இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

இதம் தரும் காதலே!! - கதை திரி

Status
Not open for further replies.
இதம் தரும் காதலே!!!

சாரங்கேயோ மக்களே!💜

நான் தான் பொம்மை லவ் காதலே -29.

நம் உலகத்தில் எங்கே பார்த்தாலும் அங்கே எல்லாம் நிரம்பி இருப்பது காதல்! காதல்! காதல்! மட்டுமே தான்.

இன்னும் சொல்லப்போனால், நாம் எல்லாரும் வாழ்வதற்கு ஒர் ஆணிவேரே காதல் தான்.

பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் காதல், சகோதர்களுக்குள் இருக்கும் காதல், நாம் நம் செல்ல பிராணிகளிடம் காட்டும் காதல், காதலர்களுக்கு இடையே இருக்கும் காதல், நாம் நம்மிடம் காட்டும் காதல் என்று காதல் வெவ்வேறு வடிவத்தில் இருந்தாலும், நாம் அனைவரும் காதலில்லாமல் வாழ்வதில்லை என்பது தான் நிதர்சனம்.

'Love is in air' என்று சொல்வார்கள், காற்றை நம்மால் காண முடியாது, ஆனால், நாம் வாழ்வதற்கு அடித்தளமே காற்று தான். அதுப் போல் தான் காதலும். உணர மட்டுமே முடிந்த ஒரு கலை அது.

காதல் பலவித உணர்வுகளைக் கொடுத்தாலும், இறுதியில் அது தரும் சுகம் இதம் மட்டுமே!!


ei75WJE47984.jpg
 
காதல் - 1
இன்னும் தரையிறங்கியிருக்கவில்லை வெளிச்சத்தின் விழுதுகள். அந்த புலராதக் காலை நேர நிசப்தத்திற்கு நேர்மாறாக வாகனங்களின் இரைச்சலுடன், ஆகாய நட்சத்திரங்களுக்குப் போட்டியாக கார்களின் ஹெட் லைட்கள் மின்னி! மின்னி! மறைந்துக்கொண்டிருக்கும் ஓஎம்ஆர் சாலையில், மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தது அந்தக் கருப்பு நிற மெர்சிடெஸ் எஸ் கிளாஸ் பென்ஸ் கார்.


காரின் வேகத்திற்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாமல் ஹரிஹரனின் மயக்கும் குரலில் ‘இருபதுக்கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ..’ என்று காரினுள் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, பாடலுக்கு ஏற்றவாறு லயத்துடன் ஸ்டீரிங்கில் தாளம் தட்டியவாறு ஓட்டிக்கொண்டிருந்தது இரு வலிமையான கரங்கள்.



அவ்வலிமையான கரங்களுக்கு சொந்தக்காரனான ஷ்யாம் சுந்தரோ, கருமமே கண்ணாகத் தனது முழுகவனத்தையும் சாலையில் பதித்திருக்க... அவன் அருகில் அமர்ந்திருந்த ராகுலோ,


"பேபி! சாரிடா… அந்த ரீமா தான் வந்து பார்ட்டிக்கு கூப்பிட்டா… நா மாட்டேன்னு சொல்லிட்டேன்டா… என் உடல், பொருள் , ஆவி முழுசும் என்னோட ஸ்டெல்லா பேபிக்கு மட்டும் தான்னு ஸ்வப்னா கிட்டேயும் சொல்லிட்டேன்… இப்போ என் செல்லத்துக்கு கோவம் போச்சா.. பேபிபிபிபி..." என்றான் கொஞ்சலாக.


ராகுலின் இந்த கொஞ்சலுக்கு மறுமுனையில் இருந்து பதில் வருவதற்குள், அவனுக்கு அழைத்திருந்தாள் ஸ்வப்னா.


ஸ்வப்னாவின் அழைப்பை பார்த்த மாத்திரத்தில், ஸ்டெல்லா என்னக் கூறிக்கொண்டிருந்தாள் என்பதனைக் கூட கருத்தில் கொள்ளாமல்,


"பேபி!! ஷ்யாம் செகண்ட் கால்ல வரான்.. பேசிட்டு வரேன்டா… எமெர்ஜென்சி போல…" என்றவன் உடனே ஸ்டெல்லாவின் அழைப்பை அணைக்க, அதற்குள் நின்றுவிட்டிருந்தது ஸ்வப்னாவின் அழைப்பு.


