வலை - 03
காஞ்சிபுரத்திலுள்ள சங்கரரின் வீடு இரண்டடுக்கு மாடியும்,கீழ உள்ள தளத்தில் பெரிய ஹால், ஹாலை ஒட்டி கிட்சன்,மூன்று படுக்கை அறை,சாமி அறையாகவும்..மேல் தளத்தில் பெரிய ஹாலுடன் ஐந்து அறைகளையும் கொண்டது..வீட்டை சுற்றி ரோஜா,மல்லிகை பந்தல்..பெரிய மாமரம் என்பவற்றை கொண்ட அழகிய தோட்டமும் உண்டு.அந்த தோட்டத்தில் முழு எரிச்சலில் அவனும்..குறுகுறு பார்வையுடன் அவளும் நின்றிருந்தனர்.
"கூலாங் கல்லுக்கு கூலிங் கிளாஸ் போட்ட குள்ள வாத்து.. குறு குறுன்னு பார்வை வேற!"- அவளின் நான்கு கண் பார்வையை அறிந்த பார்த்திபன் முணுமுணுத்தான்.
முகத்தில் முழு எரிச்சலையும்,வில்லாய் வளைந்த புருவங்கள் நெருங்கி அவன் விருப்பமின்மையும் காட்டிக் கொடுக்க நின்றவனை,மேல் கண்ணால் நோக்கினாள் அவள்.அவன் உடல் மொழி இப்படி இருவரும் தனியாக நிற்பதை விரும்பவில்லை என்பதை வெளிக்காட்ட.. இருந்தும் தன் குறு குறு பார்வையை மாற்ற முயற்சிக்க வில்லை அவள்.
அவள் பார்வையில் பற்கள் கடிபட ஒரு முறை அவளில் இருந்து தன் பார்வையை விளக்கி.. தங்களை விட சற்று தூரத்திலிருந்தவாறு அவளைப் போலவே குறுகுறு பார்வையுடன் இருந்த அம்பிகா பாட்டியை நோக்கினான்.இவன் பார்த்தவுடன் காகாவை விரட்டுவது போல் 'சூ,சூ' என ஆக்சன் கொடுத்தவரை ஆங்கிரியாக நோக்கி,அதே பார்வையை முன் நின்றவளின் மேல் பதித்தான்.
பின் என்ன நினைத்தானோ.. தலையை அழுந்த கோதி எரிச்சலை விரட்டும் முகமாக பேண்ட் பாக்கட்டினுள் கை விட்டு,
"ஹ்க்கும்"எனும் செருமலுடன், "இந்தாப் பொண்ணே!இன்னும் எவ்ளோ நேரம் தான் ஈக்காக்கா இல்லாத இடத்துல ஈயோட்டப் போற?என்ன பேசனுமோ சீக்கிரமா சொல்றியா?உங்க பாட்டி வேற..ஆச்சாரி செஞ்சி வெச்ச அதிரசத்தை ஆ-ன்னு பார்க்கற மாதிரி நம்ம மேலயே கண்ணா இருக்குது!"என்றவன்,
"தனியா பேச விட்டுட்டு..வேவு பார்க்க வால்டர் வெற்றிவேலாட்டம் ஒரு ஆளு!"என முனக..அவளுக்கு அது கேட்டாலும் பதில் பேசாமல் இருந்தால் அவள்.
அவள் அமைதியில் எஸ்காப்பாகிருந்த எரிச்சல் அட்மோஸ்பியரில் கலந்து விட,
"உள்ள, அத்தனை பேருக்கும் முன்னால.. மாப்பிள்ளையோட தனியா பேசணும் சொல்லிட்டு வந்துட்டு..மாட்டு தாவணி மாயண்டிக்கு மஞ்சள்காமாலை வந்ததாட்டாம் முழிக்கிற?"என அவன் அதட்டலுடன் கேட்க,அலட்டலின்றி நின்றிருந்தாள் அவள்.
'ஷ்ஷ்!!! சோதிக்கறாடா எப்பா!இவ சரி பட்டு வர மாட்டா!' அவன் மனசாட்சி நினைத்துக் கொண்டிருக்க,இப்போது அவனை நேராக பார்த்தவாறு நின்றாள்.
