இரவு நேரம், மிதமாக வீசிய தென்றல் காற்றில் முன்னுச்சி முடி நெற்றியை தொட்டுச் செல்ல… தன் கையிலிருந்த மெனு கார்டிலே பார்வையை பதித்தவாறு அமர்ந்திருந்தான் மித்ரன். அவனருகே அமர்ந்திருந்த மதுரிமா கண்களின் மீது வந்து விழுந்த முடிக்கற்றையை காதோரம் ஒதுக்கியவாரே, " சோ, என்ன கஷ்டப் படுத்துற மாதிரி ஏதோ சொல்ல போற அப்படித்தானே? " என்று பக்கவாட்டில் திரும்பி மித்ரனின் முகத்தை பார்த்துக்கொண்டே கேட்டாள். இருவரும் ஓர் ரூப் டாப் ஃகாபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர்.
ஏனோ அவளுக்கு சில நாட்களாகவே இனம் புரியாத ஒரு பயம் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது. இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் இப்பொது குறைந்து விட்டதை போல் உணர்ந்தாள்.
மதுரிமா கேட்டதிற்கு சிறிது நேர மௌனதிற்கு பின், "எப்படி சொல்ற?" அவன் வார்த்தைகள் சாதாரணமாக வந்து விழுந்தது.
இப்படி தன்னிடமே கேள்வியை திருப்பி விடுபவனிடம் என்ன கேட்பது, "இல்ல… வந்ததிலிருந்து இதுவரைக்கும் ஒரு தடவை கூட நீ என் கண்ண பார்த்து பேசல … எனக்கு ஒருமாதிரி பயமா இருக்கு பாப்…" தொண்டைக் குழி அடைத்தது அவளுக்கு.
அப்போதும் அவளை பார்க்காமல்.. தன் முகத்தை பக்கவாட்டில் திருப்பி இடது கையால் தலைமுடியை அழுந்த கோதியவன், "ம்ம்ம்… ஆமா கொஞ்சம் ஹர்டிங்கா தான் இருக்கும்… ஆனா, இது இன்னும் கொஞ்ச நாள் போனா உனக்கு இன்னும் கஷ்டமா இருக்கும் "
" புரியல " அவள் குரல் நளிந்து ஒலித்தது.
அவன் வலது கையின் அருகிலிருந்த அவள் கை விரல்களில் தன் பார்வையை பதித்தவன், அவ்விரல்களுடன் சேர துடித்த தன் விரல்களை கட்டுபடுத்திக் கொண்டு பெருமூச்சை வெளியிட்டவாரே, "பாப்பா…" என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
அக்குரலுக்கு எப்போதும் போல் படபடத்த மனதை அவளால் தடுக்க முடியவில்லை, "ம்ம்ம்… சொல்லு பாப்…" என்றாள்.
அவன், "நமக்குள்ள ஒரு பீலிங் வந்து இருக்குல்ல…" என்று தொடங்கியதுமே,
அவன் சொல்ல வருவது என்னவென்று அவளுக்கு புரிந்தது. அதற்கு, அவளும் புருவம் சுருங்க, "ம்ம்ம்" என்றாளே தவிர வேறு வார்த்தைகள் உதிர்க்கவில்லை.
"அது இனிமேலும் கன்டினியூ ஆக வேணான்னு எனக்கு தோணுது"
"உனக்கு பிடிக்கலையா…" என்ன முயன்றும் அவளால் வருத்தத்தை குரலில் காட்டாமல் இருக்க முடியவில்லை.
"இங்க பாரு… உனக்கே நல்லா தெரியும் எனக்கு இந்த கல்யாணம், குழந்தைங்க, பேமிலி… இதுல எல்லாம் இன்டெர்ஸ்ட் இல்லனு… பிகாஸ், என்னால இதுலாம் ஹண்ட்ல் பண்ண முடியாது, புரியுதா?" என்று விளக்கமளிக்க முயன்றவன், அப்போது தான் அந்த இடத்தில் கசிந்து வந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகத்தை கவனித்தான். புருவங்கள் சுருங்க கண்கள் கலங்கி, மூக்கின் நுனி சிவந்து, முகம் வாடிப்போய் இருந்து.
அதில் சற்று மனம் தடுமாறினாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டவன், "புரிஞ்ச்சுக்க ட்ரை பண்ணு பாப்பா " அவளின் கலங்கிய கண்களை பார்த்துக்கொண்டே சொன்னான்.
விழுந்துவிட துடித்த கண்ணீரை இமைகள் தட்டி கட்டுப்படுத்தியவள், "அதுக்கு என்ன செய்லான்னு சொல்ற பாப்…" மதுவின் குரல் உடைந்து ஒலித்தது.
புரிந்தும் புரியாதது போல் அவள் கேட்ட விதத்தில் மித்ரனுக்கு சிறு கோபம் எட்டி பார்த்தது. "என்ன செய்யலான்னு கேட்டா... லெட்ஸ் புட் அன் எண்ட் டு திஸ்…" அவன் புருவங்கள் கோபத்தில் சுருங்கியது.
" என்னனு பேர் வைக்காம நமக்குள்ள ஒன்னு ஓடிட்டு இருக்குல்ல அந்த எழவ தான் சொல்றேன்… அத தூக்கி போட்ட தான் நிம்மதியா இருக்கும்" பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.
