அர்ஷன் இந்தியா திரும்பி இரண்டு நாட்கள் கடந்திருந்தது. தந்தையைக் கேட்டு ஆராத்யா தான் தவியாய் தவித்து விட்டாள். அவளுக்குக் குறையாத அதே தவிப்புடன் தான் இருந்தான் அவளது தந்தையும்.
உடன் பிறந்தவர்கள் இருவரும் அவரவர் குடும்பம், குழந்தை என்று ஐக்கியமாகி விட, தனியே தொழில் தொழில் என்று சுற்றிக் கொண்டு, அகந்தையினால் முந்தைய காதலையும் தொலைத்து தனியே நின்ற அவனுக்கு, மகளின் வரவுக்குப் பின் தான், தனக்கே தனக்காக தன்னை நேசிக்கும் உறவின் மகிமை புரிந்தது.
இரண்டு நாட்களுக்குப் பின் கிடைத்த சிறு இடைவெளியில், ஷரண்யாவின் அலைபேசிக்கு அழைத்தான்.
அவனிடம் இருந்து அழைப்பு என்றதுமே குழந்தையை பார்க்க என்று புரிந்து, மகளை விட்டு அந்தக் காணொளி அழைப்பை ஏற்க வைத்தாள்.
தந்தையின் முகம் திரையில் தெரிந்ததுமே, மகளின் மொட்டு இதழ்கள் பிதுங்கி, அழுகைக்குத் தயாரானது.
மறுபுறம் பார்த்துக் கொண்டிருந்த அவளின் தந்தைக்கு, மகள் அழுவது கண்டு மனம் வலித்தாலும், அந்த அழுகையும் கூட அழகாகத் தெரிந்தது. இரண்டே நாட்கள் தன்னைக் காணாமல் தேடும் இந்தப் பாசத்திற்கு முன் அவன் இத்தனை வருடமாக கோடி கோடியாக சம்பாதித்துக் கொட்டிய எதற்கும் மதிப்பில்லாது போனது போல உணர்ந்தான்.
“ஆரா பேபி, குட் கேர்ள் தானே? டாடி சீக்கிரம் வந்துடுவேன். அழக்கூடாது. ஸ்மைல் பண்ணுங்க.” என்று அவன் மறு புறம் குழைந்த குரலில் பேசியது, அங்கு ஓரமாக அமர்ந்து துணிகளுக்கு இஸ்திரி செய்து கொண்டே மகள் என்ன செய்கிறாள், அர்ஷனுடன் என்ன பேசுகிறாள் என்று கவனித்துக் கொண்டிருந்த ஷரண்யாவின் செவியில் விழுந்தது.
இத்தனை மென்மையாகக் கூட அவனுக்குப் பேச வருமா? அவன் சிரித்தபடி இருக்கும் புகைப் படங்களைக் கூட, அவள் கண்டதில்லை. எல்லாச் செய்திகளையும் தன்னில் அடக்கி வைத்திருக்கும் கூகுளிடம் கூட அவன் சிரிப்பது போல படங்கள் இல்லை. அப்படிப் பட்டவனுக்கு இப்படி எல்லாம் பேச வருமா? என்பது போல அவளது கீழ் இதழ்களின் மீது மேல் பற்கள் அழுந்த பதியும் படி கடித்துக் கொண்டு, தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
கண்களை கசக்கிக் கொண்டே அழுகையை நிறுத்திய குழந்தை “எப்போ வதுவீங்க? மிஸ் யூ!” என்றது ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் கலந்து.
“ரொம்ப சீக்கிரம். குட்டிக்கு என்ன டாய் வேணும் சொல்லுங்க, வாங்கிட்டு வரலாம்.” என்றான்.
“என..எனக்கு கேட்டிங்(ஸ்கேட்டிங்) போகனும். அம்மா விட மாட்டா!” என்றது தத்தித் தத்தி.
குழந்தையின் உடல் நலன் கருதி அனுப்ப வில்லை என்று புரிந்து,
“டாடி வந்து உன்னை நீ கேட்ட டிஸ்னி ஷோ கூட்டிட்டு போவேன். அம்மா எங்கம்மா?” என்று குழந்தையுடன் பேசி விட்டு ஷரண்யாவை அழைத்தான்.
