அத்தியாயம் - 14
அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் நந்தனா.
எதிரில் இருந்த சுவரை சுற்றியது அவள் கண்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவளும், நிரஞ்சனும் தான் இருந்தார்கள், விதவிதமான புகைப் படங்களில்.
சிலவற்றில் மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு, சிலதில் மலர்ந்து சிரித்தபடி, புன்னகைத்தபடி, அணைத்தபடி, என்று பார்ப்பதற்கே அத்துணை அழகாக இருந்தது.
அவர்கள் வீட்டில் கூட இத்தனை புகைப்படங்கள் இல்லை. ஆனால், மகள், மருமகன் புகைப்படங்களால் வீட்டை நிறைந்திருந்தனர் அவளின் பெற்றோர்.
அங்கிருந்த புகைப்படங்களிலேயே அவளுக்கும் மிகவும் பிடித்தது, நிரஞ்சனின் தங்கை நிவேதா வீட்டு விஷேசத்தில் எடுத்த புகைப்படம் தான்.
அவள் பட்டுச் சேலையிலும், அவன் பட்டு வேட்டியிலும் நிற்கும் படம். மனைவியின் இடையில் கரம் கோர்த்து, பற்கள் தெரிய சத்தமாக சிரிக்கும் நிரஞ்சன். அவனை சிரிப்புடன் ஏறிட்டு முறைக்கும் அவள். அட்டகாசமான புகைப்படம். அவள் விழிகள் இரண்டும் பல்லாயிரம் தடவையாக அவன் சிரிப்பில் மயங்கி விரிந்தது.
நந்தனாவிற்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவளுக்கு கிரிக்கெட்டின் மேல் தீராக் காதல். ஆனால், அதை சாதாரணமாக பின்னுக்கு தள்ளியது நிரஞ்சனின் மேலான காதல்.
"உலகம் பார்க்கற நிரஞ்சன் வேற, ஒரிஜினல் நிரஞ்சன் வேற நந்தனா. நிரஞ்சனை உனக்கு நான் கத்துத் தர்றேன். இல்ல, நீயே கத்துப்ப" கணவன் கல்யாணம் பற்றி முதல் முறையாக பேசிய நிமிடங்கள் அவள் கண் முன் வந்துப் போனது.
அவன் சொன்னது உண்மை தான். அவனின் உண்மையான முகத்தை திருமணத்திற்கு பின் தான் கண்டாள் அவள். அப்போதும் அவனைப் பிடிக்கத் தான் செய்தது. அவன் எப்படி இருந்தாலும் அவளுக்கு பிடிக்கத் தான் செய்யும் என்பதையே தாமதமாக தான் புரிந்து கொண்டாள் அவள்.
நேசிக்கும் ஒருவரை அவரின் நிறை, குறைகளோடு ஏற்பது தானே உண்மையான அன்பு?
கிரிக்கெட் வீரன் நிரஞ்சனை விட, கணவன் நிரஞ்சனை அதிகம் பிடித்தது. அவனோடு திருமணத்தை மறுத்தது எல்லாம் இப்போது அவளுக்கே அபத்தமாக பட்டது.
அடித்தாலும், பிடித்தாலும் அவனுடனான வாழ்க்கை அத்தனை சுவாரசியமாக சென்றது. சிரிப்பு, கோபம், சண்டை, சமாதானம், காதல், ஊடல், கூடல் என அவளின் நாட்களுக்கு சுவை கூட்டினான் அவன்.
அவள் ஒற்றைக் காலை மடக்கி தரையில் ஊன்றி, சிக்ஸர் அடிக்கும் புகைப்படமும், அதையொட்டியே நிரஞ்சன் அதை ஆவென்று வாய் பிளந்து பார்க்கும் படமும் இருக்க, அவள் முகத்தை நிறைத்தது புன்னகை.
அதிரடி ஆட்டக் காரனை அவள் அசர வைத்த கணம் அது.
