இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

உந்தன் மறுபாதி நானாகிறேன் - கதைத் திரி

Status
Not open for further replies.
வணக்கம் நண்பர்களே...
"உந்தன் மறுபாதி நானாகிறேன்" கதையின் மூலம் நானும் சாரல் குடும்பத்தின் ஒருவராக இணைந்துள்ளேன்... கதையை வாசித்து உங்களது கருத்துகளை பதிவிட்டால் என் எழுத்துக்களை மெருகேற்றியவாறே தொடர்ந்து உங்களை சந்தோஷிப்பிக்க ஊக்கமாக அமையும்...
இன்று முதல் "உந்தன் மறுபாதி நானாகிறேன்" பதிவிடத் தொடங்குகிறேன்... முன்னர் எழுதிய கதையைப் போல இதுவும் ஒரு பேராசிரியர் - மாணவி கதைதான்... ஆனால் முகம் சுளிக்காத வகையில் எதார்த்தம் மீறாத வகையில் கண்ணியமாக தர இருக்கிறேன்.. ஒரு தேக்கரண்டி நட்பு, ஒரு தேக்கரண்டி பாசம், ஒரு தேக்கரண்டி துரோகம், ஒரு தேக்கரண்டி சமூக அக்கறை, சில பல தேக்கரண்டி நகைச்சுவை, சில பல தேக்கரண்டி காதல், ஒரு தேக்கரண்டி ரொமான்ஸ் என அனைத்தையும் தேவையான அளவில் சேர்த்து இந்த டிஷ்ஷை உங்களுக்கு சமர்பிக்க ஆசை கொள்கிறேன்... படித்துவிட்டு உங்களது கமெண்ட்ஸ் கூறுங்கள்..

திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் அத்தியாயம் பதிவிடப்படும்... தினமும் பதிவிட ஆசைதான்.. இருப்பினும் பணிச்சுமையால் மூன்று அத்தியாயங்கள் மட்டுமே பதிவிட இயலும்.. ஒருவேளை நேரம் அதிகமாக கிட்டினால் மூன்றிற்கும் அதிகமான அத்தியாயங்கள் பதிவிடுகிறேன்...

உங்கள் தொடர் ஆதரவை எதிர்பார்க்கிறேன்..

முதல் அத்தியாயம் இன்னும் சில மணித்துளிகளில்...
 
Last edited:
"உந்தன் மறுபாதி நானாகிறேன்" கதைய சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நீக்கப்பட்டிருக்கிறது டியர்ஸ்... விரைவில் ரீரன் செய்கிறேன்.. அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!!
 

உந்தன் மறுபாதி நானாகிறேன் – 1

“காலமே நீ எழுந்து கடவுளைத் துதி நன்று... காலதாமதம் நன்றன்று என் மனமே...” என அந்த மகளிர் விடுதியின் அறையில் ஐந்தரை மணிக்கு அலாரம் ஒலியின்வழி டி.ஜி.எஸ்.தினகரன் பாடிய ஓசைகேட்டு விழித்துக் கொள்ள வேண்டியவள் துயில் கலைந்தாளோ இல்லையோ அந்த விடுதி அறையின் எஞ்சிய நால்வரும் துயில் க(தொ)லைத்து விட்டிருந்தனர். ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவியர் நால்வரும் அந்த அறையின் ஜீவராசிகள்.

“எடே... கொஞ்சம் அலாரத்தை ஆஃப் பண்ணு டே..” என முணுமுணுத்த செல்வி மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தனது மெல்லிய உடலை சுருட்டிக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள்.

