இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

இறுதி அத்தியாயங்கள்

Janani Naveen

Administrator

28​

ஆராத்யாவும் அவளும் மட்டும் வாழ்ந்த அவர்களின் வீட்டிற்குத் திரும்பி அரைமணி நேரம் ஆகி இருந்தது.​

கதவைத் திறந்து கொண்டு வரும் போதே, மழலையாக அவளை ஏந்திக் கொண்டு இந்த வீட்டிற்குள் வந்த நினைவைத் தொடர்ந்து, அவள் தவழ்ந்து, நடந்து ஓடி விளையாடிய நினைவுகள், தாயும் மகளும் மட்டுமே உலகமாக இன்பத்தில் களித்த நாட்கள், மகளின் உடல் நிலை பற்றித் தெரிந்த அந்த இரவு, அவளை கைகளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு அச்சத்தில் அவள் துடித்த அந்த இரவு,​

அதன் பின் அவளுக்கு ஏதேனும் நேர்ந்திடுமோ என்று அச்சதில் கழித்த பலப்பல தூங்கா இரவுகள். முதன் முதலாக அந்த வீட்டை தனது உயரத்தால் சிறியதாக்கிக் கொண்டு அர்ஷன் வந்த தினம், அவன் தான் தந்தை என்று குழந்தை அவனோடு ஒட்டிக் கொண்டு அலைந்தது என்று ஒவ்வொன்றாக நினைவு வந்து விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள்.​

இப்படி ஒரு நாள் வந்து விடக் கூடாது என்று, எத்தனை எத்தனை முறை கலங்கித் தவித்திருப்பாள். சற்று முன் கனிவைக் காட்டிய அவனது முகம், கோபத்தில் கனன்றதைக் கூட பொறுத்துக் கொள்வாள்.​

குழந்தைகளை கடைசியாக ஒரு முறை பார்க்கக் கூட விட மாட்டேன் என்று அவர்களைத் தூக்கிக் கொண்டு, அவனது அலுவலக அறைக்குள் அவன் சென்று கதவை பூட்டி கொண்டான். பின்னாடியே சென்று கதவைத் தட்டிக் கெஞ்ச அவளது தாய் மனம் தவித்தாலும், தன்மானம் அதைச் செய்ய தடை விதித்தது. அப்படியும் அந்தத் தன்மானத்தை விட்டு, ஒரு முறை கதவைத் தட்டினாள்.​

கதவைத் திறந்தான் தான். அவனது முகத்தைப் பார்க்கக் கூட முடியாமல் கண்ணீர் பார்வையை மறைத்திருந்தது.​

அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் “நான்.. நான் என் வீட்டுக்கு போறேன். போறதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை ரெண்டு குழந்தைகளையும் பார்த்துட்டுப் போகவா?” என்றாள் தேம்பிக் கொண்டே. பதில் சொல்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்க,​

ஒரு வார்த்தை கூடப் பேசாமல், அவளது முகத்தின் மீதே, கதவை அறைந்து சாற்றினான்.​

அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் தளர்ந்து துவண்டு வீடு வந்து சேர்ந்தாள். எப்படி வந்தாள் என்ன ஏது என்று அவளுக்கு ஒன்றும் நினைவில்லை.​

அப்படியே அமர்ந்து அழுது கொண்டிருந்த அவளுக்கு, இனிமேல் யாருக்காக வாழ வேண்டும் என்ற விரக்தி, நொடிக்கு நொடி கூடிக் கொண்டே போனதும். உயிர் வாழத்தான் வேண்டுமா என்று அவள் யோசிக்கும் போது, வாசலில் அழைப்பு மணி அடித்தது.​

முதலில் அதை கவனிக்காமல் இருந்தவள், விடாமல் அடிக்கவும், எரிச்சலுடன் எழுந்து சென்று கதவைத் திறந்தவளின் அழுது வீங்கிய முகம், காலைத் தாமரையாக மலர்ந்து போனது.​

எதிரே நெடுமரம் போல நின்றிருந்த அர்ஷன், குழந்தைகள் இருவரையும் இரு தோளிலும் சுமந்து கொண்டு, அவளை துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டு நின்றான்.​

ஆம்.. அவள் தயங்கி தயங்கிப் பேச வந்த போது சத்தியமாக ஒரு குழந்தையை மட்டும் வாங்கிக் கொண்டு போக முடிவெடுத்திருப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை.​

அப்படி அவள் கேட்ட நொடி, அப்போ நானும் இன்னொரு குழந்தையும் எப்படிப் போனாலும் இவளுக்குப் பரவாயில்லையா என்ற கோபம் தான் வந்தது.​

அவனே தன் மனதை அவளிடம் திறக்க தக்க தருணம் பார்த்து, காத்துக் கொண்டிருக்கிறான். அவனது முந்தைய பேச்சு அனைத்தும் நினைவுக்கு வந்து அவள் தன்னை ஒதுக்கி விடுவாளோ! இணைக்கும் பாலமாக மகளும் இல்லையே, அவள் ஒரேயடியாக மறுத்து விட்டால்! அவளது மனம் நோகாத வண்ணம் அவளை எப்படி தன்னுடன் வைத்துக் கொள்ள? என்று பலதும் யோசித்து அவன் தடுமாறி கொண்டிருந்த வேளை இப்படி ஒரு குழந்தை மட்டும் போதும் என்று அவள் வந்து கேட்கவும், தன்னையும் மற்ற குழந்தையையும் விட்டுச் செல்வது அவளுக்கு பாதிப்பே இல்லையா? அவனது நேசத்தை அவன் மனம் திறந்து அவளிடம் கூறா விட்டாலும் இத்தனை நாட்களில் அவனது நேசத்தை செயல்களில் கூடவா அவள் உணரவில்லை? இப்போது அவன் மனம் திறந்தாலும் உதறி சென்று விடுவாளோ என்ற பயம் அவனது இதயத்தை நடுங்கச் செய்தது. மகளின் இழப்பு இன்னும் கூட பச்சை ரணமாக அவனது மனதில் இருக்க அவனும் மனிதன் தான். கோபத்தை வார்த்தைகளால் கொட்டி விட்டான்.​

கோபத்தில் தான் வார்த்தைகளை விட்டு விட்டு, அலுவலக அறைக்குள் குழந்தைகளை எடுத்துக் கொண்டு சென்றான். அவளுக்கு அந்த அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று தான் நினைத்தான்.​

ஆனால் மனம் முழுதும் பயம், எங்கே போய் விடுவாளோ என்று. அவனது மனம் குளிரும் வகையில் அலுவலக அறைக் கதவை அவள் தட்டிய போது, போக மாட்டேன் என்று சொல்வாளோ! என்ற ஆசையில் ஏக்கமும் எதிர் பார்ப்பும் கலந்து அவளது முகத்தை பார்த்துக் கொண்டு நின்றால், அவனது மார்பளவு மட்டுமே பார்வையை வைத்துக் கொண்டு, அப்போதும் கடைசியாகக் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும், கோபத்தில் முகத்தில் அறைந்தது போல கதவைச் சாத்தி விட்டு அதன் மீதே சாய்ந்து நின்றவனுக்கு, நெஞ்சம் கோபத்தில் விம்மித் துடித்தது.​

அவள் வீட்டை விட்டு கிளம்பும் போதே காலை உடைத்து வீட்டிற்குள் வைக்க வேணும் போல, கற்கால மனிதனைப் போல ஆவேசம் வந்தது. அவள் வீட்டு வாசலைத் தாண்டவும், தேஜை அவள் பின்னே அனுப்பி வைத்தான். போகட்டும் சற்று நேரத் தனிமையை அவளை தெளிய வைக்கும் என்று நம்பினான்.​

அரை மணி நேரம் கூட முழுதாக அவள் இல்லாத வீட்டில் இருக்க முடியாமல், இதோ ருத்ரமூர்த்தியாக அவள் முன் நின்று கொண்டிருக்கிறான்.​

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், குழந்தையைத் தூக்க அவள் கைகள் நீட்டினாள். அதை கவனிக்காமல் குழந்தைகளை தூக்கிக் கொண்டு அவன் உள்ளே நுழைய, அவள் கதவை சாற்றி விட்டு, அவன் பின்னே உள்ளே வந்தாள்.​

உள்ளே நுழைந்ததும் அவளை போலவே அவனுக்கும் மகளின் நினைவு நெஞ்சை அடைத்தது. முதல் முதலாக இதே வீட்டு கூடத்தில் தான் அவளை கண்டான். பார்த்த நொடி முதல் அவனது வாழ்வை மந்திரக் கோல் கொண்டு சுழட்டி தனது ஆதிக்கத்தில் எடுத்துக் கொண்ட தேவதையின் பிரிவு இதயத்தின் மையப்பகுதியில் வலிக்கச் செய்தது. கையில் இருந்த மகன்களை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டான். அவன் பின்னோடு உள்ளே வந்தவளின் உடல் மொழி மூலம் குழந்தைகளை ஏந்திக் கொள்ள பர பரத்தை அறிந்து கொண்டான்.​

வெகு நேரமாக குழந்தைகளுக்கு பசியாற்றாமல் அவளுக்கு தனங்கள் இரண்டும் கனத்து வலிக்கத் தொடங்கியது. அவள் அணிந்திருந்த பிங்க் நிற காட்டன் டாப்ஸ் நனைந்திருக்க, அது அவனது கழுகுக் கண்களுக்கு தப்பாமல் பட்டது.​

ரோஜா நிறத்தில், கொழு கொழுவன்று அவனது கைகளில் பூப்பந்தாக இருந்த குழந்தைகளின் மீதே அவளது பார்வை மையம் கொண்டிருக்க, அவனது பார்வை அவளை மட்டுமே வருடியது.​

வலது கையிலிருந்து தாயிடம் தாவத் துடித்த குழந்தையை அவளிடம் அவன் கொடுக்க, நெஞ்சம் பர பரக்க, குழந்தையை வாங்கி அதன் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, அப்படியே தரையில் அமர்ந்து அவனுக்கு முதுகு காட்டி பால் புகட்டத் தொடங்கினாள்.​

