இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

உயிரே என் உயிரே நீ தானே - இறுதி அத்தியாயம்

ஆதிரை

Moderator
Episode 37(Final)

தனது மகளை அடிக்கச் சென்றவரைத் தடுத்து நிறுத்தி அவரிடம் பேசினான் விக்ரம்.

“அங்கிள்… இன்னும் எத்தனை காலத்துக்கு நீங்க எல்லாரும் இப்படியே இருப்பீங்க? எங்க நல்லதுக்காகவும், உங்க கௌரவத்துக்காகவும் எல்லாத்தையும் பண்ண நினைக்கற நீங்க, எங்க சந்தோஷம் அதுல இருக்கணும்ன்னு ஏன் நினைக்கறதில்ல? உங்க பொண்ணுதான் தெளிவா சொல்றாங்களே, அவங்கள அட்ஜஸ்ட் பண்ணிப் போறவனோட தான் சந்தோஷமா இருப்பேன்னு. அந்த மாதிரி ஒருத்தர் உங்க பொண்ணுக்குக் கிடைக்கிறது அவங்க செஞ்ச பாக்கியம். உங்களையும் அவர் ரொம்ப நல்லாவே பார்த்துக்குவார்ன்னு தான் சொல்வேன். அப்படி ஒருத்தர உங்க குடும்ப கௌரவத்துக்காக தொலைச்சிடாதீங்க. ஏன்னா, இப்போ எதுவுமே தெரியாது. உங்க பசங்க வாழ்க்கைய இழந்துட்டு நிக்கும்போதுதான் எல்லாத்தையுமே நீங்க நினைச்சுப் பார்ப்பீங்க. அந்த நிமிஷம் நீங்க தப்பு பண்ணது தோணும். அப்போ ஃபீல் பண்ணி எந்தப் பிரயோஜனமும் இருக்காது. அதுக்கு இப்போவே உங்க பொண்ணோட சந்தோஷம் தான் முக்கியம்னு நீங்க முடிவெடுத்தா, எந்த ஒரு பிரச்சினையும் வராது. நல்லதோ, கெட்டதோ அதை அவங்களே பார்த்துக்குவாங்க.”

“அப்போ… பசங்க நீங்க சொல்றதக் கேட்டுத்தான் நாங்க நடக்கணும். பெத்தவங்க எங்களுக்கு எந்த முடிவையும் எடுக்கத் தெரியாதுன்னு சொல்றீங்களா?”

“ச்சே… ச்சே… நான் அப்படி சொல்ல வரல அங்கிள். எப்பவுமே நீங்க எடுக்கற முடிவு தான் சரின்னு நினைக்கிறதுதான் தப்புன்னு சொல்றேன். ஏன்னா, இந்த லைஃப் எப்போ எப்படி மாறும்னே தெரியாது. குடும்ப கௌரவத்துக்காக, பிடிக்குதோ, பிடிக்கலையோ கல்யாணத்தப் பண்ணிட்டு, கடமைக்கு வாழ்ந்துட்டு இருக்க எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்க லைஃப்ல ஒரு நாள் திரும்பிப் பார்க்கும் போது, நிறைய விஷயங்கள் நடந்திருக்கும். ஆனா, அதுல உண்மையான லவ் இருக்கான்னு பார்த்தா கண்டிப்பா இருக்காது. ஏன், அதைப் பத்தி யோசிக்கக் கூட நேரம் இருக்காது. ஒருவேளை நம்ம காதலிச்சவங்களக் கல்யாணம் பண்ணியிருந்தா, இந்நேரம் சந்தோஷமா இருந்திருக்கலாம்னு நாங்க ஒரு நிமிஷம் ஃபீல் பண்ணாக் கூட அந்த லைஃப் எந்த விதத்திலும் எங்களுக்கு சாட்டிஸ்ஃபேக்‌ஷனா இருக்காது.”

“நீ சொல்றதெல்லாம் எங்கயோ, யாருக்கோ நடக்கறது. எல்லாருமே இப்படித்தான் வாழறாங்க.” என்றார் அஞ்சலியின் தாய்.

“எங்கயோ, யாருக்கோ இல்ல. நான் காதலிச்ச பொண்ணுக்கு இப்போ ஏற்பட்டிருக்க நிலைமையும் அதுதான். அவ இப்போ அவ பெத்தவரால வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்கறா. அதே நிலைமை உங்க பொண்ணுக்கும் வரணுமா?” என்றவன், ரிதன்யாவின் வாழ்க்கையில் நடந்தவற்றைச் சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகினர்.

