இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Climax episode

Janani Naveen

Administrator

அத்தியாயம் -25​

அழகிய ரோஜா குவியல் போல இருந்த மகளை கையில் ஏந்தி, அவள் பசியாற மனைவியிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றான் அர்ஜுன். போகும் அவனது முதுகையே வெறித்துக் கொண்டிருந்தாள் கோதை.​

சற்று அதிகப்படி தான் பேசி விட்டோமோ? அறுவைசிகிச்சை செய்து குழந்தையை பிரசவித்து மூன்று நாட்கள் தான் கடந்திருந்தது.​

குழந்தை பிறந்து அவளை தனி அறைக்கு மாற்றிய போதே, இரு பக்க சொந்தங்களும் அந்த அறையில் நிறைந்திருந்தனர்.​

பேத்தியை கையில் ஏந்திக் கொண்டு, அவள் அவர்களின் ஏக போக உரிமை என்பது போல,​

“என் பேத்தி அப்படியே பூர்ணா மாதிரி இருக்கா..”​

“என் பேத்திக்கு தங்க ஸ்பூன்ல தான் முதல்ல பாலை குடுக்கணும்..”​

“எங்காத்து வாரிசு..” என்பது போன்ற வார்த்தைகள் உடல் சோர்வில் கண்மூடி கிடந்தவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதிலும்​

“ஐ என்னை மாதிரியே இருக்காளாம்மா?” என்று கொஞ்சிய பூர்ணாவிடம்,​

“ஆமா அப்படியே நீ தான். நீயே உன் மருமாளுக்கு ஒரு பேர் சூஸ் பண்ணு” என்ற போது கோதையின் பொறுமை அதன் எல்லையை கடக்கும் போல இருந்தது.​

அதிலும் குழந்தை அச்சு அசல் அர்ஜுன் மற்றும் சுந்தரி பாட்டியின் ஜாடையில் தான் இருந்தது. கணவனின் ஜாடை என்று கூறி இருந்தால் அந்த நேரம் மனம் ஆறி இருக்கும். அதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் பூர்ணா போல என்று சொன்னதும் உடலின் சோர்வும் சேர்ந்து கொள்ள அவளது கோபம் மனதை அழுத்த வெடிக்க தயாரானது.​

‘நான் வேண்டாதவ, நான் பெத்த குழந்தை மட்டும் அவா ஆத்து சொத்தாம்! என் பொண்ணுக்கு என்னை கேட்காம இவா என்ன பேர் செலக்ட் பண்றது?’ என்ற கோபம் எழுந்த போதும் வாய் மூடிக் கிடந்தாள்.​

தனியறைக்கு மாற்றிய பின் அனைவரும் சுற்றி இருந்தும் கூட கண்டுகொள்ளாமல் அவளது நெற்றியில் இதழ் பதித்து,​

“எப்படி டா இருக்க?” என்று குழந்தையை காணும் முன் அவளை தான் முதலில் கேட்டான்.​

“ம்ம்..” என்று புன்னகைத்து குழந்தையை தேட, முதல் முதலாக அந்த ரோஜா குவியலை வெகு ஜாக்கிரதையாக அள்ளி அவளிடம் கொடுத்து விட்டு மனைவியை அணைத்துக் கொண்டு அவள் அருகே அமர்ந்து கொண்டான். இருவரின் பார்வையும் அவர்களின் மகளின் மீது ஒரு சில நொடிகள் பதிந்து பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது.​

சுற்றி உள்ள உலகம் மறக்க அவர்களின் உலகில் சஞ்சாரிக்கும் போது, அபஸ்வரமாக அவளது மாமியாரின் குரல் அவளது இனிய பொழுதை அழுத்தத்திற்குள்ளாக்கியது.​

அப்போது தொடங்கிய அழுத்தம் இரண்டு நாட்களாக நீறுபூத்த நெருப்பு போல கனன்று கொண்டே தான் இருந்தது.​

மூன்று நாள் சற்று திடம் வந்து உடல் தேறி இருந்தாள். காலையிலேயே பேத்தியை பார்க்க வந்த அகிலா,​

“சும்மா சாஸ்தரத்துக்கு உங்க ஆத்துக்கு கூட்டிண்டு போய்ட்டு புண்ணியாஜனம் முடிஞ்ச கையோட எங்க ஆத்துக்கு கொண்டு வந்து விட்டுடுங்கோ” என்றார் அதிகாரமாக.​

மருமகளை பிடிக்காமல் போனாலும் பேத்தியை அவருக்கு பிடித்தது. தன் மகனின் மகள் என்று உரிமை உணர்வும் சேர்ந்து கொண்டது.​

பிரசவித்து விட்டு மூன்று மாதங்கள் கூட தாய் வீட்டில் இல்லாமல் அதென்ன ஒரே மாதத்தில் கொண்டு வந்து விட சொல்வது? என்று கோபம் அவளுக்கு.​

கணவனை பார்த்தாள். அவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். அகிலா சொல்வதை சொல்லட்டும் முடிவு என் கையில் தானே என்ற நினைவில் அவன் பேசாமல் அமர்ந்திருக்க, அவளுக்கு அதுவும் எரிச்சல் ஆனது. தாயை எதிர்த்து கேட்காமல் இருக்கும் கணவனை நினைத்து கோபம் வந்தது.​

“ஆப்பரேஷன் ஆகி இருக்கு. அவளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும். மூனாம் மாசம் முடிஞ்சு அனுப்பி விடறேன்” என்றார் மஹா.​

“உங்க பொண்ணுக்கு எங்க ஆத்துல அப்படி என்ன வெட்டி முறிக்கும் வேலை? அங்க எப்பவுமே அவ ரெஸ்ட்ல தானே இருந்தா! நானெல்லாம் வயித்து பிள்ளை வெளியில் வர வரைக்கும் வேலை செஞ்சுண்டு தான் இருந்தேன்” என்று குத்திக் காட்டினார்.​

குழந்தை உண்டான பின் மசக்கை, ரத்தக்கொதிப்பு என்று அவளால் அதிகம் வேலை செய்ய முடியாமல் போனதை குத்தி பேசுகிறார் என்று அவளுக்கு புரிந்தது. அவளது கணவனுக்கும் புரிந்து தான் இருக்க வேண்டும்.​

“அம்மா நேரம் ஆச்சு கீழ ட்ரைவர் வெயிட் பண்ணின்டு இருக்கார். நீங்க கிளம்புங்கோ” என்று விடாப்பிடியாக குழந்தையை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தான்.​

இப்படி பெண்ணை குழந்தையுடன் உடனே அனுப்பி வைக்க சொல்லி கேட்கிறார்களே என்று சோர்ந்து நின்ற மாமியாரை பார்த்து ஒரு ஆழ்ந்த புன்னகையை சிந்தினான். அந்த புன்னகை ஒன்றே சொல்லாமல் சொன்னது அவரது மாப்பிள்ளை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வானென்று. அதில் நிம்மதி பெருமூச்சை வெளியேற்றி,​

“நானும் ஆத்துக்கு போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன் மாப்பிள்ளை” என்று கூறி அவர்களை தனியே விட்டுவிட்டு கிளம்பி விட்டார்.​

கோபத்தை கட்டுப்படுத்த போராடி கொண்டிருந்த கோதைக்கு மாமியார் மருமகனின் பார்வை பரிமாற்றம் கண்ணில் பதிந்தும் கருத்தை எட்டாமல் போனது.​

அவர்கள் சென்றதும் உறங்கும் மகளை தொட்டிலில் விட்டுவிட்டு மனைவியின் அருகே வந்து அமர்ந்து அவளது கைகளை பற்றிக் கொண்டான், இந்த மூன்று நாட்களில், முதன் முதலில் கிடைத்த தனிமையை ரசித்துக் கொண்டே.​

“படுத்து ரெஸ்ட் எடுக்கறியாம்மா?” என்றான் வாஞ்சையாக.​

அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு,​

“பத்திரமா வா பேசலாம், என்ன கேள்வி வேணுமோ கேளுன்னு சொன்னேள்” என்றாள்.​

ஒரு பெருமூச்சுடன்,​

“இப்போ தான் சீசெக் ஆகி இருக்கு. ஒரு பெரிய வாக்குவாதம் பண்ண உனக்கு தெம்பு இருக்காது டா கோதை. நமக்கு தான் காலம் நீண்டு இருக்கே” என்றான் அப்போதும் அவளது நலனை மனதில் கொண்டு. ஆனால் அவளுக்கு இருந்த கோபத்தில் அதெல்லாம் அவளது மனதில் பதியவில்லை. அவன் பேச்சை தவிர்ப்பதாகவே எண்ணினாள்.​