சோபியா இடியே விழுந்தாலும் விழித்துக் கொள்ளும் ரகமல்ல; எனவே இந்த சத்தமெல்லாம் அவளைப் பெரிதும் சலனப்படுத்தவில்லை. வெகுசவுகரியமாக ஒற்றைத் தலைகாணியில் தலை வைத்து மற்ற தலைகாணியில் காலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

தர்ஷினிதான் அந்த அலார சத்தத்தில் சுவிட்ச் போட்டதைப் போல விழித்துக் கொண்டிருந்தாள். சிட்டி ரோபோ போல ஆடாமல் அசையாமல் எழுந்திருந்தவள், இரண்டு கைகளையும் தேய்த்து கண்களில் அப்பிக்கொண்டு இடது கையைப் பார்த்து கண்விழித்தாள். “காலையில் இடது கையில முழிச்சா நல்ல நாளா அமையுமாம்..” என யாரோ எப்போதோ கூறியதை இப்போதுவரை கடைபிடிக்கிறாளாம்.

இங்கே இத்தனை நிகழ்ந்தும் ‘எழுந்து கொள்ளவா? வேண்டாமா??” என தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் அனுஷா. மங்கிய கண்கள் தூக்கம் வேண்டி கெஞ்சி நிற்க, கடமைகளோ “கட்டிக்கொள்..” என கைநீட்டி அழைத்து நின்றது.

பல கடமைகளை நிறைவேற்றி, நள்ளிரவு பன்னிரெண்டைக் கடந்த பின்னரே கண்மூடியிருந்தாள் அவள். இப்போது ஐந்தரைக்கு எழுந்து கொண்டால் மட்டுமே அடுத்தடுத்த வேலைகளுக்குள் புதைந்து கொள்ள முடியும். இல்லையேல் அந்த வேலைகள் அடுத்த நாளில் அணைக்கத் துடித்து ஆவலாக காத்திருக்கும்.

வெகு கடினப்பட்டு கண்களைத் திறந்தவள் தட்டுத்தடுமாறி கழிப்பறை சென்று காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வருகையில் மீண்டும் கட்டிலே கட்டிக்கொள்ள அழைத்தது. அதற்குள் தர்ஷினி கட்டிலை விட்டிறங்கி, முகத்தை கழுவிவிட்டு உடற்பயிற்சி செய்யத் தொடங்கியிருந்தாள்.

கண்களைக் கசக்கியவாறே அமர்ந்த அனுஷா, “தர்ஷினி... நீங்க எக்ஸர்சைஸ் பண்ணிட்டு ஒரு ஆறு மணிக்கு என்னை எழுப்புறீங்களா??” என கரகரத்தக் குரலில் கேட்க, “சரிடே... நீ தூங்கு.. நான் எழுப்புறேன்...” என சம்மதித்தாள் அவள். ஆனால் அவளது பேச்சிற்கு பின்பாட்டு போல, “ம்ம்க்கும்... யாரோ டெய்லி சீக்கிரமா எழுந்து எக்ஸர்சைஸ் பண்றேன்னு சொன்னாங்க...” என கண்களை மூடியவாறே பேசினாள் செல்வி.

“செல்வி... இல்லப்பா... அது வந்து.. நேத்து ராத்திரி...” என அனுஷா கூறுவதெல்லாம் அவள் காதுகளில் விழுந்தால் தானே?! எப்போதோ தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்க, “நீ தூங்கு...” என தர்ஷினி கூறுவதற்குள் அனுஷாவும் அந்த வேலையை செவ்வனே செய்யத் தொடங்கியிருந்தாள்.

அசதியாகப் படுத்துக் கொண்ட அனுஷாவைப் பார்க்கையில் தர்ஷினிக்கு சற்றே பாவமாகத்தான் இருந்தது. “சரி... அவரவர் தலையெழுத்து... நாம என்ன செய்ய முடியும்...” என தனக்குள்ளாகவே பேசிக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வேலையைத் தொடர்ந்தாள்.

அனுஷா என விளிக்கப்பட்டு நம்மால் இக்கதையின் நாயகி எனப் பிரகடனப்படுத்தப்படப் போகும் இவளது அன்றாட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அதிகாலை ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்து, ஒருவாறாக ஆறுமணிக்கு விழித்துக் கொள்பவள், ஆறரை மணிக்குள் குளித்துவிட்டு வேகமாக அந்த விடுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் தட்டச்சு பள்ளிக்குள் நுழைவாள்.