மடித்துக் கொண்டிருந்த துணியை வைத்து விட்டு, அலைபேசியை வாங்கினாள்.
திரையில் அவளது முகம் தெரிந்தது. மொத்த முடியையும் தூக்கிக் கொண்டையிட்டு இருக்க, முகத்தில் ஆங்காங்கே சிறு சிறு சுருள்களாக முடி சிலுப்பிக் கொண்டிருந்தது.
அவன் அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி இருந்தான் போலும், சட்டையில் முதல் இரண்டு பட்டன்களை விடு வித்து, டையை தளர்த்தி, கைப் பகுதியை முழங்கை வரை மடக்கி விட்டிருந்தான். சோர்விலும் கூடக் கம்பீரமாக இருந்தான்.
அவனது முகம் பார்த்தவுடன், ஏனோ நேருக்கு நேர் அவனைப் பார்க்க முடியாமல் மனம் தடுமாறியது. அவனுக்கு அப்படி எதுவும் இல்லை என்பது போல, அவனது பார்வை அவளது முகத்தில் பதிந்தது. அவளது முகம் சற்று சோர்வாக இருந்தது. கருமுட்டைகளின் வளர்ச்சிக்கு அவர்கள் கொடுத்த ஊசி, அவளுக்கு ஒத்துக்கொள்ள வில்லை. வயிற்றில் வலி, வாந்தி என்று சிறு சிறு உபாதைகள் இருந்தது.
அவளது முகத்தைப் பார்த்து சோர்வைப் புரிந்து கொண்டவன், “ஒன்னும் பிரச்சனை இல்லையே? அதிகம் வேலை எல்லாம் செய்யலை தானே? எதனால சோர்வா இருக்க?” என்றான் அக்கறையுடன்.
“இல்லை. கஷ்டமான வேலை எதுவும் செய்யலை. இந்த இஞ்சக்ஷன் எல்லாம் எனக்கு ஒத்துக்கலை. வாமிட்டிங், அப்டமென் பெயின் கொஞ்சம் இருக்கு. வேற ஒன்னும் இல்லை.” என்றாள்.
“ஆராவை சீக்கிரம் சரியாக்கணும். நீ கொஞ்சம் கவனமா இரு.” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
குழந்தைக்காகத் தான் தன்னிடம் நல விசாரிப்புகள் என்று புரிந்தது. அவனிடமிருந்து எதுவும் எதிர்பார்த்தால் தானே ஏமாற்றம் கொள்ள? குழந்தையை குணமாக்க முனைப்புடன் இருக்கிறான் என்பதே அவளுக்குப் பெரும் பலத்தைத் தந்தது.
ஆனால் தந்தையிடம் பேசிவிட்டு வைத்த மகள், அடுத்த நான்கு நாட்களிலேயே தந்தையைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கத் தொடங்கினாள். இடையில் காணொளி அழைப்பில் பேசிய போதும், தந்தை வேண்டும் என்று திடீரென்று நினைத்துக் கொண்டு அடம் பிடிக்கத் தொடங்கினாள்.
“டாடி.. இப்போ வேணும்.” என்று சொன்னதையே சொல்லி அழுது கொண்டு இருந்தாள்.
“தியா.. நீ சமத்து பாப்பா தானே? அம்மா சொன்னா கேட்கணும். அப்பா இன்னும் ரெண்டு நாளில் வந்துடுவார்.” என்று நல்லவிதமாகவே சமாதானம் செய்ய முயன்றாள்.
உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் குழந்தையிடம் கண்டிப்பையும் காட்ட முடிய வில்லை.
ஏதேதோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றும், எதற்கும் பலனின்றி குழந்தை அடம்பிடித்து அழ, அவளுக்கு அர்ஷன் மீது தான் கோபம் வந்தது. திடீரென்று தந்தை என்று வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு, இப்படி பாதியில் பிள்ளையை அழ வைத்து விட்டுச் சென்று விட்டானே என்ற கோபம். அவன் தந்தையென்று அறிமுகம் செய்து கொள்ளாமலே இருந்து இருக்கலாம் என்று கடுப்பு.