“இல்லை பேசணும்” என்றாள் பிடிவாதமாக. ஒரு பெருமூச்சுடன் அவள் அருகே, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்தான். எந்த கேள்வி வந்தாலும் எதிர்கொள்ளும் தெளிவுடன்! கொடுக்கும் தண்டனையை வாங்கிக் கொள்ளும் திடத்துடன்!​

அவன் முன் கைகளை நீட்டினாள். புரியாமல் பார்தவனிடம்,​

“உங்க மொபைல்” என்றாள்.​

அவனது புருவங்கள் நெரிந்தது, என்ன கேள்வி அவனை நோக்கி வீசப்பட போகிறது என்ற தெளிவு வந்தது போல இருக்க, அவனது அலைபேசியை எடுத்து கடவு சொல்லை விடுவித்து அவளிடம் கொடுத்தான்.​

அதை வாங்கியவள் புகைப்பட தொகுப்பினுள், அன்று அவள் பார்த்த படத்தை எடுத்து அவன் கண் முன் நீட்டி,​

“இந்த..இந்த பிக் அன்னைக்கு அண்ணா எங்கேஜ்மெண்டில் எடுத்தது தானே?” என்றாள் குரல் நடுங்க.​

“ம் ஆமாம்..” என்றான். அவனது மனம் துடித்தது. இந்த நேரத்திலா அவளுக்கு அனைத்தும் தெரிய வர வேண்டும்? என்று அவளுக்காக துடித்தான்.​

“எப்படி யா..யாரோ ஒரு பொண்ணை இப்படி போட்டோ எடுக்க சொல்ல முடிஞ்சது? அன்னைக்கு உங்களை நம்பி தானே உங்க கூட வந்தேன்? ரொம்ப கண்ணியமாக தானே பேசிண்டு வந்தேள்! அந்த நம்பிக்கையில், எதார்த்தமா கண்ணில் விழுந்த தூசியை எடுக்கறதா தான் நினைச்சேன். ஆனா நீங்க என் பேரையே கறையாக்க அந்த ஃபோட்டோ எடுக்க சொன்னேளா? நீங்க சொன்னாலும் எடுத்த வத்சன் அண்ணாக்கு எங்க போச்சு அறிவு?” என்றாள் ஆதங்கமாக.​

பொறுமையாக கேட்டுக்கொண்டு வந்தவனுக்கு தன் நண்பனை பற்றி சொன்னதும் சிறு சினம் எட்டிப் பார்க்க,​

“கோதை வார்த்தையை அளந்து பேசு. உனக்கு கோபம் என் மேல தானே? என்னை எது வேணும்னாலும் சொல்லு. அவனை எதுக்கு நடுவில் இழுக்கற?” என்றான் குரலை உயர்த்தி. திருமணம் ஆன இத்தனை நாட்களில் முதல் முறை அவனது குரலை உயர்த்தி பேசுகிறான். முதலில் அதை கேட்டு நடுங்கிய போதும், அதற்கு இரு மடங்கு கோபத்துடன்,​

“என் பேரை, நேக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை ஆத்துல அசிங்கப் படுத்தினது நீங்க தானே? நீங்க தானே என் கல்யாணம் நிற்க காரணம்?” என்றான் விரல் நீட்டி.​

“என்னை லவ் பண்றன்னு சொன்னேன்.. அது உனக்கு அசிங்கமா?” என்று அவன் விதண்டாவாதம் பேசினான். தொடர்ந்து,​

“அந்த கல்யாணம் நிற்கலைன்னா நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டு இருந்திருக்க முடியாது. முதல் முதல உன்னை பார்த்த நாள்ல இருந்து உன் மேல பித்து பிடிச்சு திரிஞ்சேன். என் காதலை காப்பாத்திக்க அப்படி செஞ்சேன்” என்றான் நெஞ்சை நிமிர்த்தி.​

“அதனால என் அம்மாவுக்கு எதுவும் ஆகி இருந்தா? உங்களால என் அம்மாவை திருப்பி கொடுத்து இருக்க முடியுமா?” என்றாள் கோபத்தில் முகம் சிவக்க. தொடர்ந்து,​

“சரி அம்மாக்கு ஒன்னும் ஆகலை. நீங்க லவ் பண்ணினேள். அதனால் கல்யாணம் பண்ணிக்க இப்படி பண்ணினேள்னு முன்னாடியே எதுக்கு சொல்லலை? உங்க லவ் வெளிய தெரியக் கூடாது! தெரிஞ்சா என்னமோ நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி இருக்கும் பிம்பம் உடைஞ்சு போய்டும். உங்க அம்மா தங்கை எல்லாரும் என்னை வார்த்தையால் குத்தி குத்தி கிழிச்சா. நீங்க என் பேர் கெடக்கூடாதுன்னு பெரிய மனசு பண்ணி கல்யாணம் பண்ணின்டதா நினைச்சு அதுக்காகவே நான் காலம் பூரா அடிமை மாதிரி பொறுத்து போகனும்.. அதுக்கு தானே உண்மையை சொல்லாமல் மறைச்சு வெச்சேள்?” என்று நாக்கு என்னும் சாட்டையை அவள் சுழட்டி அடிக்க துடித்து போனான். வார்த்தைகள் மறந்து அவனது மென்மையான கோதைக்கு இப்படிக் கூட பேச வருமா என்று திகைத்து அமர்ந்திருந்தான்.​

அடிபட்ட சிங்கத்தை புள்ளிமான் முட்டி முட்டி சாய்ப்பது போல அவனது அமைதியில் அவள் மேலும் வெகுண்டு எழுந்தாள்.​

“நிச்சயம் ஆகி நின்னு போச்சு, பாவம் பார்த்து என் பிள்ளை உன்னை கட்டிண்டான், உங்களை வளைச்சு போட, நானே வேணும்னு அப்படி புரளியை உங்க கூட சேர்த்து வெச்சு கிளப்பி விட்டேன்னு எல்லாம் பேச்சு வாங்கணும்னு நேக்கு என்ன தலைஎழுத்தா?” என்றவள் கண்களில் வழிந்த கண்ணீரை சுண்டி விட்டுக் கொண்டு மேலும் தொடர்ந்தாள்.​

“பாட்டி செத்து போனப்போ அந்த ஆத்துல நேக்குன்னு​

இருந்த ஒரு ஜீவனும் இல்லையேன்னு எவ்வளவு அழுதேன்! அதைக்கூட என்னமோ உங்க கூட வெளிநாட்டுக்கு போக முடியலை, வெளிநாட்டு ட்ரிப்புக்கு அலையறேன்னு அவ்வளவு கொச்சை படுத்தினா. நேக்கு எப்படி இருந்தது தெரியுமா? அப்போ நான் பேச போனப்போ கூட எங்கம்மா தான் என்னை அடக்கினா. பாவம் பார்த்து என் வாழ்கை நாசமாகாம நீங்களும் உங்க அப்பாவும் காப்பாத்தி இருக்கேள். உங்க முகத்துக்காக நான் பேசாம இருக்கணும்னு என் வாயை அடைச்சுட்டா. அதையும் பொறுத்து போனேன். எதுக்காக?! யாருக்கா பொறுத்து போனேன்!” என்று ஆத்திரமாக கேட்டவள், தொடர்ந்து,​

“ஊரை கூட்டி நேக்கு சீமந்தம் பண்ணாமல் ஆத்து முட்டோட சீமந்தம் பண்ணினது உங்க தங்கை கல்யாணம் நின்னு போச்சு. நேக்கு மட்டும் என்னத்துக்கு ஊரை கூட்டி கிராண்ட்டா பண்ணனும்னு தான் பண்ணலையாம். அது கூட நேக்கு பெருசா தெரியலை..” என்று கண்களை துடைத்துக் கொண்டு,​

“சீமந்தம் அன்னைக்கு எங்க அத்தைகள் முன்னாடி எல்லாம் ஊரே என்னை தான் பாவமா பார்க்கணும். நீங்க பாவப்பட்டு வாழ்க்கை பிச்சை போடாம இருந்து இருந்தா வாழ்கை பூரா நான் கல்யாணம் ஆகாமல் இருந்து இருப்பேன். காத்து அடிச்சு கோபுரத்தில் ஒட்டிண்ட‌ குப்பையாம் நான்.. தேவையா நேக்கு இதெல்லாம்?” என்று அவளது அழுத்தங்களை வார்த்தைகளாக அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்.​

“நீங்க அப்படி செய்யாம இருந்திருந்தா எங்கேயானும் நிம்மதியா சிவனேன்னு இருந்திருப்பேன்..” என்று அவள் படபடக்க அவளது கடைசி வாக்கியத்தில் மனதில் பலமாக அடி வாங்கினான்.​

அவனது அன்னையிடம் பேச்சு வாங்காமல் அவள் நிம்மதியாக இருந்திருப்பாள் என்ற பொருளில் அவள் கூற,​