முகம் கடுத்தவன் ‘ரொம்பத்தான் போடி!’ என்று கடுத்துக் கொள்ள, மற்ற குழந்தையும் வழக்கம் போல அதே நேரத்திற்கு அழுகையைத் தொடங்கியது. அவனைத் திரும்பி தவிப்புடன் அவள் பார்க்க, இதழ்கள் புன்னகையில் வளைய, நொடியும் யோசிக்காமல், அவள் அருகே தரையில் அமர்ந்தான், அர்ஷன் இரானி.​

கண்கள் விரிய அவனை நிமிர்ந்து பார்த்தவளை சட்டை செய்யாமல், குழந்தையை அவளது மற்ற மார்பில் பொருத்தி விட்டு நிமிர்ந்தான்.​

ஒரு குழந்தையை அவனும், மற்றதை அவளும் அணைவாகப் பிடித்துக் கொண்டு அவள் பசியாற்றி முடிக்க, குழந்தைகளுக்கு கீழே படுக்கை விரித்தான், அவன்.​

முதலாமவன் குடித்து முடித்து மார்பிலேயே உறங்கி விட, குழந்தையை அள்ளித் தோளில் போட்டு சற்று நேரம் தட்டி விட்டு படுக்கையில் விட்டவன், அடுத்த குழந்தையும் உறங்கி இருக்க, அதையும் அப்படியே செய்தான்.​

அவன் செய்வதை பார்த்துக் கொண்டே எழுந்து, சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.​

குழந்தைகளுக்கு போர்த்தி விட்டு விட்டு வந்தவன், அவள் எதிரே அவளையே உறுத்து விழித்துக் கொண்டு நின்றான்.​

‘எதற்கு வந்தான்? குழந்தைகளை இனி காட்டவே மாட்டேன் என்றவன், குழந்தைகளை கூட்டிக் கொண்டு வந்து அவளது கைகளில் ஏன் தந்தான்?’ என்று யோசித்துக் கொண்டு நின்றவளிடம்,​

“அது வாழ ஒரு பிடிப்பு வேணும்னு கேட்ட தானே? அதான் யோசிச்சுப் பார்த்தேன், சரி இன்னும் ரெண்டு குழந்தைக்கு அஸ்திவாரம் போட்டுட்டு போகலாம்னு வந்தேன்.” என்றான் அவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் வருடிக் கொண்டே.​

“ஹான்!” என்று அவள் விழிக்க, அவன் உதட்டோரம் துடித்ததை கட்டுப் படுத்திக் கொண்டு,​

ஒரு பெருமூச்சுடன் குழந்தைகள் பக்கம் கையைக் காட்டி “குழந்தைகளை உன் கிட்ட ஒப்படைக்க தான் வந்தேன்.” என்று அவன் சொன்னதும், அவளது கண்கள் பெரிதாக விரிந்தது. அவன் தொடர்ந்து...​

“இவங்களோட இலவச இணைப்பா என்னையும் ஒப்படைக்க வந்தேன்.” என்ற போது அவள் பேச்சு மறந்து, அவனைப் பார்த்த விழி பார்த்த படி நின்றாள்.​

“பொதுவா இலவசமா கொடுக்கும் எந்தப் பொருளையும் பெருசா மதிக்க மாட்டோம், பத்திரப்படுத்தி வைக்க மாட்டோம். ஃப்ரீயா வந்தது தானேன்னு ஒரு அலட்சியம் இருக்கும்.” என்ற போது..​

‘அவனது கண்கள் சொன்ன பாவம் என்ன? அவனது வார்த்தைகளின் அர்த்தம் என்ன?’ அவள் யோசித்துக் கொண்டிருக்க, அவன் தொடர்ந்தான்.​

“என்னையும் அப்படி தேவையில்லாத குப்பையா தூக்கிப் போட மாட்டேன்னு நம்பிக்கையில் வந்து இருக்கேன்.” என்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டு வந்தவன், தனது மொத்த உயரத்திற்கு நிமிர்ந்து அவளைப் பார்த்து முறைத்து..​

“அப்படி குழந்தைகள் மட்டும் போதும், நான் வேண்டாம்னு எதுவும் என்னை தூக்கிப் போடும் பேச்சு பேசிப் பார், உன்னைக் கொன்னுடுவேன்!” என்றான் ஒற்றை விரல் நீட்டி ஆத்திரமாக.​

அதை கேட்டு, அவளது திகைப்பு பன்மடங்கு பெருகியது. வார்த்தை வராமல் விழித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து,​

“எப்படி? எப்படி? ஒரே ஒரு குழந்தை வேணுமா உனக்கு? அப்போ, நானும் இன்னொரு குழந்தையும் என்னடி பாவம் பண்ணினோம், ராட்சஸி?” என்றவன் அவளது பின்னங்கழுத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்து, அவளது கண்களுக்குள் பார்த்த பார்வையில், அத்தனை கோபம். அவனை மீறி குரல் உயர்ந்து கோபத்தில் காய்ந்தான்.​

“அது.. அது நீங்க என்னை..”​

“ஆமாம், உன்னை.. உன்னைத் தான் காதலிச்சுத் தொலையுறேன். அதுல உனக்கு எதுவும் பிரச்சனையா?” என்று வள்ளென்று விழுந்தவன், சட்டென்று அவளை விட்டு விலகி நின்று நெற்றியை பற்றிக் கொண்டு சில விநாடிகள் கண் மூடி நின்றவன், அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து வைத்தான்.​

‘எங்க பிரச்சனைன்னு சொல்லித் தான் பாரேன்!’ என்று அவனது பார்வை மிரட்டியது.​

அதைக் கண்டு பயந்து அவள் தலையை எல்லாப்புறமும் உருட்டி வைத்தாள்.​

“அதானே அர்ஷன் இரானியோட காதலை வேண்டாம்னு வேற சொல்லுவியா?” என்றான் கர்வமாக. அதை கேட்டு அவள் அவனை கலவரமாக அடி பட்ட பார்வை பார்த்தாள்.​

“என்ன? திமிராச் சொல்றேன்னு பார்க்கறியா? திமிர் தான். நான் பெரிய கோடீஸ்வரன், பிசினஸ் லெஜன்ட் அப்படிங்கற திமிர் இல்லை. இது என் காதல் மேல இருக்கும் திமிர். என்னை விட யாரும் உன்னை அதிகமா காதலிச்சுட முடியாதுங்கற திமிர்!” என்று அவன் பேச பேச, மூச்சு விடவும் மறந்து நின்றாள்.​

தலையை அழுத்தமாக கோதிக் கொண்டு அவளைப் பார்த்தான்,​

‘இவனுக்கு என் மீது இருக்கும் உணர்வுக்குப் பெயர் காதலா? உண்மையாகவே காதலா?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,​

அவளது இதழ்கள் “ரீபவுண்ட் கேர்ள்” என்று முணு முணுத்தது.​

சத்தம் கேட்காவிட்டாலும் அவளது இதழ் அசைப்பு புரிந்து, அவனது முகம் கடுத்தது.​

“முதல் காதல் முதல் காதல் முதல் காதல்.. ஹெல் வித் தட் வேர்ட்” என்று தலையை அழுத்தக் கோதிக் கொண்டவன்,​

“ஆமாம்டி அவளை உயிருக்கு உயிரா காதலிச்சேன். நல்லாக் கேளு! காதலிச்சேன், இறந்த காலம். முடிஞ்சு போச்சு. என் மனசுல ஒண்ணுமே இல்லை. அவளைக் கடைசியாக பார்த்த அன்னைக்கு வேற ஒருத்தனோட குழந்தையை சுமந்துட்டு இருந்தா. அதுக்கும் மேல அவளை நினைப்பேனா, நான்?” என்ற போது கோபத்தில் அவனது மொத்த உடலும் நடுங்கியது.​

“உன்னை.. முதன் முதலா பார்த்தப்போ எல்லாம் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லவே இல்லை. அப்போ இருந்த அர்ஷன் வேற. என் தங்கை மூலமா ஆராவைப் பத்தி மட்டுமில்லை உன்னோட காதலைப் பத்தியும் கூடத் தெரிஞ்சுது.​

அப்போ கூட உன் மேல காதல் வரலை. என் வாழ்க்கையில் காதல் முடிஞ்சு போன அத்தியாயம். இனி வரவே வராதுன்னு தான் நினைச்சேன்!” கண்களை இறுக மூடித் திறந்து, ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டவன்,​

அவனது அவள் மீதான நேசத்தை இப்படி சொல்ல நினைத்திருக்கவில்லை. ஆனால் சொல்லி ஆக வேண்டிய கட்டாயம். வேறு வழியின்றி ஒரு பெருமூச்சுடன்...​

“ஆனா... எந்த நொடி உன் மேல காதல் வந்ததுன்னு தெரியலை, ஷரா. சின்ன வயசில் இருந்து எனக்குக் கிடைக்காத அம்மா பாசம், என் மகளுக்கு அளவுக்கு அதிகமாகக் கிடைக்கறதை பார்த்தப்போ வந்ததா!​

முதல் காதல் உடைஞ்சு போன வலி என்னன்னு தெரியும்னு, எனக்காக யோசிச்சு நீ பேசின அப்போவா!​

அந்த வைன் கலர் டிரஸ்ல காதல்ல கசிந்துருகி ஒரு ஸ்பானிஷ் பாட்டு பாடினியே, உன் கண்ணுல அத்தனை பாவம், அத்தனை சோகம் தவிப்பு! அதைப் பார்த்த அப்போவா!​

பொண்ணுக்கு அழகு தைரியம் தான்.​

வீரமா அந்த நாலு பேரை தனி ஆளா நின்னு வெளுத்து வாங்கினதைப் பார்த்தா!​

அபார்ஷன் ஆகி சுருண்டு கிடந்தப்போவும், வாய்ப்பு கிடைச்சா குழந்தைக்காக உன்னோட இதயத்தைக் கூட எடுத்துக் கொடுப்பேன், வலி பொறுக்கறது பெரிய விஷயம் இல்லைன்னு சொன்னயே, அப்போவா!​

