இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் - கதைத்திரி

geethusri

Moderator
அத்தியாயம் - 23 :

தாமரை நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது யாரோ அவள் தோளை உலுக்கினர்.

தன் தோளை உலுக்கிய கைகளை தட்டி விட்டவள் திரும்பி படுத்தாள்.

"தாமரை... தாமரை" என்று அழைத்தபடி மீண்டும் யாரோ அவள் தோளை உலுக்கினர்.

'ப்ச்' என்று முணுமுணுத்தபடி மெதுவாக கண்ணை திறந்தவளின் பார்வையில் ஒரு கையால் வயிற்றை பிடித்தபடி முகம் வேதனையில் கசங்கியிருக்க அமர்ந்திருந்த மாணிக்கம் விழுந்தான்.

அவன் இருந்த கோலத்தை பார்த்து பதறியடித்துக் கொண்டு எழுந்தவள் "என்னாச்சு மாமா?" என்றாள்.

"என்னனு தெரியல... ரெண்டு மணி நேரமா வயிறு ரொம்ப வலிக்குது... நானும் சமாளிச்சிக்கலாம்னு நினைச்சேன். ஆனா முடியல. அதான் உன்னை எழுப்ப வேண்டியதா போயிடிச்சு"

அவன் சொன்னதை கேட்டு கோபத்தில் பல்லை கடித்தவள் "லூசா நீ? ரெண்டு மணி நேரமா வலியை பொறுத்துக்கணும்னு என்ன அவசியம்? அப்போவே என்னை எழுப்பியிருக்கலாம் இல்ல" என்று கடிந்து கொண்டவள் பின்னர் "ரொம்ப வலிக்குதா?" என்று கவலையுடன் கேட்டாள்.

அவன் ஆமென்று தலையசைத்தான்.

அவள் தலையை திருப்பி மணியை பார்த்தாள். மணி மூன்று.

"இந்த நேரத்துல கிளினிக் எதுவும் இருக்காதே... பேசாம முண்டியம்பாக்கம் போய்டலாமா?"

"இல்லை வேண்டாம்... உன் ஆயா வயித்து வலிக்கு ஒரு கஷாயம் வச்சி கொடுக்குமே... உனக்கு அந்த கஷாயம் வைக்க தெரியுமா? தெரிஞ்சா வச்சி கொடேன்" என்று பல்லை கடித்து வலியை பொறுத்துக் கொண்டு சொன்னான்.

அவன் முகத்தை பார்க்கும் போதே அவன் எந்த அளவிற்கு வலியில் இருக்கிறான் என்பது புரிந்தது.

வேகமாக எழுந்தவள் நேராக பின்பக்கம் சென்றாள்.

அவள் மீண்டும் திரும்பி வரும் போது அவள் கையில் கஷாயம் இருந்தது.

ஒரு மூலையில் உடம்பை குறுக்கி கண்ணை மூடி படுத்திருந்தவனின் அருகே சென்றவள் அவன் தோளை தொட்டு உலுக்கியபடி "மாமா" என்றாள்.

அவன் மெதுவாக கண்ணை திறந்தான்.

"இந்தா கஷாயம்... சூடா இருக்கு... பாத்து குடி" என்றபடி அவன் முன்பு டம்பளரை நீட்டினாள்.

மெதுவாக எழுந்தவன் அதை வாங்கி மெல்ல குடித்தான்.

அவன் குடித்து முடித்ததும் டம்பளரை வாங்கி ஓரமாக வைத்தவள் "சரி படுத்துக்கோ" என்றாள்.

அவன் மீண்டும் உடம்பை குறுக்கி படுக்கச் சென்றான்.

அதை பார்த்தவள் "நேரா படு... அப்போதான் இதை தேய்க்க முடியும்" என்றபடி மற்றொரு கையிலிருந்த எண்ணெய் பாட்டிலை காட்டினாள்.

"என்ன அது?" என்று மெல்லிய குரலில் கேட்டவனிடம் "விளக்கெண்ணெய்... சூட்டால வந்த வயித்து வலின்னா இதை தேய்ச்சா குறைஞ்சிடும்" என்றபடி பாட்டிலின் மூடியை திறந்து உள்ளங்கை நிறைய எண்ணெயை ஊற்றினாள்.

பின்னர் மற்றொரு கையால் அவன் பனியனை மேலே ஏற்றிவிட்டவள் அவன் வயிற்றில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்ய ஆரம்பித்தாள்.

அவள் மசாஜ் செய்ய செய்ய வயிற்று வலி லேசாக குறைவது போல இருந்தது.

மசாஜ் செய்த பிறகு கையை எடுத்தவள் "இப்போ எப்படி இருக்கு மாமா?" என்று ஆதூரமாக கேட்டாள்.

"நீ எண்ணெயை தேய்க்கும் போது லேசா குறைஞ்ச மாதிரி இருந்துச்சு. இப்போ திரும்ப வலிக்குது" என்று அவன் பாவமாக சொன்னான்.

"சரி... நான் தேய்ச்சிகிட்டே இருக்கேன்... நீ கண்ணை மூடி தூங்க ட்ரை பண்ணு" என்றவள் மெதுவாக அவன் வயிற்றில் தடவிக் கொடுத்தாள்.

அவள் தடவ தடவ இதமாக உணர்ந்தவன் சிறிது நேரத்தில் கஷ்டப்பட்டு தூங்கிவிட்டான்.

அவன் தூங்கிவிட்டதை பார்த்தவள் எங்கே தடவுவதை நிறுத்திவிட்டால் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் தடவிக் கொண்டே இருந்தாள்.

நேரம் செல்ல செல்ல அவளால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியே அவனருகே படுத்தவள் தடவிக் கொடுத்தபடியே தூங்கிப் போனாள்.

வயிறு முணுக் முணுக்கென மீண்டும் வலிப்பது போல உணர்ந்த மாணிக்கம் கண் விழித்த போது தாமரை அவன் வயிற்றின் மீது கைவைத்தபடியே அவன் அருகே உறங்குவது விழுந்தது.

அவளின் செய்கையில் மனம் நெகிழ்ந்தவன் அவள் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் தன் வயிற்றின் மீதிருந்த கையை மெதுவாக விலக்கினான்.

அவன் தொடுகையில் தூக்கம் கலைந்து கண் விழித்தவள் "இப்போ எப்படியிருக்கு மாமா?" என்றாள்.

"லைட்டா வலி இருக்கு" என்று உண்மையை சொன்னான் அவன்.

"இன்னுமா வலிக்குது... பேசாம டாக்டர் கிட்ட போவோமா?" என்று கவலையுடன் கேட்டாள்.

"போய்த்தான் ஆகணும்... முணு முணுன்னு வலிச்சிக்கிட்டே இருக்கு"

அவள் நேரத்தை பார்த்தாள். மணி ஏழு தான் ஆகியிருந்தது.

"பக்கத்தூர்ல கிளினிக் வச்சிருக்க டாக்டர் வீடு அதே தெருவுல தான் இருக்கு. எனக்கு அவங்க நல்லா பழக்கம். வீட்டுக்கு போனாலும் டிரீட்மென்ட் பாப்பாங்க. இப்போவே போலாமா?"

லேசான வலியென்றாலும் தொடர்ந்து முணு முணுவென்று வலிப்பதை அவனாலும் தாங்க முடியவில்லை. அதனால் சரியென்று தலையசைத்தான்.

"சரி... நீ சட்டை போடு... நான் முகம் கழுவிட்டு வந்துடறேன்" என்றவள் ஜெட் வேகத்தில் முகம் கழுவிவிட்டு வந்து தலைவாரி தயாரானாள்.

பின்னர் தன் டிவிஸ் சாவியை எடுத்தவள் வீட்டை பூட்டிக் கொண்டு அவனுடன் பக்கத்தூரை நோக்கி சென்றாள்.

நேராக டாக்டரின் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியவள் அவனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு வாசலருகே சென்று "டாக்டரம்மா" என்று குரல் கொடுத்தாள்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் ஐம்பதுகளின் முற்பகுதிகளில் இருந்த பெண்மணி ஒருவர் வெளியே வந்தார்.

அந்த காலை வேளையில் தாமரையை பார்த்ததும் ஆச்சர்யமடைந்தவர் "என்ன தாமரை?" என்றார்.

வெளியே நின்றிருந்த மாணிக்கத்தை காட்டியவள் "இது என்னோட புருஷன்... இவருக்கு வயித்து வலி... கொஞ்சம் என்னனு பாக்கறீங்களா?" என்றாள்.

'என்னது? இவன் இவளோட புருஷனா?' என்று நினைத்தாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் "அவரை கூட்டிக்கிட்டு உள்ள வா" என்றவர் வேகமாக தன் அறைக்கு சென்று அங்கிருந்த மெடிக்கல் கிட்டை கொண்டு வந்தார்.