அவனை திருமணம் செய்ததால் அவளது நிம்மதி பறிபோனது, முன்பு நிச்சயித்த திருமணத்தில் நிம்மதியாக வாழ்ந்திருப்பாள் என்று அவன் பொருள் எடுத்துக் கொண்டான்.​

“காலம் பூரா நீங்க எனக்கு வாழ்க்கை பிச்சை போட்ட மாதிரி என்னை அடிமையா நடத்த தான் என் கிட்ட உண்மையை சொல்லாமல் மறைச்சு இருக்கேள்..” என்று அவள் கூற, கண்களில் உணர்வுகள் தொலைத்து அவளைப் பார்த்தான்.​

“இப்போ கூட உங்கம்மாக்கு நான் வேண்டாம்.. ஆனா நான் பெத்த குழந்தை மேல மட்டும் தனக்கு தான் உரிமை இருக்கற மாதிரி பேசிட்டு போறா. நீங்களும் எதுவும் சொல்லாம இடிச்ச புளி மாதிரி உக்காந்துண்டு இருக்கேள். உடம்பு முடியாமல் தானே அதிகம் வேலை செய்யாம இருந்தேன்.. அதுவும் அதிகம் வேலை செய்யாம கவனமா இருக்கணும்னு டாக்டர் சொல்லவும். அதை கூட எப்படி குத்தி காட்டி பேசினா அதை கூட கேட்காம எப்படி உங்களால சும்மா உக்காந்து இருக்க முடிஞ்சுது? நான் பட்டதுல பாதி தான் சொல்லி இருக்கேன். இன்னும் தினம் தினம் நான் அந்த ஆத்துக்கு ஏதோ தேவை இல்லாத ஆளுங்கற மாதிரி எத்தனை எத்தனை தடவை நடத்தி இருக்கா தெரியுமா? ஆமா ஒத்துக்கறேன் நான் வசதி இல்லாத ஆத்துல இருந்து தான் வந்தேன். அதை ஆத்துக்கு வரவா போறவா முன்னாடி எத்தனை தடவை சொல்லி காட்டி இருப்பா தெரியுமா? உங்க அம்மாக்கு வசதியான இடத்தில் இருந்து தானே மாட்டுப்பொண்ணு வேணுமா இருந்தது? உங்களுக்கு அது தெரியும் தானே? அப்பறம் எதுக்கு என் கல்யாணத்தை நிறுத்தி என்னை கல்யாணம் பண்ணின்டேள்! உங்க அம்மா ஆசைப்படி வசதியான ஆத்து பொண்ணை கல்யாணம் பண்ணி இருந்தா நானும் தினம் தினம் மனசு நொந்து வாழ்ந்து இருக்க மாட்டேனோனோ?”​

என்று மேலும் அவள் ஏதோ பேச வரும் முன் குழந்தை​

வீரிட்டு பசியில் அழுதது.​

மௌனமாக குழந்தையை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றான். ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை. அவன் ஏதாவது எதிர்த்து பேசி இருந்தால் கூட மேலும் எதையாவது பேசி அவனுடன் சண்டை போட்டு இருக்கலாம். இப்படி பேசாமல் சென்றால் என்ன அர்த்தம்? என்று கோபத்தில் தொடங்கி நேரம் ஆக ஆக, “கொஞ்சம் அதிகமாக பேசி விட்டோமோ!” என்ற தவிப்பில் அவளை ஆழ்த்தியது.​

மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும், அர்ஜுன் தினமும் அவளையும் குழந்தையும் பார்க்க வந்தான் தான். எல்லோரும் இருக்கும் நேரம் வந்து அவர்களை பார்த்து விட்டு செல்வான். அவளுடனான தனிமையை முற்றிலும் தவிர்த்தான்.​

அவளை கண்களோடு கண்கள் பார்ப்பதை தவிர்த்தான்.​

அவனது இந்த செயல்கள் எல்லாம் அவளது தவிப்பை கூட்டியது. காரணமே இல்லாமல் அழுகையை வர வைத்தது.​

ஒரு வாரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டாள்.​

கௌஷிக் மருத்துவமனை கட்டணம் கட்டுவதற்கு முன் அர்ஜுன் அனைத்தையும் கட்டி இருந்தான். “பிரசவம் எங்க பொறுப்பு அர்ஜுன் நாங்க தான் செய்யனும். எங்க கடமைன்னு சொல்லலை ஒரே தங்கை அவளுக்கு நான் செய்யறதுல நேக்கு எந்த கஷ்டமும் இல்லை” என்றான் கௌஷிக்.​

“இருக்கட்டும் கௌஷிக். யார் கட்டினா என்ன? உங்க தங்கைக்கு செய்ய இன்னும் எவ்வளவோ இருக்கு. எப்பவுமே உங்க தங்கை என் பொறுப்பு கௌஷிக். அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.​

அவளையும் குழந்தையையும் அழைத்து செல்ல அர்ஜுன் வந்திருந்தான்.​

அவளும் அன்று அவளை பார்க்க வந்திருந்த மதாலசாவும் காரின் பின்புறம் அமர்ந்து கொள்ள, கோதையின் தந்தை அவனுக்கு அருகே முன்புறம் அமர்ந்து கொண்டார். கௌஷிக் அவனது இருசக்கர வாகனத்தில் அவர்களை தொடர்ந்தான்.​

வாகனத்தின் கண்ணாடியை சரி செய்வது போல செய்த அர்ஜுன் அவனது பார்வையை கோதை மீதே வைத்திருக்க, கோதை ஒரு முறை அந்த கண்ணாடியில் நிமிர்ந்து பார்த்து விட்டு அவனது பார்வையை தாங்க முடியாமல் தனது பார்வையை விலக்கிக் கொண்டாள்.​

அதை ஓரக்கண்ணால் பார்த்த மதாலசா கோதையை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி சிரித்து,​

“நான் வேணும்னா குட்டியை வெச்சுக்கறேன். நீ முன்னாடி போய் உட்காரு டி. உங்க ஆள் பார்வையாலேயே உன்னை கபளீகரம் செஞ்சுடுவார் போல இருக்கு” என்றாள் குறும்புக் குரலில். அதை கேட்டு முகம் சிவந்தாலும், இப்போது இருக்கும் நிலை நினைவுக்கு வந்து முகம் சுருங்க,​

“சித்த சும்மா இரு டி” என்று அவளை அடக்கி விட்டு இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.​

மூவரையும் சேர்த்து நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே விட்டனர்.​

சற்று நேரம் இருந்து விட்டு மதாலசா கிளம்ப,​

“எதுல வந்த மது?” என்றார் மஹா.​

முன்பு இருந்த வீடு அவளது வீட்டில் இருந்து வெகு அருகே. ஆனால் இப்போது சற்று தொலைவில் இருந்தது.​

“பஸ்ல தான் வந்தேன் மாமி. இப்போ கேப் பிடிச்சு போய்டுவேன்” என்றாள்.​

“இரு இரு கௌஷிக்கை அனுப்பறேன்” என்று மஹா சொல்ல சொல்ல,​

“வேண்டாம் வேண்டாம் மாமி அவருக்கு எதுக்கு ஸ்ரமம்? நானே போய்ப்பேன்” என்று கூறி அவள் கிளம்பி விட,​

“டேய் அவ வெய்யில்ல தனியா போக வேண்டாம் நீ போ” என்று கூறி மகனை அனுப்பி வைத்தார் மஹா.​

கோதைக்காக ஒதுக்கி இருந்த அறையில் அவள் குழந்தையுடன் படுத்திருந்தாள். படுக்கையில் அவள் ஒரு ஓரத்தில் படுத்திருக்க குழந்தை நடுவே இருந்தது.​

மறுபுறம் படுக்கையில் அமர்ந்து உறங்கும் குழந்தையின் கன்னத்தை ஒற்றை விரல் கொண்டு வருடினான். குனிந்து அதன் பட்டுக் கன்னங்களில் முத்தம் வைத்தான்.​

“தூங்கற குழந்தையை கொஞ்ச கூடாது” என்றாள் மென்குரலில்.​

‘உன்னை கொஞ்ச ஆசை தான்.’ என்று வாய்வரை வந்த வார்த்தையை இதழ் கடித்து தடுத்து விட்டான்.​

குழந்தை பிறந்து பதினோராம் நாள் புண்ணியவாஜனம் செய்து பெயர் வைப்பது வழக்கம். ஆனால் அவளுக்கு அறுவைசிகிச்சை செய்துள்ளதால் இருபத்தியோராம் நாள் புண்ணியவாஜனம் செய்வதென்று முடிவானது.​

புண்ணியவாஜனம் செய்யும் வரை குழந்தையின் தகப்பன் சவரம் செய்து கொள்ளக் கூடாது என்பது கடைபிடிக்கப்படும் வழக்கமாகும். ஆதலால் ஒரு வாரமாக சவரம் செய்யாமல் விட்டிருந்ததால் ஒரு வார தாடியுடன், கண்களில் சற்று சோர்வுடன் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தவன்,​