அவள் கோபத்தில் கொதித்துக் கொண்டு, பிள்ளையை சமாளிக்கும் விதம் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, குழந்தைக்கு மூக்கில் ரத்தம் வழிய மயக்கம் போட்டு விழுந்தாள்.
பார்த்துப் பதறிய ஷரண்யா, உடனே அவளை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டாள்.
ஷரண்யா தவிப்புடன் வெளியே இருந்த நாற்காலியில் அப்படியே தொய்ந்து அமர்ந்து விட்டாள். குழந்தைக்கு ஒன்றும் ஆகாது தைரியமாக இரு என்று சொல்லக் கூட அருகே யாரும் அற்ற தனிமை. மருத்துவர்கள் குழு உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக பரபரப்புடன் இருக்க, இவளுக்கு இரத்த அழுத்தம் கூடியது.
‘குழந்தையிடம் திடீரென்று வந்து தந்தை என்பான், சில நாட்கள் உடனிருந்து அவளை இளவரசியைப் போல உணர வைப்பான். திடீரென்று கிளம்பி மாயமாக மறைந்து விடுவான். எல்லாம் அவனது இஷ்டம் தான். உடல் நிலை சரியில்லாத குழந்தை, மனம் வருந்துவாள் என்று புரிந்து கொள்ளாமல் போனால் இவன் என்ன தந்தை?’ என்று மனதோடு புலம்பியவள் அவனுக்கு அலைபேசியில் அழைத்தாள். அலைபேசி தொடர்பு எல்லைக்குள் இல்லை என்ற பதில் தான், திரும்பத் திரும்ப வந்தது.
குழந்தையின் இதயத்திற்கு இரத்தத்தை சரிவர விநியோகம் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது.
எட்டு மணி நேரத்திற்குப் பிறகு தான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறி விட,
இருக்கையில் அமர்ந்திருந்தவள் அப்படியே இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.
எட்டு மணி நேரம் என்றது மேலும் நான்கு மணி நேரம் சென்றும் கூட மருத்துவர்கள் நம்பிக்கையாக எதுவும் சொல்லவில்லை என்றதும், அவளது இதயத் துடிப்பு ஏகத்திற்கு எகிறியது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மருத்துவர்கள் சொல்லப் போகும் ஒரு வார்த்தைக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அச்சத்தில் கைகள் சில்லிட்டுப் போனது.
அப்போது முகத்தில் அடக்க முயன்றும் முடியாமல் பதட்டம் வெளிப்பட, புயல் போல உள்ளே வந்தான், அர்ஷன்.
அவனைப் பார்த்ததும் செயல் இழந்தது போல இருந்த கால்களுக்கு, எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்ததோ, அவன் நெருங்கும் முன் அவனிடம் ஓடி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் அரை அடி தூரம் மட்டுமே இருக்க, சட்டென்று வேகத்தடை இட்டது போல அப்படியே நின்றவள், தன் இதயத்தை அழுத்திக் கொண்டு கண்களில் கண்ணீர் வழிய அவனைப் பார்த்து,
“ப..பயமா இருக்கு. டாக்டர்ஸ் இன்னும் எதுவுமே சொல்லலை.” என்றாள் காற்றாகிப் போன குரலில்.
அத்தனை நேரம் அவன் மீது இருந்த கோபம் எல்லாம் மறந்து போனது.
தன்னைப் போல தனது மகளுக்காக, தவிப்புடன் ஓடி வந்திருக்கும் ஒரு ஜீவன் என்ற உணர்வு மட்டுமே, அப்போது எஞ்சி இருந்தது.
உள்ளே ஆழிப்பேரலை போல தவிப்பும் அச்சமும் அவனை சுழற்றி அடிக்க வந்து இருந்தவன், ஷரண்யாவின் கலங்கிய கண்களை சந்தித்த நொடி, அவளை இழுத்து அணைத்துக் கொள்ள கைகள் பர பரத்தது.