அதற்குள் தாமரை அவனை அழைத்து வந்து சோபாவில் அமர்த்தியிருந்தாள்.

அவனை பரிசோதிக்க ஆரம்பித்தவருக்கு அவன் கண்களை பார்க்கும் போதே மது அருந்துபவன் என்று புரிந்துவிட்டது.

'இந்த பொண்ணுக்கு என்ன தலையெழுத்துன்னு இப்படி வயசானவன, அதுவும் ஒரு குடிகாரனை கட்டிக்கிட்டு இருக்கு' என்று யோசித்தபடியே அவனை பரிசோதித்து முடித்தவர் "எப்போ இருந்து வயிறு வலி இருக்கு?" என்று அவனிடம் கேட்டார்.

"நேத்து ராத்திரியில இருந்து டாக்டர்"

"நைட் என்ன சாப்பிட்டிங்க?"

"பரோட்டா டாக்டர்"

"நைட் குடிச்சீங்களா?"

"ஆமா டாக்டர்" என்று அவன் சங்கடத்துடன் தலையசைத்தான்.

அவன் சொன்னதை கேட்டவர் வேகமாக ஒரு சிரிஞ்சை எடுத்து அதில் மருந்தை ஏற்ற ஆரம்பித்தார்.

அவர் செய்கையை பார்த்த தாமரை "ஒன்னும் பிரச்சனையில்லையே டாக்டர்... நேத்துன்னு இல்ல... தினமும் குடிக்கும்... ஒருவேளை அதால தான் வயித்து வலியா?" என்று கவலையுடன் கேட்டாள்.

"இப்போதைக்கு என்னால உறுதியா சொல்ல முடியாது தாமரை... டெய்லி குடிப்பாருன்னா எதுக்கும் நான் சொல்ற டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வா... உள்ள எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துடலாம். இப்போதைக்கு நான் வயித்து வலி நிக்க இந்த ஊசியை போடறேன். நீ அந்த டெஸ்டை எடுத்துட்டு க்ளினிக்ல என்னை வந்து பாரு" என்றவர் அவன் கையில் ஊசியை ஏற்றினார்.

"சரிங்க டாக்டர்" என்றவள் அவரிடம் என்னென்ன டெஸ்ட் செய்ய வேண்டுமென்று எழுதி வாங்கிவிட்டு மாலை க்ளினிக் வருவதாக சொல்லிச் சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் சட்டையை கழற்றிவிட்டு படுத்தவன் "எனக்கு டயர்டா இருக்கு... நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்" என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தான்.

மூன்று மணி நேரம் கழித்து அவனை எழுப்பிய தாமரை "வா மாமா... போய் டாக்டர் சொன்ன டெஸ்ட் எல்லாம் கொடுத்துட்டு வரலாம். அப்போதான் சாயந்திரத்துக்குள்ள ரிசல்ட் கிடைக்கும்" என்றாள்.

கொட்டாவி விட்டபடி எழுந்து அமர்ந்தவனுக்கு இப்போது வயிற்று வழியெல்லாம் இல்லை.

"இப்போ வலி இல்ல. அப்புறம் எதுக்கு அந்த டெஸ்டை எல்லாம் பண்ணிக்கிட்டு... தண்ட செலவு..." என்றவனை முறைத்தவள் "வலி போய்டிச்சில்ல... துரை அப்படித்தான் பேசுவீங்க... நைட்ல இருந்து நான் எவ்வளவு பயந்துகிட்டு இருக்கேன்னு அந்த கடவுளுக்கு தான் தெரியும். ஒழுங்கா இப்போ என்னோட வரியா? இல்லையா?" என்றாள்.

"பணத்தை எதுக்கு வேஸ்ட் பண்ணனும்னு தான் சொல்றேன் தாமரை... டாக்டர்னா அப்படித்தான் இருக்க எல்லா டெஸ்ட்டையும் எடுக்க சொல்லுவாங்க... அதை போய் பெருசா எடுத்துக்கலாமா?"

"பணம் போனா போய்ட்டு போகுது. இந்த டெஸ்ட்டையெல்லாம் எடுத்து பார்த்து நீ நல்லாயிருக்கேன்னு டாக்டர் சொன்னாத்தான் என்னால நிம்மதியா இருக்க முடியும். என் நிம்மதி முக்கியம்னா வா... இல்ல அதைவிட பணம் தான் முக்கியம்னா வர வேண்டாம்"

அவள் சொல்லி முடிப்பதற்குள் எழுந்து சட்டையை போட்டவன் "கிளம்பு போகலாம்" என்றான்.

அவனை அழைத்துக் கொண்டு பக்கத்தூரில் இருக்கும் லேபிற்கு சென்றவள் டாக்டர் சொன்ன அனைத்து டெஸ்டுகளையும் எடுத்த பிறகே நிம்மதியானாள்.

பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் "நீ போய் பல் தேய்ச்சிட்டு வா... சாப்பிடலாம்" என்றவளிடம் "நைட் எண்ணெய் தேய்ச்சது கச கசன்னு இருக்கு. ஒரு குளியல் போட்டுட்டு வந்துடறேன்" என்றவன் துண்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

குளித்துவிட்டு அவன் வரும் போது அவள் அவனுக்கு பரிமாற தயாராய் இருந்தாள்.

அவன் வந்து அமர்ந்ததும் தட்டில் இட்லிகளை வைத்தவள் காரமில்லாமல் செய்த சட்னியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிவிட்டு சாப்பிட சொன்னாள்.

இட்லியை சட்னியில் தொட்டு வாயில் வைத்தவனின் முகம் அஷ்ட கோணலாகியது.

"அடியேய் என்னடி இது? சுத்தமா காரமே இல்லாம சப்புன்னு இருக்கு"

"வயித்து வலி இருக்கும் போது காரமில்லாம தான் சாப்பிடணும். நீ மட்டுமில்ல நானும் அதைத்தான் சாப்பிட போறேன்" என்றவள் தனக்கும் பரிமாறிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் இயல்பாக சாப்பிடுவதை பார்த்தவன்

"எப்புடிடி அதை சாப்பிடற?" என்று முகத்தை சுளித்தபடி கேட்டான்.

"கையால தான்" என்றவள் தன் தட்டில் இருந்த இட்லியை பிட்டு அவன் வாயில் திணித்தாள்.

"ஒழுங்கா சாப்பிடு" என்று செல்லமாக மிரட்டியவள் அவன் சாப்பிட்ட பிறகே அவனை விட்டாள்.

அன்று முழுக்க அவனுக்கு பார்த்து பார்த்து அனைத்தும் செய்தவள் மாலையானதும் அவனை அழைத்துக் கொண்டு டாக்டரை பார்க்க சென்றாள்.

அதே ஊரில் தான் லேப் இருப்பதால் முதலில் ரிப்போர்ட்டை சென்று வாங்கிவிட்டு அதன் பிறகு கிளினிக்கிற்கு சென்றாள்.

அவர்கள் செல்லும் போது எந்த நோயாளியும் இல்லை. அதனால் இவர்கள் நேராக உள்ளே சென்றனர்.

அவர்களை பார்த்ததும் புன்னகைத்த டாக்டர் "இப்போ வயித்து வலி எப்படி இருக்கு?" என்றார்.

"ஊசி போட்ட பிறகு வலியில்ல டாக்டர்... ஆனா இவதான் சொல்ல சொல்ல கேட்காம நீங்க சொன்ன எல்லா டெஸ்ட்டையும் எடுத்ததோட என்னையும் திரும்ப உங்ககிட்ட கூட்டிட்டு வந்துட்டா" என்று சலிப்புடன் சொன்னான்.

"நீங்க ட்ரிங்க் பண்றிங்க இல்லையா? அதனால வருஷம் ஒருமுறை உங்க ஹெல்த்தை செக் பண்ணிக்கிறது நல்லது தான்... நீங்கன்னு இல்ல முப்பத்தஞ்சு வயசுக்கு மேல எல்லாரும் வருஷம் ஒருமுறை ஜெனரல் செக்கப் பண்ணிக்கிறது பெட்டர்"

"முன்ன எல்லாம் அறுபது வயசுக்கு மேல இருக்கவங்களை தான் செக் பண்ணிக்க சொல்லுவீங்க... இப்போ என்னடான்னா முப்பத்தஞ்சு வயசுக்கே செக் பண்ணிக்க சொல்றிங்க?"

"என்ன பண்ண... அப்போ அறுபது வயசுல வந்த முட்டி வலி,மூட்டு வலி, ஹார்ட் ப்ரோப்லேம் எல்லாம் இப்போ முப்பது வயசுலயே வருதே" என்றவர் தாமரையிடம் ரிப்போர்ட்டை கேட்டார்.

அவள் கொடுத்ததும் அதை வாங்கி பார்த்தவரின் முகம் மாறியது.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 24 :

அவரின் முகமாற்றத்தை கவனித்த தாமரை "என்னாச்சு டாக்டர்?" என்று பதற்றத்துடன் கேட்டார்.

