இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

காதல் கண்ணாம்பூச்சி -கதைத்திரி

Status
Not open for further replies.

ஆட்டம் 1​

மார்கழி மாத அதிகாலை நேரம், விடியலை அறிவிக்க கூட்டிலிருந்து கீழ் இறங்கி கூவிய சேவல் ஒன்று, குளிர் தாங்காமல் மீண்டும் கூட்டினுள் பதுங்கிக்கொண்டது.
இருள் இன்னமும் முழுதாக விலகாமல் இருக்க, தெருவிளக்கின் வெளிச்சத்திற்கு ஹைபை அடிக்கும் விதமாக ஒரு வீட்டின் முற்றத்தில் மட்டும், சின்ன மின்னல் கீற்றாய் வெள்ளை வெளிச்சம் தலைகாட்டியது.​

சிப்பியை விட்டு வெளிவரும் முத்தாய், வீட்டின் கதவைத் திறந்து கொண்டு, ஒரு கையில் வாளித்தண்ணீர் மற்றொரு கையில் தென்னங்கீற்று குச்சியால் செய்யப்பட்ட துடைப்பம் என வெளிவந்தாள் இளவயது நங்கை ஒருத்தி.​

மார்கழி குளிர் அவளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாய் தெரியவில்லை. இலையுதிர் காலத்தின் மிச்சமாய் வீட்டு வாசலில் இருக்கும் வேப்பமரத்தில் இருந்து விழுந்து, முற்றத்தை நிறைத்திருந்த காய்ந்த இலைகளை சுத்தமாகப் பெருக்கி முடித்தவள் தண்ணீர் தெளித்து கோலத்திற்கு புள்ளி வைக்க ஆரம்பித்தாள்.​

"அப்பா இந்தக் காலத்தில் போய் ஐந்து மணிக்கு எழுந்திரி, வாசல் தெளிச்சு அரிசி மாவால கோலம் போடு. தலை முடியை விரிச்சு விட்டா குடும்பத்துக்கு ஆகாது. பொண்ணு நெத்தியில் குங்குமம், தலையில் பூ, கையில் கண்ணாடி வளையல் இல்லாம இருக்கக் கூடாது, தாவணி தான் கட்டணும், வீட்டுக்கு யாராவது வந்தா ரூமுக்குள்ள போயிடணும். ப்ளா, ப்ளா... இதெல்லாம் இந்த ஊரில் மட்டும் தான். ஆனா சென்னை, எப்படிப்பட்ட ஊரு தெரியுமா? அங்க அம்மாங்களே ஏழு மணிக்கு தான் எழுந்திரிப்பாங்களாம்.​

எப்பப் பார்த்தாலும் பக்கத்து வீட்டு பரிமளத்தோட என்னைக் கம்பேர் பண்ணித் திட்டுவீங்க இல்ல. நான் படிக்கிற காலேஜில் வந்து பாருங்க அப்ப தான் நான் எவ்வளவு மேல் என்று தெரியும். சொன்னா நம்ப மாட்டீங்க, அந்த ஊர்ப் பொண்ணுங்க பலருக்கு சுடுதண்ணீர் கூட வைக்கத் தெரியாதாம்" தன் தந்தையிடம் அன்றொரு நாள் சொல்லி சிரித்ததை நினைத்தால் இப்போது அழுகையாக வந்தது பெண்ணிற்கு.​

இருபத்தியோரு புள்ளியில் இருந்து ஒரு புள்ளி வரை ஊடுபுள்ளியாய் வைத்து கோலம் போட்டு அதற்கு வண்ணம் கொடுத்து முடிப்பதற்குள் சூரியன் சுள்ளென்று வெயிலைக் கக்க ஆரம்பித்திருந்தான்.​

கோலம் முடித்து எழுந்தவள் வலிக்கும் முதுகை சரிசெய்ய முயற்சிக்க, "என்ன குழலி கோலமெல்லாம் பலமா இருக்கு“ என்று விசாரித்த ஒருவர் அதற்கான பதிலையும் அவரே சொல்லிக் கொண்டார்.​

“அட ஆமா, இன்னைக்கு உனக்கு கல்யாணம் இல்ல, மறந்தே போயிட்டேன் பாரேன். இவ்வளவு பெரிய கோலத்தை நீ மட்டும் தனியாவா போட்ட. இதுக்கு பதிலா ரங்கோலி வரைஞ்சிருக்கலாமே சிம்பிளா முடிஞ்சிருக்குமே. என்ன முதுகு ரொம்ப வலிக்குதா? எல்லாம் இன்னைக்கு ஒருநாள் தான். நாளையில் இருந்து உனக்கு வாய்க்க இருப்பது மகாராணி யோகம் இல்லையா?​

பெரியவீட்டு மருமகளாகப் போற, அங்க இருக்கிற வேலைக்காரங்க நீ என்ன கேட்டாலும் உடனே செஞ்சு கொடுத்துடுவாங்க. நேரா நேரத்துக்கு வக்கனையா சாப்பிடலாம். கலர்கலரா காஸ்ட்லியான புடவை கட்டலாம், நிறைய நகை போட்டுக்கலாம். நீ ரொம்பத் தான் கொடுத்து வைச்சவ. இந்த ஊரில் எந்தப் பொண்ணுக்கும் உன் அளவுக்கு கொடுப்பினை இல்லடிம்மா. சரி நான் வாரேன், இல்லன்னா தெருகுழாயில் கூட்டம் அதிகமாகிடும்" வயிற்றெரிச்சலை முடிந்தளவு நாகரிகமாக கொட்டிவிட்டு நடந்தாள் எதிர்வீட்டு பரிமளம்.​

பெண்ணவளின் இதழ்களில் உயிர்ப்பில்லாத ஒரு புன்னகை. "கொடுத்து வைச்சவளா, நானா. உயிரில்லாத நகைகளும், புடவைகளுமா எனக்கு உயிர்ப்பான ஒரு வாழ்வைக் கொடுத்து விடப்போகிறது“ மனதினுள் நினைத்து வெற்று சிரிப்பை உதிர்த்த குழலி, தன் புகுந்த வீட்டினர் செய்யச் சொல்லி இருந்த அடுத்தடுத்த வேலையைச் செய்யப் புறப்பட்டாள்.​

முகூர்த்தத்திற்கென்று அவர்கள் பக்கம் எடுத்துக் கொடுத்த புடவையைப் பார்த்தவளுக்கு ஏதோ போல் இருந்தது. மாம்பழ நிறத்தில் ஜொலிக்கும் காஞ்சிப் பட்டுப்புடவை, விலை கிட்டத்தட்ட இலட்சம். அடர்நிறத்தை அறவே வெறுப்பவள் குழலி. இனி அவளுடைய வாழ்வில் எதுவுமே அவள் இஷ்டப்படி நடக்கப் போவதில்லை, அதற்கான முதல் படி தான் இந்தப் புடவை என்று நினைத்தவளுக்கு தொண்டையில் ஏதோ கசந்தது. அதை ஒதுக்கி வைத்துவிட்டு புடவையை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்.​

உடலெங்கும் எண்ணெய் வைத்து, தலைக்கு சீயக்காய் தேய்த்து சுடுதண்ணீரில் தான் குளிக்க வேண்டும் என்று அவளுடைய மாமியார் அன்புக்கட்டளை பிறப்பித்திருக்க, அதை மீற விரும்பாமல் அப்படியே குளித்துவிட்டு வந்தாள். கூடவே அவர் மகனுக்கு அவர் வீட்டில் இந்த சம்பிராயதங்கள் எல்லாம் நடக்குமா? இல்லை பெண்ணுக்கு மட்டும் தானா? என்ற எண்ணமும் வந்து போனது அவளுக்கு.​

தலையில் சுற்றிய துண்டுடன், பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு மலர்கள் கொண்டு அலங்கரித்து முடித்தவள் மனமுருகி இறைவனைப் பிரார்த்தனை செய்துவிட்டு, தான் அணிந்திருந்த சின்ன செயின், ஜோடி காதணி, வளையல் , கொலுசு என அனைத்தையும் கழட்டி வைத்தாள்.​

அவள் இதைச் செய்து முடிப்பதற்கும் அவள் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
கதவை வேலையாள் ஒருவன் திறந்துவிட முகம் கொள்ளாப் புன்னகையுடன், கை நிறைய பைகளுடன் இறங்கினார் வடிவாம்பாள் குழலியின் வருங்கால மாமியார்.​

சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தவள் கதவோரம் நின்றபடி "வாங்க அத்தை" என்றாள் தயக்கமாக. "இராசாத்தி, நீ அத்தைன்னு வாய் நிறைய கூப்பிட்டது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? சரி வா வந்து இதையெல்லாம் வாங்கிக்கோ, எல்லாமே உனக்கு தான்.​

வீட்டை தனி ஒருத்தியா அலங்காரம் பண்றதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டியா மா. மன்னிச்சிடு செல்லம், நான் நினைச்சிருந்தா ஆள் விட்டு அத்தனையும் பண்ணி இருக்கலாம். ஆனா சடங்கு சம்பிரதாயம் என்று இருக்கு இல்ல.​

இதையெல்லாம் பொண்ணு வீட்டோட அப்பா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பான்னு எல்லோரும் இழுத்துப் போட்டு செய்யணும். நமக்குத் தான் அதுக்குக் கொடுத்து வைக்கலையே. அதனால தான் உன்னையே எல்லாம் பண்ணச் சொன்னோம். நீ உன் வாழ்க்கையில் பண்ணின கடைசி வேலை இதுதான் மா.​

நீ நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் சின்ன வேலை கூட செய்ய வேண்டாம். உன்னை ஒருவார்த்தை கூட கடினமா பேசக்கூடாதுன்னு உன் மாமன், அதான் என் புள்ள எங்க எல்லாருக்கும் உத்தரவு போட்டு இருக்கான். அவனுக்கு உன் மேல அவ்வளவு இஷ்டம். கல்யாணம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவன் உன் போட்டோவைக் காட்டினதும் உடனே சரின்னு சொல்லிட்டான்.​

நீ கட்டி இருக்கியே இந்தப் புடவை, இதை உனக்காக அவனே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான். நான் கூட இந்தக் காலத்துப் புள்ளை அடிக்கிற கலரு பிடிக்குதோ என்னவோன்னு நினைச்சேன். இதைக் கட்டிக்கிட்டதுக்கு அப்புறம் நீ எப்படி இருக்க தெரியுமா? அலங்காரத்துக்கு தயாரா இருக்கிற அம்மன் சிலை மாதிரி அம்சமா இருக்க. உன் மாமன் தேர்வு எதுவுமே தப்பானது இல்ல. இதோ இது அத்தனையும் உனக்காக உன் மாமன் வாங்கின நகைங்க. நீ போட்டு இருந்த சின்ன சின்ன நகை எல்லாத்தையும் கழட்டி வைச்சிட்ட தானே.​

இதையெல்லாம் போட்டு அலங்காரம் பண்ணி, முழுக்க முழுக்க உன்னை எங்க வீட்டுப் பொண்ணா குலதெய்வக் கோவிலுக்கு கூட்டிக்கிட்டு வரச்சொல்லி இருக்கான். நீ வாம்மா வந்து உட்காரு. உன்னை அழகு படுத்தவே எங்கேயோ போய் யாரையோ கூட்டிட்டு வந்து இருக்கான்" மூச்சுவாங்க நீளமாகப் பேசி முடித்து, ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைத்தார் வடிவு.​

“இனி இது தானா தன் வாழ்க்கை. இவர்கள் பேசிக் கொண்டே இருக்க, தான் கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டுமா?“ என்ற நினைப்பில் ஏற்கனவே வாடியிருந்த குழலியின் முகம் இன்னும் வாடிப் போனது.​

கீ கொடுத்த பொம்மை போல் தன்னால் கண்ணாடியை நோக்கி நடந்தவள், என்னவும் செய்து கொள்ளுங்கள் என்று அடுத்த ஒருமணி நேரம் சிலை போல் அமர்ந்துவிட்டாள்.
அவள் முக அமைப்பிற்கு ஏற்ப சிகை அலங்காரம் முடித்து, பூச்சூடி, நகைகள் அனைத்தையும் அணிவித்து முடித்து மணப்பெண்ணாக வெளியே அழைத்து வந்தார் ஒப்பனையாளர்.​

"ஐயோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கே. என் மருமக, என் இராசாத்தி, மகாலட்சுமி மாதிரி இருக்காளே" முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவள் நாடி தடவி முத்தமிட்ட வடிவு, தன் கையாலே திருஷ்டியும் கழித்து விட்டார். அவர் வைக்கும் ஓவர் ஐஸில் தனக்கு சளிப்பிடிக்காமல் இருந்தால் சரி என்று நினைத்துக்கொண்டாள் குழலி.​

நகைக்கடை விளம்பரத்திற்காக தயாராகி நிற்பது போல் அசௌகர்யமாக உணர்ந்தவளுக்கு, புடவை, நகை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அது தன்னை விட கனமாக இருக்கும் போன்ற எண்ணம் வந்தது.​

"இராசாத்தி குழலி, நேரமாகிடுச்சி வா. குலதெய்வக் கோவிலுக்கு போகலாம்" வடிவு அழைக்க, "அத்தை" என்றாள் இவள் காற்றினும் மெல்லிய குரலால்.​

"என்னடி இராசாத்தி" அன்பு பொங்கி வழிந்தது அவர் குரலில். அது மெய்யோ பொய்யோ அவர் மட்டுமே அறிவார். குழலிக்கு அந்த தேனொழுகும் வார்த்தைகளில் இலயிக்க முடியவில்லை ஒருவித ஒட்டாத் தன்மையோடு தான் நடந்து கொண்டாள்.​

"அத்தை இந்த வீட்டில் இருந்து நான் ஒரு குண்டுமணி கூட கொண்டு வரக்கூடாதுன்னு உறுதியா சொல்லிட்டீங்க. என் அப்பாவோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்னே ஒன்னை தேடி எடுத்து வைச்சிருக்கேன். அதை மட்டும் என்கூட எடுத்துட்டு வரட்டுமா" விட்டாள் அழுது விடுபவள் போலக் கேட்டாள் குழலி. இதைக் கூட அவர்களின் அனுமதியோடு செய்யும் தன் நிலையை நினைத்து வந்த சுயபச்சாதாபம் தான் அவளின் அந்த அழுகைக்குக் காரணம். மழைவெள்ளத்தால் தனித்துவிடப்பட்ட தீவு போன்ற இடத்தில், காக்கை, கழுகு கூட இல்லாமல் ஒற்றையாய் நிற்பது போல் எண்ணம் வர தனித்துவிட்டுச் சென்ற தந்தை மேல் கோபம் வந்தது அவளுக்கு.​

"அட என்னம்மா நீ, இனி அந்த வீடே உனக்குத் தான். அதில் உன் அப்பா போட்டோவுக்கு இடம் இருக்காதா என்ன. நீ போய் சம்பந்தி ஐயாவோட போட்டோகிட்ட நின்னு ஆசிர்வாதம் வாங்கிட்டு வா நாம கிளம்பலாம்" என்றார் வடிவு. அப்போது கூட அவள் கேட்டதற்கு சம்மதம் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.​

ஓட்டமும் நடையுமாய் பாத கொலுசுகள் ஒரு ஊரையே அழைக்கும் வண்ணம் சப்தமெழுப்ப, அறைக்குள் ஓடிச் சென்ற குழலி அவளுடைய அப்பா போட்டோவின் அருகே நின்றாள்.​

"அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்குக் கல்யாணம். எனக்குப் புருஷனா வரப் போகிறவரை நான் இது வரைக்கும் ஒருமுறை கூட பார்த்தது இல்லை. அவ்வளவு ஏன் அவனோட பேரு என்னன்னு கூட எனக்குத் தெரியாது.​

அவரு எப்படிப்பட்டவரு நல்லவரா, கெட்டவரா என்னை நல்லாப் பார்த்துப்பாரா? என்னோட எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பாரா? இப்படி நிறையக் கேள்விகள் எனக்குள்ள இருக்கு. இதுக்கான பதிலை யார்கிட்ட கேட்கிறதுன்னு எனக்குத் தெரியல.​

எல்லாத்துக்கும் சிகரம் வைச்ச மாதிரி அவர் பதிநான்கு வருஷமா ஜெயிலில் இருக்காராம். அவர் எதுக்காக ஜெயிலுக்குப் போனாருன்னு கூட எனக்கு யாரும் சொல்லல. பதினாலு வருஷம் என்றால் இப்ப அவருக்கு எத்தனை வயசு இருக்கும், அதுவும் எனக்குத் தெரியாது. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு. எனக்குத் துணையா அந்த வீட்டில் யார் இருப்பாங்கன்னு தெரியாது. ஆனா நீங்க எப்பவும் என்கூடவே இருப்பீங்க என்ற நம்பிக்கையில் தான், நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்.​

அவர் எப்படி இருந்தாலும் சரி இந்த ஜென்மத்தில் அவரு மட்டும் தான் எனக்குப் புருஷன். என்னோட இந்தக் கல்யாண வாழ்க்கை எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலன்னா கூட பரவாயில்லை. ஆனா என்கிட்ட கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்க நிம்மதியைப் பறிச்சிடக் கூடாது. அதுக்கு நீங்க தான் துணையா இருக்கணும்" வேண்டிக்கொண்டவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.​

வடிவு சந்தோஷத்துடன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அவள் காரில் ஏறியதும், "டேய் கதவை நல்லா இழுத்து சாத்திட்டு வாங்க டா. இனி என் மருமக எப்ப இந்த வீட்டுக்கு வரப்போராளோ. ஆள் வைச்சு அப்பப்ப சுத்தம் பண்ணிடுங்க. பக்கத்து வீட்டில் உள்ள எல்லோரையும் வேனில் ஏத்திக்கிட்டு கோவிலுக்கு சீக்கிரம் வந்து சேருங்க" வேலையாட்களுக்குத் தேவையான கட்டளைகள் அனைத்தையும் சொல்லி முடித்த வடிவு, சந்தோஷமாகத் தன் வருங்கால மருமகள் அருகே ஏறிக்கொண்டார்.​

வனவாசம் செல்லும் முன்னர், வாழ்ந்த வீட்டை ஒருமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்த குழலிக்கு, தன் அருகே கண்ணாடி மொத்தத்தையும் அடைத்தபடி பூதம் போல் அமர்ந்திருந்த வருங்கால மாமியாரைப் பார்த்ததும் என்னவோ போல் ஆகிவிட்டது.​

நிதானமான வேகத்தில் வந்த கார் பத்தாவது நிமிஷத்திலே, வடிவு வீட்டினரின் குலதெய்வக் கோவிலை அடைந்தது. ஒட்டு மொத்தமாக அந்தச் சின்னஞ்சிறு ஊரே அங்கு தான் திரண்டிருந்தது. தன் மகனைப் பற்றி தெரிந்த யாரும் எதுவும் குழலியிடம் சொல்லி விடுவார்களோ என்னும் பயத்தில் குழலியை வேறு பக்கமாக கருவறை அருகே அழைத்து வந்தார் வடிவு. அங்கே அவ்வளவு சீக்கிரத்தில் வேறு எவரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் இந்த யோசனை.​

திருமணம் முடிந்த பின்பு யார் என்ன பேசினாலும், அதைக் குழலி கேட்டாலும் பிரச்சனை இல்லை என்பதைப் போல் இருந்தது அவருடைய மனது. அவர்களின் குலதெய்வம் இசக்கி அம்மன் கருவறைக்கு முன்னால் உள்ள சந்நிதானத்தில் ஒரு வீல்சேரில் அமரவைக்கப்பட்டிருந்தார் வடிவாம்பாளின் கணவர் அருணாச்சலம்.​

"இராசாத்தி போய் மாமா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ மா" வடிவு சொல்லவும், கடமைக்கு என்று அவர் காலில் விழாமல் அவரை தன்னுடைய தந்தையாக நினைத்து முழு மனதுடன் அவருடைய பாதம் பணிந்தாள் குழலி.​

அந்த ஒரு கணத்திலே அவருடைய மனம் நிறைந்துவிட்டது. தன் மகனை அவள் நல்லபடியாக பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது அவருக்குள். அவளைத் தன் மகன் நல்லபடியாக பார்த்துக் கொள்வானா என்பதை அந்த நொடியில் நினைக்க மறந்துவிட்டார்.​

"அம்மாடி இந்தா மா இந்த மாலையை உன் கழுத்தில் போட்டுக்கோ" ரோஜா மாலையை வடிவு தன் கையில் கொடுக்கவும் குழம்பினாள். "மாப்பிள்ளை வந்து தானே இதையெல்லாம் செய்யணும். அவர் ஏன் இன்னும் இங்கு வரல" மலை போல் குழப்பம் இருந்தாலும் மறுக்காமல் மாலையைத் தன் கழுத்தில் தானே போட்டுக்கொண்டாள்.​

"செல்லம்மா, கண்ணை மூடி இந்தக் கல்யாணம் காலம் முழுக்க நிலைக்கணும். நீயும் உன் புருஷனும் நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும். நிறையக் குழந்தைங்க பெத்து வம்சம் வளரணும், என்று மனமுருகி அம்மனை வேண்டிக்கோ. கேட்ட வரம் கொடுப்பா இந்த இசக்கி" வடிவு எடுத்துச் சொல்லவும், கண்ணை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக நின்றாள் குழலி​

திடீரெனத் தன் மீது பூமழை விழுவது போலத் தோன்ற கண்விழித்துப் பார்த்தவளுக்கு தன்னுடைய குவிந்த கரங்களின் மேல் இருந்த, மஞ்சளில் முக்குளித்திருந்த பொன்தாலி தான் முதலாவதாகத் தெரிந்தது. அதிர்ச்சியுடன் தன் அருகே திரும்பிப் பார்க்க, அங்கே இருந்த காலி இடம் இன்னும் அதிர்வைக் கொடுத்தது.​

நெஞ்சில் இருந்த தாலியைக் கையில் பிடித்துக் கொண்டு, சுற்றி முற்றி பார்க்க மணமகன் என்று சொல்லும் அளவிற்கு யாருமே இல்லை. மாறாக வடிவு, அருணாச்சலம் இன்னும் சிலர் மட்டும் சிரித்த முகத்துடன் நின்றிருந்தனர்.​

"என்னம்மா என்னாச்சு சுத்தி சுத்தி பார்க்கிற. உன் மாமனைத் தேடுறியா? கல்யாணத்துக்கு வந்ததில் யாரோ எதுவோ சொல்லி இருப்பாங்க போல. அதனால கொஞ்சம் கோவப்பட்டு தாலி கட்டியதும் வீட்டுக்குப் போயிட்டான்.
அதுக்காக நீ ஒன்னும் வருத்தப்படாதே நான் சொல்லி வைக்கிறேன்.​

உன்கிட்ட எதுக்காகவும் அவன் கோபப்பட மாட்டான், அவ்வளவு ஆசை வைச்சிருக்கான் உன் மேல" வடிவு இப்படிச் சொல்லவும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது குழலிக்கு.​

திருமணப் பேச்சு வார்த்தை ஆரம்பித்ததில் இருந்து இதே அர்த்தம் தரும் வாக்கியங்களை பலமுறை கேட்டுவிட்டாள் குழலி. அத்தனையும் வடிவாம்பாளிடம் இருந்து வந்ததே தவிர, வரவேண்டிய இடத்தில் இருந்து, வார்த்தைகள் என்ன, எழுத்துக்கள் கூட வரவில்லை.​

தன் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த வடிவிடம், "நான் அவரைப் பார்க்கவே இல்லையே அத்தை" என்றாள் குழலி. இதைச் சொல்லும் போது குரலும் தளுதளுத்துப் போனது பெண்ணிற்கு.​

 

ஆட்டம் 2​

மருமகள் சொன்னதைக் கேட்டு முதலில் சிரிப்பு தான் வந்தது வடிவாம்பாளுக்கு. "பார்க்கவே இல்லன்னு சொன்ன எப்படி மா? தாலி கட்டும் போது உன் பக்கத்தில் தானே நின்னான்" அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டார் வடிவு.​

தான், கண் மூடி இறைவனை வணங்கிக் கொண்டிருந்த நேரத்தை சாதகமாக்கி தாலியைக் கட்டிவிட்டு, கண் திறக்கும் நேரம் காற்றோடு கரைந்துவிட்டானே தன் கணவன். இது எதேச்சையா இல்லை திட்டமிடலா, செல்வியில் இருந்து திருமதியான முதல் நாளே மலைத்துப் போனாள் குழலி.​

இன்னமும் தன் அத்தை தன் பதிலுக்கு காத்திருப்பதைக் கவனித்து, "நா... நான் சாமி கும்பிட்டுட்டு இருந்தேன், அவரைப் பார்க்கல" இயலாமையுடன் வந்தது அவள் குரல்.​

"சரி சரி ஆயுசுக்கும் அவன் முகத்தைத் தானே பார்க்கப் போற அப்புறம் என்ன. வா, நாம முதலில் வீட்டுக்குப் போகலாம். அவனுக்கு கோவம் குறைஞ்சதும் தானா வீட்டுக்கு வந்திடுவான்" இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல் தான் நடந்து கொண்டார் வடிவு. அவர் குரலில் கொஞ்சல் குறைந்து சற்றே கடினம் ஏறியது போல் தோன்றியது குழலிக்கு. அது தான் நிஜமா இல்லை படு குழப்பமான மனநிலையில் தாலி ஏறி, முற்றும் புதிதான ஒரு சூழ்நிலைக்கு வாழச் செல்லும் பயமா, என்பதைச் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை அவளால்.​

"இதுதான் உங்க ஊரில் கல்யாணமா" என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு. இருப்பினும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு மாமியாரின் பின்னே நடந்தாள். அரை மணி நேரப் பயணத்தில் அந்த காலம் தொட்டு இந்தக் காலம் வரை திகில் படம் எடுப்பதற்கென்றே ஊர் உலகத்தில் கட்டி வைத்திருக்கும் பெரிய பெரிய வீடுகளைப் போன்ற ஒரு வீடு புகுந்த வீடு என்ற பெயரில் குழலியை தன்னுள் வரவேற்கக் காத்திருந்தது.​

அந்த வீட்டை தன் அப்பாவுடன் வரும் போது எத்தனையோ முறை பார்த்து இருக்கிறாள். வீட்டின் தோட்டம் வரை வந்தும் இருக்கிறாள். உள்ளே வாம்மா வடிவம்மா தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று தந்தை சொல்லும் போதெல்லாம், இந்தப் பேய் பங்களாவிற்குள் தன்னால் வர முடியாது என்று மறுத்து தனக்கான இலட்சுமண ரேகை பரந்து விரிந்த அந்தத் தோட்டம் தான் என்று அங்கேயே நின்று விடுவாள். எந்த வீட்டைப் பார்த்து, இத்தனை ஆண்டுகளாய் பயந்து நடுங்கினாளோ இனி அது தான் அவளுக்கான நிரந்தர இல்லம் என்றானதில், சற்றே வித்தியாசயாகவும், பயமாகவும் உணர்ந்தாள் பெண்.​

வடிவு ஆரத்தி தட்டுடன் வர, "எங்க அத்தைக்கு நான் தான் ஆரத்தி எடுப்பேன்" என்றபடி ஓடி வந்தாள் பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுபெண் ஒருத்தி. "வாடிம்மா மகாராணி, நீயே உங்க அத்தைக்கு ஆரத்தி எடு வா" என்றபடி வழிவிட்டு ஒதுங்கினார் வடிவு.​