"என்ன நீ அசால்ட்டா சிக்ஸ் அடிக்கற? அப்புறம் பால் போடுற எனக்கு என்ன மரியாதை?" நிரஞ்சனின் பொய்யான கோபக் குரல் காதில் ஒலிக்க, அவள் இதழ்கள் தாமாக புன்னகையில் விரிந்தது.
அந்நேரம் சரியாக அவளின் நினைவின் நாயகனே அலைபேசியில் அழைக்க, அம்மாவின் மடியில் இருந்து எழுந்து அறைக்குள் போனாள்.
"நந்து…" எடுத்ததும் கெஞ்சலாக அழைத்தான்.
"பத்திரமா வீட்டுக்கு வந்துட்டேன். லஞ்ச் சாப்பிட்டேன். ரெஸ்ட் எடுக்கறேன்" அவன் கேட்கும் முன்பாக அவள் பதில் சொல்லத் தொடங்கி இருந்தாள்.
"நீ மட்டும் எனக்கு எத்தனை கண்டிஷன் போடுற நந்து? ஆனா, நான் கால்ல விழுந்து கெஞ்சினாலும் இறங்கி வர மாட்ட. இது உனக்கே நியாயமா இருக்கா?" கோபமாக சலித்தான்.
"என்ன வேணும் நிரஞ்சன்?"
"நான் என்ன பண்ணனும்? நான் என்ன பண்ணா, நீ திரும்பவும் கிரிக்கெட்.."
"ப்ச், திரும்ப திரும்ப அதையே ஏன் பேசறீங்க?"
"நான் என்ன பண்ணனும் நந்து? அதை மட்டும் சொல்லு?"
"ம்ம். சொல்லிடுவேன்" மிரட்டினாள்.
"பிளீஸ், சொல்லு. நான் தலைகீழா நின்னாவது செஞ்சுடுறேன்."
"அப்படியா?"
"கண்டிப்பா நந்து. என்னை நம்பலயா நீ?" அவன் குரலில் லேசாக கோபம் எட்டிப் பார்க்க,
"சென்னை வின் பண்ற ஃபர்ஸ்ட் மேட்ச்ல… நீங்க…" அவள் தயங்க,
"பட்டுனு சொல்லு நந்து" ஊக்கினான் அவன்.
"நம்ம தாதா (Dada) இங்கிலாந்துக்கு எதிரான மேட்ச் வின் பண்ணப்போ, என்ன பண்ணார் ஞாபகம் இருக்கா? எப்படி செலிபிரேட் பண்ணார்னு…"
"ஏய், பொண்டாட்டி. லூசா நீ?" அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை யூகித்து அவன் கத்த, சிரிப்பை அடக்கினாள் நந்தனா.
"எஸ். அவரை மாதிரியே சட்டையை கழட்டி, அதை கையில் வச்சு சுத்தணும் நீங்க" அவள் சிரிப்புடன் சொல்ல, அந்த பக்கமிருந்து பதிலே வரவில்லை. அசாதாரண அமைதி.
"நிரஞ்சன்…" என்றாள் மெல்ல.
அவன் மனைவியான அவள் முன்பு இயல்பாக, உடை மாற்றவே அவனுக்கு பல நாட்கள் பிடித்தது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.
அப்படியிருக்கையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், கோடி ரசிகர்கள் தொலைக்காட்சி வழியாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவன் சட்டையை கழற்றுவது, நிஜத்தில் என்ன, கனவில் கூட நடக்கவே போவதில்லை என்பது அவளுக்கு நூறு சதவீதம் நிச்சயமாக தெரியும்.
"என் பொண்டாட்டி தானே நந்து நீ? என்னை என்ன செய்ய சொல்ற, தெரியுதா?" மனைவியிடம் அதை எதிர்பார்த்திருக்க வில்லை நிரஞ்சன். கோபத்தை மீறிய உணர்வில், "என்னை ரொம்ப டார்ச்சர் பண்ற நீ" என்று விட்டு அழைப்பை துண்டித்தான் அவன்.
எப்போதும் போல அவர்களுக்குள் விளையாட்டு வினையாகிப் போனதில், "அச்சோ" என்று நாக்கை கடித்துக் கொண்டு புலம்பினாள் அவள்.