ஐவிஎஃப் வலி அவ்ளோ தாங்கி இருக்க. அப்போ கூட வலிக்காக உன்னோட கண்ணு கலங்கலை. குழந்தையைக் காப்பாத்த என்ன பண்ணனு தெரியாமல் தவிச்சு தான், உன்னோட கண்ணு கலங்கிச்சு, அப்போவா!​

இல்லை... இது எல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா என்னை உன் கிட்ட இழுத்துட்டு வந்துச்சா தெரியலை.​

ஆனா, மொத்தமா உன் கிட்ட வந்துட்டேன். நீ தான்டி, நீ மட்டும் தான். வேற யாரும் இனி வர வாய்ப்பே இல்லை, ஷரா.” என்று அழுத்தம் திருத்தமாக அவன் கூறி முடித்த போது, அவனது குரலில் யாசகம் இல்லை.​

‘நான் சொல்வதை நீ கேட்டுத் தான் ஆக வேண்டும். என்னை பதிலுக்கு நீ காதலித்தே ஆக வேண்டும்.’ என்ற கட்டளை தான் இருந்தது.​

‘த கிரேட் அர்ஷன் இஸ் பாக்’ என்று சொல்லும் வகையில், முகத்தில் பிடிவாதமும் தீவிரமும் இருந்தது.​

அவள் நம்பவும் முடியாமல், அவனது முகத்திலும் குரலிலும் இருந்த உறுதியில் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அப்படியே திகைத்திருக்க...​

“என்ன உங்க அப்பா பக்கம் வழக்கப்படி தாலி வேணுமா? இல்ல... மோதிரம் மாத்திக்கணுமா? எதுன்னாலும் எனக்குச் சரி. அது எல்லாம் ஊருக்குத் தான். இங்க நீ வந்தப்போவே என்னைப் பொறுத்தவரை நீ என் பொண்டாட்டி!” என்று அவனது இதயத்தின் இடப் பகுதியை ஒற்றை விரல் கொண்டு சுட்டிக் காட்டியவன், தனது ட்ராக் சூட் பாண்டில் இருந்து சிறிய நகை பெட்டியை எடுத்து, அவளுக்காக செய்து வைத்த மோதிரத்தை அவளது விரல்களில் போட்டு விட்டு, அவனுக்கான மோதிரத்தை அவளைப் போட வைத்தான். அந்த மோதிர வடிவமைப்பைப் பார்த்து கண்களை ஆச்சரியத்தில் விரிந்தது​

அவனது அதிரடியில் மிடறு விழுங்கிக் கொண்டு “அர்ஷ்” என்ற அடுத்த நொடி, அவனது இறுகிய அணைப்பில் இருந்தாள்.​

அவன் இழுத்து அணைத்த வேகத்தில், அருகே இருந்த மெத்திருக்கையில் தடுமாறி அவள் விழ, அவள் மீது படர்ந்தவாறு அவனும் சரிந்த நொடி, அவளது இதழ்களை சிறையெடுத்திருந்தான்.​

மூச்சு முட்டும் மோக முத்தம் கொடுத்து அவளை திக்கு முக்காட வைத்தவன், அவளது மார்பின் மத்தியில் இளைப்பாறினான்.​

நடக்க வாய்ப்பே இல்லை என்று அவள் கற்பனையில் வித விதமாக யோசித்துப் பார்த்த நொடிகள் இவை. நிஜமாக, கண் முன் நிகழவும், அவளது கண்கள் கலங்கியது. அதற்கு மாறாக இதழ்கள் புன்னகை சிந்த,​

அவனது பிடரியை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு, அவனது முகத்தை நிமிர்த்தி “ஐ.. ஐ லவ் யூ அர்ஷ்” என்ற போது, அவளது நெஞ்சம் விம்மியது.​

அவனுக்கும் அதே நிலை தான். இந்த நேரத்தில் தாங்கள் இணையக் காரணமாக இருந்த தங்களின் முதல் மகவு தங்களுடன் இருந்து இருந்தால், எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளுக்கும் அதே நினைவு தான் என்று “தி..தியா தியா இருந்திருக்கலாம்” என்று அவள் கண்களின் கண்ணீருடன் கூற, அவனது கண்ணீர் அவளது மார்பை நனைத்தது.​

அந்தச் சோகம் அவர்களின் வாழ்நாள் முழுதும் தொடரும். ஆனாலும் அதையும் கடந்து வாழ்வை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வாழும் இந்தக் காதல் ஜோடி. ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் காதலே அதற்குப் பொறுப்பு. சில நொடிகள் இருவருமே கண்ணீரில் கரைந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் கலங்குவது பொறுக்காமல், அவளைச் சீண்டும் பொருட்டு, “என்னை டோனர்னு தானே சொன்ன? இனி வாழ்நாள் முழுக்க உனக்கு டோனேஷன் வாரி வழங்கப் போறேன். ரெடியா இருந்துக்கோ!” என்று அதன் வேலையில் இறங்க, அவனது முயற்சியை புரிந்து கொண்டு தன்னிலை மீண்டு அவள் சிரிக்க, அவளது சிரிப்புச் சத்தத்துடன் அவனதும் இணைந்து கொண்டது.​

அடுத்த ஒரு மாதத்தில் அவளை மனைவியாக அறிவித்து, ஆராத்யாவின் மறைவைக் கூறி விட்டு, குழந்தைகளின் வரவைப் பற்றி ஊடகங்களில் செய்தி வந்தது. மனைவி குழந்தைகளுடன் இந்தியாவுக்குச் சென்று, சென்னையில் தற்காலிகமாக தொழிற்சாலை வேலைகள் முடியும் வரை குடியேறினான்.​

தேஜலுக்கு தனது தோழியின் வாழ்வு அவள் விரும்பியபடி தனது அண்ணனோடு அமைந்ததில் அலாதி மகிழ்ச்சி.​

வாழ்க்கை மனைவி குழந்தை, தொழில் என்று அர்ஷனுக்கு மிகுந்த சுவாரஸ்யமாகச் சென்றது.​

அன்று குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டிய நாள்.​

“அர்ஷ், குட்டீஸ் கூட்டிட்டு ஹாஸ்பிடல் போகனும், வாக்சினேஷன் போட” என்றாள் ஷரண்யா.​

கழுத்தில் டையை சரி செய்து கொண்டே “டாக்டரை இங்க வந்து போட்டுட்டு போகச் சொல்லு.” என்றவனின் தோளில் அடித்து,​

“உங்களால வர முடியுமா, முடியாதா?” என்றாள் மிரட்டலாக.​

அவளை இடையோடு இறுக்கிக் பிடித்து அணைத்து “பிஸ்னஸ் உலகத்துல டான் நானு. என்னையே மிரட்டிட்டு இருக்க நீ, தைரியம் தான்!” என்றான் அவளைப் பார்த்து முறைத்து.​

“ஆமா, ஆமா! உங்க மிரட்டல் எந்த அளவுக்குன்னு எனக்கு தெரியாது? பத்து மணி ஆச்சுன்னா, குழந்தைங்க தூங்கியாச்சான்னு கேட்டு பின்னாடியே சுத்தும் அசகாய சூரன் தான்!” என்று அவனது காலை வார, அவளது அப்பட்டமான கேலியில், அவனது முகம் சிவந்து போனது.​

அவனது பலகீனம் அவள் தான் என்று அவள் அறிவாள். வார்த்தைகளில் அதிகம் அவன் அதைச் சொன்னது இல்லை. குழைவாகப் பேசத் தெரியாது. எதிலும் அராஜகம், காதலில் கூட. வார்த்தைகள் கூறாத அவனது மனதை, அவனது செயல்களால் அவளின்றி அவன் இல்லை என்று உணர்த்தி விடுவான்.​

மாலை அவள் சொன்னது போல வந்து குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.​

ஊசி போட்டுக் கொண்டு வெளியே வந்த போது, எதிரே விதுரன் கையில் ஒரு குழந்தையை தூக்கி இருக்க, அடுத்த குழந்தை விரைவில் வர இருப்பதைக் கூறும் வகையில், திலோவின் வயிறு மேடிட்டிருந்தது.​

இரு ஜோடியும் எதிரெதிரே பார்த்துக் கொண்டனர்.​

திலோத்தமா அர்ஷனை மனைவி குழந்தை என்று பார்த்து, உண்மையான மகிழ்ச்சியுடன் புன்னகைக்க,​

திலோத்தமாவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் அர்ஷன் மனம் நிறைந்தான்.​

சென்னை வந்து ஷரண்யா செய்த முதல் வேலை திலோத்தமாவை சந்தித்தது தான்.​

“அவளை எதுக்கு பார்க்கப் போற?” என்று கேட்ட அர்ஷனிடம் “நம்ம காதல் கதையை விளக்க..” என்றாள் கண் சிமிட்டி.​

“என்ன அவசியம்? அவ விதுரனோட சந்தோஷமா இருக்கா? எதுக்கு தேவை இல்லாமல்?” என்றான் அர்ஷன் அவளது மடியில் முகம் புதைத்து படுத்துக் கொண்டு.​

“ஊருக்கு உலகத்துக்கு எல்லாம் நம்ம சொன்ன கற்பனை காதல் கதை போதும். ஆனா திலோத்தமா உங்களை உண்மையா காதலிச்சு இருக்கா. ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிச்சு குழந்தையைக் கொடுத்து கைவிட்ட ஒருத்தனையா காதலிச்சோம்னு, மனசுல ஒரு விரக்தி வரும்.​

இப்போ விதுரனைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கலாம். ஆனா.. உங்க மேல உள்ள பாசம், அடி ஆழத்தில் அப்படியே தான் இருக்கும், என்னைக்கும் மாறாது. அந்தப் பாசம் உங்க நலனுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டே இருக்க வைக்கும். அந்த மனசுக்காக உண்மையைச் சொல்லணும்.” என்று அவள் கூற.​