“கிளம்பறேன் டேக் கேர்” என்றவன் அவளது பதிலை கூட எதிர்பார்க்காமல் கிளம்பி இருந்தான்.​

“ஒரு பத்து நிமிஷம் சாப்பாடு தயாராகிடும், சாப்பிட்டுட்டு போங்கோ மாப்பிள்ளை” என்று மஹா சொன்னதற்கு கூட,​

“இல்லை மாமி நேரம் ஆச்சு ஆபீசுக்கு போகனும், புராஜக்ட் வொர்க் நிறைய இருக்கு முடிக்க. வரேன்” என்று கூறி கிளம்பிவிட்டான்.​

“ஏன்டி மாப்பிள்ளை சாப்பிடாமல் கிளம்பிட்டார்? நீயானும் அவரை இருக்க சொல்லி இருக்கலாமோனோ?” என்று கோதையை மஹா கடிந்து கொள்ள, அதற்கும் அவளுக்கு கோபம் தான் வந்தது.​

“நான் கேட்ட ஒரு கேள்விக்கும் அவர் கிட்ட பதில் இல்லை. பாதி பேச்சில் கிளம்பி போனார். அதுக்கு அப்பறம் அந்த பேச்சை தொடர கூட விடலை. நியாயப்படி பார்த்தால் நான் தான் கோபப்படனும்” என்று மனதோடு நொடித்து கொண்டாள்.​

இருபத்தியோராம் நாள் அதிகாலை அழகாக விடிந்தது.​

அவளுக்கு எண்ணெய் குளியல் குளிக்க வைத்து புதிதாக அவன் வாங்கிக் கொடுத்திருந்த மென்பட்டுப் புடவையை அணிந்து கொள்ள உதவினார் மஹா. குழந்தைக்கும் அன்று எண்ணெய் வைத்து குளிப்பாட்டி, புது உடை அணிவித்து மையிட்டு அலங்காரம் செய்து விட்டனர்.​

இருபது நாட்களுக்கும் மேலாக சவரம் செய்யாமல் வளர்திருந்த மெல்லிய தாடியுடன், வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக அர்ஜுன் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகே கோதை அமர, அவளது மடியில் குழந்தையை வைத்தனர்.​

புண்ணியவாஜன ஹோமம் முடிந்து,​

“குழந்தைக்கு என்ன பேர் முடிவு பண்ணி இருக்கேள்?” என்றார் புரோகிதர்.​

அகிலா பூர்ணாவிடம், “என்ன பேர் பூர்ணா முடிவு பண்ணி இருக்க?” என்று தொடங்கும் போதே கை அமர்த்திய அர்ஜுன்,​

“குழந்தை பெத்தது கோதை. அவ குழந்தைக்கு பேர் வைக்க அவளுக்கு ஆசை இருக்கும். அவளே வைக்கட்டும்” என்று கூற, தாய் மகள் இருவரின் முகமும் சுருங்கியது.​

மனைவியை பார்த்து ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி கேள்வியாக பார்த்தான்.​

‘என்ன பேர் முடிவு பண்ணி இருக்க?’ என்று அவனது பார்வை அவளை கேளாமல் கேட்டது.​

“உங்களுக்கு என்ன பேர் பிடிக்கும் சொல்லுங்கோ” என்றாள் அவனுக்கு அருகே நெருங்கி கிசுகிசுப்பான குரலில்.​

அத்தனை அருகே, எண்ணெய் குளியலில் மெருகு கூடி இருந்த முகத்தையும் வட்ட விழிகளையும் பார்த்து அவனை அறியாமல்,​

“எனக்கு பிடிச்ச பேர் கோதை தான்” என்றான் மெல்லிய குரலில். அவளது காதில் அட்சரம் பிசகாமல் அவனது வார்த்தைகள் விழ, சட்டென்று அவளது முகம் நாணம் பூசிக் கொண்டது.​

“ம்ப்ச்.. குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?” என்றாள் மீண்டும் அதே குரலில்.​

அவன் மனதில் ஒரு பெயர் இருந்தது தான். ஆனால் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.​

அவனை ஒரு நொடி பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவளாக ப்ரோஹிதரிடம் “ஷ்ருதி” என்றாள் மென் குரலில். அவள் சொன்ன பெயரை கேட்டு அர்ஜுனின் இதழ்கள் நிறைவில் விரிந்தது.​

“பெரியவா பேர் ஏதாவது வக்கணும் இன்னும் ஒரு பேர் சொல்லுங்கோ” என்ற போது யோசிக்காமல் “சுந்தரி” என்றாள். கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு மட்டுமல்லாமல் விஷ்வேஸ்வரனின் மனமும் நிரம்பி வழிந்தது.​

அர்ஜுனின் தாய் வழி பாட்டி தாத்தா, அவன் மாமன்மார்கள் அவர்கள் குடும்பம் என்று அனைவரும் கூட குழுமி இருக்க எல்லோருக்கும் அந்த பெயர் மிகமிக பொருத்தமாக தான் தோன்றியது. சுந்தரி பாட்டியை நினைவு படுத்தியது.​

வைபவம் இனிதே நடந்தது முடிந்தது.​

அவளது அத்தை, அவனது மாமன் குடும்பங்கள், ருக்மணி மற்றும் மதாலசாவின் குடும்பம் என்று அனைவரும் அங்கே தான் இருந்தனர்.​

உணவு முடிந்து அனைவரும் ஆங்காங்கே அமர்ந்திருந்த வேளை கோதையின் தாய் தந்தையை அழைத்து நிற்க வைத்தான்.​

அனைவரும் என்னவென்று புரியாமல் குழம்ப, அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் அவர்கள் முன் கை கூப்பி நின்றான். அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்த கோதை அவன் செய்யப் போவதை உணர்ந்து, அவனது கையை பற்றி தடுத்து,​

“என்ன பண்ண போறேள்? சித்த சும்மா இருங்கோ. நம்ம விஷயம் அப்பறம் பேசிக்கலாம்” என்று கூற அப்போது தான் வெளியே சென்று விட்டு உள்ளே நுழைந்தான் வத்சன். அங்கு அமர்ந்திருந்த ருக்மணியிடம் தான் அவன் பார்வை முதலில் செல்ல, சட்டென்று அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்ட, அங்கு ஏதோ நடக்க இருப்பதை புரிந்து ஏற்கனவே பதைத்துக் கொண்டிருந்த ருக்மணி பதட்டத்துடன் அர்ஜுனை பார்த்தாள்.​

குழப்பத்துடன் என்னவென்று உள்ளே பார்த்த வத்சனும் என்ன நடக்கிறது என்று பார்க்க,​

தனது கையை பற்றி இருந்த கோதையை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தவன்,அவளது கையை பிரித்து எடுத்து விட்டுவிட்டு, அவளது பெற்றோரை பார்த்து,​

“நான் கோதையை, நீங்க எங்க ஆத்துக்கு பொண்ணு பார்க்க வரதுக்கு முன்னாடி இருந்தே ஒன் சைடா லவ் பண்ணின்டு இருந்தேன். ஆத்துல சொல்லி பொண்ணு கேட்க சொல்ல நினைச்சுண்டு இருந்தேன். அதுக்குள்ள அவளுக்கு.. அவளுக்கு வேற இடத்தில்..” என்று கூறி நிறுத்தியவன் கரகரத்த குரலை சரி செய்து கொண்டு,​

“நேக்கு வேற வழி தெரியலை அதான் நிச்சயம் பண்ணி இருந்த மாப்பிள்ளை கிட்ட நாங்க லவ் பண்றோம்னு பொய் சொல்லி கல்யாணத்தை நிறுத்தினேன். கோதை பாவம் அவளுக்கு இது எதுவும் தெரியாது, அதே மாதிரி என் அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியாது” என்று குறுக்கே பேச முயன்ற வத்சனை குறுக்கிட விடாமல் பேசி முடிக்க, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.​

“வசதியில் கம்மியான பொண்ணுன்னா என்ன வேணும்னாலும் செய்யலாம்னு தைரியமா அர்ஜுன்?” என்று கௌஷிக் தொடங்க,​

“அவன் பண்ணலை கௌஷிக். பித்து பிடிச்சு அவன் அலைஞ்சதை பார்க்க முடியாமல் நான் தான் அதை பண்ணினேன்” என்றான் வத்சன்.​