"அய்யயோ!! இப்போ இவ வேற தையாத் தக்கான்னு குதிப்பாளே…" என்று புலம்பிக்கொண்டே ஸ்வப்னாவிற்கு அழைக்க, அவளோ இவன் நினைத்த மாதிரியே,


"இவ்வளவு நேரம் யார் கூட கடலைப் போட்டுக்கிட்டு இருந்த??" என்றாள் முதல் கேள்வியாக.


பேச்சிற்கு கூட 'ஹாய்' 'ஹலோ' போன்ற சம்பிரதாய வார்த்தைகள் இடம்பெற்றிருக்கவில்லை அங்கு.


"பட்டு!! அது ஷ்யாம்…" என்று முடிக்கவில்லை ராகுல், அதற்குள் இடைமறித்தது ஸ்வப்னாவின் குரல்,


"ஸ்டெல்லா ஃபோனும் பிஸின்னு வந்துச்சு…"


இதற்கு மேல் ஷ்யாமுடன் பேசினேன் என்று கூறினால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணியவன், ஸ்டெல்லாவிடம் போட்ட அதே பிட்டை ஸ்வப்னாவிடமும் போட்டான்.


"ஆமாடா பட்டு… அந்த ஸ்டெல்லா கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்… அவகிட்ட தெளிவா சொல்லிட்டேன்.. நா முழுசும் என்னோட ஸ்வப்னா பேபிக்கு மட்டும் தான்… இனி எங்களை தொந்தரவு பண்ணாதேன்னு… இப்போ கோவம் போச்சா.. என் செல்லக்குட்டிக்கு …”


“ பட்டு !! ஷ்யாம் செகண்ட் கால்ல வரான்.. பேசிட்டு வரேன்டா… எமெர்ஜென்சி போல… நா உனக்கு அப்பறம் கால் பண்றேன்..." என்று வார்த்தைக்கு வார்த்தை பட்டு போட்டு ஐஸ் வைத்தவன், மறுமுனையில் இருப்பவள் பேசவே இடமளிக்காமல், தான் மட்டுமே பேசிவிட்டு அழைப்பை அணைத்தவாறு பெருமூச்சு விட்டான் அயர்வில்.


ராகுலின் இந்தப் பெருமூச்சைக் கண்டு சிரித்தவாறு, " ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வழியில்லையாம் … அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம்!! " என்றான் ஷ்யாம், ரஜினி ஸ்டைலில் உல்லாசச் சிரிப்புடன்.


ஷ்யாமின் டயலாக்கை காட்டிலும், அவனின் சிரிப்பு தான் ராகுலை அதிகம் வெறி ஏற்றியது.


"என்னடா!! நக்கலு… சிரிக்காதேடா பக்கி பயலே! ஒரு தரமாச்சும் லவ் பண்ணிப் பார்த்திருந்தானேத் தெரியும்! அதோட கொடுமை என்னன்னு … நீயும் தான் இருக்கியே.. இருபத்தி எட்டு வயசு வரை ஒரு பொண்ணைக் கூட லவ் பண்ணாம, நம்ம நரிகூட்டத்தோட மானத்தையே மொத்தமா வாங்குற… இதுல நீ தலைவர்… நா துணை தலைவர் வேற..." என்றான் ராகுல் எரிச்சல் குரலில்.


ஆமாம், அது என்ன நரிகூட்டம்?? இப்படியும் ஒரு கூட்டம் இருக்குமா என்ன?? என்று கேட்டால்… ஆம், நிச்சயமாக இருக்கும்… எல்லாம் 'தி ஹேங்ஓவர்' படத்தை தமிழ் டப்பிங்கில் பார்த்ததின் விளைவுகள்.


ஷ்யாம், ராகுல், அன்வர், ஜெய் - இந்த நால்வரும் தான் நரிக்கூட்டத்தின் தூண்கள். இதில் ஷ்யாமை தவிர மற்ற மூவரும் ஒன்றிக்கு இரண்டு கேர்ள் பிரெண்ட்ஸ் என்று வைத்திருக்க… ஷ்யாம் மட்டுமே அதில் விதிவிலக்கு.