அவன் உதிர்த்த வார்த்தைகளில் அவள் மனம் உடைந்த கண்ணாடி தூண்டுகளாய் சிதறிப்போனது. இரண்டு நிமிடம் அமைதியாக கடந்து போக, இருவரும் எதும் பேசிக்கொள்ளவில்லை. அவன் அருகாமையும், அவன் மூச்சுக்காற்றும் இம்சை செய்ய…
அதற்கு மேலும் அவளால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. விட்டால் அவன் முன் அழுது விடுவோம் என்று தோன்றவே சட்டென்று எழுந்தவள், "தே.. தேங்க்ஸ் பாப்…" என்று வார்த்தைகளை தட்டுத் தடுமாற சொல்லிவிட்டு அவன் முகத்தை கூட பார்க்காமல், கண்ணீரை மறைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.
அவள் சென்ற பின்பும் சிறிது நேரம் அங்கு அமர்த்திருந்தவனுக்கு ஒருபுறம் நிம்மதியாக இருந்தாலும், மறுபுறம் எதோ உடைந்த உணர்வு. காலப்போக்கில் அது சரியாகிவிடும் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்ட பின்பே அங்கிருந்து கிளம்பினான்.
********
இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. காலை நேரம் ஜன்னல் வழியே கசிந்து வந்த சூர்ய ஒளி கண்களை கூச செய்ய… மெதுவாக கண் விழித்த மித்ரன் காதில்,
"இனி நானும்
நான் இல்லை, இயல்பாக
ஏன் இல்லை சொல்லடி
சொல்லடி
முன்போல நான்
இல்லை, முகம் கூட
எனதில்லை ஏனடி
ஏனடி…
நானும் நீயும்
ஏனோ இன்னும் வேறு
வேறாய் தூரம் என்ற
சொல்லை தூக்கில்
போட்டு கொள்ள நீ
வாராய்… புரையேறும்
போதெல்லாம் தனியாக
சிரிக்கின்றேன் அது ஏனடி"
என்ற பாடல் இயர் போனின் வழியே கசிந்து கொண்டிருந்தது. பாடல் முடியும்வரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவன் மனம் முழுதும் மதுவின் நினைவுகளே.
அவளுக்கும் மித்ரனை மறப்பது எளிதாக இல்லை. காலையில் எழுந்ததுமே 'குட் மார்னிங்' என்று ஒரு குறுஞ்செய்தி அவனுக்கு அனுப்பினால் தான் அவளுக்கு அந்த நாளே முழுமையானதை போல் உணர்வு தோன்றும்.
ஆனால், மித்ரனை எவ்வளவு தூரம் விரும்பினாளோ அதே அளவு இப்பொது கோபமும் அவன் மேல் இருக்கிறது. அவன் சொன்னது போல் எதிலும் விருப்பம் இல்லதாவன் தன்னுடன் பேசி பழகாமலே இருந்து இருக்கலாம். இப்போது தேவை இல்லாத மன வேதனை ஏற்பட்டு இருக்காது. ஒருவேளை அவள் தான் மித்ரனை சரியாக புரிந்துகொள்ளாமல் அளவுக்கு மீறி யோசித்து விட்டோமோ என்று நினைத்து தனக்குள்ளே வருந்திகொண்டிருந்தாள்.
இருவருக்குமான பழக்கம் சமூக ஊடகம் வழியாக நட்பாக தொடங்கியது. "ஹாய்" என்ற குறுஞ்செய்தியில் அறிமுகம் தொடங்கி… பொதுவான விஷயங்கள், குடும்பம், தங்களுக்கு பிடித்தமானவை… என்று அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். அவ்வப்போது சிறிது நேர 'ஸ்வீட் நத்திங்ஸ்' அலைபேசி உரையாடல், கோவில், ஃகாபி ஷாப் சந்திப்புகள்… இருவருக்குள்ளும் நெருக்கத்தை உண்டாக்கியது.
இருவருமே அதை உணர்ந்து இருந்தாலும், பகிர்ந்து கொள்ளவில்லை. அவனுக்கோ இதை காதல், கல்யாணம் என்று எடுத்துச்செல்ல விருப்பம் இல்லை. அவனின் வாழ்க்கை முறைக்கு அது ஒத்துவராது என்று நினைத்தான். அதை அறிந்திருந்த மதுவுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்ள தயக்கமாக இருந்தது. எங்கே தன் மனதில் இருப்பதை சொல்லி அவன் மறுத்து விடுவானோ என்று.
நெருக்கம் அதிகமானால் ஊடலும் சேர்ந்து வந்து விடும். சிறு சிறு ஊடலும் சமாதானமுமாக சென்று கொண்டிருந்தது… ஓர் இடத்தில் அவன் வேறு பெண்களுடன் சாதாரணமாக பேசினால் கூட மதுவிற்கு கோபம் வந்தது. முதலில் உள்ளுக்குள் கஷ்டமாக இருந்தாலும் வெளியில் அவனிடம் காட்டிக்கொள்ள மாட்டாள். எந்த உரிமையில் அதை கேட்பது என்ற தயக்கம்.