அவளுக்கு பதில் சொல்லாமல் "நீங்க எவ்வளவு வருஷமா ட்ரிங்க் பண்றிங்க மாணிக்கம்?" என்றார் அவனிடம்.

"பத்து வருஷத்துக்கு மேல இருக்கும் டாக்டர்" என்று அவன் சங்கடத்துடன் சொன்னான்.

"டெய்லி குடிப்பீங்களோ?" என்றவரை பார்த்து ஆமென்று தலையசைத்தான்.

"நினைச்சேன்" என்றவர் சட்டென்று அமைதியாகிவிட்டார்.

"டாக்டர் ப்ளீஸ் எதுவா இருந்தாலும் பரவாயில்ல... உண்மையை சொல்லுங்க... எனக்கு ரொம்ப பயமா இருக்கு?" என்று பயத்துடன் கேட்டாள் தாமரை.

அவள் பயத்தை உணர்ந்தவன் தன் இடது கையால் அவள் வலது கையை பற்றிக் கொண்டபடி "அவ ரொம்ப பயப்படறா டாக்டர்... எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க" என்றான்.

தாமரையை பரிதாபமாக பார்த்தவர் "இதை சொல்ல எனக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனாலும் வேற வழியில்ல... உன் புருஷனோட ஹெல்த் கண்டிஷன் என்னனு நீயும் தெரிஞ்சிக்கிறது நல்லது" என்றவர் பின்னர் நொடி நேர அமைதிக்கு பிறகு "உன் புருஷனோட லிவர் டேமேஜ் ஆகியிருக்கு... அதோட சிம்ப்டம்ஸ் தான் நேத்து வந்த வயித்து வலி" என்றார்.

அவர் சொன்னதை கேட்ட மாணிக்கம் அதிச்சியடைந்தான் என்றால் தாமரை சத்தமில்லாமல் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

முதலில் சுதாரித்த மாணிக்கம் "இதை சரிபண்ண முடியுமா டாக்டர்?" என்றான்.

"நிச்சயமா முடியும். சிலருக்கு எல்லாம் லாஸ்ட் ஸ்டேஜ்ல தான் தெரிய வரும். உங்க விஷயத்துல ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிட்டோம். கொஞ்ச நாள் டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டா இதை சரி பண்ணிடலாம். ஆனா இனி நீங்க குடிக்கவே கூடாது. ஒருவேளை குடிச்சா டிரீட்மெண்ட் ஒர்க் ஆகாது. அதோட உங்க கண்டிஷனும் மோசமாகி" என்றவர் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை.

அவர் சொல்லாமலேயே என்ன சொல்ல வந்தார் என்பது இருவருக்குமே புரிந்தது.

தாமரை தேம்பியழ ஆரம்பித்தாள்.

அவள் அழுவதை பார்த்தவனுக்கு மனம் பிசைந்தது.

"ஏய் இப்போ எதுக்கு அழற? அதான் டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டா சரி பண்ணிடலாம்னு சொல்லிட்டாங்கள்ல... அழாதடி" என்று அதட்டியவனிடம் "கூடவே இனி நீ குடிக்க கூடாதுன்னும் சொல்லியிருக்காங்களே... என் பேச்சையே கேட்காதவன் டாக்டர் பேச்சையா கேட்க போற... என் அம்மா மாதிரியே என் தலைவிதியும் ஆகணும்னு விதியிருந்தா நான் அதை அனுபவிச்சு தானே ஆகணும்" என்று அழுதபடியே சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டவன் உதட்டை கடித்தான். அவள் சொன்னபோதே குடியை நிறுத்தியிருந்தால் ஒருவேளை இந்த வயிற்று வலி வந்திருக்காதோ? இந்த விஷயமும் அவர்களுக்கு தெரிந்திருக்காதே... என்று அவன் மனம் அடித்துக் கொண்டது.

'நல்லவேளை இப்போவாவது தெரிஞ்சிதே... அதை நினைச்சு ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்'

பெருமூச்சை வெளியேற்றியவன் அழுது கொண்டிருந்தவளிடம் "இங்க பாரு தாமரை... நீ நினைக்கிற மாதிரி எனக்கு எதுவும் ஆகாது. நான் இனி குடிக்கவே மாட்டேன். போதுமா? ப்ளீஸ்டி அழாத" என்று கெஞ்சலாக சொன்னான்.

"நான் உன்னை நம்ப மாட்டேன். நீ என்னை சமாதானப்படுத்த பொய் சொல்ற" என்று தேம்பியபடி சொன்னாள்.

அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவன் தன் கையை அவள் தலையில் வைத்து "உன்மேல சத்தியமா நான் குடிக்க மாட்டேன்" என்றான்.

அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை புரிந்து கொண்டவள் அதன் பிறகே அழுகையை நிறுத்தினாள்.

இவ்வளவு நேரமாக அவர்கள் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் "ரொம்ப நல்ல முடிவு மாணிக்கம். நான் கொடுக்கற மருந்து, மாத்திரைகளை விட இப்போ நீங்க எடுத்திருக்க இந்த முடிவுதான் உங்களை சீக்கிரமே குணப்படுத்தும்" என்றவர் ஒரு சீட்டில் சில மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்து "இதை பார்மசியில வாங்கிக்கோங்க... மாத்திரை காலியானதும் என்னை வந்து பாருங்க" என்றார்.

"சரிங்க டாக்டர்" என்ற மாணிக்கம் தாமரையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவன் மருத்துசீட்டை கொடுத்து மாத்திரை வாங்கிக் கொண்டிருந்த போது அவனருகே நின்றிருந்த தாமரை "ஐயோ மாமா... நான் என் போனை டாக்டர் ரூம்லயே வச்சிட்டு வந்துட்டேன். நீ மருந்து வாங்கிகிட்டு இரு. நான் போய் கொண்டு வந்துடறேன்" என்றாள்.

அவன் தலையசைத்ததும் டாக்டர் ரூமிற்கு சென்றவள் வேகமாக அவரருகே சென்று பட்டென்று அவரின் காலில் விழுந்தாள்.

அவள் செயலில் அதிர்ந்த டாக்டர் வேகமாக எழுந்து அவளை தூக்கி நிறுத்தி "தாமரை என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்க?" என்று கடிந்து கொண்டார்.

"இந்த நிமிஷம் என் வாழ்க்கையில வெளக்கேத்தி வச்ச சாமி நீங்கதான் டாக்டரம்மா... நான் கேட்டுக்கிட்டேன்னு உங்க தொழில் தர்மத்தை மீறி பொய் சொன்னிங்களே... ரொம்ப நன்றி டாக்டரம்மா"

அவளை பார்த்து ஆறுதலாக புன்னகைத்தவர் "நீ ஒன்னும் யாரோட வாழ்க்கையும் கெடுக்க என்ன பொய் சொல்ல சொல்லலையே... உன் புருஷன் குடியை நிறுத்தணும்னு தானே என்ன பொய் சொல்ல சொன்ன... ஒருத்தரோட வாழ்க்கையை காப்பாத்த யாரா இருந்தாலும் பொய் சொல்லலாம்... அதுக்கு நானும் விதிவிலக்கில்ல. அப்புறம் டாக்டர் கிட்ட தான் யாரும் பொய் சொல்ல கூடாது. டாக்டர் பொய் சொல்லலாம். தப்பில்ல" என்று அவளை பார்த்து கண்ணடித்தபடி சொன்னார்.

அவர் செய்கையில் அவளுக்கு சிரிப்பு வந்தது.

"ஹா... இப்படியே எப்போதும் சிரிச்சிகிட்டே இருக்கணும்... போய்ட்டு வா" என்றவரை பார்த்து ஒருநொடி தயங்கியவள் "டாக்டரம்மா நெஜமாவே என் புருஷனுக்கு எதுவுமில்லை தானே" என்றாள்.

"இல்லை தாமரை... அவர் குடிப்பார்னு நீ சொன்னதால தான் எதுக்கும் இருக்கட்டுமேன்னு நான் எல்லா டெஸ்ட்டையும் எடுக்க சொன்னேன். டெஸ்ட் ரிப்போர்ட்ல அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு தான் வந்திருக்கு. நான் நீ கேட்டுக்கிட்டதால தான் அப்படி சொன்னேன்"

"அதுக்கில்ல... நீங்க அவ்வளவு மாத்திரை எழுதி கொடுக்கவும் நான் நிஜமாவே ஏதோ பிரச்சனை போலன்னு பயந்துட்டேன்"

"போடற நாடகத்தை சரியா போட வேண்டாமா? அதான் சத்து மாத்திரை எழுதி கொடுத்திருக்கேன். இன்னும் ரெண்டு, மூணு முறை மட்டும் உன் புருஷனை கூட்டிட்டு வா... அப்புறம் சரியாகிடுச்சுன்னு சொல்லிடறேன்"

"சரிங்க டாக்டர்" என்றவள் மீண்டும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

வீட்டிற்கு வரும் வழியில் இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இனியாவது குடியை விட்டுவிடுவானா? என்ற சிந்தனையில் அவளும், நம்மால் தாமரையின் வாழ்க்கை அழிந்துவிடுமோ என்ற பயத்தில் அவனும் அமைதியாக இருந்தனர்.