இந்த இருபத்தி எட்டு வயதிலும் இதுவரை காதல் ஏன்.. ஒரு க்ரஷ் கூட இருந்ததில்லை அவனிற்கு. அதிலும் இதுவரையில் எந்த பெண்ணிடமும் ஃபிலிர்ட் கூட செய்ததில்லை. அப்பேற்பட்ட நல்லவன் தான் நம் கதையின் நாயகன் ஷ்யாம்.


ஷ்யாம் சுந்தர், இன்றளவில் தென்னிந்தியாவில் கொடிக்கட்டிப் பறந்துக்கொண்டிருக்கும் ‘ஷ்யாம் க்ரூப்ஸின்’ ஏகபோக ஒற்றை வாரிசு. கடலென சொத்துகள் குவிந்திருந்தும், அதில் ஏனோ அவனுக்கு பெரிதும் நாட்டம் இருந்ததில்லை . அதற்காக குடும்பத் தொழிலை அம்போவென்று விட்டுவிட்டானா?? என்றால் அதுவுமில்லை.


ஷ்யாம் க்ரூப்ஸின் அனைத்து கம்பனிகளின் அக்டிவ் CEO ஷ்யாம் சுந்தர் தான். ஆனால், சொந்த கம்பெனியிலேயே சம்பளத்திற்கு வேலை பார்ப்பதும் அவன் ஒருவனாக தான் இருக்க முடியும்.


அது ஏனோ, தந்தை ஆரம்பித்து வளர்த்த தொழிலை, தானும் மேற்கொண்டு அதை பெரிதுப்படுத்துவதில் கிடைக்கும் திருப்தியை விட... தானே சுயமாக ஒரு தொழிலை ஆரம்பித்து,அதை திறம்பட நடத்தி வெற்றி பெற வைப்பதில் தான் சுவாரஸ்யம் அதிகம் என்று எண்ணியவன், அவன் தந்தை விஜயசுந்தரிடம் அதை பற்றி கூறி, ஒரு பெரும் போராட்டத்திற்கு பிறகு அதற்கான சம்மதத்தையும் வாங்கியிருந்தான்.


கூடவே, அவர்களது அனைத்து நிறுவனங்களும் அவனது மேற்பார்வையின் கீழ் தான் இயங்கும் என்றும் விஜயசுந்தர் கூறி விடவே, அனைத்தையும் ஏற்றுக்கொண்டு திரம்பட நடத்தி… இன்று தென்னிந்தியாவின் முதன்மையான தொழில் நிறுவனமாகவும் ஷ்யாம் குரூப்ஸை மாற்றியதில் பெரும் பங்கு ஷ்யாமுடையது தான்.


அதே சமயம், தனது சொந்த முயற்சியினால் 'நவநீதம் மாட்டு செக்கு எண்ணெய்' என்று தனது தாயின் பெயரில், சுத்தமான மாட்டு செக்கு எண்ணெய்களை, முறையாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் எக்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்து, அந்த துறையிலும் டாப் கிளாசில் கலக்கி, இன்று 'youth business icon of the year' என்ற பட்டத்துடன் வலம்வரும் இளம் தொழிலதிபரும் இதே ஷ்யாம்சுந்தர் தான்.


அவனது தொழில் வட்டாரத்தைப் பொறுத்தவரை முடிசூடா மன்னனவன். ஆனால், வெளி உலகத்தைப் பொறுத்தமட்டும் ஷ்யாம் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. என்றுமே, புகழ்ச்சியை அவன் விரும்பியதில்லை. அவனது பாணி எப்போதும் எளிமை மட்டுமே.


“டேய்!! நா இங்கே காட்டுக் கத்து கத்திக்கிட்டு இருக்கேன்… நீ என்னவோ பாட்டுல மூழ்கி… மோகன புன்னகை விசிக்கிட்டு இருக்க…” என்றான் ராகுல் , தன்னுடைய பேச்சிற்கு எவ்வித எதிர்வினையும் காட்டாது, கேட்ட பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும் ஷ்யாமினைக் கண்ட எரிச்சலில்.


“என்ன தெரியனும் உனக்கு இப்போ??” என்றான் ஷ்யாம், நிதானமாக.