"சாரி" என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். அதை பார்த்த பின்பும் பதில் அனுப்பவில்லை அவன்.
தேவையில்லாத வேலை பார்த்து விட்டோம் என்று நொந்து கொண்டாள் நந்தனா. கணவன் அவள் பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்வான் என்று நினைத்து அதை அப்படியே மறந்துப் போனாள் அவள்.
"போன்ல மாப்பிள்ளை தானே நந்து? எப்போ வர்றார்?" அறைக்குள் தலையை நீட்டி பூர்ணிமா விசாரிக்க, "மும்பை மேட்ச் விளையாட இங்க வருவார் மா. அப்போ, அவர் கூடவே நானும் கிளம்பிடுவேன்." கணவன் கண்டிப்பாக வருவான் என்ற உறுதியில் சொன்னாள் அவள்.
"ஓ சரி சரி. உன் மாமியார் கிட்ட பேசணும் நந்து. உனக்கு ஏழாம் மாசம் வளைகாப்பு பண்ணனும். அதுக்கு அப்புறம் நீ இங்கேயே, எங்க கூட இருக்கலாம். இத்தனை மாசம் சென்னையிலேயே இருந்துட்ட நீ. எனக்கும் மாசமா இருக்கும் உன்னை தாங்கணும்னு ஆசை இருக்கும் இல்ல?" அறைக்குள் நுழைந்து, மகளின் முகம் வருடி அவர் கேட்க, அம்மாவின் அன்பு அவளை நெகிழ்த்தியது.
"நீங்க சென்னை வாங்கம்மா பிளீஸ். எனக்கு.. எனக்கு…" அவள் தடுமாற,
"என்னடா?" என்றார் கேள்வியாக,
"எனக்கு நிரஞ்சன் கூடவே இருக்கணும் போல இருக்கு மா." என்ற மகளின் வார்த்தையில், மகிழ்ந்து போனார் பூர்ணிமா.
மாதம் ஒருமுறை கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டுக்கு வருவதும், மறுநாளே கணவனிடமே ஒடுவதுமாக இருந்த மகளின் வாழ்க்கையை குறித்து ஆரம்பத்தில் அவ்வளவு கவலைக் கொண்டார் பூர்ணிமா. கார்த்திகேயன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவ்வளவு தான். ஆனால், அவர்கள் கவலை அவசியம் அற்றது எனும் படி, சில நாட்களிலேயே மகளை மீண்டும் மகிழ்ச்சியாக பார்க்கும் போது, அவள் நன்றாக தான் இருக்கிறாள் என்று தங்கள் மனதை சமாதானப் படுத்தி கொள்வார்கள் அந்தப் பெற்றோர்கள்.
சரியாக ஒரு வருடம் முன்பு மகள் கொடுத்த அதிர்ச்சி, அவளின் முடிவு அவர்களை உடைந்து போக செய்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், அப்போதும் மகள் மேல் இருந்த நம்பிக்கையில் அவள் முடிவை கேள்விகளின்றி அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் அவர்கள்.
இப்போதும் மகள் கணவனோடு இருக்க வேண்டும் என்று சொல்ல, பூரித்து புன்னகைத்தார் பூர்ணிமா.
"உன் விருப்பத்தை மீறி நாங்க என்ன செய்திட போறோம் நந்து மா. நீ மாப்பிள்ளை கூடவே இரு டா. நாங்க அங்க வந்து உன்னைப் பார்த்துக்கறோம்" பூர்ணிமா சொல்ல, பூவாய் மலர்ந்தது அவள் முகம்.
"அம்மா டின்னர் செய்யப் போறேன் நந்து. நீ ரெஸ்ட் எடு" என்று விட்டு அவர் வெளியேற, படுக்கையில் சரிந்தாள் நந்தனா.
கணவன் கண்களுக்குள் வந்து சிரித்தான்.
காரணமின்றி அவன் சிரிக்க மறந்த நாட்களும் இப்போது அவளுக்கு நினைவில் வந்தது.
