவை பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்! சொன்னால் சொன்ன படி ஒரு விஷயத்தை செய்து முடிப்பவன்! மிகவும் திறமையான ஒழுக்கமான மாணவன் என்று அறிந்து தான் கல்லூரி முதல்வரே அவனை ஆன்டி ராகிங் ஹெட்டாக நியமித்திருந்தார். ஆதலால் அவன் சொன்னவுடன் தங்கள் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு ஓடி விட்டனர்!
அப்போது தான் சற்றே மிரட்சியுடன் நிற்கும் மகாவை கண்டான் அன்புசெல்வன். நெஞ்சோடு அணைத்த புத்தகத்துடனும் இதோ வந்து விழுந்து விடுவேன் என்று சொல்லாமல் சொல்லிய கண்ணீர் துளிகளை ஏந்திய கண்களுடனும் நின்றிருந்தவளின் முகம் அவனின் நெஞ்சுக்குள் புகுந்து ஒட்டிக் கொண்டது!
"நியூ ஜாய்னரா?" என்ற அவனின் கேள்விக்கு அவள் தலை மேலும் கீழும் ஆடியது! அதில் அவளின் வெள்ளை முத்துக்கள் வைத்த ஹூக் ஜிமிக்கியும் ஆட, இவனின் பார்வையும் அதோடு சேர்ந்தாடியது!
"எந்த டெப்ட் நீங்க..?"
"சிவில் டிபார்ட்மெண்ட்.." என்றாள் மெல்லிய குரலில்! சிவில் என்றதும் அவளை ஆச்சர்யமாய் ஒரு பார்வை பார்த்தவன், "உங்க கிளாஸ்மேட்ஸ்.. இல்ல, ரூம்மேட்ஸ் யாரும் இல்லையா?"
"கூ.. கூட தான் வ..வந்தாங்க. ராகிங் பண்ண சீனியர்ஸ் போ..போக சொன்னதால அ..அவுங்க போய்ட்டாங்க" என்றாள்! பாவமாக இருந்தது அவளைப் பார்ப்பதற்கு! இருப்பினும் பார்த்தான்! ரசித்தான்!
அவளின் முகத்தோற்றத்தில் இருந்த பாவனையை கண்டவனுக்கு மெல்லிய ரசனை சிரிப்பொன்று வந்தாலும், அதை இதழ்கடையில் சிறை செய்து விட்டு, "உங்க டிபார்ட்மெண்ட் போக வழி தெரியுமா?" என்று கேட்டான்.
மீண்டும் அதே முக பாவத்துடன், 'இல்லை' என்பது போல் தலையை இடமும் வளமும் ஆட்டினாள்! சுற்றி பார்வையை ஓட விட்டான். யாரும் புது மாணவர்கள் இவள் துறையை சார்ந்தவர்கள் வருகிறார்களா என்று!
ஓரிரண்டு மாணவர்களிடம் கேட்டுப் பார்க்கும் பொழுது அவர்கள் வெவ்வேவேறு துறையினராக இருந்தனர்! அவளை பார்த்து சிரித்தவன், "உங்களுக்கு லிஃப்ட் கொடுக்க யாரும் இல்ல போல! சரி வாங்க நானே உங்களை விட்டுட்டு போறேன்..." என்று முன்னே நடக்க, அந்த நொடியில் வேறெதையும் சிந்தியாமல் சிறு தலை அசைப்புடன் அவன் பின்னே நடந்து சென்றாள் மஹா!
அவளை வளது புறமாக இருக்கும் கட்டிடம் வழியாக அழைத்துச் சென்று, படிகளில் ஏறினான்! அவன் பாதம் பயணித்த தடத்தில் , இவளும் தடம் வைத்து பின்னே நடந்தாள்!
இரண்டு மாடிகள் கடக்க வேண்டும்! வழியெங்கும் அவனை கண்ட அனைத்து மாணவர்களும்,
"குட் மார்னிங் சீனியர்.."
" குட் மார்னிங் சாம்பியன்.."
" குட் மார்னிங் செல்வா அண்ணா..." என்று சொல்லிக் கொண்டே இவர்களை கடந்து சென்றனர்.
அன்புச்செல்வனும் அவர்களை கண்டு ஒரு சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டு , அவர்களுக்கு தானும் காலை வணக்கம் தெரிவித்த படி முன்னே சென்றான்!
