இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

உயிரைப் பருகும் காதல் கதை திரி

Status
Not open for further replies.

DeviKanmani

Moderator

அத்தியாயம் -06​

சஜித்ரா நிலவேந்திரன் தன் கண் முன்னே வரக் கூடாது என்று அபியிடம் சொல்ல நிலவேந்திரனோ காலை அவள் கண் விழிக்கும் போதே முன்னால் நின்று இருந்தான் .​

"ப்ப்ச் மாம் வேர் ஆர் யூ ??"என்று கத்த நிலவேந்திரன் அவளருகில் சென்று ,"ரொம்ப கத்தாத போய் ரெடி ஆகிட்டு வா .வெளியே போகணும் உனக்கு அரை மணி நேரம் டைம் "என்றவனை கொலை வெறியில் பார்த்தாள். ..​

"கெட் அவுட்" என கத்த ,அவனோ சாவகாசமாக ,"எனக்கு கட் அவுட் ,பேனர் வைக்கிறது எல்லாம் வருங்காலத்தில் பார்க்கலாம் இப்போ போய் ரெடி ஆகி வா "என்று வம்பிழுத்து விட்டு சென்றான்.​

"ச்சே ஸ்டுப்பிட் "என்று திட்டியவளோ மீண்டும் படுத்து விட்டாள்.​

சற்று நேரத்தில் சில்லென்று ஏதோ பட, விழுக்கென எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க நிலவேந்திரன் வாளியை தூக்கி ஓரமாக போட்டு விட்டு ," போய் ரெடி ஆகி வா பே... வாயில சொன்னா கேட்கிறது இல்லை... மறுபடியும் தூங்கின அப்புறம் பைப் கனெக்ஷனை பெட் ரூமிற்கு விட்ருவேன்" என மிரட்டல் விடுத்தே வெளியேறினான்.​

"வெளியே வந்து கவனிச்சுக்கிறேன் டா உன்னை "என்றவாறு தயார் ஆக சென்றாள்.​

இங்கு நிலவேந்திரனோ, உணவு மேசையில் அமர்ந்து சாப்பிடத் துவங்க பாக்யா திட்டிக் கொண்டிருந்தார்.​

"இவனுக்கெல்லாம் வடிச்சு கொட்ட தலையெழுத்தா??, ஊரை விட்டு ஓடிப் போனவ எங்க கெட்டுப் போய் பெத்தாளோ அதெல்லாம் இங்க வந்து "எனும் போதே தட்டும் டம்ளரும் சுவற்றில் அடித்து கீழே விழுந்தன.​

"சவுண்ட் .இன்னொரு தடவை சத்தம் வந்துச்சு அப்புறம் யார் என்னனு பார்க்க மாட்டேன். டேய் பால்டப்பா !!உங்க அம்மாவை அடக்கி வச்சுக்க இல்ல ,தட்டு செவுத்துக்கு பறக்காது அவங்க செவுள்ள பறக்கும் புரியுதா!!" என அபிநித்ரனிடம் மிரட்ட, அவனோ கடுப்பாக ," ம்மா வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்க..." என திட்டி விட்டு ,"இதோப்பாரு அவங்க பெரியவங்க கோபத்தில் பேசினா நீ இப்படி இன்டீசன்டா நடந்துக்கிற இடியட்... பொறுமையே கிடையாதா உனக்கு அப்படி என்ன தப்பா சொல்லிட்டாங்க அவங்க உங்க "எனும் போதே நிலவேந்திரனின் கை அபியின் கழுத்தில் இருந்தது.​

சுவற்றில் சாய்த்து அரையடி மேலே தூக்கி இருந்தான் அவனை.​

"ஸ்ஸ்ஸ் இதோப்பாரு இது தான் உன் குடும்பத்துக்கு கடைசி எச்சரிக்கை என் அம்மாவைப் பத்தி ஏதாவது தப்பு தவறா இனி உங்க வாயில வந்தது வாயை ஒடைச்சு கையில கொடுத்திடுவேன் புரியுதா... !! என் அம்மா தப்பு செஞ்சா தான். இல்லைனு அவங்க சொல்லவே இல்லை சும்மா அதையே பேசினா அப்புறம் நான் என்ன பண்ணுவேன் னு எனக்கே தெரியாது " என்றவன் எதுவுமே நடக்காதது போல சாப்பிட ஆரம்பித்தான்​

சஜித்ரா மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள். உணவு உண்டு கொண்டிருப்பவனை அப்படியே தட்டோடு சேர்த்து அமுக்கி விட்டால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.​

'சாம்பாரை எடுத்து அவன் தலையோடு ஊற்றுவது போல 'மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தாள். நிலவேந்திரன் நிமிர்ந்து பார்த்து விட்டு," கனவு காணாம வந்து சாப்பிடு நேரம் ஆகிட்டு "என கை கழுவ சென்றான்.​

"திமிர் புடிச்சவன், மான்ஸ்டர் எல்லாம் இந்த அப்பாவால வர்றது "என முனகிக் கொண்டே வெளியே செல்ல முற்பட ,இயலரசி "அம்மு சாப்பிட்டு போடா!!" என்றார் கெஞ்சுதலாக​

"எனக்கு வேண்டாம் அதான் பிடிச்சுட்டு வந்திருக்கீங்களே ஒரு வில்லேஜ் மான்ஸ்டரை அதுக்குப் போட்டா சரி "என்று சொல்ல, வந்து விட்டான் நிலவன்.​

"அத்த இட்லியை எடுத்து வைங்க... ஏய் நீ உட்காரு , டேய் பால்டப்பா உனக்கு தனியா வெத்தலை பாக்கு வைக்க முடியாது வந்து உட்காரு "என மிரட்ட இருவரும் அதே நிலையில் நின்றிருந்தனர்.​

இயலரசி பரிமாறினார்.​

"உங்களை உட்கார சொன்னேன் இல்லன்னா நான் ஊட்டணும் னு எதிர்பார்க்கிறிங்களா ??"என்றதும்," உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனக்கு மீட்டிங் டைம் ஆச்சு" என வெளியே செல்ல முயன்றவளை தூக்கி கொண்டு வந்து அமர வைத்தான்.​

"ஹேய் ஹவ் டேர் யூ... !!"​

"ப்ப்ச் உட்காரு ,சீன் காட்டின அப்புறம் என் கையால தான் ஊட்டி விடுவேன் நான் "என்றதும் யதுர்ஷிகா வந்தவள் .,"மாமா நீங்க எனக்கு ஊட்டுங்க நான் சாப்பிடுறேன்" என வந்தமர , வேகமாக அபி வந்து உட்கார்ந்தான்.​

"ஏய் அறிவில்ல ஆம்பளளைப்பையன் கிட்ட ஊட்டி விட சொல்ற, அடிச்சேன்னா தெரியும். "என்று மிரட்டலாக கூறி விட்டு தானே பரிமாறினான்.​

நிலவேந்திரனோ "அத்தை நீங்க போய் மாமாவை அழைச்சுட்டு வாங்க. முடியலை முடியலைனு படுத்திருந்தா முடியாம தான் போகும்" என்றதும் ,வீல் சேரில் அமர வைத்து நர்ஸ் அழைத்து வந்தார்.​