"ஒரு ரன் நந்து. ஒரே ஒரு ரன், நான் எடுத்திருந்தா அன்னைக்கு முடிவே மாறி இருக்கும். ஆனா, அந்த யார்க்கர் பால் என்னை…" புலம்பினான் நிரஞ்சன்.
"நிரஞ்சன், அன்னைக்கு நடந்தது எதுக்கும் நீங்க பொறுப்பில்ல. நீங்க ஒரு ரன் எடுத்து சூப்பர் ஒவர் போய் இருந்தாலும், கப் மும்பைக்கு தான் போய் இருக்கும்" அந்த வருடத்தின் ஐபிஎல் தோல்வியை கடந்து வரவே அவனுக்கு பல மாதங்கள் பிடித்தது.
அவள் தான் பல்வேறு விதமாக பேசி அவனை அந்த குற்ற உணர்வில் இருந்து வெளியில் கொண்டு வந்தாள்.
"அப்பாடா" என்று அவள் நிமிரும் நேரம், உலக கோப்பை வந்தது.
அரை இறுதி வரை சென்று, தோல்வியை தழுவி திரும்பியது, மீண்டும் அவனின் மன அமைதியை கலைத்து போட்டது.
அந்நேரம் ரசிகர்கள், விமர்சகர்கள் கொடுமை போதாதென்று இந்திய அணி நிர்வாகமும் வீரர்களுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்தது.
அவர்களுக்கு கட்டுப்பாடுகளை, பயிற்சிகளை மிகக் கடுமையாக்கியது.
இந்திய அணி வெளிநாடுகளுக்கு, போட்டித் தொடர்ளுக்காக செல்லும் போது, இனி அவர்களின் மனைவி, காதலி என்று யாரும் உடன் வரக் கூடாது என்ற விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வரப் போகிறோம் என்று வீரர்களை மிரட்டியது நிர்வாகம்.
மனைவி, காதலி உடன் இருந்தால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று காரணம் சொன்னார்கள்.
"நாங்க என்ன ரோபோக்களா?" கொதித்தனர் வீரர்கள்.
நிரஞ்சனால் நிர்வாகமும், பயிற்சியும், விமர்சனங்களும் கொடுத்த மன அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதளவில் பெரிதும் துவண்டான் அவன்.
அந்த மாதம் நியூசிலாந்து தொடருக்கு சென்று விட்டு, வெற்றியுடன் மட்டும் திரும்பாமல் தோள் பட்டையில் காயத்துடனும் திரும்பினான்.
ஓய்வு அவனை ஓய செய்தது. ஆனாலும், அவனது போராட்ட குணம் அவனை விட்டு போகாதிருக்க, அதில் இருந்தும் மீண்டு வந்தான் அவன்.
அவன் இயல்பு நிலைக்கு மீள அடுத்தடுத்த போட்டிகள் அவனுக்கு பெரிதும் உதவியது.
பழைய நிரஞ்சனாக மாறியிருந்தான் அவன். அவனது பேட்டிங், பவுலிங் சிறப்பாகி, அதிரடிக்கு திரும்பி இருந்தான்.
அந்நிலையில் தான் அந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் ஆரம்பமானது.
கிரிக்கெட்டை போல தான் நந்தனாவின் திருமண வாழ்க்கையும் இருந்தது. எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுடன், முடிவுகளுடன் அவளுக்கு அதிர்ச்சியையும், இன்ப அதிர்ச்சியையும் மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டே இருந்தது.
நிரஞ்சன், அவன் நேசிக்கும் கிரிக்கெட் என இரண்டின் மேலும் அவளுக்கு தீராக் காதல் இருந்ததினால் அனைத்தையும் எளிதில் கடந்தாள் நந்தனா.
மனதை தொட்டு சொல்ல வேண்டும் என்றால், திருமண வாழ்க்கையை ரசித்து தான் வாழ்ந்தாள் அவள்.
அவளுக்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை. ஏமாற்றங்களை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் சுலபமாக அவளால் அதை எதிர்கொள்ள முடிந்தது.
