இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

நறுமுகையே மலர்ந்திடு - கதைத்திரி

Status
Not open for further replies.

Thulasi Raj

Moderator

அத்தியாயம் 18​

இன்று..​


கடந்த கால நினைவில் இருந்து மீண்டார் சூரியபிரகாஷ். குடும்பத்தினர் அனைவரின் பார்வையும் வெண்மதியின் மேல் பாவமாகப் படிய, தலை குனிந்து நின்று இருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வெளியேறியது.​


“மதியோட இந்த நிலைமைக்கு நம்ம குடும்பம் தான் காரணம்” என்ற கங்கா தங்கையை அழுத்தமாகப் பார்த்தார்.​


“நம்ம ஆதி.. இல்ல இல்ல.. உன் மகன் ஆதியோட உயிரைக் காப்பாத்தப் போய் தான் இன்னைக்கு மதி அவள் அம்மாவை இழந்துட்டு அனாதையா நிக்குறா” என்று சொல்ல, யமுனா மனம் வருந்தினார். உதயாதித்தனின் மனம் குற்றவுணர்வில் கூனிக் குறுகிப் போனது.​


அன்று அவனைக் காப்பாற்றியப் பெண்ணிற்கு மின்சாரம் தாக்கி விட்டது என்று தான் அவனுக்குத் தெரியுமே தவிர, அவர் இறந்து விட்டார் என்றோ, அவரின் மகள் தான் வெண்மதி என்றோ அவனுக்குத் தெரியாது.​


கங்கா வெண்மதியின் தோளில் ஆறுதலாகக் கை வைக்க, அவள் தாங்க முடியாது அவரை அணைத்துக் கொண்டு ஓவென்று கதறி அழுதாள். மகளின் கண்ணீரைக் கண்டு மேகநாதன் துடித்துப் போனார்.​


“மதி..” என்று அவர் அழைக்க, அவளது அழுகை நின்றது.​


தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கங்காவிடமிருந்து விலகியவள் தந்தையின் புறம் திரும்பவே இல்லை.​


“பாருங்க கங்காம்மா.. அவருக்கு என் பேரெல்லாம் ஞாபகம் இருக்கு” என்று போலியாக ஆச்சரியப் பட்டாள்.​


அதைக் கேட்டதும் மேகநாதனின் முகம் விழுந்துவிட்டது. கண்கள் கலங்க அவர் மகளை ஏக்கமாகப் பார்த்தார்.​


“மதி.. மாமாவைப் பார்க்க பாவமாக இருக்குடி. பேசு” என்றாள் கோகிலா.​


“நான் யார்.. நான் ஏன் அவர்க்கிட்ட பேசணும். அவருக்கு எப்பவுமே ஒரே பொண்ணு தான். அது அந்த குழலி மட்டும் தான்” என்றாள் அழுத்தமாக.​


“அப்படி இல்ல மதி.. நீயும் என் பொண்ணு தான்”​


“வேணாம் கங்காம்மா.. இன்னொரு தடவை அவர் அந்த வார்த்தையைச் சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும். சொல்லிட்டேன்..” என்று ஆத்திரத்தில் பல்லை கடித்தாள் வெண்மதி.​


ஆம்.. முதன் முறையாக வெண்மதி கோபப்பட்டாள். பல வருடங்களாக தந்தையின் பாசத்திற்காக ஏங்கிப் போய் இருந்தவளின் ஆதங்கத்தினால் உண்டான கோபம் அது.​

“மாசத்துல 2 தடவை குடும்பத்தோட இங்கே வந்து போனாரு தானே. ஒரு முறையாச்சும் என் கிட்ட வந்து ‘எப்படி இருக்க மதி’ என்று ஒரு வார்த்தை கேட்டு இருப்பாரா? அப்பான்னு கூப்பிடுற உரிமை தான் நமக்கு இல்லாமல் போச்சு. அன்பாவாச்சும் இரண்டு வார்த்தை பேசுவாரான்னு எத்தனை முறை ஏங்கி இருப்பேன் தெரியுமா?​


ஒரு முறை.. நானா அவர்க்கிட்ட பேச போனேன் கங்காம்மா. நான் வர்ரதைப் பார்த்துட்டு எழுந்துப் போயிட்டார். அன்னைக்கு ஒருநாள்.. நான் சைக்கிள் ஓட்ட கத்துக்கும் போது ஸ்கிப் ஆகி கீழே விழுந்துட்டேன். கை முட்டியில அடிப்பட்டு இரத்தம் வந்துச்சு. அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி மூஞ்சைத் திருப்பிக்கிட்டு போறாரு. இதுவே அவர் பொண்ணுக்கு அடிப்பட்டு இருந்தால் எப்படியெல்லாம் துடிச்சிப் போய் இருந்திருப்பார்” என்று இறுதி வரிகளை வலியுடன் கூறினாள். அதைக் கேட்ட மேகநாதனின் இதயத்தில் சுரீரென்று ஓர் வலி தைத்தது.​


“எல்லாம் தெரிஞ்சிருந்தும் அவர் பொண்டாட்டி என்னை வாயிக்கு வாய் அனாதை.. வேலைக்காரின்னு சொல்லி குத்திக் காட்டுவாங்க. அதைப் பார்த்துட்டு அவர் அமைதியா இருப்பார். நான் மட்டும் அவரை அப்பான்னு பாசமா பார்க்கணுமா?? இப்போ கூட பாருங்களேன். என்னை இந்த வீட்டுல இருந்து விரட்டணுங்குறதுக்காக அவர் பொண்டாட்டி எவ்ளோ கீழ்த்தரமானக் காரியத்தை பண்ணி இருக்காங்க. ஒரு வார்த்தை.. எனக்காக ஒரு வார்த்தை பேசுனாரா?​


