இருள் நிழலாய் நானே 4
"லட்டு..."
"நான் தூங்கிட்டேன்." அதி விரைவில் வந்திருந்தது அவளிடமிருந்து வார்த்தைகள்.
ஒரு நாளில் அதீத நெருக்கம் காண்பித்து அவனை திணறடிக்கின்றாள். இதழ் பிரியாது புன்னகைத்துக் கொண்டான்.
சமர் அவளை தீண்டிடாது மெத்தைக்கு உள் சென்று சுவற்றோடு ஒண்டி படுத்த கணம், அவன் விட்ட இடைவெளியை முற்றும் முழுதாக போக்கியிருந்தாள் மகிழா.
"லட்டும்மா..." மூச்சின்றி திக்கி அழைத்தான்.
அவனது மார்பில் தலை வைத்து வயிற்றில் கையிட்டு அணைத்து நெருங்கியிருந்தாள்.
"சும்மா லட்டு பட்டுன்னு சொல்லிட்டு இருக்காம தூங்குடா..." என்று அதட்டியவள் என்றுமில்லாது இன்று உடனே உறங்கியிருந்தாள்.
அவனது நிலைக்கு வேண்டிய நெருக்கம். ஏனோ இயல்பாய் அவனால் ஏற்க முடியவில்லை. முறைப்படி எதுவும் வேண்டுமென நினைத்தது அவனின் மனம். அவள் அதிலெல்லாம் மிகத் தெளிவு தான். எல்லாம் சரியாக செய்துவிட்டே நெருக்கம் கொள்கிறாள். அவனுக்குத்தான் தெரியவில்லை.
நிமிடங்கள் கழிய தானாகவே அவனது கரங்கள் தன்னவளை அணைத்திருந்தது. தூக்கத்திலும் காதலாய் அவனளித்த முதல் அணைப்பை உணர்ந்தாளோ தன்னைப்போல் "லவ் யூ அத்து" என்று அவன் மார்பின் மீது அழுந்தியிருந்த தன்னுடைய கன்னத்தை தேய்த்திருந்தாள்.
'ஒரே நாளில் காலி பண்ணிடுவா போல...' மகியின் தலையில் செல்லமாகத் தட்டியவன் மெல்ல தானும் உறங்கிப்போனான்.
விடியலுக்கு முன்னவே எழுந்து தயாராகிய மகி, முழு அலங்காரத்தில் வந்து சமரை எழுப்பினாள்.
"லட்டு இன்னும் கொஞ்ச நேரம்" என புரண்டு படுத்தவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள். துள்ளி குதித்து எழுந்து அமர்ந்தான்.
"எதுக்குடி இவ்ளோ ஸ்பீட்... அத்தை மாமாகிட்ட" என்று கண்களை தேய்த்து மிச்ச தூக்கத்தை விரட்டி கண் திறந்தவனின் வார்த்தைகள் மகி தன் முன் நிற்கும் கோலத்தில் பாதியிலேயே தடைபட்டது.
"மகி... என்னடி லட்டு இது?" என்றவனிடம், "நமக்கு கல்யாணம் டா" என கட்டிலிலிருந்து அவனை இறக்கி குளியலறைக்குள் தள்ளினாள்.
"அத்தை மாமாக்கு சொல்ல வேண்டாமா?"
"அதெல்லாம் சொல்லியாச்சு."
"எதே!"
"ம்ம்..." என்றவள் அவனுக்கான பட்டாடையை எடுத்து வைத்தாள்.
"ரூபேஷ்?"
"எல்லாம் நேத்தே பேசி கன்வீன்ஸ் பண்ணிட்டேன். ரூபேஷ் ஓகே தான். அவன் அக்செப்ட் பண்ணிப்பான்னு நானே எதிர்பார்க்கல" என்றாள்.
"ஹோ..."
"சாருக்கு சந்தோஷம் இல்லையா?"
முகம் சுருக்கி கேட்டவளை சுண்டி இழுத்து தனக்குள் இறுக்கியிருந்தான் சமர்.
"இதுக்காக எத்தனை வருஷம்..." என்ற சமர் அவளின் கன்னம் பற்றி, நெற்றி முட்டி, "லவ் யூ டி லட்டு" என்றான்.