கணவனுடன் ஒன்றாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு, உடற்பயிற்சி செய்து, கிரிக்கெட் ஆடி, கதை பேசி, சிரித்து என அவர்கள் சந்தோசமாக இருந்த நாட்கள் தான் அதிகம். ஆனாலும், சண்டையிடும் நாட்களின் எண்ணிக்கையும் அவளை அதிகம் தொல்லை செய்யவே செய்தது.
அந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் தொடங்க இரண்டு நாட்களே இருந்த நிலையில் அவளுக்கு முதல் அதிர்ச்சியை கொடுத்தான் சுகாஸ்.
அவளிடம் கொடுக்கப்பட்ட சென்னை அணி வீரர்களின் பட்டியலில் சுகாஸின் பெயர் இல்லாதிருக்க, பட்டியலை மீண்டும் மீண்டும் திருப்பி திருப்பி சரி பார்த்தாள் அவள்.
முடிவில் சிவராஜிடம் போய் நின்றாள்.
"இந்த சீசன் சுகாஸ் விளையாடல நந்து" தன் வேலையில் கவனமாக அவர் சொல்ல,
"ஏன்?" என்றாள் நம்ப முடியாத அதிர்வுடன்.
"தெரியல. அவனே விலகிட்டான். மேனேஜ்மென்ட் கூட ஏதோ பிரச்சினை போல" என்றவர்,
"ப்ச், டீமும், ஃபேன்ஸிம் அவனை ரொம்பவே மிஸ் பண்ணுவோம். ஆனா, அவன் வர மட்டான் போல" என்று முடித்து விட்டு, தன் வேலையில் மூழ்கினார் அவர்.
அவசர அவரமாக அவனை அழைத்தாள். அவளின் அலைபேசி அழைப்புகளை எடுக்கவே இல்லை சுகாஸ். இருபதிற்கும் மேற்பட்ட முறைகள் முயன்று விட்டு, இறுதியில் நிரஞ்சனின் எண்ணில் இருந்து அழைத்தாள் நந்தனா.
"பிளீஸ், நிரஞ்.." என்று அவன் தொடங்க,
"இட்ஸ் மீ" என்று கத்தினாள் அவள்.
"பிளீஸ், என்னை எதுவும் கேட்காத நந்து. என்னால இப்போ எதையும் சொல்ல முடியாது." அவள் மௌனமாக செவி சாய்க்க,
"ஆனா, காரணத்தை உன்கிட்ட கண்டிப்பா ஒரு நாள் சொல்வேன் நந்து. நடந்ததை ஜீரணிக்க எனக்கு கொஞ்சம் டைம் கொடேன் பிளீஸ்" அதற்கு மேல் அவனை எதுவுமே கேட்கவில்லை நந்தனா.
இந்த முடிவை வலிக்க, வலிக்க தான் எடுத்திருப்பான் அவன் என்பது அவன் குரலிலேயே தெரிய, "ஓகே. ஆனா, உன்னை டீமில் பார்க்க ஐ ஆம் வெயிட்டிங் சுகாஸ்" என்றாள் குரலில் அவன் மீதான நட்பையும், அன்பையும் தேக்கி.
"தாங்க்ஸ் நந்து" என்றான் சுகாஸ்.
சென்னை அணியில் சுகாஸின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது அணி நிர்வாகத்திற்கு தெள்ளத் தெளிவாக தெரியும். ஆனால், சாமர்த்தியமாக போட்டியின் அழுத்தத்தை மற்ற வீரர்கள் மேல் திரும்பியது அணி நிர்வாகம்.
நிரஞ்சன், ரவி, ஷான் என்று மூத்த வீரர்கள் அதிக நெருக்கடிக்கு உள்ளானார்கள்.
அதிலும் நிரஞ்சன், ரவி போன்ற ஆல் ரவுண்டர்களின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது.
ஆனால், துரதிஷ்ட வசமாக அந்த வருடம் சென்னை அணிக்கு எல்லாமே எதிராக தான் இருந்தது.