ஆரத்தி எடுத்து முடித்ததும், "அத்தை என் பேரு பூங்கோதை. இந்த வீட்டில் யார் உங்களைக் கொடுமைப் படுத்தினாலும் என்கிட்ட சொல்லுங்க. நான் அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்" பெரிய மனிதியாட்டம் பேசிய சிறுபெண்ணைப் பார்த்ததும் பிடித்துப் போனது குழலிக்கு.​

அதே சமயத்தில், "இவ்வளவு பெரிய பொண்ணு அவரை மாமான்னு சொல்லுது அப்படின்னா" தனக்குள் இருக்கும் ஐயத்தை இன்னும் கொஞ்சம் கிண்டிவிட்டுக் கொள்ளவும் தவறவில்லை அவள்.​

"இவ உன் மாமனாரோட தம்பி பேத்தி மா. இந்த வீட்டிலே தான் வளர்ந்தா. உன் மாமனுக்கு இவ என்றால் கொள்ளை இஷ்டம். வயசு கொஞ்சம் கூடுதலா இருந்திருந்தா இவளைத் தான் அவனுக்கு கட்டி வைச்சிருப்போம்" வடிவு தன்போக்கில் சொல்ல, "போங்க பாட்டி" என்று அழகாக வெட்கப்பட்டாள் பூங்கோதை.​

"பாட்டி என்ற அவளுடைய அழைப்பில் இதுவரை உள்ளுக்குள் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகம் வலுப்பெற்றது குழலிக்கு. தனக்கு கணவராக வாய்த்திருப்பவர் நிச்சயம் வயது அதிகமானவராகத் தான் இருப்பார். அதனால் முடிந்தவரை மனதைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும். அவரைப் பார்க்கும் போது, வேறான எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டி அவரைச் சங்கடப்படுத்திவிடக் கூடாது" என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.​

இருபது வயது முழுதாக முடியாத இளம்பெண் அவள். படிக்க வேண்டிய வயது, எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண வேண்டிய வயதில் திருமணத்தைப் பற்றியும் அவளுடைய கணவனான வந்தவனைப் பற்றியும் அவளை யோசிக்க வைத்தவர்களை என்ன செய்ய.​

சாதாரணப் பெண்களைப் போல திருமணத்தைக் குறித்தும், வருங்காலக் கணவனைக் குறித்தும் அவளுக்கும் ஆயிரம் கனவுகள் இருந்தது தான். அவையெல்லாம் வெறும் கனவுகள் தான், நிதர்சனம் வேறடி அசட்டுப் பெண்ணே என்று விதி முதுகில் அடித்து சுயநினைவுக்கு கொண்டு வந்தது அவளை.​

பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி, "கடவுளே, யாருக்கு யாருன்னு நீதான் முடிவு பண்ற. அப்படி எனக்குன்னு நீ கொடுத்த இந்த வாழ்க்கையை, நான் என்னோட முழு மனசோட ஏத்துக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நீயும் அதுக்குத் துணையா இருக்கணும்" என்று வேண்டிக்கொண்டு புகுந்த மனையில் பால்காய்ச்சினாள் குழலி.​

ஜோடியாக நிற்கவைத்து நடக்க வேண்டிய சடங்குகள் அனைத்தும் இவளுக்கு மட்டும் நடந்தது. காலை மதியம் உணவு கூட தனியாகத் தான் உண்டாள். இந்த நன்நாளில் தன்னைத் தனியே விட்டுட்டு எங்கு சென்றார். அவ்வளவு தூரம் கோபக்காரரா? தன்னிடமும் கோபத்தைக் காட்டுவாரா? ரேடியோ அலைவரிசை போல எதையாவது பேசிக்கொண்டே இருந்த மாமியார் அமைதியாகும் சில கணங்களில் இப்படிக் கண்டதையும் யோசித்துப் பார்த்து மருகினாள் பெண்.​

மதிய உணவு முடிந்த பிறகு வடிவு, அருணாச்சலம், பூங்கோதை மூவரும் சேர்ந்து அவர்களுடைய குடும்பத்தின் முன்னாள் தலைமுறையினரைப் பற்றி கதை கதையாய் சொல்லிக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் குழலி. பேச்சுவாக்கில் இது தான் உன்னுடைய கணவரின் பெயர், அவர் இந்தக் குற்றத்தை செய்துவிட்டு தான் ஜெயிலில் இத்தனை ஆண்டுகளாய் இருக்கிறார். அவருக்கு இத்தனை வயது தான் ஆகிறது, என்று தனக்குத் தேவையான ஏதாவது ஒரு தகவல் கிடைக்குமா என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தவளுக்குக் கிடைத்தது என்னமோ ஏமாற்றம் மட்டுமே.​

என்ன ஆனாலும் வாய்தவறி கூட உன் கணவன் பெயரைச் சொல்ல மாட்டோம் என்று உறுதியாய் அவர்கள் இருப்பது போல் தோன்றியது குழலிக்கு. எதேச்சை போல் அனைவரும் காட்டிக்கொண்டாலும், தன்னைச் சுற்றி எல்லாமே ஏதோ திட்டமிட்ட செயலாகவே நடப்பது போல் தோன்ற தவித்து தான் போனாள் பேதை. வேலையாட்கள் வேறு அவ்வப்போது இவளைப் பார்த்துக்கொண்டே முணுமுணுப்பதும், இவள் பார்க்கும் போது நடிப்பதும் அடிக்கடி நடக்க என்னவோ ஏதோ என்று பயம் வேறு வந்து தொலைத்தது.​

ஒருவழியாக மனம் இறங்கினார் வடிவு. அவள் கணவனின் பெயரைச் சொல்வதற்கு அல்ல, அவளை ஓய்வெடுக்க அனுப்ப. பூங்கோதை தான் குழலியை இனி அவள் வாழ இருக்கும் அறைக்கு அழைத்து வந்தாள்.​

"அத்தை அந்தக் கபோர்டில் உங்களுக்கு தேவையான சாரீஸ் இருக்கு. பாட்டி எல்லாத்தையும் சொல்லி இருப்பாங்க இருந்தாலும் நான் ஒருமுறை சொல்லிடுறேன். இங்க எப்பவும் சாரி தான் கட்டணும்" பெரிய மனுஷியைப் போல் சொன்னவளைப் பார்த்து விரக்தியாய் சிரித்துக் கொண்டாள் குழலி.​

பகல் நேரத்தில் குளித்துவிட்டு இரவு உடையில் வந்ததற்காக தன் தந்தை கண்டித்ததும், அதற்கு சென்னையில் பழக்கமாகிவிட்டது, மாற்றிக்கொள்ள முடியவில்லை என அவள் சட்டம் பேசியதும் நினைவில் வந்து போனது. அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தன் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுபெண்ணிடம் புரிந்தது எனத் தலையாட்டிய குழலி அமைதியாய் மெத்தையில் அமர்ந்தாள்.​

"நீங்க ரெஸ்ட் எடுங்க அத்தை, நான் அப்புறம் வரேன்" என்றுவிட்டு அவள் சென்றது தான் தாமதம் அறையைத் தாளிட்ட குழலி வேகவேகமாக அங்கிருந்த கபோர்டைத் திறந்து ஆராய்ந்தாள். அவளுக்காக வாங்கி வைத்திருந்த புது உடைகளோடு, சில ஜோடி வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி மட்டும் புதிதாக இருக்க அவளுக்கு மனம் சோர்ந்து போனது.​

"குழலி இப்ப ஏன் உன் புருஷனோட வயசைப் பத்தி யோசிக்கிற. பதினாலு வருஷமா அவர் ஜெயிலில் இருக்காரு, கல்யாணத்துக்கே பரோலில் தான் வந்திருக்காருன்னு தெரிஞ்சி தானே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட, அப்புறம் என்ன. அவரு உன்னைக் கடுமையா நடத்தாம இருக்கணும், உனக்கு உண்மையா இருக்கணும், உன் விருப்பங்களுக்கும், கருத்துக்கும் மதிப்புக் கொடுத்து நடந்துக்கணும் என்று மட்டும் நினை" அறிவுறுத்தியது அவளுடைய மனசாட்சி.​

எவ்வளவு தான் கட்டுப்பாடு போட்டாலும் ஒரு இருபது வயதுப் பெண்ணுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எத்தனை கனவுகள் இருக்கும். அனைத்தும் கண்முன்னே உடைந்து போகும் போது அதை யாரால் தான் தாங்கிக்கொள்ள முடியும்.​

"குழலிம்மா, நான் ஒரு நல்ல அப்பாவா உனக்கு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணி இருக்கேன். உனக்குச் சுதந்திரமா முடிவெடுக்க கத்துக் கொடுத்திருக்கேன். உனக்கு விருப்பமான படிப்பை, நீ விரும்பிய காலேஜிலே படிக்க வைச்சிருக்கேன். உனக்காக என் இஷ்டப்படி நான் எதுவுமே பண்ணது இல்ல. இப்ப முதலும் கடைசியுமா உன்னோட வாழ்க்கையில் ஒரு முடிவை நான் எடுக்கலாம் என்று நினைக்கிறேன். உனக்கு சம்மதமா மா" ஆக்சிடென்ட் ஆகி கிட்டத்தட்ட மரணிக்கும் நிலையில் இருக்கும் ஒரு தந்தை தன் மகளைப் பார்த்து இப்படிக் கேட்டால் எந்தப் பெண் தான் அதை நிராகரிப்பாள்.​

"நீங்க என்ன சொன்னாலும் அதை மறுத்துப் பேசாம நான் கேட்டுக்கிறேன். ஆனா நீங்க எனக்கு வேணும், நீங்களும் என்னை விட்டுட்டு போயிட்டா நான் அனாதையா ஆகிடுவேன்" தன் தந்தையின் கையை எடுத்து தன் நெற்றியில் வைத்து அழுதாள் குழலி.​

"இப்ப மட்டும இல்ல, எப்பவும் நீ தனியாளா ஆகிடக்கூடாதுன்னு தான் உனக்கான துணையை அப்பா தேர்ந்தெடுத்திருக்கேன். உனக்குத் தெரியாதது இல்ல, உனக்கு இந்தக் கிராமம் தான் பாதுகாப்பு. இருந்தாலும் நீ அடம்பிடிச்ச ஒரே காரணத்துக்காகத் தான், நான் உன்னைச் சென்னைக்கு அனுப்பிப் படிக்க வைச்சேன். அதோட பிரதிபலிப்பு தான் இது“ தன்னுடை சாவுக் கோலத்தைக் காட்டியவர் தொடர்ந்தார்.​

“அப்பா சொல்றதைக் கேளு. இனி நீ எப்பவும் இந்தக் கிராமத்தில் தான் இருக்கணும். அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து இருக்கேன். நாளைப் பின்னே, உனக்காக உன் நிழல் கூட நிற்காமப் போகலாம், ஆனால் அவர் உன் கூடவே இருப்பார், உன்னை நல்லாப் பார்த்துப்பார்.​

அவரைப் பத்தி ஆயிரம் பேரு ஆயிரம் விதமா பேசலாம், ஆனா உன்னைப் பெத்த அப்பா நான் சொல்றேன். நீ அவரோட நிழலில் இருந்தா தான் உனக்குப் பாதுகாப்பு. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அவரால மட்டும் தான் கொடுக்க முடியும்" இழுத்து இழுத்து பேசினார் அவர்.​

"உங்க பேச்சைக் கேட்காம ஒருமுறை நான் அடம்பிடிச்சதுக்கே இந்த நிலைமை. இனி எப்பவும் உங்க பேச்சை மீறி நான் நடந்துக்க மாட்டேன் பா. நீங்க சொல்ற அந்த மாப்பிள்ளை யாரா இருந்தாலும், எதைப் பத்தியும் யோசிக்காம நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" தன் தந்தையிடம் இறுதியாய் பேசியதை நினைத்த வண்ணம் மனபாரம் தாங்காமல் அப்படியே உறங்கிப் போனாள் குழலி.​

"அம்மாடி இராசாத்தி, எழுந்திரி டா செல்லம். நேரமாகிடுச்சு பாரு" வடிவு குரல் கேட்க அடித்துப் பிடித்து எழுந்து உட்கார்ந்தாள் குழலி. "என்னாச்சு மா, எதுக்காக இப்படி மிரண்டு போய் பார்க்கிற. நான் தான் உன்னோட அத்தை, பயப்படாதே. சரி போய் முகத்தைக் கழுவிட்டு வந்து இந்தப் புடவையை மாத்திக்கோ" என்று தன் கையில் இருந்த ஒரு தாம்பூலத்தட்டை அவள் கையில் கொடுத்தார் குழலி.​

அந்தப் புடவை, அதோடு இருந்த எளிமையான ஆபரணங்கள் மல்லிகைப்பூ. காரணம் புரிய குழலியின் கரங்கள் நடுங்கியது. "இதோ வந்திடுறேன் அத்தை" என்று கையில் அகப்பட்ட அந்த புடவையை எடுத்துக்கொண்டு பாத்ருமிற்குள் நுழைந்தாள் குழலி.​

"ஏம்மா மேக்கப் போடுற பொண்ணு, என் மருமகளை தேவதை மாதிரி அலங்காரம் பண்ணு. பார்த்ததும் என் பையனுக்கு ரொம்பப் புடிச்சிப் போயிடணும்" வடிவு சொல்வது பாத்ரூமிற்குள் இருந்த குழலியின் காதுகளில் நன்றாகவே விழுந்தது. ஐயோ என்றானது அவளுக்கு.​

இருந்தாலும், ஆனது ஆகிவிட்டது இதற்கு மேல் கலங்கி எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று நினைத்தவள் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாரு வடிவு கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு வந்தாள். கணவனைப் பார்க்கப் போகிறோம் என்ற மெல்லிய படபடப்பு அவளுள் இருந்து கொண்டே இருந்தது.​

அடுத்த அரைமணி நேரத்தில் எளிமையான அலங்காரத்துடன் குழலியைத் தயாராக்கி விட்டிருந்தாள் அந்த பியூட்டிஸியன். அவளை வெளியே அனுப்பிவிட்ட வடிவு குழலியின் அருகே அமர்ந்துகொண்டு அவள் கரத்தை தன் கரத்திற்குள் வைத்தபடி, "அம்மாடி, நானும் ஒரு பொண்ணு தான். இந்த மாதிரி சூழ்நிலையில் ஒரு பொண்ணோட மனசு எதையெல்லாம் நினைச்சுப் பதறும் என்று எனக்கும் தெரியும். கொஞ்சம் டைம் எடுத்துக்கலாம் என்று தோணும் தான்.​

உனக்குத் தெரியாதது இல்ல, அவன் பரோலில் தான் வந்து இருக்கான். பரோல் முடிஞ்சு அவன் ரொம்ப சீக்கிரமே திரும்பவும் அந்த ஜெயிலுக்குப் போகணும். பதினாலு வருஷ ஜெயில் தண்டனை முடிய இன்னும் ஏழு மாசம் பாக்கி இருக்கு. இந்த பதினாலு வருஷத்தில் அவன் எந்த சுகத்தையும் அனுபவிச்சது இல்லை. எவ்வளவோ ஆசையோட உன்னைக் கல்யாணம் பண்ணி இருக்கான். அவனை நிராசையாக்கிடாத செல்லம். சீக்கிரமே உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கணும், அந்தக் குழந்தை உன்னையும் அவனையும் இணைக்கிற பாலமா இருக்கணும்.​

அவன் ஜெயிலில் இருந்து வர நாள் உன்னோட வளைகாப்பா தான் இருக்கணும். அவன் வாழ்க்கையில் தவறவிட்ட ஒவ்வொரு சந்தோஷத்தையும் நீதான் அவனுக்குத் திரும்பக் கொடுக்கணும். உனக்கு வயசு இருக்கு தான், ஆனா அவனுக்கு வயசாகிட்டே போகுது. இதுக்கு மேல எப்படி தெளிவா சொல்றதுன்னு எனக்குத் தெரியல. புரிஞ்சி நடந்துக்கோ மா" என்று அவளுடைய கையில் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு நகன்றார் வடிவு.​

கடவுளே என்று அருகே இருந்த சுவரில் போய் முட்டிக்கொள்ள வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு. கிராமத்தில் ஒளிவு மறைவு இல்லாமல் பேசிக்கொள்வார்கள் என்று தெரியும் தான். அதற்காக இப்படியா? தன் மகனைக் கட்டிய மருமகளிடம் மாமியார் சொல்லும் வார்த்தைகளா இவை என உள்ளுக்குள் பெரும் போராட்டம் நடத்தினாலும் வெளியே அமைதியாக இருந்தாள்.​

அவள் அமைதியைப் பார்த்து பெருமூச்சு விட்ட வடிவு, “ஏதோ புரிஞ்சு நடந்துக்கிட்டா சந்தோஷம்“ என்றுவிட்டு சென்றுவிட, சிறிது நேரத்தில் அவள் உள்ளே இருக்கும் போதே, சில பெண்கள் வந்து இனிப்பு, பழங்கள் நிறைந்த தட்டுகள், ஊதுபத்தி ஏற்றப்பட்ட ஒரு தட்டு என அனைத்தையும் அங்கிருந்த ஒரு டேபிளில் வைத்துவிட்டு, இன்னும் சில ஏற்பாடுகளையும் செய்து முடித்து, குழலியைப் பார்த்து ஒருமாதிரி சிரித்துவிட்டு வெளியே சென்றனர்.​

சுவரில் மறைந்து காணாமல் போய்விட மாட்டோமா என்று இருந்தது அவளுக்கு. உற்றார் உறவினர் என்று இருக்கும் போதே இப்படியான நிலையைக் கடந்து வர ஒவ்வொரு பெண்ணும் திணறுவாள். அப்படி இருக்க குழலியின் நிலையைக் கேட்கவே தேவையில்லை.​

சில நிமிடத்தில், "அம்மா சின்னய்யா வந்துட்டாரு" என்று வேலையாள் ஒருவரின் குரல் லேசாகத் திறந்திருந்த அறைக்கதவு வழியாக இவள் காதில் விழ, இரயில் வரும் தண்டவாளமாய் குழலியின் இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.​

 

ஆட்டம் 3​

அத்தை வருவார்கள், இல்லையேல் கட்டிய கணவன் வருவான் என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்த குழலி, வடிவு வற்புறுத்திக் கொடுத்துச் சென்ற பழச்சாறை மட்டும் அருந்தினாள். நேரம் போகப் போக தன்னையும் மீறி எப்படியோ தூங்கிப் போனாள்.​

அடுத்த நாள் காலையில், "குழலி எழுந்திரி மா. வீடான வீட்டில் காலையில் இவ்வளவு நேரம் தூங்கினா குடும்பத்துக்கு நல்லது இல்லம்மா" மென்மையிலும் மென்மையாக குழலியை எழுப்பினார் வடிவு.​

குழலியின் காதில் அது விழுந்தது தான், இருந்தாலும் சுகமான கனவென்று அதை நினைத்தவள் புரண்டு படுத்து உறக்கத்தைத் தொடர்ந்தாள்.​

"என்ன இந்தப் பொண்ணு இப்படி பொறுப்பில்லாம இருக்கே" என்ற வடிவாம்பாளின் சத்தம் சற்று உரக்கக் கேட்கவும், நிகழ்காலம் உணர்ந்து அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் குழலி.​

எழுந்த முதல் கணம் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, கலையாத அறையின் அலங்காரம் நடப்பை இல்லை நடக்க இருந்ததை உணர்த்த, தன்னை நினைத்தே அவமானமாக உணர்ந்தாள் அவள். அப்படி என்ன உறக்கம் வேண்டி கிடக்கிறது என மானசீகமாக தலையில் தட்டிக்கொண்டாள்.​

"மன்னிச்சிடுங்க அத்தை, இராத்திரி எப்படித் துங்கினேன்னு எனக்கே தெரியல" இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கிறதே என்ற தவிப்புடன் தான் சொன்னாள்.​

"பரவாயில்லை விடும்மா, நேத்து உன் வீட்டு வேலை முழுவதையும் ஒத்தை ஆளா நீயே எடுத்து செஞ்ச இல்லையா? அந்த அலுப்பா இருக்கும். நீ போய் குளிச்சிட்டு கீழ வா" என்றுவிட்டு வடிவு சென்றுவிட, எழுந்திரிக்க நினைத்த குழலிக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.​

நேரத்தைப் பார்க்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பது புரிந்தது. தந்தை இறந்த பிறகு இப்படியான ஆழ்ந்த உறக்கம் அவளுக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை. என்ன தான் வேலை செய்த அலுப்பாக இருந்தாலும் எட்டு மணிநேரம் உறக்கம் போதாமல் இப்பொழுதும் சோர்வாக இருக்குமா என்ன? யோசித்தபடியே சுற்றிமுற்றி பார்க்க, தற்செயலாய் அதைக் கவனித்திருந்தாள் குழலி.​

நேற்று இரவு வைக்கப்பட்டிருந்த, சின்னச் செம்பில் இருந்த பால் காலியாகி இருந்தது. பழங்கள் மற்றும் இனிப்பும் சிறிதளவு காணாமல் போய் இருந்தது. "கடவுளே நேத்து நைட் அவரு இங்க என்னைப் பார்த்துட்டு என்ன நினைச்சிருப்பாரு. ஒருவேளை எழுப்பி இருப்பாரோ" சங்கடப்பட்டவாறு எழுந்திரிக்க முயற்சித்தவள், தனக்கு கீழே மெத்தையில் கிடந்த சட்டையைக் கவனித்தாள்.​

"ச்சே ஒருத்தர் வந்து பக்கத்தில் படுத்துத் தூங்கினது கூடத் தெரியாம அப்படி என்ன மடத்தனமான தூக்கம் எனக்கு" தன்னைத் தானே திட்டிக்கொள்ளத் தான் தோன்றியதே தவிர புகுந்த வீட்டினரை சந்தேகப்படத் தோன்றவில்லை பேதைப் பெண்ணிற்கு. அது தூக்கமா இல்லை மயக்கமா என்பதை யோசித்திருந்தால், அதற்குப் பிறகேனும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்திருப்பாளோ என்னவோ.​

குளித்து முடித்து புடவைக்காக கபோர்டைத் திறந்தவளுக்கு அடர் நிறப் புடவைகள் கண்ணைப் பறித்தது. அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி ஈரத்துணி கொண்டு துடைத்தது போல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.​

பெருமூச்சுவிட்டு, கைக்கு சிக்கிய புடவையை எடுத்து அணிந்தவள், பனியில் நனைந்த புத்தம் புது மலராக அறையை விட்டு வெளியே வந்தாள். அவளுடைய கண்கள் வீடு முழுக்க கணவனைத் தேடியது. பேப்பர் படித்துக்கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, போன் பேசிக்கொண்டு, தந்தையுடன் பேசிக்கொண்டு, டீ குடித்துக்கொண்டு, தோட்டத்து தண்ணீர் விட்டுக்கொண்டு இப்படியான ஏதாவது ஒரு ரூபத்தில் தன்னவன் தனக்கு தரிசனம் தந்துவிட மாட்டானா என்று தேடியது அவள் கயல் நயனங்கள். தேடுதல் ஓய்ந்து துள்ளித் திரிந்த விழிகள் தான் வலியெடுத்ததே தவிர அவள் கணவன் தரிசனம் தரக்காணோம்.​

“என்னடா இது, எந்த வீட்டிலும் நடக்காத அதிசயமாக இருக்கு“ என்ற குழப்பத்துடன் சமையலறைக்குள் வந்தவள் மாமியார் தனியாக காலை உணவு தயார் செய்து கொண்டிருப்பதைக் கண்டு, "அத்தை நான் ஏதாவது சமைக்கட்டுமா" நல்ல மருமகளாக நடந்து கொள்வதாக நினைத்துக் கேட்டாள்.​

திரும்பி தலை முதல் கால் வரை மருமகளைப் பார்த்த வடிவு, "ஏன் மா இந்த வீட்டில் நான் நல்லா இருக்கிறது உனக்குப் புடிக்கலையா. நீ வேலை செய்யுறதை மட்டும் உன் மாமன் பார்த்தான், அவ்வளவு தான் வீட்டையே இரண்டாக்கிடுவான்.​

நேத்து இராத்திரி அவன் ரூமுக்கு வரும் போது நீ தூங்கிட்டு இருந்திருக்க, என்னைக் கூட்டிட்டு போய் காட்டினான்" வடிவு நிறுத்த, வாயில் கை வைத்து அதிர்வுடன் பார்த்தாள் குழலி.​

"குழந்தை மாதிரி தூங்கிக்கிட்டு இருக்கா. இவ்வளவு சின்ன வயசிலே கல்யாணம், முதலிரவு குழந்தைன்னு கண்டதையும் சொல்லி அவளை பயமுறுத்தி வைச்சிருக்கீங்க நீங்க. இனி இந்த வீட்டில் யாரும் அவளைத் தொந்தரவு பண்ணக் கூடாது. அவ இஷ்டத்துக்கு அவளை விட்டுடுங்கன்னு சொன்னான்" தன்மகன் சொன்னதை வடிவு சொல்ல குழலிக்கு பெயர் தெரியாத தன் கணவனின் மீது மரியாதை ஊற்றாய் பொங்கியது. அதே சமயத்தில் தன் கண் முன் வராமல் கணவன் ஏன் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருக்கிறான் என்ற குழப்பமும் வராமலில்லை.​

நடப்பது எல்லாம் எதேச்சையாகத் தான் நடக்கிறதா, இல்லை திட்டம் போட்டு செய்கிறார்களா? ஆனால், என்னை ஏமாற்றுவதால் யாருக்கு என்ன இலாபம் வந்துவிடப் போகிறது என இருவேறு மனநிலையில் இருந்தாள்.​

"அத்தைகிட்ட அவரோட பெயரைக் கேட்கலாமா" என்று நினைத்து, வடிவை அழைக்க வந்தவள், "ச்சே ச்சே கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் புருஷன் பேரு தெரியலன்னு சொன்னா நல்லா இருக்காது. எப்படியும் அவரு இன்னைக்கு வருவாரு இல்ல. நான் அவர்கிட்டையே கேட்டுக்கிறேன்" என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டவள், கட்டிய கணவனை கண்ணாரக் காண்பது அதிசயமான சந்திரகிரகணத்தை நேரில் பார்ப்பது போல் இத்தனை அபூர்வமா என்று நொந்து தான் போனாள்.​

"என்ன அத்தை நீங்க, நேத்து மாமா வரும் போது நீங்க துங்கிட்டீங்களாமே. பாட்டி சொல்லி எப்படி சிரிச்சாங்க தெரியுமா?" கோதை கேட்க குழலிக்கு சட்டென்று கோவம் வந்தது. “சின்னப்பொண்ணு மாதிரி நடந்துக்கோ கோதை“ முகத்தில் அடிப்பது போல் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.​

புடம் போடும் தங்கத்தைப் போல் மனம் நொந்து கொண்டிருந்தது அவளுள். கணவன் மனைவி இருக்கும் அறையில் நடக்கும் எந்த விஷயமும் வெளியே தெரியக் கூடாது. ஆனால் அவர் அவருடைய அம்மாவைக் கூட்டி வந்து காட்டியிருக்கிறார். அத்தையோ நான் தூங்கியதை அனைவரிடமும் சொல்லி சிரித்திருக்கிறார். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. இருப்பினும் இயலாமை வாயை அடைத்தது.​