"நானும்" என்றவள், "இப்படியே இருக்கணும்னா, நமக்கு கல்யாணம் ஆகணும் அத்து. சீக்கிரம் ரெடியாகு" என பிரிந்தாள்.
"ரொம்ப வேகம் தான்."
"ஒரு நாளுக்கே தவிப்பா இருக்கு. நீ எப்படிடா இத்தனை வருஷமா உள்ளுக்குள்ளே?" எனக் கேட்டாள்.
மென் முறுவல் மட்டுமே அவனது பதிலாக.
சமரின் பார்வை அதீத ரசனை கொண்டு தீண்டியது தன்னுடைய மகிழாவை.
அப்பட்டமான காதல் சிந்தும் பார்வை.
மூர்ச்சையாகும் மாயம் அவளுள்.
ஒற்றை பார்வையில் கொட்டிக்கொடுத்து கொள்ளையடித்திட நினைத்திட்டான் போலும்... வஞ்சனையின்றி நேசத்தை விழிவழி தன்னவளின் அகம் சேர்ப்பித்தான்.
"முழுங்காதடா... தாலி கட்டு. மொத்தம் உனக்கு தான்" என்றவள் முயன்று சமர் முன் திடமாக நின்றாள்.
"தேன்க்ஸ்டி லட்டு..."
"எதுக்காம்?"
"எல்லாத்துக்கும்... உன்னோட இந்த வேகம் கூட எனக்காகன்னு தெரியுது" என்றவன், "எப்பவும் என்னைவிட்டு மட்டும் போயிடாத" என்றான். அவனுக்கே இறுதியாக சொன்னது என்னவோ போலிருந்தது. அவனே போயிடு என்றாலும் அவனைவிட்டு அவள் ஒரு அடி கூட விலகி வைத்திடமாட்டாள் என்பது தெரியும். பிறகு ஏன் சொன்னோமென்று அவனுக்கே தெரியவில்லை. தானாக வந்துவிட்டிருந்தது.
"போகவே கூடாதுன்னு தான் ஏசிபியை கட்டிகிட்டு கூடவே வச்சிக்க பிளான்... நீ போ சொல்லாம இருந்தா சரி" என்றவள், "எனக்கே தெரியல அத்து. உன்மேல இவ்ளோ லவ் எனக்குள்ளவா இருந்துச்சு, இருக்குன்னு மலைப்பா இருக்கு. அவ்ளோ ஃபீல் பண்றேன்" என்றதோடு "இன்னைக்கு மட்டும் தனியா குளிச்சிட்டு வா" என்று குறும்பாய் கண்ணடித்தாள்.
"தாலி கட்டிட்டு உன்னை பார்த்துக்கிறேன்... வாலு" என்று நகர்ந்தவன், அடுத்த சில நிமிடங்களில் மாப்பிள்ளையாக தயாராகி இருந்தான்.
ரேவதியும், சுந்தரும் சமர் வீட்டிற்கு வந்து அவனது தாய், தந்தை படத்திற்கு முன்பு மகியை விளக்கேற்றக்கூறி, வணங்கி கோவிலுக்கு சென்றனர்.
அங்கு ரூபேஷின் குடும்பமும் வந்திருந்தது.
அவர்களைக் கண்டதும் தான் சமருக்கு தங்களின் காதலால் ரூபேஷ் காயப்பட்டுவிட்டானோ என்கிற வருத்தம் நீங்கியது.
சீனு, மணி, சித்ராவும் வந்திருந்தனர்.
இருவரின் வாழ்வும் மலர வந்திருந்த உறவுகள் மட்டும் போதுமானதாக இருந்திட,
குறிப்பிட்ட சொந்தங்களின் நிறைவான ஆசியோடு சமர் மகியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்.
___________________________
ரேவதிக்கும் சுந்தருக்கும் அளப்பரிய மகிழ்வு. மகளின் திருமணம் தங்கள் ஆசைபட்டவனுடன் நடந்தேறியதில்.