மீண்டும் அவளைப் பார்த்தபடி திரும்பிப் படுத்தவனுக்கு, நாளுக்கு நாள் அவனது ஷரா புதுமையாகத் தெரிந்தாள். மொத்தமாக அவனை ஆகர்ஷித்தாள். கண்களில் காதல் மின்ன, அவளது கழுத்தை வளைத்து தன்னை நோக்கி இழுத்து, “ஓய்.. ஐ லவ் யூ” என்றவன் அவனுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டான்.​

சொன்னது போல திலோத்தமாவை சந்தித்துப் பேசினாள் ஷரண்யா.​

“மீடியாவில் வரும் எல்லாமே உண்மைன்னு நம்பிடக் கூடாதுன்னு எனக்குத் தெரியும். இதுல ஏதோ இருக்குன்னு புரிஞ்சுது. இவ்ளோ தூரம் வந்து எனக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் செஞ்சு இருக்கிங்க. ரொம்ப தேங்க்ஸ்” என்றவள் ஷரண்யாவைப் பார்த்துப் புன்னகைத்து,​

“அவரை அவருக்காகவே ஆழமா நேசிக்கும் பொண்ணு ஒருத்தி வரணும்னு நினைச்சேன். இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு.” என்று கூறி, அவர்களது முதல் சந்திப்பில் விடை பெற்றிருந்தாள், திலோத்தமா.​

இது திலோ ஷரண்யாவின் இரண்டாவது சந்திப்பு.​

அவளைப் பார்த்து புன்னகைத்து, “எத்தனாவது மாசம்?” என்றாள் ஷரண்யா திலோவைப் பார்த்து.​

“ஆறு” என்றவளின் முகத்தில் நாணத்தின் சாயல் அப்பட்டமாகத் தெரிந்தது.​

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அர்ஷன்..​

“எப்படி இருக்க தில்...ல்லோத்மா?” என்றான் ஆழ்ந்த குரலில்.​

சட்டென்று ஷரண்யாவின் அருகே நின்றிருந்த அர்ஷனை நிமிர்ந்து பார்த்த திலோ, பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு,​

அவளது தோளைச் சுற்றி கையை போட்டுக் கொண்ட விதுரன்,​

“என் ஜில்லு ரொம்ப.. நல்லா இருக்கா!” என்றான் உதட்டோரம் துடித்த சிரிப்பை மறைத்துக் கொண்டு.​

அப்போது தான் அருகே நிற்பவனை பார்ப்பது போல பாவனை செய்த அர்ஷன், ‘நீ எல்லாம் எனக்கு ஒரு ஈடா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்து விட்டு,​

விதுரனின் கையில் இருந்த அவனது ஒரு வயது குழந்தையையும் திலோவையும் பார்த்து விட்டு மீண்டும் விதுரன் புறம் திரும்பி, அவனை ஒரு நக்கல் பார்வை பார்த்து​

“ரொம்ப வேகம் தான்.” என்றான் அதே நக்கல் குரலில்.​

விதுரனின் குறும்பு சிரிப்பு மேலும் விரிவடைய, அர்ஷன் மற்றும் ஷரண்யாவின் கைகளில் இருந்த குழந்தைகளைப் பார்த்து அதே நக்கல் குரலில்...​

“அங்க என்னை விட வேகம் தான் போல” என்று திருப்பிக் கொடுக்க,​

அவனை முறைத்து விட்டு “டேக் கேர் திலோத்தமா” என்று விட்டு விலகி நடந்த அர்ஷன்,​

சற்று தூரம் சென்று நின்று திரும்பிப் பார்த்து “திலோத்தமா” என்றான் தனது ஆழ்ந்த குரலில்.​

சட்டென்று திரும்பிப் பார்த்தவளிடம் “உன்னோட ஏரி காத்த ராமர் கிட்ட என் சார்பா தாங்க்ஸ் சொல்லிடு.” என்று சொன்னவன், திரும்பி தனது வழக்கமான கம்பீர நடையுடன் வெளியே சென்றான்.​

வாகனத்திற்கு சென்று குழந்தைகளை பின்னால் பேபி சீட்டில் வைத்து பட்டியைப் போட்டு விட்டு, முன்னே வந்து அமர்ந்தவள், அவனை திரும்பிப் பார்த்தாள்.​

அவனது முகம் அன்று பூத்த தாமரை போல நிர்மலமாக இருந்தது.​

அவனது முகத்தைப் பார்த்து மெல்லிய குரலில் “முதல் காதல் எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல் தானே?” என்றாள் சிறு புன்னகையுடன்.​

சட்டென்று அவளை திரும்பிப் பார்த்தான். அவளது முகத்தில் வருத்தமோ பொறாமையோ துளியும் இல்லை.​

ஒரு பெருமூச்சுடன் “திலோத்தமா என்னைக்கும் எனக்கு ஸ்பெஷல் தான். அவ சந்தோஷமா இருக்கறதை பார்த்து மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. என்னைக்கும் அவ சந்தோஷமா இருக்கனும்.” என்றவனை பெருமையாகப் பார்த்தாலும்,​

அவளது வழக்கமான குறும்பு தலை தூக்க..​

“என்ன தம்பி? ரொம்ப ஃபீலிங்ஸ் போல?” என்றாள் ஷரண்யா கிண்டலாக.​

“ஆமாம்டி, பயங்கர ஃபீலிங்ஸ். பாரு அவன் அவன் எவ்ளோ வேகமா இருக்கானுங்க! கேப் விடாமல் அடுத்து அடுத்து ரிலீஸ் பண்ணிட்டு இருக்காங்க.​

நம்ம எப்போ அடுத்த ரிலீஸ் பண்ணப் போறோம்னு ஒரே ஃபீலிங்ஸ்.”​

என்றான் அவனும் கண்ணடித்து அவளைப் போல கிண்டலாக.​

அழுத்தமான அர்ஷனை, அவளது காதல் எப்படி மாற்றி உள்ளது என்று வியந்தாள்.​

 
Last edited:

29​

ஒரு வருடத்திற்கு பின் சென்னை தொழிற்சாலையின் திட்டப்பணிகள் முடிவுக்கு வந்த பின் மீண்டும் அவனது இராணி மாளிகையிலேயே தன் குடும்பத்துடன் குடியேறி இருந்தான்.​

அன்று மும்பையின் மழைக்கால இரவு. அவன் வீட்டிற்கு வரும் போது மணி பன்னிரெண்டை நெருங்கி இருந்தது. பிரம்மாண்டமான அவர்களின் படுக்கை அறையின் ஒரு புறம் அவர்களின் படுக்கை இருக்க, மறுபுறம் அதே அறையில் குழந்தைகளுக்காக குட்டி படுக்கை, சிறு விளையாட்டு குடில், சின்ன சறுக்கு மரம் என்று நர்சரி போல அமைத்திருந்தாள். அங்கு குழந்தைகளை தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் ஷரண்யா.​

அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று குளித்து முடித்தவன், இடையில் வெறும் ட்ராக் பாண்ட் மட்டும் அணிந்து ஈரம் சொட்ட, துவாலையால் துடைத்துக் கொள்ள வேண்டும் என்பது கூட மறந்து அறையை ஒட்டிய பால்கனியில் நின்று கொண்டான்.​

சற்று நேரத்திற்கு எல்லாம் குழந்தைகளை உறங்க வைத்து விட்டு ஷரண்யா வந்த போது, அவன் பால்கனி சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டு வெளியே தூரத்து நிலவை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.​

அவனை பின் புறமிருந்து அணைத்து வெற்று முதுகில் கன்னம் பதித்து நின்றவள் “என்ன இன்னிக்கு இராணி சார் ரொம்ப லேட்? பசங்க உங்களை தேடினாங்க” என்றாள் பெண்.​

எப்போதும் அவனது மாலை நேரம் மனைவி மற்றும் குழந்தைகளுக்கானது என்பது எழுதப்படாத சட்டம். அவனது தேவை அத்தியாவசியம் என்ற நிலை தவிர அந்த சட்டத்தை அவன் மீறியதில்லை. குழந்தைகள் தன்னை தேடி உள்ளனர் என்று மனைவி வாய் மொழியாக தெரிந்து கொண்டவனுக்கு குற்ற உணர்வில் மனம் இறுக கண்களை ஒருமுறை அழுந்த மூடித் திறந்து “பசங்க தூங்கியாச்சா?” என்றான்.​

“ம்ம் இப்போ தான்” என்றாள்.​

“சரி நீயும் போய் தூங்கு” என்று அவன் சொன்ன போது அவனது குரலின் பேதம் புரிந்தது. காமம் தீண்டாத காதல் இரவுகளில் கூட அவளை தனியே உறங்க அனுமதிக்காது கைகளுக்குள் வைத்துக் கொள்பவனின் கூற்றும் சந்தேகத்தை கொடுக்க சட்டென்று அவனை பற்றி திருப்பினாள்.​

அவள் கண்களை பார்க்க மறுத்து எங்கோ பார்வையை பதித்து நின்றவனின் கண்கள் சிவந்து கலங்கி கிடக்க, அவனிடமிருந்து வந்த மதுவின் நெடி அளவு கடந்து குடித்து விட்டு வந்ததை உணர்த்தியது.​