“ எனக்கு ஒன்னும் தெரிஞ்சிக்க வேண்டாம்… அம்மாவுக்கு தான் உன்னை நினைச்சு ஒரேக் கவலை. ஒன்னு நீயாவது யாரையும் லவ் பண்ணு … இல்லைனா அட்லீஸ்ட் அம்மா பார்க்கிற பொண்ணையாவது ஒகே பண்ணு. இப்படி நீ எந்த முடிவும் சொல்லாம இப்படியே மொரட்டு சிங்கள்லா சுத்துனா பாவம் அவங்களும் வேற என்ன தான்டா பண்ணுவாங்க?? அதான், நாளைக்கு உனக்கு செக்கப் பண்ண டாக்டர் அப்பாய்ண்மெண்ட் வாங்கியிருக்காங்க…”


“வாட்??”


“என்னடா வாட்… நீ இப்படியே இருந்தா உனக்கு என்னமோ ப்ரோப்ளம்னு தானே நினைப்பாங்க.. பேசாம நீ ஒரு லவ் தான் பண்ணித் தொலையேன்டா… அம்மாவும் ஹாப்பி… நாங்களும் ஹப்பி.. உனக்கு வேணும்னா நானும் அன்வரும் லவ் பண்ணுவது எப்படின்னு ஒரு கிளாஸ் கூட எடுக்கிறோம்..” என்றான் ராகுல் தீவிரமாக.


ராகுலின் தீவிரமான முகப்பாவத்தைக் கண்டு வசீகரமாக முறுவலித்தவன்,


“மச்சி… சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலைன்னு சொல்லுவாங்கடா… அது மாதிரி தான் காதலையும் யாராலும் சொல்லித் தரமுடியாது. அது ஒரு உணர்வு! அந்த உணர்வு எப்போ யார் மேல வரும்னு யாருக்கும் தெரியாது! என்னை பொறுத்தவரைக்கும் ஒரு பொண்ணை பார்த்ததும் அவ தான் இனி நமக்கு எல்லாமேன்னு நம்ம மனசு உணரனும்… நம்மளோட பேரு, புகழ் எல்லாத்தையும் மறந்து அவளுக்காக மட்டுமே வாழனும். அவளுக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்னு தோணனும். இதோ... இந்த சாங்ல கூட ஒரு லைன் வரும் ‘மானிட பிறவி என்னடி மதிப்பு.. உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு’ன்னு… அந்த மாதிரி, நான் யார்? என்னோட உயரம் என்ன? எல்லாத்தையும் மறந்து … அவ மேல மட்டுமே காதல்ல உருகி, அவக்கூட நிறைவான ஒரு வாழ்க்கையை வாழனும் ராகுல்.


காதலை பற்றி உனக்கு இருக்குற ஒப்பீனியன் வேற, எனக்கு உள்ள ஒப்பீனியன் வேறடா… நா சொன்ன விஷயங்கள் எல்லாம் உனக்கு புரியுதான்னு கூட எனக்குத் தெரியல... பட் இதுவரைக்கும் என்னை இம்ப்ரெஸ் பண்ணுற மாதிரி ஒரு பொண்ணை நா மீட் பண்ணலடா… சொல்லமுடியாது அந்த குபிட் இந்த செகண்ட் கூட என்மேல அம்புவிட வெயிட் பண்ணிகிட்டு இருக்கலாம்… நானும் எனக்கானவளை இப்போ உடனே பார்க்கலாம்.. பார்த்ததும் காதல் கடல்ல தொபுகடீர்ன்னு விழலாம்… எதுவும் நம்ம கைல இல்லை மேன்… சோ லெட்ஸ் கோ வித் தி ஃப்லொவ் … நடக்கிறது நிச்சயம் நடத்தே தீரும்…" என்று ராகுலிடம் கூறிக்கொண்டிருந்த ஷ்யாமின் விழிகள் அகல விரிந்தது, காரின் குறுக்கே ஓடிவந்த அவ்விளம் பெண்ணைக் கண்டு.


அப்பெண்ணைக் கண்ட மறுநொடியே, ஷ்யாமின் கால்கள் பிரேக்கை அழுத்த… ‘க்ரீச்’ என்ற ஒலியுடன் எவ்வித குலுங்களும் இல்லாமல் சட்ரென்று நின்றது அந்த நவீன ரக சொகுசு கார்.