இல்ல நான் தெரியாம தான் கேட்குறேன், நானோ இல்ல என் அம்மாவோ அவர் பொண்டாட்டிக்கு அப்படி என்ன பண்ணிட்டோம்னு, எங்களை இப்படி விரட்டி விரட்டி அடிக்குறாங்க. அநியாயமா ஏமாந்தது நாங்க. அம்மாவை இழந்துட்டு அனாதையா நிக்குறது நான். அப்போ கூட அவர் பொண்டாட்டிக்கு பொறுக்கல. எப்படியாவது என்னை இந்த வீட்டுல இருந்து விரட்டி அடிக்கணும்ங்குறதுலயே குறியா இருக்காங்க” என்று மதி கூற, எல்லோரின் பார்வையும் அருந்ததியின் மீது அற்பமாகப் பதிந்தது.​


மேகநாதன் மனைவியைப் பார்வையால் சுட்டு எரித்துக் கொண்டே நெருங்க, அருந்ததி தெனாவட்டாக நின்று இருந்தார்.​


“அவ கேட்குறா இல்ல. பதில் சொல்லுடி” என்று மேகநாதன் நிதானமாகக் கூற​


“என்ன சொல்லணும்?” என அலட்சியமாக உதட்டை சுழித்தார் அருந்ததி.​


“அவ உன்ன என்ன பண்ணிட்டான்னு நீ அவளை விரட்டுறதுலேயே குறியா இருக்க?”​


அருந்ததி முகத்தை வெடுக்கென்று திருப்பினார்.​


“சொல்லுடி.. எதுக்கு என் பொண்ண விரட்டுறதுலேயே குறியா இருக்க?”​


“இதுக்கு தான்ய்யா.. இதுக்கு தான். உன் பொண்ணா இருக்குறதால தான் அவளை துரத்தி விடணும்ன்னு துடிக்கிறேன். போதுமா??” என்று ஆங்காரமாகக் கத்தினார் அருந்ததி.​


மேகநாதன் கொலைவெறியுடன் மனைவியின் கழுத்தைப் பிடித்து நெறிக்க, அருந்ததி மூச்சு விட முடியாமல் துடித்தார். சூரியபிரகாஷ் நின்ற இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட அசையவில்லை.​


அகிலனும் முகிலனும் தான் மேகநாதனைப் பிடித்து விலக்கி விட்டார்கள். “விடுங்கடா என்னை..” என்று அவர்களின் கையை உதறித் தள்ளிய மேகநாதன் தன் மனதில் அழுத்திக் கொண்டு இருந்தவற்றை எல்லாம் கொட்டத் தொடங்கினார்.​


“மனுஷியாடா இவ.. ராட்சசி. என்னைக்கு இவ கழுத்துல நான் தாலி கட்டுனேனோ அன்னைக்கு எனக்கு பிடிச்சது சனி. ஒரு நாளாச்சும் நிம்மதியா இருந்து இருப்பேனா? எல்லாத்துக்கும் என்னை மட்டம் தட்டிட்டே இருப்பா. ஏய்.. அப்படி பொறந்த வீடு தான் பெருசுன்னா.. எதுக்குடி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? கல்யாணம் பண்ணிக்காம இதே வீட்டுல இருந்து சாக வேண்டியது தானே. எதுக்கு என் உயிரை எடுக்குற?” என்று அகிலனிடம் தொடங்கி மனைவியிடம் முடித்தார்.​


அருந்ததி மூச்சு விட முடியாமல் கழுத்தைப் பிடித்துக் கொண்டு இருமினார்.​


“நான் பண்ண ஒரே தப்பு. குழந்தை வேணுங்குறதுக்காக யாருக்கும் தெரியாம அன்னக்கொடியைக் கல்யாணம் பண்ணது தான். ஏன்.. ஊர் உலகத்துல யாரும் அப்படி பண்ணதே இல்லையா??” என்றவர் நேரே சிவானந்தனிடம் வந்து நின்றார்.​


“உண்மை தெரிஞ்சி உங்க பொண்ணு என்னென்ன பண்ணா தெரியுமா?” என்றவர் அருந்ததி செய்த அத்தனை வேலைகளையும் கூறினார். கடைசியாக தற்கொலை செய்து கொள்வது போல் நாடகம் ஆடியது வரை.​


“எனக்குன்னு கொஞ்சம் விவசாய பூமி இருக்கு. அதுல வர்ர வருமானமே எனக்கு போதும் என்று தான் நான் இன்னைக்கு வரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனா உங்க பொண்ணுக்கு பேராசை பேய் பிடிச்சிருக்கு. அப்பப்போ என் பேரைச் சொல்லி உங்க எல்லார்க்கிட்டயும் பணம் வாங்குறா. பொறந்த வீட்டுலயே சுரண்டுறான்னா.. இவள் எவ்ளோ பெரிய கேப்மாரியா இருப்பா” என்று உண்மைகளைப் போட்டு உடைக்க, சூரியபிரகாஷிற்கு தங்கையின் மேல் ஒட்டிக் கொண்டு இருந்த கொஞ்ச நெஞ்ச பாசமும் அறுந்துப் போனது.​


“தயவுசெய்து உங்க பொண்ணை நீங்களே வச்சிக்கோங்க. உங்களுக்குப் புண்ணியமாப் போகும். இந்த ராட்சசியோட போராடுற அளவுக்கு என் உடம்புலயும் சரி, மனசுலயும் சரி.. தெம்பு இல்லைங்க” என்று மாமனாரிடம் கரம் குப்பிக் கேட்டுக் கொண்டார் மேகநாதன்.​


பார்வதி மாப்பிள்ளையிடம் எதையோ கூற வாயை திறக்க, அவர் ‘வேண்டாம் ‘ என்பது போல தலை அசைத்து விட்டு மகளிடம் சென்றார்.​


“மதி..” என்று அவர் அழைக்க, அப்போதும் அவள் தந்தையைப் பார்க்கவே இல்லை.​


“நான் இந்த வீட்டுக்கு வர்றதே உன்னை பார்க்குறதுக்காக தான் மதி” என்று சொல்ல, அவள் நம்பவில்லை என்பது போல உதட்டை வளைத்தாள்.​