அவளுக்கு ஆறுதல் சொல்ல அல்ல, அவனது தவிப்பிற்கு அவளிடம் அடைக்கலம் தேட. அவன் அவர்களுக்கு நிழலாக பாதுகாக்க வைத்திருந்த ஆட்கள் மூலம், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு, போட்டது போட்ட படி, தனி விமானம் மூலம் அவன் இங்கு வந்து சேர எடுத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே பாறை மனம் படைத்த ஆணவன், துகள் துகளாக நொறுங்கிக் கொண்டிருந்தான். ஆஜானுபாகுவான ஆண் மகன் இதயம் நடுங்கும் அளவுக்கு அச்சம் கொள்வான், தவிப்பான் என்று முதல் முறை அறிந்து கொண்டான். குழந்தையின் உடல்நிலை பாதிப்பு தெரிந்து, இத்தனை நாட்களாக அனைத்தையும் தனியே தாங்கிப் போராடிய பெண், அவனது கண்களுக்கு இரும்பு மனுஷியாகத் தான் தெரிந்தாள்.
ஆனால் இரு மனதிற்கும் இடையே இருந்த திரை இன்னும் கிழிபடாமல் இருக்க, அவனது அகம் விட்டு அவனும், அவளது ஒதுக்கம் மறந்து அவளும், ஒருவரில் ஒருவர் ஆறுதல் தேடிக் கொள்ளாமல் அப்படியே நிற்க,
மருத்துவக் குழு வெளியே வந்தது.
“குழந்தை இப்போதைக்கு ஆபத்துக் கட்டத்தை தாண்டிட்டா. ஆனா, இதயம் செயல்பாடு ரொம்ப பலவீனமா இருக்கு. ரொம்ப கவனமா பார்த்துக்கோங்க.” என்றவரிடம்,
“நான் குழந்தையைப் பார்க்கலாமா?” என்றாள் ஷரண்யா தவிப்புடன்.
“ஒவ்வொருத்தரா போய்ப் பாருங்க. இன்னிக்கு ராத்திரி மட்டும் ஐசியுல இருக்கனும். நாளைக்கு ரூமுக்கு மாத்திடலாம். ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு கூட்டிட்டுப் போங்க.” என்றார்.
“இப்போவே இங்க ஹாஸ்பிட்டல்ல ரூம் ஒன்னு அலாட் பண்ணிடுங்க, டாக்டர்.” என்றான் அர்ஷன்.
அதற்குள் தீவிர சிகிச்சை அறைக்குள் நுழைந்திருந்தாள், ஷரண்யா. அவ்வப்போது இப்படி குழந்தைக்கு உடல் நலம் குன்றுவது இப்போதெல்லாம் பழகி விட்டது என்றாலும், மருத்துவ உபகரணங்கள் சூழ இருந்த மகளைக் கண்டு வலித்தது. வாடிய தளிராகக் கிடந்த மகளை மலரை வருடுவது போல வருடி விட்டு வெளிய வந்தாள். அவள் வந்ததும் அர்ஷன் உள்ளே சென்றான்.
அந்தச் சின்னஞ்சிறு உடலில் ஆங்காங்கே பல மருத்துவக் கருவி பொருத்தப்பட்டிருக்க, கண் மூடிக் கிடந்தாள், அவனது மகள்.
என்றோ அரை நினைவில், உணர்வுகளுக்கு வடிகாலாக நடந்த நிகழ்வின் பலனாக உதித்த மகளென்றாலும், அவனது உதிரம் தானே! அவனுக்கு வலிக்காமல் இருக்குமா?
‘டாடி’ என்று தன் கழுத்தை கட்டிக் கொண்டு தொங்கும் மழலை, இத்தனை வலிகள் தாங்க வேண்டி உள்ளதே என்று மனம் நொந்தது. கோடி கோடியாகக் கொட்டிக் கிடக்கும் பணத்தினால் என்ன லாபம்? மகளின் வலியை அவன் நினைத்த உடன் களைய முடியாமல் இருக்க.. அவனுக்கெதுக்கு அந்தச் செல்வத்தின் செருக்கு? என்று என்னென்னமோ எண்ணங்கள் மனதில் வலம் வர, மலரையும் விட மென்மையாக மகளை வருடி, அவளது உச்சியில் இதழ் பதித்தான்.