வீட்டிற்கு வந்த பிறகும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சமைத்து, சாப்பிட்டு என்று அனைத்துமே ஒருவித இயந்திரத்தனத்துடன் நடந்தது.

நேரம் செல்ல செல்ல ஒருவித அமைதியின்மை மாணிக்கத்தை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது.

என்னதான் தாமரையின் மேல் செய்த சத்தியத்திற்காக இனி குடிக்க கூடாது என்று முடிவெடுத்துவிட்டாலும் நேரமாக நேரமாக ஒருமாதிரி இருந்தது.

வெளியே சென்றுவிட்டு வந்தால் நன்றாக இருக்குமோ என்று நினைத்தவன் சட்டையை எடுத்து மாட்டப் போனான்.

அதுநேரம் வரை தன்னுடைய சிந்தனையில் உழன்று கொண்டிருந்த தாமரை "இப்போ எங்க கிளம்பற?" என்றாள்.

"ஒருமாதிரி இருக்கு தாமரை... கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்" என்றதும் அவனை முறைத்துப் பார்த்தவள் "என்ன திரும்ப குடிக்கப் போறியா? அப்போ என்மேல பண்ண சத்தியம் ஒண்ணுமில்ல... அப்படித்தானே" என்றாள்.

"சத்தியமா குடிக்கப் போகல தாமரை... வீட்டுக்குள்ளவே இருக்கறது ஒரு மாதிரி இருக்கு... அதான் காலாற நடந்துட்டு வரலாம்னு போறேன்"

"எது ராத்திரி ஒன்பது மணிக்கு நீ காலாற நடந்துட்டு வர போறியா? இதை எவளாவது காதுல பூ வச்சிக்கிட்டு இருப்பா... அவகிட்ட சொல்லு... ஒருவேளை நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும் உன் காலு தானா அந்தக் கடைக்கு உன்னை கூட்டிக்கிட்டு போய்டும். அதனால ஒழுங்கா வீட்லயே இரு"

"நீ சொன்னா நான் கேட்கணுமா? முடியாது... நான் போகத்தான் போறேன்" என்றவன் வாசலை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

எதுவும் சொல்லாமல் எழுந்தவள் அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.

"நீ எங்க வர?" என்று திரும்பி பார்த்து கேட்டான்.

"உன்னோட தான். உன்னால என் பேச்சை கேட்க முடியாது. அதுக்காக நீ எக்கேடோ கெட்டுப் போன்னு நான் விட்டுட முடியுமா? உன் கையால தாலி வாங்கி இருக்கேனே..." என்று நொடித்தாள்.

"ஏன்டி என்மேல உனக்கு நம்பிக்கையே வராதா?" என்று சலிப்புடன் கேட்டான்.

"வராது" என்று நிர்தாட்சண்யமாக சொன்னாள் அவள்.

அவளை வருத்தத்துடன் பார்த்தவன் "நீ இப்படி சொல்லும் போதெல்லாம் என்னை நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு தாமரை" என்று வேதனையுடன் சொன்னான்.

அவன் கையை பற்றியவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து "நான் சொல்றது உனக்கு கஷ்டமா இருக்கலாம் மாமா... ஆனா இந்த பழக்கத்தை விட ரொம்ப பெரிய மனஉறுதி வேணும். நம்மை அதுகிட்ட கூட்டிட்டு போற சூழ்நிலைகளை தவிர்க்கணும். இப்படியெல்லாம் கட்டுக்கோப்பா இருந்தா தான் உன்னால முழுசா அந்த பழக்கத்தை விட முடியும் மாமா... நாமளும் நம்ம வாழ்க்கையை சந்தோஷமா வாழ முடியும். இது எல்லாமே கொஞ்ச நாளைக்கு தான். அதுக்குப் பிறகு நீ உன் இஷ்டம் போல எப்போ வேணும்னாலும், எங்கே வேணும்னாலும் போகலாம். அதுவரைக்கும் கொஞ்சம் என் பேச்சை கேளு மாமா... ப்ளீஸ்" என்று அவன் தாடையை பற்றி கெஞ்சினாள்.

அவள் கையை தட்டி விட்டவன் எதுவும் பேசாமல் உள்ளே சென்று சட்டையை கழற்றி வைத்துவிட்டு ஒரு ஓரமாக படுத்துக் கொண்டான்.

'அப்பாடி... எப்படியோ இன்னைக்கு வெளிய போக விடாம தடுத்தாச்சு' என்ற நினைப்பில் பெருமூச்சை வெளியேற்றியவள் மாத்திரையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

அவன் அமைதியாக மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு மீண்டும் படுத்துவிட்டான்.

கதவை மூடிவிட்டு, விளக்கணைத்துவிட்டு வந்து தாமரையும் படுத்துக் கொண்டாள். மதியம் உறங்கிவிட்டதால் அவளுக்கு உடனே உறக்கம் வரவில்லை.

அவனும் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அவனை கவனித்தபடி அமைதியாக இருந்தவள் "என்ன மாமா? தூக்கம் வரலையா?" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

"ஹ்ம்ம்" என்றவன் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை.

அவன் ஏன் தூக்கம் வராமல் தவிக்கிறான் என்று அவளுக்கு புரியாதா என்ன?

சிறிது நேரம் அமைதியாக எதையோ யோசித்தவள் மெதுவாக அவனருகே நகர்ந்து சென்றாள்.

முதலில் அவன் அதை கவனிக்கவில்லை. அவள் அருகே வந்ததும் தான் உணர்ந்தான்.

"என்ன தாமரை?"

"தனியா படுக்க ஒருமாதிரி இருந்துச்சு... அதான் உன்கிட்ட வந்தேன்... ஏன் நான் உன் பக்கத்துல படுக்கக் கூடாதா?" என்று கடைசி வார்த்தைகளை மட்டும் சரசமாக கேட்டாள்.

அவள் புறமாக திரும்பி படுத்தவன் "நான் எப்போடி அப்படி சொன்னேன்?" என்றான்.

"சொல்லித் தான் பாரேன்" என்றவள் தன் காலை அவன் கால் மீது தூக்கிப் போட்டு மேலும் கீழுமாக உரசினாள்.

அவள் செய்கைக்கான அர்த்தம் புரிந்தவன் "யாரோ எனக்கு புள்ளை பெத்துக் கொடுக்க மாட்டேன்னு சொன்னாங்க" என்று அவள் காதில் தன் உதட்டை உரசியபடி கேட்டான்.

அவன் உதடுகளின் ஜாலத்தில் தன்னை மறக்க ஆரம்பித்தவள் "புள்ளை பெத்துக் கொடுக்க மாட்டேன்னு தானே சொன்னேன். என்னைக் கொடுக்க மாட்டேன்னு சொன்னேனா?" என்றவள் பின்னர் "அதான் இனி குடிக்க மாட்டேன்னு என்மேல சத்தியம் பண்ணிட்டியே... இனி பாரு அடுத்த வருஷமே ஆண்னொண்ணும் பெண்ணொண்ணுமா ரெட்டை புள்ளையை பெத்து உன் கையில கொடுக்கறேன்" என்றாள்.

அவள் வார்த்தைகள் அவனுள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

"அப்போ அதுக்கான வேலையை ஸ்டார்ட் பண்ணட்டுமா?" என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி கேட்டான்.

"இப்படி பேசிக்கிட்டே இருந்தா விடிஞ்சிடும் மாமா" என்று கிண்டலாக சொன்னவளின் இதழை முதலில் சிறை செய்தவன் பின்னர் அவளை முழுமையாக சிறை செய்து தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர ஆரம்பித்தான்.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 25 :

மூன்று மாதங்களுக்கு பிறகு...

"அடியேய் சாமி கும்பிடணும்னு கூட்டிக்கிட்டு வந்துட்டு ஒரு கடை விடாம நுழைஞ்சுகிட்டு இருக்க? நான் போய் தான் வயல்ல தண்ணி பாசணும். சீக்கிரம் கிளம்புடி" என்று சலிப்புடன் சொன்னான் மாணிக்கம்.

தாமரையும் மாணிக்கமும் அவர்கள் ஊரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.

இந்த மூன்று மாதத்தில் அவர்கள் அன்பை போலவே அவர்கள் நிலையும் வளர்ந்திருந்தது. அவர்கள் குடியிருக்கும் வீட்டை அவர்கள் இருவரின் பெயரில் வாங்கி விட்டனர். மீதமிருந்த பணத்தில் அவர்கள் ஊரிலேயே மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய ஆரம்பித்திருந்தான் மாணிக்கம்.