அவளுக்கு முன்பதாகவே வந்திருந்த ஐந்தரை மணி பேட்ச் மாணவிகள் அவளை சோம்பேறியை பார்ப்பதைப் போல பார்த்தால், “சாரிடா.. நைட் தூங்குறதுக்கு நேரமாகிடுச்சு... நாளைக்கு கொஞ்சம் முன்னாடியே வர்றதுக்கு ட்ரை பண்றேன்..” என்பதுதான் தினமும் அவள் செட் செய்துவைத்திருக்கும் டெம்ப்ளேட் எக்ஸ்க்யூஸ்.

அதன் பிற்பாடு ஐந்தரை பேட்ச் மாணவிகளுக்கு வருகைப் பதிவேட்டை முடித்துவிட்டு ஆறரை பேட்ச் மாணவிகளை தட்டச்சு இயந்திரங்களில் அமர வைத்து, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து, வருகையை பதிவு செய்து நிமிர்ந்து கிடைக்கும் இடைவேளையில் தனக்கான ஏதாவதொன்றை நிறைவேற்றிக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தால், மிகச்சரியாக, “அக்கா... என் மெஷின்ல a சரியா அடிக்க மாட்டிக்குது...” என எவராவது அழைத்து விடுவர்.

கிட்டத்தட்ட எட்டு மணிவரை இதே நிலைதான். ஏற்கனவே தன்னுடன் சீப்பு, ஜடைமாட்டிகளை அவ்விடம் எடுத்து சென்றிருப்பாள் பெண்ணவள். அங்கேயே நின்று அவர்களை கண்காணித்த வண்ணமே சிகையை வாரி, துப்பட்டாவையும் குத்திக்கொண்டு எட்டரை மணிக்கெல்லாம் அனைவரையும் அனுப்பிவிட்டு அந்த அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு, மின்விசிறிகளை அணைத்து, கதவை அடைத்துவிட்டு அறைக்கு ஓடிவர வேண்டும்.

அரக்கப்பரக்க காலை உணவை உண்டுவிட்டு கல்லூரிக்கு ஓடினால் அங்கே அவளுக்கான அன்றாட வேலைகள் காலில் சக்கரத்துடன் அவள் மீதேறிக்கொள்ள தயாராக இருக்கும். அதை முடித்து நிமிர்ந்தால் இரண்டு மணியைக் காட்டும் கடிகாரம்.

வேகமாக விடுதிக்கு ஓடி, மதிய உணவை முடித்துவிட்டு வந்து மீண்டும் வேலைக்குள் மூழ்கி நிமிர்ந்தால் ஐந்தரையாகிவிடும். விடுதி திரும்பி ஒருமிடறு தேநீரை அருந்துவதற்குள் நேரம் மாலை ஆறு என சுட்டி, அடுத்த சுற்று தட்டச்சு வகுப்பிற்கு நினைவூட்டிவிடும்.

இடையில் கிடைக்கும் அரைமணி நேர இடைவேளையில் குளித்துவிட்டு, துணிகளை துவைத்து, இரவு உணவையும் முடித்திருப்பாள். பத்து மணிக்கு வகுப்பு முடித்து அறைக்கு வந்தால் “எப்போடா தூங்குவோம்?!” என ஏங்கித் தவிக்கும் உடல். ஆனால் அப்படி உறங்கிவிட்டால் கடமைகளை எவர் செய்வது? எனவே தூக்கத்தை தூரம் தள்ளிவிட்டு ஒரு மணி வரை பணிபுரிந்து உறக்கத்தை தழுவுவாள். பின் மறுநாள் காலையில் இதுகாறும் நான் விவரித்த விஷயங்கள் வரிசையில் வந்து நின்றுகொள்ளும்.