கலங்கிய அவனது கண்களிலிருந்து இருதுளி கண்ணீர் அவனது கன்னம் தொட்ட போது தான், அவன் அழுகிறான் என்று அவனே உணர்ந்தான். அவன் நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் கண்கள் கண்ணீர் சிந்தியது இல்லை. அவனது கண்களில் கூட கண்ணீர் வருமென்று உணர்ந்தவன், சட்டென்று அதை துடைத்துக் கொண்டு முகத்தை அழுத்தமாகத் துடைத்து, தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவன்,
“உன்னை நல்லபடியா ஆக்காமல் விட மாட்டேன், பேபி. எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் உன்னை இத்தனை வலிகளில் இருந்தும் விடுவிப்பேன். உன்னை மத்த குழந்தைகளை மாதிரி இயல்பான ஒரு வாழ்க்கை வாழ வைப்பேன்.” என்று மானசீகமாக குழந்தையிடம் கூறிவிட்டு வெளியே வந்தவன், அங்கு இருக்கையில் சோர்ந்து அமர்ந்திருந்த ஷரண்யாவிடம் சென்றான்.
“மேல, ரூம் அலாட் ஆகி இருக்கு. நீ அங்க போய் தூங்கு. நான் இங்க இருக்கேன்.” என்றான்.
அத்தனை நேரம் மறந்திருந்த கோபம் நினைவுக்கு வர, சட்டென்று எழுந்து நின்று அவனை பார்த்து உறுத்து விழித்தவள்,
“என் பொண்ணு இன்னிக்கு இப்படி கிடக்க, நீங்க தான் காரணம்.” என்று பாய்ந்தாள்.
அவனுக்கும் சுள்ளென்று கோபம் எழ அவளைத் தீ விழி விழித்தான்.
“அவ கிட்ட நான் தான் உன் டாடின்னு சொன்னா மட்டும் போதாது. அவ சின்னக் குழந்தை, உங்க உயரம் உங்க பணம் அந்தஸ்து எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவளுக்கு தெரிஞ்சது எல்லாம் ஆராவோட டாடி, தோள்ல தூக்கி வெச்சு செல்லம் கொஞ்சும் அவளோட டாடி, அவ்ளோ தான்.” என்று அவள் பேசப் பேச கொதித்துக் கொண்டிருந்தவன் குளிர்ந்தான்.
“குழந்தைகள் எல்லாம் ரொம்ப இன்னோசென்ட். நம்ம கொஞ்சம் பாசம் காட்டினா அவங்க மொத்த பாசத்தையும் கொட்டுவாங்க. அவ டாடி வேணும், டாடி வேணும்னு அழுது அழுது தான் இப்படி ஆச்சு. இதுக்கு தான் அவ கிட்ட எதுக்கு நீங்க தான் அவ டாடின்னு சொன்னீங்கன்னு சண்டை போட்டேன்.
பொண்ணு மேல அவ்ளோ பாசம் இருந்தா அவ கூடவே அவ இடத்தில் இருந்து அவளைச் சரி பண்ணிக் கொடுத்துட்டுப் போங்க. இன்னொரு முறை உங்களைக் கேட்டு அவ அழுது இப்படி ஆனா, என்னால தாங்க முடியாது.” என்றாள் அழுகையுடன்.
முகம் இறுக அவளை பார்த்துக் கொண்டு நின்றவன்,
“அழுது முடிச்சாச்சுன்னா, மேல ரூமுக்கு போ!” என்றான் இறுகிய குரலில்.
அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள், பெண்.