ரூபேஷ் தங்கை மகனாக இல்லாவிட்டால், அவர்கள் மகியை கேட்டபோதே மறுத்திருப்பார். அத்தோடு மகிக்கும், சமருக்கும் அப்படியொரு எண்ணம் இல்லையென்றே ரூபேஷுக்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
நேற்று மதியம் போல் மகி வந்து சமரை லவ் பண்றேன் என்றதும் எவ்வித அதிர்வும் கொள்ளாது மகிழவே செய்தனர்.
சுந்தர் தன் தங்கை எப்படி எடுத்துக்கொள்வாள் என்றே பயந்தார். அதையும் மகியே பேசி சரி செய்திருந்தாள்.
ரூபேஷிடமே நேரடியாக, "உன்கூட என்னால் மனசு விருப்பத்தோட வாழ முடியாது. லேட்டா சொல்றதுக்கு மன்னிச்சிக்கோ" என்றிட, ரூபேஷின் அமைதி அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் தான்.
"விட்டுக்கொடுக்கிறது தான் காதல்" என்று திருமணத்தை நிறுத்தியிருந்தான்.
முதலில் செய்த ஏற்பாடுகள் எதுவும் வேண்டாமென்று மகி சொல்லியதையும் அவளின் பெற்றோர் ஏற்றுகொள்ள, எளிமையாக நிறைவாக தன்னுடைய அத்துவை தனது வாழ்வில் பிணைத்துக் கொண்டாள்.
"சந்தோஷமா வாழனும் மகி."
இருவரின் அன்பும் தெரியும். சிறு வயது முதல் பார்க்கின்றனர். வேறென்ன சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை.
எட்டு மணி வரை சமர் வீட்டில் இருந்த ரேவதி, சுந்தர் பிள்ளைகளின் சந்தோஷத்தை மட்டுமே வலியுறுத்தி எதிர் வீடான தங்களின் இல்லம் சென்றனர்.
"நீ ரூம் போ அத்து. நான் கேட், டோர் எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு வரேன்."
இரு தினங்களாக அவளிடமிருந்த வேகம் தற்போது இல்லை. இன்றைய நாளுக்கான பதட்டம் அவளின் வேகத்தை வெகுவாக குறைத்திருந்ததோ.
தன் முகம் பாராது அவள் சொல்லியதில், ஓசையின்றி சிரித்துக் கொண்டான்.
"நான் இங்கேயே நிக்கிறேன். நீ வா" என்று மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளின் தடுமாற்றத்தை அழுத்தமாக ரசித்தவனாக நின்றுவிட்டான்.
மகி சென்று அனைத்து கதவுகளையும் பூட்டி வர, சமர் அறைக்குள் நுழைந்தான். அவன் பின்னோடு அவளும்.
சட்டென்று சமர் திரும்பிட...
விரல்களை பிசைந்தபடி பார்வையை தரை பதித்து வந்த மகி, அவனது மார்பில் முட்டி, சடுதியில் இரண்டடி பின் தள்ளி நின்றாள்.
"என்ன மேடம்... கண்ணுல பயம் தெரியுது?" ஒற்றை புருவம் ஏற்றி இறக்கினான்.
விழிகளில் ரசனை பற்ற, தலையை உலுக்கி சமன் செய்தவள்...
"அப்படிலாம் ஒன்னுமில்லை. தள்ளுடா" என்று அவனை தள்ளிவிட்டு கட்டிலில் ஏறி சுவரை ஒட்டி படுத்துக்கொண்டாள்.
"என்னடி படுத்துட்ட?"
"இப்போ வேறென்ன பண்ணுவாங்க?" மகி கண்களை திறக்கவும் இல்லை. அவளும் அவன் பக்கம் திரும்பவும் இல்லை.
"பால் கொண்டு வரல?"
"எதுக்கு?" வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
"நேத்து கேட்டியே... அது இன்னைக்கு நடக்கணும்ல!" கண்கள் சொக்கி சமர் கூறிட, அவளின் இமை குடை அகண்டு விரிந்தது.
"என்... என்ன கேட்டேன்...?" திக்கித் தடுமாறினாள்.
"அதை இவ்ளோ தூரம் இருந்திட்டா சொல்வாங்க" என்ற சமர், முதல் முறையாக அறையின் கதவை தாழிட்டிருந்தான்.