“வத்சா நீ சும்மா இரு” என்று அர்ஜுன் தொடங்க,​

“மாட்டேன் நீ இதை பண்ணலை, நான் தான் அந்த ரங்கராஜன் கிட்ட போய் அப்படி சொன்னேன். அது மட்டும் இல்லாம, கோதை கண்ணுல தூசி விழ, நீ ஹெல்ப் பண்ணினப்போ அதை விளையாட்டா ஃபோட்டோ எடுத்து வெச்சது நான் தான். அதை காட்டி அவன் கிட்ட அவா ரெண்டு பேரும் லவ் பண்றதா சொல்லி கல்யாணத்தை நிறுத்தினது நான் தான். சந்தேகம் இருந்தா அந்த ரங்கராஜன் கிட்டயே கேட்டுக்கோங்கோ. இப்படி பொய் சொல்லி தான் கோதையை கல்யாணம் பண்ணனும்னா அதுக்கு வாழ்க்கை பூரா தனியாவே இருப்பேன்னு இது தெரிஞ்சு அர்ஜுன் என்கிட்ட சண்டை தான் போட்டான்” என்று அழுத்தம் திருத்தமாக கூறி முடித்தான்.​

கேட்ட கோதை மட்டுமல்ல அனைவருமே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.​

அவள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் கோதைக்கு நினைவில் வந்து அவளது கண்கள் இரண்டும் கலங்கி கன்னத்தில் கோடாக வழிந்தது.​

“டேய் என்ன டா இது? என்ன பண்ணி இருக்க? நம்ம ஆத்துலயும் பொண் குழந்தேள் இருக்கா மறந்து போச்சா?’ என்று வத்சனின் தந்தை அவனை கடிந்து கொள்ள, எதுவும் பதில் சொல்லாமல் தலை நிமிர்ந்து நின்றவன், கோதையின் அன்னையிடம்,​

“சாரி மாமி என்னால தான் உங்களுக்கு உடம்பு முடியாமல் போச்சு. நான் அதை எதிர்பார்க்கல.” என்றவன் தொடர்ந்து,​

“ஆனா அதுக்கு மடும் தான் சாரி கேட்பேன். மத்தபடி நான் செஞ்சது தப்பில்லை. நீங்க பார்த்த மாப்பிள்ளை விட எங்க அர்ஜுன் ஆயிரம் மடங்கு அருமையான மாப்பிள்ளை” என்றான்.​

ருக்மணியுடன் அங்கு வந்திருந்த அவளது தந்தைக்கு அந்த முதல் சந்திப்பிலேயே வத்சனின் மீது நல்ல அபிப்பிராயம் எழாமல் போனது.​

அகிலாண்டேஸ்வரியின் முகத்தில் ஈயாடவில்லை. தன் மகன் உண்மையாகவே கோதையை அத்தனை ஆழமாக காதலித்தானா? அவள் மீது பாவப்பட்டு வாழ்கை கொடுக்கவில்லையா? என்று அதிர்ந்து நின்றிருந்தார். அர்ஜுன் சட்டென்று திரும்பி அவரை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தான்.​

“என் பொண்டாட்டி ஒன்னும் குப்பை இல்லை.. அடிச்ச காத்துக்கு பறந்து கோபுரத்தில் ஒட்டிக்க.. அவ தடாகத்தில் இருக்கும் தாமரை.. அது இருக்க வேண்டிய இடம் கோபுரம்னு, அந்த கோபுரம் தான் தலை குனிஞ்சு அவளை தலை மேல தூக்கி வெச்சுண்டது” என்றான் அழுத்தம் திருத்தமாக. அவளது அத்தைகள் முதல் அங்கிருந்த அனைவருக்கும் அவள் மீது அவன் வைத்திருந்த நேசத்தை கண்டு அத்தனை திகைப்பு.​

கௌஷிக் ஏதோ சுருக்கென்று சொல்ல வாயை திறக்க, அவனை கை அமர்த்திய வரதன்,​

“இது எங்களுக்கு வருத்தத்தை கொடுக்கலைன்னு நான் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். வருத்தம் தான். முன்னாடியே பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி இருந்தா நிறைய கசப்பான விஷயங்களை தவிர்த்து இருக்கலாம். அதுக்காக நடந்ததையே பிடிச்சுண்டு உறவுகளை கஷ்டப்படுத்தி நம்ம எதையும் சாதிக்க போறது இல்லை. ஒரே வாழ்க்கை அதை நல்ல விதமா உறவுகளோட சேர்ந்து இருந்து வாழ்ந்துட்டு போலாமே” என்றவர் தொடர்ந்து,​

“இந்த பேச்சை இதோட மறந்துடலாம். விடுங்கோ.” என்று தனது மகன் மற்றும் மாப்பிள்ளைக்கு பொதுவாக கூறி முடித்தார்.​

அவரது கைகளை பற்றிக் கொண்ட விஷ்வேஸ்வரன்,​

“எங்க பக்கமிருந்து நடந்த குளறுபடியால் உங்களுக்கு ரொம்ப மனசு கஷ்டம். ஆனா அதை பெருந்தன்மையா கையாண்டுட்டேள். அவாளுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றதும் அதற்கு பதிலாக,​

“விடுங்கோ சார் இதுல என்ன இருக்கு” என்று கூறி அத்துடன் இனி அதை பற்றிய பேச்சுக்கள் எழக் கூடாதென்று தத்தம் பிள்ளைகளிடம் கூறி வைத்தனர்.​

கோதையை அவளது சீமந்தத்தில் இருந்து கீழாக பார்த்த அவளது அத்தைகள், அவளுக்கு கிடைத்த அற்புதமான வாழ்க்கைத்துணையை கண்டு பொறாமையுடன் தான் சென்றனர்.​

பூர்ணாவின்‌ விழிகள் கௌஷிக்கின் மீது பெரும் ஏக்கத்துடன் பதிந்தது. தனது தமையன் கோதையின் மீது வைத்திருப்பதை போல இவன் ஏன் தன்னை நேசிக்காமல் போனான்? என்று முதல் முறையாக அவளது மனம் சிந்திக்க தொடங்கியது.​

அனைவரும் கலைந்து சென்றனர். மாலையில் மகள் மற்றும் மருமகனை குழந்தையுடன் அமர வைத்து மஹா திருஷ்டி கழித்தார்.​

அதுவரை கூட கோதைக்கு அர்ஜூனுடனான தனிமை கிட்டவில்லை. இரவில் இங்கு தங்குவானா? என்று அவள் எதிர்பார்த்திருக்க, இரவு உணவு உண்ட கையுடன் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சியவன் அப்படியே அனைவரிடமும் விடை பெற்று கிளம்பி விட்டான். முற்றிலும் மனம் உடந்தே விட்டாள். அவனது பாராமுகம் அவளை மிகவும் தவிக்க வைத்தது. சற்று அதிகப்படியாக தான் பேசிவிட்டோம் என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.​

இதுவே வாடிக்கையும் ஆனது. அடுத்த மூன்று வாரங்களும் இதே போல வருவான், அவளது நலம் விசாரிப்பான், குழந்தையை கொஞ்சுவான் கிளம்பி விடுவான். அவள் அலை பேசியில் அழைத்தாலும்,​

“ம் சொல்லு கோதை, என்ன விஷயம்?” என்று உணர்வுகள் துடைத்த குரலில் கேட்டு இரண்டொரு வார்த்தைகள் பேசுவான். இந்த விஷயத்தை பற்றி அவள் தொடங்கினாலே அழைப்பை துண்டித்து விடுவான்.​

பாராமுகம் என்றில்லை, அவள் கேட்டால்​

பதில் சொல்வான். அதற்கு மேல் ஒன்றும் இருக்காது. அவள் அவனுக்கு படித்த அதே பாடத்தை அவளுக்கு திருப்பிப் படித்தான். இப்போது தனக்கு வலிப்பது போல தானே அவனுக்கு வலித்து இருக்கும் என்று என்னும் போதே தனக்கு இது தேவை தான் என்று தன்னையே நொந்து கொண்டாள்.​

அடுத்த வாரம் அவர்களின் திருமண நாள் வர இருக்கிறது. நிச்சயம் அதற்காவது பேசுவான் என்று அவள் நினைத்து இருக்க, அன்று வந்தவன் அடுத்த வாரம் அமெரிக்கா கிளம்புவதாக கூற, துடித்து விட்டாள். திருமணநாளும் அதுவுமாக வெளிநாடு செல்ல இருக்கிறான். தன்னிடம் ஒரு வார்த்தை கூறாமல் எல்லோர் முன்பும் தானே கூறி இருக்கிறான் என்று எண்ணியவள், கலங்கிய விழிகளுடன் குழந்தைக்கு பசியாற்றும் சாக்கில் உள்ளே சென்று விட்டாள்.​

பேதை மனது கண்ணாடியில் தன்னை பார்த்து, இப்போது தாய்மை பூரிப்பு கூடி சற்று கொழுக் மொழுக் அழகியாக இருந்த தனது பிம்பத்தை பார்த்து, “ஒரு வேளை முன்ன மாதிரி அழகா இல்லைன்னு என்னை பிடிக்கலையோ!” என்று கேள்வி கேட்க, அவளது தலையில் தட்டிய மனசாட்சி,​