“இந்த தடவை நான் அங்க போனதே என்னோட வேலை எல்லாம் முடிச்சுட்டு குழந்தைக்கு சரியாகும் வரை இங்க ஸ்பெயின்லயே இருக்கத் தான். உனக்கு மட்டுமில்லை எனக்கும் குழந்தை மேல அக்கறை இருக்கு. அதுனால தான் சொல்றேன், என்னோட பக்கமிருந்து நான் செய்ய வேண்டியதை எல்லாம் செஞ்சுட்டேன்.” என்று தலையை அழுந்த கோதிக் கொண்டவன் தொடர்ந்து,
“இப்போ நீ தான் செய்யணும். நல்லபடியா கன்சீவ் ஆகி சீக்கிரம் அடுத்த குழந்தை சீக்கிரம் வரணும், ஆராவைச் சரி பண்ண. உனக்கு ரெஸ்ட் வேணும். இப்படி அழுது ஊரைக் கூட்டாமல் குழந்தை மேல இருக்கும் அக்கறையையும் பாசத்தையும் நீ உன்னை கவனமாப் பார்த்துக்கறதில் காட்டு.”
என்றான் கடுமையான, உணர்வுகள் அற்ற அழுத்தமான குரலில்.
அவன் சொன்னதில் மற்றதை விடுத்து, இப்போது அவளுக்கு ஓய்வு தேவை. அவளை வைத்து தான் குழந்தையை காப்பாற்ற இயலும் என்று சொன்னதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, வேறெதுவும் பேசாமல் அவனது செயலாளர் பின், அவன் பதிவு செய்து வைத்து இருந்த அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தாள். மன உளைச்சல், அர்ஷன் வந்து விட்டான் இனி குழந்தையை அவன் பார்த்துக் கொள்வான் என்று அடி மனதில் இருந்த நம்பிக்கை என்று எல்லாம் சேர்ந்து, அவளை உறக்கத்தில் தள்ளியது.
காலையில் எட்டு மணிக்கு தான் அவளுக்கு விழிப்பு வந்தது. எழுந்த நொடி குழந்தையை பற்றிய நினைவு வந்ததும், அவசரமாக எழுந்து முகம் கழுவி தன்னை திருத்திக் கொண்டு அவன் வெளியே வரும் போது, குழந்தையை ஸ்டெச்சரில் அறைக்கு அழைத்து வந்து விட்டனர். அர்ஷன் உடன் வந்தான்.
“தியா குட்டி” என்று ஷரண்யா குழந்தையை அணைத்துக் கொள்ள, பசுவிடம் சேரும் கன்றாக ஷரண்யாவை அணைத்துக் கொண்டது குழந்தை.
குழந்தைக்கு மருத்துவ மனையிலேயே உணவு வழங்கினர். அவளுக்கு உணவு ஊட்டிக் கொண்டே, அர்ஷனை நோட்டம் விட்டாள்.
இரவு முழுதும் விழித்து இருந்ததினால், சற்று களைத்துத் தெரிந்தான்.
ஒரு கணம் யோசித்தவள் சிறு தயக்கத்துடன், “நீங்க வேணும்னா, உங்க வீட்டுக்குப் போய் தூங்கிட்டு வாங்க. நான் பார்த்துக்கறேன்.” என்றாள்.
விரைவில் இங்கு திரும்ப வேண்டும் என்று இரவு பகலாக வேலை செய்து கொண்டிருந்தான். அதனால் சற்று களைப்பாகத் தான் உணர்ந்தான். அவள் சொன்னதும் சரி என்னும் விதமாக தலை அசைத்துக் கிளம்பத் தயாராக, அவனது மகள் சிணுங்கலைத் தொடங்கினாள்.
“டாடி..! இங்கேயே இருக்கனும்.” என்று சோர்ந்த குரலில் அழுகைக்கு தயாராக, ஷரண்யாவுக்குத் தான் சங்கடமாக இருந்தது. இவன் கோபக்காரன் ஆயிற்றே குழந்தை என்று சிறு அக்கறை உண்டு. ஆனால் இப்படி அடம் பிடித்து அழுதால், ஏதாவது சொல்லி விடுவானோ என்று ஒரு மனம் பதைக்க, மறு மனம் இல்லை என்று அவனுக்குக் குழந்தை மீது உண்மையிலேயே பாசம் இருப்பதாக அடித்துக் கூறியது.
“ஆராத்யா, டாடி போய் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரட்டும்.” என்று அவள் கூறி முடிப்பதற்குள்,
“டாடி, இங்கேயே படுத்து தூங்கறேன், ஓகே?” என்றான் புன்னகையுடன்.