“சொல்லுங்க. நீங்க கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சுட்டுப் போனதுக்கப்பறம், அந்த வாழ்க்கைய வாழ முடியாம உங்க பொண்ணு வேற ஏதாவது முடிவெடுத்தாலோ, இல்ல கடவுளே ஏதாவது முடிவெடுத்திருந்தாலோ உங்களால தடுக்க முடியுமா? அப்போ நீங்க யோசிச்சோ, அழுதோ எந்தப் பிரயோஜனமும் இருக்கப்போறது இல்ல. அதனால தான் சொல்றேன், உங்க பொண்ண அவரோட சேர்த்து வையுங்க. அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க, நீங்களும் நிம்மதியா இருக்கலாம்.” என்று அறிவுரை வழங்க அமைதியாய் இருந்தனர்.

அவர்கள் யோசிப்பதைத் தெரிந்துகொண்டவன், “அஞ்சலி… இனிமேல் எல்லாமே நல்லதே நடக்கும். உங்க லைஃப்க்கு ஆல் த பெஸ்ட்… அப்பா, அம்மா நாம கிளம்பலாம்.” என்று அவர்களை அழைக்க, அவர்களும் எழுந்து நடந்தனர்.

அப்போது, “விக்ரம்… ஒரு நிமிஷம்… உங்கள இந்த கொஞ்ச நேரமா தான் தெரியும். ஆனா, எனக்காக இவ்ளோ சப்போர்ட் பண்ணிப் பேசினதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… நீங்களும் லவ் பண்ண பொண்ணோட சேர்ந்து சந்தோஷமா வாழணும்னு, காட் கிட்ட ப்ரே பண்ணிக்கறேன். ஆல் தி பெஸ்ட் உங்களுக்கும்…” என்று வாழ்த்தினாள்.

அதைக் கேட்டு சிரித்தவன் முகம் முழுக்க தெளிவும், சந்தோஷமும் ஒன்று சேர இருந்ததைப் பார்த்தார் பிரபாகர்.

அங்கிருந்து கிளம்பி நேராக வீட்டிற்குச் செல்லாமல், கடற்கரை பக்கம் வந்து காரை நிறுத்தினான் விக்ரம்.

உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, இங்கே வந்திருப்பதைப் பார்த்த ராஜேஸ்வரி, “இங்க எதுக்குடா வந்த? வெயில்ல காயறதுக்கா?” என்றதும் சிரித்தான்.

பின்னால் அமர்ந்திருந்த பிரபாகரிடம் திரும்பி, “அப்பா… நான் சின்ன வயசுல கோவமா இருந்தப்போ இப்படித்தான உச்சி வெயில்ல பீச்சுக்கு கூட்டிட்டு வந்தீங்க? இப்போ நீங்களும் கோபமா இருப்பீங்கன்னு தெரியும். அதனால தான் இங்க வந்தேன்.” என்று அவரைப் பார்த்துச் சொல்ல,

அவனை மெலிதாக முறைத்தவர், அப்படியே சிரித்தும் விட்டார்.

“டேய்… படவா… நீ இருக்கியே… என்னையே எனக்குக் காட்டற…” என்று அவனைச் செல்லமாய் அடித்தார்.

“ம்ம்… இதுதான்பா உங்க ஸ்பெஷாலிட்டியே. அதை விட்டுட்டு ஏதோ ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அப்பா மாதிரி இந்தக் கொஞ்ச நாளா நடந்துக்கிட்டது சுத்தமா உங்களுக்கு செட் ஆகல.”

“ஆமா பிரபா… இதைத்தான் நானும் சொன்னேன். அவனும் அதைத்தான் ஃபீல் பண்ணியிருக்கான்.” என்ற ராஜேஸ்வரியைப் பிடித்துக் கொண்டார்.

“சரி… நான் பழைய பிரபாகர் தான் இப்போ. சொல்லுங்க.”