பின் மீண்டும்,
"உன் பேரு என்ன?"கட்டைக் குரலில் காண்டோடு வினவியவனிடம்,பதில் சொல்ல விரும்பாமல் வேண்டுமென்றே பார்வையை வேறு புறம் திருப்பினாள்.
அவள் செய்கையில் மேலும் கடுப்பாகிப் போக பிடரியை தேய்த்துவிட்டு கொண்டவன்,
"கேக்கறேன்ல?சொல்லு!" என்றான் இம்முறை பொறுமை முற்றாக பறந்தோட.
அதில் கைகளை பிசைந்து,மேல் கண்ணால் அவனை மீண்டும் நோக்கி விட்டு,
தொண்டையை செறுமி என அவள் கொடுத்த ரியாக்ஷனில் அவன் பற்கள் நறநறத்தது.
இவ்வளவு நேரமும் அவனின் பீபியை ஏற்றி விட்ட சந்தோசத்தில் பீரிட்டை சிரிப்பை வாய்க்குள்ளே விழுங்கிக் கொண்டவள்,
"சேதனா நல்லினி"என்றாள் சிறு குரலில்.(chethana)
"நல்லா வச்சிருக்காங்க பாரு பேரு! சேத்தான் பிடிச்சி கெட்டனின்னு"
(saithan)என்றவன் முணுமுணுப்பு முன் நின்றிருந்தவளுக்கு கேட்டு விட,
மூக்கு விடைக்க,அவனை முறைத்து 'உஷ்,உஷ்'என மூர்க்கமான மூச்சை வெளியிட்டவள்,
"பார்த்தா என்ன பார்க்காட்டி என்னன்னு பேரு வெச்சிருக்கறவங்க எல்லாம் என் பேரை கலாய்க்கப்படாது!!"என்றாள் எகத்தாளமாய்!
"ஏ..ஏயேய்!!என் பேரு உனக்கு யாரு சொன்னது?"
"ஏங் தோப்பனார்!"
"மூனு இஞ்சில மூஞ்சி வெச்சுருக்கற மூஞ்சூறு,என் பேரு பார்த்தா இல்லை பார்த்திபன்! புரிஞ்சுதா?"என சிடுசிடுத்தான்.
"யாரைப் பார்த்து மூஞ்சூறுன்னு சொன்னேள்?முனிஷ்காந்துக்கு மூத்தண்ணன் மாதிரி இருந்துண்டு என்னை மூஞ்சூறுன்னு சொல்றச்ச தான் வேடிக்கையா இருக்கு வெங்கடேஷா!!"நக்கலாக அவள் சொல்ல,
"வெங்கடேஷ் யாரு உன் எக்ஸ் - ஆ?"என்றவனை பார்த்து பல்லை கடித்தாள் அவள்.
"ஏய்..!! தோடா!!என்ன முறைக்கற,சரி மேட்டருக்கு வருவோம்!எனக்கு இந்த கல்யாணத்துல…"
"இஷ்டமில்லை!"இடைபுகுந்து அவன் வசனத்தை முடித்து வைத்தாள் அவள்.
"ஐஐ!!!உனக்கும் இஷ்டம் இல்லையா?எனக்கும் தான்! ஹப்பாடா..எனக்கு இப்போ தான் நிம்மதி"அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு போக,அமைதியாய் நிலம் நோக்கி பார்வையை வைத்திருப்பவளை யோசனையாக பார்த்தவன்,
"ஆமா..உனக்கேன் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை?"எனக் கேட்க,பதில் சொல்ல முடியாமல் தன் சோடா புட்டிக் கண்களை உருட்டி, மூஞ்சை சுருக்கி,உதட்டை பிதுக்கி மகா மட்டமான முக பாவனையை காட்டியவள்,அசடு வழிந்து..
"கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு இல்லை..உங்களை கல்யாணம் கட்டிக்க நேக்கு பிடிக்கல?"என்றாள்.
"எதே!!!என்னைப் பிடிக்கலையா? பல்கா சிக்ஸ் பெக்கல்லாம் வெச்சுருக்கற இந்த பார்த்திபனையே நோக்கு பிடிக்கலையா? என்னை..உனக்கு பிடிக்கலையா?"மாறி மாறி சவுண்டு கொடுத்தவனை பார்த்து,
"எதுக்கு இப்போ எருமை மாடு ஏப்பம் விட்ட மாதிரி சவுண்டு கொடுக்கரேள்!நேக்கு உங்களை தான் பிடிக்கலை போதுமா!"