தான் திட்டியதைப் பொருட்படுத்தாமல், பின்னால் வந்த கோதையைப் பார்த்ததும் மனம் உருகிப்போய், "கோதை நான் ரூமில் இருக்கேன், உன் மாமா வீட்டுக்கு வந்துட்டாருன்னா என்னை வந்து கூப்பிடுறியா" தான் இயல்பாகிவிட்டதை உணர்த்துவதற்காக இப்படிக் கேட்டாள்.​

"மாமாவா, அவரு தான் காலையிலே கிளம்பி வெளியே போயிட்டாரே" கொஞ்சும் கிளியாய் பதில் சொன்னாள் கோதை. "காலையிலேவா, சரி எப்ப வருவாருன்னு ஏதாவது உங்க பாட்டிக்கிட்ட சொல்லும் போது கேட்டியா" தூண்டில் போட்டுப் பார்த்தாள்.​

"ஐயோ, என்ன அத்தை புரியாமப் பேசுறீங்க. மாமாவுக்கு நேத்தோட பரோல் டைம் முடிஞ்சிடுச்சி. அவரு ஜெயிலுக்குப் போயிட்டாரு. இனிமேல் ஏழு மாசம் கழிச்சு ரிலீஸாகி வீட்டுக்கு வந்தா தான் உண்டு" மிகப்பெரிய விஷயத்தை மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டு அங்கிருந்து அவள் சென்றுவிட கேட்டுக்கொண்டிருந்த குழலிக்கு உலகம் உறைந்து நின்று போன உணர்வு.​

ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, அதைவிட அழுகை அதிகமாக வந்தது. ஒரே உறவென்று இருந்த தந்தையையும் இழந்து, இருபது வயதில் திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டிற்கும் வந்துவிட்டாள். ஆனால் அவளுக்கு அவள் கணவன் யாரென்று தெரியாது. அவனுடைய பெயர் கூடத் தெரியாது. எதிரிக்கு கூட வரக்கூடாது என்று நினைக்கும் மோசமான நிலைமை தனக்கு ஏன் வந்தது என்று நினைக்கும் போது அழுகை இன்னும் வலுத்தது. உலகத்தின் ஆகச்சிறந்த கோமாளி தான் எனவும், சுற்றி உள்ள அனைவரும் தன்னைப் பார்த்து சிரிப்பது போலவும் பிரம்மை ஏற்பட அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் தங்கள் இல்லை தனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குள் ஓடிச்சென்று மெத்தையில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.​

"சின்னம்மா அழுதுகிட்டே அவங்க ரூமுக்கு ஓடிப்போறாங்க மா" வேலையாள் ஒருவள் சொல்ல அடித்துப் பிடித்து ஓடினார் வடிவு. அந்த அறையின் கதவு தாளிடாமல் இருந்தது அவருக்கு பாதி நிம்மதியைத் தர, மெத்தையில் படுத்து அழுது கொண்டிருந்த குழலியைப் பார்த்தவண்ணம் அமைதியாய் அவள் அருகில் நெருங்கினார்.​

"குழலிம்மா" வடிவு அழைக்க, "அத்தை" என்று அழைத்தவண்ணம் அவர் மடியில் தலைசாய்த்து இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள் பெண்ணவள். அசோகவனத்தில் இருந்த சீதை, துக்கம் தாளாமல் தன்னைத் துன்புறுத்திய அரக்கிகளிடமே ஆறுதல் பெற்றதைப் போல் இருந்தது அவள் நிலை.​

"என்னாச்சு டா மா, அப்பா ஞாபகம் வந்துடுச்சா" என்றவரின் கேள்விக்கு இல்லை என பதிலளித்தவள், "எனக்கு என்னமோ மாதிரி இருக்கு அத்தை" தாலிகட்டிய கணவனும் அவன் தாயும் சேர்ந்து தன்னை ஏதற்கேனும் ஏமாற்றுகிறார்களோ என்று தன்னுள் முளைத்துவிட்ட பயத்தை சொல்லி ஆறுதல் தேடக்கூட அருகே ஆள் இன்றி, சந்தேகப்பட்ட நபரிடமே இறுதியில் வந்து நிற்கும் படி ஆகிவிட்ட துர்செயலை நினைத்து தேம்பினாள்.​

"என்னமோ மாதிரி இருக்குன்னா, என்னம்மா செய்யுது. உடம்பு எதுவும் சரியில்லையா என்ன?" நெற்றி கழுத்து என தொட்டுப் பார்த்த வடிவிற்கு கூட, எதுவும் சொல்லாமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்த அவள் நிலை வலித்தது.​

"அப்பா செத்து கொஞ்ச நாளிலே நான் உங்க பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டு மருமகளா வந்துட்டேன். ஆனா இப்ப வரைக்கும் எனக்கு அவரோட பேரு என்னன்னு கூடத் தெரியாது. என் கழுத்தில் தாலி ஏறி முழுசா ஒரு நாள் ஆகிடுச்சு, ஆனா இன்னும் என் புருஷன் முகத்தைக் கூட பார்க்கல. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிது.​

அவருக்கு உண்மையிலே என்னைப் புடிச்சிருக்கா. இல்லை என்னைப் பிடிக்காம நீங்க சொன்னதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டாரா. அவரு ஏன் என்கிட்ட சொல்லாம ஜெயிலுக்கு போனாரு. நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா. அதனால் தான் கோவிச்சுக்கிட்டு போயிட்டாரா அத்தை?" தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்த போதிலும், ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று யோசிக்க வைத்திருந்தான் அவள் கணவன். தன் இஷ்டத்திற்குப் பேசியவளை தன்னோடு அணைத்து முதுகை வருடிவிட்டார் வடிவு. அவர் முகத்தில் இனம் பிரித்தறிய முடியாத கவலைகள் கரை தொட்டு விளையாடும் அலைகளைப் போல் வந்து வந்து போனது. சில நொடிகளில் தன்னைச் சமாளித்தவர், தன் பிடியில் ஆறுதலுக்காக சாய்ந்திருக்கும் சின்னவளைச் சமாளிக்கும் பணியையும் செய்தார்.​

"அடி அசடு இதையெல்லாம் நினைச்சு தான், ஏகாதேசி அதுவுமா இப்படி அழுதுகிட்டு இருக்கியா. உனக்குப் பூ மாதிரி மனசு அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படுற. ஆனா உன் மாமனுக்கு அப்படிக் கிடையாது. சரியான பிடிவாதக்காரன், அழுத்தக்காரனும் கூட. அவனுக்கு இரும்பு மனசு, மனசுக்குள்ள தோணுற எதையும் அவ்வளவு சீக்கிரம் வெளியே சொல்லிட மாட்டான்.​

அப்படிப் பட்டவனே உன் போட்டோவைக் காட்டினதும் கட்டினா இந்தப் பொண்ணைத் தான் கட்டுவேன் அதுவும் அடுத்த முகூர்த்தத்திலேன்னு சொன்னான். அவனுக்கா உன் மேல இஷ்டம் இல்லைன்னு நினைக்கிற.​

அதோட அதென்ன உன்கிட்ட சொல்லாமப் போயிட்டான்னு வருத்தப்படுறது. அவன் என்ன போருக்கா போனான் பெருமையா சொல்லி பொண்டாட்டி கையால் வீரத்திலகம் வைச்சுக்கிட்டு போவதற்கு, ஜெயிலுக்குப் போறான். புதுப்பொண்ணு, அதுவும் அவன் ஆசைப்பட்ட பொண்ணு. உங்ககிட்ட எப்படி இப்படி ஒரு விஷயத்தை அவனால் சொல்லிட்டு போக முடியும். அதனால் தான் அப்படியே கிளம்பிட்டான். நேரம் பார்த்து சொல்லலாம் என்று நினைத்தேன், ஆனால் இந்தக் கோதைக் கழுதை வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாம உளறி இருக்கா?“ என்று புலம்பலாக ஆறுதல் சொல்லித் தேற்ற முயற்சித்தார் வடிவு.​

இருந்தாலும் குழலி ஏதோ கேட்க வர, வடிவு முந்திக்கொண்டார். “அப்புறம் என்ன சொன்ன உனக்கு உன் மாமன் பேரு தெரியாதா? தெரியலன்னா என்கிட்ட கேட்க வேண்டியது தானே. அவனுக்கு அவனோட தாத்தா பெயரைத் தான் வைச்சிருக்கோம். அவருன்னா அவனுக்கு ரொம்பப் புடிக்கும். எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் கூட அவர் மேல் ரொம்ப மரியாதை.​

விவரம் தெரிந்த பிறகு, தாத்தாவுக்கு மரியாதைக் குறைச்சலா இருக்குமேன்னு, சொந்த பெயரைச் சொல்லி கூப்பிட அவன் விடல. கண்ணா, தம்பி, ஐயான்னு பொதுப்படையா கூப்பிட ஆரம்பிச்சு அப்படியே பழகிடுச்சு. அதனால் தான் உனக்குத் தெரிஞ்சிருக்காது" என்றார். அழகாய்ச் சமாளிக்கிறாரோ என்று தோன்றினாலும் நம்பித்தொலைத்தாள் குழலி.​

இன்னும் கணவனின் பெயரைச் சொல்லவில்லையே என்று குழலி மாமியாரை ஆழ்ந்து பார்க்க, அவள் எண்ணம் புரிந்தது போல், "உன் மாமன் பெயர் துரை" என்றுவிட்டு அவள் கன்னத்தில் இடித்து, “பெயர் தெரிஞ்சிடுச்சு இல்ல மனசுக்குள்ள நல்லா சொல்லிப் பார்த்துக்கோ, தப்பித் தவறி வெளியே பெயர் வந்திடக் கூடாது.​

அடுத்து அவன் முகத்தைப் பார்க்கலன்னு சொன்ன இல்ல. அதுக்காக என்னை மன்னிச்சிடு மா. அவனோட போட்டோ ஒன்னு கூட இந்த வீட்டில் இல்லை. செல்போனில் போட்டோ எடுத்தா அவனுக்கு ரொம்பக் கோவம் வரும். நேத்துக் கூட நம்ம கோதை அவன் கூட செல்பி எடுக்கிறேன்னு போனதுக்கு புள்ளையைப் பிடிச்சி திட்டி விட்டுருக்கான். ஏனோ அதிலெல்லாம் அவனுக்குப் பிடித்தம் இல்லை.​

அவன் உன் மேல கொள்ளை ஆசை வைச்சிருக்கான் மா. நேத்து அத்தனை ஆசையோட தான் உன்னைப் பார்க்க ரூமுக்கு வந்து இருக்கான். ஆனா நீ தூங்கிட்டு இருந்ததைப் பார்த்ததும் அமைதியா இருந்துட்டான்.​

நீ எதையும் மனசில் போட்டு குழப்பிக்காத. பல்லைக் கடிச்சிக்கிட்டு பொறுத்துக்கோ. இன்னும் ஏழு மாசம் தான். அதுக்குள்ள அவன் வெளியே வந்திடுவான். அப்புறம் என்ன தினம் தினம் கொண்டாட்டம் தான். பெருமைக்கு சொல்லல என் பையன் மாதிரி ஒருத்தன் உனக்குக் கிடைக்கிறதுக்கு நீ ரொம்பக் கொடுத்து வைச்சிருக்கணும்" என்று சொல்லி அழகாய் குழலியை சிரிக்க வைத்திருந்தார் வடிவு.​

"எனக்கு அவரைப் பார்க்கணும் அத்தை. என்னை ஜெயிலுக்கு கூட்டிக்கிட்டு போங்களேன்" என்க, தூக்கி வாறிப் போட்டது அவருக்கு.​

"ஐயோ, கற்பனையில் கூட அப்படியெல்லாம் நினைக்காத மா, அவன் என்னைக் கொன்னு போட்டுடுவான்“ பதறிப்போய் கிட்டத்தட்ட கத்தியவர் குழலி தன்னைக் கவனிப்பது தெரியவும், “அதெல்லாம் வேண்டாம் டா கண்ணு. உன்னை மாதிரி சின்னப் பொண்ணுங்க எல்லாம் அங்க போகக் கூடாது. நீ நம்ம வீட்டிலே இரு, போர் அடிச்சா மாடியில் நிறைய புத்தகங்கள் இருக்கு அதை எடுத்து வைச்சு படி. உன் மாமனை நினைச்சு கனாக் கண்டுக்கிட்டு இரு. நாள் பறந்து போகும், அப்புறம் உன் கனவை எல்லாம் நிறைவேத்த அவனே வந்து சேருவான்" பூசி மொழுகுகிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.​

"இல்லத்த அது வந்து" அவள் ஏதோ சொல்ல வரும் முன், "சொன்னாக் கேட்டுக்கணும் குழலி" சற்றே குரலுயர்த்தவும் சர்வமும் ஒடுங்கிப் போனது அவளுக்கு.​

சற்று நேரம் கழித்து, வேலையாட்கள் யாரும் பார்த்துவிடக் கூடாது என்று பதுங்கிப் பதுங்கி மறைவிடம் சென்ற வடிவு, "ராஜா அவ என்னென்னமோ பேசுறா டா. சின்னப்பொண்ணு சமாளிச்சிடலாம் என்று நினைச்சோம் தானே. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை . முதல் நாளிலே இவ்வளவு கேள்வி கேட்கிறவ இனிமேல் அமைதியா இருப்பான்னு எனக்குத் தோணல.​

திட்டம் போட்டு உன்னை அவ கண்ணிலே காட்டாம வைச்சிட்டோம். ஆனா பாவம் டா பொண்ணு. உன்னைப் பார்க்கணும் என்று புலம்பிக்கிட்டே இருக்கா. என்னால முடிஞ்ச அளவுக்கு அவளைச் சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கேன். எவ்வளவு நாள் தாங்கும் என்று தெரியல.​

ஏற்கனவே நீ ஏன் அவளைப் பார்க்கல, அவகிட்ட பேசல, அவளைக் கொஞ்சலன்னு கேட்டுக்கிட்டு இருக்கா. இந்த இலட்சணத்தில் நீ ஏற்கனவே ரிலீஸ் ஆகிட்ட விஷயம் தெரிஞ்சதுன்னா என்ன ஆகும் என்று யோசிக்க கூட முடியல.​

ஒரு ஏழு மாசம் எப்படியாவது ஓட்டிடலாம். ஆனா அதுக்கு அப்புறம் எப்படி அவளைச் சமாளிக்கிறது" அலைபேசியில் மகனை அழைத்து பேசிக்கொண்டிருந்தார் வடிவு.​

"என்னை ஏன் கேட்கிறீங்க, அவளைச் சமாளிக்கிறது உங்க வேலை. நான் நினைச்சது நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் தான் பொண்டாட்டி, குடும்பம், குழந்தை எல்லாம். அதுவரைக்கும் யாரா இருந்தாலும் பொறுமையா தான் இருக்கணும்" அப்படி ஒரு அதிகாரமும் ஆளுமையும் இருந்தது அவன் குரலில்.​

"என்னமோ டா, நடக்கப் போறது என்னன்னு தெரியாம எனக்கு தான் திக்கு திக்குன்னு இருக்கு" புலம்பினார் அவனைப் பெற்ற புண்ணியவதி.​

"எல்லாம் ஒவ்வொன்னா நடக்கும் போது பார்த்துக்கலாம். இப்ப நீங்க என்ன பண்றீங்க நான் சொல்றதை அப்படியே அவகிட்ட போய் சொல்லுங்க" என்று வடிவிடம் நீண்ட நேரமாக எதையோ சொன்னான் துரை.​

"டேய் டேய் அவ சின்னப்பொண்ணு டா. அடுத்த வீட்டுப் பொண்ணா இருந்தாலும் அவ பொண்ணு தான்டா. அவளோட உணர்ச்சிகளோட ஏன்டா விளையாட நினைக்கிற"நியாயம் கேட்பதைக் கூட பயந்து பயந்து தான் கேட்டார் வடிவு.​

"அம்மா என் கோவத்தைக் கிளறாதீங்க. அவ உங்களுக்கு மருமக மட்டும் தான், ஆனா எனக்கு பொண்டாட்டி. அவளோட சுக, துக்கம் எல்லாத்திலும் எனக்கும் அக்கறை இருக்கு. அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா அது அவளை மட்டும் இல்லாம என்னோட எதிர்காலத்தையும் சேர்த்து தான் பாதிக்கும். எதுவும் எனக்குப் புரியாம இல்ல.​

ஆனா நான் செய்ய நினைக்கிறதை செஞ்சு முடிச்சா தான் எல்லோருக்கும் நிம்மதி. புரிஞ்சுக்கோங்க, அவளைப் பார்த்துக்கோங்க" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன். மகன் சொன்னதைக் கேட்டுக்கொண்டு தலையாட்டுவதைத் தவிர அப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை வடிவுக்கு.

 

ஆட்டம் 4​

குழலி புகுந்த இல்லம் வந்து ஒருவாரம் கழிந்திருந்தது. உண்பது உறங்குவதைத் தவிர்த்து வேறு எந்த வேலையும் இல்லாமல் போரடித்துக் கிடந்தாள். சும்மா இருக்கும் மனம் சாத்தானின் தொழிற்சாலை என்று சொல்வதற்கு இணங்க, எங்கும் எதிலும் சந்தேகம் வந்தது அவளுக்கு.​

“முதல் சந்தேகமாக மார்கழி மாதத்தில் யாரும் கல்யாணம் வைக்க மாட்டாங்களே அத்தை“ வடிவிடம் தான் ஆரம்பித்தாள். திணறினாலும், “சம்பந்தி ஐயா செத்த துக்கம் அன்னைக்கு தான் உன் மாமன் வெளியே வந்தான். அதாவது பரோலில் வந்தான், அவருக்குக் கொள்ளி வைச்சது கூட அவன் தானே. உனக்குத் தெரியாதா?“ என்க, நான் எங்கே அதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலையில் இருந்தேன் என்று பெருமூச்சு விட்டவள் அடுத்ததாக அவர் சொல்ல வந்ததைக் கவனிக்க ஆரம்பித்தாள்.​

துக்க வீட்டில் நல்லது நடக்க குறைந்தபட்சம் ஒரு மாதமாவது காத்திருக்கணும், உங்க நேரம் மார்கழி மாதம் வந்திடுச்சு. பரோல் டைம் கொஞ்சம் நீட்டிச்சு மார்கழி முடிய கல்யாணம் வைக்கலாம் என்று தான் சொன்னோம். அதிசயத்திலும் அதிசயமா உன் மாமன் கூட நான் சொன்னதும் ஒத்துக்கிட்டான். ஆனா அந்தச் சண்டியர் கேட்டான் என்பதற்காக சட்டமும் கேட்குமா சொல்லு, கூடுதல் பரோல் நாட்கள் கிடைக்கல, அதனால் தான் மார்கழியில் கல்யாணம் நடந்தது“ என்று முடித்தார்.​

தெளியாத மருமகள் முகத்தைப் பார்த்து, “அப்ப கூட ஏழு மாசம் ஜெயிலில் இருந்து வந்த உடன் கல்யாணம் வைச்சுக்கலாம் என்று தான் சொன்னாரு உங்க மாமனார்.​

அத்தனை நாள் அவ தனியா இருக்க வேண்டாம், செத்துப் போனவரையே நினைச்சுக்கிட்டு இருப்பா. அதனால் இந்த சம்பிரதாயம் எல்லாம் பார்க்க வேண்டாம் என்று அவன் சொன்ன விஷயமும் சரியாத் தான் பட்டுச்சு, அதனால் தான் கல்யாணத் தேதியைக் குறிச்சுட்டோம்“ மகனைப் பற்றிய நல்ல வார்த்தைகளை மருமகள் மனதில் நச்சென்று இறக்கினார் வடிவு.​

அவர் நினைத்தது போலவே கணவனை நினைத்து அன்றைய நாள் முழுவதும் அவள் சிலாகித்தாலும், அடுத்த நாள் அடுத் சந்தேகம் வந்தது. அவனுடைய இப்போதைய புகைப்படங்கள் தான் இல்லை, சிறுவயதுப் புகைப்படங்கள் கூட இல்லையே ஏன் என்று தோன்ற அதை அப்படியே வடிவிடம் கேட்டும் வைத்தாள்.​

நம்ம வீடு இந்த கிராமத்தில் பெரிய வீடு, அங்காளி பங்காளின்னு யாராவது ஒருவர் தினம் வீடு வந்து போய்கிட்டு இருப்பாங்க. அவன் ஜெயிலுக்குப் போன புதிதில் தினம் ஒருவர் வந்து கூடத்தில் இருக்கும் அவன் போட்டோவைப் பார்த்து ஏதாவது பேச ஆரம்பிக்க, நான் அழ, உன் மாமனார் கோபப்படன்னு அடிக்கடி நடக்கவும் உன் மாமன் தான் அவனோட எல்லாப் போட்டோவையும் போட்டு எரிக்கச் சொன்னது“ என்றார்.​

இதிலே இன்னும் சந்தேகம் இருந்தாலும், இப்போது விட்டால் இதைக் கேட்க முடியாதோ என்று வேகமாக, “அவர் என்ன தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்குப் போனாரு அத்தை“ என்று கேட்டே விட்டாள்.​

“பங்கஜம், கூப்பிட்டியா இதோ வந்துட்டேன்“ அழைக்காத வேலைக்காரம்மாள் அழைப்பதைப் போல் காட்டிக்கொண்டு அங்கிருந்து சென்ற மாமியாரை வெறித்துப் பார்த்தாள் குழலி.​

வேலைக்காரர்களிடம் சும்மா ஏதாவது பேசலாம் என்று நினைத்துச் சென்றால் கூட அவர்கள் பதறிக்கொண்டு ஓடுவதோ, இல்லை வடிவு பதறிக்கொண்டு அவ்விடம் ஓடிவருவதோ தொடர்ந்து நடக்க, தான் கண்காணிக்கப் படுகிறோமோ என்ற உணர்வைக் கொடுத்தது அவளுக்கு.​

அந்த வீட்டில் அவளுடைய திருமணத்திற்குப் முன்னால் நடந்த நல்ல விஷேஷங்கள் போட்டோ ஆல்பத்தைப் பார்க்க முடியுமா? என்று கேட்டு, “நான் தான் சொன்னேனே குழலி உன் மாமனுக்கு போட்டோஸ் என்றால் பிடிக்காதுன்னு. அதனால் போட்டோவே எடுக்கல“ என்ற மாமியாரின் மேல் சந்தேகம் வலுத்தது அவளுக்கு.​

“டேய் அன்னைக்கு நீ சொல்லும் போது கூட வேண்டாம் என்று நினைச்சேன், ஆனா இப்ப சொல்றேன். அவளைப் பத்தின உன்னோட கணிப்பு ரொம்ப சரி. இன்னும் கொஞ்ச நாள் அவ என்னோட இருந்தா ஒன்னு என் வாயில் இருந்து எல்லாத்தையும் அவ பிடிங்கிடுவா, இல்லையா நானே சொல்லிடுவேன் போல, உன் பொண்டாட்டி திறமையானவ தான் டோய்“ மருமகளைப் பற்றி மகனிடம் பாராட்டுப் பத்திரம் வாசித்தார் வடிவு.​

“அதுக்கு தான் அன்னைக்கு அந்த ஐடியா கொடுத்தேன். நீங்க தான் புரிஞ்சுக்கல. சரி இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல. இன்னைக்கே போய் அவகிட்ட பேசி சம்மதம் வாங்குங்க, நான் மத்த ஏற்பாடுகளைப் பார்க்கிறேன்“ என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.​

மகனின் ஆணைக்கிணங்க மருமகளைத் தேடி வந்த அவள் அன்பு மாமியார், "குழலி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன் நீ என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாது" பெரிய விஷயம் சொல்வதற்கு முன்னால் மெதுவாகத் மெதுவாகத் தூண்டில் போட்டார்.​

"எதுவா இருந்தாலும் சொல்லுங்க அத்தை. நான் தானே என்ன தயக்கம்" அந்த வீட்டில் தனக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரியாத உரிமையைக் கூட இழுத்துப் பிடித்துக் கேட்டாள் அவள்.​

"இல்ல நேத்து உன் மாமனைப் பார்க்க, இங்கிருந்து ஒருத்தர் போனார். அவர் மூலமா நான் அவன்கிட்ட பேசினேன். அவன் உன்கிட்ட சில விஷயங்களை சொல்லச் சொன்னான். அதைச் சொன்னா நீ எப்படி எடுத்துப்பியோன்னு எனக்குக் கொஞ்சம் கவலையா இருக்கு" என்றார் மெதுவாக.​

"நீங்க அவர்கிட்ட பேசுனீங்களா அத்தை, என்ன சொன்னாரு. என்னைப் பத்தி ஏதாவது விசாரிச்சாரா, சீக்கிரம் சொல்லுங்க" ஆர்வ மிகுதியில் கேட்டவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவருக்கு.​

"நீ அவனுக்குப் பிடிச்ச பொண்டாட்டியாச்சே, உன்னை விசாரிக்காம இருப்பானா? அதெல்லாம் நிறையவே விசாரிச்சான். சொல்லப் போனால் என்கிட்ட முக்கால்வாசி உன்னைப் பத்தி தான் பேசினான்" என்று சொல்ல, தன்னைப் பற்றி விசாரிக்கும் அளவுக்கு அக்கறை உள்ளவனுக்கு தன்னிடம் பேச முடியவில்லையா என்று நினைத்தாலும் மாமியார் சொல்ல வருவதைக் கவனிக்க நினைத்தாள் குழலி .​

"அவன் வெளியே வர இன்னும் நாள் இருக்கே, நீ ஏன் உன்னோட படிப்பைத் தொடரக் கூடாதுன்னு கேட்டான். எனக்கும் அது சரியாப் பட்டுச்சு. இந்த வீட்டுக்குள்ளேயே இருந்தா உனக்கு எப்படிப் பொழுது போகும். வெளியே தெருவில் போய் நாலு பேரைப் பார்த்து பேசினால் தானே உனக்கும் மனசுக்கு ஆறுதலா இருக்கும்" நல்ல விஷயம் தான் சொன்னார் என்றாலும் குழலிக்குத் தான் பகீர் என்றது.​

"அத்தை, நான் எப்படி அத்தை அங்க. ஒரு தடவை இந்தக் கிராமத்தைத் தாண்டினதுக்கே ரொம்ப அனுபவிச்சிட்டேன், இப்ப மறுபடியுமா? இல்ல முடியாது, நான் போக மாட்டேன்.​

இந்தக் கிராமம் தான் என்னோட இலக்ஷமண ரேகை. இதைத் தாண்டி தான் என் அப்பாவைப் பறிகொடுத்தேன், இன்னொரு முறை அதே தப்பை செய்தால் அவ… அவருக்கு" இழுத்து நிறுத்தியவள், தலையை இடவலமாக ஆட்டி மாமியாரின் வார்த்தைகளை முற்றிலுமாக மறுத்தாள்.​

"நீ படிக்கணும் என்பது அவனோட ஆசை. உன் வாழ்க்கையில் எதுவும் அரைகுறையாக இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறான். உன்னோட பாதுகாப்புக்குன்னு எத்தனை ஏற்பாடு பண்ணி இருக்கான் தெரியுமா?​