“நான் ரிதுவையே மேரேஜ் பண்ணிக்கறேன் பா. அவளோட நான் சேரணும்னு தான் என்னை கடவுள் அமெரிக்கா அனுப்ப திட்டம் போட்டிருக்கார்ன்னு தோணுது. ப்ளீஸ் பா… ரிதுவோட தான் என்னோட லைஃப் நல்லா இருக்கும்.” என்ற மகனது முகத்தை வருடியவர்,

“சரிடா மகனே… உன் விருப்பப்படியே நடக்கட்டும். நீ சந்தோஷமா இருந்தா போதும்.” என்றதும், குழந்தை போல் சிரித்தான்.

அவ்வளவுதான், இந்த விஷயம் சஞ்சய்-ப்ரீத்தி என அனைவருக்கும் உடனே தெரிந்துவிட, ப்ரீத்தி உடனே மனோஜூக்கும், அனித்ராவுக்கும் இதைச் சொல்லிவிட்டாள்.

மனோஜ் விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே விக்ரமிற்கு அழைத்துக் கேட்க, அனைத்தையும் விவரித்தான் அவன்.

ஆனால், இந்த விஷயத்தை ரிதன்யாவிடம் சொல்ல வேண்டாம் என்றும், தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் சொல்லச் சொன்னான்.

அவன் ஆடும் விளையாட்டை ரசிக்கத் தயாரானவனாய், அதே போல் ரிதன்யாவிடம் சொல்லிவிட்டான் மனோஜ். இடையில் மனோஜ் பிரேமாவிடமும், சவீதாவிடமும் இதைப்பற்றிப் பேசினான்.

இந்த முறை சவீதா உறுதியாக இருந்து, கிருஷ்ணனிடம் இதைப்பற்றித் தெரிவிக்க, “அம்முவோட சந்தோஷத்துக்கு நான் இனிமேல் குறுக்க நிக்க மாட்டேன். அவளோட விருப்பப்படியே நடக்கட்டும்.” என்று மனதார சம்மதித்துவிட்டார்.

ஒன்றரை மாதங்கள் கழிந்த நிலையில் சஞ்சய்க்கும், ப்ரீத்திக்கும் ஆண் குழந்தை நல்ல முறையில் பிறந்தது. அவர்களைப் பார்க்க, மனோஜ், ரிதன்யா, அனித்ரா என அனைவரின் பெற்றோரும் சென்னை வந்திருந்தனர்.

அனைவரும் குழந்தையைப் பார்க்க வந்திருந்த இடத்தில், கிருஷ்ணன் மனது கேளாமல் தான் செய்த தவறை உணர்ந்து விக்ரமிடமும், பிரபாகரிடமும் மன்னிப்புக் கேட்டார்.

தவறு செய்வது என்பது மனிதரின் இயல்பான குணம் தான். ஆனால், அதை உணர்ந்தவர் மனதில் என்றுமே ஒரு குற்ற உணர்ச்சி குடிகொண்டிருக்கும். அப்படித்தான் இருந்தது கிருஷ்ணனுக்கும்.

அதைப் பார்த்து அவர்களே சங்கடப்பட்டனர். அவரின் கைப்பிடித்த விக்ரம், “உங்க பொண்ண நான் இன்னமும் லவ் பண்ணிட்டுத்தான் இருக்கேன் அங்கிள். அவள நான் என்னைக்குமே கை விடமாட்டேன்.” என்று உறுதியளித்ததும் நிம்மதியடைந்தார் அவர்.

இங்கிருந்து மனோஜ், ரிதன்யா, அனித்ரா மூவரும் ஒளித்திரை காணொலியில் குழந்தையைக் கண்டு குதூகலித்தனர். ஆனால், அப்போது கூட இப்படியொரு விஷயம் நடந்தது ரிதன்யாவுக்குத் தெரியாது.

இத்தனை நேரமும் விக்ரம் சொல்லிக்கொண்டிருந்த விஷயங்களை நம்ப முடியாமலும், அதே சமயம் அதிர்ச்சி அடைந்தவளாகவும் கேட்டபடி நின்றுகொண்டிருந்தாள் ரிதன்யா.

அவன் பார்வை அவள் மேல் இன்னமும் நிலைத்திருக்க, அவன் கைகளோ அவளை இன்னமும் விடாமல் பிடித்துக்கொண்டுதான் இருந்தன.