“ஒரு நிமிஷம்” என்ற மேகநாதன் வேகமாக அவரது அறைக்குச் சென்றார். திரும்பி வரும் போது கையில் இரண்டு மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு வந்தார். எல்லோரும் அவரை குழப்பமாகப் பார்க்க, அவர் மூட்டைகளைத் திறந்து தரையில் கொட்டினார்.​


அதில் வயதுவாரியாக வெண்மதிக்கென்று வாங்கிய துணிகளில் தொடங்கி நோட்டுப்புத்தகம், பேனா, ஜாமென்ரி பாக்ஸ், பென்சில், ரப்பர் என எல்லாம் அப்படியே புதுசாக இருந்தது.​


“இதெல்லாம் நான் இங்கே வரும் போது உனக்காக வாங்குனது. எப்படியாவது உன்க்கிட்ட கொடுக்கணும்னு முயற்சி செய்வேன். ஆனா இந்த ராட்சசி விட மாட்டா. எங்கே நான் உன் கிட்ட பேசிடுவேனோன்னு என் பின்னாலயே கண் கொத்திப் பாம்பா திரிவா”​


“இதெல்லாம் ஒரு சாக்கு. உண்மையான பாசம் இருந்திருந்தால் எப்படியாச்சும் பேசி இருந்து இருக்கலாம்” என்று முணுமுணுத்தாள் வெண்மதி.​


“ஹும்.. நான் ஒரே ஒரு முறை உன் கிட்ட பேச முயற்சி பண்ணதுக்கே.. இரண்டு தடவை உன்னை கொல்ல பார்த்துட்டா இந்த ராட்சசி?” என்று மேகநாதன் கூற, அனைவரும் அதிர்ந்தார்கள்.​


ஒரு நாள் கேஸைத் திறந்து விட்டுவிட்டு வெண்மதியைக் காபி போட அனுப்பி விட்டார் அருந்ததி. நல்லவேளையாக சந்திரபிரகாஷ் வந்து காப்பாற்றினார்.​

இன்னொரு நாள் வெண்மதி கிணற்றடியில் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்த போது, பின்னாடியில் இருந்து தள்ளி விட முயன்றார் அருந்ததி. அப்போது எதிர்ப்பாராத விதமாக கங்கா அங்கு வந்து விட, அருந்ததி எதுவும் செய்யாமல் சென்றுவிட்டார்.​


“மச்சான்.. நான் உங்கக்கிட்ட கொடுத்து வச்சி இருந்த பையை எடுத்துட்டு வாங்க” என்று மேகநாதன் சந்திரபிரகாஷிடம் கூற, அவரும் சென்று எடுத்து வந்து கொடுத்தார்.​


அதில் தங்க நகைகள் இருந்தது. எல்லோருக்கும் திறந்துக் காட்டிய மேகநாதன் “நான் எப்போ எது எடுத்தாலும் என் இரண்டு பொண்ணுங்களுக்கும் சேர்த்து தான் எடுத்து வைப்பேன். இது உன்னோடது மதி” என்று கூற, வெண்மதி தந்தையை வெறித்துப் பார்த்தாள்.​


“இதை வீட்டுல வச்சி இருந்தால் இந்த ராட்சசி சும்மா இருக்க மாட்டான்னு தான் மச்சான் கிட்ட கொடுத்து வச்சி இருந்தேன்” என்றவர் அந்த பையை டீப்பாய் மீது வைத்து விட்டு காருக்குச் சென்றார்.​


டிக்கியைத் திறந்தவர் அதிலிருந்து ஒரு கட்டப்பையை எடுத்து வந்தார். “குழலிக்கு கல்யாணப் பட்டு எடுக்கும் போது நான் உனக்கும் சேர்த்து தான் எடுத்தேன். அவங்களை போல லட்ச ரூபாயில் எல்லாம் எடுத்துக் கொடுக்க எ..ன்னால மு..டியாது. ஆனா என் சக்திக்கு மீறி நாற்பதாயிரம் ரூபாயில் எடுத்து இருக்கேன்” என்று புடவையை கையில் எடுத்து மகளிடம் நீட்டினார். அதுவும் அவளுக்குப் பிடித்த இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது அப்புடவை.​


அவரது கண்களில் பாசம், பரிதவிப்பு, ஏக்கம் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இருந்தது. வெண்மதி சூரியபிரகாஷின் முகத்தைப் பார்த்தாள். அவர் எதுவும் சொல்லவில்லை. ‘உன் விருப்பம்’ என்பது போல் விட்டுவிட்டார்.​


பக்கவாட்டாகத் திரும்பி கங்காவை நோக்கினாள் வெண்மதி. அவர் “வாங்கிக்கோ” என்று சொன்னப் பிறகே அவள் கை நீட்டி அந்த புடவையை வாங்கப் போனாள்.​


அதற்குள் இடையில் புகுந்த அருந்ததி புடவையை கையில் எடுத்து “எனக்கே தெரியாமல் இவளுக்கு இதையெல்லாம் பண்ணி இருக்கீயா நீ?” என்று வெறிப் பிடித்தாற் போல் கத்தினார்.​


ஒரே எட்டில் அருந்ததியை நெருங்கிய சூரியபிரகாஷ், தங்கையின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.​


“அடங்கவே மாட்டியா நீ..” என்று கண்கள் சிவக்க கர்ஜித்தவரைக் கண்டு அருந்ததி வெலவெலத்துப் போனார்.​


“ஒழுங்கு மரியாதையா புடவையை மதிக்கிட்ட கொடு” என்று சொல்ல, வெண்மதியிடம் புடவையைக் கொடுத்தார் அருந்ததி.​


“அண்ணா, அம்மா, ஆட்டுக்குட்டின்னு சொல்லிக்கிட்டு இந்த வீட்டுப்பக்கம் வந்த.. கொன்றுவேன். வெளியே போ..” என்று சூரியபிரகாஷ் கத்த, அருந்ததி திடுக்கிட்டு கணவனைப் பார்த்தார். அவரோ அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டார்.​