சில சமயங்களில் பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபம் எழும். அப்போது எல்லாம் அவனிடம் பேசுவதை தவிர்த்துக்கொள்வாள். அப்படி ஒருமுறை ஒருவாரம் வரை அவள் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருக்க… முதல் இரண்டு நாட்கள் ஏதேனும் வேலை நிமித்தம் பேச முடியாமல் இருக்கிறாள் போல தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மித்ரன் நினைத்துக்கொண்டான். ஒருவாரம் வரை பேசவில்லை என்றதும் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.
முதல் இரண்டு முறை அழைப்பை ஏற்க வேண்டாம் என்று நினைத்தவள், அலைபேசியின் திரையையே அமைதியாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். மறுபடியும் அழைப்பான் என்று இவள் எதிர்பார்த்து அமர்த்திருக்க அவன் திரும்ப அழைக்கவில்லை. சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள் அதற்கு மேல் முடியாமல் தானே அவனுக்கு அழைத்தாள்.
மறுமுனையில் அவன்,
"ஹலோ பாப் என்னடி ரொம்ப பிஸியா ஒரு மெசேஜ் கூட இல்லை" என்றதும், இவளுக்குகோ மனதில், 'அடப்பாவி ஒருத்தி மெசேஜ் பண்ணல கால் பண்ணல எதும் கோபமா உடம்பு சரியில்லையானு கூட யோசிக்கம இவன… ' என்று பற்களை கடித்தவள். வெளியில் அவனிடம், "நான் எங்க பிஸி… நீங்க தான் உங்க ப்ரெண்ட்ஸ் கூட ரொம்ப பிஸி" என்ன முயன்றும் அவளால் அதை கேட்காமல் இருக்க முடியவில்லை.
" பாப்பா… என்னாச்சு எனக்கு புரியல"
"இல்ல நீங்க தான் ஐஷு கூட வெளிய போறது கால் பேசறதுனு டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்கீங்க ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்னு தான் கால் பண்ணல" என்று அவள் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு கோபத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.
இருந்தும் அதை மறைத்துக்கொண்டவன், "வாட்?... ஐஷு இஸ் ஜஸ்ட் மை ப்ரெண்ட்… ஒன்ஸ் கால் பண்ணா வெளிய மீட் பண்ணி பேசினோம் அவ்ளோ தான்" யாருக்கும் விளக்கம் அளிக்க விரும்பாதவன் இவளுக்காக இறங்கி வந்தான்.
" இங்க என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்… ம்ம்ம் கொட்டி கேட்டுட்டு இருக்க "
"இல்ல ஆனா எனக்கு கஷ்டமா இருந்துச்சு… அவுங்க வந்த ரெண்டு நாள் நீ என்கிட்ட சரியா பேசல"
"அப்படியெல்லாம் எதுவும் இல்ல பாப்பா… உனக்கு என்ன பத்தி தெரியாதா… " இப்பொது அவன் சிறிது இறங்கி வந்தான்.
"ம்ம்ம்…"
"என்னடி ம்ம்ம் ன்னா… "
"ஒன்னு இல்ல" கோபம் குறைந்திருந்தாலும் அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.
"எனக்கு போர்ரெவர் (forever) பாப்பா தான்" என்று அவன் சொன்னதும் அவள் இறங்கி வந்தாள்.
இதை எல்லாம் நினைத்துக்கொண்டே தன் இயர் போனை காதிலிருந்து அகற்றியவன் பாடலை நிறுத்திவிட்டு. அலுவலகம் செல்ல தயாராகி வந்தான். சாப்பிட அமர்ந்தவன் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வராது என்று தெரிந்தும் அவ்வப்போது வருகிறதா என்று அலைபேசியை எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு என்ன வேண்டுமென்று அவனுக்கே புரியவில்லை.
அவளிடம் வேண்டாம் என்று அவன் தான் சொன்னான். ஆனால், இப்பொது எதற்கு அவளை எதிர்பார்க்கிறான் என்று அவன் யோசிக்கவில்லை. அவனால் ஒரு வாரம் கூட மதுவுடன் பேசாமல் இருக்க முடியவில்லை. அவளின் அருகாமைக்காக மனம் ஏங்க தொடங்கியது. வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்பொது தானாக சென்று அவளுடன் பேச தயங்கினான்.
காலை நேரம், அறையின் ஜன்னலின் வழியே சிதறித் தெறித்த மழைத்துளி மதுவின் முகத்தில் பட்டு அவளின் துயிலை கலைத்தது. முகத்தில் ஈரத்தை உணர்ந்தவள் சிரமப்பட்டு மெதுவாக இமைகளை பிரித்தெடுத்தாள். மெல்ல எழுந்தவளுக்கு கொஞ்ச நாட்களாக இரவில் சரியாக தூங்காததால் தலை சுற்றுவது போலிருக்க, அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அங்கிருந்தே ஜன்னலின் வழியே எட்டி பார்த்தவளுக்கு மழைப் பொழிவது தெரிந்தது.
அதைக் கண்டதும் பல நினைவுகள் மனதில் வந்து போக, மெதுவாக கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்துத் தன்னை சரி செய்து கொண்டு எழுந்து பால்கனிக்கு வந்து மழைச்சாரல் முகத்தில் படுமாறு நின்றாள். அங்கு மித்ரனும் படுக்கையில் இருந்தே தன் அறையின் ஜன்னலின் வழியே மழைப்பொழிவை ரசித்தவாரே மதுவின் நினைவில் மூழ்கியிருந்தான்.