ஆனால், காரின் குறுக்கே வந்த அப்பெண்ணோ,கார் தன்னை தான் இடித்துவிட்டது என்று எண்ணினாள் போலும். அவளாகவே தரையில் விழுந்துக்கிடந்ததாள்.


கிழே விழுந்ததின் விளைவு, கைகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டு இலேசாக ரத்தமும் கசிந்தது. இதில் முத்தாய்ப்பாய் மயக்கம் வேறு. ஆனாலும் இடிக்காத காருக்கு போய் இந்த அடி , இரத்தம், மயக்கம் இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான்.


கண்மூடித் தனமாக இப்படி நடுரோட்டில் ஓடிவந்தவளை, திட்டித் தீர்த்திவிடும் கோபத்துடன் காரினுள் இருந்து இறங்கிய ஷ்யாம் கண்டதெல்லாம், மயங்கி சரியும் அவளை தான்.


‘நாம தான் அவளை இடிப்பதற்கு முன்னாடியே காரை நிறுத்திவிட்டோமே…’ என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் ஓடினாலும், ஷ்யாமின் கால்கள் என்னவோ அவளை நோக்கி தான் ஓடியது.


மயக்க நிலையில் கூட ஒரு பெண்ணால் இவ்வளவு அழகாக இருக்க முடியுமா என்ன ?? என்ற கேள்வி தான் முதலில் தோன்றியது ஷ்யாமிற்கு, அப்பெண்ணை பார்த்த மாத்திரத்தில்.


பார்த்தது பார்த்தப்படியே நின்றுக்கொண்டிருந்தவனை நினைவிற்கு கொண்டு வந்தது, ராகுல் கைகளில் திணித்த தண்ணீர் பாட்டில்.


ராகுல் கொடுத்தப் பாட்டிலில் இருந்த தண்ணீரை அப்பெண்ணின் முகத்தில் தெளித்தான் ஷ்யாம்.


சில்லென்றிருந்த காலை நேர குளிருக்கு தோதாக குளிர்ந்த நீர் முகத்தில் படவும், அந்த சிலுசிலுப்பில் கண் திறந்தவளோ… தனக்கு எதிரே முழந்தாலிட்டு அமர்ந்திருவனின் கன்னத்தில் அறைவதற்காக கைகளை ஓங்க, சரியாக அதே நேரம் அவளது கைகளைப் பற்றியிருந்தான் அவனும்.


“யோவ்!! கையை விடுயா!! ஆளை இடிச்சி போட்டு தள்ளப் பார்த்ததும் இல்லாம… இப்போ கைய வேற பிடிச்சி இழுக்கரியா நீயி…” என்றாள் ஆவேசமாக.


“ஏதே!! உன்னை இடிச்சி போட்டு தள்ள பார்த்தோமா?? பத்தடிக்கு முன்னாடியே நின்னக் காருக்கு, நீயாவே கீழே விழுந்துட்டு இந்த அளவுக்கு பில்டப் பண்ணுற… இதுல கைய வேற பிடிச்சு இழுத்தானாமாம்… நல்லா குருதுக்கு ட்ரெஸ் பண்ண மாதிரி இருந்துகிட்டு பேச்சைப்பாரு…” என்று பேசியது, வேறு யாரு? சாச்சாத் ராகுலே தான்.


“ஹலோ மிஸ்டர்!! என்ன.. பாடி ஷேமிங்யா?? ஓவரா பேசுன மூஞ்சில பூரான் வுட்டுருவேன்… தள்ளி நில்லு அப்பாலிக்கா..” என்று ராகுலிடம் கூறியவளோ, ஷ்யாமின் காரை ஒரு முறை முழுதாக சுற்றிப் பார்த்துவிட்டு அவனிடம் வந்தவள்,


“உங்க காரை நீங்களே கொஞ்சம் சுத்திப் பாருங்க மிஸ்டர்! ஒரு சின்ன கீறல் கூட என்னால விழல.. ஆனா, நீங்க இடிச்சி தள்ளிவிட்டதால என் கைல அடிபட்டு ரத்தமே வருது… யாருக்கு அடிப்பலம்னு நீங்களே பாருங்க.. நானே பாவம் பாதிக்கப்பட்டவ.." என்றாள் பாவம் போல் பாவனைக்காட்டி.