“பெரியண்ணி” என்ற அருந்ததி கங்காவை உதவிக்கு அழைக்க​


அவரோ மாமியாரைப் பார்த்து “அத்தை.. உங்க பொண்ணு இங்கேயே இருந்தால், நானே அவளுக்கு அரளி விதையை அரைச்சி குழம்புல கலந்துக் கொடுத்திடுவேன். பேசாமல் போயிட சொல்லுங்க” என்றார் கடுப்பாக.​


அருந்ததி திடுக்கிட்டு யமுனாவைப் பார்க்க, அவரோ சுவரைப் பார்த்தார்.​


கடைசியாக முகிலனைப் பார்த்து “மாப்ள..” என்று அழைக்க,​


அவனோ “என்ன அத்தை.. வாங்குன அடியில பார்வை மங்கிப் போச்சா.. நான் ஆதி இல்ல. முகிலன்” என்றான் நக்கலாக.​


‘ஐயோ.. நேரம் பார்த்து பழி வாங்குறானே..’ என்று உள்ளுக்குள் நினைத்தவர் “விளையாடாதீங்க மாப்ள.. ஆளாளுக்கு என்னை விரட்டுறாங்க. இப்போ என் பொண்ண விட்டா எனக்கு வேற கதியே இல்லை. அதனால நானும் உங்கக் கூடவே இருந்திடுறேனே..” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க​


‘எதுக்கு.. என் குடும்பத்தைக் கெடுக்கவா’ என்று மனதில் நினைத்தவன் வெளியே பற்கள் தெரிய சிரித்து வைத்தான்.​


“தாராளமா வாங்க அத்தை. அந்த வீட்டுல உங்களுக்கு இல்லாத உரிமையா? நீங்க யாரு.. என் மாமியாரு” என்று முகிலன் ஏற்ற இறக்கத்தோடு சொல்ல, கங்கா மகனை தீயாய் முறைத்தார்.​


அருந்ததி ஆசுவாசமாக “ரொம்ப நன்றி மாப்ள” என்றார் பல்லைக் காட்டினார்.​


“அப்புறம் அத்தை.. என் வீட்டுக்குக் குழாய் கனெக்ஷன் எல்லாம் இல்ல. தண்ணீ வேணும்ன்னா வீட்டுக்கு பக்கத்துல ஒரு கிணறு இருக்கு. அதுல இருந்து தான் எடுத்துக்கணும். கிணத்தடியில நிக்கும் போது பார்த்து ஜாக்கிரதையா நில்லுங்க. தப்பி தவறி கால் வழுக்கி நீங்க கிணத்துக்குள்ள விழுந்து.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதை என்னால தாங்கிக்க முடியாது” என்றவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு வராதக் கண்ணீரைத் துடைப்பதுப் போல் நடித்தான்.​


‘ம்ம்.. விட்டா இவனே நம்மளை கிணத்துக்குள்ள தள்ளி விட்டுருவான் போல’ என்று நினைத்த அருந்ததி அவனை முறைத்தார்.​


“என்ன அத்தை நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?? வாங்க வீட்டுக்கு போலாம்” என்று மாமியாரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்த முகிலன்​


“நேத்து தான் புதுசா கேஸ் கனெக்ஷன் வாங்குனேன். அதை உங்களை வச்சி தான் செக் பண்ணனும்” என்று தன் போக்கில் கூற,​


அதில் பயந்துப் போன அருந்ததி “கூட்டிட்டுப் போய் என்னை கொல்லப் பார்க்குறீயாடா” என்று அலறி அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டார்.​


“பரவாயில்லையே.. சரியா புரிஞ்சிக்கிட்ட. பொண்ணைப் பார்க்கிறேன்.. மண்ணைப் பார்க்கிறேன்னு என் வீட்டுப்பக்கம் எல்லாம் வந்துடாதே. நானே உன்னைப் பிடிச்சி கிணத்துக்குள்ள தள்ளி விட்டுட்டு கால் வழுக்கி விழுந்து செத்துட்டன்னு ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சி ஒட்டிடுவேன்” என்று அடிக்குரலில் சீறினான் முகிலன். அருந்ததி பயத்துடன் எச்சிலை விழுங்கினார்.​


வெண்மதி கொண்டு வந்த பையை எடுத்துக் கொண்ட மேகநாதன் “மதி கிளம்பு. நம்ம வீட்டுக்குப் போலாம்” என்றார். அவள் தவிப்புடன் கங்காவின் கையைப் பற்றிக் கொண்டாள்.​


மகளின் மனதைப் புரிந்துக் கொண்டவர் கங்காவை ஏறிட்டுப் பார்த்தார். கங்கா எதிர்ப்பார்ப்புடன் ஆதியைப் பார்க்க, அவன் அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தான். கடைசியாக அவனது பார்வை வெண்மதியில் வந்து விழ, அதே கணம் அவளும் அவனைப் பார்த்தாள்.​


இருவரின் பார்வைகளும் உரசிக் கொண்ட தருணம் அவனது தலை தானாகவே ‘சரி’ என்பது போல் ஆடியது.​


“அப்புறம் என்ன.. ஆதியே சம்மதம் சொல்லிட்டான். நீங்க உங்க பொண்ணை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. எல்லாமே ரெடியா தானே இருக்கு. குறித்த முகூர்த்தத்துலயே ஆதிக்கும் மதிக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம்” என்றார் சூரியபிரகாஷ்.​


மதியின் கையை எடுத்து மேகநாதனிடம் கொடுத்த கங்கா “இப்போ உங்க பொண்ணா இங்கிருந்து போற மதி.. அடுத்த வாரமே ஆதியோட கையைப் பிடிச்சிக்கிட்டு இந்த வீட்டு மருமகளா இங்கே வர போறாங்குறதால தான் உங்களோட அனுப்பி வைக்கிறேன்” என்று கூறிப் புன்னகைப் புரிய, மேகநாதனும் மனம் நிறைந்தப் புன்னகை உடனே மகளை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.​