ஓர் மழை நேர மாலைப்பொழுது, மழை மிதமாக பொழிந்து கொண்டிருந்தாலும் காற்று சற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. அன்று மது வண்டியை ஓட்டிக் கொண்டு வர, மித்ரன் அவள் பின்னால் அமர்ந்திருந்தான். காற்றின் வேகம் சற்று அதிகரித்ததால் மது வண்டியை ஓட்ட தடுமாறவும், மித்ரன், "பாப்பா வேண்டாம்… வண்டிய ஓரமா நிறுத்து… மழை ஸ்டாப் ஆனதும் போகலாம்…" என்று சொல்லவும், மது வண்டியை பக்கத்திலிருந்த ஓர் மூடப்பட்டிருந்த கடையின் முன் நிறுத்தினாள். பெரிதாக ஆள் நடமாட்டமில்லாத சாலை என்பதால் அங்கு இவர்களைத் தவிர யாரும் இருக்கவில்லை.
ஈரக்காற்றில் குளிர் எடுக்கவே மது கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு திரும்பி மித்ரனைப் பார்த்தாள். அவனோ மழையில் நனைந்திருந்த முன்னுச்சி முடியை தன் விரல்களில் கலைத்து விட்டவாரே வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கை முட்டி வரை ஏற்றி விடப்பட்ட வெள்ளை நிற டீஷர்ட், அதற்கு எற்றார் போல ஆலிவ் க்ரீன் நிற பேண்ட் அணித்திருந்தான். அலையலையான கேசம் காற்றிலாட, அதை அவன் கோதி விடுவதைப் பார்த்தவளுக்கு, தான் அதை செய்ய வேண்டும் என்ற ஆசை எழ, அவனை ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டே நின்றிருந்தாள்.
அவள் தன்னையே கவனிப்பதை அவளை பார்க்காமலே உணர்ந்து கொண்டவன், அவள் எதிர்பாரா நேரத்தில் பார்வையை அவள் பக்கம் திருப்பி இரு புருவங்களையும் உயர்த்தி என்னவென்று கேட்கவும் அதிர்ந்தவள், "ஒ… ஒன்றும் இல்லை" என்று தடுமாற்றதுடன் சொன்னவள் மறுபக்கம் திரும்பி மனதிற்குள், 'மானமே போச்சு! என்ன நினைச்சு இருப்பான்' என்று தலையிலடித்துக் கொண்டாள்.
கால் முட்டிக்கும் சற்று கீழ் வரை இருந்த மாக்ஸி உடை அணிந்திருந்தவள் குளிரில் நடுங்குவதைப் பார்த்துவிட்டு அவள் பின்னால் நெருங்கி நின்றவன் அவள் காதோரம் குனிந்து, "குளிருதா?…" என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.
திடீரென்று காதோரம் கேட்ட அவன் குரலில் தடுமாறியவள் முகத்தை மட்டும் திருப்பி அவனை பார்த்து எதோ சொல்ல வாயெடுக்கும் முன் அவளை பின்னாலிருந்து அணைத்திருந்தான் மித்ரன். அதிர்வுடன் விரிந்த அவள் கண்களை பார்த்தவன், "எனக்கு குளிருது" எனவும் அவளால் எதுவும் பேச முடியவில்லை.
அவளிடமிருந்து வந்த அவளுக்கே உரித்தான மணம் அவன் நாசியை நிரப்ப அதை தன்னுள் நிறைத்துக்குகொண்டான். அவன் உடல் தந்த கதகதப்பில் காதல் மனம் படபடக்க சிறு பதற்றத்துடனே அவன் கைகளுக்குள் கோழிக்குஞ்சு போல் நின்றிருந்தாள் மது. நிமிடங்கள் மௌனமாக செல்ல காற்றின் வேகம் சற்று குறைந்தது.
மது மெல்ல அவன் கைச் சிறையிலிருந்து கொண்டே, "போகலாமா லேட் ஆகுது…" என்றாள். அவனும் புரிந்துகொண்டு அவளை விட, மது சாலையில் இறங்கி நடந்தாள். ஏனோ அவளின் அருகாமையை விட்டு விலக அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதை ஏனென்றும் அவன் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.
சாலையில் இறங்கியவளின் கரம் பற்றி சட்டென்று தன்னை நோக்கி திருப்பியவன், அவள் என்னவென்று யோசிக்கும் முன் அவன் பற்றியிருந்த கரத்தை எடுத்து அவள் விரல்களில் தன் முதல் முத்திரையைப் பதித்தான்.
அவன் முத்தமிட்ட விரல்கள் நடுங்க, அவனைப் பார்க்க முடியாமல் தவித்தவளை நெருங்கி நின்று அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் அவள் கூந்தலினுள் தன் விரல்களை நுழைக்க மதுவின் இமைகள் தாமாக மூடிக்கொள்ளவும், அவள் பிறை நெற்றியின் மீது தன் முத்தத்தை பதித்தான். அவன் தந்த முத்தத்தின் ஈரம் மழை நீருடன் சேர்ந்து அவள் நாசியில் பயணிக்க, அதை தொடர்ந்து பயணித்த அவன் இதழ்கள் அவள் நாசி நுனியில் பதிந்தது.