“என்ன ஆச்சு குடிச்சுட்டு வந்தியா?” என்றாள் மரியாதையை காற்றோடு பறக்க விட்டு.​

அப்போதும் பதில் சொல்லாமல் இறுகி நின்றான். அவளுக்கு புரிந்தது மகளின் நினைவில் துடித்துக் கொண்டிருக்கிறான் என்று. அவர்கள் தங்கள் மகளை நினைக்காத நாளில்லை. அவளுக்கு பிடித்தமான உணவு வகைகள், கார்ட்டூன், பாட்டு என்று ஏதாவது ஒன்று அவளை நினைவு படுத்திக் கொண்டு தானிருக்கும். பெரும்பாலும் வலியை மனதோடு புதைத்துக் கொண்டு சிறு புன்னகையுடன் மகன்களின் முகம் பார்த்து கடந்து விடுவது அவர்களின் வழக்கம். சில நேரம் அவள் வாய்விட்டு அவனது தோள் சாய்ந்து அழுது விடுவாள். ஆனால் அவன் அவனது கண்ணீரை வெளிப்படுத்துவதை நிறுத்திக் கொண்டான். அவனது கண்ணீர் ஷரண்யாவை மேலும் பலவீனப் படுத்துவதை உணர்ந்து கொண்டவன் அவனது வலியை மனதோடு புதைத்து மனைவியை தேற்றுவான்.​

அப்படிப் பட்டவன் இன்று வந்து நிற்கும் நிலையை கண்டு நொடியில் புரிந்து கொண்டாள், மகளின் நினைவில் துடித்துக் கொண்டிருக்கிறானென்று.​

எப்போதும் தனது துக்கதை மறைத்துக் கொண்டு தன்னை தேற்றுபவனுக்கு இன்று தனது அரவணைப்பு தேவை என்று புரிந்தது.​

அவனை முறைத்து பார்த்தவள் “எதுக்கு தனியா போய் குடிச்ச? என்னையும் கூட்டிட்டு போய் இருந்தா நானும் நாலு பாட்டில் உள்ள தள்ளி இருப்பேன் தானே? எங்களுக்கு இல்லை துக்கம்?” என்று பொரிந்து தள்ளியவள் அறைக்குள் செல்ல திரும்ப, சட்டென்று அவளை பின்னோடு கட்டிக் கொண்டான்.​

சற்று நேரம் மௌனம் மட்டுமே மொழியாகி போனது. “சாரிடி என்னமோ இன்னிக்கு என்னால முடியலை” என்றான் வார்த்தைகள் சிக்கிக் கொள்ள.​

ஒரு பெருமூச்சுடன் புரிந்தது என்று தலை அசைத்தவளை திருப்பிக் கட்டிக் கொண்டான். சற்று நேரத்தில் எல்லாம் அவனது உடல் இறுக்கம் தளர, அவன் தன்னிலை அடைந்ததை உணர்ந்து நிமிர்ந்து அவனை பார்த்தவள் “எனக்கு இப்போ இந்த நிமிஷம் நீங்க வேணும்” என்றாள் அவனது கண்களுக்குள் ஊடுருவி.​

மெல்லிய சிரிப்புடன் “அட் யுவர் சர்வீஸ் மேம்சாப் (madam ji)” என்றான் அவளது கன்னம் வருடி.​

“குட். நிக்க முடியலை கால் வலிக்குது” என்று அவள் சொன்ன நொடி கைகளில் அள்ளியிருந்தான். மஞ்சம் சேரும் முன் இதழோடு இதழ் சேர்ந்தது.​

குட்டிப்புயல் ஒன்று அவனை தன்னுள் சுனாமியாக சுருட்டிக் கொண்டு, காமம் கலந்து கவி பாடி களித்துக் களைத்து அவன் தோள் சேர்ந்தது.​

படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் அவனது தோள் வளைவில் போர்வையை ஆடையாக்கி சயனித்து இருந்தவள் அவன் பேச காத்திருந்தாள்.​

“ரெண்டு நாள் முன்ன ஃபேக்டரி யூனியன் லீடர் பொண்ணுக்கு ஹார்ட்ல ஹோல்னு சர்ஜரிக்கு காசு கேட்டு இருந்தார். எவ்ளோ வேணுமோ கொடுக்க சொல்லி இருந்தேன்” என்றவன் தொடர்ந்து​

“இன்னிக்கு கிளம்பும் போது தான் தேஜ் சொன்னான் இன்னிக்கு அந்த குழந்தைக்கு சர்ஜரின்னு. என்னமோ எனக்கு மனசு பட படன்னு அடிச்சுக்க ஆரம்பிச்சுடுச்சு. ஏதோ உள்ளுணர்வு அங்க போயே ஆகனும்னு மனசுல ஒரு எண்ணம். டாடி போலாம் டாடின்னு ஆ.. ஆரா என்னை கூப்பிட்ட மாதிரி இருந்தது” என்றான் தொண்டை அடைக்க.​

“என்னையும் அறியாமல் அங்க போனேன். ஆப்ரேஷன் சக்சஸ் ஆச்சு. அந்தக் குழந்தை பிழைச்சுகிட்டா. அந்த அப்பா அம்மாவுக்கு அவ்ளோ சந்தோஷம். அந்த இடத்தில் நான் என்னையும் உன்னையும் தான் பார்த்தேன். ஆரா அன்னைக்கு பிழைச்சு இருந்தா நாமும் அப்படி தானே சந்தோஷப்பட்டு இருந்திருப்போம்னு நினைக்காமல் இருக்க முடியலை” என்ற போது அவனது கண்கள் கலங்கியது. தொடர்ந்து,​

“அவங்க ரெண்டு பேரும் என் கால்ல விழ வந்துட்டாங்க. பொண்டாட்டி பிள்ளை குட்டியோட நான் ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும்னு வாழ்த்தினாங்க. இந்த மாதிரி எல்லாம் முன்னாடியே வாழ்த்து வாங்கி இருந்தா என்னோட பொண்ணு இன்னிக்கு நல்லா இருந்திருப்பாளோன்னு மனசு ஒரு மாதிரி பாரமா ஆகிடுச்சு. என்னால அதுக்கு மேல முடியலை அதான் நேர நம்ம கெஸ்ட் ஹவுஸ் போய்ட்டேன்” என்றான் மனம் திறந்து.​

தன்னிடம் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளியின் மகளை காண மருத்துவமனை வரை சென்றுள்ளான் என்று அவளுக்கு ஆச்சர்யம் தான். அதே நேரம் துக்கமும் தொண்டையை அடைத்தது. முயன்று கலங்காமல் இருந்தவள் அவனை தேற்றும் பொருட்டு அவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளது தளிர் விரல்கள் அவனது சிகை கோதியது.​

“ரொம்ப ஆணவமா நடந்துகிட்டேன் தானே? உன்னை கூட சக மனுஷியா நடத்தல தானே? சாரிடி” என்றான் உணர்ந்து. அவனது மனதில் அடைத்து வைத்ததெல்லாம் வெளிவந்தது.​

“இப்போ எதுக்கு அதெல்லாம்? விடுங்க” என்று அவள் கூற அவளை நிமிர்ந்து பார்த்தவன்​

“அந்த ஒரு குழந்தையை காப்பாற்றி கொடுத்தது எனக்கென்னமோ ஆரா என்கிட்டயே திரும்பி வந்த மாதிரி இருந்தது. இப்படி இன்னும் எத்தனை எத்தனை குழந்தைகள் சரி பண்ண வசதி இல்லாமல் இருக்காங்க? முடிஞ்ச அளவு நம்ம சரி பண்ண உதவி பண்ணினால் என்ன?” என்றான் யோசனையாக. மனதில் முதல் வித்து விழுந்தது அப்போது தான்.​

அவனது நெற்றியோடு நெற்றி முட்டி “ரொம்ப நல்ல ஐடியா. செய்யலாமே” என்றாள் மகிழ்ச்சியுடன்.​

“இதில் என்னோட சுயநலமும் இருக்கு. என்னோட பொண்ணு என் கூடவே இருக்கற மாதிரி ஒரு திருப்தி ஷரா” என்றவன் சட்டென்று நினைவு வந்தவனாக அவளது கூந்தலில் கை நுழைத்து அவனது முகம் பார்க்க வைத்தவன்​

“எனக்கு என் பொண்ணு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கா என்கிட்ட திரும்பி வந்துடுவேன்னு. எனக்கு இன்னொரு குழந்தை வேணும். நிச்சயம் என் பொண்ணு என்கிட்ட திரும்பி வந்துடுவா. எனக்கு ஒரு பொண்ணு பெத்துக் கொடு” என்றான் ஒரு வித தீவிரத்துடன்.​

அவனது தீவிரத்தில் திகைத்து வார்த்தை மறந்து அவனை வைத்த விழி அகற்றாமல் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.​

“சொல்லு ஷரா எனக்கு பொண்ணு பெத்து கொடுப்பியா? பிரசவ வலி எப்படி இருக்கும்னு பார்த்து இருக்கேன் . வலி மொத்தமும் உனக்கு தான்னு தெரியும், ஆனாலும் என் ஆரா வேணும்னு மனசு துடிக்குது. பிளீஸ் டோண்ட் சே நோ” என்றான் யாசிக்க முயன்று, ஆனாலும் குரலில் யாசகத்தை மீறிய அழுத்தத்துடன்.​

“உங்களுக்கு தான் கெஞ்ச வரலையே அப்பறம் எதுக்கு முயற்சி பண்றீங்க? நான் எப்போ நோ சொன்னேன்? பெத்துக்கலாமே!” என்று அவள் சொன்ன நொடி அவளை ஆவேசமாக ஆக்கிரமித்திருந்தான்.​

சில மாதங்களில்..​

அதிகாலை ஆறு மணி. அரை மணி நேரத்திற்கு முன் அழகாக மடிப்பு வைத்துக் கட்டியிருந்த அவளது அரக்கு வண்ண மைசூர் பட்டு, இப்போது கேட்பாரற்று தரையில் ஒரு மூலையில் கிடந்தது.​

அதோடு சேர்த்து, அவள் அணிந்திருந்த மற்ற உருப்படிகளும் ஆங்காங்கே தரையில் சிதறிக் கிடக்க, இருபது விரல்கள் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டு, கால்கள் நான்கும் சாரை பாம்பு போல பிணைந்து கிடக்க, கலவியின் உச்சம் தொட்டு மீண்டு வந்து மல்லாந்து படுத்தவனின் மார்பில் கவிழ்ந்தவள், அவனது கன்னம் மார்பு என்று சரமாரியாக பட் பட்டென்று அடி வைத்தாள்.​