சிறு வயது முதல் இருவருக்கும் ஒரே அறையில் தான் உறக்கம். மகி அறையை தாழிட முயன்றாலும், சமர் இதுநாள் வரை தாழிட ஒப்புக்கொண்டதே இல்லை. அவனளவில் அவளுக்கு எவ்வித அசௌகரியமும் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திட்டான். அவனது கட்டுப்பாடுகளில் அவையும் ஒன்று.
இனி அவனது காதலுக்கோ அவனுக்கோ கட்டுப்பாடுகள் இல்லையே! இருப்பவற்றையும் தளர்த்திடவே செய்கிறான்.
"எதுக்கு இப்போ தாப்பா போட்ட நீ?"
"உனக்கு தெரியாதா லட்டு குட்டி?"
"ம்... ஹூம்... எனக்கு தூக்கம் வருது" என்றவள் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்துவிட,
"வாய் தான் உனக்கு" என்று மின் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் இடைவெளிவிட்டு படுத்தான்.
நிமிடங்கள் நீண்டது.
சமர் எதுவும் செய்யவில்லை. அதுவே அவளுக்கு அவஸ்தையையும், தவிப்பையும் கொடுத்தது.
எப்போதும் அவன் உறங்கும் வரை விளக்கு ஒளிரும். இன்று அவனே நிறுத்தியிருக்கிறான். காரணம் அவளுக்கா விளங்காது.
"அத்து..." அவளே அவனை நெருங்கி, கையினை கோர்த்துக் கொண்டாள்.
அவள் புறம் ஒருகளித்து படுத்த சமர், அவளது நெற்றியில் முத்தம் வைத்தான். அத்தனை சூடாக அவளுள் இறங்கியது.
"அத்து..." கிறங்கி ஒலித்தது குரல். தானாக உடல் சுருக்கினாள். பிடித்திருந்த கையில் அதீத அழுத்தம்.
"பயமா இருக்காடா?"
"ஒரு மாதிரி நெர்வெஸ் ஃபீல் அத்து."
"சரி தூங்கு" என்ற சமர் அவள் மீது கையிட்டு அணைத்தவாறு சில நிமிடங்களில் உறங்கியும் போனான்.
சமர் படுத்ததும் உறங்கிவிடும் காரணம், அவனின் பாதுகாப்பாக அவனவள் உடனிருக்கின்றாள் என்ற எண்ணம். அது உண்மையும் கூட.
எப்போதும் இடைவெளியில், பக்கத்து கட்டிலில் படுத்திருப்பவள், இன்று ஒரே படுக்கையில், அவன் கை பிடித்து நெருக்கமாக மனைவி எனும் பந்தம் சுமந்து உரிமையாய் படுத்திருக்கும் போது, இன்னும் திடம் வாய்க்கப் பெற்றிருக்குமே அவனது மனம்.
அவளுக்குத்தான் தூக்கம் தூரம் போனது.
மெல்ல கண் திறந்தவள், இரவு விளக்கு வெளிச்சத்தில் வரி வடிவமாக தெரிந்த சமரின் முகம் ரசித்திட்டாள்.
முன்னுச்சியில் தொடங்கிய மகியின் பார்வை, மெல்ல மெல்ல கீழிறங்கி அவனது மார்புச்சட்டை பொத்தானில் படிந்து, அவனது மூடிய விழிகளில் நிலைத்தது.
"செமயா இருக்க அத்து. கிஸ் பண்ணனும் போலிருக்கே" என்றவள், மூடிய கண்களில் அழுத்தமாக முத்தம் வைக்க, பட்டென்று அவளை இறுக்கி தனக்குள் இழுத்து அடக்கியிருந்தான் சமர்.
"தூக்கம் வருது சொல்லிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?" என்ற சமரின் பிடி மேலும் அழுத்தம் பெற்றது.
"செமயா இருக்கடா!"
"ஆஹான்..."
"என்னடா... என் புருஷன். நான் சைட் அடிக்கிறேன். கிஸ் அடிக்கிறேன். அதுக்கு மேலவும் பண்ணுவேன்" என்ற மகி அவனது கன்னத்தில் கடித்து வைத்தாள்.