"அத்தை அவருக்கு ஊட்டுங்க சாப்பிடுவார் "என கூறியவன்," என்ன சாப்பிட போறியா? இல்லையா ?இல்ல நான்..." என சஜித்ராவின் தட்டில் கை வைக்க போக," டோன்ட் டச் மை ப்ளேட் "என இழுத்து உண்ண ஆரம்பித்தாள் .​

அனைவரும் உண்டு முடித்ததும் சஜித்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் நிலவேந்திரன்.​

'ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றி விட்டானே!!' என்ற எரிச்சல் மண்டியது பாக்யாவிற்கு.​

முதல் நாள் இரவு நீலகண்டன் இயலரசி இருவரும் அவனிடம் மனம் விட்டுப் பேசிட வீட்டில் நடக்கும் பிரச்சினை அவனுக்கு தெள்ளென தெரிந்தது.​

சஜித்ரா ,பாக்யா சமையலறையில் ஆதிக்கம் செய்வதால் தான் உணவு உண்பதில்லை என்று புரிந்து கொண்டவனோ இயலரசியை காலையில் சமைக்கும்படி கூறி இருந்தான். வேலைக்கென்று எத்தனை ஆட்கள் இருந்தாலும் , சமைப்பது இயல் தான் அவரின் கைப்பக்குவம் தனியே தெரியும் .ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்வார் அதுவும் சத்தான உணவுகளை தான் செய்வார், ஆனால் பாக்யாவிற்கு அசைவம் இல்லாமல் உணவே இறங்காது. அதனாலேயே எப்போதும் காலை மதியம் இரண்டு வேளையும் அசைவம் இடம் பெற்று இருக்கும். அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் சர்க்கரை குறைக்கிறேன் பேர்வழியாக எல்லாருக்கும் சர்க்கரை குறைந்த காபி, டீ கிடைக்கும். வருங்காலத்தில் மற்றவர்களுக்கும் சர்க்கரை வந்து விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக செய்வதாக கூறுவார். நீலகண்டன் தங்கையை எதுவும் சொல்லாமல் இருக்க ,பாக்யாவின் ஆட்டம் அதிகமாக போனது. இதனாலேயே சஜித்ரா வீட்டில் சாப்பிடுவதில்லை. அவளுக்கு உப்பு காரம் குறைவாகவோ கூடவோ இருந்தால் கோபம் எல்லை மீறும் அதனால் தன் உணவை வெளியேப் பார்த்துக் கொள்வாள். இன்று தன் அன்னை தான் சமைத்திருக்கிறார் என ஒரு வாய் உண்டதுமே உணர்ந்து கொள்ள மீதமிருந்த உணவையும் உண்டு விட்டே சென்றாள்.​

அபிக்கோ பயங்கரமான குழப்பம். காலில் விழுந்து கெஞ்சினால் கூட சாப்பிடாதவள் இன்று அவனது அதட்டலில் சத்தமின்றி உண்டு விட்டுப் போகிறாளே என்று...​

மகிழுந்தை நோக்கி சஜித்ரா நடக்க ,அவளுக்கு முன்பாக சென்றிருந்தான் நிலவேந்திரன்.​

கார் கதவை திறந்தவன் ,ட்ரைவர் சீட்டில் அமர அவனை உறுத்து விழித்தாள் சஜித்ரா.​

'காட்டானுக்கு கார் கூட ஓட்ட தெரியுமா !!'என்று நினைக்கையிலேயே அவளை அதிர வைத்தான் அவன்.​

"எங்க ஊர் மாட்டுவண்டியையே ஓட்டுறேன் இதை ஓட்ட மாட்டேனா!!" என்று சொல்ல அதில் திடுக்கிட்டவள் ,'எங்கேயும் சென்று மோதி விடுவானோ 'என்று பயந்து அவனைக் கீழே இறங்கும்படி பணித்தாள்.​

"ஹேய் !! சீன் போடாம வந்து உட்கார் டைம் ஆச்சு"என்றதும் ,"மரியாதையா கீழே இறங்கு எனக்கு ஒர்க் இருக்கு" என்றாள்.​

"உட்காரலைனா உட்கார வைப்பேன் . பரவாயில்லை னா சொல்லு "என மிரட்டலாக மொழிந்தவனை உறுத்து விழித்து," மான்ஸ்டர் "என்று முணுமுணுத்தவள் பின்னிருக்கையில் அமர்ந்தாள்.​

நேற்றிரவு இயலரசி கூறியதை மனதில் ஓட்டியபடி வண்டியை ஓட்டினான்.​

"தம்பி நீ நெனைக்கிற மாதிரி இல்ல என் மக ரொம்ப அடம் . தான் நினைச்சதை சாதிக்காம விட மாட்டா அது போல ஒரு விஷயம் பிடிக்கலைனா செய்யவே மாட்டா அதே போல பிடிச்சுட்டா எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை அடைஞ்சே தீருவா உங்க வழிக்கு கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம் பார்த்துக்கங்க அவ வரலைனா நீங்க தான் அவ வழிக்கு போறது போல ஆகிடும்" என எச்சரிக்கை விடுத்தார் இயலரசி.​

"அத்தை நான் எப்படிப்பட்ட ஆள் னு கொஞ்சம் உங்க நாத்தனார் கிட்ட கேளுங்க, அப்புறம் தெரியும் யார் வழிக்கு யார் வர்றாங்கனு "என கெத்தாக கூறி விட்டே உறங்க சென்றான்.​

காரை ஓட்டிச் சென்று SAJNIL நிறுவனத்தின் முன்பாக நிறுத்த அவளோ ,'இவன் இதை எல்லாம் எப்படி கண்டு பிடிச்சான் ரூட் கரெக்டா பிடிச்சு வர்றானே... அபி சொல்லி இருப்பானோ' என எண்ணியபடி கீழே இறங்கினாள்.​

அலுவலகத்திற்குள் அவள் சென்றதும் காரை பார்க் செய்து விட்டு பின்னாலேயே சென்றான்.​

சட்டென திரும்பியவள் ,"மீட்டிங் ஹால் ல உனக்கு என்ன வேலை?? பாடிகார்டா வெளியே நின்னு காவல் காத்துட்டு இரு. ஓவர் ஸ்மார்டா வேலை பார்க்கிறதா நினைச்சு அவமானப் படாத "என்று நக்கலாக கூறி விட்டு சென்றாள்.​

அவன் அதைக் கண்டு கொள்ளாமல் அவளது பெயர் பொறிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் சஜித்ராவின் பிஏ விடம் ,"ஹான் தங்கச்சி மா ஒரு காஃபி கொண்டு வாங்க "என்றான்.​

"ஓகேண்ணா "என்றவள் வேகமாக நகர சஜித்ரா பிஏ வை முறைத்தாள்.​

"யார் னே தெரியாம காஃபி கொண்டு வருவியா ??"என கேட்க​

"இந்திரன் அண்ணா உங்க பர்ஷனல் ரிலேஷன் னு தெரியும் மேம். அரசி மேடம் நேத்தே எங்களுக்கு இன்ட்ரோ கொடுத்துட்டாங்க, அண்ணா எது கேட்டாலும் செய்து தர சொல்லி சொன்னாங்க ,அப்புறம்" எனும் போதே இடை வெட்டியவள் ,"போதும் போங்க "என்றாள் அமர்த்தலாக.​