வெண்மதி உதயாதித்தனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்ல, அவனும் அவளையே தான் பார்த்தான்.​

 

Thulasi Raj

Moderator

அத்தியாயம் 19​

மேகநாதன் மகளை அழைத்துக் கொண்டு காருக்குச் செல்ல, அருந்ததி வேறு போக்கிடம் இல்லாததால் கணவனிடமே சரணடைய முடிவெடுத்து விட்டார்.​

“என்னங்க..” என்று அழைக்க, கார் கதவைத் திறந்த மேகநாதன் அதை மூடி விட்டு திரும்பினார்.​

‘என்ன’ என்பது போல மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு மிதப்பாக மனைவியைப் பார்க்க,​

“நானும் உங்கக் கூடவே வரேன்ங்க” என்றார் பாவமாக.​

“எதுக்குங் அம்மணி.. இத்தாம் பெரிய பங்களாவை விட்டுப் போட்டு அந்த புறாக் கூண்டுக்கு வரீங்க. நீங்க இங்கேயே மகாராணி கணக்கா இருங்க. நான் என்ற பொண்ணை மட்டும் கூட்டிட்டுப் போறேனுங்க” என்று கோயம்புத்தூர் வட்டார வழக்கில் பேசி நக்கலடித்தார்.​

“ப்ளீஸ்ங்க. என்னையும் உங்களோட கூட்டிட்டுப் போங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்ங்க”​

மனைவியை மேலிருந்து கீழாக ஒரு பார்வைப் பார்த்தவர் “என்ன சொன்னாலும் கேட்பீயா?” என்று மறுபடியும் கேட்க, “ம்” என்று எல்லா பக்கமும் தலை ஆட்டினார்.​

“அந்த பக்கம் போய் என் பொண்ணுக்குக் கார் கதவைத் திறந்து விடு” என்று மேகநாதன் கூற,​

“என்னது..” என்று அலறிவிட்டார் அருந்ததி.​

“ஓ.. முடியாதா?? சரி எப்படியோ போ..” என்றவர் மகளைப் பார்த்து “நீ வண்டியில ஏறு மதி. நாம கிளம்பலாம்” என்றார்.​

“இருங்க.. இருங்க.. நான் எப்போ முடியாதுன்னு சொன்னேன்” என்று அவசரமாகத் தடுத்த அருந்ததி வேகமாக நடந்து வந்து வெண்மதிக்கு கார் கதவைத் திறந்துவிட்டார்.​

அவள் தந்தையை ஏறிட்டுப் பார்க்க, “நீ உட்காரும்மா” என்றார். ‘சரி’ என்பது போல் தலை அசைத்த வெண்மதி முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள். மேகநாதன் மனைவியைப் பார்த்து “நீயும் ஏறித் தொலை” என்றார் வேண்டா வெறுப்பாக.​

அவரும் முணுமுணுத்துக் கொண்டே ஏறி அமர, மேகநாதன் காரைக் கிளப்பினார்.​

முகிலன் அன்னையின் முகத்தில் தெரிந்த நிம்மதி உணர்வைக் கண்டு உள்ளுக்குள் நெகிழ்ந்துப் போனான். அதை சூரியபிரகாஷும் கண்டுக் கொள்ள, “க்கும்” என்று தனது தொண்டையைச் செறுமினார்.​

அதில் கலைந்தவன் தந்தையை ஏறிட்டுப் பார்க்க, அவரோ முகத்தை வேறுப்பக்கம் திருப்பிக் கொண்டு “அதான் பைலை வாங்கியாச்சு இல்ல. கிளம்பிப் போகாமல் இன்னும் இங்கேயே நின்னு எதுக்குடா வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கான்” என்று அகிலனிடம் கேட்டார்.​

அவன் தம்பியைப் பார்க்க, “பைல் வந்திடுச்சு. அதுல எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க வேணாமா” என்ற முகிலன் பைலைத் திறந்துப் பார்த்தான்.​

வீடு மற்றும் நில பத்திரம் தான் அதில் இருந்தது. அவற்றைச் சரிப்பார்த்தவன் “எல்லாம் சரியா இருக்கு” என்றான்.​

நேரே அன்னையின் முன்பு வந்து நின்றான். “அம்மா.. நான் புதுசா பிசினஸ் ஆரம்பிக்கப் போறேன். கொஞ்சம் பணம் தேவைப்படுது. அதுக்கு தான் பைனாஸ்ஷியர் கிட்ட வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சி பணம் வாங்கலாம்னு இருக்கேன்” என்ற முகிலன் கையோடு கொண்டு வந்து இருந்த கடன் பத்திரத்தை அன்னையிடம் கொடுத்தான்.​

“பத்திரம் எல்லாம் உன் பேர்ல இருக்குறதால, நீ கையெழுத்துப் போட்டால் தான் கடன் கொடுப்பாங்க” என்று சொல்ல, கையில் இருந்த கடன் பத்திரத்தையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தார் கங்கா.​

“சீக்கிரம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து அனுப்பு. இருக்குற வீட்டையும் இழந்துட்டு நடுத்தெருவுல நின்னு பிச்சை எடுக்கட்டும்” என்று நக்கலாகச் சொன்னார் சூரியபிரகாஷ்.​

அவரை முறைத்த கங்கா அடக்கப்பட்டக் கோபத்துடன் கையில் இருந்த கடன் பத்திரத்தைக் கிழித்துப் போட்டார்.​

“அம்மா என்னம்மா பண்ற.. எதுக்கும்மா பேப்பரை கிழிக்குற” என்று முகிலன் பதற, கங்கா அவனின் கன்னத்திலேயே ஓங்கி அறைந்தார். எல்லோரும் ஆடிப் போனார்கள்.​