அவனது முரட்டு தேகத்திற்கா வலிக்கும்! பூவைக் கொண்டு வருடுவது போல சுகமாக வாங்கிக் கொண்டவன், அடித்த அவளது இரு கைகளையும் பற்றி, இதழ்களில் ஒற்றிக் கொண்டான்.​

அதைக் கண்டு அவனை முறைக்க முயன்றபடி,​

“நீங்க பண்றது கொஞ்சமாவது நல்லா இருக்கா? எவ்ளோ கஷ்டப்பட்டு யூ-டியூப் பார்த்து புடவை கட்டினேன். மறுபடி முதல்ல இருந்து ரெடி ஆகனும்.” என்றாள் சிணுங்களாக.​

அழகிய மொட்டை போல மேடிட்டு இருந்த அவளது ஐந்து மாத சூல் கொண்ட வயிற்றை ஆசையாக வருடிக் கொண்டு “நேத்து தான் டாக்டர் இன்னும் ரெண்டு மாசத்துக்கு இஷ்டப்படி இருக்க கிரீன் சிக்னல் காட்டி இருக்காங்க. ஒரு நாள் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது, பேப்.” என்றான் கண்ணடித்து.​

ஆம், ஷரண்யா மூன்றாம் முறை கருவுற்றிருக்க, இம்முறையும் இரட்டையர்கள்.​

அவனது கன்னத்தில் முத்தமிடுவது போலப் போய் நறுக்கென்று அவள் கடித்து வைக்க..​

“ஆ” என்று பெருங்குரலில் கத்தத் தொடங்கியவனின் வாயை மூடியவள்,​

“ஷ் கத்தாத, இந்த வானரங்க ரெண்டும் எழுந்தா, நான் கிளம்ப முடியாது.” என்றாள் பதட்டத்துடன்.​

அதைக் கேட்டு பக்கென்று சிரித்தான், அர்ஷன். பின்னே அவனது புத்திரர்கள், அவளைப் படுத்தி வைக்கும் படுத்தல் கொஞ்சமா நஞ்சமா!​

“தியா.. இப்படி எல்லாம் இல்லை தெரியுமா? அவ்ளோ சமத்து!” என்று புன்னகையுடன் சொல்லும் அளவு, அவளது மறைவை ஏற்றுக் கொண்டாலும் வலிக்கத் தான் செய்தது.​

ஒரு பெருமூச்சுடன் “இந்த ரெண்டுல ஒன்னாவது, பொண்ணா இருக்கனும் ஷரா. ஐ வான்ட் மை ஆரா பாக்” என்றான் ஏக்கமாக.​

ஒரு மகளை எடுத்துக் கொண்டு இப்போது இரண்டு மகளாக இறைவன் கொடுக்க இருப்பதைப் பற்றி அறியாமல்.​

அவன் மகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கி விட்டால், மனதிலேயே வைத்து மறுகிக் கொண்டு இருப்பான் என்று உணர்ந்தவள்,​

“ஒரு வேளை இது ரெண்டும் கூட பையனா இருந்தா?” என்றாள் சீண்டலாக.​

“அப்போ அடுத்தது”​

“அதுவும் பையனாப் போனால்?” ஒற்றை புருவம் உயர்த்தி மிதப்பாகக் கேட்டு வைத்தாள்.​

“அடுத்தது” என்றான் சளைக்காமல்.​

“அடுத்தும் பையனா இருந்தால்?” என்றாள் இப்போது அவன் முகம் போன போக்கைப் பார்த்து பொங்கிய சிரிப்புடன்.​

“அடுத்து, அடுத்து அடுத்து அடுத்து” என்றான் கண்களை இறுக மூடிக் கொண்டு. மனதில் “பிங்கி பாமிஸ் டாடி” என்று சொன்ன மழலை குரல் வலம் வந்தது.​

விழி மூடி இருந்தவனின் முகத்தின் அருகே மிக மிக நெருக்கமாக இதழோடு இதழ் சேர நூல் அளவு இடைவெளி விட்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.​

மெதுவாக கண்களைத் திறந்தவன்...​

“மறுபடி மறுபடி உன்னை கஷ்டப் படுத்தக் கூடாது. உன்னை வலிக்க வைக்கக் கூடாதுன்னு புத்தி சொல்லுது. ஆனா.. பொண்ணு வேணும்னு மனசு சொல்லுதே!” என்றான் ஏக்கமாக.​

சிலவினாடிகள் அவனது ஏக்கம் சுமந்த விழிகளை பார்த்துக் கொண்டு இருந்தவள், அவன் அடுத்து பேசும் முன் அவனது இதழோடு அவளது இதழ் சேர்ந்தது.​

சற்று பொறுத்து அவனில் இருந்த விலகியவள்,​

“உங்களுக்காகவாவது இது ரெண்டும் பொண்ணா இருக்கனும். அப்படி பொண்ணா இருந்தா, பிறந்ததும் ஏரி காத்த ராமர் கோவிலுக்கு கூட்டிட்டு வரேன்னு வேண்டிட்டு இருக்கேன்.”​

என்றபடி ஆடை அணிகலன்களை பொறுக்கி எடுத்தபடி,​

“நம்ம ஃபங்ஷன் நாமே லேட்டாப் போகக் கூடாது. கிளம்புங்க. திலோ எல்லாம் இன்னிக்கு காலை பிளைட்ல வந்து இருப்பாங்க.” என்று கூறிக் கொண்டே, மீண்டும் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.​

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த அழகிய குடும்பம் தயாராகி, தில்லியில் ஆக்ரா அருகே கட்டப்பட்ட அந்த மாளிகையில் இருந்தனர்.​

ஆடம்பரம் ஏதுமின்றி முக்கிய நபர்களை மட்டும் அழைத்திருந்தனர்.​

குறிப்பிட்ட நேரத்திற்கு விதுரன் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் திலோத்தமா வந்து சேர்ந்தாள். போன முறை அவள் இங்கு வந்து போன தினம் நினைவில் வந்து போனது. போன முறை தில்லு மஹாலாக இருந்த இடம், இன்று ஆரா சைல்ட் கேர் பவுண்டேஷனாக உருமாறி இருந்தது.​

நோயோடு போராடும் குழந்தைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க ஒரு ட்ரஸ்ட் அமைத்து, இந்த மாளிகையில் பெரிதாக சைல்ட் டிரஸ்ட் ஹாஸ்பிடல் என்று ஒன்று அமைக்கப் பட்டிருந்தது.​

அதைத் திறந்து வைக்க திலோத்தமாவை தான் அழைக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து அழைத்து வந்திருந்தாள், ஷரண்யா.​

ஒரு காலத்தில் திலோத்தமாவுக்காக கட்டிய காதல் மாளிகை அது. அவளை விட்டே தங்கள் குழந்தையின் நினைவாக அமைத்த அறக்கட்டளையை திறந்து வைக்க வேண்டுமென்பது, ஷரண்யாவின் விருப்பம்.​

கேட்டதும் ஒப்புக் கொண்டு வந்து விட்டாள், திலோத்தமா.​

சரியான நேரத்திற்கு ரிப்பன் வெட்டி உள்ளே சென்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தாள்.​

“எங்க அழைப்பை மதிச்சு இவளோ தூரம் வந்ததுக்கு தேங்க்ஸ் திலோத்தமா.” என்றான் அர்ஷன் ஆத்மார்த்தமாக.​

“நல்ல காரியத்துக்குத் தானே கூப்பிட்டிங்க. வந்ததில் எனக்கும் சந்தோஷம் தான்.” என்றாள் திலோத்தமா பதிலுக்கு.​

இருவரின் பேச்சிலும், ஒரு வித தயக்கமும் விலகல் தன்மையும் தெரிந்தது.​

“என்ன கூடிய சீக்கிரம் கிரிக்கெட் டீம் சேர்ந்துடும் போல!” என்றான் விதுரன் அர்ஷனைப் பார்த்து நக்கலாக.​

ஷரண்யா இம்முறையும் இரட்டையர்களை தாங்கி இருப்பது தெரிந்து.​

அர்ஷன் பற்களை கடித்துக் கொண்டு விதுரனைக் கண்டு முறைக்க, திலோ அவளது முழங்கை கொண்டு விதுரனின் விலாவில் இடித்து “பேசாம இரு டா.” என்றாள்.​

அர்ஷன் எதுவும் பேசும் முன் “உங்களை யாரு பாஸ் டீம் ஆரம்பிக்க வேண்டாம்னு சொன்னா? நீங்களும் ஒரு ஃபுட்பால் டீம் ஆரம்பிக்க ஏற்பாடு பண்ணுங்க.” என்று ஷரண்யா பதிலுக்கு வம்பாகக் கூறினாள்.​

அதைக் கேட்டு திலோ முகம் சிவக்க விதுரனைக் கண்டு, “எல்லாம் உன்னால தான்” என்பதைப் போல முறைக்க,​

ஷரண்யா பக்கென்று சிரித்தாள்.​

“பேச்செல்லாம் வெளிய தான். பொண்டாட்டி கிட்ட பெட்டிப்பாம்பு. அப்படித் தானே!” என்றாள் ஷரண்யா.​

அருகே இருந்த அர்ஷனைப் பார்த்து விட்டு அவளிடம் திரும்பிய விதுரன்​

“நானாவது சாதாரண விதுரன். பொண்டாட்டி கிட்ட அடங்கிப் போறேன். யாரோ பிசினஸ் டைகூன், இந்தியாஸ் லீடிங் பிசினஸ் மேன், அது இதுன்னு பெத்த பேரு. ஆனா.. தினம் பொண்டாட்டி கால் பிடிச்சு விட்டுட்டு இருக்காராம், அப்படியா?” என்றான் விதுரன் சிரித்துக் கொண்டே.​