"இன்னும் என்ன கருமாந்திரத்தை எல்லாம் இந்த ஆபிஸ்ல பண்ணி வச்சிருக்கீங்க??" என்று கேட்க​

"கருமாந்திரம் எல்லாம் இல்ல கடமையை செய்து இருக்கோம் ஓகே" என்றவன் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து அமர்ந்து விட்டான்..​

அவனை முதல் முறையாக மேலிருந்து கீழாக பார்த்தாள். முதல் முறை கிராமத்தில் அவனைப் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேற்றுமை இருந்தது.​

அன்று வேஷ்டி சட்டை சகிதமாக இருந்தான். தாடியும் அதிக சிகையுமாக இருந்தான். இப்போதோ ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசை கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி , க்ரீம் கலரில் சட்டையும் டார்க் ப்ளூ ஜீனும் அணிந்து கெத்தாக இருந்தான்.​

"ஆமா நீ என்ன படிச்சிருக்க?" என்று கேட்க​

"ஏன் ஓனர் போஸ்டிங் தரப் போறியா? என்னை செக் பண்றதை விட்டுட்டு போய் மீட்டிங் அட்டன்ட் பண்ணு போ" என்று நக்கல் தொனியில் பேசி விட்டு புத்தகத்தில் மூழ்கினான்.​

எதுவும் பேசாமல் மீட்டிங் ஹாலிற்கு சென்றாள்.​

'ஆளை முழுங்குற மாதிரி பார்த்துட்டு , கேள்வி வேற கேட்கிறா சண்டிக்குதிரை . மித்ரா கூட இந்த மாதிரி பார்த்ததில்லை 'என்று யோசித்தவனுக்கு அப்போது தான் நினைவே வந்தது மித்ராவிடம் பேசவில்லை என்று​

அவசரமாக நண்பன் சீனிச்சாமியை அழைத்து சங்கமித்ராவிடம் கைபேசியை கொடுக்கும் படி கூறினான்.​

"ஹலோ மாமா... எங்களை எல்லாம் ஞாபகமே இல்ல போலிருக்கு" என்று கோபமாக கேட்க​

"மித்ரா ஏன் டி? நேத்து வேலை மா . அதான் கூப்பிட முடியலைடா..."​

"உன் அம்மாக்கு மட்டும் கூப்பிட்டு சொல்லத் தெரியும் ஆனால் எனக்கு சொல்ல முடியாது அப்படி தானே !!"என்று கோபித்துக் கொண்டாள்.​

"ப்ப்ச் அம்மாக்கு நைட் ஃபோன் பண்ணேன். உனக்கு அந்த நேரத்தில் எப்படி கூப்பிட...?? இல்ல கூப்டா மட்டும் உன் அம்மா பேச விடுமா.. ? சரி சொல்லு ,நீ என்ன பண்ற??" பேச்சை மாற்றினான்.​

"சரி சரி நான் எதுவும் சொல்லலை. அப்புறம் அவ கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு ரொம்ப திமிர் அவளுக்கு" என கூற​

"எவ கிட்ட இருந்து??" என்று கிண்டலாக கேட்டான்.​

"அதான் அன்னைக்கு வந்து மிரட்டினாளே அந்த மகாராணி அவ கிட்ட இருந்து தான்... " என்றாள் சங்கமித்ரா.​

'அவளை பாதுகாக்க தான் வந்திருக்கிறேன் என்றால் திட்டியே தீர்த்து விடுவாள் 'என்றெண்ணி சொல்லாமல் மறைத்து விட்டான்.​

.... தொடரும்.​

 
Last edited by a moderator:

DeviKanmani

Moderator
பகுதி -07

நிலவேந்திரன் சங்கமித்ராவிடம் பேசிட, அவளோ சஜித்ராவிடமிருந்து தள்ளி இருக்கும்படி கேட்டுக் கொண்டாள்... அவளை தான் நிலவேந்திரன் பாதுகாக்க வந்திருப்பது தெரியாமல்.



"சரி மித்து நான் அப்புறம் பேசட்டுமா கொஞ்சம் வேலை இருக்கு .நான் நேரம் கிடைக்கும் போது உனக்கு கூப்பிடுறேன் "என்று இணைப்பைத் துண்டித்தான்.



இங்கே சீனியிடம் கைபேசியை கொடுக்கும் போது அவளின் அம்மா பார்த்து விட்டார்.


"டேய் நீ என்ன டா பண்ற இங்க...? என்ன ரெண்டு பேருக்கும் மாமா வேலை பார்க்குறியா..!! பொறம்போக்கு, போடா முதல்ல இனிமே என் வீட்டுப் பக்கம் உன்னைப் பார்த்தேன் அவ்வளவு தான் சந்தி சிரிக்க வச்சிருவேன் "என்று கத்த சீனியோ," இங்க பாரு சின்னாயி கொஞ்சம் மரியாதையா பேச கத்துக்கிடுங்க...நீங்க பேசினா அப்புறம் நாங்களும் பேசுவோம்... சந்தி சிரிக்க வைப்பாங்களாமில்ல "என பதிலுக்கு திட்டி விட்டு சென்றான் சீனி.


சந்திரிகாவோ "இப்ப என்னத்துக்கு அவன் கிட்ட பாயுற ?, நான் தான் மாமா கிட்ட பேசணும் னு சொன்னேன். ஃபோன் பண்ணி குடுத்தாரு "என்றாள் அமர்த்தலாக.


"எல்லாம் திங்கிற கொழுப்புடி ... இப்படி எல்லாம் பேச சொல்லுது உன்னை... உன்னை வைக்கிற வழியில் வைக்கிறேன்" என்று மிரட்டலாக கூறி விட்டு ,தன் அண்ணனுக்கு அழைத்தார் அவளின் அன்னை.


"இங்க பாரு ண்ணே இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது... அவளை நீ உன் மகனுக்கு கட்டி வை அவ்வளவு தான் சொல்வேன். உனக்காக என் பங்கு அத்தனையும் விட்டு கொடுத்திருக்கேன், அந்த நெனப்பு இருக்கட்டும் உனக்கு, ஆமா அந்த பய அங்க தான் இருக்கானாம் நெசம் தானா!!" என்று கேட்க பாக்யாவின் கணவன் ராம்குமார் ,"ஆமாம் மா இங்க தான் இருக்கான் வந்த ஒரு நாள்லயே உன் அண்ணியை ஒரு வழி ஆக்கிட்டான்" என்று கமுக்கமாக சிரித்தார்.


"ப்ப்ச் அவன் என்னவோ செஞ்சு தொலைக்கட்டும் , அது எனக்குத் தேவை கிடையாது... உன் மகன் அன்னைக்கு இங்க வந்துட்டு என் வீட்டுக்கு வராம போனதே எனக்கு சரியான கோபம்... சரி அண்ணன் மகன் தானேனு அமைதியா போயிட்டேன் என்னைக்கு இருந்தாலும் எனக்கு மருமகனா வரப்போறான்.. வரப் போறான் என்ன அவன் தான் வரணும் இது தான் என் முடிவு"என்று கட்டளையாக சொல்ல ,ராம்குமார் தனது தங்கையின் திடீர் கட்டளையில் திகைத்து நின்றார்.