“நீ எப்படி இருந்தாலும் அவன் காதல் அப்படியே தான் டி இருக்கும். நீ பேசின பேச்சு தாங்காமல் தான் இப்படி இருக்கான்” என்று உண்மையை உரைக்க, அவனது மௌனம் கலைய காத்திருந்தாள்.​

அவளது கலங்கிய கண்களை பார்த்தவனுக்கு திருமண நாளும் அதுவுமாக அவளை விட்டுவிட்டு செல்ல மனதில்லை. பயணச்சீட்டை திருமண நாளுக்கு அடுத்த நாளாக மாற்றி இருந்தான்.​

ஆனால் அவளிடம் கூறாமல் வைத்திருந்தவன் கடைசி இரண்டு நாட்கள் அவளை பார்க்கவே போகாமல் இருந்தான்.​

“என்ன டி மாப்பிள்ளை இன்னிக்கு ஊருக்கு கிளம்பி இருக்கணுமே. வந்து சொல்லிக்காம கிளம்பிட்டாரா? இன்னுமா உங்களுக்குள்ள எதுவும் சரி ஆகலை?” என்றார் மஹா ஆதங்மாக. இத்தனை நாட்கள் கண்டும் காணாமல் இருந்தவர்கள் இப்போது பொறுக்க முடியாமல் கேள்வி கேட்க அவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வர, அவளது அறைக்கு சென்று படுத்து விட்டாள்.​

விடிந்தால் அவர்களுக்கு திருமணநாள். முதல் திருமண நாள். நேரில் வந்து ஒரு வாழ்த்து கூட சொல்லாமல் கிளம்பி விட்டானே என்று அவள் அழுது தீர்க்க, பின்புறமிருந்து அவளை இரு வலிய கரங்கள் அணைத்துக் கொண்டது.​

அணைத்த உடனேயே கணவனின் வருகையை அறிந்து கொண்டவள் ஒரு விம்மலுடன் திரும்பி அவனது மார்பில் புதைந்து கொண்டாள்.​

“ஊ..ஊ..ருக்கு போகலையா?” என்றாள் விம்மலும் விக்கலுமாக.​

அவளை அணைத்துக் கொண்டு கூந்தலில் முகம் புதைத்துக் கொண்டவன்,​

“உன்னோட கலங்கின கண்களை பார்த்துட்டு எப்படி டி ஊருக்கு கிளம்புவேன். வந்து உன்னை பார்த்துட்டு போக தான் வந்தேன். இன்னும் ரெண்டு மணி நேரத்தில் ஏர்போர்ட்ல இருக்கனும்” என்றான்.​

“என்.. என் மேல கோபம்” என்று அவள் தொடங்கும் போதே அவளது இதழ்களில் விரல் வைத்து தடுத்தவன்,​

“அதை பத்தி பேசாத. இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பனும் நான். பிளீஸ் கொஞ்சம் அமைதியா இரு..” என்றவன் அவளை தன் கைவளைவில் வைத்துக் கொண்டே விட்டத்தை வெறித்துக் கொண்டு நேரம் போவது தெரியாமல் படுத்துக் கிடந்தான்.​

இரவின் அமைதியில் வார்த்தைகளும் காமங்களுமற்ற மௌனமும் பேரழகு தான்! காதலின் பரிணாமம் தான்!​

நேரம் செல்வதை உணர்ந்து, அவளது நுதலில் அழுந்த முத்தமிட்டு விட்டு எழுந்தவன், “கிளம்பனும் மா” என்று கூறி தனது சட்டை பையில் இருந்து ஒரு சிறிய நகைப் பெட்டியை எடுத்தவன் அதில் இருந்த கைசங்கிலி ஒன்றை எடுத்து அவளது கைகளில் அணிவித்து,​

“ஹாப்பி ஆணிவர்சரி” என்று கூறியவன் அதிக நேரம் அங்கு தாமதிக்காமல் கிளம்பி விட்டான். தாய்மையின் பூரிப்பில் கண்களோடு மனதையும் நிறைக்கும் அவளின் அழகில் அதற்கு மேல் அங்கு இருந்தால் தன்னிலை இழக்கப் போவது உறுதி என்று தெரியும். பேசி தீர்க்க வேண்டியது தங்களுக்குள் நிறைய இருக்கிறது. அதற்கு முன் வேறெதுவும் கூடாது என்று கிளம்பி விட்டான்.​

அவன் திரும்பி வர இரண்டு மாதங்கள் ஆனது.​

தினம் அலைபேசியில் பேசிக் கொண்டாலும் கூட குழந்தையை பற்றி அல்லது உண்டாயா உறங்கினாயா என்பது போன்ற பொதுப்படையான கேள்விகள் தான்.​

இரண்டு மாதங்களுக்கு பிறகு அவன் வந்த பின்பும் கூட அவளை அவனுடன் அழைத்து செல்வதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கவே அவளது குடும்பத்தில் அனைவருமே இதை எப்படி கேட்க என்று குழப்பிக் கொண்டு இருந்தனர்.​

குழந்தை பிறந்து இருபது நாட்களில் கொண்டு வந்து விடச் சொன்ன சம்பந்தி அம்மாள் அதன் பின் அதை பற்றி பேசவில்லை ஏன்? என்று தெரியாமல் குழம்பியவர்களுக்கு எங்கு தெரியப் போகிறது, அவர்களின் மாப்பிள்ளை தனது தாயை அந்த பேச்சு பேசியதற்காக பேச்சால் சுழட்டி அடித்து விட்டானென்று! மனைவியை எப்படி யாரிடமும் விட்டுக் கொடு6 மாட்டானோ, அதே போல பெற்ற தாய் தவறே செய்து இருந்தாலும் மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்கும் வேலையை செய்ய மாட்டான்.​

குழந்தைக்கு நான்கு மாதங்கள் முடிந்திருந்தது. கோதையின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது. போதும் தாய் வீட்டு வாசம், கணவன் வீட்டிற்கு எப்போது செல்வோம் என்ற ஏக்கம் மட்டுமே அவளிடம் எஞ்சி இருந்தது.​

அன்று மாலை வழக்கம் போல குழந்தையை பார்க்க அர்ஜுன் வந்த போது, தயங்கி தயங்கி மஹா கேட்டே விட்டார்.​

“கோதையையும் குழந்தையையும் உங்க ஆத்துக்கு கொண்டு வந்து விடனும். எப்போன்னு சொன்னா நாள் பார்த்து கொண்டு வந்து விட்டுடுவோம். உங்க அப்பா கிட்ட பேசினோம் அவர் உங்ககிட்ட பேசிக்க சொல்லிட்டார்” என்றார் மஹா.​

சட்டென்று மனைவியை பார்த்தான். அவளது கண்களை ஆழ்ந்து பார்த்து விட்டு, மாமியாரிடம் திரும்பி,​

“ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்கோ சொல்றேன்” என்று கூறி சென்றான். அதேபோல இரண்டு நாட்களில் வந்தவன்,​

“ஆபீஸ் கிட்ட சீப்ராஸ்ல ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி இருக்கேன். நல்ல நாள் பாருங்கோ. அங்க கிரஹபிரவேசம் பண்ணி தனிக்குடித்தனம் போகலாம்னு இருக்கோம்” என்று அவன் கூற கோதை உட்பட அனைவரும் அதிர்ந்து தான் போயினர். வயது வந்த தங்கை திருமணத்திற்கு காத்துக் கொண்டிருக்க, அதென்ன தாய் தகப்பனை விட்டுவிட்டு தனியே செல்வது என்று அவளது பெற்றோர் நினைக்க, அதையே அவள் அவனிடம் கேட்டாள்,​

“இங்க பாருங்கோ ஒத்துக்கறேன் உங்கம்மா என்னை ரொம்ப நோகடிச்சா தான். நான் ரொம்பவும் மென்டல் டிப்ரஷன்ல கஷ்டப்பட்டேன் தான். அதுக்காக தனியா போகனும்னு உங்க கிட்ட நான் சொல்லலை. என் மேலயும் தப்பு இருக்கு. அவா பேச்சு அளவுக்கு மீறி போகும் போது, நான் உங்க கிட்ட சொல்லி இருக்கனும். சொல்லாம போனது என் தப்பு தான். அதுக்குன்னு தனிக்குடித்தனம் போக எல்லாம் நான் நினைக்கலை. கல்யாண வயசில் ஒரு தங்கை இருக்கா உங்களுக்கு. அவளுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி அனுப்பும் பொறுப்பு நமக்கும் இருக்கு. இந்த தனிக்குடித்தனம் ஐடியா எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு சீக்கிரம் நம்ம ஆத்துக்கு கூட்டிண்டு போகும் வழியை பாருங்கோ” என்றாள் படபடவென்று.​