அதில் அவள் தொண்டை குழியடைக்க, தன் விரல்களில் நடுக்கத்தோடு அவன் இடையின் ஓர டீஷர்டின் நுனியை பற்றிக்கொண்டாள். அதில் மேலும் தூண்டப்பட்டவன் அவள் இதழோடு தன் ஈர இதழை சேர்த்திருந்தான். இதழ்களுடன் மழைநீர் சேர்ந்து புது வித கவிதை மீட்ட, எவ்வளவு நேரம் சென்றதோ இருவரும் அறியவில்லை. சட்டென்று வெட்டிய மின்னலின் ஒளி இருவரையும் நினைவிற்கு கொண்டு வர, அவளை விட மனமில்லாமல் அவள் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டான். அவளுக்கு தான் நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது.
காற்றுக்கும் கேட்காத குரலில் அவன் காதோரம், "போகலாமா…?" என்று மது கேட்கவும், தன்னை சுதாரித்துக்கொண்டவன், " ம்ம்ம்…" என்ற பதிலுடன் சற்று இடைவெளி விட்டு நடந்தான்.
இருவரின் நினைவுகளும் அன்றைய நாளையிலிருந்து மீள, மித்ரன் ஏனோ மனம் கணப்பது போல் உணர்ந்தான். அன்றைய தினம் போல் அவள் அருகாமை காலத்திற்கும் வேண்டும் என்று மனம் ஏங்கியது.
இங்கும் அதே நினைவில் முழுதாக மழையில் நனைந்திருந்த மதுவை, "அக்கா… என்ன பண்ற…? அம்மா ரொம்ப நேரமா கத்தறாங்க… கேட்கலையா..?" என்ற தங்கை ரித்துவின் குரல் கலைத்தது.
"வரேன் பாப்பா…"
"என்ன மழைல நனைச்சுருக்க…? கொஞ்ச நாளாவே நீ சரியில்ல… எதுக்கு தனியாவே இருக்க…? சரி… சீக்கிரமா குளிச்சுட்டு வா… அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க…" என்ற ரித்து மதுவை ஆராய்ந்துகொண்டே கட்டிலில் அமர்ந்து அலைபேசியைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
சிறிது நேரத்தில் குளித்து முடித்து வந்த மது, "பாப்பா… ஈவினிங் என் ப்ரெண்ட் மேரேஜ்க்கு போறேன்… நீயும் என்கூட வரியா?" அவளுக்கு ஏனோ தனியாக செல்ல மனமில்லை. அதனாலேயே அப்படிக் கேட்டிருந்தாள். அவள் அப்படிக் கேட்டதும், மதுவையே யோசனையாக பார்த்த ரித்து, 'இப்படியெல்லாம் நம்மல வெளிய கூப்பிட்டு போக மாட்டேளே… எதோ இருக்கு… கண்டுபிடிப்போம்..’ என்று மனதில் நினைத்தவள் வெளியில், "ம்ம்ம் சரி வரேன்…" என்று சம்மதம் தெரிவிக்க, "அப்போ ஈவினிங் பைவ்க்கு ரெடியாகிடு…" என்றதோடு அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.
அவளுக்கோ எங்கே அங்கே நின்றால் ரித்து ஏதாவது கேள்வி கேட்பாள் என்று பயம். ரித்துவும் சில நாட்களாக மது மிக அமைதியாகி விட்டதை போல் உணர்ந்தாள். அதனாலேயே அவளுடன் வர சம்மதித்தாள்.
மாலை நேரம், மஞ்சள் நிறத்தில் வெள்ளி ஜரிகையில் நெய்யப்பட்ட காஞ்சிபுர பட்டுப் புடவை உடுத்தி, அதற்கு ஏற்றார் போல் மெலிதான வைர நகைகள் அணிந்திருந்தாள் மதுரிமா. ரித்துவும் அவளுக்கு ஏற்றவாறு பெரும் ஆடம்பரமில்லாமல் அழகிய இளரோஜா நிறத்தில் லெஹங்கா அணிந்து வரவும், தங்கையைப் பார்த்து புருவம் உயர்த்தியவள், "அழகா இருக்கடி…" என்க, அதை கேட்டு ரித்து, "ம்ம்ம்… நீயும் தான் அழகா இருக்க.. என்ன ரெண்டு லேயர் மேக்கப் போட்டியா…?" என்றாள் கிண்டலாக.
அவளை முறைத்த மது, "அடி வாங்குவடி…" எனவும், "உண்மைய சொன்னா அடிப்பாளாம் போ…" என்றாள் ரோஷமாக. இவ்வாறு இருவரும் சண்டையிட்டு கொண்டே திருமணத்திற்கு கிளம்பிச் சென்றனர்.
தோழிகளுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தாலும் மதுவிற்கு ஏனோ மனதிற்குள் சிறு படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. பேசாமல் சீக்கிரம் கிளம்பி விடலாமா என்று கூட எண்ணம் எழுந்தது. மணப்பெண் இருவருக்குமே பொதுவான தோழியாக இருக்க, மித்ரனும் திருமணதிற்கு வர வாய்ப்பு உள்ளது. அவனை பார்க்க காதல் மனம் ஏங்கினாலும் ஒரு புறம் அவனை எதிர்கொள்ளும் அளவிற்கு அவள் மனநிலை இல்லை.