ஒரு ஏக்கரில் நெல்லும் மீதி இரண்டு ஏக்கரில் கரும்பும் போட்டிருந்தான். அதற்கெல்லாம் சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதனால்தான் தாமரையை அவசரப்படுத்திக் கொண்டிருந்தான்.

அவனை முறைத்தவள் "எப்போ பார்த்தாலும் கழனி மட்டும் தான் உன் நியாபகத்துல இருக்குமா? நமக்கு கல்யாணமான இந்த மூணு மாசத்துல நாம இப்போதான் வெளியவே வந்திருக்கோம். வந்த இடத்துல சந்தோஷமா இருக்கறதை விட்டுட்டு கழனிக்கு தண்ணி பாய்ச்சணும்னு பொலம்பிகிட்டு இருக்க" என்றாள்.

"அடியேய் சரியான நேரத்துல தண்ணி பாய்ச்சலனா இவ்ளோ நாள் பட்ட பாடெல்லாம் வீணா போய்டும்டி"

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது... வரும்போதே நான் மோட்டார் ரூம் சாவியை கலா அக்காகிட்ட கொடுத்துட்டு தான் வந்திருக்கேன்... நாம சரியான நேரத்துக்கு போகலைனா அவங்க வீட்டுக்காரர் போய் தண்ணியை துறந்து விடுவார். நீ கவலைப்படாம இரு"

அவள் சொன்னதை கேட்டு மகிழ்ச்சியடைந்தவன் அவள் தோளில் கைபோட்டு அணைத்தபடி "இதை முதல்லயே சொல்லியிருக்கலாம் இல்ல" என்றான்.

அவனை முறைத்தபடி தோள் மீதிருந்த கையை தட்டிவிட்டவள் "ஏன் சொல்லணும்? எதுக்கு சொல்லணும்? மொத மொதல்ல பொண்டாட்டி கூட வெளிய போறோமே... அவளோட நாள் முழுக்க ஜாலியா இருந்துட்டு வருவோம்னு நெனச்சி நீ இதயெல்லாம் பண்ணியிருக்கணும்... என் கெரகம் நான் பண்ண வேண்டியதா இருக்கு..." என்றாள் கோபமாக.

"என்னடி செல்லம் நீ பண்ணா என்ன? நான் பண்ணா என்ன? எல்லாம் ஒண்ணுதான்... " என்று அவள் தாடையை பிடித்து தாஜா செய்தவன் "சரி வா... உனக்கு ரங்க ராட்டினம்னா பிடிக்கும்ல... போய் சுத்தலாம்" என்றான்.

"இவ்ளோ நேரம் எனக்கு அது பிடிக்கும்ன்றது ஐயாவுக்கு மறந்து போச்சோ?" என்று நக்கலாக கேட்டவளை அசடு வழிய பார்த்தவன் "நியாபகம்லா இருக்கு. ஆனா அங்க கூட்டம் நிறைய இருக்கு. அங்க போனா எப்படியும் ஒரு மணி நேரம் ஆகிடும். அதான் சொல்லல" என்றான்.

"அதுசரி ஐயாவுக்கு நேரத்துக்கு கழனியில தண்ணி பாய்ச்சறது தான் முக்கியம்... என் ஆசையெல்லாம் முக்கியமா என்ன?" என்று கழுத்தை நொடித்தாள்.

"என்னடி நீ? நான் கழனியில மட்டுமா தண்ணி பாய்ச்ச அவசரப்பட்டேன்... எங்க வேலை சீக்கிரம் முடிஞ்சா தான் வீட்டுக்கு வந்து உனக்குள்ள தண்ணி பாய்ச்ச முடியும். நான் கழனியில இருந்து வர லேட்டாகிட்டா நீ தூங்கிடுவ. அப்புறம் நான் பட்டினியா தான் படுக்கணும்" என்று அவள் காதில் தன் உதடுரச சொன்னதும் வெட்கத்தில் முகம் சிவந்தவள் அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.

"நான் தூங்கிட்டா அப்படியே விட்டுடற மாதிரி தான்... உன் காரியத்தை முடிச்சிகிட்டு தானே என்னை விடுவ?" என்றவளிடம் "நீ தூக்க கலக்கத்துல இருக்கும் போது பெருசா ஒத்துழைப்பு கொடுக்க மாட்டடி... உன்னை வழிக்கு கொண்டு வரதுக்குள்ள நான் ஒருவழி ஆகிடுவேன்" என்று சலித்துக் கொண்டான்.

அவன் சொன்னதை கேட்டதும் இன்னும் அவள் முகம் சிவந்தது.

தன் உதட்டை கடித்தவள் "நான் ஒத்துழைப்பு கொடுக்காம தான்" என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவள் சட்டென்று பேச்சை நிறுத்தி வேறு பேச்சிற்கு தாவினாள்.

"மாமா அங்க பாரு... கூட்டம் அதிகமாகுது" என்று ரங்க ராட்டினம் சுற்றும் இடத்தை காட்டியவள் அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி சென்றாள்.

அவள் வெட்கத்தை உணர்ந்தவன் அதற்குமேல் அந்த பேச்சை தொடராமல் அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றான்.

ஒரு மணி பொறுமையாக காத்திருந்து அவளை ரங்க ராட்டினத்தில் ஏற்றி விட்டவன் குழந்தை போல குதூகலித்தபடி கீழே நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து அவனருகே வந்தவள் "நீயும் வந்திருக்கலாம் மாமா... எவ்ளோ ஜாலியா இருந்துச்சு தெரியுமா?" என்றாள்.

"எனக்கு இதெல்லாம் ஒத்து வராதுன்னு உனக்கு தெரியும்ல"

"தெரியும்" என்று இழுத்தவளிடம் "அப்புறம் என்ன? வா... அந்தப் பக்கம் ஐஸ்க்ரீம் கடை இருக்கு... வாங்கித் தரேன்" என்றான்.

அவளும் குதூகலமாக அவனுடன் சென்றாள்.

அவளை அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தவனிடம் "மாமா... ப்ளீஸ் இன்னொன்னு வாங்கிக் கொடேன்" என்றாள்.

"அதெல்லாம் முடியாது. நிறைய சாப்பிட்டா உனக்கு காய்ச்சல் வந்துடும். ஒன்னு போதும் வா" என்று கண்டிப்புடன் சொன்னவன் தனக்கும் ஒன்றை வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

முகத்தை தூக்கி வைத்தபடி ஐஸ்கிரீம் சாப்பிடுபவளை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.

"இப்போ எதுக்கு முகத்தை தூக்கி வச்சிருக்க?"

"நீதான் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டியே"

ஐஸ்க்ரீமை சப்பியபடி சொன்னவளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தவன் "சத்தமா சொல்லிடாத... யாராவது கேட்டா உன்னை பைத்தியம்னு நினைச்சிட போறாங்க" என்றான்.

"என்ன நக்கலா?"

"இல்லை... விக்கல்" என்றவன் அவளை வெறுப்பேற்றுவது போல விக்கிக் காட்டினான்.

"என்ன காமெடியா? சிரிப்பே வரல" என்றவளை பார்த்து புன்னகைத்தவன் தன்னுடையதை அவள் முன்பு நீட்டி "இந்தா... இதை எடுத்துக்கோ" என்றான்.

அவன் நீட்டியதும் பேச்சுக்கு கூட வேண்டாம் என்று சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டவள் இரண்டு கையிலும் இரண்டு ஐஸ்க்ரீமை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் சாப்பிடும் அழகை ரசித்தவன் "இன்னும் வேற ஏதாவது வேணுமா?" என்றான்.

சாப்பிட்டபடியே அந்த இடத்தை சுற்றிப் பார்த்தவள் "ஆமா... பொரிஉருண்டை வேணும்" என்றாள்.

"சரியான தின்னி பண்டாரம்டி நீ... எனக்கென்னவோ நீ சாமி கும்பிட இங்க வந்த மாதிரி தெரியல... உனக்கு பிடிச்சதையெல்லாம் வாங்கித் தின்ன தான் வந்த மாதிரி இருக்கு" என்று நக்கலடித்தவனை கெத்தாக பார்த்தவள் "ஆமா... அதுக்கென்ன இப்போ? ஒரு வேலைக்கு வந்தா இன்னொன்னு செய்ய கூடாதுன்னு சட்டமிருக்கா என்ன?" என்றாள்.

"இல்ல தான்"

"அப்புறம் என்ன? அதோ அந்த கடையில பொரி உருண்டை விக்குது பார்... போய் வாங்கிட்டு வா"

"என்னது? நான் மட்டும் போய் வாங்கணுமா? அப்போ மேடம் என்ன பண்ண போறீங்க?"

"எனக்கு பாத்ரூம் வருது... நான் போய்ட்டு வரேன். அதுக்குள்ள நீ வாங்கி வச்சிடு"

அந்த இடத்தை சுற்றிப் பார்த்தவன் "இங்க எங்கேயும் பாத்ரூம் இருக்க மாதிரி தெரியலையே" என்றான்.