மைதானங்கள், பிட்ச் (pitch), காலநிலை என எதுவுமே அவர்களுக்கு சாதகமாக இல்லை. ஐபிஎல்லை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு தான் போட்டிகள் நடைபெறும். அந்த வருடம் பனிப் பொழிவு அதிகமாக இருந்தது. விளைவு, பந்து வீச சிரமப்பட்டனர் வீரர்கள்.
காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் அவ்வளவு குறைகள். வீரர்கள் பலரும் மோசமான ஃபார்மில் (out of Form) இருந்தார்கள்.
சென்னை அணி தோல்வியுடன் தொடரை தொடங்கி, தோல்வியுடன் தொடர்ந்தது.
ராஜ், நிரஞ்சன், கேப்டன், ஷான் என்று பேட்டிங் வீரர்கள் சிறப்பாக ஆடினால், அந்த போட்டியில் பந்து வீசும் வீரர்கள் சொதப்பினார்கள்.
பந்து வீச்சு சிறப்பாக இருந்தால், பேட்டிங் சொதப்பியது.
ராஜஸ்தானிற்கு எதிரான அன்றைய போட்டியில் நிரஞ்சன் தொடர்ந்து இரண்டு வைட் மற்றும் ஒரு நோ பால் வீச, பொறுமைக்கு பெயர் போன கேப்டன் பொங்கியிருந்தார்.
இரண்டு கைகளையும் காற்றில் வீசி, "என்ன பண்ற நிரஞ்? எந்த டீமுக்கு ஆடுற நீ?" என்று கர்ஜிக்க, அவமானத்தில் சிறுத்துப் போனது நிரஞ்சனின் முகம்.
"ஃபோகஸ், ஃபோகஸ்" என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்து கேப்டன் செல்ல, இயல்புக்கு திரும்ப படாத பாடு பட்டான் நிரஞ்சன்.
அந்த போட்டியில் அடுத்தடுத்து அவன் இரண்டு விக்கெட்களை எடுக்கவும் தான், அவனுக்கு நிம்மதியானது.
"வெல் டன்" என்று பாராட்டத் தவறவில்லை கேப்டன். ஆனால், தன் மேலேயே நம்பிக்கையை இழக்க தொடங்கி இருந்தான் நிரஞ்சன்.
அவனது அந்த போக்கு நந்தனாவை கவலைக்குள்ளாக்கி மன அழுத்தத்திற்குள் தள்ளியது.
ராஜஸ்தான் உடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும் புள்ளி பட்டியலில் மிகவும் பின் தங்கி இருக்க, பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது.
புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது சென்னை அணி. ஆனால், கடைசியில் இருந்து இரண்டாம் இடம்.
லீக் போட்டிகளில், இன்னும் ஆறு போட்டிகளை சென்னை அணி சந்திக்க வேண்டி இருந்தது. அதில் ஐந்து போட்டிகளை வென்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும் எனும் அபாயகரமான நிலையில் இருந்தது சென்னை அணியின் நிலைமை.
அது சென்னை அணி ரசிகர்களை பெரிதும் ஏமாற்றதிற்கு உள்ளாக்கியது.
செய்திகள், இணைய தளங்கள், இணைய உலகமான ஃபேஸ்புக், டிவிட்டர் என்று எங்கு திரும்பினாலும் சென்னை அணியை அடித்து வெளுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு வீரனின் ஆட்டமும் ஆராய்ந்து அலசப்பட்டு, காயப் போடப்பட்டது. வீரர்களின் பலவீனங்கள் பூதாகரமாக உருமாற்றம் பெற்று பேசப்பட்டது.
இணையம் போதாது என்று புதிதாக முளைத்த யூடியூப் சேனல்களும், அவர்கள் பங்கிற்கு வீடியோ பதிவு செய்து விமர்சிக்க ஆரம்பித்திருந்தது.
"அனலிஸ்ட் மனைவி, கோச் மாமனார் என்று குடும்பத்தில் கிரிக்கெட் எக்ஸ்பர்ட்களை கூடவே வைத்திருக்கும் நிரஞ்சன் கிருஷ்ணகுமாரின் பர்பார்மென்ஸ் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது?" என்றது ஒரு யூடியூப் சேனல்.