தோழிகளுடன் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ரித்து அருகில் இல்லாததை அப்போது தான் கவனித்த மது , 'இவ எங்க போய்ட்டா ஒரு இடத்துல இருன்னு சொன்னா கேட்க மாட்டா…' என்று நினைத்துக் கொண்டே தோழிகளிடம் சொல்லிவிட்டு அவளை தேட சென்றாள். சிறிது நேரம் அலைந்து தேடியவள் கடைசியாக ரித்துவை ஓர் இடத்தில் பார்த்துவிட, அவள் அருகில் சென்றவள், "பாப்பா! எங்க தான் போவ..? எவ்வளவு நேரமா தேடிட்டு இருக்கேன்… மண்டபத்தையே ரெண்டு தடவ சுத்தி வந்துட்டேன்…"
“ம்ம்ம்ச் இரு… ஒருத்தனை செம்ம ஹண்ட்சமா பிளாக் ஷர்ட்ல பார்த்தேன்… அவனைத் தான் தேடிட்டு இருக்கேன்… டிஸ்டர்ப் பண்ணாத அக்கா…"
"என்ன சொல்ற…?"
"அங்க பாரு…" என ரித்து காட்டிய திசையில் திரும்பி பார்த்த மது சற்று அதிர்ந்தாள். அங்கு மித்ரனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரித்துவிடம் எதையும் காட்டிக்கொள்ள விரும்பாதவள் அமைதியாகிவிட, மதுவின் முக மாற்றத்தை கவனித்த ரித்து, "சொல்லுக்கா அழகா இருக்கான்ல…" என்றாள் வேண்டுமென்றே.
மது மித்ரனை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே, "ம்ம்ம் ஆமா… வெளிய அப்படி தான் தெரியும்… பழகி பார்த்தா தான் கஷ்டம் புரியும்…" என்றவளின் கண்கள் கலங்கியிருந்தது.
"போ… நீ இப்படி தான் எதாச்சும் சொல்லிட்டே இருப்ப… நான் கொஞ்சம் பக்கத்துல போய் பாத்துட்டு வரேன்…"
அவள் சொன்னதில் அதிர்ந்த மது, "ஹே சும்மா இருடி… ஒழுங்கா வா…" என்று அவளை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தாள்.
"ஆமா… இவளும் பார்க்க மாட்டா… நம்மளையும் பார்க்க விட மாட்டா…" என்று மதுவை திட்ட, "நான் பார்க்கலன்னு யார் சொன்னாங்க… அமைதியா வாடி" என்றாள்.
"ஓ… அப்போ நீ பார்த்து இருக்க…" என்று ரித்து சொல்லவும், ஒரு நொடி தடுமாறிய மது தன்னை சுதரித்துக்கொண்டு ரித்துவை போலியாக முறைத்தாள். மேலும் விளையாட வேண்டாம் என்று ரித்துவும், " சரி சரி உன்ன எதும் சொல்லல வா போகலாம்…" என்றவள் மதுவுடன் இணைந்து கொண்டாள்.
மது ரித்துவை ஒற்றைக் கையால் பற்றிக்கொண்டே தன் தோழிகளுடன் இணைந்து கொண்டாள். இதயம் வேறு ஒரு புறம் படபடத்துக் கொண்டே இருந்தது. அவளால் அவர்களுடன் இயல்பாக பேசி சிரிக்கக் கூட முடியவில்லை. அமைதியாக அவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் அவள் எதிர்பார்த்தது போலவே அவ்விடத்திற்கு மித்ரன் வந்து சேர்ந்தான். இத்தனை மாதங்கள் கடந்தும் அவன் மீதானா அவள் நேசம் சிறிதும் குறையாமல் அப்படியே இருந்தது. அவனுக்கு எப்படி என்று அவன் முகத்தை வைத்து அவளால் சிறிதும் யூகிக்க முடியவில்லை.
அப்போது மதுவின் நண்பன் ஒருவன் அங்கு வந்தவன், நீண்ட இடைவேளைக்கு பிறகு மதுவை பார்த்த சந்தோஷத்தில் அவளை தோளோடு அணைத்து பேசிவிட்டு சென்றான்.
மற்றவர்களுடன் நலன் விசாரித்துக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை மதுவை கோபமாக தொட்டு செல்ல, ரித்துவின் கரத்தை பற்றியிருந்த மதுவின் கரம் சற்று நடுங்கியது. அதை உணர்ந்து ரித்து, "என்னச்சு உனக்கு…?" என்று மதுவின் காதருகே குனிந்து கேட்கவும், மது லேசாக இல்லை எனும் விதமாக தலை அசைத்தாலே தவிர எதுவும் பேசவில்லை.
அவளது பார்வை மித்ரன் அருகே மிக நெருங்கி நின்றிருந்த ஐஷுவிலே பதிந்து இருந்தது. அதை யார் கவனித்தார்களோ இல்லையோ மித்ரன் மதுவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துகொண்டு தான் இருந்தான். மதுவின் மனநிலை தற்போது எப்படி இருக்குமென்று புரிந்தாலும் வேண்டுமென்றே ஐஷுவை நெருங்கி அவள் காதருகே ரகசியம் பேச, இங்கு அதை பார்த்த மதுவிற்கு ஒரு நொடி கூட அங்கு நிற்க முடியவில்லை.