குழந்தை மகிழ்ச்சியாகத் தலை அசைத்தது.
குழந்தையில் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, அங்கேயே ஷரண்யா உறங்கிய படுக்கையில் சாய்ந்தவனுக்கு, உறக்கம் கண்களைத் தழுவியது.
சில மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின் அவனுக்கு விழிப்பு வந்து கண்களை திறந்த போது, மனதுக்கு இதம் தரும் காட்சி ஒன்று அவன் கண் முன் விரிந்தது.
ஆராத்யாவின் படுக்கை அருகே அமர்ந்து இருந்த ஷரண்யா, கைகளை ஆட்டி ஆட்டி அபிநயம் பிடித்தபடி அவளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள். குழந்தையும் அன்னைக்கும் மேலாக கண்களை உருட்டி, சிரித்து என்று முகத்தில் பல பாவங்களுடன், கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
தனது உறக்கம் கலையக் கூடாது என்று குரலை உயர்த்தாமல் கிசு கிசுப்பாக பேசிக் கொண்டிருந்தாள் போலும். தாயும் மகளும் தங்களுக்குள் மூழ்கி இருந்த அந்தக் காட்சி அழகிய ஓவியம் போலிருந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே, அவன் எழுந்து செல்லவும் “டாடி” என்று அவனையும் தங்களுடன் மகள் இழுத்துக் கொள்ள, அவளின் அன்னை தான் தவித்துப் போனாள். அவனுக்கும் கூட ஒருவித தடை, அதை விட்டு வெளியே வரப் பிடிக்கா விட்டாலும் கூட, மகளுக்காக இதழ்களில் புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக மூன்றாம் நாள் மாலை வீடு வந்து சேர்ந்தனர்.
குழந்தை உறங்கும் வரை ஷரண்யாவின் வீட்டிலேயே இருந்து விட்டு, அவனது மாளிகைக்குச் செல்வான். மீண்டும் காலை குழந்தை எழும் போது ஷரண்யாவின் வீட்டில் இருப்பான். இங்கேயே தங்கி விடச் சொல்லி அவளும் கேட்கவில்லை. அவனும் அவளை அவனது வீட்டிற்கு அழைக்கவில்லை.
குழந்தையை இந்த வாரம் மட்டும் சற்று ஓய்வாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறி இருந்ததால், வீட்டிலேயே கார்ட்டூன், கதை புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் என்று நேரம் கடந்தது. குழந்தை உறங்கும் நேரம் தனது மடிக்கணினி வைத்து தனது வேலைகளை பார்ப்பான். ஷரண்யா தேவை என்றால் மட்டும் கடைக்குச் செல்வாள். மற்றபடி அனைத்தும் அலைபேசியில் முடித்துக் கொள்வாள்.
முதலில் அங்கு அவனை உண்ணச் சொல்ல அவள் தயங்க, அவனுக்கும் கூட இப்படி யார் வீட்டிலும் உண்டு பழக்கம் இல்லாத காரணத்தால் தடுமாறினான்.
மகள் தனது பிஞ்சுக் கையில் எடுத்து ஊட்டும் போது எப்படி வேண்டாமென்று மறுப்பான்? அகந்தையும் செருக்கும் மகளின் செல்லச் சிணுங்களில் காணாமல் போனது.
ஒரு வாரம் இப்படியே கடந்திருந்தது. இன்றைக்குள் அவள் மாதாந்திர சுழற்சி வரா விட்டால், நாளை வீட்டிலேயே பரிசோதனை செய்து விட்டு மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருந்தனர்.
அவள் சற்று பதட்டத்தில் தான் இருந்தாள். அவனும் கூட அதே மனநிலையில் தான் இருந்தானென்று, ஒவ்வொரு முறையும் அவள் கழிப்பறை சென்று விட்டு வரும் போதும், சற்று பதட்டத்துடன் அவளது முகத்தை ஆராய்ந்து நிம்மதி கொண்டதை வைத்துத் தெரிந்து கொண்டாள்.
அன்றைய பகல் வேளை எப்படியோ முடிவுக்கு வர, இரவு உணவுக்குப் பின் ஆராத்யா தூங்குவதற்கு படுத்தி வைத்தாள்.