இதுதான் அனுஷாவின் நடவடிக்கைகள்; அனுஷாவின் நடவடிக்கைகள் இதுதான்; அவளைப் பற்றிய விவரிப்புகள்தாம் இவை. யார் எவரென்ற அறிமுகம் இப்போது தேவையிருக்காது என எண்ணுகிறேன்.

உடற்பயிற்சி செய்துமுடித்த தர்ஷினி தன்னை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் அவளது கணவன் வீடியோ காலில் அழைத்துவிட்டான். “ஹலோ சேட்டா...” என தொடங்கியவள் அரைமணி நேரத்தை அவனுடன் கதைத்தலில் தொலைத்துவிட்டாள்.

என்ன?! தர்ஷினிக்கு கல்யாணமாகிருச்சா?? என்னும் வினா ஒருவேளை சிந்தைக்குள் உதித்திருக்குமாயின், ‘தர்ஷினி திருமணமானவள், செல்வியும் திருமணமானவள்’ என பதிந்து வைத்துக் கொள்ளலாம். சோபியா மட்டும் ‘முரட்டு சிங்கிள்’ என அவ்வவ்போது ஸ்பீக்கர் வைக்காத குறையாக கூவிக்கூவித் தெரிவிப்பாள்.

பேசிக்கொண்டிருக்கையில் தான் அனுஷாவிற்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வர, விரைவாக எழுந்துசென்று அவளை உலுக்கினாள். “அனுஷா... மணி ஆறரை...” என.

அன்றாட செயலான தட்டச்சு வகுப்பிற்கு சென்றுவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்புகையில் குளிப்பதற்காக வரிசையில் இடம்பிடித்து வைத்திருந்தனர் அறைத்தோழிகள்.

நெடுநேரம் குளிப்பது அனுஷாவிடமிருக்கும் கெட்டப்பழக்கங்களுள் ஒன்று. “எவ்ளோ நேரம்டி குளிப்ப??” என தோழியரும், “உன் வாழ்நாளில் நான்கில் ஒரு பங்கு நேரத்தை குளிக்கிறதுலதான் செலவழிக்கிற...” என அவளது தாயாரும் கேலிசெய்தாலும் அதன் பின்னதான காரியம் ஒன்றே ஒன்றுதான்; அவளது சிந்தனை சிறகடிப்பதும் அங்கேதான்.

ஒருநொடியும் ஓய்வில்லாத ஓட்டத்தில் இருப்பவளுக்கு அமைதியான இடம் அதுவன்றோ?! தனிமையில் சிந்திப்பதற்கும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும் அவளளவில் குளியலறையைப் போன்றதொரு சிறந்த தலமும் பிறிதில்லை.

முதலில் அரிசிமாவால் அபிஷேகம் செய்து, பின்னர் மஞ்சள் நீராடி, அதன் பிற்பாடு வழலை கொண்டு வழித்தெடுத்து, இறுதியாக ஆரஞ்சு ஆயிலை பூசிக்கொண்டு அறைக்குத் திரும்புகையில் ஆவி பறக்க காலை உணவு தயாராக இருக்கும்.

விடுதியில் உணவை அறைக்கு எடுத்து செல்வதற்கு அனுமதியில்லை என்றாலும் அனுஷாவிற்காக சிரத்தையெடுத்து உணவை கடத்தி வந்திருப்பர் உடனுறை தோழிகள்.

“தேங்க்ஸ்ப்பா... எனக்கு ஒவ்வொரு தடவை ஹெல்ப் பண்ணும்போதும் தர்மசங்கடமா இருக்குது... நான்தான் போய் சாப்பிட்டுக்குவேனே...” என தினமும் உடைந்த ரெக்கார்டு போல அவள் மொழிந்தாலும், அவர்களோ நிறுத்தியபாடில்லை.