இடையில் அவன் மொபைல் ஒலிக்க, "ஒன் மினிட்" என்று அவளை கை நீட்டி நிறுத்தியவன் அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தான்!
"ஹலோ... சொல்லு கார்த்தி..."
" .... "
"இதோ வரேன்டா. நம்ம பிளாக்ல தான் இருக்கேன்! சீக்கிரம் வரேன் வெயிட் பண்ணு.."
".... "
" ஒரு சின்ன ராகிங் பிரச்சனைடா... "
" .... "
"நோ.. நோ... நான் சால்வ் பண்ணிட்டேன். நீங்க யாரும் வர வேண்டாம் "
"..."
"ஹ்ம்ம் ஓகே டா.." என்று அழைப்பை துண்டித்து, "வாங்க போலாம்" என்று மீண்டும் முன்னேறினான். மீண்டும் பின் தொடர்ந்தாள் மஹா.
இரண்டாவது தளம் வந்ததும், "ரைட் சைட்.. தர்ட் ரூம் தான் சிவில் ஃபர்ஸ்ட் யியர் கிளாஸ்" என்று கை காட்டியவன்
"போய்டுவீங்க தான.." என்று அவளை பார்த்து கேட்க, போய்விடுவேன் எனும் விதமாய் தலை அசைத்தாள்!
"ஓகே.. பி கூல்.எதை பத்தியும் யோசிக்காம போய் கிளாஸ் அட்டன் பண்ணுங்க. என்ஜாய் யுவர் ஃப்ர்ஸ்ட் டே வெல்! ஆல் த பெஸ்ட்" என்று கட்டை விரலை உயர்த்தி காட்டி விட்டு புன்னகை மாறா முகத்துடன் சென்றான் அன்புச்செல்வன்!
அவனின் கன்னக்குழி விழுந்த கன்னங்களையும், கண்களை எட்டிய புன்னகையையும் அவளின் நெஞ்சுக்குள் புகுந்து ஒட்டிக் கொண்டது!
கொஞ்ச தூரம் சென்றவன் திரும்பி இவளை பார்க்க, அங்கேயே நின்றிருந்தவளை கண்டு ஒரு நொடி புருவம் சுருக்கியவன்"ஹலோ" என்க, அவனின் அழைப்பில் சற்றே தெளிந்து "ஹான்" என்றாள் முழித்த வண்ணம்!
"போகலையா இன்னும்?" என்று கேட்டவனிடம் "இ... இதோ!" என்றபடி அவனிடம் இருந்து பார்வையை பிரித்து அவன் சொன்ன வகுப்பறையை நோக்கி கால்களை நகர்த்தினாள்! அவள் செல்வதை கண்டதும் தனது தலையை குலுக்கிக் கொண்டவன் அங்கேயிருந்து சென்றான்.
வகுப்பறை சென்றதும் ரம்யா மற்றும் ரேவதி இவளுக்கும் சேர்த்து முதல் பெஞ்சில் இடம் பிடித்து வைத்திருக்க அவர்கள் அருகில் சென்று அமர்ந்ததும் தான் மூச்சே நிம்மதியாக விட முடிந்தது அவளால்!
"என்னபா ஆச்சு?? எதுவும் ரொம்ப கலாய்ச்சிட்டாங்களா?" என்று ரம்யா கேட்க, "கொஞ்சம் தண்ணி வேணும் ரமி" என்றாள் மகாலக்ஷ்மி.
ரம்யா கொடுத்த தண்ணீரை முழு மூச்சுடன் குடித்தவள் நடந்ததை கூற எத்தனிக்க அப்பொழுது சரியாக ஆசிரியர் வரவே பிறகு கூறுவதாக சைகை செய்தாள்.
அன்று முதல் நாள் என்பதால் பெரிதாக பாடங்கள் ஒன்றும் நடத்தப்படவில்லை! இடைவெளியின் போது இவர்கள் கேன்டீன் இருக்கும் ஏரியாவை கேட்டறிந்து கொண்டு அங்கே செல்ல, அப்பொழுது நடந்ததை அவர்களிடம் சொன்னாள் மகாலக்ஷ்மி.
