இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

வாழ்வளித்த வள்ளல் - கதைத் திரி

Status
Not open for further replies.
வணக்கம் தோழமைகளே!
இன்றுமுதல் "வாழ்வளித்த வள்ளல்" கதையின் மறுபதிப்பு ஆரம்பமாகிறது. இந்தக் கதையை பதிவிடுவதற்கு இந்த தினத்தைவிட சிறந்த தினமென்று ஒன்று எனக்குத் தோன்றவில்லை. வழக்கமாக தரும் ஆதரவை இக்கதைக்கும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு அத்தியாயம் பதிவிடப்படும். பதினைந்து அத்தியாயங்கள் கொண்ட குறுங்கதைதான். அக்டோபர் 22ம் தேதி அன்று கதை நிறைவுபெறும். இந்த மாத இறுதிவரை தளத்தில் இருக்கும்.

Disclaimer : இக்கதை சற்றே கான்ட்ரோவர்சிகளை உள்ளடக்கிய சுயசரிதை போன்றதொரு முயற்சி. ஆரம்பத்தில் கதையின் போக்கு வெறுப்பைத் தந்தாலும் இறுதியாக வாசித்து முடிக்கையில் "எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கறீங்க? செம" என்பதான உணர்வை ஏற்படுத்துமென நம்புகிறேன். எனவே பொறுமை காத்து தொடருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
நான்.. உங்கள் ருத்திதா
 
வாழ்வளித்த வள்ளல் – 1

“எல்லாம் என்னோட தலையெழுத்து... உன்னைப் போய் பிள்ளையா பெத்தேன் பாரு... என்னை சொல்லணும்... இவ்ளோ தூரம் வேணாம்வேணாம்ன்னு நான் சொல்லியும் இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிறியே... உன்னையெல்லாம் என்னன்னு சொல்றது??” எனத் திட்டியவாறே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார் இராமநாதன்.

அவரது பேச்சில் உள்ளுக்குள் உடைந்தாலும் வெளியில் காண்பித்துக்கொள்ளாமல் மெலிதாகப் புன்னகையைச் சிந்தியவாறே கையில் பத்திரத்துடன் நின்றுகொண்டிருந்தாள் வைஷு.


“நான் இவ்ளோ திட்டிட்டு இருக்கிறேன்... நீ பாட்டுக்கு சிரிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம் வைஷு?? அவ்ளோ ஆகிப்போச்சுதா??” என்றவர் தாங்கள் நின்றுகொண்டிருக்கும் இடம் மாவட்டத்தின் தலைநகரின் மையப்பேருந்து நிலையம் என்பதையும் பொருட்படுத்தாமல் பற்களை நறநறவென கடித்தார்.

ஆண்களின் மிதமான முகவேறுபாட்டையே மென்மையான பெண்களால் தாங்கிக்கொள்ள இயலாதாம். அதிலும் உச்சஸ்தாயியில் கத்தியவாறே கண்கள் சிவக்க பார்ப்பவரின் கோபத்தை எங்கனம் தாங்கிக்கொள்வாள் அம்மென்மங்கை?!! ஏற்றுக்கொள்ள இயலாவிடினும் அதன் தாக்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சுதாரிக்கும் திறத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தாள் அம்மலரனைய மடவரல்.

வாரத்தைகள் வாளாக இதயத்தைக் கூரிட்டாலும் எதையும் பொருட்படுத்தாமல் நின்றுகொண்டிருக்கும் வைஷு@வைஷாலி தான் நம் கதையின் நாயகி - கர்ஜித்துக் கொண்டிருக்கும் இராமநாதனின் தலைப்புதல்வி.

‘தலைப்பிள்ளை பெண்பிள்ளையாகப் பிறந்தால் தலைப்பாரத்தை குறைக்கும்...’ என்பது காலம்காலமாக நம்பப்பட்டு வரும் பொருள்சோதிக்கப்படா கூற்று. இராமநாதனும் பரிசோதனைகள் எதுவுமின்றி அதை உண்மையெனவே நம்பியிருந்தார் சில நாட்களுக்குமுன் வைஷு அச்செயலை அரங்கேற்றும்வரை.

அவரது நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக அதை சுக்குநூறாக உடைத்தவள் தலையில் ஒரு டன் எடைக்கு நிகரான கல்லைத் தூக்கியெடுத்து தலைப்பாரத்தை ஏற்றியிருந்தாள்.

அதில் மருகியவாறே அவர் நின்றுகொண்டிருக்க, அம்மனப்புழுங்கலுக்கு காரணமானவளோ வெகுஇயல்பாக புன்னகைத்தவாறே நின்றுகொண்டிருக்கவும், உண்மையில் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
இருப்பினும் இடம்கருதி சற்றே நாகரீகத்துடன் அவர் வேதனைப்பேச்சின் வீரியத்தைக் குறைத்து வார்த்தைகளை வெளியேற்றிக் கொண்டிருக்க, அப்போதுதான் உள்ளே நுழைந்த பேருந்திலிருந்து இறங்கி, புன்னகைத்தவாறே அவர்களை நோக்கி வந்தார் இராமநாதனின் இல்லத்தரசி இந்திரா. அவரே இந்நிகழ்வின் இயக்குநர் இமயம்.


தன் விருப்பத்தை வைஷுவின் மீது திணித்து, அதற்கேற்ற காட்சி, வசனங்களையும் அரங்கேற்றி, வெற்றி பெற்றுவிட்ட களிப்பில் வெற்றிப்புன்னகையுடன் அவர் வந்தாலும் அக்காரியத்திற்கான காரணகர்த்தா அவர்தானென தப்பியும் தன் தந்தையுடன் ஒரு வார்த்தைகூட உரைக்கவில்லை வைஷு என்னும் பேதை.

உண்மையில் தலைப்பிள்ளையாக – தலைப்பாரத்தை குறைக்கும் பிள்ளையாகத் தான் அப்படியொரு காரியத்தை அரங்கேற்றுவதற்கு தன் தாயின் கட்டளையை ஏற்றிருந்தாள்.