“நிக்காம ஓடிட்டு இருக்கிற... நாங்க சாப்பிட்டு வர்றப்போ கூட ரெண்டு இட்லியை எடுத்துட்டு வர்றதில ஒண்ணும் ஆகிடாது... நீ பொறுமையா உக்கார்ந்து சாப்பிடு...” என்பது அவர்கள்தரப்பு வாதம்.

அமைதியாக அமர்ந்து உண்ணுகையில் அவளுக்காக பையைத் தயார் செய்து வைத்துவிடுவதும் அவர்கள் அவள்பால் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடே. சமயங்களில் அவள் தலைவார சிரமப்பட்டாலும் தயக்கமின்றி உதவும் மனப்பான்மையிலேயே இருந்தனர் மூவரும்.

அனைத்தையும் பார்க்கையில் அனுஷாவின் கண்களில் கண்ணீர் தழும்பும்; “இவ்ளோ நல்ல ரூம்மேட்ஸ் எனக்குதான் கிடைச்சிருக்குறாங்க...” என மனம் கர்வம் கொள்ளும்.

இன்றும் அவள் கண்களில் கண்ணீர் தழும்பி நின்றது. அதற்கு காரணமும் அவர்கள் மூவர்தான். ஆனால் காரியம்தான் அதுவல்ல.

வழக்கமாக வகுப்பு முடித்துவரும் வந்தவள் குளிப்பதற்காக செல்வதற்குள் வேண்டுமென்றே அவளுக்கான குளியலறைக்குள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நுழைந்திருந்தாள் சோபியா.

“சோபி... சொல்லிட்டு போயிருக்கலாம்ல... என் பக்கெட் வெளியே இருந்துச்சே!! இன்னைக்கு நான் சீக்கிரமா காலேஜ் போகணும்...” என வெளியிலிருந்து அழாத குறையாக அனுஷா பேச, உள்ளிருப்பவளோ எவ்வித மறுமொழியுமின்றி தன் வேலையைத் தொடர்ந்திருந்தாள்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவள், “ச்சே...” என தனக்குள் சலித்துக் கொண்டவாறே, “பேசாம சாப்பாடு எடுத்து வச்சிட்டு குளிக்க வருவோம்.. அதுக்குள்ள சோபியா குளிச்சிடுவாங்க...” என அந்த வேலையை முடித்துவிட்டு வர, இன்னும் சோபியா உள்ளிருந்து வரவில்லை.

“சோபியா... எவ்ளோ நேரமாகும்??” என ஆறாவது முறையாக கேட்டபின்னரே, “இன்னும் ஒரு அரைமணி நேரம்..” என பதில் வந்தது. கோபத்தின் உச்சத்திற்கே சென்றவள், “சரி.. ஒருநாள் குளிக்காம போனா ஒண்ணும் ஆகிடாது... சாப்பிட்டுட்டு கிளம்புவோம்...” என மீண்டும் அறைக்குத் திரும்புகையில் அறையில் வைக்கப்பட்டிருந்த உணவில் எண்ணெய் கொட்டியிருந்தது.

“யாருப்பா இது?? ப்ளேட்ல எண்ணெய் எப்படி வந்துச்சு??” என உச்சக்கட்ட விரக்தியில் வந்து விழுந்தன வினாக்கள். “ஏடே... சாரிடே... தலைக்கு எண்ணெய் வைக்கிறதுக்காக எடுத்தேன்.. தெரியாம கொட்டிருச்சு...” என வாரினாள் அன்று தலைக்கு குளித்து எப்போதோ தலைவாரிவிட்டிருந்த செல்வி.

இயலாமையுடன் தர்ஷினியைப் பார்க்க, அவளோ தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதைப் போல தயாராவதில் மும்முரமாக இருந்தாள்.