தன் மனைவி ஒரு புறம், அண்ணன் மகளை மருமகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் இருக்க, தன் தங்கையோ தன் மகளை தனக்கு மருமகளாக்க நினைப்பதை எளிதாக கடக்க முடியவில்லை அவரால். தன் மனைவி பாக்யாவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான் காளி அவதாரம் எடுத்து விடுவாள்... அதற்கு மேல் இந்த அபிநித்ரன்... அவனுக்கு சஜித்ராவைத் தவிர வேறு யாரும் கண்களுக்குத் தெரியவே மாட்டார்கள்.. அதுவும் அத்தை மகள் என்று ஒருத்தி இருக்கிறாள் என்றே அவன் அறிந்ததில்லை. அத்தனையும் பாக்யாவின் ஏற்பாடு... கிராமத்தில் அத்தை இருக்கிறார் என்று தெரியும் ஆனால் அவர் குடும்பத்தைப் பற்றிய விபரங்கள் எல்லாம் அவன் தெரிந்து கொள்ள விரும்பியதும் இல்லை, அதற்கு அவனது அன்னை விட்டதும் இல்லை. ராம்குமாருக்கு தங்கை மகளை மருமகளாக்கிக் கொள்ளும் விருப்பம் மனதின் ஓரம் இருந்தாலும் மனைவியின் பிறந்த வீட்டு செல்வநிலை அந்த எண்ணத்தை மறக்க வைத்தது எனலாம். இருந்தாலும் தங்கை மனது நோகக்கூடாது என்ற எண்ணத்தில் ஒரு யோசனையைக் கூறினார்.



"இதோப்பாரு கமலா நான் ஒரு யோசனை சொல்றேன் அதுபடி நடந்தா நீ நினைச்சது நான் நினைச்சது எல்லாம் நடக்கும் கேட்குறியா?!" என்று பீடிகை போட்டார்.


"உன் வூட்டு மருமகளா என் மகளை ஏத்துக்க என்ன வேணும்னாலும் செய்றேன் நீ யோசனையை சொல்லு "என்றார் கமலா.


"என் மகன் அம்மா பேச்சைத் தட்டாத பிள்ளை அதனால அவ சொல்படி தான் அவனும் கேட்பான். நீ என்ன பண்றனா , உன் மகளை என் வீட்டுக்கு அனுப்பி வை. அதுக்கப்புறம் அபி கூட பேசி பழகினா ரெண்டு பேருக்கும் பிடிச்சுட்டு போகுது கல்யாணத்தையும் ஈசியா நடத்திடலாம் "என்று சொல்ல


"அண்ணா விளையாடுறியா ?!, வயசுப்புள்ளைய ஆம்பளைப்பைய இருக்க வீட்டுக்கு அனுப்பி வைக்க சொல்ற நாளைய பின்ன என் மகளை ஊருக்குள்ள தப்பா பேசுறதுக்கா??" என்று கமலா மறுக்க


"அட தாய்மாமன் வீட்டுக்கு வர எவன் பேசுவான்?, நீ என்னம்மா புரியாம பேசுற?, அதுவும் இல்லாம இது பட்டணம். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் பேச மாட்டானுக அவனவனுக்கு அவனவன் வீட்டுச் சோலியை பார்க்கவே முடியலை இதுல பொறணி வேற பேசுறாய்ங்களா...!! நீ அனுப்பி வை மா நான் பார்த்துக்கிறேன் இதுல இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு... அபிக்கு நம்ம சந்திரிகாவை பிடிக்கணும் னா நல்லா சுடிதார் ஜீன்ஸ் இதெல்லாம் போட்டு இருக்கணும் "என்று சொல்லவும் கமலா யோசனையானார்.


ராம்குமார் பழைய தமிழ் சினிமா பார்த்திருப்பார் போலும். ஹீரோவை தன் வழிக்கு கொண்டு வர அவரது அத்தை மகள் மாமன் மகள் தேர்ந்தெடுக்கும் வழிகளை எல்லாம் தனது தங்கை மகளை செய்யும்படி கூறுகிறார்.


"சரிண்ணே நான் அவளை அனுப்பி வைக்கிறேன் ஆனா யார் வந்து கூப்டு போறது??"


"உன் மருமகன் வருவான் நீ ஏன் கவலைப்படுற ??"என்று சமாதானம் செய்து அழைப்பைத் துண்டித்து விட்டார்.


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


நாட்கள் நகர்ந்திட , சஜித்ராவை கண் இமை காப்பது போல காத்துக் கொண்டிருந்தான் நிலவேந்திரன். எப்போதும் கூடவே இருப்பதனால் எரிச்சலில் இருந்தாள் சஜித்ரா. அபிநித்ரனும் தான். அவனை சஜித்ராவின் அருகிலேயே விடுவதில்லை நிலவேந்திரன். அதனாலேயே கடுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தான் அபி.


பரத்திடம் புலம்பி தள்ளினான் அவனது காது பஞ்சராகும் அளவிற்கு.


"அடடா போதும்டா !! , ஏன் இந்த பொலம்பு பொலம்புற?, முடியல சாமி காதெல்லாம் வலிக்குது. கொஞ்சம் உன் ரெக்கார்டை ஆஃப் பண்ணு நான் ஒரு ஐடியா சொல்லுறேன் உனக்கு "என்று பரத் கூறியதும் அபியின் விழிகள் விரிந்தது.


"டேய் மச்சி !! நீ மட்டும் நல்ல ஐடியாவா சொல்லிட்ட உனக்கு டின்னர் லீ மெரிடியன் ல தான்" என்று ஆர்பரித்தான்.


"நாம உங்க அண்ணனை.. !!"


"டேய் !!"என்று முறைத்தான் அபி.


"சரி சரி அந்த இந்திரன் போதுமா...!!"


"ம்ம்ம் இப்போ சொல்லு... "என்றான் அபி கெத்தாக


"நாம பார்க்க போன அன்னைக்கு அவன் கூட ஒரு பொண்ணு இருந்துச்சே அவ ஃப்ரெண்டு கூட சோப்புனு பேர் சொன்னாளே நீ கூட கிண்டல் பண்ணியே...!!"

"எஸ் எஸ் ஆமாடா... நினைவு இருக்கு... ஹேய் அந்த பொண்ணு எனக்கு அத்தைப் பொண்ணாம் , அப்பா ஒரு வாரம் முன்னாடி சொல்லிட்டு இருந்தார். அவ இங்க சுத்திப் பார்க்க ஆசைப்படுறதா கூட சொன்னார். என்னை போய் கூட்டிட்டு வரச் சொன்னார் நான் முடியாதுனு சொல்லிட்டேன்" என்றான்.