"அதிரடி ஆட்டக் கார நிரஞ்சன் எங்கு போனான்? என்பதை தொடர்ந்து,
ஶ்ரீதரின் விமர்சனத்தை மீண்டும் தோண்டி எடுத்தது டிவிட்டர் உலகம்.
"நிரஞ்சன் மாமனாரிடம் கிரிக்கெட் கற்றுக் கொள்ள வேண்டும்" மீண்டும் வைரலாகி இருந்தது.
"நிரஞ்சனின் மனைவி நந்தனா யாரென்று தெரியுமா? அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கார்த்திகேயனின் மகள் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?"
"நிரஞ்சனின் மாமனார் கார்த்திகேயன் யார் என்று தெரியுமா? இந்தியாவிற்கு பல சிறந்த வீரர்களை தந்த மும்பை டோமஸ்டிக் அணியின் கோச். ஷர்மா, ராஜ் ஏன் ஹிரித்திக் கூட அவரின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் தான்" என்ற செய்தியில் தொடர்ச்சியாக,
"கார்த்திகேயன் முதலில் மருமகனுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இல்லையேல், நிரஞ்சனின் நிலை மிக மோசமாகி விடும். நிரஞ்சன் ஆட்டத்தை இதே போல தொடர்ந்தால், கிரிக்கெட் எப்படி ஆட வேண்டும் என்று விரைவில் மறந்து விடுவார் என்றே தோன்றுகிறது"
அவனை நோக்கி வீசப்பட்ட ஒவ்வொரு தனிப்பட்ட தாக்குதலும், நிரஞ்சனை குறி தவறாமல் தாக்கியது.
நந்தனா எதற்கு பயந்தளோ, அது தான் அப்போது நடந்திருந்தது.
அவளுக்குத் தெரியும். அவள் இதை எதிர்பார்த்தே இருந்தாள். என்ன ஒன்று சத்தமாக சொல்லவில்லை. அவனிடம் சொல்லவில்லை, அவ்வளவு தான். ஆனால், அவளுக்கு நிச்சயமாக தெரியும், ஒருநாள் அவளது வேலையை வைத்து, அவளது அப்பாவை கொண்டு கணவனை விமர்சிப்பார்கள், தாக்குவார்கள் என்று.
அதில் அவனுக்கு பாதிப்பு நிச்சயம் இருக்கும். அவன் உடைந்து போவான். அவர்களது திருமண வாழ்க்கை அதனால் பாதிக்கப்படும் என்று முன்னரே கணித்திருந்தாள் அவள்.
நிரஞ்சன் அந்த தனிப்பட்ட தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுவது தெரிய, அவனுக்காக வருந்தினாள் அவள்.
"நிரஞ்சன், இதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. நீங்க பார்க்காத விமர்சனமா?" என்றாள் மென்மையாக,
"******* இவனுங்களுக்கு வேற என்ன வேலை நந்து? இப்படித் தான் பேசுவானுங்க அறிவே இல்லாம. ஆனா, என்னை பத்தி மட்டும் பேசாம, ஏன் உன்னையும் உள்ள இழுக்கறானுங்க? என் பொண்டாட்டியை பத்தி பேச இவனுங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது?" ஆத்திரம் மிக அறை அதிர கத்தினான் அவன்.
"அதென்ன நான் பார்க்காத விமர்சனமா கேட்கற? யாரா இருந்தாலும், எந்த கொம்பனா இருந்தாலும், என் ஆட்டத்தை மட்டும் தான் விமர்சனம் பண்ணனும். அதான் அறம். அதை தான் என்னால சரியான விதத்துல எடுத்துக்க முடியும். என் சொந்த வாழ்க்கையை… மனைவி, மாமனாரை பத்தி பேச எந்த நாய்க்கும் தகுதியோ, அருகதையோ கிடையாது. அதை விமர்சனமா நான் பார்க்க கூட மாட்டேன்." வார்த்தைகளை கடித்துத் துப்பினான் நிரஞ்சன்.