அவன் ஆளுங்க எப்பவும் உன் கூடவே இருப்பாங்க. அவங்க யாரு என்னன்னு உனக்கே தெரியாது. ஆனா உன் கூடவே இருப்பாங்க. உனக்கு வர ஒவ்வொரு ஆபத்தையும் தடுப்பாங்க.
உனக்காக காலேஜ் பக்கத்திலே வீடு ஏற்பாடு பண்ணி இருக்கான். அங்க உனக்குத் துணைக்கு வீட்டு வேலை செய்ய ஒரு ஆளையும் ரெடி பண்ணியாச்சு. தினமும் காலையில் காலேஜிற்கு கூட்டிட்டுப் போகவும், திரும்ப சாயங்காலம் வீட்டுக்கு கூட்டிட்டு வரவும் காரோட சேர்த்து ஒரு டிரைவரும் ஏற்பாடு பண்ணியாச்சு.​

நீ செய்ய வேண்டியது எல்லாம் நல்லாப் படிக்கிறது மட்டும் தான். அவன் திரும்பி வரும் வரை உன்னோட முழுக் கவனமும் படிப்பில் மட்டும் இருந்தாப் போதும். படிப்பு முடிஞ்சு பட்டம் வாங்கின பிறகு இந்த வீட்டுக்கு வந்தாப் போதும்" என்க, "ஆனா அத்தை, அவர்" என்று இழுத்தாள் அவள். உள்ளுக்குள் பல குழப்பங்கள் இருந்தாலும் அதில் அதி முக்கியமான குழப்பமாக இருந்தது, ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவரால் எப்படி இத்தனை காரியங்களைச் செய்திருக்க முடியும் என்பது தான். அவளை அதிகம் யோசிக்க விடாமல் அடுத்தடுத்துப் பேச ஆரம்பித்தார் வடிவு.​

"உன் அப்பாவைக் கொன்னவங்க, உன் மாமனையும் கொன்னுடவாங்கன்னு பயப்படுறியா மா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. உன் பாதுகாப்புக்கு இவ்வளவு பண்ணி இருக்கிறவன், அவன் பாதுகாப்பைப் பார்த்துக்க மாட்டானா? அவனை யாராலும் எதுவும் பண்ண முடியாது" மகனைப் பற்றி பெருமையாகவே பேசினார் வடிவு.​

"அப்படின்னா நீங்களும் என்கூட வந்திடுங்களேன் அத்தை. உங்களைத் தனியா விட்டுட்டு நான் எப்படி அங்க இருக்க முடியும்" என்ற குழலியின் வார்த்தை கேட்டு கலகலவென சிரித்தவர்,​

"இது நான் பிறந்து வளர்ந்து வாக்கப்பட்ட ஊரு மா. இங்க இருக்கிற புல் பூண்டு கூட எனக்குச் சொந்தம். நானும் என்னைச் சுத்தி இருக்கிறவங்களும், என்னை நல்லாப் பார்த்துப்போம். அதனால நீ என்னை நினைச்சுப் பயப்பட வேண்டாம்.​

உன்னை நீ நல்லாப் பார்த்துக்கோ, உன் மாமனுக்கு அது தான் வேணுமாம். உன் மேல கொள்ளை ஆசை வைச்சிருக்கும் அவனுக்கு நீ பண்ண வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னு தான். அவன் உன் மேல காட்டுற அன்பை விட அதிகமா நீ அவன் மேல காட்டினாப் போதும்" என்று மருமகள் கன்னம் தடவி முத்தமிட்டார் வடிவு. அவர் சொன்னதில் உள்ளர்த்தம் இருந்ததை குழலி அறியவில்லை.​

"அத்தை என்னோட புக்ஸ் எல்லாம் காலேஜ் ஹாஸ்டலில் இருக்கு, அது" இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த கல்லூரி வாசம் மீண்டும் கிடைக்கப் போகிறது என்ற ஆசையில் அடுத்தடுத்த திட்டங்களை வகுத்தாள் அவள்.​

"அதெல்லாம் எப்பவோ உன்னோட புது வீட்டுக்குக் கொண்டு போயாச்சு. நீ இங்க இருந்து எடுத்துக்கிட்டு போக வேண்டியது உன் மாமனோட பாசத்தையும், அவன் உனக்காக கொடுத்துவிட்ட இந்த போனையும் தான்" என்று ஒரு போனை வடிவு காட்ட குழந்தை போல் அதைப் பிடுங்கிக்கொண்டு அறைக்குள் ஓடினாள் குழலி.​

சிம் கார்டு வரை அதில் தயார் நிலையில் இருக்க சின்னப்புன்னகையுடன் அவள் அதை ஓபன் செய்ய, லாக் இல்லாமலே அது ஆன் ஆகிக் கொண்டது. குழலி அதில் முதலில் ஓபன் செய்தது கேலரி தான். தன் கணவனின் புகைப்படம் அதில் இருக்கிறதா என்று ஆசையுடன் பார்த்தாள். ஒன்று கூட இல்லை, ஆனால் வழக்கம் போல் அவள் ஏமாற்றமடையவில்லை.​

காரணம் அந்த நொடியில் அவளுடைய கணவனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது மை ஹஸ்பெண்ட் என்னும் பெயருடன்.​

"ஹாய்"​

"ஹாய் நீங்க யாரு"​

"நான் யாரா? அதில் என்ன பெயரில் என் நம்பர் இருக்கோ, அதுதான் நான்" இதை அனுப்பும் போது புன்னகைத்துக் கொண்டிருப்பானோ என்ற எண்ணம் வந்து தானும் புன்னகைத்தாள் குழலி.​

"மை ஹஸ்பெண்ட் என்று இருக்கு. அப்ப நீங்க தான் என்னோட ஹஸ்பெண்ட்டா" சிறுபிள்ளை போல் கேட்டாள் குழலி.​

"சாமி சத்தியமா நான் தான் உன் புருஷன் போதுமா" எதிர்பக்கம் இருந்து வந்த இந்த பதிலைக் கேட்டதும் துள்ளி குதிக்க வேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. ஜெயிலில் இருந்து கொண்டு செல்போனில் சாவகாசமாக பேசுவது எல்லாம் நடக்கும் காரியம் தானா என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவள் வாழ்ந்து வரும் நாட்டின் சட்டதிட்டங்களைப் பற்றி அவளும் அறிவாளே. அப்படி பணம் பாதாளம் வரை பாய்ந்து அதன் மூலமாக தன்னவன் தன்னோடு பேசுகிறானோ என்று சந்தோஷம் தான் கொண்டாள்.​

"மாமா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நீங்க அதுக்கு ஏன் சாமி மேல எல்லாம் சத்தியம் பண்றீங்க" என்க, "மாமா, ம்ம்ம்... நல்லா இருக்கு புடிச்சிருக்கு" என்றான் அவன்.​

"என்ன புடிச்சிருக்கு" தெரியாதது போலவே கேட்டாள் குழலி.​

"எத்தனையோ புடிச்சிருக்கு, அதையெல்லாம் சின்னப்பொண்ணு உன்கிட்ட சொல்லிக்கிட்டா இருக்க முடியும்" வந்த பதிலைப் பார்த்து ஷாக் அடித்தது போல் அதிர்ந்தது அவள் உடல்.​

"நான் ஒன்னும் சின்னப்பொண்ணு இல்லை, எனக்கு இருபது வயசு முடியப்போகுது" வீரமாகச் சொன்னாள்.​

"ஆஹான், என்னோட வயசு என்ன தெரியுமா?" குழலி அதிகம் யோசித்த கேள்வி வந்து நிற்க, ஆர்வமானாள் பெண்.​

"தெரியாது"​

"தெரிஞ்சிக்கணும் என்று ஆசையா இருக்கா" என்ற கேள்விக்கு அப்போது இருந்த மனநிலையில், "இல்லை" என்றே பதில் அனுப்பினாள் அவள்.​

"இல்லையா?" ஆச்சர்யத்துடன் வந்து குதித்தது குறுஞ்செய்தி.​

"இல்லை"​

"நம்ப முடியலையே, ஆசையும் ஆர்வமும் இல்லாமல் தான், என்னோட போட்டோவை வீடு முழுக்கத் தேடுறியாம், எப்பவும் என்னைப் பத்தி மட்டுமே பேசுறியாம்" சிரிக்கும் பொம்மைகளுடன் வந்த செய்தியை பார்த்தவளுக்கு உடலெங்கும் பட்டாம்பூச்சி பறந்தது போல் இருந்தது.​

கண்கொண்டு பார்க்காத, குரல் கூட கேட்டு இராத ஒருவன் தன்னுள் இப்படியான உணர்வுகளைத் தோற்றுவிக்க முடியுமா என்ன? கணவன் என்ற உறவுக்கு அவ்வளவு சக்தியா? இல்லை கணவன் என்ற உறவின் மீது தான் கொண்ட உணர்வின் மீது அத்தனை சக்தியா? என்று குழம்பினாள் பெண்.​

நிஜத்தில் இரண்டாவது தான் சாத்தியம், ஒருவன் எத்தனை பெரிய பணக்காரனாக இருந்தாலும், எவ்வளவு யோக்கியமானவனாக இருந்தாலும், பெண்ணானவள் அவனை முழு மனதோடு ஏற்றால் மட்டும் தான், அவன் தான் தனக்கு எல்லாமுவானவன் என்று முழு மனதோடு நம்பினால் மட்டும் தான், அவனோடு அவளால் சௌகர்யமாக உணர முடியும். இல்லாமல் போனால் அவன் எப்படியான ஆளாக இருந்தாலும் அவள் மனதின் கதவைத் திறப்பது என்ன அதன் அருகே கூட செல்ல முடியாது.​

சுய சிந்தனையில் இருந்தவளை “நம்ப முடியலையே“ என்ற கணவனின் குரல் கலைத்தது.​

"நம்ப முடியலையா? என்ன பண்ணலாம். ஓகே சாமி மேல சத்தியமா எனக்கு உங்க வயசைத் தெரிஞ்சிக்கிறதில் ஆர்வம் இல்லை போதுமா" அவனைப் போலவே அனுப்பினாள்.​

"ஆமா நீ என்னோட முகத்தை ஒரு தடவை கூட பார்த்ததில்லையாமே அம்மா சொன்னாங்க" எதற்கோ தூண்டில் போட்டான் அவன்.​

"ஆமா" இதைச் சொல்லும் போது காரணமே இல்லாமல் வெட்கம் வந்து தொலைத்தது குழலிக்கு. அடியே மானம்கெட்ட குழலி வீட்டில் பார்க்கும் எல்லோர் மீதும் சந்தேகப்படுவது என்ன இங்கானால் யாரென்று தெரியாத ஒருவனை நினைத்து வெட்கம் கொள்கிறாயா? சம்மந்தமே இல்லாமல் ஆஜர் ஆனது அவளது மனசாட்சி.​

அதைப் புறம் தள்ளிவிட்டு, "என்ன தைரியத்தில் என் முகத்தைக் கூட பார்க்காம என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட" என்ற கணவனுக்கு என்ன பதில் அனுப்ப முன்வந்தாள்.​

"இன்னாருக்கு இன்னாருன்னு பிரம்மன் படைச்சு தான் நம்மளை பிறக்கவே வைக்கிறாரு. அப்படி இருக்கும் போது நான் உங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று இருந்திருக்கு" அறியாப் பிள்ளை போல் இவள் அனுப்பிய இந்த பதிலில் ஏமாற்றமோ கோவமோ அடைந்தது போல,​

"அப்ப இரண்டு மூணு பேரைக் கல்யாணம் பண்ணிக்கிறாங்களே அவங்க பிறக்கும் போதும் பிரம்மன் அதை முடிவு பண்ணி இருப்பாரா" என்ற பதில் வந்தது.​

"சாமியைப் பழிக்காதீங்க மாமா" கோபமாக பதில் அனுப்பினாள் இவள். உன் வாழ்க்கையில் நடந்த இத்தனைக்குப் பிறகும் நீ அந்தக் கடவுள் மேல நம்பிக்கையோடு இருப்பதை நினைச்சா எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு, மனதோடு நினைத்துக்கொண்டவன்,​

"சரி மாமா மாமான்னு இவ்வளவு ஆசையா பேசுறியே. உண்மையில் நான் உன் மாமாவா இல்லாம இருந்தா" விஷயத்திற்கு வந்தான் எதிரே பேசிக்கொண்டிருந்தவன்.​

"சும்மா விளையாடாதீங்க மாமா" வடிவு சொன்ன உன் மாமன் கொடுத்த போன் என்ற ஒற்றை வாசகம், அவனே இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட பிறகும் நம்பச் சொன்னது.

சிறையில் இருந்துகொண்டே தன் படிப்பிற்கு, பாதுகாப்பிற்கு என இவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்ய முடியும் என்றால் இதுவும் சாத்தியமே என்ற நம்பிக்கை அவளுள் இருந்தது.​

"நான் எதுக்கு விளையாடப் போறேன், நான் ஒன்னும் உன்னோட மாமா இல்ல"​

"இல்லை நீங்க பொய் சொல்றீங்க, என்கிட்ட இருக்கிறது என் மாமா எனக்காக வாங்கிக் கொடுத்த போன். இதில் இந்த ஒரே ஒரு நம்பர் மட்டும் தான் சேவ் ஆகி இருக்கு. இது நிச்சயம் என் மாமா நம்பர் தான்"​

"நம்பர் உன் மாமாவோடது தான். ஆனா பேசுறது உன் மாமனா தான் இருக்கணும் என்ற அவசியம் இல்லையே" என்க, அவன் நினைத்தது போலவே லேசாக பயம் வந்தது குழலிக்கு.​

"ஏன் மாமா இப்படி எல்லாம் பேசுறீங்க" தவிப்புடன் கேட்டாள்.​

"உன் மாமன் ஜெயில்ல இருக்கான், அது ஞாபகம் இருக்கா. அவன் கிட்ட இருந்த போனை ரெகவர் பண்ணி ஸ்டோர் ரூமில் வைச்சிருக்கோம். நான் கான்ஸ்டபிள், கைதிங்க போனை நோண்டி அவங்க வீட்டு ஆளுங்களுக்கு அப்பப்ப மெசேஜ் பண்ணுவேன். அதில் எனக்கு ஒரு கிளுகிளுப்பு" என்று வந்த பதிலில் முதலில் மிகவும் கோபம் அடைந்தவள், அடுத்த கணம் மனதை மாற்றிக் கொண்டு நிதானமாக முதலில் இருந்து வந்து குறுஞ்செய்திகளைப் படித்துப் பார்த்தாள்.​

"நீங்க என்னோட மாமா தான், எனக்கு அது நல்லாவே தெரியும். நீங்க என்கிட்ட விளையாட நினைக்கிறீங்க. ஆனா இந்த மாதிரி கண்ணாமூச்சி விளையாட்டு எல்லாம் வேண்டாமே" பாவமாகக் கேட்டாள் குழலி.​

"பரவாயில்லையே, நானே சொன்ன பிறகும் இந்த அளவுக்கு உறுதியா பேசுறது நான் தான்னு சொல்றியே. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கல. நான் உன் மாமா இல்லைன்னு சொன்னதும் நீ அழுவன்னு நினைச்சேன்" என்க,​

"நான் எதுக்கு அழணும். பேசினது நீங்க இல்லாம போனாக் கூட இப்படி உங்க போனில் இருந்து ஒருத்தன் எங்கிட்ட பேசினான்னு உங்க கிட்ட வந்து சொல்வேனே தவிர உட்கார்ந்து அழ மாட்டேன்" தைரியமாகவே சொன்னாள் குழலி.​

உன்னோட தைரியத்தைப் பற்றியும், புத்திசாலித்தனத்தைப் பற்றியும் உன் அப்பா சொன்னது தான் எவ்வளவு உண்மை. வயதுக்கு மீறிய பக்குவம் தான் என்றாலும், அப்பப்ப வயசுக்கு ஏத்த பத்தாம் பசலித்தனமும் வெளியே வருது. அது எல்லாம் எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கு தன்னோடு நினைத்துக்கொண்டவன், “பேச்செல்லாம் பலமா தான் இருக்கு, ஆனா அவர் ஏன் என்னைப் பார்க்கல, அவர் பெயர் என்னன்னு கூடத் தெரியலன்னு அழுகுறது மட்டும் நல்லா இல்லை" கோபத்தில் கேட்கிறானா இல்லை கொஞ்சலாகக் கேட்கிறானா என்று புரியாமல் பார்த்தவள் வேகமாகப் பதில் அனுப்பினாள்.​

"யாரு சொன்னா எனக்கு உங்க பேரு தெரியாதுன்னு. உங்க பேரு துரைன்னு எனக்கு தெரியும்" மிடுக்காக.​

"என்ன சொன்ன துரையா" வந்து குதித்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் வடிவு சொன்ன தாத்தா கதை நினைவு வர,​

"ஐயோ என்னை மன்னிச்சிடுங்க மாமா. தெரியாம உங்க பெயரைச் சொல்லிட்டேன். உங்களுக்குத் தான் அந்த பெயரைச் சொல்லி யார் கூப்பிட்டாலும் பிடிக்காதாமே. ஸ்சாரி மாமா இன்னொரு தடவை நிச்சயம் இந்த மாதிரி பண்ண மாட்டேன்" என்று குழலி அனுப்பிய மெசேஜிற்கு எந்த பதிலும் வரவில்லை. அவளும் கிட்டத்தட்ட கால் மணி நேரமாக பொறுமையுடன் இருந்து பார்த்தாள்.​

இறுதியில் எங்கே தன் கணவன் தன்னிடம் கோபித்துக் கொண்டானோ என்ற பயத்தில் அந்த நம்பருக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே அவளுடைய அழைப்பை ஏற்று அவள் ஏதும் பேசுவதற்கு முன்பாக, "உனக்கு போன் கொடுத்தது நான் உன்கிட்ட பேசுறதுக்காக மட்டும் தான். நீ தேவையில்லாம எனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்காத சரியா. தேவைப்படும் நேரத்தில் நானே உனக்கு போன் பண்ணுவேன்" கணீர் குரல் கேட்க நொடி திணறினாலும்,​

"ஓகே, உங்க நிலைமை புரியுது. இனி நான் உங்களுக்குப் போன் பண்ணல. ஆனா ஏதாவது எமர்ஜென்சி என்றால் மெசேஜாவது அனுப்பலாமா" குழலி கேட்ட தொணியில் சிரிப்பு வந்தது எதிரே இருந்தவனுக்கு.​

நல்ல மனநிலையில் இருக்கிறார் போல இப்பவே கேட்டுடலாம் என்று நினைத்துக்கொண்டு, "மாமா உங்களோட போட்டோ இருந்தா ஒன்னே ஒன்னு அனுப்புங்களேன். நீங்களே யோசிச்சுப் பாருங்க, புருஷன் எப்படி இருப்பான்னு பொண்டாட்டி தெரிஞ்சுக்காம இருக்கிறது நல்லாவா இருக்கு.​

நியாயமாப் பார்த்தா என்கிட்ட சொல்லாமப் போனதுக்காக நான் உங்க மேல கோச்சுக்கணும். ஆனா, எனக்கு இருக்கிறது நீங்க மட்டும் தான். உங்ககிட்டகோச்சுக்கிட்டு நான் யார்கிட்ட பேச முடியும், அதனால் தான் அதை மறந்து பேசுறேன்" மனதில் இருப்பதை மறைக்காமல் சொல்லிவிட்டாள் குழலி.​

அவள் வருத்தம் அவள் குரலிலே அப்பட்டமாகத் தெரிந்தது தான் என்றாலும், “போட்டோ எல்லாம் வேண்டாம்" அவள் நினைத்தது போலவே குரல் கரகரப்பாக மாறிப் போனது இதைச் சொல்லும் போது.​

"உங்கள பார்க்கணும் போல ஆசையா இருக்கு" தன் ஏக்கம் மொத்தத்தையும் குரலில் காட்டி கேட்டாள் குழலி.​

"இவ்வளவு ஆசையா கேட்கிறியே, என்னைப் பார்த்தா என்ன பண்ணுவ" கேட்டவன் குரலிலும் ஆனந்தத்தின் சாயலைக் கண்டுகொண்டாள் குழலி.​

"சிரிப்பேன்"​

"அப்புறம்"​

"அப்புறம் பேசுவேன்"​

"என்ன பேசுவ"​

"நிறைய பேசுவேன், உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கு"​

"ஆனா உன்கிட்ட சொல்றதுக்கு என்கிட்ட இப்போதைக்கு ஒரே ஒரு விஷயம் தான் இருக்கு. கொஞ்ச நாளைக்கு நீ என்னைப் பார்க்க முடியாது. ஆனா ஒரு நல்ல நாளில் நானா உன் முன்னாடி வந்து நிற்பேன். அப்ப அந்த நிமிஷம் நீ என்னைக் கண்டுபிடிக்கிறியான்னு பார்க்கலாம்" புதிர் போட்டான்.​

"மாமா நமக்குள்ள எதுக்காக இந்த கண்ணாமூச்சி விளையாட்டு" சோகமாகக் கேட்டாள்.​

"இந்த விளையாட்டு, நீ எப்ப பிறந்தியோ அப்பவே உனக்காக உருவாக்கப்பட்டது. நீ இதில் விளையாடியே ஆகணும்" மனதில் நினைத்துக்கொண்டவன், "டைம் ஆச்சு, நான் போனை வைக்கிறேன். நீ சென்னைக்கு கிளம்புவதற்கு வழியைப் பாரு" என்றுவிட்டு போனை அணைத்தவன், அடுத்த நொடி தன்னுடைய அம்மாவிற்குப் போன் செய்தான்.​

எடுத்த எடுப்பிலே, "குழலி, என் பேர் என்னன்னு கேட்டதுக்கு துரைன்னு சொன்னீங்களாமே" என்க, "ஆமாடா, அவ ரொம்பப் பாவம். நீ பாட்டுக்கு உன்னோட பெயர் கூட அவளுக்கு தெரியக்கூடாதுன்னு சொல்லிட்ட. அவளைப் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு டா. அதனால் தான் நான் உன்னை எப்பவும் கூப்பிடுற செல்லப் பெயரான துரையையே உன்னோட பெயர்ன்னு சொல்லிட்டேன்" என்றார் வடிவு.​

"நீங்க பண்ண இந்த காரியத்திற்காக உங்களைப் பாராட்டுவதற்காக தான் நான் இப்போ போன் பண்ணேன். தெரிஞ்சோ தெரியாமலோ அவளுக்கும் பாதகமில்லாம எனக்கும் பாதகமில்லாம நல்ல ஒரு வேலையைப் பார்த்து இருக்கீங்க, சந்தோஷம். அவளைப் பொறுத்த வரைக்கும் என் பேரு துரையாவே இருக்கட்டும்.​

அவளைக் கொஞ்சம் சீக்கிரம் சென்னைக்கு அனுப்பி வைங்க. இடையிலே நிறுத்திட்ட ஒரு விளையாட்டை தொடருவதற்கான சரியான நேரம் வந்திடுச்சி" என்றுவிட்டு போனை அணைத்தான் துரை என்று வடிவால் செல்லமாக அழைக்கப்படும் அவர் மகன்.

 

ஆட்டம் 5​

"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா. நான் என்னோட படிப்பைத் தொடர்வதற்காக சென்னைக்கு கிளம்புறேன்" என்றவண்ணம் குழலி தன்னுடைய மாமனாரின் காலில் விழ, அவரோ அவளை ஆசீர்வாதம் செய்ய மனமில்லாததோடு, ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் அமர்ந்திருந்த வீல்சேரை நகர்த்தி அங்கிருந்து சென்றுவிட்டார். முகத்தில் அடித்தது போல் உணர்ந்தவள் தலையைக் குனிந்து அமைதியாக நின்றிருந்தாள்.​

போனதெல்லாம் போகட்டும் இனியாவது மகன் குடும்பம், குழந்தை என்று வாழ்ந்து, பிறந்து வளர்ந்த ஊரைக் கட்டி ஆள்வான் என்று அவர் நினைத்திருக்க, நடக்கும் யாவையும் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை என்பதால் முளைத்த கையாலாகதத் தனத்துடன் கூடிய கோபம் இது.​

"வர வர இந்த மனுஷனுக்கு புத்தி கெட்டுப் போச்சு. எவ்வளவு ஆசையா ஆசிர்வாதம் பண்ணுங்க மாமான்னு வந்து நிக்கிது புள்ள. மூஞ்சைத் திருப்பிக்கிட்டு போறதைப் பாரேன். இது மட்டும் துரைக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்" புலம்பிக்கொண்டே குழலியின் அருகே வந்த வடிவு அவள் தலை தடவி முடி ஒதுக்கி அவள் வட்ட முகத்தை ஆசையாய் பார்த்தார். இவள் மட்டும் நல்ல முறையில் தன் மகனின் வாழ்வில் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் வராமல் இல்லை அவரிடத்தில்.​

"ராசாத்தி, அவர் அப்பப்ப இப்படித்தான் புரியாத மாதிரி நடந்துக்குவாரு. நாற்பதுக்கு மேல நாய் புத்தின்னு சொல்லுவாங்க இங்க அறுபது தாண்டி போகுது இல்லையா? அதான் இப்படி பண்றார். அவரை நினைச்சு எதுவும் கவலைப் படாதே, உன் மாமன் வந்துட்டா எல்லாம் சரியாப் போயிடும்.​

நல்லாப் படிக்கணும், உன்னோட கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்கணும் சரியா" என்க, தலையைத் தலையை ஆட்டிவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்து அவளுக்காகவே காத்திருந்த காரில் ஏறினாள் குழலி.​

சென்ற முறை இந்த கிராமத்தை விட்டு சென்னை செல்வதற்காக இதே போல் தந்தையுடன் காரில் சென்ற நினைவுகள் வந்த மோத தானாக கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது குழலிக்கு.​

"அழாதே நான் இருக்கிறேன் உனக்கு" என்று ஆறுதல் சொல்வதற்கு கூட அருகே யாரும் இல்லையே என்ற நினைப்புத் தான் அவளை இன்னும் இன்னும் வேதனைக்கு உள்ளாக்கியது. முகம் தெரியாத கணவனின் மீது கோபமும், ஆதங்கமும் வந்தது.​

கார் அவளுடைய வீடு இருந்த இடத்தை நெருங்கவும், "அண்ணா, ஒரு நிமிஷம் காரை நிப்பாட்டுங்களேன். நான் என் வீட்டுக்கு போயிட்டு வந்துடுறேன்" குழலி சொல்ல மறுப்பேதும் இன்றி காரை நிறுத்தினான் டிரைவர்.​

சென்ற பத்து நிமிடத்திற்குள் திரும்ப வந்தவள் காரில் ஏறிக்கொள்ள டிரைவர் இன்னமும் காரில் ஏறாமல் வெளியே நின்று கொண்டிருந்தார்.​

குழலி, "அண்ணா போகலாம்" என்று சொல்ல நினைத்து வாயைத் திறக்க முற்பட, "மாமா காலிங், மாமா காலிங்" என்று கத்தியது அவளுடைய அலைபேசி. "மை ஹஸ்பண்ட்" என்ற பெயரை மாற்றி மாமா என்று சேமித்திருந்தாள் குழலி.​

அந்த நொடி அவள் அடைந்த உவகைக்கு அளவே இல்லை. எனக்காகவும் ஒரு உறவு இருக்கிறது, நான் என்ன செய்ய இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்ட ஒருவர் இருக்கிறார்.​

எங்கு சென்றாலும் சொல்லிக்கொண்டு செல்ல எனக்கும் ஒரு உறவு இருக்கிறது என மனதாற சந்தோஷப்பட்டுக் கொண்டவள், அது கொடுத்த உத்வேகத்துடன் அழைப்பை ஏற்று, "மாமா நான் சென்னைக்கு கிளம்பிட்டேன்" உள்ளுக்குள் ஊற்றெடுத்த உவகையின் விளைவுடன் பேச்சைத் துவங்கினாள் குழலி.​