தன் விதியை எண்ணி நொந்துகொண்ட அனுஷா அமைதியாகத் தயாராகிக் கொண்டிருக்கையில் உள்ளே வந்த சோபியா மேஜையில் வைத்திருந்த அவளது துப்பட்டாவை எடுத்து தரையிலிருந்த ஈரத்தை துடைக்க முற்பட்டாள்.

“சோபியாஆஆ...” என அனுஷா கத்தியபின்னரே, இயல்பாக பார்ப்பதைப் போல பார்த்தவள், “ஹையோ சாரி அனுஷா.. நான் ஏதோ வேஸ்ட் க்ளாத் போலன்னு நினைச்சிட்டேன்...” என வெகு சாதாரணமாகக் கூறிவிட்டு தன் பணிகளை பார்க்கச் சென்றுவிட்டாள்.

காலையிலிருந்து அடுக்கடுக்காக நேரும் காரியங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியில்லை அனுஷாவிடம். ஏற்கனவே வேலைகள் வரிசைகட்டி நிற்க, புதிதாக இந்த பிணக்குகளும் சேர்ந்து கொண்டதில் அயர்ச்சியாக உணர்ந்தாள்.

“இங்கே பாருங்க... எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு.. நீங்க டூ மச்சா பிஹேவ் பண்றீங்க... இந்த பதினைஞ்சு நாளா நான் கவனிச்சிட்டு தான் இருக்கிறேன்... சாப்பாட்டுல தண்ணி கொட்டறீங்க, எண்ணெய் கொட்டறீங்க... என் சீப்பை ஒளிச்சு வைக்கறீங்க... டிரெஸ்ஸ அழுக்காக்குறீங்க... நானும் அமைதியா போகலாம்ன்னு பார்க்கிறேன்... நீங்க மேலும் மேலும் ஓவரா பண்றீங்க... இதோட எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிக்கோங்க.. அதுதான் எல்லாத்துக்கும் நல்லது...” என அவள் தன் கீச்சுக்குரலால் கத்திக் கொண்டிருக்க, அங்கே எவரும் கவனித்திருக்கவில்லை; தத்தமது வேலைகளில் மூழ்கிவிட்டிருந்தனர்.

பொறுமையிழந்தவள், “இப்போ என்ன... நான் இங்கே இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலை.. அவ்ளோதான... ஓகே... நான் வேற ரூம் போய்டறேன்...” என முடிப்பதற்குள் செல்வி முந்திக் கொண்டாள், “ஹாஸ்டலை விட்டே போ...” என.

அனுஷா எடுத்ததற்கெல்லாம் அழும்ரகம் என்றாலும் செல்வியின் பேச்சில் ஒருவித அதிர்ச்சியடைந்தாள்.

“என்ன?? ஹாஸ்டலை விட்டுப் போகவா?? வாட் டூ யூ மீன்?? எனக்கொண்ணும் நீங்க ஃபீஸ் கட்டலை...” எனக் கூறத் துடித்த உதடுகளை சிரமப்பட்டு அடக்கியவள், அவர்களை காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, “உங்களோட பேசி பிரயோஜனமில்ல... நான் காலேஜ் போறேன்...” என பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள்.

“ஏன் இவங்க இப்படி பண்றாங்க?? நல்லாதானே இருந்தாங்க?! திடீர்னு ஒரே நாள்ல தலைகீழா மாறுற அளவுக்கு நான் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன்?!” என தனக்குள் சிந்தித்தவாறே நடந்து கொண்டிருக்கையில் எதிரில் வந்த கார் அவளை உரசுவது போல நெருங்கி வர, அனிச்சையாக விலகினாள்.

“இடியட்...” எனத் திட்டியவாறே, திரும்பிப் பார்க்கையில் காரின் பின்புறத்தில் ‘இனியன்’ என எழுதப்பட்டிருந்தது.
தொடரும்...


அடுத்த அத்தியாயம் - வெள்ளிக்கிழமை...

கதையைப் பற்றிய உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள...
 
Status
Not open for further replies.
Top