"டேய் !! சூப்பர், இது தான் என் ஐடியாவும், நீ மட்டும் அந்தப் பொண்ணை இங்க அழைச்சுட்டு வந்துட்டா அவ நிலவேந்திரனைப் பார்த்துப்பா அவளை வச்சு நீ அவனை சஜி கிட்ட நெருங்க விடாமல் பண்ணிடலாம். அவங்க ரெண்டு பேரையும் சேர்த்துட்டா, நீ சஜி கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம் எப்படி ஐடியா ??"என குதூகலித்தான் பரத்.


அபிநித்ரன் சற்று யோசித்தான். சந்திரிகாவை மனதில் கொண்டு வந்து நிறுத்தி நிலவேந்திரனுக்கும் சந்திரிகாவிற்கும் ஜோடிப் பொருத்தம் பார்க்க அவனது மனசாட்சியோ, மனசாட்சியே இல்லாமல் கிண்டல் செய்தது .


'நீ என்ன அவங்களுக்கு கல்யாணத்தரகர் வேலையா பார்க்கிற பொருத்தம் பார்த்துட்டு இருக்க 'என்று வம்பிழுத்தது . நீ கொஞ்சம் வாயை மூடு என்று மனதை அடக்கியவன் பரத்தின் யோசனைபடி நடக்க தீர்மானித்தான்.


'இதில் தன் அன்னையை எந்த பிரச்சினையும் இல்லாமல் சமாளிப்பது எப்படி?!' என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான் அபி.


"பரத் நான் முடிவு பண்ணிட்டேன் அந்த பொண்ணு சந்திரிகாவை இங்க வரவழைக்க தான் போறேன் "என கூறி விட்டு நேரே சென்று நின்றான் பாக்யாவிடம்.


அங்கு ராம்குமாரும் மனைவியிடம் சந்திரிகாவை அழைத்து வருவது பற்றி கேட்டுக் கொண்டிருந்தார் ராம்.



"உங்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தா இப்படி ஒரு முடிவை என்னை கேட்காம எடுத்து இருப்பீங்க ஹான்... உங்க தங்கச்சி மகளை இங்க வரவச்சு என் மகனுக்கு கட்டி வைக்கணும், அப்படியே என் கனவுல கொள்ளி வைக்கணும் அதானே உங்க ஆசை..." என்று பொரிந்து தள்ளினார்.



"பாக்யா அவசரப்பட்டு பேசாத, நான் சொல்றதைக் கேளு நான் ஒரு காரியமா தான் அவளை வரச் சொல்றேன்..."


"என்ன காரியம்...? இப்படி உங்க தங்கச்சி மகளை உங்க மருமக ஆக்கிக்கிறதா...!!" என வெடுக்கென கேட்க, அபி உள்ளே வந்தான்.


"அப்பா நான் போய் உங்க தங்கச்சி மகளை அழைச்சுட்டு வரேன் நீங்க கவலைப்பட வேண்டாம் "என்று தன் தந்தைக்கு சமாதானம் சொல்ல, பாக்யா அவனை உறுத்து விழித்தார்.


"மாம் கோவப்படாதீங்க நான் சொல்றதைக் கேட்பிங்க தானே...!! டாட் நீங்க போய் டிக்கெட் புக் பண்ணுங்க நான் அம்மா கிட்ட பேசிக்கிறேன் "என்று அவரை அனுப்பி வைத்தான்.


"மாம் கோவப்படாம நான் சொல்றதைக் முழுசா கேளுங்க ஓகே" என்று ஆரம்பித்தவன் தன் திட்டத்தை சொல்லி முடிக்க பாக்யாவிற்கு முகம் மலர்ந்தது.



"நிஜமாவே இது சரியா வருமாடா தம்பி... ஆனால் இந்த சஜித்ரா பிடிவாதக்காரி ஆச்சே டா, ஒரு வேளை அந்த பட்டிக்காட்டானை தான் கட்டிப்பேன் னு வந்து நின்னா என்ன செய்றது...?? என்று சந்தேகமாக கேட்க


"மாம் சஜிக்கு அவனை சுத்தமாக பிடிக்காது ரெண்டாவது இந்த நிலவேந்திரனுக்கு சந்திரிகாவை ரொம்ப பிடிக்கும் , அவளுக்கும் தான் நான் தான் அன்னைக்குப் பார்த்தேனே... நீங்க கவலைப்படாதீங்க நான் நினைச்சது தான் நடக்கும்..."என்றான் உறுதியாக.


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


அபிநித்ரன் காலையிலேயே சஜியின் அறையில் நின்று இருந்தான்.


"வாட் ஹேப்பன்ட் அபி காலையிலியே வந்திருக்க... " கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து தலைமுடியை சீர்திருத்தியவாறே கேட்டாள் சஜி.



"வாட் ஹேப்பன்டா? அதை நான் கேட்கணும் சனா... உன்னை நான் ஒழுங்கா பார்த்து சரியா ஒரு மாசத்துக்கு மேல ஆகப் போகுது தெரியுமா உனக்கு..." என்று கடுகடுத்தான் அபிநித்ரன்.



"சீ , தினமும் தான் டைனிங் ஹாலில் பார்க்கிறியே..!! அப்புறம் என்ன? எனக்கு ஆக்ஸுவலி டைம் இல்ல அபி... சரி என்ன வேணும்னு சொல்லு மணி ஏதாவது தேவைப்படுதா...?" என்று வினவியவள் தன் அலங்காரத்திலேயே குறியாக இருந்தாள்.


'மணியா ? எனக்கு உன் மனசு தேவைப்படுது னு எப்படி சொல்லி புரிய வைப்பேன் உனக்கு தான் காதல் என்ற வார்த்தையே பிடிக்கிறதில்லையே 'என மனதில் சொல்லிக் கொண்டவன், "நோ சனா !!, அதெல்லாம் இல்ல உன்னோடு பேசியே ரொம்ப நாள் ஆகிடுச்சு அதான் வந்தேன்" என்ற அவனிடம் ஏக்கம் தெரிந்தது.



"சரி ஓகே ஈவ்னிங் பெசண்ட் நகர் பீச் ல மீட் பண்ணுவோம் பீச் போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு " என்று கூறி விட்டு கிளம்பினாள்.




"இன்னைக்கு வளசரவாக்கத்தில் ஒரு மீட்டிங் இருக்கு... அப்புறம் ஒரு க்ளைண்ட்டை சந்திக்க போகணும் ஈவ்னிங் அம்மா கூட கோவிலுக்கு போகணும் அவ்வளவு தான் இன்னைக்கு ஷெட்யூல்... இதை வெளியே இருக்கிற ஆள் கிட்ட சொல்லிடு... மீட்டிங்கிற்கு மட்டும் கூட வந்தா போதும், கோவிலுக்கு அபி துணைக்கு வருவான் ஸோ அவர் வரத் தேவை இல்லை னு சொல்லிடு" என பிஏவிற்கு உத்தரவு போட்டவள் தன் வேலையில் மூழ்கினாள்.


வெளியே விறைப்பாக நின்றிருந்த நிலவேந்திரன், சஜியின் பிஏ எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஒரு முறை அவளை அழுத்தமாக திரும்பி பார்த்தான்.


மனதிலோ ,' இவளை நாம ஏன் பாதுகாக்கணும் ,நமக்கு தேவையா இதெல்லாம் ??' என்று யோசித்தான்.