“பெரிய இவனாடா நீ? தனியா போய் பிசினஸ் பண்ற அளவுக்கு வந்துட்டீயா?” என்று கங்கா ஆத்திரமாகக் கேட்க​

“அவர் தானே போடான்னு சொன்னார்” என்றவனின் குரல் உணர்ச்சி வேகத்தில் கலங்கிப் போய் ஒலித்தது.​

“சொன்னா போயிடுவீயா? தப்பு பண்ணது நீதானே.. அந்த கோபத்துல அவர் நாலு வார்த்தை பேசக் கூடாதா? இரண்டு அடி அடிக்கக் கூடாதா? உடனே துரைக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்திடுமோ?”​

கங்கா ஆதங்கத்துடன் கேட்க, முகிலனால் பதில் சொல்ல முடியவில்லை.​

“இந்த அம்மாவைப் பத்தி ஒரு நிமிஷம் நெனைச்சிப் பார்த்து இருந்தால்.. என்னை விட்டு போய் இருப்பீயாடா நீ” என்று கங்கா உடைந்து அழ, முகிலன் கண்கள் கலங்க அன்னையை அணைத்துக் கொண்டான்.​

“போய் இருக்கக் கூடாது தான். சாரிம்மா” என்றவனைப் பிடித்துத் தள்ளி விட்ட கங்கா​

“போடா. போய்.. என் மருமகளைக் கூட்டிட்டு வீட்டுக்கு வா” என்றார்.​

அவன் தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, அவர் எதுவும் சொல்லவில்லை.​

“டேய்.. அங்கே என்னடா பார்த்துட்டு இருக்க? நான் தான் சொல்றேன்ல்ல. போ..” என்று அதட்ட, முகிலன் அப்போதும் தயக்கத்துடனே நின்றான்.​

“இன்னும் அரை மணி நேரத்துல நீயும் அவளும் வீட்டுக்கு வந்து சேரல.. நானே அங்கே வந்து இரண்டு பேரோட காதைத் திருகி வீட்டுக்கு இழுத்துட்டு வருவேன்” என்று மிரட்ட, முகிலன் சிரிப்புடன் ‘சரி’ என்பது போல தலை அசைத்தான்.​

“டேய்.. அகி.. ஆதி.. உங்களுக்கும் சேர்த்தே சொல்றேன். நல்லா காதுல வாங்கிக்கங்க” என்று கங்கா சொல்ல, அவர்களும் ‘என்ன’ என்பது போல பார்த்தார்கள்.​

“நாளப்பின்ன.. உங்களுக்கு தனிக் குடித்தனம் போகணும்ன்னு ஒரு எண்ணம் இருந்தால்.. அதை இப்போவே அழிச்சிடுங்க. நான் உயிரோட இருக்குற வரைக்கும் இந்த குடும்பத்தைப் பிரிக்க விட மாட்டேன். என் காலம் முடிஞ்சதுக்கு அப்புறமா வேணும்ன்னா அவுங்கவுங்க குடும்பத்தைப் பார்த்துக்கிட்டு போங்க. உங்களை யாரும் தடுக்க மாட்டாங்க” என்றவர் அவரது அறைக்குச் சென்றுவிட்டார்.​

சிவானந்தனுக்கும் பார்வதிக்கும் ஒருபுறம் மருமகளை நினைத்துப் பெருமையாக இருக்க, மறுபுறம் மகளை நினைத்துக் கவலையாகவும் இருந்தது.​

**************​

வெண்மதியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற மேகநாதன் காரை வீட்டு வாசலில் நிறுத்தினார். வெண்மதி காரில் இருந்து இறங்கப் போக, “மதி.. இறங்காதே அப்படியே இரு” என்றார்.​

அவள் ‘என்ன’ என்பது போல் தந்தையைப் பார்க்க, அவர் பின்னால் திரும்பி மனைவியைப் பார்த்தார். அருந்ததி என்னவென்று தெரியாமல் திருதிருவென்று விழிக்க, “ஏய்.. என்ன முழிமுழிச்சிட்டு இருக்க. என் பொண்ணு முதல் தடவையா வீட்டுக்கு வர்ரா. போய் ஆர்த்தி கரைச்சி எடுத்துட்டு வாடி” என்றார் அதிகாரமாக.​

“யார் நானா?”​

“பின்ன இதுக்குன்னு உங்க அம்மா கோயம்புத்தூருல இருந்து வருவாங்களாக்கும்?”​

‘எல்லாம் என் நேரம்’ என்று முணுமுணுத்த அருந்ததி காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றார். போகும் போது கார் கதவை படாரென்று அடித்துச் சாற்றி விட்டுச் செல்ல, அவர் மகளைப் பார்த்து “வயித்தெறிச்சல்டா கண்ணு” என்றார்.​

“ஏய்.. ஆர்த்தித் தட்டு எடுத்துட்டு வர்ரதுக்கு எவ்ளோ நேரம்?” மேகநாதன் வீட்டு வாசலில் நின்று கத்த​

“அய்யே.. கரைச்சி எடுத்துட்டு வர வேணாமா” என்று சிடுசிடுத்தார் அருந்ததி.​

“என்னடி உன் பேச்சுல திமிர்த்தனம் தெரியுது? துரத்தி விட்டுடுவேன். ஜாக்கிரதை..” என்று மிரட்ட, அருந்ததி பவ்வியமாக வெண்மதிக்கு ஆர்த்தி சுற்றினார்.​

“மதி.. நீ உள்ளே வாம்மா” என்றவர் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல, ஆர்த்தித் தட்டை கையில் வைத்துக் கொண்டு நின்று இருந்த அருந்ததிக்கு காதில் புகை வந்தது.​

“ச்சே.. எவளை துரத்தித் துரத்தி அடிக்கணும்னு நெனைச்சேனோ.. அவளுக்கே ஆர்த்தி எடுக்குற நிலைமைக்கு வந்துட்டேனே..” என்று அருந்ததி புலம்ப,​