"ஏன் ஏன் ஏன்..?" என பொங்கிக் கொண்டு வந்தவனை பார்த்தவள்,
மூக்குக்கு கீழ இறங்கிய கண்ணாடியை ஏற்றி விட்ட படி,"உங்க சிக்ஸ் பேக்"என இழுத்தாள்.
"ஏன் அதுக்கு என்ன?"
"அதான் பிரச்சினையே!"
"எப்படி? ஹவ்? ஏன்? வொய்? க்யூ??"
"நேக்கு..நேக்கு..நேக்கு..!"
"அடச்சீ சொல்லு.. நோக்கு?"
"நேக்கு தொப்பை பேக் இருக்கறவர் தான்.. ஆம்படயானா வரனும்!" வெட்கத்தில் பெருவிரலால் கோலம் போட்டபடி கூறியவளை 'ஙே' என பார்த்து வைத்தான் பார்த்திபன்.
"என்ன அப்படி பார்க்கரேள்?"அவள் கேட்க,
"இவ்வளவு நேரமும் நீ அமைதியா இருந்தது என்ன?!இப்போ மார்க் ஆண்டனி வெச்சுறுக்கற அவசர வெடிகுண்டு மாதிரி அன்னோயிங்கா பேசுறது என்ன?!"என வியந்தவன்,சிறிது யோசனைக்கு பின்..
"ஐ கண்டு பிடிச்சிட்டேன்!! நீ தானே அந்த கோவை கோகிலா?"என வினவ,
கண்ணாடிக்குள் கிடந்த தன் கண்களை விரித்து திகைப்பை காட்டியவள்,பின் திணறி.. அவனிலிருந்து பார்வையை விளக்கி,
"கோவை கோகிலாவா?? இல்லையே!ஆமா அப்டின்னா யாரு?"
"அடச்சே!நீ என்ன தான் ரியாக்ஷன் விட்டாலும்.. பொய் சொல்றேன்னு தெரியுது?முதல்ல இந்த அப்பாவி ஃபேஸ்ஸை மாத்து!"அவன் கடுகடுக்க,
ஈ என இழித்தவள்,"அ..அது நான் இல்ல.என் தங்கை சாதனா!"என்றாள்.
"எதே!!!!??"
அப்பாவியாக ஆம் என தலையாட்டினாள் அவள்.
"அப்போ அவளுக்கு தெரியுமா உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு?"
"அவளுக்கு மட்டுமில்ல!இங்க இருக்கற எல்லாருக்குமே தெரியும்!ஆனா அவளும், நந்தனாவும் தான் இந்த கல்யாணத்தை நிறுத்த ஹெல்ப் பண்றாங்க!"
"ஓஹோ!கொசு கடிச்சு கோமாக்கு போனா கல்யாணம் நின்னுடுமோ?"அவன் நக்கலாக கேட்க,
அவனை முறைத்தவள்,"அவ்வளவு சொல்லியும் நீங்க ஏன் பொண்ணு பார்க்க வந்தீங்கோ?"என்றாள்.
"சோ, அதனால தானா..இப்போ என் கேள்விகளுக்கு பதில் சொல்லாம வெறுப்பேத்தின?"
'ஹி..ஹி..கண்டு பிடிச்சிட்டான் காஸ்ட்யூம் போட்ட காட்டெருமை!' என மனதினுள் நினைத்த படி அவனை நிமிர்ந்து பார்த்து அசடுவழிய சிரித்தாள்.
அவள் செய்கையில் நெற்றியை தேய்த்துக் கொண்டவன்,
"நிஜமாவே தொப்பை வெச்ச ஆள் தான் வேணுமா?இல்ல இதுவும் அந்த கோமா மேட்டர் மாதிரி கல்யாணத்த நிறுத்த நீ போட்ட மொக்க பிளேனா?"என வினவ,
"உஷ்!உஷ்!சத்தமா பேசாதீங்கோ!அம்பி பாட்டி காதுல விழுந்துட போகுது!"அவள் குரலை தாழ்த்தி மெதுவாகப் பேச,இவன் தலையை மட்டும் திருப்பி அம்பிகா பாட்டியை ஒரு லுக் விட, டக்கென்று இவன் பார்ப்பான் என அறியாதவர்,பதறி திரும்பி மீண்டும் 'சூ,சூ' என இல்லாத காக்காவை விரட்டினார்.
மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவனுக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது..!அம்பிகாவின் ஜீன் தான் தன் அம்மா ஆண்டாளையும் ஆட்டி படைக்கிறதென!
"மிஸ்டர் பார்த்திபன்!"எனும் அவள் அழைப்பு.. குள்ளமாக இருந்தவளை குனிந்து பார்க்கச் செய்ய,
"தம்மாத்தூண்டு இருக்கியே..!உன் வயசென்ன?" எனக் கேட்டான்.
கண்களை சுருக்கி அவனை முறைத்து விட்டு,மீண்டும் மூக்கு இறங்கிய கண்ணாடியை ஏற்றியவள், "ஏங்க.. என்னங்க ஒரு பொண்ணுக்கிட்ட வயசு கேக்கறீங்க?பொண்ணுங்க கிட்ட வயசு,ஹைட்டு, வெயிட்டு இதெல்லாம் கேட்கப்படாதுன்னு உங்களுக்கு தெரியாதா?"என்றாள்.
"வயசு,ஹைட்டு, வெய்ட்டு பத்தி கேட்காம..எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னா கேக்க முடியும்! ஃபெண்டா பொட்டல் சைஸ்ல இருந்துகிட்டு பெமினிசம் பேச்சு!"என எகிறியவனிடம்,
"என்னங்க.. ரத்தம் பார்க்கற ரக்கெட் பாயாட்டம் ராங்கா பேசறீங்க?நல்லா இல்ல சொல்லிட்டேன்!"என்றாள் மூக்கு விடைக்க.
"ஆஹ்.. ரக்கெட் பாயத்தான் இப்போ இருக்கற கர்ள்ஸ் ஹேவியா லைக் பன்றாங்களாமே..?!சரி,சரி! கன்ட்ரோல் இல்லாம போகுது நம்ம கன்வர்சேஷன்!சோ, ஒழுங்கா கண்டிநியூ பண்ணு!"என இவன் அலுக்க,
"ப்ச்ச்!! 22-ங்க என் வயசு!" என்றாள்.
'ஹப்பா!!நம்மல விட ஆறு வயசு தான் சின்னவ!ஒரு செகண்ட்ல ஓல்ட் பீசாகிட்டமோன்னு ஃபீல் ஆகிட்டேன்!' எனும் ஆசுவாசத்துடன்,
"காலேஜ் ஃபைனல் இயர் படிக்கறியா?"என அவன் கேட்டதில்,
கன்றிக் கறுக்கத் தொடங்கியது அவள் முகம்.
"எதுக்கு இப்போ காஞ்ஜுரின் பேயாட்டம் ஃபேஸ மாத்தற?"
"ஸ்ஸ்!!!இவனால!!"என முனகியவள்,
"பிளஸ் டூ வரையும் தான் படிச்சிருக்கேன்!"என்றாள் இறுகிய குரலில்.
"ஏன் எக்சாம்ல பாஸ் ஆகலயா என்ன?"
அவன் கேள்வியில் நிமிர்ந்து அவனை முறைக்க இருந்தவள், அவன் முகம் கேலி இன்றி யோசனையில் இருக்கவும்,
"அதெல்லாம் டிஸ்ட்ரிக் 5th ரேங்க் வந்தேன்!வீட்ல தான் படிக்க வேணாம்னுட்டாங்க!"என்றாள் வெறுத்துப் போன குரலில்.
"ஏன் என்னாச்சு?"
"எங்க குடும்பத்து பொம்பளைங்க 12th வரைக்கும் தான் படிக்கலாம்!"
"என்ன லூசுத் தனமா பேசற?எங்கம்மா எல்லாம் காலேஜ் படிச்சாங்களே!"என இவன் பொறுமை இன்றி கூற,
"யார் லூசுத்தனமா பேசறா!?"கீச்சென்ற குரலில் கேட்டவள்,பின் குரலை தாழ்த்தி..