'நானா உன்னை அழைத்தேன்..!' என்பது போல பார்த்து வைத்தாள் சஜித்ரா.


"ம்ம்ம் சரி மா நீ போய் வேலையை பாரு" என்று பிஏவை அனுப்பி வைத்து விட்டு, உள்ளே நுழைந்தான் அவளிடம் அனுமதி கேட்காமலேயே. அனுமதி தான் எப்போதும் கேட்பதில்லையே...


"பர்மிஸன் வாங்கிட்டு வர்ற பழக்கமே கிடையாதா உனக்கு?!" என எரிந்து விழுந்தாள்.



"ப்ப்ச்... இதென்ன பர்ஸ்ட் டைமா !?,சும்மா கடுப்பேத்திக்கிட்டு ... ஏன் கோவிலுக்கு நான் வந்தா ஆகாதா?!, உன் கழுத்தில் தாலியா கட்டிடுவேன், எப்ப பார்த்தாலும் கோவிலுக்கு மட்டும் வர விட மாட்டேங்கிற என்ன விஷயம் பயமா??" என்றான் நக்கலாக சிரித்து


"உனக்கு அப்படி ஒரு தாட் வேற இருக்கா.. அப்படி ஏதாவது இருந்தா அதோ அங்க இருக்கிற டஸ்ட்பின் ல போட்டுடு. நீ எல்லாம் உன் தகுதிக்கு என் பக்கத்திலேயே நிற்க கூடாது என்ன பண்றது... தலையெழுத்து உன் கூடவே இருக்க வேண்டியதா போச்சு "என்று சலித்துக் கொண்டாள் வேண்டுமென்றே அவனைக் கோபப்படுத்தி பார்க்க


"ஏய் !! "என்று கர்ஜித்தவன் ,"நீ வாழ்ந்தா எனக்கென்ன செத்தா எனக்கென்ன உன்னைப் போய் பாதுகாக்க நினைச்சேன் பாரு என்னை செருப்பால அடிக்கணும் ச்சீ போடி தகுதியாம் பெரிய தகுதி "என்று கடுப்பாக மொழிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.



'ஹப்பா !! இன்னைக்கு இவன் தொல்லை விட்டது... சுதந்திரமா இருக்கலாம்... ' என்றெண்ணியவள் மகிழ்ச்சியாக தன் வேலையை துவங்கினாள்.


அன்று மாலை வரை அவள் கண்ணில் அவன் படவேயில்லை. கோபத்துடன் பேருந்தில் ஏறியவன் அன்று முழுவதும் பேருந்திலேயே சுற்றினான்.


'எவ்வளவு திமிர் உடம்பு முழுதும் திமிர் தான் அவளுக்கு ... நான் எதுக்கு அவளை பார்த்துக்கணும் எனக்கு என்ன அவசியம் வந்துச்சு தேவையே கிடையாது... 'என தனக்குத் தானே பேசியவன் ஒரு வழியாக மனம் அமைதி அடைந்து பெசண்ட் நகர் பீச்சிற்கு வந்து இறங்கினான். தனிமையான இடம் தேடி அமர்ந்தவனோ கடலலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க மனம் முழுவதும் சஜித்ராவின் வார்த்தைகளே ஒலித்துக் கொண்டிருந்தன.


நிலவேந்திரனின் துணையின்றி தனியாக வந்த நிம்மதியில் சஜித்ராவும் அதே பீச்சில் தனியாக அமர்ந்து இருக்க அவளுக்கு எதிராக வந்து நின்றனர் நால்வர்.


இங்கே பீச்சிற்கு கிளம்பிய அபியை தடுத்து சந்திரிகாவை அழைக்க கமலாவின் வீட்டிற்கு செல்லும்படி கூறி விட்டார் ராம்குமார்.


அபி செய்வதறியாது திகைத்து நின்றான்.



...... தொடரும்.
 

DeviKanmani

Moderator
பகுதி -08

'சஜித்ராவைக் காண செல்லலாம் 'என்று அபி நினைத்திருக்க, ராம்குமார் அவனை சந்திரிகாவை (சங்கமித்ரா) அழைத்து வரும்படி கூறினார். அவனோ புரியாமல் திகைத்து நிற்க


"அபி என்ன யோசிக்கிற கிளம்பு. இப்போ போனா தான் காலையில் ரெண்டு பேரும் வர சரியா இருக்கும்" என்றார்.


"அப்பா காலையில் கிளம்புறேனே !!"என்று தவிப்பாய் சொல்ல


"நாளை மறுநாளைக்கு சஜியோட பிறந்த நாள் மறந்து போயிடுச்சா உனக்கு ... எப்போதும் சஜி கூட தானே இருப்ப, ஊருக்கு போக சொன்னா போவியா நீ" என்று கேட்டதும் தான் சஜியின் பிறந்தநாள் நினைவில் வந்தது அவனுக்கு.


'எப்படி மறந்து போனோம் இந்த நாளை?' என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவன், உடனே கிளம்பினான் சந்திரிகாவை அழைப்பதற்கு... சஜியின் கைபேசி எடுக்காததால் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு கிளம்பி இருந்தான்.


இங்கே கடற்கரைக்கு வந்தவள் அபியை எதிர்பார்த்து காத்திருக்க, அவளுக்கு எதிரே வந்து நின்றனர் நால்வர்.


தெய்வாதீனமாக நிலவேந்திரனும் அதே கடற்கரையில் தான் கடலலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.



"ஹேய் பாப்பா !! இங்கப் பாரு மா தனியா வந்தியா... நாங்க வேணுன்னா கம்பெனி தரவா..." வந்தவர்களில் ஒருவன் வம்பு செய்தான் சஜித்ராவை.


"ப்ப்ச் "என்று எழுந்தவள் நடக்க ஆரம்பித்தாள்.


அவளை ஒருவன் கைப்பிடித்து இழுக்க அங்கிருந்தவர்கள் சத்தமிட்டனர்.


"ஏய் தம்பிகளா !! தனியா ஒரு பொண்ணு வந்திடக் கூடாதே !உடனே வம்பு இழுக்கணுமா போங்கடா கஸ்மாலங்களா... இதுக்குனே அலையுறானுக "என சத்தமிட ,நிலவேந்திரன் நினைவு வந்தவனாய் திரும்பிப் பார்த்தான்.


சஜித்ரா தான் நின்று கொண்டிருந்தாள்.

"இவ இங்க என்ன பண்றா?" என முணுமுணுத்தவன் வேகமாக அவர்களை நெருங்கி இருந்தான். அதற்குள் ஒருவனை சப்பென்று அடித்து இருந்தாள் சஜித்ரா. அநேகமாக அவனது காது செவிடு ஆகி இருக்க வேண்டும்...


"ஏய் எவ்வளவு திமிர் இருந்தா...?" என்று இன்னொருவன் அவளை அடிக்கப் போக, இப்போது நிலவேந்திரன் அவனை கீழே தள்ளி விட்டு இருந்தான். அவன் மீது ஏறி அமர்ந்தவன் கையை பின்புறம் கொண்டு வந்து முறுக்கிட கத்தி கதறினான் அவன் .மற்றவர்கள் பயந்து ஓடி விட இருந்தவனை புரட்டி எடுத்து விட நிலவேந்திரனை பிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகியது அவளுக்கு.