"நல்ல வேலை ரம்யா..இந்நேரம் அந்த சீனியர் வரலேன்னா.. இவள வச்சு செஞ்சிருப்பாங்க.." என்று ரேவதி பெரு மூச்சு விட, "ஆமாபா.. எங்களுக்கு பயம் இருந்துட்டே இருந்தது. நீ வேற ஏன் அவுங்க கிட்ட வாய கொடுத்த..." என்றாள் ரம்யா!
"அந்த சிட்ச்சுவேஷன்ல சட்டுன்னு கோவம் வந்திடுச்சு ரம்யா. என்ன பண்றதுன்னு தெரியல. அதெப்படி மரியாதை இல்லாம கூப்பிடுறாங்க. அதான் கோவம் வந்து சட்டுன்னு அப்படி சொல்லிட்டேன்."
"சரி விடு மஹா. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு..." என்று அந்த பேச்சை மறந்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கி உண்டனர். அப்பொழுது தான் மகா தான் அவனுக்கு ஒரு நன்றி கூட சொல்லாததை உணர்ந்து, "ஹையோ.. நான் அவருக்கு ஒரு தாங்க்ஸ் கூட சொல்லல" என்று வருத்தம் கொள்ள,
"அடிப்பாவி.. உனக்கு இவளோ தூரம் ஹெல்ப் பண்ணி இருக்காங்க.. ஒரு தாங்க்ஸ் கூடவா சொல்லாம வந்த" என்ற ரேவதியிடம்,
"இல்ல.. அந்த டைம்ல பயம் மட்டும் தான் இருந்தது. எதை பத்தியும் சிந்திக்கல. ஹையோ.. ரே.. நீ சொன்ன மாதிரி இவளோ தூரம் ஹெல்ப் பண்ணி இருக்காரு. ஒரு தாங்க்ஸ் கூட சொல்லல. என்னை பத்தி என்ன நினைச்சு இருப்பாரோ?" என்று தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்.
"விடுப்பா நீ சொல்றத பாத்தா அவரும் நம்ம டெப்ட் சீனியர் மாதிரி தான் தெரியுது! நாளை அவர் கிட்ட போய் தாங்க்ஸ் சொல்லிட்டு வந்திடு. அவ்ளோ தான். மேட்டர் சால்வ்டு!" என்று ரம்யா சொல்ல, "ஹ்ம்ம். கண்டிப்பா சொல்லணும் ரம்யா" என்று மனதிற்குள் இதை பிரதானமாக நினைவு கூர்ந்து வைத்துக் கொண்டாள் மஹா!
நாளை அவனை எங்கே சென்று தேடுவது? அவன் பெயர் கூட...
ஏதோ....
என்ன பெயர் அது????
வரும் வழியும் அனைவரும் "குட் மார்னிங்" என்று என்னன்வோ சொல்லிக் கொண்டே சென்றார்களே??? ஹையோ அதையும் சரியாக கவனிக்காத தன்னை தானே குட்டிக் கொண்டாள் மஹா! ஆனால், அவன் முகம் மட்டும் அவள் மனதில் அழியா ஓவியமாய் பதியனிட்டு இருந்தது!
அதுவும் அந்தக் கன்னக் குழி!
இவளை பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டி கன்னக்குழி விழ சிரித்துச் சென்றானே!!!!!! அந்த முகம் பெண்ணின் உள்ளத்தினுள் அழியா கல்வெட்டாய் பதிந்து போனது! அந்த உருவத்தையே மனக்கண்ணில் பார்த்துக் கொண்டு இருந்தவளை கலைத்தது ரம்யாவின் குரல்!
"ஹே...என்ன ஆச்சு மகா?.வா நெக்ஸ்ட் கிளாஸ்கு டைம் ஆச்சு. போலாம்" என்று சொல்ல, "ஹ்ம்ம்..போலாம் ரம்யா" என்று எழுந்தவளுக்குள் அன்புவின் முகமே முகாமிட்டிருந்தது.
முதல் நாளே அவளின் மனதில் சிறு சலனத்தை அவளையும் அறியமால் ஏற்படுத்தி விட்டு சென்றிருந்தான், பிற்காலத்தில் அவளின் உயிராகப் போகும் அன்புச்செல்வன்!
கல்லூரிகால நினைவுகள் மலரும்....