"நான் சொல்றது கேட்டா..உங்களுக்கு ஏத்துக்க முடியாம கோபம் வரும்!ஆனா அதான் உண்மை!"என்றவளை பார்த்து புருவம் சுறுக்கியவனிடம்,
"ஆண்டாள் அத்தை வீட்டை எதிர்த்து மேரேஜ் செய்துக்கிட்ட அப்பறம் அவங்களுக்கு அப்பறம் பொறக்குற பெண் பிள்ளைங்க யாரும் படிக்க கூடாதுன்னு ஆதிசேஷன் தாத்தா சொல்லிட்டார்!12th வரையும் படிக்க வைக்கறதே பாட்டியோட பிடிவாதத்தால தான்! எங்க ஜெனரேசன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க எங்களுக்கு கொஞ்சமாவது படிப்பறிவு வேணுமாம்!பாட்டி அப்படி சண்டை போடவும் தான் தாத்தா விட்டார்..!"
"ஆண்டாள் அத்தை.. தாத்தாவ எதிர்த்து கல்யாணம் செஞ்சதுக்கு.. 'படிப்பு கொடுத்த திமிர்ல தானே..எங்கள மீறி போயிட்டான்னு' அவருக்கு நெனப்பு!"என்றவள் அவன் முகம் பார்க்க,இறுகிய முகத்துடன், "ரிடிக்யூலஸ்!!"என்றான் கடித்த பற்களுக்கிடையில்..
அவள் அமைதியாக நிற்க, "உங்க தாத்தா சொன்னதுக்கு..ஏன் உங்காப்பவோ..மத்தவங்களோ எதிர்க்கல?எங்கோயோ லாஜிக் இடிக்குதே..!"என யோசித்து விட்டு,
"இது ஏன் நீ இந்த கல்யாணத்த நிறுத்த போட்ட அடுத்த ப்ளேனா இருக்க கூடாது?"என அவன் கேட்டதில்,
"போயா யோவ்!!"என்றாள் இப்போ அவள் பற்களை கடித்து.
'பொசுக்னு போயான்னு சொல்லிட்டாளே!வெட்கம்!வேதனை அவமானம்!' - பார்த்திபன் மனது சைடு கேப்பில் வாரியது.
"ஹ்க்கும்! நீ சொல்றது உண்மை தானா?"இவன் கேட்க,அவள் முறைத்தாள்.
"தாத்தாவை மீறி இங்க யாரும் பேசமாட்டாங்க! எங்கப்பாவுமே அவர் சொல்றது சரின்னு ஆணித்தரமாக நம்புறார்! பெண் பிள்ளைக்கு படிப்பு கொடுத்தா தடமாறி போயிடுவாங்களாம்!எரிச்சலா வர்றது!"என்றாள்.
"சரியான மூள மலுங்கிப்போன முட்டாப் பீசார்ப்பாய்ங்க போல!உங்க தாத்தாவும்,அப்பாவும்!"
"அது என்ன..?என் தாத்தா என் அப்பா?!உங்களுக்கு சொந்தமில்லையா?"
"இப்படி பெண் பிள்ளைகளை அடக்க நினைக்கிற ஆட்கள் எல்லாம் என்னுல அடக்கமில்ல!"என்றவன்,
"இப்பவும் சொல்றேன். நீ சொல்றதும், உங்க தாத்தா சொல்றதும் சுத்த முட்டாள் தனமான பேச்சு!இந்த கல்வி தான் ஒருத்தரை சுயமா யோசிக்க வைக்கும்,என்ன தடங்கள் வந்தாலுமே கை கொடுக்கும்!அதுவும் முக்கியமா பெண்களுக்கு.என்னை பொறுத்தவரை ஒரு பெண்ணுக்கு ஆண் துணை இல்லன்னாலும் கல்வி துணையா இருக்கும்!நான் இல்லாம உன்னை வேறு ஒருத்தர் கல்யாணம் பண்ணி..பாதிலே விட்டுட்டு போனா படிக்காத நீ என்ன செய்வ!இங்க நிறைய பேருக்கு இது புறியரதே இல்ல!பெண்ணுன்னாலே ஆண்களுக்கு கீழ தான்னு ரூல்ஸ் போட்டு இருக்காங்க!"என்று விட்டு,
"எங்கம்மாவ நியாயப்படுத்த நான் இப்படி பேசறதா நீ நினைக்கலாம்! நினைச்சாலும் பரவால்ல.ஆனா அதுக்காக சொல்லல.எங்கம்மா அவங்க காதலுக்காக நின்னு போராடாம,இப்படி எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டது சரி இல்ல தான்..அதுவுமில்லாம அவங்களால தான் தாத்தாக்கு இந்த மாதிரி மக்கிப் போன ஐடியா எல்லாம் வந்திருக்குன்னு நினைக்கும் போது தான்,எங்கப்பன், உங்கப்பன்னு எல்லார் மேலயும் செம்ம கடுப்பா வருது!" என்றான்.