தங்கள் மகளை ரொம்ப ரொம்ப நல்ல விதமாக வளர்த்த நிறைவு பெற்றவர்களின் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்தது.​

அவளை ஆழ்ந்து பார்த்தவன்,​

“ஆர் யூ ஷ்யூர்?” என்று மீண்டும் உறுதி படுத்திக் கொண்டான்.​

“ஆமா ஆமா” என்றாள் அழுத்தம் திருத்தமாக.​

அதன் பின் அவனும் தாமதிக்கவில்லை. தாய் தந்தையிடம் அவள் தனிக்குடித்தனம் போக விரும்பவில்லை என்று கூறி நல்ல நாள் பார்த்து கொண்டு வந்து விட இருப்பதாக கூறினான். விஷ்வேஸ்வரன் மருமகளின் குணத்தை நினைத்து பெருமை கொள்ள, அகிலாண்டேஸ்வரிக்கு ஒப்புக் கொள்ள மனமில்லை. சில மனிதர்கள் அத்தனை எளிதில் திருத்துவது இல்லை.​

ஒரு நல்ல நாளில் கோதையின் பெற்றோர்கள் மட்டும் உடன் வந்து பெண்ணை பேத்தியுடன் அவளது புகுந்த வீட்டில் விட்டுச் சென்றனர்.​

பூர்ணா கூட ஒரு அளவிற்கு மரியாதையாக தான் நடந்து கொண்டாள். அவளது விழிகள் கௌஷிக்கை எதிர்பார்த்து ஏமாந்து போனது.​

அதே வீடு அதே மனிதர்கள் ஆனால் இப்போது கணவனின் காதல் என்ற திடத்துடன் காலடி எடுத்து வைத்திருந்தாள். இரவு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அவள் அறைக்குள் நுழைந்த போது அர்ஜுன் மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.​

“ஒரு அஞ்சு நிமிஷம்” என்று சொன்னவள் குளித்து விட்டு இரவு உடை அணிந்து கொண்டு வந்தாள். அதற்குள் குழந்தை பசியில் சிணுங்க தொடங்கியது.​

“இதோ இதோ அம்மா வந்தாச்சு” என்று கூறி குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு அருகே படுக்கையில் சாய்ந்து அமர்ந்து பிஸ்னஸ் லைன் பத்திரிக்கையில் மூழ்கினான் அர்ஜுன். படுக்கையில் அமர்ந்து மகளுக்கு பசியாற்ற‌ தொடங்கினாள்.​

சில நிமிடங்களில் எல்லாம் “அவுச்” என்று கோதை பலமாக அலற, பதறியவன் புத்தகத்தை போட்டுவிட்டு,​

“என்ன ஆச்சு கோதை? என்னம்மா?” என்றான்.​

“இந்த வாண்டு கடிக்கறா” என்றாள் பாவமாக.​

கண்களில் அவளுக்கு கண்ணீரே தளும்பி விட்டது. துடைத்துக் கொண்டு மீண்டும் அவள் பசியாற்ற தொடங்க, குனிந்து குழந்தையின் தலையில் முத்தமிட்டு,​

“பட்டு அம்மா பாவம் டா. கடிக்காத” என்றான் மென் குரலில். என்ன புரிந்ததோ குழந்தை அதன் பிறகு சமத்தாக பசியாறி விட்டு உறங்கியது. உறங்கிய குழந்தையை தூக்கி பக்கத்தில் இருந்த தொட்டிலில் விட்டவன் மீண்டும் படுக்கையில் அமர்ந்து புத்தகத்தில் மூழ்கினான். இல்லை மூழ்குவது போல நடித்தான்.​

முன்பை விட மெருகு கூடி, தாய்மையின் எழில் கொஞ்ச, பால் வாசனையும் பேபி பவுடர் வாசனையும் கலந்து ஒரு வித சுகந்தம் பரவ அருகே இருந்தவளை காண காண இளமை விழித்துக் கொண்டது. ஆனாலும் அன்று அவளது பேச்சு நெருஞ்சியாய் அவனை குத்தியது.​

அவன் எப்படி பேச்சை தொடங்க என்று யோசித்துக் கொண்டிருக்க, அவளே அவனது கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி தூர வீசியவள் அவனை பார்த்து முறைத்து,​

“பேசலாமா?” என்றாள்.​

“அதான் அன்னைக்கே பேசிட்டியே கோதை” என்றான் அந்த வலியை குரலில் தேக்கி.​

அதை கேட்டு அவளுக்கு கண்கள் கலங்கியது.​

“பிளீஸ் நான் பேசினது தப்பு தான்” என்று அவள் தொடங்க​

“நான் உன்னை காதலிச்ச விஷயத்தை கல்யாணம் ஆனதுமே உன்கிட்ட சொல்லாதது தப்பு தான். அதை சொன்னா அப்பறம் ஒன்னு ஒன்னா எல்லாத்தையும் சொல்லணும். நிஜமா நேக்கு வத்சனை நீ தப்பா நினைச்சுடுவியோன்னு பயம். நான் இருந்த நிலையை தாங்க முடியாமல் எனக்காக தான் அவன் அப்படி செஞ்சான். அவனை நீ தப்பா எடுத்துக்க கூடாதுன்னு சொல்லாம இருந்தாலும், நீ சந்தோஷமா இருந்த, அந்த சந்தோஷத்தை கெடுக்க விரும்பலை. உன்னோட வெறுப்பை தாங்கும் சக்தி நேக்கு அப்போ இல்லை, ஏன்.. இப்பவும்.. எப்பவுமே அது நேக்கு இல்லை” என்றவன் குரலை சரி செய்து கொண்டு தொடர்ந்தான்.​

“உன்னை முதல் தடவை ரிச்சி ஸ்ட்ரீட் பக்கம் பார்த்துட்டு எத்தனை நாள் உன்னை தேடி அலைஞ்சேன் தெரியுமா? உன்னை இந்த ஆத்து கூடத்தில் முதல்முதலா பார்த்தப்போ சந்தோஷத்தில் துள்ளி தான் குதிச்சேன். உன்னை பார்க்காம இருக்க முடியாது யூஎஸ்க்கு நான் வர மாட்டேன்னு சொன்னதும் தான் வத்சன் விளையாட்டாய் அந்த ஃபோட்டோ எடுத்தான். எந்த விதமான கேவலமான எண்ணத்திலேயே எடுக்கலை. ஆனா என் காதலை சேர்த்து வைக்க அவனுக்கு வேற வழி தெரியாமல் பண்ணிட்டான். தப்பு தான் இல்லைங்கலை. என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு பதில் அந்..அந்த கல்யாணம் நடந்து இருந்தா எங்கயானும் நிம்மதியா இருந்து இருக்கும்னு நீ சொன்னதை கேட்டு தான் அவன் பண்ணினது ரொம்ப பெரிய தப்புன்னு நேக்கும் புரிஞ்சுது. உன்னை கல்யாணம் பண்ணின்டு சந்தோஷமா வெச்சுண்டு இருக்கறதா தான் நினைச்சுண்டு இருந்தேன். உனக்குள்ள அவ்வளவு அழுத்தங்கள் இருந்து இருக்குன்னு தெரியாமல் போச்சு” என்று உடைந்த குரலில் சொன்னவன் தொடர்ந்து,​

“என் கூட வாழ்ந்த வாழ்கை உன் நிம்மதியை அத்தனை தூரமா கெடுத்து இருந்தது? என் கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமேடி!” என்ற போது குரலுடன் சேர்ந்து அவனுமே மொத்தமாக உடைந்து விட்டான்.​

அவன் கலங்க பொறுக்குமோ பெண் மனம்?​

“அச்சோ! அப்..அப்படி எல்லாம் இல்லை அஜு, நான் தான் ஏதேதோ கோபத்தில்.. அதுவும் அன்னைக்கு சீமந்தத்தன்னைக்கு என் அத்தைகள் முன்னாடி எல்லாம் பேசின பேச்சு என்னை ரொம்ப காயப்படுத்தி இருந்தது. உடனே இந்த ஃபோட்டோ வேற பார்த்து ரொம்ப உடைஞ்சு போய்ட்டேன். உங்கம்மா பேசின அந்த இடத்தில் கூட நான் வாயை திறக்காமல் வந்ததுக்கு காரணம்..” என்று அவள் தொடங்க,​

“அதான் தெரியுமே, வாழ்கையே உனக்கு யாசகம் கொடுத்து இருக்கேன், அதுக்காகவே பொறுத்து போறன்னு சொன்னியே” என்றவன் அவளை பார்த்து,​