சில நாட்களுக்கு முன் ஒரு பார்ட்டியில் கால் சுளுக்கி தடுக்கி விழ இருந்த ஷரண்யாவை தாங்கி அமர வைத்து, அவளது காலைப் பற்றி மென்மையாக அவன் பிடித்து விட்டதை ஊடகங்கள் படம் பிடித்து போட்டுக் காட்டி, அதை ஒரு பெரிய செய்தியாகப் பேசி தீர்த்தனர்.​

அதை இப்போது சுட்டிக் காட்டுகிறான் என்று புரிந்து அவனை முறைத்தான், அர்ஷன்.​

அவனது முறைப்பைப் பார்த்து விதுரனா அடங்குவான்!​

ஷரண்யா ஏதோ அதற்குப் பதில் பேசத் தொடங்க, அவளது கை பற்றித் தடுத்த அர்ஷன்..​

“பொண்டாட்டி காலைப் பிடிக்கறதில, நம்ம ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை தம்பி. சோ அடங்கு!” என்றான்.​

ஷரண்யாவும் விதுரனும் தான் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். என்னதான் முற்றுப் பெற்ற காதலாக இருந்தாலும், பாதைகள் வேறான பின், பயணத்தில் எந்தத் தருணத்திலும் அந்தப் பாதைகள் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பது நன்று. குழந்தையின் பெயரில் அறக்கட்டளை என்பதால் தான் திலோவும் வந்தாள். இனி என்றுமே சந்தித்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவு, அர்ஷன் மற்றும் திலோத்தமா இருவரின் விழிகளிலும் வெளிப்பட்டது.​

“நான் சொன்ன மாதிரி சுயம் தொலைப்பது தான் காதல். அப்படி ஒரு அற்புதம் உங்க வாழ்க்கையிலும் நடந்தது ரொம்ப சந்தோஷம். நாங்க வரோம்.” என்ற திலோத்தமா, அர்ஷன் மற்றும் ஷரண்யாவிடம் விடை பெற்றுக் கிளம்பினாள்.​

அவர்கள் வாகனம் கிளம்பிச் செல்வதைப் பார்த்து விட்டு,​

ஆளுக்கு ஒரு குழந்தையாக தூக்கிக் கொண்டு ஆரா சைல்ட் டிரஸ்டிற்குள் நுழைந்தனர் அர்ஷனும் ஷரண்யாவும்.​

நான்கு மாதங்களில்...​

பிரசவ அறையில், ஷரண்யா வலியில் கதறிக் கொண்டிருக்க, அவளது கழுத்து வளைவில் முகம் பதித்திருந்த அர்ஷன், அவளது காதுகளில் மெல்லிய குரலில்..​

“இது..இது தான் கடைசி தடவை ஷரா. இந்த ரெண்டும் பையனா இருந்தால் கூட, அடுத்த தடவை வேண்டாம். இப்..இப்படி வலியில் துடிக்கிறது பார்க்க முடியலை.” என்றான் நடுங்கும் குரலில்.​

ஒரு வலி வந்து அப்போது தான் சற்று ஆசுவாசம் அடைந்திருந்த ஷரண்யா, அவனது பிடரியைப் பற்றி இழுத்து, அவனது முகம் பார்த்தவள்,​

“இதுக்கு எங்க..எங்க ஊர்ல ஒரு பேர் சொல்லுவாங்க” என்றாள் சிரித்துக் கொண்டே.​

அவளது ஊரைப் பற்றிப் பேசியதும், அவனது முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல ஆனது.​

‘அவளது தந்தையை அவன் மன்னிப்பதாக இல்லை. அது எப்படி தனது சொந்த மகளையே பாசத்திற்கு ஏங்க வைக்கலாம்? அவன் எல்லாம் என்ன தந்தை?’ அவர்களை பற்றிய செய்திகளை விஷமாகப் பரவ விட்ட ஊடகங்களை தடம் தெரியாமல் அழித்தது போல, அவளது தந்தையையும் செய்ய நினைத்தவனை பெரும் பாடு பட்டு தடுத்தது, ஷரண்யா தான்.​

“அவருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. ஆனா.. எங்க அம்மாவோட விட்டு, என்னைச் சீரழிய விடாமல் ஊருக்கு கூட்டிட்டு போய் கௌரவமாத் தான் வளர்த்தார். என்ன பாசம் தான் கிடைக்கலை. அதை நினைச்சு எனக்கு இப்போ வருத்தமும் இல்லை. அதுக்கு எல்லாம் சேர்த்து தான் எனக்கு நீங்க இருக்கிங்க. வாழ்க்கையில் நான் ஆசை பட்ட ஒரே விஷயம் நீங்க. உங்க ஆர்வமான ஒரே ஒரு பார்வைக்காக ஏங்கின எனக்கு, மொத்த காதலும் கிடைச்சு இருக்கு. எனக்கு நிறைவா இருக்கு.” என்று அவனது மார்போடு ஒட்டிக் கொண்டவள் நிமிர்ந்து அவனது கண்களோடு கண்கள் கலந்து,​

“அவரை அழிச்சு அந்த குற்றக் குறு குறுப்போட என்னால நிம்மதியா இருக்க முடியாது. அவரை விட்டுடுங்க.” என்றதும் தான், அவளது வார்த்தைகளுக்குக் கட்டுப் பட்டு, மனதே இல்லாமல் அவரை விட்டான்.​

அதிலும் அர்ஷனின் மனைவி அவள் என்று தெரிந்த பின் கணவனை இழுத்துக் கொண்டு அவளை பார்க்க வந்திருந்தாள் அவனது சிற்றன்னை சௌந்தர்யா. பழைய அர்ஷனாக மாறி வந்தவர்களை ஒரு கேவலமான பார்வை பார்த்து விலக்கி வைத்தவன் இனி தன் மனைவி இருக்கும் பக்கம் கூட திரும்பக் கூடாது என்று எச்சரித்து கழுத்தை பிடித்து துரத்தாத குறையாக அனுப்பி வைத்திருந்தான்.​

இப்போது அவள் அவளது ஊரைப் பற்றி பேசியதும், அவனது முகம் போன போக்கை கண்டு சிரித்தபடி..​

“கேளுங்க” என்று அவனது மீசையை பற்றி இழுத்து...​

“இதுக்கு பேர் பிரசவ வைராக்கியம்னு சொல்லுவாங்க. இனி.. அந்த மனுஷன் கிட்ட வரட்டும், இடுப்பைப் பார்த்து நாலு உதை உதைக்கறேன்னு, பொண்ணுங்க தான் வலி தாங்க முடியாம இப்படி சபதம் எடுப்பாங்க. ஆ..ஆனா.. அப்படி ச..சபதம் போடும் பொண்ணுங்க தான், குழந்தை பிறந்ததும் பு..புருஷனை முதல்ல தேடுவாங்க. அவங்க வைராக்கியம் எல்லாம் அவ்ளோ தான். ஆ..” என்று கத்தி, அடுத்த வலியைப் பொறுத்தவள்,​

அவளது வலியில் அரண்டு நடுங்கி, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஷனைப் பார்த்து குறும்பு சிரிப்பு சிரித்து தொடர்ந்து,​

“இங்க எனக்குப் பதிலா நீங்க அந்த சபதம் எடுத்து இருக்கிங்க. உங்களைப் பத்தி ஆல் டீடெய்ல்ஸ் ஐ க்னோ. மிஞ்சிப் போனா ஒரு 3 மாசம் தள்ளி இருப்பீங்க.” என்று கூறி கண்ணடித்துச் சிரித்தவளைக் கண்டு முறைத்தான், அர்ஷன்.​

“இந்த வலியிலேயும் உன்னோட வாய் குறையலை பார். திமிர்டி, உன் மேல பைத்தியமா சுத்திட்டு இருக்கேன்ல, அந்தத் திமிர்.” என்று கூறும் போதும், முகம் முழுதும் புன்னகை தான் மிளிர்ந்தது.​

அவனது புன்னகையைக் கண்டு தான் அவளது மனமும் நிம்மதி கொண்டது. முந்தைய பிரசவத்தில் நடந்த அனைத்தையும் மீண்டும் ஒரு முறை மனதில் வாழ்ந்து பார்த்து, அவன் துடித்துக் கொண்டிருப்பது புரிந்து தான், அவனது கவனத்தை அவள் திசை திருப்பினாள். அது நன்றாக வேலையும் செய்தது.​

“ப..பசங்க எங்கக.. ஆ..” என்று அடுத்த வலியோடு அவள் கேள்வி கேட்க.​

“தேஜல் கூட இருக்காங்க” என்று அவன் கூறி முடித்ததும், அவளது வலிகளின் இடைவெளி குறைந்தது.​

உயிர் போகும் அளவு கத்தி இரட்டையர்களில், முதல் பெண் குழந்தையை பூமிக்குக் கொண்டு வந்தாள்.​

“வாவ் அழகான பெண் குழந்தை” என்று கூறியபடி மருத்துவர் அவளது வெற்று மார்பில் குழந்தையை தூக்கி வைக்க,​

அர்ஷனின் கண்களில் தேங்கிய கண்ணீர், குழந்தையைக் காண முடியாமல் அவனது பார்வையை மறைத்தது.​

கண்களை சிமிட்டி குழந்தையைப் பார்த்த அவன் மனைவியின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து, அவளது கையோடு கை கோர்த்து இருவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் மகளின் கன்னத்தை வருடும் போது, ஐந்து நிமிட இடைவெளியில், அடுத்த வலி வந்து அடுத்த குழந்தையும் பிறந்தது.​

“வாவ்.. இதுவும் பெண் குழந்தை!” என்று கூறி, மறுபுற மார்பில் அந்தக் குழந்தையை வைக்கவும்,​

ஷரண்யா இருவரையும் சேர்த்து அணைவாகப் பிடித்துக் கொள்ள, அர்ஷன் அவளது தோள் வளைவில் முகம் புதைத்து அழுது விட்டான். அவனது கண்ணீர் வெளியே தெரியா விட்டாலும், அவனது தோள்கள் குலுங்குவதை உணராமல் போவாளா அவனவள்? அவளது கண்களும் கண்ணீரில் நிறைந்தது, தங்கள் மூத்த மகளை நினைத்து.​