"அதுகுன்னு.. என்னைய கல்யாணம் கட்டுறவா விட்டுட்டு போயிடுவான்னு ப்ளோல நீங்க சொல்லிருக்க வேணாம்!"இவள் சொல்ல,
"வெஷம்!! வெஷம்!! அம்புட்டும் வெஷம்!"என அவள் தலையில் கொட்டுவது போல் செய்கை செய்தவன்,
"சிறுத்தை சிவா,சிங்கம் ஹரியெல்லாம் தோத்து போற மாதிரி லென்தி டயலாக் விட்டா! இப்படி அசால்ட்டா பங்கம் பண்ணிட்டாளே!"என அவன் சத்தமாக புலம்ப,
'களுக்' என சிரித்தாள் அவள்.
"என்ன சிரிப்பு?" என முறைத்தவன்,
"அந்த ஆண்டிக் பீஸ் ஆதிஷேசன் எங்கே?"என வினவ,
"சொல்றேன்!ஆனா டக்குன்னு திரும்பி பார்த்துடாதீங்கோ!" என்றவள்,
"அம்பி பாட்டி இருக்காங்கல்ல..சரியான அவங்களுக்கு நேரா மேல வலது பக்க பால்கனில இருந்து நம்மல தான் பார்த்துண்டு இருக்கா!" என இவள் சொல்ல,பட்டென்று திரும்பி மாடி பால்கனியை நோக்கினான். ஆதிசேஷன் முறைப்புடன் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஸ்ஸ்!!ரோட்டுல போற பொம்புள புள்ளைய திரும்பி பார்க்க பொறம்போக்கு பையனாட்டாம் பொசுக்குன்னு பார்க்கறான் பொடசக்கெட்டவன்!"அவள் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேச..இவன் பற்கள் நறநறத்தது.
"ச்ச்.. சாரி!!"இவள் அசடுவழிய,
"அக்கா..அம்பி பாட்டி உங்களை உள்ள கூப்பிடுறாங்க! நேரமாச்சாம்.. அத்திம்பேர் கூட பேசனது போதுமாம்!"என சத்தமிட்டபடி சேதனாவின் தம்பி பார்த்திபன் அருகில் வந்து நின்றான்.
"யார் இது? பத்து வயசு பாபி சிம்ஹா மாதிரி பல்கா ஒருத்தன்!"இவன் கேட்க,
சேதனா பதில் சொல்ல முன்,முந்திய தம்பிக்காரன்,
"கிருஷ்ணாயில்ல போட்ட கீரை போண்டாவாட்டம் இருக்குற நீங்க தான் எனக்கு அத்திம்பேர் ஆகப்போறவரா?"எனக் கேட்டவனைப் சிரிப்போடு பார்த்தவன்,
"ஐ லைக் யூவர் கௌண்டர் மச்சான்!"என சொல்லி அவன் தோளில் கை போட்டு,
"நல்லா புசு புசுன்னு.. டோரிமோன்னாட்டம் இருக்கீங்க! அக்காளும் தம்பியும்!"என்றான் அவன் கன்னத்தை பிடித்திழுத்து.
சகோதரர்கள் இருவரும் பார்த்தியை முறைக்க தோளை குலுக்கி விட்டு, டோரிமோனை அவனுடன் இழுத்து வீட்டிற்குள் சென்றான்.