“பிச்சையா போட இது என்ன காசா பணமா? உன்னோட என் வாழ்கையை சேர்த்து சந்தோஷமா வாழ்ந்துண்டு இருக்கேன். இதுல எங்க வந்தது பிச்சை எல்லாம்? பைத்தியம்.. எத்தனை தடவை கேட்டு இருப்பேன் உன் மனசுல என்ன அழுத்தம்னு? ஒரு தடவை சொல்லி இருக்கலாமே டி!” என்று கடுமையாக தொடங்கியவனின் குரல் தழுதழுத்து முடிந்தது. தொடர்ந்து,​

“என்னோட வாழ்ந்த வாழ்கையில் நிம்மதி இல்லைன்னு சொல்லிட்டியே?! நேக்கு கொ..கொஞ்சம் கூட மனசு ஆறலடி கோதை. நீ நிம்மதி இல்லாமல் தவிச்சப்போ எல்லாம் கூட என் தேவைகளை தீர்த்துண்டு உன்னை கவனிக்காமல் விட்டுட்டேனோன்னு என் மனசாட்சி குத்தறது. இனி ஒவ்வொரு தடவையும் உன் கூட சந்தோஷமா இருக்கும் போது கூட, என் மனசுல என் கூட மனசுக்கு பிடிக்காம நிம்மதி இல்லாமல் தான் இருக்கயோன்னு தோணுமே!” என்று அவன் புலம்ப அவள் வாய் விட்டு கதறியே விட்டாள்.​

“அச்சோ! நிஜமா அப்படி எல்லாம் இல்லை. பிளீஸ்.. பிளீஸ்.. அப்..அப்படி எல்லாம் பேசாதீங்கோ. உங்க கூட வாழ்ந்த வாழ்கை அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. என்னோட அத்தனை அழுத்தங்களையும், பட்ட அவமானங்களையும் ஒரு நொடியில் மறக்க வைக்கும் சக்தி உங்க காதலுக்கு மட்டும் தான் இருக்கு. ஏதோ கோபத்தில் பேசிட்டேன். உங்க கோதை தானே மன்னிக்க கூடாதா?” என்று அவள் கேட்டு முடியும் முன் அவளது வார்த்தைகள் அவனது அதரங்களுக்குல் முற்று பெற்றது.​

நீண்ட நெடிய இதழ் தீண்டலுக்கு பின் அவளை விலக்கி, கண்களை துடைத்து விட்டவன்,​

“உனக்கு என் மேல கோபம் எதுவும் இல்லையே? நிஜமா என்னை கல்யாணம் பண்ணின்டதுக்கு நீ வருத்தப் படலையே?” என்று கேட்ட நொடி பட்டென்று அவனது இதழ்களில் ஒரு அடி அடித்தவள்,​

“நல்ல வேளை அப்படி பண்ணி என்னை கல்யாணம் பண்ணின்டேள். இல்லைனா இப்படி ஒரு காதலை இழந்து இருப்பேன்..” என்றாள் கண்களில் காதலுடன்.​

சற்று நேரம் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளது நெற்றியோடு நெற்றி முட்டி, அப்படியே சில நொடிகள் கண் மூடி இருந்தபடி,​

“இனிமே எதையும் என்கிட்ட இருந்து மறைக்காதே. அம்மா இனிமே உன் வழிக்கு வர மாட்டா. அப்படியே எதுவும் பேசினா என்கிட்ட சொல்லு” என்றவனுக்கு குழந்தையின் புண்ணியவாஜனம் முடிந்த அன்று நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.​

வீட்டிற்கு திரும்பிய நொடியே தனது தந்தை, தாய் மற்றும் தங்கையை அமர வைத்து,​

“உங்க கிட்ட பேசணும்” என்றான் அழுத்தமாக.​

விஷ்வேஸ்வரனுக்கு புரிந்தது. மகன், தன் மனைவி மேல் கோபமாக இருக்கிறானென்று.​

“எப்படிம்மா கோதையை அவ்வளவு மட்டமா பேசி அவமானப்படுத்த முடிஞ்சுது உங்களால?” என்றான்.​

“நேக்கு என்ன தெரியும் நீ தான் காணாததை கண்ட மாதிரி அவ மேல பித்து பிடிச்சு சுத்தி அவ கல்யாணத்தை நிறுத்தினன்னு?” என்று அப்போதும் திமிராக தான் பேசினார்.​

“யார் கிட்டயும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் மா. அதே நேரம் நீங்க அவளை இனிமே அவமானப் படுத்தினால் அது என்னை அவமானப் படுத்தற மாதிரி. இனிமே பொறுத்துண்டு போக மாட்டேன்.” என்றான் திட்டவட்டமாக.​

தந்தையிடம் திரும்பி,​

“அப்பா குழந்தையை கொண்டு வந்து அவா விடும் போது நான் தனிக்குடித்தனம் போய்டலாம்னு இருக்கேன்” என்றான் பளிச்சென்று.​

தந்தையாக அவருக்கு கேட்க கஷ்டமாக தான் இருந்தது. பூர்ணாவும், அகிலாவும் கூட இதை எதிர்பார்க்கவில்லை தான். மகன் இத்தனை தூரம் செல்வான் என்று அவரும் நினைக்கவில்லை.​

“இது அவசியமாப்பா?” என்றார் விஷ்வேஸ்வரன்.​

“என்னோட பொண்டாட்டி இதே நிலையில் இங்க இருந்தா டிப்ரஷன்ல விழுந்துடுவா. அவ நிம்மதிக்கு இது முக்கியம் தான் ப்பா” என்றான்.​

புரிந்தது என்று தலை அசைத்தவர்,​

“வீடு வாங்கிட்டு குடி போய்டு..” என்று மட்டும் கூறி இருந்தார்.​

ஆனால் தனிக்குடித்தனம் வேண்டாம் என்று கோதை சொன்னதை அவன் வீட்டில் சொன்னதும் மிக மிக மகிழ்ந்து போனார் விஷ்வேஸ்வரன்.​

“நல்லா பார்த்துக்கோ. இப்படி ஒரு மாட்டுப்பொண்ணு எங்க தேடினாலும் நமக்கு கிடைக்காது. இனிமே தேவை இல்லாமல் நீங்க ரெண்டு பேரும் பேசினது தெரிஞ்சது தொலைச்சு கட்டிடுவேன்.” என்று அவர் போட்ட சத்தத்தில் அகிலா அடங்கிப் போனார்.​

அது அனைத்தையும் நினைத்து ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு,​

“சரி டா நேரம் ஆச்சு, குழந்தை எழுந்துக்கறதுகுள்ள நீ கொஞ்ச நேரம் தூங்கு” என்றான் மனம் இல்லாமல்.​

சற்று ஏமாற்றமாக உணர்ந்தவள்,​

“வேண்டாமா?” என்றாள்.​

அவளை புரியாமல் பார்த்தவனிடம்,​

“ஜாங்கிரி கொடுக்கலாம்னு நினைச்சேன். வேண்டாமா?” என்றாள் கண்கள் சிமிட்டி. அதில் மொத்தமாக வீழ்ந்தவன்,​

“வேணும் தான்.. ஆனா இப்போ தானே நாலு மாசம் ஆகி இருக்கு. அதுவும் சீசெக் வேற” என்றான் ஆசை பாதி பயம் மீதியாக!​

அவன் சொன்னதை கேட்டு ஒற்றை கண்ணை சிமிட்டி சிரித்தாள்.​

“என்னடி டாக்டர் கிட்ட கேட்டியா என்ன?” என்றான் ஆர்வத்துடன். அவனது கைகளை தன்மீது படற விட்டுக் கொண்டாள், பதில் சொல்லாமல்.​

“பதில் சொல்லு டி” என்றான் ஆர்வமாக.​

“ம்ம் இப்படியே பேசிண்டே இருந்தா இன்னும் அரை மணி நேரத்தில் உங்க பொண்ணு எழுந்துடுவா. அப்பறம் ஜாங்கிரியும்‌ கிடையாது ஒன்னும்..” என்று அவள் கூறிக் கொண்டிருந்த போதே அவன் தனது வேலையில் மூழ்கத் தொடங்க, வளையொலியும் சிரிப்பொலியும் மட்டுமே அங்கு சங்கீதம் பாடியது.​

சுபம்.​

அன்பு வாசகர்களே,​

என்னடா இவ கௌஷிக் மதாலசா , ஶ்ரீவத்சன் ருக்மணியை அம்போன்னு விட்டுட்டான்னு நினைக்க வேண்டாம்.​

கௌஷிக் மதாலசாவை பற்றி (இரண்டாம் முடிச்சு) சப்தபதியிலும்​

ஶ்ரீவத்சன் ருக்மணியை பற்றி (மூன்றாம் முடிச்சு) மாங்கல்யதாரணத்திலும் பார்க்கலாம்.​

சந்திப்போமா?​

 
வாவ் சூப்பர் மூணு முடிச்சுல முதல் முடிச்சு நல்லா ஸ்ட்ராங்கா போட்டாச்சு, அடுத்த முடிச்சு க்கு வெயிட்டிங்
 
Top