அர்ஷன் அவளுக்கு அருகே அமர்ந்து தட்டிக் கொடுக்க “அம்மா, பாட்டு பாடு.” என்றாள் மகள்.
அர்ஷனை அருகே வைத்துக் கொண்டு வர வர மகள் செய்யும் பிடிவாதங்கள் ஷரண்யாவை மேலும் மேலும் தவிப்பில் தள்ளிக் கொண்டிருந்தது.
எதிரே இருந்தவனை தயக்கமாகப் பார்த்து விட்டு, வேறு வழியின்றி..
“கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
ஊமை என்றால்
ஒரு வகை அமைதி
ஏழை என்றால்
அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு
பண்பாடும் ஆனந்தக் குயிற்பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதைப் போல விதி செய்தது
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ
ரா-ரி-ரா-ரோ
ஒ-ரா-ரி-ரோ”
என்று அவளது தேன் குரலில் பாட, குழந்தையின் கண்கள் உறக்கத்தில் சொருக, அதன் தந்தையின் கண்கள் அந்தப் பாடலின் இசையிலும், பாடியவளின் தெய்வீகக் குரலிலும் கலங்கியது.
“காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே”
என்று அவளது தேன் குரலில் பாடிக் கொண்டே வந்தவள், இந்த வரிகளில் அதற்கு மேல் பாட முடியாமல் அவள் விம்மலை இதழ் கடித்து அடக்க..
“ஆங்கோன் மெய்ன் பாசட் ரஹே
சப்னா யே ஹஸ்தா ரஹே”
என்று கடைசி இரு வரிகளை அர்ஷன் ஹிந்தியில் பாடி முடித்தான்.
அவள் திகைத்து அவனை பார்த்துக் கொண்டிருக்க,
அவன் குழந்தைக்கு போர்வையை சரியாகப் போர்த்தி விட்டு விட்டு எழுந்து வெளியே சென்றான்.
அவள் உட்கார்ந்த இடத்தை விட்டு அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள்.
கதவு வரை சென்றவன்.. நின்று ஷரண்யாவை திரும்பிப் பார்த்து “நாளைக்கு காலையில நீ செக் பண்ணிட்டு உடனே கூப்பிட்டுச் சொல்லு.” என்றவனின் குரலில் மறைக்க முயன்றும் அவனது பதட்டமும், படபடப்பும் வெளியானது.
அவளுக்கும் கூடப் பதட்டம் தான். எழுந்து நின்று அவன் முகம் பார்த்து, “பா..பாசிட்டிவ் தானே வரும்?” என்றாள் பதட்டமாக.
ஒரு பெருமூச்சுடன் “அப்படி தான் வரும். வரணும். நீ.. நீ.. டென்ஷன் ஆகாம மெடிசின் போட்டு சீக்கிரம் தூங்கு.” என்று விட்டுச் சென்றவன், இரவு முழுதும் அவனது மாளிகையின் அறையில் உறக்கம் வராமல் நடை பயின்றான். அதிகாலை ஐந்து முப்பதிற்கு, ஷரண்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஒரே அழைப்பில் அழைப்பை ஏற்றவன் மறு புறம் அவள் பேசும் முன்..
“செக் பண்ணினாயா? என்ன ரிசல்ட்?” என்றான் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு.
அவனுக்கு அந்தத் தீவிர சிகிச்சை அறையில் ஆராத்யாவை பார்த்ததிலிருந்து தன் குழந்தையை எப்பாடு பட்டாவது விரைவில் குணமாக்கிவிட வேண்டும் என்பது மட்டுமே மனதில் குடைந்து கொண்டிருந்தது.
அவனது பட படப்பை உள்வாங்கிக் கொண்டு கண்கள் மெலிதாகக் கலங்க..
“ரெ..ரெண்டு கோடு.. பாசிட்டிவ்..” என்று அவள் சொன்னதும், அப்படியே நின்று அண்ணாந்து பார்த்து, கண்களை இறுக மூடிக் கொண்டான். நிம்மதியில் மனம் நிறைந்தது.