"தெரியும், ஆமா நீ ஏன் அழுத" முகமன் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்த கணவனை தன் மீது அக்கறை கொள்ளாமல் இருக்கிறானே என்று சற்று நேரத்திற்கு முன்னால் திட்டியது நினைவு வர மனமும் முகமும் ஒரு சேர மலர்ந்தது அவளுக்கு.​

"நான் அழுதேனா, இல்லையே அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல" என்க, "சமாளிக்காத, உன் குரலில் வித்தியாசம் நல்லாவே தெரியுது" அதட்டல் குரலில் சொன்னான் அவன்.​

"அது ஒன்னு இல்ல மாமா லேசா ஜலதோஷம் பிடிச்சிருக்கு" என்றாள். "பொய், மறுபடியும் மறுபடியும் என்கிட்ட பொய் சொல்ற நீ. எனக்கு இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கல. அழுதியான்னு ஒரு சின்னக் கேள்வி, அதுக்கு கூட உன்னால உண்மையான பதில் சொல்ல முடியல. இந்த அழகில் காலம் முழுக்க நீ எனக்கு உண்மையா இருப்பன்னு எப்படி நான் நம்புறது" தடாலடியாகக் கேட்டான்.​

கணவனின் வார்த்தைகளில் நிஜமாகவே பயந்து போனாள் அவள், "ஐயோ மாமா, எதுக்காக இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க. நான் அழுதது தெரிஞ்சா நீங்க கஷ்டப்படுவீங்கன்னு நினைச்சு தான் பொய் சொன்னேன்" ஒருவழியாக உண்மையின் பாதையில் காலடி எடுத்து வைத்தாள் அவள்.​

"கஷ்டமா இருந்தா அழுகிறது தப்பு இல்ல, ஆனால் பொய் சொல்றது ரொம்பப் பெரிய தப்பு. இன்னொரு தடவை என்கிட்ட பொய் சொல்லாத. எனக்கு கெட்ட கோவம் வரும்" அவன் கொஞ்சம் இறங்கி வர, "சாமி சத்தியமா இனிமே உங்க கிட்ட பொய் சொல்ல மாட்டேன்" என்றபடி தானும் இறங்கி வந்தாள் குழலி.​

"குட்... குறுக்க பேசாம நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கோ. நீ சென்னைக்கு காரில் தான் போகப் போற" என்க, அவன் நிபந்தனையை மறந்தவளாய், "இல்ல மாமா ட்ரெயின்" வாயைத் திறந்தாள் குழலி.​

"நான் பேசும் போது குறுக்க பேசக்கூடாதுன்னு சொன்னேன்" அழுத்தமாக சொல்ல, இவளுக்கு சுருக்கென்று தைத்தது. என்ன இது இத்தனை அழுத்தமான கட்டளை என்று தோன்றினாலும் அமைதியானாள்.​

"சொல்லுங்க" என்றவளின் ஸ்ருதி குறைந்தே இருந்தது.​

"நான் எது பண்ணாலும் அதுக்குப் பின்னாடி உன்னோட பாதுகாப்பு மட்டும் தான் இருக்கும். அதனால இப்ப நான் சொல்லப் போறதை என்ன ஏதுன்னு கேட்காம, அப்படியே பண்ணனும் சரியா" சரி என்று சொல்வதற்கான குறுகிய இடைவெளி தான் அது என்பது குழலிக்குப் புரியாமல் இல்லை.​

கட்டின பொண்டாட்டி என்கிட்ட முகத்தைக் கூட காட்டாமல் எங்கேயோ இருந்து இவர் ஆர்டர் போடுவாராம். கையைக் கட்டிக்கிட்டு சரிங்க மகாராஜான்னு நான் அப்படியே கேட்கணுமாம். நல்ல கதையா இல்ல இருக்கு, மனதிற்குள் நினைத்தாலும் வெளியே சொல்வதற்கு வாய் வரவில்லை அவளுக்கு.​

அவளுடைய அந்த நீண்ட மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு மேலே தொடர்ந்தான் அவள் கணவன். "சென்னை போய் சேர நாளைக்கு விடிஞ்சிடும். நடுவில் மூணு இடத்தில் டிரைவர் வண்டியை நிப்பாட்டுவான். அது பாதுகாப்பான இடம். அங்க போய் ப்ரஷ் ஆகிட்டு சாப்பிட ஏதாவது வாங்கிக்கோ. காலேஜ் அண்ட் ஹாஸ்டலில் எல்லாம் பேசியாச்சு. நாளைக்கு ஒருநாள் லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ.​

நீ கல்யாணம் ஆன பொண்ணுன்னு அங்க படிக்கிற எந்தப் பசங்களுக்கும் தெரியக்கூடாது. உன்னோட க்ளோஸ் ப்ரண்டு உன்னோட நல்லது கெட்டது எல்லாத்திலும் உனக்கு துணையாக இருந்த ஒருத்தி, உனக்கு நல்லது மட்டுமே நினைக்கிற ஒருத்தி, அந்த ஒருத்தி அது யாராயிருந்தாலும் அவகிட்ட மட்டும் எல்லாத்தையும் பகிர்ந்துக்கோ" அந்த ஒருத்தி யார் என்பதைப் பற்றிக் கூட தெரிந்திருப்பவன் போல் இருந்தது அவன் பேச்சு.​

ஏதோ நினைப்பில் சந்தோஷம் கொண்டவள் "சரிங்க மாமா" மென்மையாய் ஏற்றுக்கொண்டாள். "கழுத்தில் இருக்கிற தாலியை கழட்டுவதோ, மறைப்பதோ அது உன் விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன்" என்க, அவளுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது.​

"அபசகுணமா பேசாதீங்க" என்றவளுக்கு, "ஆமா உன் கல்யாணத்தில் எல்லாமே சகுனம் பார்த்து தான் நடந்தது பாரு" என்று மனசாட்சி இடித்துரைத்தது.​

அது ஓங்கிக் கொட்டிய கொட்டில், "என்னால தாலியைக் கழட்ட முடியாது. உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்துக்கிட்டே இருக்க முடியாது" உண்மையான தவிப்போடு சொன்னாள்.​

"நீ எந்தக் காலத்தில் இருக்க, என் உயிர் என்ன அந்த மஞ்சக் கயித்திலா தொங்கிக்கிட்டு இருக்கு" சொல்லும் போது எரிச்சல் மேலிட்டதோ அவனுக்கு மட்டுமே தெரியும்.​

"நீங்க என்னை எப்படி வேணாலும் சொல்லுங்க. என்னால தாலியை கழட்ட முடியாது. பல விஷயங்களில் நான் உங்க விருப்பத்துக்கு கட்டுப்படுறேன் என்றால் சில விஷயங்களில் நீங்க என் விருப்பத்தை மதித்து நடக்கத் தான் வேண்டும்" அவள் உறுதியாகச் சொல்ல அந்தப்பக்கம் இருந்தவனுக்கு கோவம் வந்தது.​

"சரி, தாலியை நீ கழட்ட வேண்டாம், கழுத்திலே போட்டுக்கோ. யாரு கேட்டாலும் ஆமா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லு. உன் புருஷன் என்ன பண்றான்னு கேட்டா ஜெயிலில் இருக்கான்னு சொல்லு" என்ற பதிலால் கலவரமடைந்தாள் குழலி.​

"யாராச்சும் கேட்டா நான் வேற மாதிரி சொல்லிக்கிறேன்" சமாளிப்பாக அவள் சொல்ல, அது இன்னமும் தான் கோபத்தைக் கிளறியது அவள் கணவனுக்கு.​

"எதை மாத்தி சொல்லப் போற. உன் புருஷன் வேலை பார்க்கிறான்னு சொல்லப் போறியா? இல்ல உன் புருஷனே வேற ஒருத்தன்னு சொல்ல போறியா?" நருக்கென்று கேட்ட விதத்தில் கண்கள் கலங்கியது அவளுக்கு.​

சமாளித்துக்கொண்டு, "மாமா நான் இப்ப சொல்றேன். எப்படி உங்களுக்கு பொய் பேசினால் பிடிக்காதோ, அதே மாதிரி என்னோட கேரக்டரை தப்பாப் பேசினா எனக்குப் பிடிக்காது. இன்னொரு முறை நீங்க இப்படி பேசாதீங்க" எச்சரிக்கை போலவே சொன்னாள்.​

"ஓஹோ கோவம் எல்லாம் வருமோ அம்மணிக்கு. நல்ல விஷயம் தான், கோபத்துக்கு கோபம் சரியாத் தான் இருக்கும். சரி அப்ப இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை நீயே சொல்லு" அவள் வழிக்கே வந்தான்.​

"தாலியைக் கழட்ட மாட்டேன். ஆனா நான் கல்யாணம் ஆனவன்னு யாருக்கும் தெரியாத மாதிரி பார்த்துக்கிறேன்" என்றாள்.​

"எப்படி இந்த தமிழ் சீரியலில் வர்ற மாதிரி தாலியை மறைச்சு வைச்சுக்கப் போறியா? அது அவ்வளவு ஈஸின்னு நினைக்கிறியா?" லாஜிக்காக கேட்டான்.​

"என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன். முடியலன்னா ஆமா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என் புருஷன் ஜெயிலில் இருக்கிறாரு. அதனால உனக்கு என்ன பிரச்சனைன்னு தைரியமா கேட்கிறேன்" ஒருவழியாக அவன் எதிர்பார்த்த பதிலைச் சொல்லி விட்டாள்.​

"சபாஷ்.... உன்னோட இந்த தைரியம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சீக்கிரமே மறுபடியும் கால் பண்றேன். நீ இப்ப கிளம்பு" என்றவுடன் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அதே நேரத்தில் டிரைவரும் தன்னுடைய போனை பாக்கெட்டில் போட்டு விட்டு காரில் ஏறினான். அதைக் கவனித்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவள்.​

அதிக வேகமும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் நிதானமாக நகர்ந்தது அந்த மகிழுந்து. அடுத்த நாள் காலை ஏழு மணி அளவில் தான் தங்கி படித்த அந்த கல்லூரி வாசலுக்கு வந்து சேர்ந்தாள் குழலி.​

"குழலி உங்க அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி, ரொம்ப சீரியஸா ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம். வழக்கமா உங்க அப்பா கூட வருவாரே ஒருத்தர் அவர் வந்து இருக்கார்" என்பது தான் இந்தக் கல்லூரியில் அவள் கேட்ட கடைசி வசனம். மீண்டும் இங்கே வருவோம் என்பதெல்லாம் அவள் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. அந்த நினைப்புடன் அவள் முன்னே நடக்க அவளுடைய உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு பின்னால் வந்தான் டிரைவர்.​

"ஐயோ அண்ணா, நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் அப்படியே நடந்து வந்துட்டேன். என்கிட்ட கொடுங்க நான் எடுத்துட்டு வரேன்" குழலி தன் உடைமைகளைக் கேட்க, ஒருநொடி டிரைவரின் முகம் எப்படியோ போனது.​

"நானே எடுத்துட்டு வரேன். இந்த ஹாஸ்டல், ஹாஸ்டலோட பாதுகாப்பு வசதி எப்படி இருக்குன்னு நானும் பார்க்கணும்" என்க, இதை நிச்சயம் தான் பார்த்திராத தன்னுடைய கணவன் தான் செய்யச் சொல்லி இருப்பான் என்று புரிந்ததால் அமைதியாக முன்னே நடந்தாள் குழலி.​

"போதும் அண்ணா இதுக்கு மேல ஆண்களை உள்ளே விட மாட்டாங்க" என்று ஓரிடத்தில் நிறுத்தி அவன் கைகளில் இருந்த தன்னுடைய உடமைகளை வாங்கிக் கொண்டு தான் முன்பு இருந்த அறையின் வாசலுக்கு வந்து சேர்ந்தாள்.​

"அண்ணனாம் அண்ணன்" பொருமிக்கொண்டு நகர்ந்தான் டிரைவர். குழலி அந்த அறையை விட்டுச் சென்று கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. தன் அறையில் தனக்குப் பதிலாக யாரையேனும் சேர்த்து இருப்பார்களா என்பது கூடத் தெரியாது. அதனால் முதலில் ஹாஸ்டல் வார்டனை சந்தித்து பேசிவிட்டு பிறகு இங்கு வரலாம் என்று நினைத்தவள் வார்டன் அறைக்குச் சென்றாள்.​

வார்டனின் அறையில் அவருடன் தங்கி இருந்தவர், வார்டன் ஹாஸ்டலோடு இணைந்திருக்கும் சிறிய பிள்ளையார் கோவிலுக்குச் சென்று இருப்பதாக சொல்ல அங்கே சென்றாள் குழலி.​

குழலி அங்கு சென்ற நேரம், இவள் வந்த காரின் டிரைவர் அவரிடம் ஏதோ பேசிவிட்டு ஒரு கட்டு நிறைய பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.​

"மாமா எதுக்காக டிரைவர் கிட்ட சொல்லி வார்டனுக்குப் பணம் கொடுக்கணும்" குழலி யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இவளைக் கண்டுகொண்ட வார்டன் அருகில் வந்தார்.​

"குழலி எப்படிமா இருக்க, அவர் நடந்த எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாரு. நீ எதுக்கும் கவலைப்படாத. நீ இங்கே இருக்கிற மூணு வருஷமும் உன்னோட பாதுகாப்புக்கு நான் கிராயண்டி" என்றார் அவர்.​

தூக்கி வாறிப் போட்டது குழலிக்கு, "மூணு வருஷமா, ஆனா இது தானே என்னோட கடைசி வருஷம்“ புரியாமல் கேட்டாள்.​

"உன்னோட கார்டியன் உன்னை இங்கேயே ஹையர் ஸ்டடீஸ் பண்ணச் சொல்லி அட்வான்ஸ்ஸா அட்மிஷன் எல்லாம் போட்டுட்டு போயிட்டாரே, உன்கிட்ட சொல்லலையா. இல்ல மறந்துட்டியா?" வார்டன் கேட்கவும், என்னுடைய முடிவை எனக்குப் பதிலாக எடுப்பதற்கு அவர் யார்? என முதலில் கோவம் கொண்டவள், பிறருக்கு முன்னிலையில் தன்னுடைய புகுந்த மனையை விட்டுக் கொடுக்க மனம் வராமல், "இல்ல என்கிட்ட சொன்னாங்க, நான் மறந்துட்டேன்" என்று சொல்லி சமாளித்தாள்.​

"ஓகே... உன்னோட ரூமில் உனக்கான இடம் இன்னும் வேக்கண்ட்டா தான் இருக்கு. சோ நீ அங்கேயே கண்டின்யூ பண்ணிக்கோ. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் உன்னோட செலவுக்காக மொத்தமா பணம் என்கிட்ட கொடுத்துட்டு போயிருக்காங்க. எப்ப வெளியே போகணுமோ அப்ப என்கிட்ட இருந்து கேட்டு வாங்கிட்டு போ" தன்மையாகவே சொன்னார்.​

"இதை என்கிட்ட கொடுக்கிறதுக்கு என்னவாம்" என்று உள்ளுக்குள் நினைத்தாலும் வழக்கம் போல் வெளியே தலையாட்டி வைத்தாள் அவள்.​

அவள் மனம் புரிந்தவராக, "உன் கையில் காசு இருந்தா ஏதாவது ஒரு சூழ்நிலையில் என்கிட்ட சொல்லத் தோணலாமல், இல்ல சொல்ல முடியாமல், நீ பாட்டுக்கு கிளம்பி போய் உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு உன்னோட கார்டியன் பயப்படுறாங்க. அதனால் தான் இப்படி ஒரு யோசனை" பெருமையாகச் சொன்னார் வார்டன்.​

இதை நினைத்து வருத்தப்படுவதா, சந்தோஷப்படுவதா, கோவப்படுவதா? சுத்தமாகப் புரியவில்லை குழலிக்கு.​

 
Last edited:

ஆட்டம் 6​

குழலி விடுதிக்குள் செல்வதை சற்று தொலைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் அவள் கணவன். அப்போது அலைபேசி சத்தம் எழுப்ப, யாரென்று கூடப் பார்க்காமல் அழைப்பை ஏற்று காதில் வைத்தான். அனிச்சை செயலாக நடந்தது அந்தச் செயல், அவன் கவனம் மொத்தத்தையும் அவள் எடுத்துச்சென்றுவிட்டாளே.​

"துரை எங்கடா இருக்க கண்ணா" தாயின் குரலில் நினைவுக்கு வந்தவன், சட்டென்று சுதாரித்து அவரின் கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில், "சென்னையில்" என்றான்.​

"குழலியைப் பார்த்தியா" என்ற அடுத்த கேள்வியால் மீண்டும் மோனநிலைக்குச் சென்றவன், "பார்த்தேன், ரொம்ப அழகா இருந்தா" தன்னையும் மீறி உளறினான்.​

"ம்க்கும் இதையா நான் கேட்டேன்" என்று மனதில் நினைத்துக் கொண்டு, "ஆமா அவளுக்குத் தனியா வீடு பார்த்து இருக்கிறதா தானே சொன்ன, இப்ப என்ன திடீர்னு ஹாஸ்டலில் போய் விட்டுட்ட" என்கவும் தான் பார்த்து வைத்திருக்கும் வீட்டைச் சுற்றிலும் அந்நிய நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வந்த செய்தியை நினைத்து அழுத்தமாக கண்களை மூடித் திறந்து கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஹாஸ்டல் தான் அவளுக்கு பாதுகாப்புன்னு தோணுச்சு. அதனால் தான் முடிவை மாத்திக்கிட்டேன்“ என்றான்.​

“சரியான நெஞ்சழுத்தக்காரன், நடந்த எதையும் முழுசா சொல்ல மாட்டான். அவன்கூட எப்படித்தான் இந்த குழலிப்பொண்ணு குப்பை கொட்டப் போகுதோ தெரியலையே“ முனகத்தான் செய்தார் என்றாலும் அது அவன் காதில் விழுந்தது.​

தனிவீடு வேண்டாம், ஹாஸ்டலில் தங்கிக்கொள்ளும் முடிவுக்கு அவளைச் சம்மதிக்க வைப்பதற்கு அவன் போராடிய போராட்டம் நினைவு வர, இதழ்களுக்குள் சின்னப்புன்னகை. கர்வமாக மீசையை முறுக்கி விட்டுக்கொண்டான் அவன்.​

"போடா, வரவர என்னால உன்னைப் புரிஞ்சிக்கவே முடியல. சொல்றது ஒன்னு, செய்யுறது ஒன்னு. இப்ப அந்தப் பொண்ணு அவளுக்காக நீ பண்ணதா நான் சொன்ன எல்லாமே பொய்யுன்னு தானே நினைப்பா" வடிவு மிகவும் சிறிய கோபத்தில் கேட்டார். மகனாகவே இருந்தாலும் அவன் மீது அதிக கோபம் கொள்ள அவர் என்றுமே முயன்றதில்லை.​

"அவ உங்களைப் பத்தி என்ன நினைச்சா எனக்கென்ன, எனக்குத் தேவை அவளோட பாதுகாப்பு. அதுக்காக இன்னும் என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன்" என்றான்.​

“இந்த அளவு அவ பாதுகாப்பு மேல அக்கறை இருக்கிறவன் எதுக்காக அவளை அங்க போகச் சொன்ன. நீ சொல்லி நான் கேட்கும் வரை அவளுக்கு படிக்கணும் என்ற நினைப்பு கொஞ்சமும் இல்ல தெரியுமா? இந்தக் கண்ணாம்பூச்சி விளையாட்டை எல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு, நீ நம்ம வீட்டில் அவளோட சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம். நானும் பேரனோ பேத்தியோ பார்த்து இருப்பேன்“ வடிவு தன் ஆதங்கத்தைச் சொல்லவும், "அம்மா நான் அப்புறம் பேசுறேன்" என்றுவிட்டு போனை பட்டென்று அணைத்துவிட்டான் அவர் மகன்.​

"ஆமா பண்றது எல்லாத்தையும் ஒன்னுவிடாம பண்ணிடுவான். நான் ஏதாவது ஒன்னு சொன்னா உடனே கோபம் பொத்துகிட்டு வந்துடும் துரைக்கு. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்கிட்ட தானே வந்து நிப்பான் அப்ப பார்த்துக்கிறேன்" தனக்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் வடிவு.​

இங்கே, குழலி சில மாதங்களுக்கு முன்பு வரை தான் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்ட, கொட்டாவி விட்டுக் கொண்டே கதவை திறந்தாள் கனிமொழி, குழலியின் நெருங்கிய தோழி.​

"ஹலோ சிஸ்டர், நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் வரீங்களா? நான் இப்ப தான் சொர்க்கத்தில் இருந்து திரிசங்கு சொர்க்கத்துக்கு வந்து இருக்கேன், பூமிக்கு வர இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். தூக்கக் கலக்கத்தில் நீங்க என்னோட ஃப்ரண்ட் மாதிரி வேற தெரியுறீங்க" கண்கள் சொருகிய நிலையில், போதையில் பேசுவது போல அவள் சொல்ல, குழலிக்கு தன்னால் சிரிப்பு வந்தது. நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு நன்றாகச் சிரித்தாள்.​

சிதறிய கொலுசு முத்துக்களைப் போல் கேட்ட சிரிப்புச் சத்தம், உறங்குவதற்காக மேக மெத்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கனிமொழியை பூலோகத்துக்கு கொண்டு வந்தது.​

தோற்றத்தைப் போன்றே குரலும் தோழியை நினைவுபடுத்த கண்களை நன்றாக கசக்கி கொண்டு தெளிவாகிப் பார்த்தாள் பெண். கண் முன் நிற்பவள் சாட்சாத் தன் தோழி குழலியே என்று உறுதியாகவும் இரண்டே எட்டில் நெருங்கி அணைத்துக்கொண்டாள் அவள்.​

"குழலி நீ நிஜமாவே வந்துட்டியா. இனிமேல் உன்னைப் பார்க்கவே முடியாதோன்னு நான் ரொம்ப வருத்தப்பட்டேன் தெரியுமா? வா வா உள்ள வா. நம்ம ரூமில் உள்ள கட்டில், மெத்தை, ஃபேன், லைட் எல்லாமே உன்ன ரொம்ப மிஸ் பண்ணுச்சு" தவளை போல் தன்னால் ஏதோதோ பேசினாள் அவள். அத்தனையும் தன்னைப் பார்க்காத அவளுடைய ஏக்கம் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது குழலியால்.​

"அப்ப கடைசி வரைக்கும் நீ என்னை மிஸ் பண்ணவே இல்லையா?" வேண்டும் என்றே கேட்டாள்.​

"போடி பைத்தியம், நான் உன்னை எந்த அளவு மிஸ் பண்ணேன்னு உனக்குத் தெரியாது. அவ்வளவு ஏன் அது எனக்கும் தெரியாது" வளவளத்தாள் பெண்.​

"சரி சரி தூக்கத்தில் ரொம்ப உளறாதே. நான் போய் ரெடியாகி வரேன். இரண்டு பேரும் போய் காபி சாப்பிடலாம்" என்றுவிட்டு பாத்ரூம் உள்ளே சென்ற என்ற குழலி வெளியே வரும் போது காபியுடன் தயாராக இருந்தாள் கனிமொழி.​

"ஏய் நீ பல்லு விளக்கலையா?" என்க, "ஏய் என்னடி கொஞ்ச நாளா நீ இங்க இல்ல என்றவுடன் என்னோட பழக்கத்தையே மறந்துடுவியா. நான் என்னைக்கு பல் விளக்கிட்டு காபி குடிச்சேன்" என்னவோ தான் கடைபிடிப்பது மிகவும் நல்ல பழக்கம் என்பது போல வீராப்பாகப் பேசும் பெண்ணைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது குழலிக்கு. கனி அப்படித்தான், எப்போதும் கலகலவென்று இருப்பாள் அவளைச் சுற்றி இருக்கும் நபர்களையும் கலகலப்பாக வைத்துக்கொள்வாள்.​

"என்னை சைட் அடிச்சது போதும், எப்பவும் நீ தான் எனக்கும் சேர்த்து காபி கொண்டு வருவ. இன்னைக்கு ஏதோ ஒரு நாள் பாவம் புள்ள ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கன்னு நான் கொண்டு வந்தேன். பட் நாளையில் இருந்து வழக்கம் போல நீ தான் காபி கொண்டு வந்து என்னை எழுப்புற" என்றவள் சிறிது நிறுத்தி, "குழலி நீ இல்லாத இத்தனை நாளா நான் தனியா ரொம்பவே கஷ்டப்பட்டேன்" ஒருவித ஏக்கத்துடன் சொன்னாள்.​

"சரிடி, இனிமேல் உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் ஓகே வா. காபி ஆறுவதற்குள்ள குடிச்சிடலாம் எழுந்து வா. நம்ம ஹாஸ்டல் காபி குடிச்சு ரொம்ப நாளாச்சு, ரொம்ப ஆசையா இருக்கு" சொல்லிக்கொண்டே ஆவி பறக்கும் காபி டம்ளரை கையில் எடுத்து வாயில் வைக்கப் பார்க்க, ஏய் என்று குரல் கொடுத்தாள் குழலி. மறக்கல டி எருமை என்று சிரித்தவள் புன்னகையுடன் சியர்ஸ் சொல்லிவிட்டு குடிக்க ஆரம்பித்தாள்.​

குடித்த காபி தொண்டையில் இறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக குழலியின் கழுத்திலில் இருந்த மஞ்சள் கயிற்றைக் கண்டுகொண்ட கனிமொழி அதிர்ச்சியில் காபியை துப்பியேவிட்டாள்.​

"ஏய் லூசு, பார்த்து டி" என்றபடி அருகே வந்த குழலி அவளுடைய தலையைக் தட்ட கையை உயர்த்த அதைத் தடுத்த கனி, "ஏய் எனக்கு ஒன்னும் இல்ல, ஆமா இந்த இடைப்பட்ட காலத்தில் உனக்கு என்ன ஆச்சு. இது என்ன கழுத்தில் மஞ்சள் கயிறு" என்றுவிட்டு தன்னுடைய கையாலே அதை வெளியே எடுத்தாள் கனி.​

"தாலியா? அடக்கடவுளே, கல்யாணம் ஆகிடுச்சா உனக்கு. எப்ப, எப்படி, யார் கூட" பதற்றத்தில் கேள்விகளை அடுக்கினாள் அவள்.​

"ஏய், இரு இரு… எதுக்காக இப்ப இப்படி கத்திக்கிட்டு இருக்க. ஆமா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இப்ப என்ன அதுக்கு" சாதாரணமாகக் கேட்டுக்கொண்டே காபியைக் குடிக்கத் துவங்கினாள்.​

"இப்ப என்ன அதுக்கா, பாவி என்னடி இவ்வளவு சாதாரணமா சொல்ற. கல்யாணம் எல்லாம் பெரிய விஷயம் தெரியுமா? ஆமா கழுத்தில் தாலி இருக்கு, ஆனா நெற்றி வகிட்டில் குங்குமம் இல்ல. மெட்டியாவது போட்டு இருக்கியா இல்லையா" என்றுவிட்டு காலைப் பார்க்கிறேன் என்று குழலியை அவள் சாய்க்க அவளோ ஏய் என்ற கத்தலுடன் அமர்ந்திருந்த மெத்தையில் மல்லாக்க விழுந்தாள்.​