அருகில் வந்தவர்; “என்னப்பா... டிவோர்ஸ் கிடைச்சுதா?? எல்லாம் செட்டில் பண்ணி எல்லா திங்க்சையும் எடுத்துட்டு வந்தாச்சு தானே...” என ஆர்வத்துடன் விசாரிக்க, இராமநாதனுக்கோ வெறுப்பாக இருந்தது.

தான் அரைமனத்துடன் தன் மகளுக்குத் தேர்ந்தெடுத்த வாழ்க்கையாயினும் அதைத் தொடர்ந்த அவளது சுமூகவாழ்வில் சற்றே நிம்மதியுடன்தான் இருந்தார். அமைதியான அவள் வாழ்வில் சற்றே நிம்மதிகொண்டவர்; அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைந்துவிட்டாள் எனவே நம்பிக்கொண்டிருந்தார்.

இவ்வாறு அனைத்தும் சுமூகமாக சென்று கொண்டிருக்கையில்தான் வைஷு வந்துநின்றாள்; “எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல... அத்து விட்ருங்க...” என.

இதை எதிர்பார்த்திராதவர்; “ஏன் வைஷு?? நல்லாதானே போயிட்டு இருந்துச்சு?? அங்கே உனக்கு எந்தக்குறையும் இல்லைதானே... போனதடவை வந்திருந்தப்போகூட பிடிச்சிருக்குது, மேனேஜ் பண்ணிப்பேன்னு தானே சொல்லிட்டு போன... அப்புறம் என்ன??” என அதிர்ச்சியுடன் வினவ, “அது அப்போ... இது இப்போ... எனக்குப் பிடிக்கல... அவ்ளோதான்... அத்து விட்ருங்க...” என உறுதியாக சாதித்துவிட்டாள்.

அதன்பின்னர் அவர்களுடனே வந்து தங்கிவிட்டவள்; அடுத்ததொரு வாழ்விற்கு புலம்பெயர்வதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தாள்.

வைஷுவின் பழைய வாழ்வு இந்திராவுக்குப் பிடிக்காததாலேயே, ஒருவருடம் கடந்த பின்னரும், “நீ அங்கே போறதா இருந்தா போ... ஆனா ஒருவேளை என்னைத் தாண்டி அங்கே போயிட்டேன்னா உனக்குத் தாய்ன்னு ஒருத்தி இல்லைன்னு நெனச்சுக்கோ... இதுக்குமேல உனக்கு எனக்கும் எந்த உறவுமில்ல...” என உறுதியாகக் கூறி, மறைமுகமாக சென்டிமென்டல் ப்ளாக்மெயில் செய்யவும், தாய்மீது கொண்ட பாசத்தால் உதறிவிட்டு வந்திருந்தாள் அவள்.

புதிதாயொரு வாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்தபின்னர்தான் இந்திரா இந்த திட்டத்தை அரங்கேற்றியிருந்தார். இதை இராமநாதன் அறிந்திருந்தாலும் வைஷுவின் வாயிலிருந்து வரவைப்பதற்காக எவ்வளவோ முயன்றுவிட்டார். ம்ஹூம்... அவளோ வாய்திறப்பதாக இல்லை. சற்றே அழுத்தி வினவினால், “வேணாம்... பிடிக்கல...” என்பதோடு நிறுத்திக்கொள்வாள்.

தன் கையிலிருந்த அந்த காகிதத்தை வேதனையுடன் வைஷு அவரிடம் நீட்ட, முகம்நிறைந்த புன்னகையுடன் வாங்கிக்கொண்டவர்; முன்னும்பின்னும் மூன்றுமுறை சரிபார்த்துக்கொண்டார்.

“ஹான் சரி... கிளம்புங்க... அங்கே எல்லாரும் ரெடியா இருக்கிறாங்க... இப்பதான் கால் பண்ணுனாங்க...” என இந்திரா அவசரப்படுத்த, இராமநாதனால் அதற்குமேல் வேதனையைத் தாங்கிக்கொண்டு நிற்க முடியவில்லை. ஏனெனில் இந்திராவின் தூண்டுதலால் சட்டப்படி அந்த பிரிவுக் காகிதத்தைப் பெறுவதற்குள் அவர் எத்தனை கேள்விகள், அவமானங்கள், தடைகளைக் கடந்திருப்பார் என்பதை அவர் மட்டுமே அறிவார். நல்ல வாழ்வை தன்புதல்வி இழந்துவிட்டாளே என்னும் வேதனையில் இருந்தவர்; “நீங்க ரெண்டு பேரும் போங்க... நான் இன்னொருநாள் வந்து பார்த்துக்கிறேன்...” என கிளம்ப எத்தனித்தார்.

“ஏப்பா... நீங்க இல்லாம நாங்க மட்டும் போனா நல்லாவா இருக்கும்?? எல்லாரும் பொண்ணுக்கு அப்பா எங்கேன்னு கேப்பாங்க!!” என இந்திரா பிடிவாதமாக அவரை அழைக்க, “இல்லம்மா... சென்னையில இருந்து பஸ்ல வந்தது ரொம்ப டயர்டா இருக்குது... ராத்திரி முழுக்க தூங்கல... கால்வேற வலிக்குது..” என தவிர்க்க முற்பட்டார்.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது... பொண்ணோட வாழ்க்கைக்காக இதைக்கூட பண்ணமாட்டீங்களா??!” என அவரையும் சென்டிமென்டல் ப்ளாக்மெயில் செய்து வண்டியில் ஏறவைத்துவிட்டார் இந்திரா. ஆம்.. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது எத்தனை நிதர்சனமான கூற்று!!!

சொல்லொணா வேதனையுடன் ஜன்னலோரம் அமர்ந்திருந்த வைஷுவின் கண்களிலிருந்து கண்ணீர் துளித்துளியாகக் கொட்டிக்கொண்டிருந்தது. யாருக்கும் தெரியக்கூடாதென சற்றே மட்டுப்படுத்தி வெளிவிட்டுக்கொண்டிருந்தாள்.