"வேணாம் லட்டு... மொத்த லவ்வையும் காட்டினா தாங்கமாட்ட நீ" என்று தன் மார்போடு அவளை அழுத்தினான்.
மூச்சு முட்டிய போதும்,
"காட்டினா தான் தெரியும்... தாங்குவனா இல்லையான்னு" என்றாள். மிதப்பாக.
"என்னடி உசுபேத்துறியா?"
"ஆமா... இதுக்குமேல, உன்கிட்ட கண்ட்ரோல் பண்ண முடியல டா..." நெகிழ்ந்து ஒலித்தது ஓசை.
"லட்டு... என்னாலையும் முடியலடி" என்றவன், பூவிதழ் இரண்டையும் சுவைத்திட, அவளின் ஒற்றை கை விரல்கள் அவனது பிடரியில் அலைபாய, மற்றொரு கை விரல்கள் சட்டை பொத்தானை கழட்டியது.
அவனது சூடான பரந்த மார்பில், அவளின் சில்லென்ற விரல்கள் அம்பாய் தைத்திட, உயிருக்குள் ஊடுருவிய மின்னலில், இதழ் விடுத்து கழுத்தில் இறங்கியவனின் உதடுகள் தன்னவளை துடிக்க வைத்தது. அவள் துடித்த இடமெல்லாம் அவனது விரல்கள் பாதை அமைத்து இதழ் வழி பயணம் செய்ய, தன் தடத்தை அழுத்தமாக அவளுள் பதித்தான்.
"அத்து..." என்கிற அவளின் உச்ச குரலில், தன்னை மொத்தமாய் ஒப்புவித்து, தன்னவளை முழுதாய் தனக்குள் உள்வாங்கி, துவள செய்து தானும் துவண்டு, மடி தாங்கி, பாரம் இறக்கி, தன்னை உயிரில் அரவணைத்தவளை நெஞ்சம் தாங்கி மஞ்சம் சரிந்தான்.
"லட்டு..." இறுதி மயக்கமாக ஒலித்த சமரின் ஓசை, மகியின் மென்னிதழில் அமிழ்ந்து கரைந்து போனது.
சமரின் நெஞ்சில் தலை சாய்த்தவள்,
"வாவ் அத்து... யூ மெல்ட்டட் மீ. யூ டிரீட் மீ லைக் ஆன் ஏஞ்சல்" என்று சொல்லிட, அவனுக்கு இக்கணம் வேறென்ன வேண்டுமாம்?
"யூ ஆர் மை ஏஞ்சல் டி லட்டு" என்று இறுக்கி அணைத்திருந்தான்.
"ஓகேவாடா?", சமர்.
"எனக்கு... அச்சோவ் அத்து," என சிணுங்கியவள்,"சொல்லத் தெரியல அத்து. யூ ஆர் சோ சாஃப்ட்" என்று கணவனின் மார்பில் கடித்து "உனக்கு?" எனக் கேட்டிருந்தாள்.
"இன்னொரு..." என்று ஆரம்பித்து முடிவின்றி நிமிடங்கள் ஒருவரிடம் ஒருவருக்காக கரைந்து நீண்டது.
இருவரிடமும் காதல் மட்டுமே ஆட்சி செய்த கணங்கள் அவை.
_________________________
காலை முதலில் கண் விழித்த சமர், தங்களின் நெருக்கத்தின் நிலை உணர்ந்து, மந்தகாசமாகப் புன்னகைத்துக் கொண்டான்.
அவர்களுக்குள் நெருக்கம் புதிதல்ல... அமைந்திருக்கும் தருணம் அவர்களின் உறவில் மாறுபட்டது. முற்றிலும் புது அத்தியாயம் கொண்டு தொடங்கியிருந்தது.
"தேன்க் யூ டி லட்டு" என்று மனைவியின் உச்சியில் முத்தம் வைத்தவன், குளித்து முடித்து சமையலறை சென்று தேநீர் போட்டு எடுத்து வந்து மனைவியின் அருகில் அமர்ந்து எழுப்பினான்.
"லட்டு..."