கனியோ செயலில் கவனமாகி, "மெட்டியை எங்கடி காணும். ஏய் என்கிட்ட மறைக்கமா உண்மைய சொல்லு. இந்தக் கல்யாணம் உன் இஷ்டப்படி நடந்ததா இல்லை யாராவது கட்டாயப்படுத்தினாங்களா? இஷ்டம் இல்லாததால் தான் மெட்டி குங்குமம் எதுவும் வைச்சிக்காம இருக்கியா“ மனதில் தோன்றிய கற்பனைகளுக்கு எல்லாம் உருவம் கொடுக்க ஆரம்பித்தாள் கனி.​

"இதுக்குத் தான் கண்ட கண்ட படத்தையும், சீரியலையும் பார்க்காதன்னு சொல்றது. எனக்கு நீ பயப்படும் படியா எதுவும் நடக்கல. நான் என்னோட முழு மனசோட தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டேன்.​

அப்புறம் ஏன்டி மெட்டி போடல, குங்குமம் வைச்சுக்கலன்னு கேட்காத. எனக்குத் தோணல, என் மாமாவுக்கும் இதில் எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை. சொல்லப் போனா உனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சா எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க, அதனால் தாலியைக் கூட கழட்டி வைச்சிடுன்னு என்கிட்ட சொன்னாரு" என்றாள்.​

"என்னடி, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியா தர. பொண்ணுங்களோட உணர்வுக்கு இவ்வளவு தூரம் மதிப்பு கொடுக்கும் ஆட்கள் கூட இருக்காங்களா என்ன?“ ஆச்சர்யமாகத் தான் வந்தது கனியின் வார்த்தைகள்.​

"மத்தவங்களைப் பத்தி எனக்கு தெரியாது, ஆனா என் மாமா இப்படித் தான்" பெருமையாக வந்தது குழலியின் குரல்.​

"இதோ பாருடா, மாமாவாமே. ரொம்ப தான் பாசம் பொங்குது. ஆமா உன் புருஷன் பேர் என்ன? என்ன பண்றார்? முதன் முதலில் எங்க பார்த்த? லவ் மேரேஜா அரேஞ்ச் மேரேஜா"
கனியின் கேள்விக்கு பதில் சொல்ல குழலி வாய் திறக்கும் நேரம், "ஒருநிமிஷம் இரு. நீ எதுவும் சொல்ல வேண்டாம், என்ன நடந்திருக்கும் என்று நான் கெஸ் பண்றேன். உன் மூஞ்சிக்கு லவ் மேரேஜ் எல்லாம் செட்டாகாது. சோ கண்டிப்பா இது அரேஞ்ச் மேரேஜா தான் இருந்திருக்கும்.​

நீ இங்க இருந்து போய் இருப்ப, உங்க அப்பாவை காப்பாத்த முடியாது கடைசியா ஏதாவது பேச ஆசைப்பட்டா பேசிக்கோங்கன்னு டாக்டர் சொல்லி இருப்பாரு. நீ அழுதுகிட்டே உள்ள போய் இருப்ப.​

உங்க அப்பா உன் மாமாவைக் கைகாட்டி இவரைக் கல்யாணம் பண்ணிக்கோ, அப்ப தான் என் ஆத்மா சாந்தி அடையும் என்று சொல்லி இருப்பாரு. நீயும் சரி சரின்னு பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி இருப்ப.​

பயத்தோட தான் கல்யாணம் பண்ணி இருந்திருப்ப. ஆனால், முதலிரவில் உன் மாமா ஏதாவது பண்ணி உன்னை மயக்கி அவரோட புகழ் பாட வைச்சிருப்பாரு சரியா" கிட்டத்தட்ட சரியாகவே கணித்தாள் அவள்.​

குழலி பதில் சொல்லாமல் புன்னகைக்க, “என்னடி புதுசா வெட்கம் எல்லாம் வருது. அதெல்லாம் நமக்கு ஒத்துவராத சப்ஜெக்ட் ஆச்சே, இப்ப வருதுன்னா சொல்லிக்கொடுத்தது உன் மாமா தானா? உண்மையைச் சொல்லு என் தோழியா மட்டும் தானே வந்து இருக்க? இல்லை கூடுதலா யாரையாவது கூட்டிட்டு வந்து இருக்கியா?“ என்றவண்ணம் குழலியின் வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள் கனி.​

"போடி லூசு நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல" என்றவள் இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி முடித்தாள். அவளுக்கு இருந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் அப்படியும் இப்படியுமாக அவளே ஏதோதோ சமாதானங்கள் சொல்லிக்கொண்டதால் கனியிடம் சொல்வதற்கு அவளுக்குத் தயக்கம் எதுவும் இல்லை.​

"ஏய் என்னடி சொல்ற, நீ உன் புருஷன் முகத்தை ஒருமுறை கூட பார்த்ததில்லையா? நான் படிக்கும் கதைகளில் கூட இப்படியெல்லாம் நடந்தது இல்லை, ரொம்பவும் வித்தியாசமா இருக்கே" படபடத்தாள் கனி. தோழியின் வாழ்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் அத்தனை பதற்றம் அவளுக்கு.​

"என்னடி, பதினாலு வருஷமா ஜெயிலில் இருக்குற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணி இருக்கேன். அதைப் பற்றியோ, இல்லை இப்ப அவருக்கு எத்தனை வயசு இருக்குமோன்னு நினைச்சு ஆச்சரியப்படுவன்னு பார்த்தா இதுக்கு போய் ஆச்சரியப்படுற" சாதாரணமாகவே கேட்டாள்.​

"இல்லடி இந்தக் காலத்துல உணர்ச்சிவசப்பட்டு நிறைய பேர் தப்பு பண்ணிடுறாங்க. அதுக்கப்புறம் தான் அவங்க பண்ணது தப்புன்னே அவங்களுக்குத் தெரிய வருது. அப்படி உணர்ச்சிவசப்பட்ட நபரா உன் மாமா இருக்க வாய்ப்பு இருக்கு.​

ஏன்னா ஒரு அப்பாவுக்குத் தெரியாதா? தன்னோட பொண்ணுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கணும் என்று. உன் அப்பா உனக்காக மோசமானவரையோ இல்லை வயசானவரையோ மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்து இருப்பாருன்னு எனக்குத் தோணல. அதனால எனக்கு அதைப் பத்தி எல்லாம் எந்தச் சந்தேகமும் வரல. ஆனா இந்த விஷயம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. அவரு திட்டம் போட்டு உன்னை சந்திக்காமல் இருக்காரோன்னு எனக்குத் தோணுது" தன் சந்தேகத்தைச் சொன்னாள் கனி.​

"அப்படியெல்லாம் இல்லடி, அவர் என்னைப் பார்க்க வந்திருக்காரு. நான் தான் வெட்கமில்லாம தூங்கிட்டேன்" கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் குழலி.​

"சரி அதை விடு, உன் புருஷனோட போட்டோ ஒன்னு கூட வீட்டில் இல்லைன்னு சொல்றதை உன்னால நம்ப முடியுதா?" என்றவளுக்குப் பதிலாக, "எனக்கும் முதல்ல கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்துச்சு. அதுக்கு அப்புறம் தான் அத்தை சொல்லி புரிய வைச்சாங்க. அவரு பதினாலு வருஷமா ஜெயிலில் இருக்காரு. அவருக்கு வயசு கொஞ்சம் கூடி இருக்கும்.​

அவர் திரும்பி வரும் இந்த நேரத்தில் பழைய போட்டோக்களைப் பார்த்தா, எவ்வளவு சந்தோஷமான நாட்களை நாம இழந்துட்டோம் என்று அவர் வருத்தப்படுவாருன்னு தான் பழைய போட்டோஸ் எல்லாத்தையும் எடுத்திட்டதா சொன்னாங்க" நம்பிக்கை தரும் விஷயங்களைக் கோர்த்து சொன்னாள்.​

"என்னடி நீ என்னென்னமோ கதை சொல்ற. நீ நல்ல குடும்பத்தில் தான் வாழ்க்கைப்பட்டு இருக்கியான்னு எனக்கு மனசு பக் பக்குன்னு அடிக்கிது" துடிக்கும் நெஞ்சத்தின் மீது கை வைத்துக் கொண்டு கேட்டாள் கனி.​

"எனக்கு ஒன்னும் இல்ல கனி, நான் நல்லா இருக்கேன். என் மாமா என்ன ரொம்ப நல்லா பார்த்துக்கிறார்“ பாதி உண்மையைச் சொன்னாள்.​

"அடிப் போடி இவளே, கல்யாணமான அன்னைக்கே விட்டுட்டு ஜெயிலுக்கு திரும்பப் போனவரைப் போய் பாசம் வைச்சிருக்காரு அது இதுன்னு சொல்ற. எனக்கு என்னமோ இதில் நிச்சயம் உனக்குத் தெரியாம ஏதோ விஷயம் இருக்கிற மாதிரி தான் தோணுது.​

ஒன்னு உங்க அத்தை தான் அவரைக் கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்து இருக்கணும், இல்லையா வேற ஏதாவது ஒரு காரணம் இருக்கணும், இல்லாமப் போனா உன்னைச் சந்திப்பதை அவர் ஏன் தள்ளிப்போட்டுக்கிட்டே போகணும்" சரியாகக் கேட்டாள்.​

"ஆனா என் மாமா என்கிட்ட இரண்டு முறை போனில் பேசி இருக்காரு. அப்ப எல்லாம் எவ்வளவு சந்தோஷமா என்கிட்ட பேசினார் தெரியுமா?" அவர் உன்கிட்ட சந்தோஷமாப் பேசினாரா என்ன ஒரு பொய் என்று கேட்டது அவள் மனசாட்சி. சரி கொஞ்சம் பாசமாப் பேசினாரு போதுமா? என்று அதன் தலையில் தட்டி அடக்கி வைத்தவள் தன் தோழியைத் திரும்பிப் பார்க்க அவளோ ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.​

"ஜெயிலுக்குள்ள இருந்துக்கிட்டே உன்கிட்ட போனில் பேசினாரா?" சந்தேகமாகக் கேட்டாள்.​

"ஆமா, அது மட்டும் இல்லை. எனக்காகவே லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன் ஒன்னு வாங்கி கொடுத்து இருக்கார்“ என்று வேகமாக அதை எடுத்துக் காட்டியவள், “இப்பச் சொல்லு அவருக்கு என் மேல பாசம் இருக்கா இல்லையா?" என்று கேட்க, அவளோ இவளைப் பரிதாபமாக பார்த்தாள்.​

"குழலி எல்லோருமா சேர்ந்து உன்னை ஏமாத்துறாங்களோன்னு தோணுது டி. ஜெயிலில் இருக்கிற ஒரு கைதி எப்படி உன்கிட்ட போனில் பேச முடியும். நீயும் குழந்தை மாதிரி நம்புறியே" பாவமாய் பார்த்தாள் கனி.​

"இல்லடி மாமாவுக்கு ஊரில் கொஞ்சம் செல்வாக்கு அதிகம். அதனால மாமா கிட்ட இருக்கிற செல்போனை அங்க இருக்கிற யாரும் வாங்காமல் இருந்திருக்கலாம் இல்லையா" விடாமல் பேசினாள் குழலி.​

“மண்ணாங்கட்டி, என்னடி நீ இப்படி இருக்க. அந்த ஜெயில் என்ன உங்க ஊரிலா இருக்கு. அங்க இருக்கிற எல்லோரும் உன்னோட மாமாவைப் பார்த்து சலாம் போட. முதலில் உன் மாமா எந்த ஜெயிலில் இருக்காரு அதுவாச்சும் தெரியுமா உனக்கு“ என்ற கேள்விக்கு அவள் விழிப்பதை வைத்தே, தெரியாது இல்ல, “ நான் தெரியாமத் தான் கேட்கிறேன் நீ படிச்ச பொண்ணு தானே, யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா? உங்க மாமா என்ன ஊழல் வழக்கில் உள்ள போன அரசியல் வாதியா, எல்லா ஜெயிலிலும் அவருக்கு செல்வாக்கு இருக்க. எனக்கென்னவோ அவர் ரிலீஸ் ஆகி இருந்துக்கிட்டே உன்கிட்ட கண்ணாம்பூச்சி ஆடிக்கிட்டு இருக்காரோன்னு தோணுது" விஷயத்தை சரியாகப் பிடித்தாள் கனி.​

 

ஆட்டம் 7​

"கனி என்னடி ஏதோதோ சொல்ற, எனக்கு பயமா இருக்குடி" தவித்தவளைப் பார்க்க கனிக்குமே ஒரு மாதிரித் தான் இருந்தது.​

"நான் உன்ன பயமுறுத்துறதுக்காக சொல்லல குழலி. நடப்பைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோணுதோ அதைத் தான் சொன்னேன்" கனி இப்படிச் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, "மாமா காலிங் மாமா காலிங்" என்று அவளுடைய செல்போன் அலறியது.​

"யாரு உன்னோட மாமாவா போன் பண்றது. என்கிட்ட கொடு, நான் என்னன்னு கேட்கிறேன்" என்றபடி செல்போனை வாங்க வந்தாள் அவள்.​

“வேண்டாம் கனி நீ சும்மா இரு, மாமாவுக்கு இது எதுவும் பிடிக்காது. அப்புறம் அவரு என் மேல தான் கோச்சுப்பாரு" என்றவளை என்ன செய்வது என்பது போலக் கோபமாகப் பார்த்தாள் கனி.​

"ஏய் பைத்தியம் மாதிரி பண்ணாத, போனை என்கிட்ட கொடு" என்று அவளிடம் இருந்து போனை பறித்துக் கொண்டு தான் அந்த அழைப்பை ஏற்றாள் கனி.​

"குழலி, ஹாஸ்டல் போயிட்டியா" என்று காதிற்குள் ஒலித்த குரலின் வலிமை மற்றும் ஆளுமையை வைத்தே இந்தக் குரலுக்குச் சொந்தக்காரருக்கு எப்படியும் முப்பத்தைந்து வயதுக்கு அதிகம் இராது என்பதை உணர்ந்தாள்.​

"நான் கனி குழலியோட ப்ரண்ட், என் பெயர் கனிமொழி" என்கவும், எதிர்ப்பக்கம் சில நொடிகள் தாமதித்து பின் பதில் வந்தது.​

"ஓ... குழலி எங்க" என்க, "அவ என் பக்கத்தில் தான் இருக்கா. நான் அவ கிட்ட போன கொடுக்கணும் என்றால் என்னோட சில கேள்விகளுக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லணும்" அதிரடியாகவே ஆரம்பித்தாள். எதிர்ப்பக்கம் இருந்தவனுக்கு அதில் அவ்வளவு பிடித்தம் இல்லை.​

"எது பேசுறதா இருந்தாலும் போனை ஸ்பீக்கரில் போட்டு பேசுங்க கனி" சிரமப்பட்டு மரியாதை கொடுப்பது போல் தோன்றியது கனிக்கு. அது தான் நிஜமும் கூட.​

"போட்டாச்சு" கனி சொல்லவும், அதற்காகவே காத்திருந்தது போல், "குழலி, என்னாச்சு உனக்கு. எதுக்காக போன் பக்ககத்தில் இருந்துகொண்டே யாரோ ஒருத்தரை என்கிட்ட பேசச் சொல்ற" மிகவும் கடுமையான குரல், வெகு சில நொடிகள் மட்டுமே அவனோடு அலைபேசியில் பேசி இருந்த போதும், அவன் கோபத்தில் இருக்கிறான் என்பதை குழலியால் கணிக்க முடிந்தது.​

"ஹலோ சார், இப்ப எதுக்கு அவளைத் திட்டுறீங்க. அவ ஒன்னும் என்னை உங்க கிட்ட பேசச் சொல்லல. நான் தான் உங்ககிட்ட பேச நினைச்சேன்" தானும் கோபம் காட்டினாள் கனி.​

"நீங்க யார் என் கிட்ட பேசுறதுக்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்" கோபமாகவே கேட்டான். "நீங்க குழலியோட புருஷன் தானே, நான் அவளோட ப்ரண்டு. அவளுக்கு நல்லது கெட்டதை யோசிக்கிறதுக்கு உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உரிமை எனக்கும் இருக்கு" உரிமைப் போராட்டம் நடத்தினாள்.​

"அவ்வளவு உரிமை உங்களுக்கு இருக்கு என்றால், அதை அவளோட மட்டும் நிறுத்திக்கோங்க. என்கிட்ட எதுக்காக காட்டிகிட்டு இருக்கீங்க" என்றான், ஏனோ இப்போது கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது.​

"எனக்கு உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும். அந்தக் கேள்விகளுக்கு, நீங்க பதில் சொல்லும் வரைக்கும் நான் போனை குழலி கிட்ட கொடுக்க மாட்டேன்“ தான் செய்வது விதண்டாவாதம் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் வேண்டும் என்றே செய்தாள் கனி. அவளுக்கு குழலி சேர்ந்திருக்கும் இடத்தைக் குறித்து உள்ளுக்குள் எழும்பிய சந்தேகத்தைத் தீர்த்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்க, அதற்கேற்றபடி செயல்பட்டாள்.​

"ஓஹோ அப்ப உங்களோட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னா தான் அந்த மேடம் என்கிட்ட பேசுவாங்க அப்படித்தானே" இறங்கிய கோபம் நொடியில் இருமடங்காக ஏறியிருக்க, அதை அப்படியே வார்த்தைகளில் காட்டினான்.​

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மாமா. கனி என்மேல் இருக்கிற பாசத்தில் ஏதோ அவசரப்பட்டு பேசிட்டா. நீங்க யாருக்கும் எந்தப் பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடந்ததைப் பெருசா எடுத்துக்காதீங்க" சொல்லிக்கொண்டே குழலி தன் போனை கனியிடம் இருந்து பிடுங்கப் பார்த்தாள்.​

"இதுதான் குழலியோட மனசு. வயசுக்கு ஏத்த பக்குவம் இருந்தாலும் மனிதர்களை எடைபோடும் அளவு அவளுக்குச் சாமர்த்தியம் பத்தாது. அதனால் தான் கல்யாணம் ஆன நிமிஷத்தில் இருந்து சமாளிப்புக்காக நீங்களும் உங்க அம்மாவும் சொன்ன எல்லாத்தையும் அவ அப்படியே நம்பிக்கிட்டு இருக்கா பைத்தியக்காரி. அவளை யாரும் எதுக்காகவும் ஏமாத்திடக்கூடாது என்பது தான் என்னோட ஒரே கவலை. என்னோட சில கேள்விகளுக்கு பதில் சொல்றதால நீங்க எந்த விதத்தில் குறைந்து போயிடுவீங்க" கணவன் மனைவி இருவருக்கு இடையில் நாட்டாமை செய்ய தனக்கு எந்த விதத்திலும் அதிகாரம் இல்லை என்பது புரிந்த போதிலும், இதெல்லாம் உனக்குத் தேவைதானா என்ற மனசாட்சியின் குரலை ஒதுக்கி வைத்துவிட்டுத் தான் அவனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்.​

"கனி போதும் இதோட நிறுத்து. அவர் என் மாமா, எங்க வாழ்க்கை சம்பந்தமா அவர் யாருக்கும் எந்த பதிலும் சொல்லத் தேவை இல்லை. எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு, எங்க வாழ்க்கைக்கு அது போதும்" என்றுவிட்டு போனை பறித்துக்கொண்டு சென்றாள் குழலி.​

நம்பிக்கை என்ற அவளுடைய வார்த்தையில் மொத்த கோபமும் மறைந்து புன்னகை வந்தது அவன் உதடுகளில், அதே மனநிலையுடன், "அந்தப் பொண்ணுக்கு என்ன பிரச்சனை, என்கிட்ட என்ன கேட்கணுமாம்" இறங்கி வந்தான்.​

"கல்யாணம் ஆன நிமிஷத்தில் இருந்து நீங்க திட்டம் போட்டு உங்களோட முகத்தைக் கூட எனக்கு காட்டாம இருக்கீங்கன்னு அவ லூசு மாதிரி புலம்பிக்கிட்டு இருக்கா" என்றாள் பெண்.​

"நான் உன்கிட்ட நிறைய பேசணும் என்று போன் பண்ணேன். ஆனா உன்னோட ப்ரண்டு என்னோட மூடை ரொம்பவே ஸ்பாயில் பண்ணிட்டாங்க, நான் அப்புறம் கால் பண்றேன்" என்றுவிட்டு வைத்துவிட்டான் அவன்.​

போனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு மெதுவாகக் கனியிடம் வர அவள் முகத்தை வேகமாக திருப்பிக் கொண்டாள்.​

"கனி ப்ளீஸ்பா, புரிஞ்சுக்கோ. நீ நினைக்கிற மாதிரி என் மாமா தப்பானவங்க எல்லாம் கிடையாது. சில மர்மங்கள் அவர்கிட்ட இருக்கு தான், ஆனா அவங்களுக்கு என் மேல ரொம்பப் பாசம் இருக்கு.​

நீயே சொல்லு, என்கிட்ட பேச நினைத்து போன் பண்ணும் போது நான் எடுக்காம நீ எடுத்ததே தப்பு. அதுவும் இல்லாம நீ எடுத்த எடுப்பிலேயே கத்த ஆரம்பிச்சுட்ட. அதனால அவரும் கோபத்தில் கத்த ஆரம்பிச்சுட்டார். இதில் அவர் மேல என்ன தப்பு இருக்கு சொல்லு" கணவனுக்கு கொடி பிடித்தவளை பாவமாகத் தான் பார்க்கத் தோன்றியது கனிக்கு.​

"ஏய், பைத்தியம். கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேன் இப்பவும் மாமா மாமான்னு சொல்லிட்டு இருக்க. ஊர் உலகத்தில் எங்கேயாவது இப்படியெல்லாம் நடக்குமான்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தாலே நிஜம் புரியும். அதை விட்டுட்டு கண்ணை இறுக்கமா மூடிக்கிட்டு உலகம் இருண்டு போனதா நினைக்கிற பூனை மாதிரி இருக்க" கத்தினாள் கனி.​

“கனி என்னைச் சுற்றி நடக்கும் மர்மங்கள் எல்லாம் உனக்கே புரியும் போது, எனக்குப் புரியாதா? நான் என் மாமா மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, நேரடியா அவர் மேல வந்தது இல்லை.​

என் அப்பா மேல உள்ள நம்பிக்கை தான் அவர் மேல் மாற்றம் அடைந்திருக்கு. என்ன பார்க்கிற, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீயே தானே சொன்ன, எந்த அப்பாவாவது தன்னுடைய பொண்ணுக்கு கெடுதல் நினைப்பாரான்னு. என் மாமா, என்னைப் பெத்த அப்பா எனக்காக பார்த்து வைச்ச மாப்பிள்ளை. நிச்சயம் அவர் தப்பானவரா இருக்க வாய்ப்பில்லை.​

‘ஊர் உலகத்தில் உன் மாமாவைப் பத்தி, யார் என்ன சொன்னாலும் அதை எதையுமே மூளையில் பதிய வைச்சுக்காத, பிருந்தாவனத்தில் இருக்கும் கண்ணனுக்கும், துவாரகாவில் இருக்கும் கண்ணனுக்கும் வித்தியாசம் இருக்கும். ஆனால், இரண்டு பேருமே ஒன்று தான்‘ தெளிவா சொல்லி இருக்காரு. அந்த வார்த்தைகள் தான் இத்தனை குழப்பங்களுக்கு நடுவிலும் என்னை உயிர்ப்போட இருக்க வைச்சிருக்கு" என்ற தோழியை புரியாத பார்வை பார்த்து வைத்தாள் கனி.​

"என்ன பொண்ணுடா இவ, லூசா இல்லை பைத்தியமா" என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு. இருந்ததும் வந்ததும் வராததுமாக அவளைக் குழப்ப வேண்டாம் இன்று இது போதும் என்று முடிவு செய்து கல்லூரிக்குத் தயாராக ஆரம்பித்தாள்.​

இருவரும் ஹாஸ்டல் கேம்பஸைத் தாண்டி வெளியே நடந்து வந்து கொண்டிருந்த வேளையில் தூரத்தில் இருந்து அவர்களை கவனித்தது ஒரு ஆண்கள் நட்பு வட்டம்.​

"டேய் மச்சான் உன்னோட மஞ்ச காட்டு மைனா திரும்ப வந்திடுச்சுடா" என்றான் ஒருவன். "ஹே ஆமான்டா மச்சான், அப்பாவோட சாவுக்குன்னு போனவ ஒருவழியா காலேஜ் நினைவு வந்து திரும்ப வந்துட்டா? யாராவது அவ கழுத்தைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கடா. தாலி ஏதாவது இருக்க போகுது சிரித்துக்கொண்டே சொன்னான் இன்னொருவன்.​

வீம்பாக கணவனிடம் தாலியை கழட்ட மாட்டேன் என்று சொன்ன குழலி அதை மறைத்து வைப்பதற்காக மிகவும் சிரமப்பட்டாள். அவள் செய்த முயற்சி அனைத்தும் பலனளிக்காமல் போகவே வேறு வழியே இல்லாமல் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத காலர் வைத்த மஞ்சள் நிற சுடிதாரை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்திருந்தாள்.​

"அமைதியா இருங்கடா, பாவம் அந்தப் பொண்ணு. இருந்த ஒரே உறவையும் சாவக் கொடுத்த துக்கத்தில் இருந்து மீண்டு, இப்ப தான் வெளியே வந்து இருக்கா. வழக்கம் போல அந்தப் பொண்ணையும் என்னையும் சேர்த்து வைச்சுப் பேசி கிண்டல் பண்ணி கஷ்டப்படுத்தாதீங்க" குழலியைப் பார்த்துக்கொண்டே சொன்னான் அந்த நண்பர்கள் கூட்டத்தின் தலைவன் அருள்.​

நண்பர்களின் விளையாட்டால், விளையாட்டாக கவனிக்க ஆரம்பித்து இன்று நிஜமாகவே அவளை ஒரு தலைபட்சமாக விரும்பும் கண்ணியமான காதலன் அவன்.​

"ஏய் பாரேன், உனக்கு நடந்த எந்த விஷயமும் தெரியாம இன்னமும் அந்த முட்டாள் உன்னை எவ்ளோ பீலிங்கா பார்க்கிறான்" குழலியின் காதில் ஓதினாள் குழலி.​

"சும்மா இரு கனி, நாம அவங்களைப் பத்தி தான் பேசுறோம் என்று அவங்களுக்குத் தெரிஞ்சா, இதையே ஒரு சாக்காக வைச்சுக்கிட்டு நம்ம கிட்ட பேச முயற்சி பண்ணுவாங்க. நாம முடிஞ்ச வரைக்கும் கண்டுக்காம போய்க்கிட்டே இருப்போம்" எதிர்காலம் தெரியாமல் சொல்லிவிட்டுச் சென்றாள் குழலி.​

பெண்கள் இருவரும் அவர்கள் கேங்கின் அருகே செல்லும் போது, "மச்சான் நம்ம அருளுக்கு ஒரு மஞ்சள் கலர் சட்டை பார்சல்" என்று கத்தினான் ஒருவன். இதையெல்லாம் தூரமாக நின்று பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். உள்ளங்கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்தினான்.​

கனியும் குழலியும் வகுப்பறை சென்று நெடுநேரமாகியும் ஆண்களுடைய கேங்க் அங்கேயே நின்றிருக்க, அருளோ காதலியைப் பார்ப்பதற்காக க்ளாஸுக்கு போகலாம் என்று இதோடு நான்கு முறை அழைத்து, நண்பர்கள் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் இருந்ததால் கடுப்பின் உச்சத்தில் இருந்தான்.​