அதற்குள் அலைபேசி அதிர, அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ...” என்பதற்குக்கூட வாய்ப்பளிக்காமல், எதிர்முனையில் பட்டாசாக வெடிக்கத் துவங்கிவிட்டாள் மீரா.

“ஏய்.. வைஷு... கங்க்ராட்ஸ் டி... இப்பதான் விஷயத்தைக் கேள்விப்பட்டேன்... டிவோர்ஸ் கிடைச்சிடுச்சாமே... எப்படியோ உனக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையில இருந்து ரிலீஃப் கிடைச்சுதே... அதுவரை சந்தோசம்... அப்புறம்... அடுத்த நடவடிக்கையா உன் எக்சை(Ex)ப் பார்க்க போயிட்டு இருக்கிறியா?? எல்லாம் பேசி கன்ஃபார்ம் பண்ணியாச்சா?? அவனுக்கு நீ அங்கே போறதுல ஓகே தானே...” என அவள் கேட்க, “ம்ம்... எல்லாம் பேசியாச்சு...” என சுரத்தேயில்லாமல் பதிலளித்தாள் வைஷு.

“உனக்கு நடந்திருக்கிறது எவ்ளோ பெரிய மிராக்கிள் தெரியுமாடி?? எல்லாருக்கும் அவங்க லவ்வரோட சேருற வாய்ப்பே கிடைக்குமாங்கிறது சந்தேகம்தான்... ஆனா பாதியிலேயே பிரிஞ்சுபோன எக்ஸ் திரும்பவும் உன்னோட வாழ்க்கைக்குள்ள நுழையுறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குது... அதை நெனச்சா ஐ ஆம் ரியலி ஹாப்பி ஃபார் யூ... யூ ஆர் ரியலி லக்கி... ஆல் தி பெஸ்ட்...” என அவள் பேசிக்கொண்டே போக, “அப்புறமா பேசுறேன்டி...” எனக் கத்தரிக்க முயன்றாள் வைஷு.

“ப்ச்.. என்ன நீ... அங்கே போனதுக்கு அப்புறமா முழுசா அவனுக்குத்தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவ... நாங்கள்லாம் உன் கண்ணுக்குத் தெரியவே மாட்டோம்... அதுவரைக்கும் கொஞ்சம் எங்களுக்கும் நேரம் ஒதுக்கலாம்ல...” என மீரா உரிமையுடன் கோபித்துக்கொள்ள, வேறுவழியின்றி அவளின் கூற்றுக்கு 'ம்ம்' கொட்டத்துவங்கினாள் நம்மவள்.

வார்த்தைக்கு வார்த்தை நீ லக்கி நீ லக்கி என பேசுபவர்களுக்கு வைஷுவின் உண்மைநிலை புரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அவர்கள் அவளின் காதலை மட்டுமே அறிவர். அதன்பின்னான நிகழ்வுகள், முன்னாள் காதலனின் தற்போதைய நிலை என எதையும் அறியமாட்டர். ஆகவே அவர்களின் கூற்றுகள் இவ்வாறுதான் வந்துவிழும்.

அவனைப் பிரிந்து வந்துவிட்ட இந்த மூன்றாண்டுகளில் மற்றொரு காதலில் இரண்டாண்டுகளும், எதிர்பாரா திருமண வாழ்வில் ஓராண்டும் கடந்தபின்னர் மீண்டும் அவனைத் தேடி செல்வது எத்தனை அபத்தமான காரியம்!! இருப்பினும் வேறுவழியின்றி அக்காரியத்தை முன்னெடுத்திருந்தாள் வைஷு.

அவனுடன் காதலில் திளைத்திருக்கையிலேயே அவளையுமறியாமல் இன்னொரு காதலுக்குள் நுழைந்து முற்றிலுமாக அவனைப் புறக்கணித்தது அவளின் தவறே. அதை அவள் மறுக்கவில்லை. அது தவறாயினும் எச்சூழ்நிலையிலும் மீண்டும் அவனைத் தேடிச் செல்லக்கூடாதென்னும் முடிவில் உறுதியாகவே இருந்தாள் அவள்.

விதியென்னும் கொடிய அரக்கன் அவள் தாயின் ரூபத்தில் அவளை மீண்டும் அவனிடமே அழைத்துவந்து விட்டிருந்தது.

“நான் விட்டுட்டு போனதுக்கு அப்புறம் ஃபீல் பண்ணியிருப்பானா?” என யோசித்தவாறே வாகனத்தை விட்டிறங்கியவள்; “அவனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்.. இதுல அற்பப்புழு நான் விட்டுட்டு போனதுக்காகவெல்லாமா ஃபீல் பண்ணியிருக்கப் போறான்??” என தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு முன்னேறி நடந்தாள்.

அருகே அவளது தந்தை ரணம்சுமந்து நடந்துவர, அவளது தாயோ வெகுஉற்சாகத்துடன் அவனின் புகழ்பாடியவாறே நடந்துகொண்டிருந்தார்.

அவர் கூறுவது அவளுக்கு எரிச்சலைத் தந்தாலும் இனிவரும் காலங்களில் பழகித்தானே ஆகவேண்டுமென அப்போதே அக்கூற்றுடன் வாழப் பழகிக்கொண்டிருந்தாள் வைஷு.

அவனது மாளிகைக்குள் நுழைந்ததும் ஆச்சரியத்தில் அவளது கண்கள் அகல விரிந்துகொண்டன. அவனின் செல்வச்செழிப்பைக் குறித்து அவள் நன்கறிவாள்தான் இருப்பினும் இப்படியொரு மூன்றடுக்கு பிரம்மாண்ட மாளிகையை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஒரே வளாகத்திற்குள் இரண்டு பங்களாக்கள் இருக்க, அங்கிருந்த வாயிற்காப்போனிடம் சென்று, “வேதா சாரைப் பார்க்கணும்...” என பவ்யமாகக் கேட்டார் அவளது தாய்.