“விக்ரம்… நீங்க ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தீங்க? இன்னமும் ஏன் என்னையே நினைச்சிட்டிருக்கீங்க? நான் அந்த அளவுக்கு உங்களுக்காக எதுவுமே பண்ணல. சொல்லப்போனா, உங்க காதலுக்கு நான் எந்த விதத்திலும் தகுதியே இல்லாதவ. நீங்க தப்பு பண்ணிட்டீங்க. உங்களுக்குன்னு வேற ஒரு லைஃப் தான் அமையணும். நான் வேண்டாம்.” என்று உணர்ச்சி பொங்கப் பேசிக்கொண்டிருந்தாள்.

“நீ என்ன தப்பு பண்ண ரிது? உன் அப்பா சொன்னத செஞ்ச, அவ்ளோதான். நீ எதைப்பத்தியும் யோசிக்கல. ஒரு நல்ல பொண்ணா, அவரோட மகளா உன் கடமைய செஞ்ச. என்னோட லவ்வ விட, நீ அவர் மேல வச்சிருக்க பாசமும், நம்பிக்கையும் தான் உனக்குப் பெருசா தெரிஞ்சது. அதனால தான் நீ என்னை ஏத்துக்கல. அதைத் தப்புன்னு சொல்ல முடியாது. இப்படிப்பட்ட நல்ல பொண்ணான உனக்குக் கடவுள் ஏன் இப்படி ஒரு அநியாயம் பண்ணாருன்னு எனக்குத் தெரியல. ஆனா, எல்லாத்தையும் தாண்டி, உன்னை என்கிட்ட மறுபடியும் கொடுக்கணும்னு நினைச்சுத்தான் அவர் இப்படியெல்லாம் பண்ணியிருக்காருன்னு நான் லேட்டா தான் புரிஞ்சுக்கிட்டேன்.”

“நீங்க என்ன சொன்னாலும் சரி… நீங்க என்னை ஏத்துக்கணும்னு முடிவு பண்ணது தப்பு விக்ரம். நான் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறேன். உங்களுக்குன்னு வேற ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். அதுதான் சரியா இருக்கும்.”

“ரிது… நானும் உன்னை மாதிரி ஒரு நிமிஷம் யோசிச்சேன். அப்பாவுக்காகத்தான் பொண்ணு பார்க்கப் போனேன். ஆனா, அங்க போனதால தான் என்னோட காதல் எனக்குத் திரும்பக் கிடைச்சது. அந்தப் பொண்ணு அஞ்சலி, அவளோட அருண் மேல வச்சிருக்க பாசம், அன்பு, காதல் எல்லாமே சொல்ல முடியாதது. அதே அளவு எனக்கும் உன்மேல இருக்குன்னு அவ பேசும்போதுதான் புரிஞ்சுக்கிட்டேன். அந்தப் பொண்ண எனக்குக் காட்டும்போது கூட நீதான் என் கண்ணுக்குத் தெரிஞ்ச. மனசு முழுக்க நீ இருக்கும்போது, நான் எப்படி இன்னொரு லைஃப்பத் தேட முடியும்? காதலுக்கு முன்னாடி சரி, தப்புன்னு எதுவுமே இல்ல ரிது… காதல் மட்டும் தான் நிஜம். அதை நான் உணர்ந்த செகண்ட்டே உன்னை வந்து பார்க்கணும்னு நினைச்சேன். ரொம்ப உருகிட்டிருந்தேன். ஃப்ளைட் இங்க வந்து லேண்ட் ஆனப்போ, என்னோட ஹார்ட் பீட் ஃபுல் ஸ்பீட்ல துடிச்சது. உன்னைப் பார்த்ததும், ஓடிவந்து அணைச்சுக்கணும்னு தோணுன மனசக் கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிட்டிருக்கேன் இப்போவரைக்கும்.” என்றவனது கைகளின் இறுக்கமே அதைச் சொல்லியது.

ரிதன்யாவின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது…

அதை உணர்ந்துகொண்டவன் அவள் கன்னங்களை கைகளால் ஏந்திக்கொண்டான்.

“நீ எதுக்காக அழறன்னு எனக்குத் தெரியும் ரிது… என்னை வேண்டாம்னு ஒரு கட்டத்துல சொல்லிட்டோமேன்னு குற்ற உணர்ச்சி உன் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு. அது இதுக்கு மேலயும் வேண்டாம். நீ இனிமேல் அழக்கூடாது. உன் மனசுல நான் இருக்கேனா? அதை மட்டும் மறைக்காம சொல்லு. இப்போ எந்த அப்பாவும் வந்து உன்னை பேசப் போறது இல்ல. இந்த உலகத்துல நானும், நீயும் மட்டும் முடிவெடுத்தா போதும். சொல்லு…” என்றவனது விழிகளைப் பார்க்க முடியாமல் கீழே குனிய முயல, அதை வேண்டாம் என்று இன்னும் இறுகப் பிடித்திருந்தான் அவள் கன்னங்களை.