"எனக்கு தெரியும். நான் போய்ட்டு வந்துடறேன். சரியா?" என்றவள் அவர்கள் வந்த திசைக்கு எதிர்திசையில் செல்ல ஆரம்பித்தாள்.

அவள் நேராக சென்று ஒரு சின்ன சந்திற்குள் வளைவதை பார்த்தவன் அதன் பிறகே அங்கிருந்து நகர்ந்தான்.

"அண்ணா ரெண்டு பாக்கெட் பொரி உருண்டை கொடுங்க" என்றவன் தன் பாக்கெட்டில் குனிந்து பணத்தை எடுக்கும் போது அவனருகே "அண்ணா மரவள்ளி கிழங்கு சிப்ஸ் ஒரு பாக்கெட் கொடுங்க" என்று அருகே ஒரு குரல் கேட்டது.

அந்த குரலை எங்கோ கேட்டது போல உணர்ந்தவன் நிமிர்ந்து தனக்கருகே இருந்த நபரைப் பார்த்தான்.

அவரைப் பார்த்ததும் அவன் ரத்தம் கோபத்தில் உலைக்கலன் போல கொதிக்க ஆரம்பித்தது. அது வேறு யாருமல்ல. தாமரைக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை முருகன் தான்.

அடுத்த கணம் அவன் சட்டை காலரை பிடித்தவன் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

எதிர்பாரா தாக்குதலால் அலறிய முருகன் நிமிர்ந்து பார்த்த போது அவன்

முன்பு ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் மாணிக்கம்.

"ஏன்டா நாயே உன் வீட்டுல உன் காதலுக்கு ஒதுக்கலைனா அப்போவே ஓடிப் போக வேண்டியது தானே... என் தாமரையை நம்ப வச்சு கழுத்தறுத்தது மட்டுமில்லாம என்னையும் அவளையும் இணைச்சு கேவலமா லெட்டர் எழுதி கொடுத்துட்டு போவியா?" என்றவன் மீண்டும் அவன் முகத்தில் ஒரு குத்துவிட்டான்.

அவன் குத்தியதில் முருகனால் உடனே பேச முடியவில்லை.

அவன் பேச வாயை திறந்த போது மீண்டும் அவன் வாயில் குத்திய மாணிக்கம் "உன்னால அன்னைக்கு ஊருக்கு முன்னாடி என் தாமரை எப்படி கூனி, குறுகி நின்னா தெரியுமா?" என்றவன் மீண்டும் அவனை அடிக்க முயன்ற போது எங்கிருந்தோ ஓடிவந்து அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்திய பெண்ணொருத்தி "யாருங்க நீங்க? எதுக்கு என் புருஷனை போட்டு அடிக்கிறீங்க?" என்று கோபமாக கேட்டாள்.

அவளை தலைமுதல் கால் வரை பார்த்தவன் "ஓஹ்... இவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் என் தாமரையை ஏமாத்திட்டு போனியா?" என்று நக்கலாக கேட்டான்.

அவன் சொன்னதை கேட்டவளுக்கு எதுவோ புரிவது போல இருந்தது.

"இவர் தாமரைக்கு சொந்தக்காரரா?" என்று அவள் முருகனிடம் கேட்டாள்.

ஆமென்று தலையசைத்தவன் கஷ்டப்பட்டு வாயசைத்து "அவ மாமா" என்றான்.

அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தவனிடம் "இங்க பாருங்க... நீங்க நினைக்கிற மாதிரி இவர் எந்த தப்பும் பண்ணல"

அவள் பேச்சை பாதியிலேயே இடைமறித்தவன் "அதுசரி... அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க தானே அத்தனையும் பண்ணான். அப்புறம் நீ அவன் பக்கம் தானே பேசுவ" என்றவன் மீண்டும் அவன் மூஞ்சில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

அதைப் பார்த்து ஐயோவென்று அலறியவள் அவனுக்கு முன்னால் நின்று "ஐயோ நிஜமாவே இவர் எந்த தப்பும் பண்ணல... அவர் அப்படி பண்ணதுக்கு காரணமே தாமரை தான்" என்றாள்.

சரியாக அதேநேரம் அங்கிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்த தாமரை அவர்கள் மூவரையும் பார்த்ததுமே என்ன நடந்திருக்குமென்று புரிந்து கொண்டவள் மாணிக்கத்தின் அருகே சென்று முருகனை பற்றியிருந்த அவன் கையை எடுத்துவிட்டபடி அவனை அடிக்க வேண்டாமென்று தலையசைத்தாள்.

"இவனுக்காக பாவம் பாக்கறியா தாமரை... நீ இரக்கப்படற அளவுக்கு இவன் ஒர்த் இல்லை... அன்னைக்கு அவ்வளவு பேர் எதிர்க்க உன்னை அசிங்கப்படுத்தினது மட்டுமில்லாம அதுக்கு காரணமே நீதான்னு இந்த பொண்ணுகிட்ட சொல்லி வச்சிருக்கான்... இவனையெல்லாம் கொன்னா தான் என் ஆத்திரம் அடங்கும்" என்றவன் அவனை அடிக்க பாய்ந்த போது அவன் கையை பற்றி தடுத்து நிறுத்திய தாமரை "அவங்க சொல்றது உண்மைதான். அவரை அப்படி பண்ண சொன்னது நான்தான்" என்றாள்.

அவள் சொன்னதை கேட்ட மாணிக்கம் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தான்.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 26 :

"நீ... நீ சொல்றது உண்மையா? இல்லை இவனை காப்பாத்த பொய் சொல்றியா?"

அதிர்ச்சி விலகாமலேயே கேட்டான் மாணிக்கம்.

அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் "நான் சொல்றது உண்மைதான்" என்று உள்ளே போன குரலில் சொன்னாள்.

ஒரு நொடி அவளை வெறித்துப் பார்த்தவன் பின்னர் ஒரு வார்த்தை கூட பேசாமல் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

அவன் நடையின் வேகத்திலேயே தாமரையால் அவன் கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் அவனை பின்தொடர நினைத்த போது அவளருகே வந்த முருகனின் மனைவி "என்னை மன்னிச்சிடுங்க... இவர் அடி வாங்கறதை தாங்கிக்க முடியாம தான் உங்களை காட்டிக் கொடுத்துட்டேன்" என்றாள்.

அவளை பார்த்து லேசாக புன்னகைத்த தாமரை "உண்மையை சொல்லணும்னா நான்தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும். உண்மை என்னனு தெரியாம என் மாமா இவரை அடிச்சிட்டாரு... அவர் சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்" என்றவள் அவர்கள் இருவரிடமும் கைகூப்பி மன்னிப்பு கேட்டாள்.

"இதுல உங்க தப்பு மட்டும் இல்லையே... நாம ரெண்டு பேரும் பிளான் பண்ணி தானே இதயெல்லாம் பண்ணோம் " என்று பெருந்தன்மையாக சொன்ன முருகன் "எங்களை விடுங்க... உங்க மாமா ரொம்ப கோபமா போறாரு... முதல்ல அவரை போய் சமாதானப்படுத்துங்க" என்றான் முருகன்.

மாணிக்கம் அடித்த அடியில் அவன் முகம் வீங்க ஆரம்பித்திருந்தது.

அதைப் பார்த்து சங்கடப்பட்டவள் "நீங்களும் முதல்ல டாக்டரை போய் பாருங்க.. நான் அப்புறமா உங்ககிட்ட போன்ல பேசறேன். இப்போ கிளம்பறேன்" என்றவள் மாணிக்கம் சென்ற திசையில் ஓட ஆரம்பித்தாள்.

மூச்சு வாங்க அவன் பின்னே ஓடியவள் "மாமா... நான் இப்படி பண்ண ஒரு காரணமிருக்கு. ப்ளீஸ் அது என்னனு கேட்டுட்டு என் மேல கோபப்படு" என்றாள்.

அவள் சொன்னது காதிலேயே விழுகாதது போல வேகமாக நடந்தவன் அவர்கள் வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வந்ததும் வண்டியில் ஏறி அமர்ந்து எஸ்கலேட்டரை முறுக்க ஆரம்பித்தான்.

அதை பார்த்தவள் 'ரொம்ப கோபமா இருக்கு போலயே' என்று முணுமுணுத்தபடி அவன் பின்னே ஏறி அமர்ந்தாள்.

செல்லும் வழியில் ஒரு வார்த்தை கூட மாணிக்கம் பேசவில்லை. கண்ணாடி வழியாக அவன் கோப முகத்தை பார்த்தவளுக்கும் பேசும் தைரியம் வரவில்லை.

'வீட்டுக்கு போய் பேசிக்கலாம்' என்று அவளும் அமைதியாகவே வந்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியவன் வேகமாக சென்று பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து பூட்டை திறந்தான்.