அவளுக்கு இப்பொது அவசரமாக தனிமை தேவைப்பட ரித்துவை தன் தோழிகளிடம் விட்டவள், "இ.. இங்கயே இரு…” என்று தொண்டை கரகரக்க சொல்லிவிட்டு, ரித்துவின் பதிலை கூட எதிர் பார்க்காமல் வேகமாக அங்கிருது வெளியே வந்தவள், மாடிப் படிகளை நெருங்கி மண்டபத்தின் மொட்டை மாடிக்கு வந்துவிட்டாள்.
அவளையும் மீறி கட்டுப்படுத்த முடியாமல் வந்த கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தது. அவனையை நினைத்து நினைத்து , " ஏ.. ஏன் பாப்ஸ் என்ன அழ வைக்குற… எனக்கு கஷ்டமா இருக்கு…" என்று தனக்குள் பேசிக்கொண்டே அழுது தீர்த்தத்தாள்.
சிறிது நேரத்தில் அழுகை சற்று குறைய கண்களை துடைத்துக் கொண்டு அமைதியாக கண்களை மூடி நிற்கவும், அவள் பின்னலிருந்து, "அழுது முடிச்சிட்டியா…?" என்று அவள் அழுகைக்கு காரணமானவனின் குரல் சற்று அழுத்தமாக ஒலிக்கவும் அவள் முதுகுத் தண்டு சில்லிட்டது.
தொண்டையில் எச்சில் கூட்டி விழுங்கியவள் அமைதியாகவே நின்றிருக்க, அவள் அருகே நெருங்கி வந்தவன், ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே சுற்றுசுவரில் அழுந்தப் பதிந்திருந்த அவள் கரத்தினை எடுத்து இறுக பற்றிக்கொண்டு, "பேச மாட்டியா…?" என்று ஆழ்ந்த குரலில் கேட்கவும், அவளுக்கு மேலும் கண்கள் கரித்துக்கொண்டு வந்ததே தவிர பேச நா எழவில்லை. மெல்ல தன் கரத்தை விடுவித்துக் கொண்டு திரும்பி நடந்தவளை மித்ரன் ஒற்றைக்கையால் அவள் கரம் பற்றி இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான்.
தடுமாறி நின்றவள் கரங்கள் அவன் மார்பில் பதிய, அவளின் பூ போன்ற கரங்களால் மித்ரனின் இரும்பு பிடியிலிருந்து அவளை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. அவள் விடுபட முயல்வதை கண்டு மெலிதாக சிரித்தவனை அவள் தன் பார்வையாலே எரித்தாள். அவன் மற்றொரு கையால் கோபத்தில் சுருங்கியிருந்த அவள் புருவத்தை தன் பெரு விரல் கொண்டு நீவி விட, மதுவின் கரங்கள் ஒரு நொடி அசைவற்று தன் முயற்சியை நிறுத்தியிருந்தது.
மித்ரனுக்கோ அந்த ஒரு நொடி போதுமானதாக இருக்க, அவள் நெற்றியில் முத்தம் பதித்தான். அதில் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய, அக்கண்கள் இரண்டிற்கும் அதே பரிசை வழங்கினான். அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் பயணிக்க, அவன் மார்பின் மேல் இருந்த அவள் கை விரல்கள் நடுங்க, "பாப்…" என்று தன்னை மறந்து சொன்னவளின் இதழ்களுடன் தன் இதழ்களைச் சேர்த்திருந்தான். அவள் கரங்களும் அவன் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டது.
அவள் புடவை மறைக்காத வெற்று இடையில் பதிந்த அவன் கரங்கள் அவளை மேலும் சேர்த்து அணைத்துக் கொண்டது. இத்தனை நாள் அவனால் மனதில் ஏற்பட்ட காயம் அந்த ஒற்றை முத்தத்தில் மெல்ல மறைவது போல் இருக்க, அதில் கண்மூடி தன் வசம் இழந்திருந்தாள் மது. அவனோ இத்தனை நாள் அவள் இல்லாத ஏக்கத்தை அதில் தனித்துக் கொண்டிருந்தான். மீண்டும் மீண்டும் சலைக்காமல் அவள் இதழ் நாடியவன் ஓர் கட்டத்தில் அவள் மூச்சுச்சுக்கு தவிப்பதை உணர்த்து அவளை விட்டு விட்டு, அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் தன்னிலை மீண்டவள் சற்று தைரியத்தை திரட்டி அவனிடமிருந்து விலகி நின்று , "எனக்கு நீ வேண்டாம்…" என்றவள் குரல் உடைந்து ஒலித்தது. அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தவன், "ஏன்…?" என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக்கொள்ள, அவன் கண்களை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டு, "இப்போ இப்படி இருப்ப… அப்பறம் வேண்டாம்னு சொல்லுவ… என்னால இது எல்லாம் தாங்கிக்க முடியாது… ரொம்ப கஷ்டமா இருக்கும்… ஹர்ட் ஆகாம இருக்க நாம பிரிஞ்சு போறதே நல்லது… கல்யாணத்துல முடியாத உறவு எதுக்கு…?" என்றாள் கண்கள் கலங்க.