அவரது கேள்வி அவளுக்கும் அவள் தந்தைக்கும் எரிச்சலைத் தரவே, முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டனர்.

“வேதா சார் அந்த பில்டிங்ல இருப்பாரு...” என இரண்டாவது பங்களாவை நோக்கி அவர் கைநீட்ட, “ரொம்ப தேங்க்ஸ்ங்க...” என அவருக்கும் ஒரு வணக்கம் வைத்துவிட்டு, வம்படியாக இருவரையும் அழைத்துக்கொண்டு நடந்தார் இந்திரா.

அந்த மாளிகையை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க, வைஷுவின் கால்கள் நடுக்கம் கண்டது; மனதிற்குள் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.

“இத்தனை வருஷம் கழிச்சு அவனை எப்படி நேருக்கு நேரா ஃபேஸ் பண்ணுவேன்... அவன் வேணாம்ன்னு மொத்தமா விட்டுட்டு போயிருந்தாகூட பரவாயில்ல... இப்படி இன்ஃபார்ம் பண்ணாமலே போயிட்டு திரும்ப வந்து நிக்கிறேனே... அப்படி இருந்தும் என்னை ஏத்துக்கிறேன்னு வாலன்டியரா வந்திருக்கிறான்னா உண்மையா இவன் கிரேட்தான்... இவனைப் போய் அவாய்ட் பண்ணிட்டேனே... அக்செப்ட் பண்ணிக்கிறதுக்கு ரெடியா இருக்கிறான்னா இப்பவும் என்னை நெனச்சிட்டுதான் இருக்கிறானா?? அவன் மனசுல நான் வாழுறேனா?? எனக்கு மட்டும்தான் அவனோட வாழ்க்கையில இடம் கொடுத்து வச்சிருக்கிறானா??” எனக் குழம்பித் தெளிந்தவள்; ஒருவாறாக பெருமூச்சொன்றை உதிர்த்து தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றாள்.

ஒருவாறாக கடந்தவை கடந்தவையாகவே கழியட்டும்; இனியும் அவனை விட்டுச் செல்லக்கூடாதென முடிவு செய்த அணங்கவள் அவனிருக்கும் அறைக்குள் நுழைய, அவனோ கோபியர்சூழ் கண்ணனாக மங்கையர் குழாமுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

அனைவரும் அவனுடன் அன்னியோன்யமாக அமர்ந்திருக்க, அவளுக்கு திக்கென்றது. அவர்கள் அனைவரும் அவளை அலட்சியமாகப் பார்க்க, சுதாரிக்க முடியாமல் திணறினாள் வைஷு.

தன்னை அறிமுகமாவது செய்வானென அவள் ஆர்வத்துடன் அவனைப் பார்க்க, அலட்சியப்பார்வையொன்றை உதிர்த்தவன்; “அங்கே உக்காரு...” என ஓரமாக ஓரிடத்தை சுட்டிக்காட்டிவிட்டு; “அந்த பங்களாவில தேர்ட் ஃப்ளோர்ல ஒரு ரூம் காலியா இருக்குது... அங்கே தங்கிக்கோ...” என்கவும், கலக்கமாகத் தன் தாயைப் பார்த்தாள்.

அவரோ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “ரொம்ப தேங்க்ஸ்ப்பா... பத்திரமா பார்த்துக்கோங்க..” என அவனிடம் கூறிவிட்டு, “வா வைஷு... உன் ரூமைப் பார்த்துட்டு வரலாம்...” எனக் கூறவும், சர்வமும் இடிந்து போனதைப் போல உணர்ந்தாள் வைஷு.

தொடரும்..

இந்த அத்தியாயத்தை பற்றிய உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள...
 