“எங்கப்பா என்கிட்ட சத்தியம் வாங்கிருக்கலன்னா, எப்போவே உங்கள காதலிச்சிருப்பேன் விக்ரம். என் மனசுல எப்பவுமே உங்களுக்கான இடம் இருந்துச்சு. அதை நான் காதலுக்காகக் கொடுக்கல. ஒரு நல்ல நட்புக்காக மட்டுமே கொடுத்திருந்தேன். ஆனா, என் வாழ்க்கைய தொலைச்சிட்டு நின்னப்போ தான், உங்க காதலோட வலி புரிஞ்சது. ப்ரீத்தியோட வளைகாப்புக்கு வந்தப்போ, உங்களைப் பார்த்ததும் ஓடிவந்து உங்க நெஞ்சுல சாஞ்சு தப்பு பண்ணிட்டேன்னு அழணும்னு தோணுச்சு. உங்கள மாதிரி ஒருத்தர லைஃப்ல மிஸ் பண்ணத நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சுப் பார்த்திருக்கேன். ஆனா, அது உங்க மேல வச்சிருக்க அன்புதான்னு இந்த நிமிஷம் தான் உணர்றேன் விக்ரம். எனக்கு உங்களை எப்பவுமே பிடிக்கும். ஆனா, அது காதல்ன்னு நான் நினைக்கல.” என்றதும், சந்தோஷத்தில் அவன் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

அவள் கன்னங்களை விட்டவன், இப்போது அவள் எதிர்பாராமல் அவளை நெஞ்சோடு அப்படியே அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பிற்காகத்தான் இத்தனை நாட்களும் ஏங்கியதாய் உணர்ந்த ரிதன்யா அவனது மார்பில் புதைந்து அழுதாள்.

“என்னோட உயிரே நீதான் ரிது… உன்னைத் தாண்டி எதையும் யோசிக்க முடியாது இந்த லைஃப்ல. ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ மச்…” என்று அவளை இன்னும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.

அந்த அணைப்பில் அவனது மொத்தக் காதலையும் கண்டுகொண்டாள் ரிதன்யா. அவனே இனி தனது உலகம் என்று அவளும் அணைத்துக்கொண்டாள்.

சந்தோஷமும், அழுகையும் ஒன்று சேர அவர்களைக் கண்டு அந்த நயாகரா பேரருவி தனது பெருந்துளிகளில் சில துளிகளைப் பூக்களாய்த் தெளித்தன.

அவர்கள் சேர்ந்துவிட்டதைப் பார்த்து மனோஜூம், அனித்ராவும் ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கிக் கொண்டனர். இதற்காகத் தான் எத்தனை நாடகம் நடத்தவேண்டியதாய் இருந்தது என்று நினைத்து சிரித்துக்கொண்டான் மனோஜ்.

இருவரின் மனமும் ஒன்றாய் இணைய, காதலுடன் சில மாதங்கள் அழகாய்க் கழிந்தன. பெரியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்தாலோசித்து அவர்கள் கடமையை நிறைவேற்றத் தயாராய் இருந்தனர்.

ஒரு வருடம் கழிந்து அவர்கள் வந்த சமயம் திருமணத்தை ஏற்பாடு செய்தனர். ஏழு மாதக் குழந்தையுடன் சந்தோஷப் பூரிப்பில் வந்து அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தனர் சஞ்சயும், ப்ரீத்தியும்.

மணமக்கள் விக்ரம்-ரிதன்யா, மனோஜ்-அனித்ரா திருமணத்தைக் காண அனைத்து உறவினர்கள், நண்பர்கள் என ஒன்றிணைந்திருந்தனர் அங்கே.

காதல் பார்வைகள் ஒன்று கலக்க, மந்திரங்களும், மேளங்களும் ஒலிக்க, அனைவருடைய ஆசிர்வாதங்களோடு இரு ஜோடிகளின் திருமணம் என்னும் வைபோகம் இனிதே நடந்து முடிந்தன.