அவளின் மனதை புரிந்து கொண்டவன் பெரிதாக அவளை சமாதானம் செய்யவில்லை அது அவனுக்கு பழக்கமுமில்லை. மாறாக ஆழ்ந்த மூச்செடுத்து கொண்டு, "பாப்… எனக்கு இது உன்கிட்ட லைப் லாங் வேணும்…எ… " என்று எதோ சொல்ல வந்தவன் அவள் அமைதியாகவே நின்றிருக்கவும் எதுவும் பேசாமல் அவளை விலகி நடந்தவன், "என் ஆத்துகாரியா…" என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட, மது அவன் சொன்னதை எல்லாம் சேர்த்து யோசிக்கும் மனநிலையில் இல்லை.
கடைசியாக அவன் சொன்ன “ஆத்துக்காரி” மட்டும் மூளையில் வந்து போக, ‘எதுக்கு அதை சொன்னான்’ என்று குழம்பியவளுக்கு கடைசியாக, 'லைப் லாங்' என்றது மட்டும் ஞாபகம் வந்தது. அனைத்தையும் சேர்த்து அவள் யோசிக்க எதோ புரிவது போல் இருந்தது.
"ஐயோ நிஜமா அது தான் சொன்னானா…?" என்று புரியாமல் வாய்விட்டு கூறி முடித்திருக்கவில்லை, அங்கு பக்கத்தில் சுவர் மறைவிலிருந்து, "அதை உன் ஆத்துக்காரர்கிட்டயே போய் கேட்க வேண்டியது தானே…" என்று ரித்துவின் குரல் கேட்டது.
"ஏய் இங்க என்னடி பண்ற?"
"என்ன பண்றேனா… மண்டபத்திலயே நிறைய லைட்ஸ் இருக்கு… எதுக்கு தனியா விளக்கு வாங்கணும்னு யோசிச்சுட்டு இருந்தேன்" என்றவள் மதுவின் முகம் சுருங்குவது பார்த்துவிட்டு, "தனியா அழுதுட்டே போனாலே எங்க போனான்னு பாக்க வந்தா… " என்று ரித்து இழுத்து நிறுத்திய விதத்திலேயே அவள் சொல்ல வந்தது மதுவிற்கு புரிய, ""பாப்பா அது… " என்று தன் நிலை விளக்க வர, "அதுலாம் அப்பறம் சொல்லு… சீக்கிரம் போ… உன் ஆத்துக்கார் போய்ட போறாரு… " என்று ரித்து அவளை துரத்தினாள்.
கீழே இறங்கி ஓடிய மது சுற்றியும் தேட சற்று தொலைவில் மித்ரன் கார் பார்க்கிங் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவன் பின்னாலே ஓடியவள், "பாப்ஸ்… நில்லு…" என்று சத்தம் போட அவன் கேட்டும் கேட்காதது போல் சென்று கொண்டிருந்தான்.
"பாப்ஸ்…" என்று மீண்டும் அழைக்க அவன் திரும்பி கூட பார்க்காமல் செல்ல, "டேய் ஆத்துக்கார் நில்லுடா…" என்று சொன்னதும் அவன் இதழில் மெல்லிய சிரிப்புடன் அதே இடத்தில் திரும்பாமல் நின்றான். இவள் புடவையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அவன் முன் மூச்சு வாங்க ஓடி வந்து நின்றவள், " எ… என்ன சொன்ன…?" என்று அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
ஓடி வந்ததால் அவள் நெற்றியில் முத்து முத்தாக வியர்த்து இருந்தது. அதை ரசனையுடன் பார்த்துக்கொண்டே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, "சொல்ல முடியாது போடி…" என்றான் குறுஞ்சிரிப்புடன். முகத்தை பாவமாக மாற்றிக்கொண்டவள், "ப்ளீஸ் பாப்… என்ன சொன்ன…?"
அவனோ புரியாதவன் போல், "என்ன சொன்னேன்? நியாபகம் இல்லையே…" என்றான்.
"கடைசியா இப்போ வரும் போது என்ன சொன்ன…?"
"சாரி நியாபகம் இல்லை… எனக்கு அந்த சீன் ரீகிரியேட் பண்ணா வரலாம் ஆத்துக்காரி…" என்று உதட்டில் சிரிப்புடன் அவளை பார்த்து தன் புருவங்களை ஏற்றி இறக்கினான். நம்ப முடியாமல், "நிஜமா…?" என்றாள் குரல் குழைய.
"பராவல்ல ஆகிக்கோ… எனக்கு இப்போ புடிச்சு இருக்கு… அதுவும் உன்னை அப்படி பார்க்கும் போது அழகா இருக்கு…" என்று சொல்லி சிரித்தவனை கண்கள் கலங்க கட்டிப் பிடித்து நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
"இது எல்லாம் பத்தாது… நான் கொடுத்தத திருப்பிக் கொடு" என்று சொல்லிக்கொண்டே அவளை சற்று மேலே ஏற்றிப் பிடிக்க, அவன் தோள்களை பற்றிக்கொண்டு அவன் முகத்தை குனிந்து பார்த்தவள் அடர்ந்து வளர்ந்தந்திருந்த அவன் நெற்றி முடியை விலக்கி அங்கு இதழ் பதித்தாள்.
"ஏமாத்தாத கேடி" என்று சொல்லி அவன் வாய் மூடும் முன் அவன் இதழ்களைச் சிறை செய்திருந்தாள் மித்ரனின் மதுரிமா.