Last edited:
வாழ்வளித்த வள்ளல் – 2

அவள் இயலாமையால் தன் தாயைப் பார்க்க அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “வா வைஷு... தம்பி சொன்ன ரூமைப் பார்த்துட்டு வந்துடலாம்...” என கையைப்பிடித்து அழைத்தார்.ஏற்கனவே வேதாவின் மீதிருந்த கோபம் இப்போது அவர்மீது மொத்தமாக ஒட்டிக்கொள்ளவும், வைஷு அவரை எரித்துவிடுவதைப் போல பார்க்க, அவரோ அவள் கையை விடுவதாக இல்லை.அவரது நடவடிக்கையில் எரிச்சலடைந்தபோதிலும் “இங்கே என்னோட விருப்பு வெறுப்புகளுக்கு எங்கே இடம் இருக்குது?? எல்லாமே உங்க இஷ்டம்தானே..” என அவளால் சலித்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. மொழியிருந்தும் மௌனமாகிய மங்கையவள் வேறுவழியின்றி தன் தாயின்பின்னே உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் நடந்தாள்.செல்லும் வழியில் சில நிமிடங்களுக்கு முன்னர் இடைவேளை விட்டிருந்த “வேதாவின் சிறப்பம்சங்கள்” தொடரைத் தொடரத் தொடங்கிவிட்டார் இந்திரா.இதுகாறும் தன் மனதின் எண்ணங்களை சிந்தியாமல் அவர் எவ்வாறு காதுகேளாதவர் போல தரித்திருந்தாரோ இவளும் இனி அவ்வாறு இருக்க முடிவு செய்துகொண்டவளாய் நடக்க, அந்த மாளிகைக்கு செல்லும் வழியெங்கும் முள்மீது நடக்கும் பாதையாகத் தோன்றியது.இயேசுகிறிஸ்து உலகப்பாவங்களுக்காக குருசைச்சுமந்து கொல்கொதா மலையை நோக்கி பலரின் நிந்தனைகளுக்கு மத்தியில் பாடுபட்டு, குருசறையப்பட்டது போல இன்று தன் குடும்பத்தின் நிம்மதிச் சமநிலைக்காகத் தன்னை வருத்தி குருசறைய ஒப்புக்கொடுத்திருந்தாள் வைஷு.இதுகாறும் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தும் தன்னுடைய வாயைத் திறவாதிருந்தாள்; இனியும் அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருக்க முடிவு செய்தவளாக வேதா குறிப்பிட்ட அறையை நோக்கி அடியெடுத்து வைத்தாள் அவள்.அம்மாளிகைக்குள் தாயும் சேயுமாக உள்நுழைய எத்தனிக்கையில் தன் கோலைநீட்டி தடை செய்தார் வாயிற்காப்போன்.அதில் சுயமரியாதை நசிவதாகத் தோன்றவும், தன் அதிகாரத்தைப் பிரயோகிக்க நினைத்த இந்திரா, “யப்பா... நான் வைஷுவோட அம்மா.. வேதா சொல்லலையா??” என கேட்க, “இல்லையே... சொல்லலையே...” என அவர் முகத்திலடித்தாற்போல பதிலிறுக்கவும் அவரது முகம் சுருங்கிப் போனது.ஆயிரம் தவறிழைத்து தன் வாழ்வைத் தடம்புரளச் செய்திருந்தாலும் தாய் பிறர்முன்னிலையில் அவமானப்படுவதைக் காணச் சகியாத வைஷு, அதற்குமேல் அங்கே நிற்காமல், “நானே பார்த்துக்கிறேன்...” என முன்னேறி நடந்தாள்.அவன் குறிப்பிட்ட அறை மூன்றாவது மாடியில் இருந்தது. கடந்த அனைத்து அறைகளும் பூட்டியிருக்க, அவற்றிலெல்லாம் யாரேனும் வசிக்கலாம் என யூகித்தவாறே கடந்தாள்.என்னதான் விரக்தியின் உச்சத்தில் இருந்தாலும், “இத்தனை ரூம்ஸ்ல யார் தங்கியிருப்பாங்க?? ஒருவேளை அவன்கிட்டே வேலை பாக்கிறவங்களா இருக்குமோ? இல்ல ரிலேட்டிவா இருக்குமோ?” என சராசரிப்பெண்ணாக அவள் இதயம் பரிதவிக்கவே செய்தது.இருப்பினும் அச்சிந்தைக்கு இடம்கொடாமல் செல்ல, ஒரு அறையின் கதவு திறந்திருந்தது. அதுதான் தனக்கான அறையெனத் தெளிந்தவள் தனது உடமைகளுடன் உள்ளே நுழைய, ஏற்கனவே சிலர் வசிக்கும் தடயங்கள் தென்பட்டன.சரியான அறைக்குத்தான் வந்திருக்கிறோமா என ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து உறுதிசெய்து கொள்வதற்காக சுற்றும்முற்றும் கண்களைச் சுழலவிட அலமாரிகளில் ஒன்றுமட்டும் காலியாக இருந்தது. அவளுக்குப் புரிந்துவிட்டது அதுதான் தனக்கான அறை @ சிறை, செல்ப்பு @ ஆப்பு என.கல்லாகிய இதயத்துடன் சென்று உடமைகளை உள்ளே எறிந்தவள்; கீழே இறங்கி தன் தாயிடம் வந்து, “நான் பாத்துக்கிறேன்... நீங்க கிளம்புங்க...” என தைரியமாக உரைக்க, அவரோ “இல்லடா.. நான் வெயிட்பண்ணி வேதாவைப் பார்த்துட்டு போறேன்...” என்றார் பிடிவாதமாக.“அது வந்து...” என ஏதோ கூற எத்தனிக்கையில்தான் தன் தந்தை அருகிலில்லை என்பதை உணர்ந்தாள் வைஷு. “அப்பா... அப்பா எங்கே??” என விசாரிக்க, “அப்பா ஏடிஎம் வரைக்கும் போயிருக்கிறாங்க...” எனப் பதிலளித்தார் இந்திரா.“ஏடிஎம்மா?? எதுக்கு?? எனக்கு செலவுக்கு பணம் தர்றதுக்காகவா?? என்கிட்டே இருக்குது... நான் பார்த்துக்கிறேன்... எதாவது ஜாப்க்கு போய் என்னோட செலவுகளை நானே சமாளிச்சுக்கிறேன்... நீங்க அவ்ளோ சிரமப்பட வேணாம்...” என அவள் முந்திக்கொண்டு பதற, “செலவுக்கா?? நீ இங்க தங்குறதுக்கும் திங்குறதுக்கும் யாரு காசு கொடுக்கிறது?? உனக்கு செய்யவேண்டிய சீரெல்லாம் செய்யணுமே... அதுபோக இங்கே நீ எந்த வேலைக்கும் போறதுக்கு அனுமதியில்ல... வேதாவோட ஆஃபீஸ்ல அவர் சொல்ற வேலையை செஞ்சா போதும்... மாதத்துக்கு ஒருதடவை நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு பெர்மிஷன் உண்டு... அப்போ வந்து உனக்குத் தேவையான பொருளெல்லாம் வாங்கிக்கோ... இடையில எங்கேயும் வெளியே போறதுக்கு அனுமதியில்ல...” என பின்னிருந்து கறாராக குரல் வந்தது.குரல்வந்த திசையை இருவரும் நோக்க, அறைக்குள்ளிருந்து சற்றே கண்டிப்பான பெண்ணொருவர். அவரைப் பார்த்ததும் வைஷுவுக்கு சற்றே கிலி ஏற்பட்டாலும், அவர் கூறிய விதிமுறைகளில் மொத்தமும் சரிந்துபோனது.“சொல்ற வேலையைக்கூட செஞ்சிட்டுப் போயிடலாம்... சம்பளம் தரலைன்னா கூட ஓகே... ஆனா ஒரு மாதத்துக்கு ஒருதடவை தான் வெளியே போகணும்ன்னா எப்படி??!! இங்கே நான் என்ன கொத்தடிமையா??” என தனக்குத் தானே கேட்டுக்கொள்ள, “இல்லையா பின்ன...” என பதிலிறுத்தது மனசாட்சி.