“ஏய்.. இன்னும் வெளியே என்னடி பண்ணிட்டு இருக்க?” என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தார் மேகநாதன்.​

“இதோ வந்துட்டேங்க” என்ற அருந்ததி ஆர்த்தியை அப்படியே நின்றவாக்கில் பக்கவாட்டாக ஊற்றி விட்டு வீட்டிற்குள் சென்றார்.​

“மதி.. இவ்ளோ தூரம் கார்ல வந்ததுல நீ டையர்டா இருப்பே. அந்த ரூம்ல போய் ரெஸ்ட் எடு. உள்ளே ஏசி எல்லாம் இருக்கு” என்று வலதுபுறத்தில் இருந்த அறையைக் கை காட்ட, அருந்ததி பதறி விட்டார்.​

“அது என் ரூம்ங்க”​

“என்னது..” மேகநாதன் மனைவியை மிதப்பாகப் பார்க்க​

“இ..ல்ல.. அது என் ரூம்ன்னு சொன்னேன்..” என்றார் தாழ்ந்தக் குரலில்.​

மேகநாதனோ “இப்போதிலிருந்து அது மதியோட ரூம். பக்கத்துல இருக்குறது குழலியோட ரூம்” என்றார் உறுதியாக.​

“அப்போ நான் எங்கே படுக்குறது?”​

“இவ்ளோ பெரிய வீட்டுல நீ படுத்து உருள இடமா இல்லை? எங்கே வேணா படுத்துக்கோ” என்றவர் மகளை அறைக்கு அழைத்துச் சென்று ஏசியைப் போட்டு விட்டார்.​

“நல்லா ஜில்லுன்னு காத்து வருதா மதி?” என்று அவர் கேட்க​

“எனக்கு இதெல்லாம் வேணாம். நான் வெளியே ஹாலிலேயே படுத்துக்குறேன்” என்று மறுத்தாள்.​

“அப்பா சொல்றேன்ல்ல.. நீ இந்த ரூம்ல தான் இருக்கணும்” என்றார் உறுதியாக.​

“சரி.. என்ன சாப்பிடுற?” என்று ஆசையாகக் கேட்க​

“எனக்கு பசிக்கல” என்றாள் வெடுக்கென்று.​

அவளது ஆதங்கம் கலந்த கோபத்தை உணர்ந்தவர் சிரித்துக் கொண்டே “காலையில சாப்பிட்டது. இப்போ மணி என்ன ஆகுது பாரு. இன்னும் பசிக்கலயா உனக்கு? இரு வரேன்” என்றவர் உடனே கடைக்குச் சென்றார்.​

மகளுக்குப் பிடித்த சிக்கன் பிரியாணியை வாங்கிக் கொண்டு வந்தவர், அவளை அழைத்து டைனிங் ஹாலில் அமர வைத்தார். பின்பு அவரே பிரியாணி பார்சலைத் திறந்து வைத்து அவளைச் சாப்பிடச் சொல்ல, அருந்ததி தனக்கான பார்சல் எங்கே என்று தேடினார்.​

அது கண்ணில் படாமல் போகவே, “என்னங்க.. எனக்கு பிரியாணி வாங்கிட்டு வரலையா?” என்று கேட்டார்.​

“இல்லை”​

“அவ மட்டும் சாப்பிடுறாளே.. நான் என்ன சாப்பிடுவேன்?” என சின்னக் குழந்தைப் போல அடம் பிடித்தார் அருந்ததி.​

“என் பொண்ணு பசியா இருக்காளேன்னு அவளுக்கு மட்டும் பிரியாணி வாங்கிட்டு வந்தேன்”​

“ஐயோ.. எனக்கும் ரொம்ப பசிக்குதே”​

“பசிச்சா.. போய் செய்து சாப்பிடுடி. என்னை ஏன் கேட்குற?”​

“இதெல்லாம் அநியாயம்”​

“அப்படின்னா.. இப்போவே என் வீட்டை விட்டு வெளியே போடி” என்று சிறிதும் இரக்கம் இன்றி கூறினார் மேகநாதன்.​

அவரை முறைத்துப் பார்த்து கோபத்தில் புசுபுசுவென்று மூச்சு விட்ட அருந்ததி சிடுசிடுத்துக் கொண்டே நடக்க, “ஏய்.. அங்கே எங்கே போற? வாசல் இந்த பக்கம் இருக்கு” என்று வாசலைக் கைக் காட்டினார்.​

“நான் சமைக்கப் போறேன்” என்று உரக்கக் கத்தினார் அருந்ததி.​

அவர் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த மகளைக் கண்ட மேகநாதன் “அவ கெடக்குறா. நீ சாப்பிடும்மா” என்றார் பாசமாக.​

“நீங்க இப்படியெல்லாம் பண்றதால அவங்க திருந்திட போறாங்களா என்ன?”​

“அவளாவது திருந்துறதாவது.. அதெல்லாம் இந்த ஜென்மத்துக்கு திருந்த மாட்டா. இப்போ வேற வழி இல்லாததால அடக்கி வாசிக்குறா. அவ்வளவு தான். இனிமே அவளால உனக்கு எந்த தொல்லையும் வராமல் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. நீ ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு” என்றார்.​

வெண்மதிக்கு திடீரென யாமினியின் நினைவு வந்தது. ‘அவர் அந்த யாமினியை தானே லவ் பண்ணிட்டு இருந்தார். எப்படி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னார்’ என்று யோசித்தவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை.​

*****************​

தோட்டத்து வீட்டிற்கு வந்த முகிலன் “குழலி.. குழலி..” என்று வாசலில் இருந்தே கத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைய, அவள் நிதானமாக அறையில் இருந்து வெளியே வந்துப் பார்த்தாள்.​

“நீ இங்கே இருக்கீயா?” என்றவன் “கிளம்பு. போலாம்” என்றான்.​

“எங்கே?”​

“நம்ம வீட்டுக்கு. அம்மா தான் உன்னையும் என்னையும் உடனே வீட்டுக்குக் கிளம்பி வர சொன்னாங்க” என்று அவன் சந்தோஷமாகச் சொல்ல, அவளது முகம் இறுகிப் போனது.​