"ம்ப்ச்... அத்து" என்று கண்களை சுருக்கியவள், அவனை இழுத்து படுக்க வைத்தவளாகக் கட்டிக்கொண்டு தூக்கத்தை சுகமாக தொடர்ந்தாள்.
சிறிது நேரம் உடன் படுத்திருந்த சமரும் நேரமாவதை உணர்ந்து,
"மகி எழுந்திரு. ஸ்டேஷன் போகனும்" என்றான்.
"போயிக்கலாம்" என்று அவனுக்கு இதழ் முத்தம் கொடுத்து தானே ஆரம்பித்து தன்னவனை முற்றுபெற வைத்திட்டே விட்டாள்.
"ராட்சசி" என்று விலகி படுத்தவன்,
"ஆபிஸ் போறியா?" எனக் கேட்டான்.
"போகனும் அத்து" என்று எழுந்து அமர்ந்தவள், சமரின் முகம் பார்த்திருக்க...
"என்னடி?" என்றான். சிறு புன்னகையோடு.
"உன்னை மிஸ் பண்ணியிருப்பேன்" என்று அவனின் நெற்றி முட்டியவள், "இவ்ளோ லவ் எப்படிடா?" எனக் கேட்டாள்.
"என்னோட லட்டு டி... என் மகி குட்டி" என அவளின் கன்னம் பிடித்து இழுத்தான்.
"அதான் என் கல்யாணத்துக்கு நீயே வந்து சம்மதிக்க வச்சியே!"
"அதான் இப்போ நமக்கு கல்யாணம் ஆகிப்போச்சுல..."
"காலத்துக்கும் சொல்லிக்காட்டுவேன்" என்றவள், அவனது மூக்கினை பிடித்து கடித்துவிட்டு வேகமாக குளியலறை சென்று மறைந்தாள்.
மகி வருவதற்குள் சமையல் செய்திருந்தான்.
"அத்து" என்ற அழைப்புக்கு ஓடி வந்திருந்தான். ஈர உடலில் துண்டினை மட்டும் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.
"ஸ்டேஷன் போகனும் மகி..." அவள் இருக்கும் கோலம் அவனை கிறங்க வைத்தது.
"ஆசைதான்..." என்று அவனது கன்னத்தில் இடித்தவள், "என் ட்ரெஸ் எல்லாம் அங்க வீட்டிலிருக்குடா" என்றாள்.
"ம்ம்" என்ற சமர், வேகமாக அவளை அணைத்து, கழுத்தில் முகம் புதைத்து, மனைவியின் உடல் தீண்டியிருந்த துளி நீர் பருகி சடுதியில் விலகி வெளியேறியிருந்தான்.
சமர் ரேவதியிடம் அவளது உடைகள் அடங்கிய பெட்டியை வாங்கி வரும் வரையிலும் அப்படியே உறைந்து நின்றிருந்தாள்.
"மகி..."
கணவனின் அழைப்புக்கு திடுக்கிட்டு விழித்து அசைந்தாள்.
"உன்னோட ட்ரெஸ்சஸ்" என்ற சமர், "இனி இங்கவே குக் பண்ணிக்கலாம் லட்டு. அத்தைகிட்ட சொல்லிட்டேன்" என்றான்.
"எனக்கு குக் பண்ண வராதே அத்து." ஆடை உடுத்தி வந்தவள் பாவம்போல் கூறினாள்.
"நான் இருக்கேண்டி பட்டு. பொண்டாட்டிக்கு சமைச்சு போடுறதைவிட வேறென்ன வேலை இருக்கு?" எனக் கேட்டவன், ஒவ்வொரு நொடியும் காதலை அவளின் பாதத்தில் கொட்டி அவளை திக்குமுக்காட வைத்தான்.
மகியும் அவனுக்கு போட்டியாய் காதலை காட்டிட... சந்தோஷம் ஒன்றை மட்டுமே கொண்டு நாட்களை கடத்தியவர்களின் மகிழ்வு போதுமென விதி நினைத்ததோ யாவும் சில மாதங்களில் முடிவுக்கு வந்திருந்தது.
சமர் மீது கொண்ட காதலிலும், நேசத்திலும், அத்தனை வேகம் காட்டியவள் அவனை விட்டுச் சென்றதிலும் வேகம் தான்.