"நீ எங்க இங்க... ? பெரிய இவனாட்டம் பேசிட்டு போன எதுக்காக என்னை ஃபாலோ பண்ற? "என்றாள் எரிச்சலாக.


"ம்ம்ம் உன் ஆசை தான்.... இந்தம்மா பெரிய உலகப் பேரழகி, இவளை பாதுகாக்க நாங்க என்ன அவமானப்பட்டாலும் பின்னாடியே அலையிறதுக்கு போவாளா !!"என முறுக்கிக் கொண்டான்.


சஜித்ராவோ கடுப்பாக," ஹலோ நாங்க உலக அழகி இல்ல தான் அப்புறம் எதுக்கு வந்து காப்பாத்தின ...? நான் தான் மாட்டி இருக்கேன் னு தெரியுமில்ல விட்டுப் போக வேண்டியது தானே !! உன்னை யார் வரச்சொன்னா? "என சிலிர்த்துக் கொண்டு வம்புக்கு சென்றாள்.


"என்ன பண்ணி தொலைக்க? என் அம்மா கிட்ட வாக்கு குடுத்திருக்கேனே உன்னை பார்த்துக்கிறதா சொல்லி ,அதான் வந்தேன். இல்லாட்டி இந்த மூஞ்சிக்கு எவன் வருவான் போடி "என்றதும் அவனை அழுத்தமாக பார்த்து விட்டு கையை கட்டி நின்றாள்.


"இப்படி எல்லாம் நின்னா பயந்துடுவோமா !!"என்று கெத்தாக நின்றவனின் மிக அருகில் சென்று நின்றாள்.


"ஏய் !! தள்ளிப் போ, இது என்ன பொது இடத்தில் போய்... ச்சே ! வெட்கமா இல்ல ,தள்ளிப் போ தள்ளிப் போனு சொல்றேனில்ல... ப்ப்ச் என்னடி வேணும் உனக்கு தள்ளிப் போ... எல்லாரும் பார்க்கிறாங்க தள்ளிப் போறியா இல்லையா ?"என்று கேட்டுக் கொண்டே அவன் தான் விலகிச் சென்றான்.


"யாருக்கு வாக்கு கொடுத்தாலும் மீற மாட்ட அப்படி தானே...!!"

"என் அம்மா பேச்சுக்கு மட்டும் தான் மரியாதை, வேற யாருக்கும் அந்த மரியாதை இல்லை" என்றான் வேகமாக.


"ம்ம்ம் ஓஓஓ !!அப்படியா சரி" என்றவள் தனது அத்தைக்கு அழைத்தாள்.

சற்றுத் தள்ளி நின்று பேசியவள், கைபேசியை கொண்டு வந்து நிலவனிடம் கொடுத்தாள்.


"என்ன?" என்று மூக்கை விடைத்தான் கைபேசியை வாங்காமலேயே.

"பேசு "என்று கூறி விட்டு தள்ளி நிற்க அழைப்பில் இருந்த அவனது அம்மாவோ சஜித்ரா என்ன கூறினாலும் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்.


"ம்மோவ் அவ பேச்சு கேட்டு ஆடாத" என்றான் கோபத்துடன் .

"அம்மா சொன்னா என் பையன் கேட்பான் "என இணைப்பைத் துண்டித்தார் முருகேஸ்வரி.


"எங்கம்மாவை என்ன சொல்லிடி மயக்கின?, நீ எது சொன்னாலும் கேட்கிறாங்க" என கடுப்புடன் கேட்க அவளோ அவனருகில் நெருங்கி நின்று ,"இன்னொரு டைம் டீ போட்ட வாயை தைச்சிடுவேன் அன்டர்ஸ்டாண்ட் "என மிரட்டலாக மொழிந்தவளை உறுத்து பார்த்தான்.


கையிரண்டையும் மேலே உயர்த்தி நெட்டி முறித்து," உனக்கு வேணும்னா நீயும் கூப்பிடு ,ஆனா கூப்ட அந்த நிமிஷம் இதோ இங்க வச்சிருக்கியே ரெண்டு..." என்று உதட்டை கைகாட்டி கூறியவன் "அது எனக்கு சொந்தம் ஆகிடும் உன் அனுமதி இல்லாமலேயே ... என்னைய என் வேலையைப் பார்க்க விடு இல்ல" என்றவன் விசிலடித்தபடி நகர்ந்து சென்றான்.


"வில்லேஜ் மான்ஸ்டர் "என்று முணுமுணுத்தவள், மகிழுந்தில் அமர்ந்தாள். அவன் சிரிப்புடன் வண்டியை எடுத்தான்.


"வீட்டுக்கு போக வேணாம் இப்படியே மேடவாக்கம் போயிடு "என்றாள்.


"ஏன்... ?"

"சொல்றதை செஞ்சா நல்லா இருக்கும் "என்று சொன்னதும் பல்லை கடித்தான்.

இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது. ஆனாலும் பயணத்திலேயே இருந்தனர். ஒவ்வொரு இடமாக போக சொல்லிக் கொண்டிருந்தாள்.


அவளின் கைபேசி அழைத்துக் கொண்டே இருக்க, அதை எடுக்கவே இல்லை அவள். கடுப்பாக பிடுங்கி அட்டண்ட் செய்து காதில் வைக்க எதிர்முனை பிறந்த நாள் வாழ்த்து கூறியது.


இணைப்பை துண்டித்து விட்டு ஒரு உணவகத்தில் நிறுத்தினான்.


"உள்ள வா... !!"

"நான் எங்கேயும் வரலை "என விடாப்பிடியாக அமர்ந்து கொண்டாள் சஜித்ரா.


"திமிர் பிடிச்சவ" முணுமுணுத்து விட்டு உள்ளே சென்றவன், அரை மணி நேரம் கழித்து வந்தான்.

"காபி "என்று நீட்ட ,அவளோ "ப்ரெஷ் பண்ணலை வேணாம் "என்றாள்.

பேனட்டை திறந்தவன் அதில் இருந்த பேஸ்ட்டை நீட்டினான்.


"எனக்கு வேணாம்" என்றவளை இழுத்து பிடித்து பல்லை துலக்கி விட்டு பின்னர் தன் கையிலிருந்த பேக்கிங்கை பிரித்து அதில் இருந்த கேசரியை அவளின் வாயில் திணித்து," பிறந்த நாள் வாழ்த்துகள்... என்னைக்கும் சந்தோஷமா இரு" என்று வாழ்த்தினான்.


கேசரியை விழுங்கியவள் அவனை விழுங்கும் பார்வை பார்த்தாள்.


"ரொம்ப பார்க்காத, பிறந்த நாள் னு தான் வாழ்த்தினேன் மத்தபடி உன் மேலயோ உன் குடும்பத்துக்கு மேலேயோ எந்த ஈர்ப்பும் வரலை" என்று விட்டு கெத்தாக அமர ,அவளுக்கு கேசரி தொண்டை தாண்டி இனித்தது.