“நான் வரல”​

“ஏன்?”​

“அங்கே போய் அசிங்கப்பட்டு தானே வந்தோம். திரும்பவும் ஏன் அங்கேயே போகணும். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்”​

“ஏய்.. என்ன அசிங்கம் அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்க. போய் கிளம்பு” என்று அதட்டினான் முகிலன்.​

“நான் வரல. போறதா இருந்தால் நீ மட்டும் போ” என்று எரிந்து விழுந்தவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.​

முகிலனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது. கண்களை இறுக்கமாக மூடி அதை அடக்கிக் கொண்டவன் ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு அறைக்குள் நுழைந்தான்.​

அவள் கட்டிலில் அமர்ந்து அழுதுக் கொண்டு இருந்தாள். அவன் சென்று அவள் அருகில் அமர்ந்தான். அவள் விலகவும் இல்லை. அழுகையை நிறுத்தவும் இல்லை.​

“என்னடி உன் பிரச்சனை? ஏன் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்ற” என்று அவன் தன்மையாகக் கேட்க, அவள் எதுவும் சொல்லவில்லை.​

“சொல்லுடி”​

“எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு நான் அந்த வீட்டுக்கு வருவேன். ஆதி மாமா மூஞ்சில நான் எப்படி முழிப்பேன். நீ பண்ண வேலையால இப்போ நான் தான் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறேன்” என்றாள் அழுகையுடன்.​

“பழைய விஷயத்தை மறந்துத் தொலைடி. நீயா ஒன்னும் அவன் மேல போய் விழல. எல்லாம் உன் அம்மாவோட வேலை. ஆனா அவனுக்கு உன் மேல அப்படி எந்த எண்ணமும் இல்லையே. இன்பேக்ட்.. நான் உன்னை லவ் பண்ற விஷயம் அவனுக்கு முன்னாடியே தெரியும். உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கணும்ன்னு தான் அவன் படிச்சி முடிச்சியும் 2 வருஷமா எந்த வேலைக்கும் போகாமல் வீட்டுலேயே இருந்தான்” என்று முகிலன் கூற, குழலி அதிர்ச்சியாக அவனை நோக்கினாள்.​

மனைவியின் கன்னத்தைத் தாங்கி பெருவிரலால் கண்ணீரைத் துடைத்து விட்டவன் “நீ எனக்காக பொறந்தவடீ. ஆதியைப் பார்த்து சங்கடப்படுற அளவுக்கு எல்லாம் எதுவும் இல்லை” என்றான் காதலுடன்.​

அப்பொழுதும் குழலியின் முகம் தெளிவடையாமல் இருக்க, “இன்னும் என்ன?” என்று கேட்டான்.​

“மதி.. அங்க இருப்பாளே.. அவளுக்கும் உனக்கும் தானே கல்யாணம் ஏற்பாடு நடந்துச்சு” என்றாள் இறங்கிப் போனக் குரலில்.​

“அது முன்னாடி. இப்போ மதிக்கும் ஆதிக்கும் கல்யாணம் முடிவாயிடுச்சு. குறிச்ச முகூர்த்தத்துல அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம்” என்றான் அவன்.​

“எப்படி?” என்று வினவியளுக்கு அவன் சுருக்கமாக சற்று முன் நடந்த விஷயத்தைக் கூற, கார்குழலிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.​

“அ..ப்..போ.. மதி..யும் அ..ப்பா..வோட பொ..ண்ணா?”​

“ஆமா.. உனக்கு அக்கா” என்று அவன் சொல்ல, அவள் கசந்தப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள்.​

“மதி ஏற்கனவே உங்க அம்மாவால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. நீ அந்த மாதிரி ஏதாவது பண்ண.. உன் தோலை உறிச்சிடுவேன்” என்று அவன் அழுத்திக் கூற, அவள் அவனை முறைத்தாள்.​

“நீ மதியை உன் அக்காவா ஏத்துக்கோ.. இல்ல ஏத்துக்காதே.. அது உன் இஷ்டம். கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாரும் ஒரே வீட்டுல தான் இருக்கப் போறோம். வீணாப் போன உன் அம்மாப் பேச்சைக் கேட்குற வேலை எல்லாம் வச்சிக்காதே. இனிமேலாவது சுயமா யோசிச்சு முடிவெடுக்கப் பழகுடி” என்றவன் இருவரின் துணிகளையும் எடுத்துப் பெட்டியில் அடக்கத் தொடங்கினான்.​

அப்போதே இருவரும் தோட்டத்து வீட்டில் இருந்து கிளம்பி சூரியபிரகாஷின் வீட்டிற்குச் செல்ல, கங்கா ஆர்த்தித் தட்டுடன் வாசலில் காத்திருந்தார். மகன் மருமகள் இருவருக்கும் சேர்த்து ஆர்த்திச் சுற்றிய கங்கா மருமகளை மென்மையாக அணைத்து நெற்றியில் இதழ் பதித்தார்.​

“அருணா.. குழலியைப் பூஜை ரூமுக்கு அழைச்சிட்டுப் போய் விளக்கு ஏத்தச் சொல்லு” என்று கங்கா சொல்ல​

“அத்தை.. நான் எப்படி?” என்று தயங்கிய அருணா “நீங்களும் வாங்க” என்றாள்.​

“ப்ச்.. என்னதிது அருணா.. இன்னும் சின்னப்புள்ள மாதிரி நடந்துக்குற. இந்த வீட்டோட மூத்த மருமகள் நீ. இனிமேலாவது அந்த பொறுப்போட நடந்துக் கொள்” என்றார் கண்டிப்புடன்.​

“சரிங்க அத்தை..” என்ற அருணா குழலியை அழைத்துக் கொண்டு உள்ளேச் சென்றாள்.​

 
Status
Not open for further replies.
Top