"டேய் அருள் நான் சொன்ன உடனே திரும்பாத, ரொம்ப நேரமா அங்க ஒருத்தன் நம்மளையே முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கான். யாரு என்னன்னு ஒன்னும் புரியல, காலேஜுக்கு புதுசா வந்த மாதிரி இருக்கு, ஆமாவான்னு பாரு" அருளின் நண்பன் ஒருவன் சொல்லவும் அருளும் திரும்பிப் பார்த்தான். ஆனால், அருள் பார்க்கும் போது தொலைவில் நின்றிருந்தவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.​

நெடு நேரத்திற்குப் பிறகு அருளின் நண்பர்களுக்கு வகுப்பு என்று ஒன்று இருக்கிறது, அதில் ஆசிரியர் என்ற ஒருவர் வந்து பாடம் நடத்துவார் என்பது ஞாபகம் வந்ததால் வகுப்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் அருளும் ஒருவராக வந்து சேர்ந்தான்.​

இவர்கள் செல்லும் போது ஏற்கனவே வகுப்பு ஆரம்பித்திருந்தது. அருள் உள்ளே செல்லும் போது அவனுடைய விழிகள் குழலி இருக்கும் இடத்தை மயிலிறகு போல் மென்மையாக வருடிவிட்டுச் சென்றது.​

அடுத்த வகுப்பிற்கு பாடம் எடுக்க வந்த ஆசிரியரைப் பார்த்ததும் குழம்பிப் போனாள் குழலி. "கனி யாருடி இவரு, நம்ம மனோகரன் சார் எங்க" குழப்பமாகக் கேட்டாள்.​

"அவருக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுதுன்னு வேலையை ரிசைன் பண்ணிட்டு பையன் வீட்டோட செட்டில் ஆகிட்டாரு. நாங்க எல்லோரும் கூட ஒரு முறை போய் அவரைப் பார்த்துட்டு வந்தோம்.​

இவரு இப்ப தான் இரண்டு நாளைக்கு முன்னாடி நம்ம காலேஜில் வேலைக்கு சேர்ந்து இருக்காரு. நம்ம மனோகரன் சார் அளவுக்கு இல்லை இருந்தாலும் நல்லாவே பாடம் நடத்துறார்" குழலி இல்லாத காலகட்டத்தில் நடந்ததைச் சொல்லி முடித்தாள் கனி. டீ ப்ரேக், லன்ச் ப்ரேக் என்று வெளியே வந்த குழலி காலேஜில் சில பல மாற்றங்கள் நடந்திருப்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டாள்.​

வகுப்பாசிரியர்கள், வாட்ச்மேன்கள், அட்டண்டர்ஸ், மெஸ் மற்றும் கேன்ட்டீனில் வேலை செய்பவர்கள் எனப் பலர் புதிதாய் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். இதெல்லாம் உனக்காக தான் நடத்தப்பட்டது என்று கடவுள் வந்து சொல்லி இருந்தாலும் நம்பி இருக்க மாட்டாள் குழலி. ஆனால் நிஜம் என்னவோ அது தான். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை, என இத்தனை நாட்களாக அனுபவிக்காத கல்லூரி வாசத்தை மீண்டும் அனுபவிக்க ஆரம்பித்தாள் குழலி.​

தினமும் இரவில் கணவனுடன் மெசேஜ் செய்கையில், அவனுடன் பேசும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, கல்லூரியில் நடந்த நிகழ்வுகளை ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பிக்க, நாளடைவில் அது ஒரு பழக்கமாகவே மாறி விட்டிருந்தது அவளுக்கு.​

மாமா, மாமா என்று மாமா புராணம் பாடும் குழலியை எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் கனி. "மாமா இப்ப எல்லாம் ஏன் நீங்க போன் பண்ணவே மாட்டேங்கிறீங்க. உங்களோட குரலைக் கேட்டு ரொம்ப நாளாச்சு. சொல்லப் போனா உங்க குரலே எனக்கு மறந்து போச்சு" சிணுங்கலாகச் சொன்னாள்.​

“நான் என்ன நம்ம வீட்டில், நம்ம பெட்ரூமில் ஹாயா படுத்துக்கிட்டா இருக்கேன். எப்ப நினைச்சாலும் உன் கிட்ட போன் பண்ணி பேசறதுக்கு" நக்கலாகக் கேட்டான். அந்த நக்கலிலே ஸ்டெடியாகி விட்டிருந்தாள் குழலி.​

"நான் தெரியாம கேட்டுட்டேன். இனிமே இப்படி கேட்க மாட்டேன்" உடனடியாக சரணடைந்தாள் குழலி.​

"ஆமா காலேஜில் நடக்கிற எல்லாத்தையும் சொல்ற, உன் ப்ரண்டைப் பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. இப்பவும் அவங்க என் மேல கோபத்தில் தான் இருக்காங்களா? என் மீதான சந்தேகம் தீரலையா?" என்று கேட்கவும், "அது, இப்ப எதுக்கு மாமா அவளைப் பத்தி பேசணும், நாம நம்மளைப் பத்தி பேசலாமே" என்றாள் திணறியபடி.​

“நம்மளைப் பத்தி பேசுறதுக்கு பெருசா என்ன இருக்கு குழலி. ஒரு மூணு வருஷம் நாம யாரோ மாதிரி இருக்கிறது தான் நமக்கு நல்லது" என்க, "என்ன மாமா சொல்றீங்க" பதறிப்போய் கேட்டாள் குழலி.​

உளறிவிட்டதை உணர்ந்து சில நொடிகள் அமைதி காத்தவன், "ஒன்னும் இல்ல, ஏதோ நினைப்பில் சொல்லிட்டேன். சரி வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்கு போனதுக்கு அப்புறம் எங்கேயாவது வெளியே போனியா?" தெரிந்து கொண்டே கேட்டான்.​

"உங்ககிட்ட சொல்லாம எப்படி மாமா வெளியே போவேன். அது மட்டும் இல்ல இந்த ஊரில் வெளியே போகறதுக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எப்ப என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது" சொன்னவளுக்கு தந்தையின் இறுதி நிமிடங்கள் கண் முன்னால் வந்து போனது.​

"அதுக்கெல்லாம் பயந்தா நாம வாழ முடியாது குழலி. எத்தனை நாளைக்குத் தான் கூண்டுக்கிளி மாதிரி நீயும் அடைஞ்சே இருப்ப. சுதந்திரமா மத்த பொண்ணுங்களை மாதிரி இருக்க ஆசையில்லையா?" ஏதோ ஒரு பதிலை எதிர்நோக்குவது போலத்தான் இருந்தது அவன் கேள்விகள் யாவும்.​

"ஆசை இல்லாம இல்ல மாமா, இப்ப கூட எங்க காலேஜில் இருந்து டூர் போய் இருக்காங்க. எனக்கு அங்க போக ஆசை தான். ஆனா பயம் என்னைத் தடுத்திடுச்சு, என்னைக் குறி வைச்சு ஏதாவது நடந்து அதனால் மற்ற யாரும் பாதிக்கப்பட்டா என்னால் அதைத் தாங்கிக்க முடியாது" இந்த குறுஞ்செய்தியை அவள் அனுப்பிய மறு நொடி அவனிடம் இருந்து போன் வந்தது குழலிக்கு.​

"எல்லாத்தையும் என்கிட்ட சொல்றவ இந்த டூர் விஷயத்தை ஏன் சொல்ல“ எடுத்த எடுப்பில் கோபத்தில் கத்தினான்.​

“நான் போறதா இருந்தா சொல்லி இருப்பேன். ஆனா, நான் தான் போகலையே, அதனால் தான் சொல்லல“ தன்னில் தவறு இல்லை என்பதால் தானும் உரக்க பதில் சொன்னாள் குழலி.​

“சரி போகட்டும், உன்னோட சேர்த்து எத்தனை பேர் ஹாஸ்டலில் இருக்காங்க" பரபரப்பாய் கேட்டான் அவன்.​

"என்னாச்சு மாமா, பதற்றப்படுற மாதிரி இருக்கு“ விளக்கம் கேட்டவளை திட்ட முடியாமல் தடுமாறியவன், "குழலி கோபத்தைக் கிளப்பாதே, சீக்கிரம் சொல்லு. ஹாஸ்டலில் எத்தனை பேர் மொத்தமா இருக்கீங்க" என்றான்.​

"நான் கனி கூட எட்டு பேர் என்று மொத்தம் பத்து பொண்ணுங்க இரண்டு வாட்ச்மேன் இருக்கோம் மாமா" அவள் சொல்லி முடிக்கவும் போன் கால் கட்டானது.​

அதே நேரத்தில் வாட்ச்மேன் தலையில் கட்டையால் அடித்து மயக்கமடைய வைத்துவிட்டு, குழலியின் ஹாஸ்டல் வளாகத்திற்குள் கேட் ஏறி குதித்தனர் முகமூடி அணிந்த நால்வர்.


 

ஆட்டம் 8​

வாட்ச்மேனின் அலறல் சத்தம் கேட்டு அவ்விடம் வந்த இன்னொரு வாட்ச்மேன் சுவர் ஏறி குதித்த நால்வரைப் பார்த்ததும் வேகமாக தன்னறைக்கு ஓடிச்சென்று காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லிவிட்டு, பெண்கள் இருக்கும் ப்ளோருக்கு செல்ல வேண்டி வெளியே வர முயற்சித்த வேளையில், அறைக்கதவு வெளியே தாளிடப்பட்டு இருந்தது.​

தன்னைத் தாக்காமல் விட்டதோடு, தான் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிக் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் வந்தவர்கள் நேரே விடுதிக்குள் சென்றதை வைத்து, அவர்களின் தேவை யார் என்பது உடனடியாகப் புரிய எந்தவித தயக்கமும் இன்றி குழலியின் நம்பருக்கு அழைத்தார் அவர்.​

செல்போன் வாங்கிய காலத்தில் இருந்து தன் மாமாவைத் தவிர வேறு யாரும் அழைத்திராத தன்னுடைய எண்ணுக்கு, புதிதாக யாரோ அழைப்பதைக் கண்டு முதலில் குழம்பியவள், பின் தெளிந்து அழைப்பை ஏற்றாள்.​

"குழலிம்மா, நான் வாட்ச்மேன் பழனி பேசுறேன்" எதிர்ப்புறம் கேட்டால் குரலில் குழம்பி, "இந்த நம்பர் உங்களுக்கு எப்படித் தெரியும்" என்றாள்.​

"அதெல்லாம் சொல்றதுக்கு இது நேரம் இல்ல. ஹாஸ்டலுக்குள்ள யாரோ நாலு பேர் வந்துட்டாங்க. நீங்க உடனடியா ரூமை உள்பக்கம் தாழ்ப்பாள் போடுங்க. இருக்கிற லைட் பேன் எல்லாத்தையும் ஆப் பண்ணுங்க. யார் என்ன சொல்லி கதவைத் தட்டினாலும் திறக்காதீங்க" வேகவேகமாக கட்டளையை அடுக்கினான்.​

"என்ன இவர், திடீர்னு போன் பண்ணி என்னென்னவோ சொல்றார். இதெல்லாம் உண்மையா இல்ல விளையாடுறாரா? நேத்து தானே மாமா எப்பவும் எந்த சூழ்நிலையிலும் தைரியமா இருக்கணும் அது இதுன்னு க்ளாஸ் எடுத்தார். ஒருவேளை அவர் தான் ஏதாவது ப்ளே பண்றாரா?“ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் அறையின் கதவு தட்டப்பட்டது. நல்லவேளையாக பழனி சொல்வதற்கு முன்னரே கதவைத் தாழ்ப்பாள் போட்டு வைத்திருந்தாள்.​

“அவர் சொன்ன மாதிரியே யாரோ கதவைத் தட்டுறாங்களே. திறப்போமா, வேண்டாமா" என குழலி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கதவிற்கு அருகில் இருந்த ஜன்னலில் சில நபர்களின் உருவம் நிழலாடியது.​

"என்ன நடக்குது இங்க" குழலி பதறும் நேரத்தில் அவளுடைய அறைக் கதவுக்கும் தரைக்கும் இடையே இருக்கும் இடைவெளி வழியாக குப்பென்ற வாசனையோடு பெட்ரோல் வரத் துவங்கியது.​

"பெட்ரோலா, என்னைக் கொல்ல இந்த முறை ஹாஸ்டலுக்கே வந்துட்டாங்களா?" பதறியவளுக்கு, ரத்த வெள்ளத்தில் தன் தந்தையைப் பார்த்த நினைவு ஞாபகம் வந்தது அவளுக்கு.​

"இல்ல நான் பயப்படக்கூடாது, இவங்க என் அப்பாவை கொன்னவங்க. இவங்களில் ஒருத்தரையாவது கொல்லாம நான் சாக மாட்டேன்" மனதோடு நினைத்தவள் சுற்றுமுற்றிப் பார்க்க, அந்த அறையின் ஒரு ஓரத்தில் துடைப்பம் இருந்தது. அதைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியான ஆயுதம் என்று எதுவும் இல்லை. இதனால் மனம் சேர்ந்த குழலியின் காதில் சில வார்த்தைகள் விழுந்தது.​

"இன்னைக்கு இவளைக் கொல்லாம இங்க இருந்து போகக்கூடாது. இவளை மட்டுமல்ல இவளோட புருஷனையும் கொல்லனும். அப்ப தான் எல்லாக் கணக்கும் சரியாகும். அன்னைக்கு இவ அப்பன், இன்னைக்கு புருஷன் எத்தனை பேர் தான் இவளுக்குன்னு சாகப் போறாங்களோ" என்றான் வந்தவர்களில் ஒருவன்.​

"மாமாவுக்கு ஆபத்து, என்னைக் காப்பாற்றும் முயற்சியில் என் அப்பா உயிர் போனது போதும். இதுக்கு மேல எனக்காக இனி ஒரு உயிர் இங்க போகக்கூடாது. என்னை நானே காப்பாத்திக்கணும். எப்படியாவது இங்க இருந்து தப்பிக்கணும், என்ன பண்ணலாம்" என்று இவள் யோசிக்கும் வேளையில், அவளுடைய அறைக்குள் நெருப்பு புகுந்தது.​

பெட்ரோலின் பயனால் அறைக்குள் தீ படுவேகமாகப் பரவ ஆரம்பிக்க, திகைத்த குழலிக்கு ஒரு யோசனை வந்தது. அவள் அறைக்குள் இருப்பது முதல் மாடியில் என்பதால் அந்த அறையோடு ஒட்டியிருக்கும், துணி காய வைப்பதற்கான சிறிய பால்கனி, ஹாஸ்டல் காம்பவுண்ட் சுவரிலிருந்து சிறிது தூரத்தில் தான் இருந்தது. முன்பொரு முறை விளையாட்டாய் கனி அதில் இறங்கி காட்டியது இப்போது தெம்பளித்தது.​

நினைத்ததை செயல்படுத்தி, எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று வேகவேகமாக செயல்பட்டாள் அவள். குழலி தன் அறையின் பால்கனி வழியாக, விடுதியின் காம்பவுண்ட் சுவரில் இறங்குவதற்கும் தீயில் எரிந்த அவள் அறைக் கதவு கீழே விழுவதற்கும் சரியாக இருந்தது.​

கொளுந்து விட்டு எரியும் அறைக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்காத போதே சந்தேகம் கொண்டிருந்த அடிஆட்கள் முன்னேற்பாடுடன் உள்ளே நுழைந்து அவளைத் தேட ஆரம்பிதனர். அவள் அங்கே இல்லை என்பது உறுதியானதும், கோபம் கொப்பளிக்க, இன்று போல் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அமைவது கடினம். அதனால் இன்று அவளை விடக் கூடாது என்ற உறுதியுடன் வேறு அறைக்குள் எங்கேனும் ஒளிந்திருக்கிறாளா என்று பிரிந்து தேடச் சென்றனர்.​

குழலி தைரியமாக காம்பவுண்ட் சுவரில் இறங்கிவிட்டாள் தான். ஆனால் ஆறு அடிக்கும் அதிகமான அந்த உயர மதிலில் இருந்து தரைக்கு இறங்க தைரியம் இல்லாமல் தவிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, பக்கத்து அறையின் பால்கனி வழியாதக அதைக் கண்டுகொண்டான் ஒருவன்.​

“ஏய்" என இவன் கொடுத்த குரலில், இதுவரை இருந்த பயம் போன இடம் தெரியவில்லை குழலிக்கு. என்ன ஆனாலும் பரவாயில்லை என அவள் குதிக்கத் தயாரான நேரத்தில், கைக்கு எட்டிய பொருளான பேப்பர் வெயிட்டைத் தூக்கி அந்த அடியாள் குழலியை நோக்கி எறிய, முன்னாள் கிரிக்கெட் வீரன் அவன் துல்லியம் தப்பாமல் குழலியின் பின்னந்தலையை நன்றாகவே தாக்கியது அது.​

பயம் மற்றும் காயம் கொடுத்த அதிர்ச்சி என இரண்டும் சேர்ந்து மயங்கிய குழலி, காம்பவுண்ட் சுவரின் வெளிப்பக்கமாக சாய்ந்து விழுந்தாள். அவள் நல்ல நேரம் முந்தைய தினம் விடுதி அறையைக் காலிசெய்துவிட்டுச் சென்ற இரண்டுபெண்கள் உபயோகித்த பொருள்களான மெத்தை மற்றும் தலையணை இரண்டையும் தெருவோர வாசிகள் யாரேனும் எடுத்துக்கொள்ளட்டும் என்ற நினைப்பில் விடுதிக்காப்பாளர் அவற்றை சுவர் ஓரமாக வைத்திருக்க, அதிலே விழுந்து சின்னக் காயத்துடன் தப்பித்தாள் குழலி.​

அந்த நேரத்தில் அங்கு வந்து நின்றது ஒரு பெரிய கார். காரின் முன்பகுதியில், டிரைவர் சீட்டின் பக்கத்து சீட்டில் இருந்து வயதான ஒருவர் இறங்க, பின்னால் இருந்து இரண்டு வாலிபர்கள் இறங்கினர்.​

"நம்மளோட நோக்கம் நிறைவேறப் போற நாள் வந்திடுச்சு. இத்தனை நாளா நாம அனுப்பிய ஆட்களிடம் இருந்து இவ வரிசையா தப்பித்தது, என் கையால் சாவதற்கு தான் போல, இவளை காருக்குள்ள தூக்கி போடுங்கடா" சன்னமான சிரிப்புடன் உத்தரவிட்டார் அவர்.​

"சரிங்கய்யா" என்றவர்கள் குழலி மயங்கிக் கிடந்த இடத்தைப் பார்க்க அது காலியாக இருந்தது. அவர்கள் அவளைத் தேட ஆரம்பித்த நேரத்தில், டப் என்ற ஒரு பெரும் சத்தம் கேட்டு, அதைத் தொடர்ந்து தெரு விளக்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அணைந்து போனது.​

காரின் ஹெட்லைட்டை ஆன் செய்ய சற்று தொலைவில் யாரோ ஒருவன் குழலியை தோளில் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான்.​

"விடாதீங்கடா, ஒவ்வொரு முறையும் நம்மகிட்ட இருந்து தப்பிச்சிக்கிட்டே இருக்காங்க. எல்லாத்துக்கும் காரணம் அவன். அவன் இருக்கிற வரைக்கும் நம்மளால அவளை நெருங்க முடியாது. எப்படிக் கணக்கச்சிதமா திட்டம் போட்டாலும், மோப்பம் புடிச்சு, ஏதாவது ஒன்னு பண்ணி சொதப்ப வைச்சிடுறான். அதனால இந்தமுறை அவனையும் சேர்த்து கொன்னுடுங்க" சொன்ன அந்த வயதானவரின் குரலில் அத்தனை வன்மம்.​

"அவரைப் போய் எப்படியா" உடன் வந்தவர்களில் ஒருவன் அதிகமாய் தயங்கினான்.​

"உனக்கு சம்பளம் நான் கொடுக்கிறேனா இல்லை அவனா. சொல்றதை மட்டும் செய், சீக்கிரம் போங்க" என்று மிரட்டவும் பயந்து போய் குழலியைத் தூக்கிக்கொண்டு ஓடியவனை துரத்தினர் உடன் வந்தவர்கள்.​

மயக்கத்தில் கிடந்தவளை கைக்குழந்தை போல் தூக்கிக்கொண்டு ஓடி வந்தவன், தான் எடுத்து வந்திருந்த ஆட்டோவின் பின்புறம் குழலியைப் படுக்க வைத்து, ஆட்டோவை ஓட்டிக்கொண்டு இருளில் மறைந்துவிட்டான்.​

கார் கைவசம் இருந்தும் எதிராளி ஓடிக்கொண்டு தானே இருக்கிறான். நாமும் ஓடிச் சென்றே பிடித்துவிடலாம் என்ற முட்டாள் தனத்தினால் இலக்கைத் தொலைத்தனர் அந்த முட்டாள்கள்.​

அடுத்த நாள் மருத்துவமனையில் குழலி கண்விழித்த போது அவள் எதிரே வடிவு அமர்ந்திருந்தார். "இராசாத்தி கண்ணு முழிச்சிட்டிட்டியா, இராத்திரி முழுக்க அசைவே இல்லாம நீ கிடந்ததைப் பார்த்து ரொம்பப் பயந்துட்டேன். நீ கண்ணு முழிச்சதும் தான் நெஞ்சில் இருந்த பாரமே இறங்கி இருக்கு. எப்படி டா கண்ணா இருக்கு, காயம் ரொம்ப வலிக்குதா" வழக்கம் போல் பாசமழையைக் கொட்டினார் வடிவு.​

"யார் நீங்க?" என்ற இரண்டே வார்த்தையில் ஆளைச் சாய்த்தாள் குழலி. "குழலி கண்ணு, என்னாச்சுடா உனக்கு, நான் உன் அத்தை டா. வடிவு, வாம்வாம்பாள்“ நிஜத்தில் பதறித் தான் போனார் அவர்.​

"அத்தையா" என்றவள் ஏதோ யோசிக்க முற்பட்ட வேளையில் தலை பயங்கரமாக வலி எடுக்க, தலையில் கை வைத்தவாறு முகத்தை சுருக்கினாள்.​

"குழலி, என்னாச்சும்மா தலை வலிக்குதா. டாக்டர் இங்க வாங்களேன்" வடிவு சத்தம் போட அதிகாலை டியூட்டி டாக்டர் விரைந்து அவ்விடம் வந்தார். வந்தவர் வடிவை வெளியே நிற்கவைத்துவிட்டு குழலிக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.​

வடிவுக்கு மனம் ஆர்ப்பரிக்க உடனடியாக தன்னுடைய மகனுக்கு அழைத்தார். அவனும் இதற்காகவே காத்திருந்தவன் போல முதல் ரிங்கிலேயே போனை எடுத்தான்.​

"அம்மா குழலி எப்படி இருக்கா, கண்ணு முழிச்சுட்டாளா? டாக்டர் என்ன சொன்னார். காயம் ஒன்னும் பெருசா இல்லையே" அவன் பாட்டிற்கு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, "டேய் குடியே கெட்டுடுச்சு டா, அவளுக்கு என்னை ஞாபகமே இல்ல. யார் நீங்கன்னு கேக்குறா, எனக்கு பயமா இருக்குடா. ஒருவேளை" இவர் ஏதோ சொல்ல வர, அந்தப்பக்கம் அவன் முகம் தொங்கியது.​

"குழலிக்கு நாம யாரு? எதுக்காக இதை எல்லாம் பண்றோம் என்கிற உண்மை எல்லாம் தெரிய வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன் அம்மா. ஒருவேளை நாம சொல்லாமப் போனால், சீக்கிரத்தில் அவளே எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவா? அது யாருக்குமே நல்லது இல்லை" சொன்னவன் குரலில் வேதனையின் சாயல்.​

"டேய் என்னடா இப்படி சொல்ற, அவளுக்கு உண்மை தெரிஞ்சா உன்னை ஏத்துக்க மாட்டாளே" தாயாய் மகனின் எதிர்காலத்தை நினைத்து மனம் வருந்தினார் வடிவு.​

"என் விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது அவ தான் மா. இதில் நாம பண்றதுக்கு ஒன்னும் இல்லை. நீங்க அவ பக்கத்திலே இருங்க, நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க கிளம்பி வரேன்“ என்றான்.​

"இதுக்காக வாடா நாம இவ்வளவு கஷ்டப்பட்டோம்" ஆற்றாமையுடன் வந்தது அவரின் குரல்.​

"நாம இதுக்கு மேல எந்த விதத்திலும் கஷ்டப்பட வேண்டாம் என்று கடவுளே முடிவு பண்ணிட்டாரு போல. அதனால் தான் குழலிக்கு இப்படி ஒரு நிலைமை. நடந்ததையோ நடக்க இருக்கிறதையோ நாம மாத்த முடியாது.​

குழலியாக் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி, எல்லா விஷயத்தையும் அவகிட்ட சொல்லுவோம். அதுக்கு அப்புறம் அவ என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதம் தான்" என்றுவிட்டு வடிவு அடுத்த வார்த்தை பேச இடம் கொடாமல் போன் காலை கட் செய்து விட்டான்.​

சிறிது நேரத்தில் மருத்துவர் குழலி இருந்த அறையை விட்டு வெளியே வர, "டாக்டர் என் மருமகளுக்கு இப்போ எப்படி இருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ கண் முழிச்சப்ப என்னை அவளுக்கு அடையாளமே தெரியலையே. எதனால டாக்டர் அப்படி" சோகமான குரலில் வினவினார்.​

"பெருசாக் கவலைப்பட ஒன்னுமில்ல, மருந்தோட வீரியத்தால், கண்ணு முழிச்ச கொஞ் நேரத்துக்கு அவங்களுக்கு எதுவும் நினைவு இல்லமல் இருந்திருக்கு. அந்த நேரத்தில் நீங்க பேசி இருக்கீங்க போல, இப்போ நல்லா இருக்காங்க" டாக்டர் சொல்லவும் தான் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது வடிவுக்கு. இருந்தாலும் சின்னத் தயக்கம் இருக்க, பயத்துடன் தான் அந்த அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தார்.​

குழலி அமைதியாக விட்டத்தைப் பார்த்தவண்ணம் படுத்திருந்தாள், இவரைப் பார்த்ததும் எழ முயற்சிக்க வேகமாக சென்று அவளைத் தடுத்து, "நீ ஏன் கண்ணு உடம்பை வருத்திக்கிற, படுத்துக்கோ" என்றார் மென்மையிலும் மென்மையாக.​

அவளுடைய முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளை அடையாளம் கண்டுகொண்டு, "என்னாச்சு கண்ணு, உனக்கு சரி ஆகிடுச்சுன்னு டாக்டர் சொன்னாரு. இன்னும் யாரையோ பார்க்கிற மாதிரி பார்க்கிற. இந்த அத்தையை உனக்கு அடையாளம் தெரியலையா" கேட்டவரின் குரலில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது.​

“இல்லத்த, எனக்கு எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. ஆனா ஒரு விஷயம் ரொம்ப குழப்பமா இருக்கு" என்றதும் உள்ளே திக்திக்கென்று இருக்க, "என்ன விஷயம் கண்ணு" அவள் தலைதடவி ஆதுரமாக வினவினார்.​