பின்னோடு வந்த சேதனா மெல்லிய குரலில்,"இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க பார்த்திபன்!"என கிசுகிசுத்து விட்டு தன் தாய் அருகில் அப்பாவி முகத்துடன் போய் நின்று கொண்டாள்.
உள்ள இவன் வந்தவனுடன் சங்கரர்,"என்ன மாப்பிள்ளை பேசியாச்சா?"என சிரித்தபடி கேட்க,
ஆம் என்ற தலை அசைப்போடு ஆண்டாள் அருகில் போய் அமர்ந்து கொண்டவனிடம்,
"டேய்..பார்த்தா!நேக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சி போச்சுடா!சப்பை மூக்கியா இருந்தாலும் செம்மயா இருக்கா! புசுபுசுன்னு இருந்தாலும் புஸ்ட்டியா இருக்கா! குள்ளமா இருந்தாலும் கும்முன்னு இருக்காடா!"என ஆண்டாள் கிசு கிசுக்க தாயை மூக்கு முட்ட முறைத்தவன்,
"உன் தெய்வீக காதலால இந்த வீட்டு பொண்ணுங்க படிப்பு பாதாளத்தில போயிட்டிருக்கு!அது தெரியாம அவளை சைட்டடிக்கிற..! இரு உனக்கு இருக்கு!"என முணுமுணுத்தான்.
அம்மா,மகன் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த சங்கரர் திரும்பி மணியையும் பார்த்து விட்டு,
"அப்போ ரெண்டு பேருக்கு புடிச்சி போச்சு போல!ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயத்தை வெச்சுக்கலாம்!
நாங்களும் இன்னும் ரெண்டு நாள் தான் காஞ்சிபுரத்துல இருப்போம்!வெக்கேஷன்னால இங்க வந்தது! கோயப்பத்தூர் கிளம்பிடுவோம்!அங்க மில் வேலையெல்லாம் அம்புஜம், அலமேலுவோட மாப்பிள்ளைங்க தான் பார்க்கறாங்க"என அவர் சொல்ல,
இடையிட்டான் பார்த்திபன்.
"இந்த கல்யாணத்துல எனக்கும் சம்மதம் தான்!" என்றவனை சேதனா திகைத்து பார்க்க,
"ஆனா ஒரு கண்டிசன்!எனக்கு வர போற மனைவி ஒரு அட்லீஸ்ட் டிகிரி ஹோல்டர் இருக்கனும்னு எனக்குன்னு ஒரு ஆசை இருக்கு!அதனாலே சேதனா மேல படிக்கனும்!அப்படி முடியாதுன்னா..இந்த சம்பந்தத்தை முடிச்சிக்கலாம்!" என்றான்.
அவன் பேச்சில் ஆதி சங்கரருக்கு கோபம் எழ அடக்கி கொண்டவர்,ஆண்டாளை பார்க்க அவர் முகத்திலும் திகைப்பு.
"என்னண்ணா இவன் சொல்றான்!நம்ம நல்லினி மேல படிக்கலயா?" எனக் கேட்க,
அதில் பார்த்திபன்,"இவ்வளவு நேரம் அப்போ என்னாத்த உங்க அண்ணன் வீட்டாளுங்ககிட்ட பேசிட்டிருந்த மா!இப்போ வாயப் பொழக்கற?" அடிக்குரலில் கடுகடுத்தான்.
"சின்ன வயசு கதை பேசிட்டிருந்தோம்டா பார்த்தா!"என்றார் அப்பாவியாய்.
"நல்லா வருவமா!"என்றவன் மாமனாரை நோக்கினான்.
பார்த்திபன், சேதனாவின் படிப்பு பற்றி கேட்டதில் அங்கிருந்த ஆண்டாள் வீட்டுப் பெண்கள் அனைவருக்குமே அப்படி ஒரு மகிழ்ச்சி. சடகோபன் கூட மகிழ்ந்தார்..அவருக்குமே ஆதிஷேசனின் கொள்கையில் விருப்பமில்லையேனாலும் தந்தையை தாண்டி சென்றதில்லை.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான்.. பிளஸ் வன் படித்துக் கொண்டிருக்கும் சாதனாவின் மேற்படிப்புக்காக ஆதி ஷேசனிடம் பேசிருந்தார்.அதை வேண்டாமென்று தவிர்த்து பெரிய வாக்குவாதமே செய்திருந்தார் ஆதிசேஷன்.