கிரிக்கெட் அவர்களை காதலிக்க வைத்தது, கல்யாண கனவை நனவாக்கியது. இப்போது அவர்களின் வாழ்வை, காதலை, கனவை கானலாக்க பார்த்தது.
மெல்ல மெல்ல மன அழுத்தத்தில் அமிழ்ந்து கொண்டிருந்தாள் நந்தனா.
முன்பொரு முறை அவள் மன அழுத்தத்தில் இதே காரணத்திற்காக விழுந்த போது, நிரஞ்சன் தான் அவளை அதில் இருந்து மீட்டு கொண்டு வந்தான். ஆனால், இம்முறை அவளைக் காட்டிலும் அதிகமான மன அழுத்தத்தில் அவன் இருந்தான்.
பஞ்சாப் அணியுடன் மோதி மோசமான தோல்வியை தழுவி, டெல்லி அணியுடன் போட்டியிட டெல்லி சென்று இறங்கியது சென்னை அணி.
"டாஸ்" வென்ற கேப்டன் முதலில் பந்து வீசுவது என்று முடிவு செய்திருந்தார்.
நந்தனா கணினி முன் அமர்ந்து போட்டியை நேரடி ஒளிபரப்பில் கண்டுக் கொண்டிருந்தாள்.
"டீமில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?" என்று அவரிடம் கேட்கப்பட,
"எஸ். நிரஞ்சன், மைக்கேல் இஸ் அவுட். அண்ட்…" அதற்கு மேல் அவர் சொன்ன எதுவும் அவள் மனதில் பதியவேயில்லை.
இன்றைய போட்டியில் நிரஞ்சன் ஆடவில்லை என்பது மட்டுமே அவள் மனதில் பதிய, வேக வேகமாக கணவனைத் தேடியது அவள் கண்கள். மைதானத்தில் அவன் தலையை காணாமல் கண்களை சுழற்றினாள். அவன் உடை மாற்றும் அறையில் இருந்தான் போலும்.
மின்னல் வேகத்தில் சிவராஜ் முன் போய் நின்றாள் நந்தனா.
"ஏன், ஏன் இன்னைக்கு நிரஞ்சன் டீமில் இல்ல?" அவள் மூச்சு வாங்க கேட்க, அவளை விசித்திரமாக பார்த்தார் சிவராஜ்.
"ஹி ஆஸ்க்ட் அவுட் நந்து. (He asked out) உனக்கு தெரியாதா?"
அன்றைய போட்டியை அவனாக தவிர்த்தானா? கணவன் காரணமின்றி போட்டியில் இருந்து விலகினானா? அவளிடம் ஏன் சொல்லவில்லை?
கிரிக்கெட்டும், அவளும் அவனுக்கு முக்கியமில்லாமல் போய் விட்டர்களா? கேள்விகள் மனதை குடைய, தனது இருக்கையில் வந்து பொத்தென்று அமர்ந்தாள் அவள்.
நிரஞ்சன் தானாக ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆடுவதை தவிர்த்தான் என்ற அதிர்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அவள் அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருக்க, அவளைக் கடந்து வீரர்கள் இருக்கும் பகுதியை நோக்கி சென்றான் நிரஞ்சன்.
"நிரஞ்சன்" என்று கத்தி அழைத்து, முதல் கேள்வியாக, "இன்னைக்கு மேட்ச் ஏன் மிஸ் பண்ணீங்க நிரஞ்சன்? நீங்க ஏன் விளையாடல" என்று அவள் படபடக்க,
"உங்க வேலையை மட்டும் பாருங்க அனலிஸ்ட் நந்தனா" அவள் முன் குனிந்து அழுத்தமாக சொல்லி விட்டுப் போனான் நிரஞ்சன்.
தனக்கு தான் காது கேட்கவில்லை போல என்று கண்ணை சிமிட்டி, சிமிட்டி கணவனைப் பார்த்தாள் நந்தனா.
ஆட்டம் தொடரும்…