அவளுக்கும் குழந்தைகளுக்கும் செய்ய வேண்டியது அனைத்தும் செய்து, அவளை அறைக்கு மாற்றினர்.​

அவளது படுக்கையில் விளிம்பில் அமர்ந்து இருந்த அர்ஷனின் கையில் ஒரு குழந்தையும், படுக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்த ஷரண்யாவின் கையில் ஒரு குழந்தையும் இருக்க,​

இருவரும் குழந்தையை ரசித்துக் கொண்டு இருக்கும் போது, தேஜல் அவர்களின் இரட்டை மகன்களுடன் உள்ளே வந்தாள்.​

“டாடி.. மம்மி..” என்று ஓடி வந்த மகன்களை வாரி, படுக்கையில் அமர வைத்தான், அர்ஷன்.​

தன் அண்ணனின் முகத்தில் இருந்த நிறைவையும், தோழியின் முகத்தில் இருந்த புன்னகையையும் பார்த்து மனம் நிறைந்தாள், தேஜல்.​

தங்கைகளைப் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மகன்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் அண்ணியிடம்,​

“குழந்தைக்களுக்கு என்ன பேர் முடிவு பண்ணி இருக்கீங்க?” என்றாள் எதிர்ப்பார்ப்புடன்.​

கையில் இருந்த குழந்தையைப் பார்த்து விட்டு நிமிர்ந்து கணவனைப் பார்த்த ஷரண்யா, “ஆரா” என்றாள்.​

அவனும் அவனது கையில் இருந்த தன் தேவதையைப் பார்த்து விட்டு, குனிந்து மனைவியை காதலாகப் பார்த்துக் கொண்டே “தியா” என்றான்.​

ஒரு மகளை எடுத்துக் கொண்டு இரண்டு மகள்களை திருப்பிக் கொடுத்த இறைவனுக்கு மனதில் நன்றி கூறியபடி, ஒருவரை ஒருவர் காதலாகப் பார்த்துக் கொள்ள,​

புன்னகையுடன் அர்ஷனின் தோள் சாய்ந்தது அவனது உலகம். இனி என்றும் என்றென்றும் புன்னகையே நம் வாழ்வில் என்று!​

நான்கு வருடங்களுக்கு பின் ஸ்பெயினில் அவர்கள் மாளிகையில் வருட விடுமுறையை கழிக்க தனது குடும்பத்துடன் வந்திருந்தான் அர்ஷன். மறைந்து போன ஒற்றை மகளுக்கு ஈடு செய்யும் விதமாக இரண்டு மகள்களை இறைவன் கொடுத்திருந்தான். இருந்தாலும் இழப்பு இழப்பு தானே! ஆனால் ஆராத்யாவுடன் இருந்த பசுமையான நினைவுகளை மட்டுமே மனதில் வைத்து துக்கத்தை கடந்து விட இப்போதும் முயன்று கொண்டு தான் இருக்கின்றனர். நான்கு குழந்தைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தில் ஆராத்யாவின் படத்தையும் இணைத்திருந்தனர். அவர்களை பொறுத்தவரை கண்களை விட்டு மறைந்து போனாலும் மகள் அவர்களுடனே தான் இருக்கிறாள்.​

“டாடி நான்..நானும்” என்று தியா கத்திக் கொண்டிருந்தாள். நீச்சல் குளத்தில் நான்கு வயது ஆராவை முதுகில் வைத்துக் கொண்டு அர்ஷன் லாவகமாக நீந்திக் கொண்டிருக்க தன்னையும் அதே போல வைத்து நீந்த சொல்லி தியா குதித்துக் கொண்டிருந்தாள்.​

ஒரு சுற்று ஆராவை வைத்து நீந்தியவன் அவளை மனைவியிடம் கொடுத்து விட்டு “தியா குட்டி டாடி கிட்ட வாங்க” என்று கூறி தியாவை வாங்கிக் கொண்டான். ஆரூஷ் மற்றும் ஷஷாங்க் இருவரும் ஒரு புறம் நீந்திக் கொண்டிருந்தனர். ஒரு மணி நேரம் விளையாடி ஓய்ந்த பின்பும் நீச்சல் குளத்தை விட்டு வெளியே வர மறுத்த குழந்தைகளை மிரட்டி வெளியே அழைத்துக் கொண்டிருந்தாள் ஷரண்யா. மகன்கள் இருவரும் சொன்ன பேச்சை கேட்டு நீச்சல் குளத்தை விட்டு வெளியே வந்தாலும், அர்ஷனின் பெண்ணரசிகள் இருவரும் தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டு​

“டாடி இன்னும் கொஞ்ச நேயம்(ரம்) பீஸ்” என்று கெஞ்ச அவர்கள் பேச்சை தட்ட முடியாமல் தந்தையும் மகள்களும் வெளியே வர முடியாதென்று அடமாக மேலும் ஒரு அரைமணி நேரம் விளையாடிய படி இருந்தனர். “இப்போ மேல வரலை அப்பா பொண்ணுங்க மூணு பேருக்கும் அடி தான் கிடைக்க போகுது” என்று ஷரண்யா கத்தியதை கூட காதில் வாங்காமல் விளையாடிக் கொண்டிருக்க, அதற்கு மேல் முடியாமல் அவர்களை முறைத்துக் கொண்டு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு நின்றாள்.​

பாத்ரோப் அணிந்து கொண்டு ஈரக்கூந்தலை சுருட்டி மொத்தமாக கொண்டையிட்டு அவள் நின்ற கோலம் அவனை கவர்ந்தாலும் குழந்தைகளின் கட்டளைக்கு செவி சாய்த்து புன்னகையுடன் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.​

மனைவியை அதிகம் கோபப்படுத்த விரும்பாமல்​

“சோனா பேபிஸ் போதும் அம்மா திட்டுவா. வாங்க நாளைக்கு வரலாம்” என்று கூறி மேலே கூட்டிக் கொண்டு வந்தவன் குழந்தைகளை குளிப்பாட்டி துடைத்து உடைமாற்றியவன் “குட்டீஸ் கீழ போங்க டாடி அம்மாவை கூட்டிட்டு வரேன்” என்று அவர்களை கீழே அனுப்பி வைக்கும் வரை கூட ஷரண்யா அப்படியே நின்றிருந்தாள்.​

மனைவியின் கோபம் புரிந்து மெல்லிய சிரிப்புடன் அவள் அருகே வந்து அவளை பின் புறமாக அணைத்துக் கொண்டு​

“என்ன என்னோட க்வின் ரொம்ப கோபமா இருக்கற மாதிரி இருக்கு” என்றான் அவளது தோளில் தாடையை பதித்து.​

“உங்களுக்கு உங்க பொண்ணுங்க வந்ததும் என் பேச்சுக்கு எல்லாம் மதிப்பே இல்லை” என்றாள் முகத்தை தூக்கிக் கொண்டு.​

“பைத்தியம் நீ இல்லாமல் எனக்கு அவங்க வந்தாங்களா என்ன? எல்லா சந்தோஷமும் நீ கொடுத்தது தானே!” என்றபோது அவனது குரலில் உண்மை இருந்தது. திரும்பி நின்று அவனை இறுக அணைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்​

“டு யூ லவ் மீ?” என்றாள் பதிலை தெரிந்து கொண்டே.​

அவளது நாசியோடு நாசி உரசி “உனக்கு தெரியாதா? வேணும்னா மறுபடி உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு இதே ஸ்விம்மிங் பூல்ல ஒரு தடவை நிரூபிச்சு காட்டவா?” என்றான் சிரித்துக் கொண்டே.​

அவள் மீது அவனுக்கு உள்ள காதலை உணர்ந்து கொண்டு முதல் முறை அவளுடன் உறவில் திளைத்த இடம். அவனுக்கு எப்போதுமே அந்த நீச்சல் குளம் அலாதி தான்.​

அவனது கேள்வி புரிந்து “உங்க கிட்ட ஒன்னு வேணும்னு கேட்டா எப்பவும் ரெண்டு ரெண்டா தான் கொடுக்கறிங்க. ஏற்கனவே நாலு. இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா” என்று கூறி அவனிடமிருந்து ஓட முயன்றவளை எட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டவன்​

“எப்பவுமே கேட்டதை விட அதிகமாக கொடுத்து தான்டி இந்த அர்ஷனுக்கு பழக்கம், அது காதலா இருந்தாலும் சரி.. காமமா இருந்தாலும் சரி.. இல்லை ரெண்டும் கலந்து உன்கிட்ட உருகி நான் கொடுக்கும் குழந்தையா இருந்தாலும் சரி எல்லாமே கேட்டதை விட அதிகமாக தான் கிடைக்கும். அதான் சொன்னேனே வாழ்நாள் பூரா உனக்கு டோனர் நான் தான்னு” என்று அவன் கூற கிளுக்கி சிரித்தவளை இறுக அணைத்துக் கொண்டான்.​

 
Last edited:
❤️❤️❤️❤️❤️
ஹப்பா... மனசுக்கு இதமா இருக்கு.....
சந்தோசம் 💐👏👏நன்றிகள்👏
வாழ்த்துக்கள் சகி.......
 
Aww... Add panniruka new scens romba super ka... 🥰🥰🥰🥰🥰

Particular ah... Avar oru baby kapatha help panninadhu... Adha pathi pesinadhu... 🥰🥰🥰🥰🥰

Aaru kutti... Epodhum avangaloda ninaivula... Irupanga... Nammaloda ninaivulaiyum... 🤗🤗🤗🤗🤗😘😘

Arsh, Saran, Aarush, Shashang, Aara, Dhiya... Ellarum ennaikum family ah happy ah irupanga...🥰🥰🥰🥰🥰

Thanks for the wonderful story ka... Luv u loads...🥰🥰😍😍😘
 
Top