ஆண்டாள் கேள்வியில் அனைவரும் அமைதியாக இருக்க.. மாடியிலிருந்து இறங்கி வந்த ஆதிஷேசன்,
"சங்கரா..!"என அழைத்து,
"நம்ம வீட்டு பெண் பிள்ளைங்கள ஏன் படிக்க வைக்கலன்னு சொல்ல வேண்டியது தானே!"என்றார் எகத்தாளமாய்.
"அப்பா!"ஆண்டாள் எதுவோ பேச வர அவரை தடுத்த பார்த்திபன், சங்கரரையும்,ஷேசனையும் ஒரு பார்வை பார்த்தான்.
சங்கரர் அமைதியாக இருக்க, பார்த்திபனே எழுந்து நின்று பேச்சை தொடர்ந்தான்.
"என்ன இத்துப் போன காரணம் சொல்லப் போறீங்க! எங்கம்மா..அதான் உங்க மூனாவது பிள்ளை..உங்க பேச்ச கேட்காம,உங்களை எதிர்த்து கல்யாணம் செஞ்சுண்டதுனால அதுக்கப்பற வர்ற ஜெனரேசனுக்கு படிப்பு பன்னண்டாங் கிளாசோட நின்னு போச்சுன்னா!"என்றான் இறுக்கத்துடன்.
"பார்த்திபா!"என மணி கண்டன் அவனை அழைக்க..உடலை தளர்த்தியவன் பார்வை ஆதிஷேசனை விட்டு அகல வில்லை.
ஒரு வகையான திருமிருடன் அவனை பார்த்து சிரித்து விட்டு,"நான் நினைச்சா இந்த சம்பந்தத்தை நிறுத்திடுவேன்!" என்றவரை பார்த்து மற்றவர்கள் திகைக்க,பார்த்திபன் அசட்டையான சிரிப்புடன்,"பஞ்சபாண்டவர் காலத்துல வந்த பஞ்செல்லாம் விடாதீங்க தாத்தா!உங்களுக்கு செட்டாகல!"என்றான்.
அவனை முறைத்த் ஷேசன்,"காவாக்குல விழுந்த காட்டுப் பூனையாட்டம் இருக்குறவனுக்கு என் பேத்தியை கொடுக்க நேக்கு இஷ்டமில்லை சங்கரா!"என்று சங்கரரிடம் சொல்லி விட்டு,"ஆனா,இந்த கல்யாணம் சம்பந்தமா நான் தலையிட மாட்டேன்.உன் இஷ்டம்!"என்றவர் தன் மனைவி அம்பிகாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மேல சென்று விட்டார்.
அவர் சென்ற வழியை பார்த்துக் கொண்டே,"டேய் பார்த்தா..இங்கே இருக்கறவங்க படிக்காததற்கு நான் தான் காரணமா?! என அழுகுரலில் ஆண்டாள் கண்ணை கசக்க,
"இப்போ வந்து கேளு! கொய்யா மரத்துல கிய்யா மொய்யான்னு!" என்றவன்,
"நீலாம் காரணமில்லை மா!நீயும் ஒரு காரணம் அவ்வளவு தான்!"என்று விட்டு ஆதி சங்கரிடம்,
"நான் கேட்டதுக்கு என்ன சொல்றீங்க மாமா?"என வினவ,
பார்த்திபனின் வைத்து பெருசாக திட்டம் தீட்டி இருந்தவர்,"நேக்கு நீங்க சொல்றதுக்கு சம்மதம்.நல்லினி படிக்கட்டும்!" என்றார்.
"எனக்கு இன்னொரு கண்டிசன் இருக்கு!" என்றான் பார்த்திபன்.
'கல்யாணம் பேசவந்தா கண்டிஷனா போடறானே கயித..!என் மச்சாங்காரன் வேற மஸ்க்காரா பாட்டு என் முகத்துல ஓடற மாதிரி மார்க்கமா பார்க்கறான்!' - மணியின் மைண்ட் வாய்ஸ்.(மனுசனுக்கு ஐட்டம் சாங்ஸ் மட்டும் தான் மைண்ட்ல வரும் போல!!!)