“கொத்தடிமைக்குக்கூட ரெஃப்ரெஷ் பண்றதுக்குக்கூட ஏதாவது சலுகை கிடைக்கும்... இங்கே இருட்டறைக்குள்ள முடங்கிக் கிடக்க வேண்டியதா இருக்குதே..” எனத் தனக்குத்தானே நொந்துகொண்டவள்; “ஓகே மேடம்... ஐ கேன் மேனேஜ்...” என புன்னகை சிந்திவிட்டுத் தன் தாயைப் பார்த்தாள்.அப்படிப்பட்ட நரகத்தில் தன் மகளை தவிக்கவிட்டுவிட்டுச் செல்லும் பரிதவிப்பில் இருந்தவர்; அவள் தன்னை ஏறிடவும், இயல்பாக இருப்பது போல பாவனை செய்தவாறே, “என்னடா??!! நாங்க கிளம்பட்டுமா??” எனக் கேட்டார்.“ஹான்... சரி... கிளம்புங்க... அப்பா வரட்டும்...” என வைஷு கூற, “யம்மா... இது லேடீஸ் மட்டும் தங்குற இடம்... வேதா சாரும் அவங்க ஃப்ரென்ட்ஸும் தவிர வேற எந்த ஆம்பளைக்கும் இங்கே இடமில்ல...” என கனத்த குரலில் குறுக்கிட்டார் அந்தப் பெண். அநேகமாக அவர் அந்த இடத்தின் பாதுகாவலராக இருக்கக்கூடும்.தனக்கு இப்படியொரு நிலையா? என நொந்துகொண்ட வைஷு, தன் தாயிடம் திரும்பி, “நீங்க கிளம்புங்க.. அப்பாகிட்டே நான் ஃபோன்ல பேசிக்கிறேன்...” என்கவும், “ஃபோன்லயா?? அப்போ ஃபோன் வச்சிருக்கிறியா?? இங்கே ஃபோன் அலவுட் இல்ல... என்ன தேவைன்னாலும் இங்கே இருக்கிற காமன் ஃபோன்ல இருந்து தான் பேசணும்...” என மீண்டும் குறுக்கிட்டார் அவர்.அதுவரை ஸ்திரமாக நின்றுகொண்டிருந்த இந்திரா; இவ்விதிமுறையைக் கேட்டதும் ஒருநொடி ஆடிவிட்டார். “ஒருதிங்களுக்கு ஒருமுறை தான் விடுதலை என்பதைக் கூட ஏற்றுக்கொண்டுவிட்டேன்... தினமொருமுறை பேசுவதற்குக்கூட இயலாதா??” என அவரது உள்ளம் குமுற, அது அவர் முகத்திலேயே தெளிவாகத் தெரிந்தது.அதற்குமேல் அவர் அவ்விடம் இருப்பது நல்லதல்லவென நினைத்த வைஷு, “ஓகே பை...” எனக் கூறிவிட்டு திரும்பிப்பாராமல் சென்றுவிட, தன் முந்தானையால் கண்களைத் துடைத்தவாறே வெளியேறினார் இந்திரா.அறைக்குச் சென்றவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “நான் செஞ்ச முட்டாள்தனத்தினால இப்போ எல்லாரும் மனசளவுல இப்படி கஷ்டப்படுற நிலைமை ஆகிடுச்சே... நான் என்ன பாவம் பண்ணுனேன்?? எல்லாரும் நல்லா இருக்கணும்ன்னு நெனச்சது என் தப்பா?? நான் வேதாவைக் காதலிச்சிருக்கவே கூடாது... அப்படியே காதலிச்சிருந்தாலும் இன்னொரு பக்கம் திசைதிரும்பியிருக்கக் கூடாது... இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்??” என தன்னைத் தானே நொந்தவாறு தலையில் அடித்து அழத் தொடங்குகையில் தரைத்தளத்தில் இருந்து மீண்டும் அதே கனத்த குரல்; “ஆத்தா... சீக்கிரம் வா... வேலைக்கு போகணும்...” என.“வேலைக்கா?? இப்பவேவா?? இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணிட்டு வந்ததுக்கு கொஞ்சநேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கக்கூடாதா?? அட்லீஸ்ட் உக்காரக்கூட விடமாட்டாங்க போலவே...” என பெருமூச்சுடன் எழுந்தவள்; முகத்தைக் கழுவுவதற்காக அவ்வறையை ஒட்டிய கழிப்பறையைத் தேட, அவளைத் தேடிக்கொண்டு அறைக்கே வந்துவிட்டார் அப்பொறுப்பாளர்.“என்ன தேடுற?” என்ற அவரது கணீர் குரலில் திடுக்கிட்டவள்; சுதாரித்துக்கொண்டு திரும்பி, “ஹான்... அது... ரெஸ்... ரெஸ்ட்ரூம் போகணும்...” என்றாள் தட்டுத்தடுமாறியவாறே.“ரெஸ்ட் ரூம் உள்ளே கிடையாது... அங்கே மொத்தமா இருக்குது... யூஸ் பண்ணிக்கோ... சீக்கிரமா போயிட்டு வா...” என அவர் கைநீட்டிய திசையை நோக்கி அவசரகதியில் ஓடியவள்; இரண்டொரு நொடியில் எதையும் சிந்திக்காது இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு, முகத்தை பட்டும் படாமலும் அலம்பிக்கொண்டு ஓடிவந்தாள்.“ம்ம்ம்... சரி... ரூமைப் பூட்டிட்டு கிளம்பு... ரூம் சாவியை கீழே இருக்கிற ஹேங்கர்ல மாட்டிட்டு போகணும்... தினமும் கிளம்பும் போது.. சரியா?!” என அவர் கூறவும் திக்கென்றது வைஷுவிற்கு.“ரூம் சாவியை கீழே கொடுத்துட்டு போகணுமா?? இது என்ன வகையான நியாயம்... கொஞ்சம்கூட பெர்சனல் ஸ்பேஸ் கிடையாதா??” என ஓலமிட்ட மனசாட்சியைத் தற்காலிகமாக தனியறையில் அடைத்துவிட்டு, அவரது கட்டளைகளை இயந்திரமாக நிறைவேற்றியவாறே அவளுக்கான வேலைசெய்யும் இடத்தை அடைந்தாள்.அவள் அங்கே நுழைகையில், ஒரு பெண்ணுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான் வேதா. அதைப் பார்க்கையில் வைஷுவிற்கு பெரிதாக கோபம், வேதனை, ஏமாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அவள் இவை எதையும் எதிர்பார்த்து வரவில்லையல்லவா?! தன்மானமும், சுயமரியாதையும், தன்னிறைவான வசதிகளும் சுயநினைவுடன் இருக்கையிலேயே பறிக்கப்படுவதே அவளின் தற்காலிக தலையாய பிரச்சனை.அதை முதலில் சரிசெய்துவிட்டால் தனக்கான இடத்தை ஸ்திரப்படுத்திக்கொள்வாளாக இருக்கும்.“உள்ளே போய் நம்ம வேலையைப் பார்ப்போமா??” என யோசித்த வைஷு, “ஏன் பெர்மிஷன் கேக்காம உள்ளே வந்தேன்னு அதுக்கும் எல்லார் முன்னாடியும் திட்டிட்டான்னா ரொம்ப சங்கடமா போய்டும்... யாரோட முகத்திலேயும் முழிக்க முடியாது...” என தனக்குத் தானே முடிவுசெய்து கொண்டவளாக, “சார்... எக்ஸ்கியூஸ் மீ...” என மெல்லியக்குரலில் அழைத்தாள்.மென்மையாகவே அவள் அழைத்திருந்தாலும் வாசலுக்கு சற்று அருகிலேயே நின்றிருந்த அவன் காதுகளை அக்குரல் கண்டிப்பாக எட்டியிருக்கும். ஆயினும் அதை மீண்டும் கேட்க விரும்பியதாலோ என்னவோ கேட்காதவன் போல நின்றுகொண்டிருந்தான்.