"நேத்து என்னைக் கொல்ல சதி நடந்தப்ப என்னைக் காப்பாத்தி இங்க கொண்டு வந்து சேர்த்தது யாரு? உங்களுக்கு யார் விவரம் சொன்னா, எப்படி நீங்க சீக்கிரமே இங்க வந்து சேர்ந்தீங்க" குழலி இதைக் கேட்கவும் வடிவின் முகம் சுருங்கியது. அதைக் குழலியும் கவனிக்கத் தான் செய்தாள்.​

மகனின் அருகே இருக்க வேண்டும் என்ற ஆசையில், இரண்டு நாள்களாக சென்னையில் மகனின் வீட்டில் தான் இருந்தார் அவர். அதனால் தான் இரவு மகன் சொன்ன தகவலைக் கேட்டதும் ஓடோடி வந்து அருகே இருந்து மருமகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது அதுவே பாதமாகிவிடுமோ என்ற பயத்தில், சமாளிக்கப் பார்த்தார்.​

“உன்னைக் காப்பாத்தினது, யாரு என்னன்னு ஒன்னும் தெரியாது மா. அந்த வழியா வந்த ஆட்டோக்காரன் ஒருத்தன் தான் உன்னைக் காப்பாத்தி ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்கான். உன் ஹாஸ்டலில் இருந்து நம்ம வீட்டுக்கு போன் வந்தது. நான் உடனடியா கிளம்பி வந்தேன்" என்றார்.​

"ஆனா" குழலி ஏதோ கேட்க வர, “போதும்மா, ரொம்பவே பேசிட்டோம். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, நான் போய் டாக்டர் கிட்ட உன்னை எப்ப வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று கேட்டுட்டு வரேன்" என்று வடிவு எழுந்த வேளையில் மனைவியிடம் அனைத்தையும் சொல்லிவிடும் நோக்கத்தில், அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தான் துரை.​

மருமகளுக்கு தாங்கள் நினைத்துப் பயந்தது போல் ஒன்றும் இல்லை என்பதை தன் மகனை அழைத்து சொல்ல மறந்த தன் மத்தனத்தை நொந்து கொண்ட வடிவு, குழலி அவனைக் கவனிக்கும் முன்பாக இருவருக்கும் நடுவில் வந்து நின்று, "யார் தம்பி நீ? இது என் மருமக இருக்கிற ரூம். நீ தப்பா வந்துட்டன்னு நினைக்கிறேன்" என்றுவிட்டு கண்களால் ஜாடை காட்டினார். அம்மா சொன்னதைப் புரிந்து கொண்டு அவனும் அங்கிருந்து வெளியே வந்தான். குழலி தன்னுள்ளே ஏதோதோ யோசனையில் இருந்தவள் இதனைக் கவனிக்கவில்லை.​

"டேய் நாம பயந்த மாதிரி அவளுக்கு ஒன்னும் இல்ல. நீ சீக்கிரம் வீட்டுக்கு போ, மத்ததை போனில் சொல்றேன்" என்க, புரிந்ததாய் தலை அசைத்தானே ஒளிய அங்கிருந்து செல்வதாக இல்லை.​

என்னடா என்க, “கொஞ்ச நேரம் நின்னு அவளைப் பார்த்துட்டுப் போறேன்“ என்றுவிட்டு அங்கேயே நின்றான். அறைக்குள் குழலியின் நிலை வேறாக இருந்தது. "நேத்து என்னைக் காப்பாத்தியது யாரா இருக்கும். அத்தை சொன்ன மாதிரி அவங்க ஏதேட்சையா வந்த மாதிரி தெரியல. எனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு காப்பாத்த வந்த மாதிரி தான் இருந்துச்சு. நான் கேட்ட அந்த இதயத்துடிப்பு சொல்லாமல் சொன்னது அவரோட பதற்றத்தை.​

அது கண்டிப்பா என்னை நல்லாத் தெரிஞ்ச யாரோ ஒருத்தர் என்று என்னோட உள் மனசு சொல்லுது. அரை மயக்கத்தில் எனக்கு அவரோட முகம் தெரியல. ஆனா அவரோட நெத்தியில் இருந்த தழும்பு தெரிஞ்சது, நான் தொட்டு கூடப் பார்த்தேன்" என்று நேற்று தன்னைக் காப்பாற்றியவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, கிடைத்தற்கு அரிய பொக்கிஷமாகக் கருதி அதுநாள் வரை தன்னைப் பாதுகாத்து, அந்த முயற்சிக்காகவே உயிரை நீத்த தன்னுடைய அப்பாவின் நியாபகம் வந்தது. உடன் சேர்ந்து கண்களில் கண்ணீரும் வந்தது. மகனை அனுப்பிவிட்டு கதவைத் திறந்துகொண்டு வடிவு உள்ளே வர வேகமாக கண்ணைத் துடைத்தாள் குழலி.​

"கண்ணு உன் மாமா உன் கிட்ட பேசனுமாம். உனக்கு ஒன்னுன்னு சொன்னதும் பதறிப் போயிட்டான். நீ மயக்கத்தில் இருந்தப்ப எப்ப கண்ணு முழிப்பன்னு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை போன் பண்ணிக்கிட்டு இருந்தான். ரொம்பப் பதறிப் போய் இருக்கான். அவனை சமாதானப்படுத்துற மாதிரி பேசு, நான் வெளியில் இருக்கேன்" என்றுவிட்டு அவர் வெளியே செல்ல, இவள் "மாமா" என்று அழைத்த அதே நேரத்தில் அறை வாசலில் அவன் நிழலாடியது.​

 

ஆட்டம் 9​

"இப்ப எப்படி இருக்கு குழலி, தலைக் காயம் ரொம்ப வலிக்குதா" கணவனின் அக்கறை தேனாய் இறங்கியது குழலியின் காதிற்குள்.​

"இல்ல மாமா, உடம்பில் எந்த வலியும் இல்லை, ஆனா மனசு தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு" நிஜத்தை அப்படியே சொன்னாள் பெண்.​

"உன்னோட தவிப்பு என்னன்னு எனக்குப் புரியாம இல்ல குழலி. ஆனா அதுக்காக ஒன்னும் செய்ய முடியாத நிலைமையில் நான் இருக்கேன். நான் நினைச்ச நேரத்தில் எல்லாம் இங்க இருந்து என்னால வர முடியாது இல்லையா?" கண்ணெதிரே நின்று கொண்டு பச்சையாகப் பொய் சொல்கிறோமே என்று வேதனையாகத் தான் இருத்நது அவனுக்கு, ஆனால் அதைப் பார்த்தால் காரியம் கெட்டுவிடும் என்பதால் தன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.​

“எனக்கு அப்படித் தோணலையே. நீங்க என் பக்கத்திலே இருந்து என்னைப் பார்த்துக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கு“ குழலியின் வார்த்தைகளைக் கேட்டு தானாக புன்னகை சிந்தின அவன் இதழ்கள்.​

அவன் அமைதியாக இருக்கவும், "நேத்து எப்படி மாமா சரியா வந்தீங்க" என்று கேட்டு அவன் தலையில் தனலை அள்ளிக்கொட்டினாள் அவள்.​

"என்ன கேட்ட" எதிரே இருப்பவன் பதறுவது நன்றாகவே புரிந்தது. அதை மனதில் குறித்துக்கொண்டு, "இல்ல நேத்து வந்த அந்த முகம் தெரியாத மனுஷனுக்குப் பதிலா அந்த இடத்தில் நீங்க இருந்திருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன் மாமா" பேச்சை மாற்றினாள்.​

"அங்க இருந்ததே நான் தானே குழலி" என்று மனதிற்குள் நினைத்தவன், "குழலி இப்ப நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் போன் பண்ணேன். இனிமே நீ காலேஜுக்கு போக வேண்டாம்" என்றான்.​

"ஏன் மாமா" பதில் என்ன வரும் என்று தெரிந்துகொண்டே கேட்டாள். "உனக்குப் படிக்க எவ்வளவு பிடித்தம் என்று மாமாஎன்கிட்ட சொல்லி இருக்கார். உன்னோட விருப்பம் மற்றும் அவரோட கடைசி ஆசை என்று நினைத்து தான், உன்னை சென்னைக்குப் போய் படிக்கச் சொன்னேன்.​

ஆனா நீ அம்மாகிட்ட, நம்ம ஊரை விட்டுப் போவதில் உனக்கு பெரிதா இஷ்டம் இல்லைன்னும், எனக்கு மனைவியா நம்ம வீட்டில் இருக்கிறது தான் பிடிச்சு இருக்குன்னும் சொன்னதா சொன்னாங்க.​

என்ன ஆனாலும் நான் உன்னைப் பார்த்துப்பேன் என்ற நம்பிக்கையில் தான் நீ இதைச் சொன்னேன்னு எனக்குப் புரிஞ்சது. அதில் எனக்கு சந்தோஷமும் கூட, ஆனால் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால் படிக்க முடியாமப் போயிடுச்சேன்னு நீ என்னைக்கும் வருத்தப்பட்டுடக் கூடாது, உன் வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்கக்கூடாதுன்னு தான், உன்னோட படிப்பை தொடரச் சொன்னேன்.​

உன்னோட நல்லதுக்குன்னு பண்ண காரியமே உனக்கு எமன் ஆகிடுச்சு. இதுக்கு மேலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். நான் வரும் வரை நீ நம்ம வீட்டிலே பத்திரமா இரு" அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.​

"உங்களோட வார்த்தையை மீறி பேசுறதுக்காக என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க மாமா. அப்பா இறந்தது என்னால் தான் என்று நான் ரொம்ப வருத்தப்பட்டேன். அவருக்குப் பிடிக்காத எதையும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்த பின்னால் தான், படிப்பை விட்டு நம்ம வீட்டில் உங்களுக்கு ஒரு நல்ல பொண்டாட்டியா மட்டும் இருக்க முழு மனசோட சம்மதிச்சேன்.​

நீங்களும் அப்பா மாதிரியே, என்னோட விருப்பத்தை மதிச்சு என்னைப் படிக்க அனுப்பினீங்க. ஆனா, நேத்து என்னைக் கொல்ல வந்த ஆட்கள் கிட்ட இருந்து காப்பாத்த யாரும் இல்லாம நான் கஷ்டப்பட்டப்ப தான், இத்தனை வருஷமா தனி ஆளா இருந்து என்னைக் காப்பாத்திக்கிட்டு இருந்த என்னோட அப்பா பட்ட கஷ்டம் எல்லாம் எனக்குப் புரிஞ்சது. சாகுற கடைசி நிமிஷம் வரைக்கும் எனக்காக போராடிக்கிட்டே இருந்தாரு.​

அப்படிப்பட்ட அப்பாவுக்கு மகளா இருந்துக்கிட்டு உயிருக்கு பயந்து இந்த ஊரை விட்டு வர எனக்கு மனசு இல்ல மாமா. நான் இங்கேயே இருக்கேன், அடுத்த முறை அவங்க என்னைக் கொல்ல வந்தா கோழை மாதிரி பயப்படாம ஒரே ஒருமுறை அவர்களை எதிர்த்து நிற்கணும். அப்படி எதிர்த்து நிற்கும் போது என் உயிர் போனா கூட எனக்கு சந்தோஷம் தான்" பலவிதமான உணர்வுகளின் தாக்கத்தில் சொன்னாள் பெண்.​

"பைத்தியம் மாதிரி பேசாத, உன்னை சாவக் கொடுக்கவா நான் உயிரோட இருக்கேன். இந்த முறை என் கட்டுப்பாட்டை மீறி இந்த விஷயம் நடந்திடுச்சு. எல்லா நேரமும் நாம நினைக்கிறது மட்டுமே நடக்கிறது இல்லை என்று நான் நல்ல ஒரு பாடம் கத்துக்கிட்டேன். இதுக்கு மேல உன்னை அவங்க நெருங்க நான் விடமாட்டேன்" என்றவனின் குரலில் அத்தனை உறுதி.​

"எனக்குத் தெரியும் மாமா, எனக்கு எதுவும் ஆக நீங்க விட மாட்டீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்களும் என் கூட இருங்க, நாம இரண்டு பேருமா சேர்ந்து அவங்களை எதிர்த்து நிற்போம்" இது தான் என் முடிவு என்று அவளாக முடிவெடுத்த பின்னால் தான் தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் அவன்.​

"முதன் முதலில் மாமான்னு சொல்வதற்கே பயந்த குழலியா இதுன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு, வித்தியாசமா பேசுற" என்றான் அவளை கூர்மையாகப் பார்த்துக்கொண்டே.​

"இனிமே இப்படித்தான் மாமா" என்றவள் தனக்கு தலை வலிப்பதாக சொல்லி போனை அணைத்து விட துரைக்கு என்னவோ போலிருந்தது.​

மதியம் போல் குழலியைப் பார்க்க கனி வந்திருந்தாள். “என்ன ஆச்சுடி உனக்கு, ஒருநாள் என்னோட சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு வருவதற்குள் என்னென்னவோ நடந்திருக்கு. நம்ம ஹாஸ்டலில் ஃபயர் ஆக்சிடென்ட் ஆகி, அங்க தங்கியிருந்தவங்க எல்லோரையும் அவங்க அவங்க வீட்டுக்கு அனுப்பிட்டோம்.​

அடுத்த இரண்டு நாள் காலேஜ் லீவ் என்று தகவல் கிடைக்கவும், உன்னைப் பத்தி விசாரிச்சப்ப நீ இங்கே இருக்கிறதா வாட்ச்மேன் சொன்னாரு. அங்க இருந்து நேரா இங்க தான் வரேன். ரொம்பப் பயந்துட்டியா? நான் உன் பக்கத்தில் இருந்திருக்கலாம்" வருத்தமாய் குழலியை அணைத்துக் கொண்டாள் கனி.​

"நல்ல நேரத்தில் தான் கனி வந்திருக்க. நானே உன்னைக் கூப்பிட நினைச்சேன். எனக்கு உன்னோட உதவி தேவைப்படுது. என்னைச் சுத்தி இருக்கும் ஆட்கள் நல்லவங்க தான் என்றாலும் இந்த விஷயத்தில் என்னால் அவங்க யாரையும் நம்ப முடியல" என்ற தோழியை ஆராயும் பார்வை பார்த்தாள் கனி.​

"என்ன ஆச்சு, ஏன் ஒரு மாதிரி பேசுற" என்றாள் கனி.​

"நீ சொன்னது சரிதான் கனி, எல்லோருமா சேர்ந்து என்னை ஏமாத்துறாங்க. நேத்து நம்ம ஹாஸ்டலில் நடந்தது விபத்து இல்லை, என்னைக் கொல்ல நடந்த சதி“ பல விஷயங்களை குழலி சொல்ல நினைத்திருக்க முதல் விஷயத்திற்கே அதிர்ந்து உறைந்து சிலையாகிப் போனாள் கனி.​

"என்னடி சொல்ற, உன்னைக் கொல்ல ஒரு ஹாஸ்டலையே எரிக்க சதித்திட்டமா. ஆனா உன்னைக் கொல்றதால யாருக்கு என்ன லாபம்" சத்தியமாகப் புரியவில்லை அவளுக்கு.​

"ரொம்பப் பதற்றப்படாத கனி, இது மாதிரி நடக்கிறது இது முதல் முறையும் இல்ல, இதுவே கடைசி முறையா இருக்கப் போறதும் இல்லை. இதுக்கு முன்னால் நிறைய முயற்சி நடந்திருக்கு. ஆனா நேர்மையான முறையில் நான் மட்டும் தனியா சிக்கும் போது தான் நடக்கும். அப்பெல்லாம் என்கூட என் அப்பா இருந்தார்.​

ஆபத்து வரும் போதெல்லாம் அதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு என்னைக் காப்பாத்திக்கிட்டே இருந்தாரு. அப்பா போனதுக்கு அப்புறம் இப்ப என்னைக் காப்பாத்துற பொறுப்பு என் மாமாவுக்கு வந்து இருக்கு" என்றவளை ஏற இறங்கப் பார்த்தாள் அவள். அவள் பார்வையே சொன்னது, அவள் நம்பகமின்மையை.​

“ஆபத்துன்னு தெரிஞ்சும் உன்னோட அப்பா எப்படி உன்னை இங்க படிக்க வைக்க சம்மதிச்சார்" என்க, "அதுக்குக் காரணம் என்னோட பிடிவாதம் மட்டும் தான் கனி" என்றுவிட்டு அதை நினைத்து இப்போது நொந்து கொண்டாள்.​

"சரி உன்னைக் கொல்ல நினைக்கிறவங்க யாரு, எதுக்காக அவங்க உன்னைக் கொல்ல நினைக்கிறாங்க. இதை நீ உங்க அப்பா கிட்ட கேட்டு இருக்கியா? அவரு ஏதாவது பதில் சொல்லி இருக்காரா?" விஷயத்திற்கு வந்தாள்.​

விரக்தியாய் சிரித்தவள், "இதைப் பத்தி நான் கேட்கும் பொழுதெல்லாம் அவர் எப்பவும் சொல்ற ஒரே வார்த்தை. நம்ம ஊரில் நீ இருக்கிற வரைக்கும் உனக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது. அதே சமயம் நம்ம ஊரை விட்டு நீ கால் எடுத்து வைச்சா உன்னோட தலைக்கு மேல எப்பவும் கத்தி தொங்கிக்கிட்டே இருக்கும்" என்பது தான்.​

இதற்கு இதில் பதில் இல்லையே என்று மனதில் கவுண்ட்டர் கொடுத்து முடித்தவள், "அதென்ன கணக்கு உங்க ஊரில் வைச்சு உன்னைக் கொல்லக் கூடாதுன்னு. உண்மையைச் சொல்லப் போனா உன் ஊரு தான் உன்னைக் கொல்ல வ.சதியானது" என்று மனதில் தோன்றிய அனைத்தையும் உளறிக்கொட்டிவிட்டு தன்னை முறைத்துக் கொண்டிருந்த குழலியை பாவமாகப் பார்த்தாள் கனி.​

சட்டென்று புன்னகைத்துவிட்டு, “நானும் இதைப் பல முறை யோசனை பண்ணி இருக்கேன். விடை தான் கிடைச்ச பாடில்லை" என்றாள்.​

"பொதுவா எனக்கு இந்த திரில்லர் கதைகள் ரொம்பவே பிடிக்கும். ஆனா நமக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு இந்த மாதிரி நடக்கிறப்ப பயம் தான் வருது" உடல் சிலிர்க்க தோளைக் குலுக்கினாள் கனி.​

"நீ இதுவரைக்கும் எத்தனை திரில்லர் கதைகள் படிச்சிருப்ப கனி" சூழ்நிலைக்கு சம்பந்தம் இல்லாமல் கேட்பவளைப் பார்த்து, கொஞ்சம் பயம் வந்தாலும் அதை மனதோடு வைத்துக்கொண்டு, "இப்ப எதுக்கு அதை ஆராய்ச்சி பண்ற" கேள்வியெழுப்பினாள்.​

“சொல்லு டி" என்று தன் தோழியை ஊக்கப்படுத்தினாள் குழலி.​

"என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு ஐம்பது கதை படிச்சிருப்பேன்" கனி சொல்லி முடிக்க, "அந்த ஐம்பது கதைகளிலும் இல்லாத விறுவிறுப்பும் ஆர்வமும் தரக்கூடிய ஒரு கதை தான் என்னோது" என்றுவிட்டு தன் வாழ்வை நினைத்து விரக்தியாய் புன்னகைத்தாள் குழலி.​

"என்னடி என்னென்னமோ சொல்ற, மண்டையில் அடிபட்டதில் ஏதாவது ஆகிடுச்சா" காயத்தை ஆராய்ச்சி செய்தாள் கனி.​

"எனக்கு இந்த ஆக்சிடென்ட் ஆனதும் நல்லதுக்கு தான் கனி. அதனால் தான் நான் மாட்டிக்கிட்டு இருக்கிற சிலந்தி வலையை என்னால பார்க்க முடிஞ்சது" தன் பாட்டிற்கு ஏதோதோ சொல்லிக்கொண்டே செல்பவளுக்கு எந்தக் கோவிலில் போய் எப்படி மந்திரிக்க வேண்டுமோ என்று பயந்து போய் அமர்ந்தாள் கனி.​

“இங்க பாரு குழலி, நேரடியாப் பேசினாலே எனக்குப் பல விஷயங்கள் புரியாது. இதில் நீ இப்படி சுத்தி வளைச்சுப் பேசினா சுத்தம். நல்லபிள்ளையா கொஞ்சம் தெளிவா பேசுமா“ என்று நாடி பிடித்துக்கொஞ்சிய தோழியைப் பார்த்து பெருமூச்சுவிட்ட குழலி, தன் வாழ்வைப் பற்றிய தன் சந்தேகங்களை தெளிவாகச் சொல்ல ஆரம்பித்தாள்.​

“முதல் விஷயம் நீ சந்தேகப்பட்ட மாதிரி எனக்கும் என் மாமாவுக்கும் நடந்த கல்யாணத்தில் இருந்து, நான் திரும்ப சென்னை வந்தது வரை எல்லாமே ரொம்ப நாளுக்கு முன்னாடியே பிளான் பண்ணப்பட்டு இருக்குன்னு தோணுது" என்க, "அப்பாடா, இப்ப தான்டா கொஞ்சம் தெளிவாகி இருக்கா. எல்லோருக்கும் தலையில் அடிபட்டா மண்டை குழம்பும் இவளுக்கு மட்டும் எப்படியோ தெளிவாகிடுச்சு. சந்தோஷம் சாமி“ மனதோடு நினைத்துக்கொண்ட கனி, அடுத்து அவள் சொல்லப்போகும் விஷயங்களைக் கேட்பதற்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டாள்.​

“இன்னொரு விஷயம் நேத்து என்னைக் காப்பாத்தினது என் மாமா தான். என்னோட உள்மனசு இதை முழுமையா நம்புது. இதுக்கு அர்த்தம், நீ சந்தேகப்பட்ட மாதிரி அவர் ஜெயிலில் இருந்து முன்னாடியே ரிலீஸ் ஆகி இருக்கணும். இல்லையா? அந்த ஜெயில் கதையே பொய்யா இருக்கணும். அப்புறம் அவர், இவ்வளவு நாளா நான் நினைக்கிற மாதிரி சாதாரண ஆள் இல்லை.​

பணத்தைப் பொறுத்த அளவில் அவர் பெரிய தனக்காரர் தான், நானே நேரில் பார்த்து இருக்கேன். ஆனால் அவருக்குச் செல்வாக்கும் அதிகமா இருக்குமோன்னு இப்ப சந்தேகம் வருது. ஒன்னு அவரே செல்வாக்கு உள்ளவரா இருக்கணும் இல்லையா செல்வாக்கு அதிகம் உள்ள ஆட்கள் கூட நெருங்கிய தொடர்பு இருக்கணும்“ குழலி சொல்ல, “உன்னை உன் மாமாவுக்கு எதிராவும் கொஞ்சம் யோசிக்கச் சொன்னேன் தான். அதுக்காக முற்றும் முழுதா அவருக்கு எதிரா மட்டுமே யோசிக்க ஆரம்பிச்சுட்டியே. தலையில் அடிபட்டதில் கண்டிப்பா ஏதோ கோளாறு நடந்து இருக்கு“ என்று தன்னுள்ளே நினைத்துக்கொண்ட கனி, “ சரி, எதுக்காக உன் மாமா, உன் கண்ணில் படாம கண்ணாம்பூச்சி விளையாடணும் என்று ஏதாவது கெஸ் இருக்கா?“ விஷயத்திற்கு வந்தாள் கனி.​

"பெருசா என்ன காரணம் இருக்கப் போகுது, எனக்கு அவரை முன்னாடியே தெரிஞ்சிருக்கலாம். அவருக்கும் எனக்கும் நடுவில் மறக்க முடியாத படியோ, இல்லை நான் அவரை அளவுக்கு அதிகமா வெறுக்கிற மாதிரியோ ஏதாவது சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதனால் தான் அவர் என் கண்ணு முன்னாடி வராம இருக்காரோ என்னவோ" என்றாள்.​

"தெளிவாக் குழப்புறாளே சாமி" என்று நினைத்துக் கொண்டு, "நீ பார்த்தது கேட்டது மட்டும் தான் உண்மைன்னு நினைக்காம எல்லாப் பக்கத்திலும் யோசிக்கிற பார் அதுவரை எனக்கு சந்தோஷம். ஆனா நேத்து உன்னைக் காப்பாத்தினது உன் மாமா தான்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற“ என்றாள்.​

“ஏன்னா, எனக்கே தெரியாம என்னைக் கொல்ல நினைக்கிற எதிரிங்களைப் பத்தி என்னோட அப்பாவுக்கு அப்புறம் மாமாவுக்கு மட்டும் தான் தெரியும். என்னோட பாதுகாப்புக்காக அப்பா யார் யாரோட பழக்கம் ஏற்படுத்தி இருந்தாருன்னும், மாமாவுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் தான் மாமாவுக்கு நம்ம ஹாஸ்டல் வாட்ச்மேனோடவும் பழக்கம் ஏற்பட்டு இருக்கு.​

அப்படி தான் நேத்து சரியான நேரத்துக்கு வந்து, மயக்க நிலமையில் இருந்த என்னைக் காப்பாத்தி ஹாஸ்பிட்டலில் சேர்த்துட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி போயிருக்கார்" என்றாள் குழலி.​

“அதை அவர் தான் செஞ்சிருக்கணும் என்ற கட்டாயம் இல்லையே. உன் பாதுகாப்புக்காக அவர் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் ஆட்கள் யாருக்காவது தகவல் கொடுத்து அவங்க மூலமாகக் கூட உன்னைக் காப்பாற்றி இருக்கலாமே“ வித்தியாசமான பிறவி வித்தியாசமாகவே யோசித்தாள்.​

"நான் ஆதாரம் இல்லாம எதுவும் பேசல கனி. இப்ப என் கையில் இருக்கிறது என் மாமா எனக்கு வாங்கிக்கொடுத்த போன் அண்ட் சிம். சோ அவராக் கொடுக்காம வாட்ச்மேனுக்கு என் நம்பர் தெரிந்திருக்க முடியாது. அத்தனை பெரிய ரிஸ்க் எடுத்து என்னைக் காப்பாற்றியது வேற ஒருத்தரா இருந்தா நான் கண் முழிக்கும் வரை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கணும் இல்ல. நர்ஸ் ஒருத்தங்க கிட்ட விசாரிச்சேன், எனக்கு ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லும் வரை அம்மாவும் பையனும் நிம்மதியா மூச்சு கூடவிடலன்னு சொன்னாங்க“ குழலி நிறுத்த, தான் கண்கொண்டு பார்த்தே இராத தோழியின் மர்மங்கள் நிறைந்த கணவனைப் பார்த்தே ஆக வேண்டும் போன்ற உற்றாகம் வந்தது கனிக்கு.​

"அப்ப ஆக மொத்தத்தில் ஒன்னு கன்பார்ம், உன் மாமா இப்ப ஜெயிலில் இல்லை" கனி சொல்ல, "ஆமா, என்னோட கெஸ் சரின்னா இப்ப கூட அவரு இந்த ஹாஸ்பிட்டலில் தான் இருக்கணும். எங்கேயாவது மறைவா இருந்து அப்பப்ப என்னைப் பார்த்துக்கிட்டு இருக்கணும்" குழலி சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் முகத்தை மறைத்த மாஸ்க்குடன் வார்டுபாய் ஒருவன் அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான்.​

 
Status
Not open for further replies.
Top