தேனிலவுக்காக இரு ஜோடிகளுடன், முந்தைய ஜோடியான சஞ்சயும், ப்ரீத்தியும் உடன் வந்திருந்தனர். தங்களது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது இந்தப் பயணம்.

நட்பையும், காதலையும் என்றும் பிரிக்க முடியாது என்ற உறுதியோடும், இனிய நினைவுகளோடும் தேனிலவை இனிதாய்க் கழித்தனர் நம் ஜோடிகள்.

இதே போல் அவர்களின் உறவு என்றும் தொடர நாமும் வாழ்த்துவோம்…


(சுபம்)



சிறு குறிப்பு:

[அன்று தேனி வழியாக கொடைக்கானல் மலைப்பகுதிக்கு விக்ரம் சென்றுகொண்டிருந்த போது, ஓடிவந்து வழிமறித்தபடி மயங்கி சரிந்தாள் அந்தப் பெண்.

பதறிப்போய் ஓடிச்சென்று அவளைத் தட்டி எழுப்ப முயன்ற போது, பின்னாலேயே அவன் போலவே இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிலர் வந்து பார்த்தனர்.

அந்தப் பெண்ணை அருகே இருந்த சிறிய மருத்துவமனையில் சென்று சேர்த்தனர். அவளுக்கான முதலுதவி அளித்து அவள் கண் திறந்தபோது தான் நிம்மதியாக இருந்தது அவர்களுக்கு.

இந்தப் பெண்ணைக் காப்பாற்ற வந்து அந்த இளைஞர்களோடு அறிமுகமானான் விக்ரம். அவள் கண் திறந்த போது அவளிடம் யாரென்று கேட்க,

“கயல்விழி…” என்றவள், தனக்கு நடந்த அநியாயங்களை ஒன்றுவிடாமல் அவர்களிடம் சொன்னாள்.

அதைக் கேட்டு அதிர்ச்சியானவர்கள், அப்பொழுதே அவளது காதலனான மதன்குமாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேச, அதிர்ச்சியில் அழுதான் அவன்.

அடுத்த நிமிடமே வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல், கிளம்பியவன் அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான். கயல்விழியின் நிலைகண்டு அவளைப் பிடித்துக்கொண்டு அழுதான்.

அவன் திருமணமானதையும், ஒரு பெண்ணை நிற்கதியாய் நிற்கவைத்துவிட்டு வந்ததையும் சொல்லாமல், எச்சரிக்கையுடன் தன் குடும்பத்தினரால் சிக்கல் வந்ததை மட்டும் அவர்களிடம் தெரிவித்தான்.

நன்கு படித்து, கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக இருந்த மதன்குமாருக்கு ஏற்ற வேலையை அந்த இளைஞர்களில் ஒருவன் தனது நண்பன் மூலம் மும்பையில் பரிந்துரைத்தான்.

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் அவன், தனது பேராசிரியரிடம் அனுமதி பெற்று அவனை இங்கே வந்துவிடுமாறு சொல்ல, அவர்களைத் தயார்படுத்தி அடுத்த இரு தினங்களில் அங்கே அனுப்பி வைத்தனர்.

அத்தனை எளிதில் எவரும் நுழைய முடியா இடத்தில் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது என்ற தைரியத்திலேயே அவர்களை அங்கே அனுப்பினர்.

இருவரும் நிம்மதியாக அங்கே சென்று சேர்ந்ததும், அவனது திறமையைக் கண்டு அவனை வேலைக்கும் எடுத்துக்கொண்டனர். இப்போது அவர்கள் வாழ்வு பாதுகாப்பாக ஆரம்பமானது.

அவர்கள் இருவரும் சேர உதவிய இளைஞர்களோடு தான் விக்ரமின் அந்தப் பயணம் இரு மாதங்கள் கழிந்தன.

ஆனால், மதன்குமார் நிற்கதியாய் அன்று விட்டுச் சென்றது ரிதன்யாவைத்தான் என்று இன்றுவரை எவருக்கும், ஏன் அது விக்ரமிற்கும் கூடத் தெரியாது…

விதி அவர்களை இணைக்கத்தான், இப்படியொரு விளையாட்டை விளையாடியது என்று தெரியாமல் மகிழ்வுடன் இருந்தனர் விக்ரமும், ரிதன்யாவும்.]
 
Top