“வேணும்னே பண்றானோ?” என யோசித்தவளுக்கு அவன் வேண்டுமென்றே செய்திருந்தாலும் எதிர்த்து நிற்கும் திராணியோ உரிமையோ இல்லையே. எனவே வேறுவழியின்றி குரலை உயர்த்தி மீண்டும் அழைத்தாள்.சற்று கம்பீரத்துடன் திரும்பியவன்; எதுவும் நடவாததுபோல அவளை நோக்க, அவளாகவே முன்வந்து “சார்... புதுசா... வந்திருக்கிறேன்...” என சுயஅறிமுகம் செய்ய முற்பட்டாள்.“ஓஹோ..” என தாடியை நீவியவாறே வேறுபுறம் பார்த்து அவன் எதையோ யோசிக்க, அவளுக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.“எல்லாத்துக்கும் மொத்தமா சேர்த்து வச்சு செய்யப் போறான்... முதல் நாள்ன்னு கூட பார்க்காம ரிவென்ஜ் எடுக்குறான் போல...” என யோசித்தவள்; தன்னைத்தான் தேற்றிக்கொண்டு எதற்கும் தயார் என்பது போன்ற முகபாவனையுடன் அவனைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தாள்.அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவனுக்கு வன்னிதழோரம் மெல்லிய புன்னகை உதித்தாலும், அவளது கவனத்தைத் தன்மீதே நிலைத்திருக்கச்செய்யும் பொருட்டு சில நிமிடங்கள் ஏதேதோ சிந்திப்பது போல நடித்துக் கொண்டிருந்தான்.ஒருகட்டத்திற்குமேல் அவளின் பொறுமை லேசாக அசைவது போலத் தோன்றவும், அவள்புறம் திரும்பாமல் அங்கே பணிபுரிந்த கொண்டிருந்த பெண்களை நோக்கி கைகளைத் தட்டினான்.அவனது கரவோசையில் நிமிர்ந்த பெண்கள் அனைவரும், “சொல்லு வேதா...” என சற்றே குழைந்த குரலில் வினவ, சற்றே திமிராக அவளைப் பார்த்தான் வேதா. “பார்த்தியா... என் பவரை..” என்பது போல இருந்தது அவனது பார்வை.அவள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாதவள் போல அலட்சியப்பார்வையொன்றை வீசவும், மெலிதாக சிரித்துக்கொண்டவன்; “டியர்ஸ்... இவங்க... மிஸ்... மிஸ்...” என இழுக்க, “வைஷாலி...” என அவளாகவே முன்வந்து கூறவும், “எஸ்... மிஸ்.வைஷாலி... உங்களோடதான் இருப்பாங்க இனி... நீங்க என்ன பண்றீங்களோ அதையே இவங்களுக்கும் சொல்லிக் கொடுங்க...” என முடித்தான்.“என் பெயர்கூட தெரியாத மாதிரி நடிக்கிறான் பாரு... சரியான ஃபிராடு...” என வைஷு மனதிற்குள் கருவியவாறே அவனைக் கண்டுகொள்ளாதவாறு தனது இருக்கைக்குச் செல்ல, அவனோ சற்று உரத்த குரலில், “ஒழுங்கா வேலை செய்யணும்.. வேற எதிலேயும் கவனம் சிதறக்கூடாது...” என அறிவுறுத்தினான். அவன் எதற்காக அவ்வாறு கூறுகிறான் என உணர்ந்தவளாயினும் அவனைப் போலவே நடிக்க வேண்டுமென்ற உறுதியோடு, “ஓகே சார்...” என்பதில் “சார்...” என்பதை சற்றே அழுத்தினாள்.அனைவரும் அவளை ஒரு பொருட்டாக மதியாமல் அமர்ந்திருக்க, ஒரே ஒரு பெண் மட்டுமே சிநேகப்புன்னகை வீசினாள். அதுகாறும் இருந்து வந்த இறுக்கம் அவளைப் பார்த்ததும் தளர்ந்துவிட, குறுநகையுடன் அவளருகே சென்று அமர்ந்தாள் வைஷாலி.“ஹாய்... நான் மஞ்சு...” என அவள் கூறவும், பதிலிறுக்க நா எழவில்லை வைஷுவிற்கு.அந்தத் தயக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட மஞ்சு, “என்னாச்சு?? தமிழ் தானே...” என கேட்க, “ஹான்... தமிழ் தான்... வைஷு... வைஷாலி...” என கையை நீட்டினாள் வைஷு.பதிலுக்கு கையைக் குலுக்கிய மஞ்சு, வேலையைக் கற்றுக்கொடுக்க அன்று முழுக்க அவ்விடத்தின் நடைமுறைகளை எவ்வித எதிர்கேள்வியுமின்றி செவ்வனே முடித்துவிட்டு தன்னறைக்குத் திரும்பினாள் அவள்.செல்லும் வழியில் வைஷு கனத்த மனத்துடன் நடந்துகொண்டிருக்க, மஞ்சுதான் மௌனத்தைக் கலைத்தாள். “ஏன் டல்லா இருக்கிறீங்க? இங்கே எப்படி சர்வைவ் பண்ணுவோம்ன்னு யோசிக்கிறீங்களா?? எதுக்கும் கவலைப்படாதீங்க.. இங்கே முன்ன பின்ன இருந்தாலும் பழகிட்டீங்கன்னா சரியாகிடும்...” என்றவள்; “இங்கே எப்படி வந்தீங்க?? யாரோட ரெக்கமன்டேஷன்??” என வினவ, எப்படி உரைப்பாள் தான் அவனின் முன்னாள் காதலியென.“அது.. தெரிஞ்சவங்க ஒருத்தங்க...” என சமாளித்தவாறே அறைக்குச் செல்ல, அவளுக்கு முன்னரே இரண்டு பெண்கள் அங்கே இருந்தனர். இருவரும் அவளை ஒரு பொருட்டாக மதியாமல் தங்கள் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருக்க, தன் முன்னாள் மாமியார் இல்லம் நினைவுக்கு வந்து போனது வைஷுவிற்கு.அங்கே இவள் வைத்ததே சட்டம்; யாரும் இவளை எதிர்த்து ஒரு சொல் கூட உதிர்த்தது இல்லை; முடிவெடுத்தது வைஷுவெனில் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்வரை கட்டுப்பட்டே நிற்பர்.“ச்சே... இப்ப அதை நெனச்சு என்னாகப் போகுது...” என கடந்தகால நினைவுகளுக்கு வி.ஆர்.எஸ் வழங்க நினைத்தவள், தனது உடைமைகளை அடுக்க, ஒருவழியாக இரவு வந்துவிட்டது.அவளைத் தேடி அறைக்கு வந்த மஞ்சு, கூடவே தன் தோழி லக்ஷ்மியையும் அழைத்து வந்திருந்தாள். “ஹாய்... வைஷு... எதை நெனச்சும் பயப்படாதீங்க... நாங்க இருக்கிறோம்...” என்ற லக்ஷ்மி, மென்மையாக அணைத்து தைரியமளிக்க முற்பட, மென்னகை சிந்தினாள் வைஷு.“இவங்க லக்ஷ்மி... நம்ம வேதா இருக்கிறார்ல... அவர் ஃப்ரென்ட் ரசாக்கோட வீட்டம்மா...” என மஞ்சு கூறவும், “ரசாக்... ரசாக்...” என வைஷுவின் நினைவுகள் எங்கோ செல்லத் திமிறியது.“இந்த உலகத்துல அவன் ஒருத்தன்தான் அந்த பெயர்ல இருக்கிறானா?!!” என தன் சிந்தைகளுக்கு கடிவாளமிட்டவள்; “ஹாய்...” என லக்ஷ்மியைப் பார்த்து புன்னகைக்க, அதற்குள் கீழே இருந்து “லக்ஷு...” என ஒரு ஆணின் குரல்கேட்டது.அது சற்றே பரிச்சயமான குரலாக இருக்கவும், வைஷு திடுக்கிட்டு கீழே பார்க்க.... ஆம்... அவன்தான்... அவனேதான்...