அவன் பின்னே வந்தவள் வீட்டிற்குள் நுழைந்தவனின் கையை பிடித்து தடுத்தபடி "ப்ளீஸ் மாமா நான் என்ன சொல்ல வரேன்னு கேளு" என்று கெஞ்சினாள்.

தன் பலம் கொண்ட மட்டும் வேகமாக அவள் கையை உதறியவள் இருந்த கோபத்தில் பளாரென்று அவள் கன்னத்தில் ஒரு அடி வைத்தான். அவன் அடித்த அடியில் அவன் விரல் தடங்கள் அவள் கன்னத்தில் பதிந்தது.

அவன் தன்னை அடிப்பான் என்று எதிர்பாராதவள் கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

"என்ன இவ்ளோ நேரம் அமைதியா இருந்துட்டு இப்போ ஏன் அடிச்சான்னு யோசிக்கிறியா? எனக்கு வந்த கோபத்துக்கு உன்னை அங்கேயே வச்சி அடிச்சி நொறுக்கியிருப்பேன். ஆனா உன்னை மாதிரி அடுத்தவங்க மத்தியில உன்னை அசிங்கப்படுத்த விரும்பல. அதான் வீட்டுக்கு வந்து உன்னை கவனிச்சிக்கலாம்னு அமைதியா வந்துட்டேன்" என்றவன் அவள் தலைமுடியை இறுக பற்றி தனக்கருகே அவளை இழுத்தவன் "எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி ஒரு காரியத்தை பண்ணியிருப்ப? உனக்கு அவனை பிடிக்கலைனாலோ, இல்லை என்மேல ஆசைப்பட்டு என்னை கல்யாணம் பண்ண நினைச்சிருந்தாலோ நீ என்ன பண்ணியிருக்கணும்? என்கிட்ட சொல்லியிருக்கணும். அதைவிட்டுட்டு நீ பண்ண காரியத்தால அன்னைக்கு எல்லாரும் உன்னையும் என்னையும் எப்படியெல்லாம் பேசினாங்க? இப்படி நம்ம குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சுதான் நீ என்னை கட்டிக்கணுமா என்ன?" என்று கோபமாக உறுமியவன் ஒரு கணம் அவளை வெறுப்புடன் பார்த்தான்.

அவளோ அதிர்ச்சி விலகாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"உன்னை கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையை கெடுத்துட்டோமோன்னு எவ்ளோ நாள் நான் உள்ளுக்குள்ளேயே மருகி இருக்கேன் தெரியுமா? அந்த ஒரு காரணத்துக்காக தான் நீ சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டி பொம்மை கணக்கா தலையாட்டினேன். தேள் மாதிரி நீ வார்த்தையால கொட்டினப்ப எல்லாம் பொறுத்துகிட்டேன். ஆனா நீ என்னையே ஏமாத்தி இருக்க இல்ல" என்றவன் அதற்குமேல் அங்கிருக்க விரும்பாமல் அவளை உதறி தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

அவன் உதறிய உதறலில் தாமரை இரண்டடி தூரம் சென்று விழுந்தாள். அவனோ அவளை திரும்பி கூட பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறி நேராக மதுக்கடைக்கு சென்றான்.

"ஒரு குவாட்டர்" என்று ஆர்டர் செய்தவன் அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தான்.

அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர் குவாட்டர் பாட்டிலையும் கிளாசையும் கொண்டு வந்து அவன் முன்பு வைத்தார்.

அவன் அதை திறந்து கிளாஸில் ஊற்றி குடிக்க கையிலெடுத்த தருணம் அவன் போன் அடித்தது.

'ப்ச்' என்று சலிப்புடன் போனை எடுத்துப் பார்த்தான். அவன் நண்பன் ஏழுமலை தான் அழைத்தான்.

'இவனுக்கு வேற வேலையே இல்ல... நேரங்கெட்ட நேரத்துல போன் பண்ணிக்கிட்டு' என்று அவனை திட்டினாலும் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

அவன் ஹலோ என்று சொல்வதற்குள்ளேயே "மச்சான் சீக்கிரம் உன் வீட்டுக்கு வாடா... இங்க தாமரை மயங்கி கிடக்குது" என்று பதற்றத்துடன் சொன்னான்.

அவன் சொன்னதை கேட்ட மாணிக்கம் பதறிவிட்டான்.

"என்னடா சொல்ற?"

"முதல்ல வீட்டுக்கு வா மச்சான்... நேர்ல சொல்றேன்" என்றவன் போனை வைத்துவிட்டான்.

அவன் போனை வைத்த பிறகும் சிறிது நேரம் தன் போனையே வெறித்துக் கொண்டிருந்த மாணிக்கம் அப்படியே சேரில் அமர்ந்தான்.

'ஒருவேளை இனி குடிக்க மாட்டேன்னு அவமேல சத்தியம் பண்ணிட்டு திரும்ப குடிக்க வந்ததால தான் அவளுக்கு இப்படி ஆகிடிச்சோ'

அந்த நினைப்பு தோன்றியதுமே தன் முன்பிருந்த பாட்டிலை கையிலெடுத்தவன் சில நொடிகள் அதை வெறித்துப் பார்த்தான்.

அடுத்த கணம் அதை தரையில் போட்டுடைத்ததவன் வேகமாக எழுந்து வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான். ஐந்து நிமிடங்களுக்கு முன்புவரை அவள் மீது கொலைவெறியில் இருந்தவன் தான். ஆனால் இப்போது அந்த கோபமெல்லாம் எங்கோ சென்றுவிட்டது. இந்த கணம் அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்ற வேண்டுதல் மட்டுமே அவனிடம் இருந்தது.

அவன் வீட்டை அடைந்த போது அவனை ஓடிவந்து கட்டிக் கொண்ட ஏழுமலை "கலக்கிட்டடா மச்சான்... வாழ்த்துக்கள்" என்றான்.

அவனை குழப்பத்துடன் பார்த்த மாணிக்கம் "என்னடா லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்க? தாமரைக்கு என்னாச்சுன்னு முதல்ல சொல்லு" என்று அதட்டினான்.

"எல்லாம் நீ பண்ண வேலையால தான்" என்று அவன் பொடி வைத்து பேசினான்.

'ஒருவேளை நான் அடிச்ச அடியை தாங்க முடியாம மயங்கிட்டாளோ?' என்று நினைத்தவன் வேகமாக வீட்டிற்குள் சென்றான்.

அவனுக்கு விஷயம் புரியவில்லை என்பது புரியாத ஏழுமலை 'அட பொண்டாட்டியை பாக்க பயபுள்ள என்ன வேகமா போறான்... இனி நாம இங்க இருக்கறது அதிகப்படி' என்று நினைத்த ஏழுமலை தன் வீட்டிற்கு கிளம்பினான்.

அவன் உள்ளே வந்ததும் தாமரைக்கு அருகே அமர்ந்திருந்த கலா அவனை முறைத்தபடி எழுந்தவர் "நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கலப்பா... மாசமா இருக்க பொண்ணுங்களை பூ மாதிரி பாத்துக்கணும். ஆனா நீ இப்படி கன்னத்துல தடம் தெரியற அளவுக்கு அடிச்சு வச்சிருக்க" என்று பொருமினார்.

அவர் சொன்னதை கேட்டு இன்பமாய் அதிர்ந்தான் மாணிக்கம்.

"இனியாவது அவளை நல்லபடியா பாத்துக்கோ... நான் கிளம்பறேன்" என்றவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவர் சென்றதும் வேகமாக தாமரையின் அருகே சென்று அமர்ந்தவன் "அவங்க சொல்றது நிஜமாடி?" என்று ஆர்வமாக கேட்டான்.

அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

அவள் அமைதியை வைத்தே அவள் கோபத்தை புரிந்து கொண்டவனின் பார்வையில் அவள் கன்னத்தில் இருந்த அவன் விரல் தடங்கள் விழுந்தது.

தன் கை விரல்களால் அவள் கன்னத்தை இதமாய் தடவியவன் "என்னை மன்னிச்சிடுடி... நீ அப்படி பண்ணிட்டியேன்ற கோபத்துல உன்னை அடிச்சிட்டேன். இனி மாமா உன்னை அடிக்கவே மாட்டேன்" என்றான்.

அவள் அப்போதும் பேசவில்லை.

"நீ பண்ணது தப்பு தானே தாமரை. அதான் மாமா உன்னை அடிச்சிட்டேன். அதுக்காக மாமா கிட்ட பேசாம இருப்பியா?" என்றதும் அவள் வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

அவள் எழுந்த வேகத்தை பார்த்து பதறியவன் "அடியேய் இந்த நிலைமையில இப்படியெல்லாம் வேகமா எழுந்திருக்க கூடாது. கொஞ்சம் பொறுமையா எழுந்திரிடி" என்று அதட்டினான்.