"நன்றி வீட்டுக்குப் போ "என்று மொழிந்தவள் மீதமிருந்த கேசரியை அவன் எதிர்பாரா நேரத்தில் வாயில் வைத்து விட்டாள். உண்டவனோ, அமைதியாக பாதையில் கவனம் செலுத்தினான் முகமோ வழக்கத்துக்கு மாறாக புன்னகையை தத்தெடுத்தது.

அவள் வீடு சென்றதும் அனைவரும் வாழ்த்து கூறினர். அவள் மனம் அபிநித்ரனை தேடியது. எப்போதும் முதல் வாழ்த்து அவனுடையதாக இருக்கும் ஆனால் இன்று அவன் கண்ணிலேயே படவில்லை.


ராம்குமார் புரிந்து கொண்டவராய்," அபி என் தங்கச்சி பொண்ணை அழைச்சுட்டு வரப் போயிருக்கான் மா இப்ப வந்திடுவான்" என்றதும் அவரிடம் எதுவும் சொல்லாமல் அறைக்குச் சென்று விட்டாள்.


பாக்யாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. 'தன் மகனை சஜித்ரா தேடியுள்ளாள் 'என்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது.


நிலவேந்திரனோ,' இத்தனை பேர் வாழ்த்து சொல்றாங்க அதெல்லாம் பெருசு இல்லையாம் !! அந்த பால்டப்பா இல்லாதது தான் வருத்தமாம் திமிர் பிடிச்சவ' என மனதிலேயே வறுத்தெடுத்தான் அவளை.


ஆறு மணிக்கு மேல் சந்திரிகாவுடன் வந்திறங்கினான் அபிநித்ரன்.


வந்தவன் வேகமாக சென்று பார்த்தது சஜித்ராவை தான்.


"ஹாப்பி பர்த்டே டூ யூ சனா, ஐம் சாரி அது வந்து ..."என்று கூறும் போதே கை நீட்டி தடுத்தவள் "நான் எதிர்பார்க்கலை "என்றாள்.


"ஐ க்நோ சனா பட் நான் எப்போதும் சொல்றது தானே!!" என்றவன் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.




"இட்ஸ் ஓகே "என்றவள் அவனுக்காக எடுத்து வைத்திருந்த வெணிலா ஐஸ்கீரிம் கேக்கை ஊட்டி விட்டாள். அபியின் முகம் பூவாய் மலர்ந்தது.


சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து செல்ல, கீழே சங்கமித்ரா பாக்யாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள்.



"ம்மா ஏன் இப்படி பண்றீங்க ?அவ இங்க படிக்க தான் வந்திருக்கா சும்மா ஏதாவது பேசிட்டு, நீ உள்ள போ ஊரில் வாய் மூடாம பேசுவ இங்க எங்கம்மா கிட்ட பதில் பேச முடியலையோ ?! "என்றான் எரிச்சலாக.


"நானாவது வாய் மூடாம தான் பேசுவேன் ஆனா உங்கம்மா அடுத்தவங்களுக்கு வாயே இல்லாத மாதிரி பேசுது ,சொல்லி வை என் கோவத்தை பத்தி இல்ல நான் என்ன பண்ணுவேன் னு காட்டிடுவேன் அயித்தே !!அடக்கமா இருக்கணும் இல்ல அடக்கி வைப்பேன்" என்று எச்சரித்து விட்டு சென்றாள்.


'சூப்பர் தினமும் ஒரு மெகா சீரியல் பார்க்கலாம் போல' என்று எண்ணியபடி அங்கிருந்து சென்றான் அபி.


பாக்யாவோ ,சந்திரிகா மீதிருந்த கடுப்பை ராம்குமாரிடம் காட்ட சென்றார்.


சந்திரிகாவோ நிலவேந்திரனைத் தேடி சென்றாள்.


கார் ஷெட்டில் ஒரு நாற்காலியில் அமர்ந்து காலை தூக்கி அங்கிருந்த தூணின் மீது வைத்திருந்தான்.


அவனது கண்களை மூட திடுக்கிட்டவனோ ,சிலிர்த்து எழ பெண்ணவள் தடுமாறி பின்னே சென்றாள்.


"மாமா பயந்துட்டியா நான் தான்!!" என்றதும் அவனது முகம் பெரிதாய் விரிந்தது மகிழ்ச்சியில்


"ஹேய் மித்து !! நீ எப்படி இங்க...? உங்க அம்மா எப்படி விட்டுச்சு?" என்று ஆச்சரியத்துடன் கேட்டவனை, சங்கோஜமாக பார்த்து விட்டு ,"உன்னைப் பார்க்க உன் கூடவே இருக்கணும் னு இங்க படிக்க வர்றதா சொல்லி வந்தேன் மாமா" என்று உண்மையை ஒப்புக் கொண்டாள்.


"ஆனா இங்க... ?"


"இது என் மாமா அதாவது ராம்குமார் மாமா எங்கம்மாவோட தம்பி தான் மாமா "என்றாள் விளக்கமாக


"ஓஓஓ !! சரி இத்தனை நாளும் தெரியலைப் பாரு... சரி இங்க வர்றதை எங்கிட்ட சொன்னியாடி நீ "என்று முறுக்கிக் கொண்டான் நிலவேந்திரன்.


"உனக்கு சாக்கு குடுக்கலாம் னு வந்தேன் மாமா நீ இல்லாம எனக்கு அங்க பிடிக்கவே இல்லை அதான் வந்தேன் அத்தையோட தொணைக்கு சீனிச்சாமியை விட்டு வந்திருக்கேன் "என்றாள்.


"சரி வா சாப்பிடலாம் "என்று அழைக்க அவனோ முழுதாக பார்த்தாள் சங்கமித்ரா.


"மாமா ஆளே மாறிப் போயிட்ட ,தாடியைக் காணலை "என்று அவனின் கன்னம் கிள்ளப் போக மிகச் சரியாக வந்து நின்றாள் சஜித்ரா.

"ம்ம்ம்க்கும் "என்று செருமியபடி நின்ற சஜியை ,சட்டென திரும்பி முறைத்தாள் சந்திரிகா.


"நான் வெளியே போகணும் வண்டியை எடு "என்று சொல்ல புசுபுசுவென்று கோபத்தில் சிவந்திருந்தது சங்கமித்ராவின் முகம்.


"ஏன் உனக்கு வண்டி ஓட்டத் தெரியாதா? என் மாமா தான் வரணுமா ?"என்றாள் கோபமாக


சஜித்ரா ஒரு நக்கல் பார்வை பார்த்துவிட்டு," ஏன் உன் மாமா சொல்லலையா எனக்கு ..."எனும் போதே இடை வெட்டியவன்," நீ போய் கார்ல வெய்ட் பண்ணு வரேன்" என்றான் அவளை முறைத்தபடி.


"மாமா!!" என்று திரும்பிய சங்கமித்ராவிடம்," நான் வந்து பேசுறேன் சரியா நீ ஓய்வெடு "என அவளின் கன்னம் தட்டி விட்டு சென்றான்.



சங்கமித்ராவோ," இவளுக்கு டிரைவர் வேலை பார்க்கவா வந்தாரு" என்று உள்ளூர குமைந்தாள் .


.... தொடரும்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top