ரசாக் – அவளின் முன்னாள் காதலன். வேதாவுடனான காதல் நடப்பில் இருக்கும்போதே அவளை மெல்ல மெல்ல தன் காதலுக்குள் இணைத்துக்கொண்டவன். பின் அவளை வேறொருவனுடன் திருமண பந்தத்தில் இணையச் செய்துவிட்டு பொறுப்பின்றி ஒதுங்கிக்கொண்டவன். அவனே தான்!!“இவன் எப்படி இங்கே?! இவனும் இங்கேயே இருந்தா என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்??” என அவள் யோசித்துக்கொண்டிருக்க, மென்மையாக அவள் தோளைத் தொட்ட லக்ஷ்மி, “அந்த ப்ளூ ஷர்ட் தான்... ரசாக்... வேதாவோட ஃப்ரென்ட்... நாங்களும் இங்கேயே தான் தங்கியிருக்கிறோம்...” என்கவும், வைஷுவால் மூச்சுவிடக்கூட முடியவில்லை. அந்த அளவிற்கு உணர்ச்சிக்கு ஆட்பட்டிருந்தாள்.“இவனைப் பத்தின விஷயம் வேதாவுக்கு தெரியுமா?? தெரிஞ்சா என்ன ஆகும்??” என யோசித்தவாறே, வேதாவைத் தேடி விழிகளை அலைபாயவிட, அவனோ எதுவும் நடவாததுபோல ஒரு ஓரமாக ஐந்து பெண்களுடன் ஒட்டி உரசியவாறே கதையளந்து கொண்டிருந்தான்.

தொடரும்..
 
Status
Not open for further replies.
Top