அவனை முறைத்துப் பார்த்தவள் "நான் பண்ணது தப்புதான். ஆனா ஏன் பண்ணேன்னு கேட்கற அளவுக்கு கூட உனக்கு பொறுமை இல்லல. இல்ல நான் தெரியாம தான் கேக்கறேன்? இவ்ளோ திட்டம் போட்டு என்னை நானே அசிங்கப்படுத்திக்கிட்டு உன்னை கட்டிக்கிற அளவுக்கு நீ என்ன ஆணழகனா? இல்ல பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு லட்சக்கணக்குல சம்பாதிக்கிறியா? இல்ல கோடி கணக்குல சொத்து வச்சிருக்கியா?" என்று நக்கலாக கேட்டாள்.

அவளை யோசனையுடன் பார்த்தவன், "சரி... இப்போ கேட்கறேன்... ஏன் அப்படி பண்ணேன்னு சொல்லு" என்றான்.

அந்த காரணத்தை நினைக்கும் போதே அவள் கண்கள் கலங்கியது.

சுவரில் மாட்டியிருந்த தன் அம்மாவின் புகைப்படத்தை பார்த்தவள் "அதோ இருக்கே உன் அக்கா அது சாகற நேரத்துல என்ன நினைச்சுதோ தெரியல... என் கையை பிடிச்சிக்கிட்டு இனி மாமாவை நீதான் பாத்துக்கணும் தாமரை... நீதான் அவனை கல்யாணம் பண்ணி என் தம்பியோட வம்சம் அழியாம காப்பாத்தணும்... உன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எனக்கு சத்தியம் பண்ணுனு கேட்டுச்சு. இந்த உலகத்துல வாழும் போது தான் என் அம்மா எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கல. சாகும் போதாவது நிம்மதியா போகட்டும்னு தான் நான் அதுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன். அந்த சத்தியத்தை காப்பாத்ததான் அவ்ளோ திட்டம் போட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ சொல்லு... நான் பண்ணது தப்பா?" என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அவள் சொன்னதைக் கேட்ட மாணிக்கம் சிலையாய் சமைந்தான். அவள் இப்படி செய்ததற்கு பின்னால் இப்படியொரு காரணமிருக்கும் என்று அவன் சத்தியமாக நினைக்கவில்லை.

சாகும் தருவாயிலும் தன்னை, தன் எதிர்காலத்தை பற்றி யோசித்து தாமரையிடம் சத்தியம் வாங்கிய தன் அக்காவின் அன்பை நினத்தவனின் மனம் நெகிழ்ந்தது.

தன் கைகளால் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் அவன் முகத்தை பார்த்து "நான் கேக்கறதுக்கு உண்மையான பதிலை சொல்லு... அந்த நேரத்துல உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி என்னை கட்டிக்கோன்னு சொல்லியிருந்தா கட்டிக்கிட்டு இருப்பியா?" என்றாள்.

அவன் மறுப்பாக தலையசைத்தான்.

"எனக்கும் அது நல்லா தெரியும். அதனால தான் நான் அப்படி திட்டம் போட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இதுல என் பேரு நாரிப் போகும்னு தெரிஞ்சாலும் என் அம்மாவுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாத்த நான் அப்படி பண்ணேன். எனக்கொன்னும் நான் பண்ணது தப்புனு தோணல. உனக்கு தோணுச்சுனா என்னை மன்னிச்சுடு"

அவள் பேசி முடித்த அடுத்த நொடி அவளை இறுக அணைத்துக் கொண்டவன் "இல்லடி ... நீ பண்ணது தப்பே இல்ல. உண்மையை சொல்லனும்னா என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு உன் வாழ்க்கையையே நீ பணயம் வச்சிருக்க. இது புரியாம மாமா தான் உன்னை அடிச்சிட்டேன். என்னை மன்னிச்சிடுடி" என்று கண்கள் கலங்க சொன்னவன் அவன் அடித்த கன்னத்திலேயே அழுத்தமாய் முத்தமிட்டான்.

அவனை தன்னிடமிருந்து விலக்கியவள் "செய்யறதையும் செஞ்சுட்டு இப்போ வந்து முத்தம் கொடுத்து மன்னிப்பு கேட்டா மன்னிச்சிடுவேனா? போ... போ" என்றாள்.

அவளிடம் எதுவும் பேசாமல் கீழே குனிந்து சேலை அணிந்திருந்த அவள் வயிற்றின் மீது கை வைத்தவன் "அக்கா... நான் பண்ணது தப்புதான். உன் பொண்ணு கிட்ட சொல்லி என்னை மன்னிச்சிட சொல்லுக்கா... இனி இந்த ஜென்மத்துல அவளை அடிக்க மாட்டேன். இது உன்மேல சத்தியம்" என்றான்.

அவன் செயலில் நெகிழ்ந்தவள் அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு கண் கலங்கினாள்.

அவன் கையின் மீது தன் கையை வைத்தவள் "நிஜமாவே என் அம்மாதான் நமக்கு மகளா வந்து பொறக்கப் போறான்னு உனக்கு தோணுதா மாமா?" என்றாள்.

"பின்ன... நம்ம சந்தோஷத்துக்கு சாட்சியா நம்மளோட சந்தோஷமா வாழ என் அக்காதான் நமக்கு மகளா பொறக்க போறா" என்று உறுதியாக சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டு மகிழ்ந்தவள் அவன் முகத்தை நிமிர்த்தி அவன் உதட்டில் முத்தமிட்டாள்.

அவள் செய்கையில் அவன் உணர்வுகள் விழித்தெழ ஆரம்பித்தன.

முத்தமிட்ட உதடுகளை தன் உதடுகளால் சிறை பிடித்தவனின் கைகள் அவள் உடலில் வலம் வர ஆரம்பித்தது.

அவன் எதற்கு அடிபோடுகிறான் என்று புரிந்தவள் அவனிடமிருந்து தன் உதடுகளை விடுவித்துக் கொண்டதோடு அவன் கைகள் மீது தன் கைகளை வைத்து அவன் எல்லை மீறலை தடுத்தாள்.

அவனோ கையிலிருந்த மிட்டாயை பிடுங்கிய குழந்தை போல பாவமாக அவளை பார்த்தான்.

அவன் மூக்கை பிடித்து திருகியவள் "இன்னும் கொஞ்ச நாளைக்கு எதுவும் இல்லை. நீ கவுந்து தான் படுக்கணும். இப்போ எனக்கு பசிக்குது. போய் ஆக்கி வச்சிருக்க சோத்தை கொண்டு வா... ரெண்டு பேரும் சாப்பிடலாம்" என்றாள்.

அவளை ஏக்கமாக பார்த்தவன் "நானும் தான் பசியோட இருக்கேன்" என்றான்.

"உன் பசிக்கு தீனி போட்டுத் தான் இன்னைக்கு நான் இந்த நிலைமையில இருக்கேன். இனி டாக்டர் சொல்ற வரைக்கும் நீ பட்டினி தான் கிடக்கணும். ஒழுங்கா போய் சோத்தை கொண்டு வா" என்று அதட்டினாள்.

"ரொம்பத் தான் பண்றடி" என்றபடி எழுந்தவன் கண் இமைக்கும் நேரத்தில் அவள் உதட்டில் முத்தமிட்டுவிட்டு பின்கட்டிற்கு சென்றான்.

அவன் செயலில் முகம் சிவந்தவள் அவனையே அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் பாத்திரங்களை கொண்டு வந்து வைத்ததும் அவள் அவனுக்கு பரிமாற போனாள்.

அவள் கையிலிருந்த கரண்டியை பிடுங்கியவன் "இவ்வளவு நாள் நீ என்னை பாத்துக்கிட்ட. இனி கொழந்தை பிறக்கற வரைக்கும் நான்தான் உன்னை பாத்துக்க போறேன். இனி இந்த வீட்டுல நீ ஒரு வேலையும் செய்யக் கூடாது. வேலைக்கு கூட நானே உன்னை கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன். சரியா?" என்றான்.

அவன் அன்பை கண்டு மனம் நெகிழ்ந்தவள் சரியென்று தலையசைத்தாள்.

ஒரு தட்டில் சோற்றை போட்டு குழம்பு ஊற்றி பிசைந்தவன் அவள் முன்பு கையை நீட்டி "ஆ... காட்டு" என்றான்.

அவளும் புன்னகையுடன் வாய் திறந்தாள். இவ்வளவு நாட்கள் தாய்மாமனாக இருந்தவன் இனி அவளுக்கு மற்றொரு தாயாய் இருந்து அவளை பார்த்துக் கொள்வான்.

அவர்கள் இருவரும் அவர்களுக்குள்ளிருக்கும் வேற்றுமை அனைத்தையும் கடந்து ஆதர்ஷ தம்பதிகளாக நூறாண்டு வாழுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு விடை கொடுப்போம்.

முற்றும்.
 
Top