“உன்னை நாங்க இடிச்சா தானே குருது எங்க கார்ல கீறல் விழும்… ஆனா, நல்லா எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்குறமா நீ… கூடவே எக்ஸ்பிரஷனும்..” என்றான் ராகுல் நக்கலாக.


“ஹே பாகல், என்ன திரும்ப வாய் கூடுது… உனக்கு பூரான் கன்பார்ம் மேன்…” என்று ராகுலை நோக்கி கூறியவளோ, ஷ்யாமின் புறமாக திரும்பி,



“இன்னைக்கு நா கொஞ்சம் ஹாப்பி மூட்ல இருக்கிறதால உங்களை விடுறேன். இல்லைன்னா என்னை அக்சிடென்ட் பண்ணிட்டு இப்படி ஹாய்யா நிக்க முடியுமா என்ன?? இனியாவது ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுங்க… எல்லாரும் என்னை மாதிரி பெரிய மனசுப் பண்ணி மன்னிக்க மாட்டாங்க ” என்றவள், அவ்விடத்தை விட்டு நகர… அவளது கைகளைப் பற்றி அவளை நகரவிடாமல் நிறுத்திய ஷ்யாமின் கண்களில் சுவாரஸ்யம் குடிகொண்டது.


ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “கைல அடிபட்டிருக்கு பாரு! வா.. ஹாஸ்பிடல் போகலாம்!” என்றான் உரிமையாக. அவனே அறியாமல் அவள் மீது ஒரு உரிமை உணர்வு ஏற்பட்டிருந்தது அவனுக்கு.


“அய்யோ!! என்ன ஜீ நீங்க… அது தானா சரி ஆகிடும் … எனக்கு வேற ஒரு இம்போர்டன்ட் வேலையிருக்கு..” என்றவளது கைகளைப் பற்றி காயம் பட்ட இடத்தில் கட்டிட்டவனை நோக்கி, “தேங்க்ஸ் ஜீ!!” என்றவள், சிட்டாக அவ்விடத்தை விட்டு பறந்தேவிட்டாள்.


நடந்து செல்கிறாளா?? அல்லது மிதந்தா?? என்று தீவிர ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்த ஷ்யாமைக் கண்ட ராகுலோ,


“மச்சி !! தயவுசெஞ்சி குபிட் இந்த சொர்ணாக்காவப் பார்த்ததும் அம்பு விட்டாச்சுன்னு சொல்லிடாதேடா..” என்றான் பீதியில்.


“ச்சே! ச்சே! அப்படியெல்லாம் இல்ல மச்சி..” என்று கூறியவனின் இதழ்களில் அரும்பிய புன்முறுவலை கண்டு,


“டேய்!! என்னடா உன் சிரிப்பே ஒரு மார்க்கமா இருக்கு” என்று சந்தேகமாக கேட்ட ராகுலை எதுவும் பேசாமல் தரதரவென்று ஷ்யாம் இழுத்து சென்றது, நகரின் பிரபலமான சினிமா தியேட்டருக்கு தான்.


“இங்க எதுக்குடா இப்போ ??” கேள்வியாக கேட்ட ராகுலை நோக்கி,


“மறந்துட்டியா?? இன்னைக்கு பில்லா ரீ-ரீலிஸ்டா…” என்றான் ஷ்யாம் உற்சாகமாய்.


“அட! ஆமாம்ல..” என்ற ராகுலின் குரலிலும் அதே உற்சாகம் தொற்றிக்கொண்டது.


சற்று நேரத்தில், ஜெய்யும் அன்வரும் அங்கு வந்துவிடவே.. நரிக்கூட்டம் மொத்தமும் பேக் டு போர்ம்மிற்கு மாறி, இளமை துள்ளலுடன் தியேட்டருக்குள் சென்றனர்.


தல படம் என்றால் சொல்லவே வேண்டாம், சும்மாவே கூட்டம் தூள் பறக்கும். அதுவும் இது பில்லா படத்தின் ரீ-ரீலிஸ்… அதிலும் முதல் காட்சி வேறு… சும்மா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று தியேட்டர் முழுவதும் ரசிகர் கூட்டத்தில் ஆர்பரிக்க, நரிக்கூட்டம் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த வேலுவின் இன்ட்ரோ சீன் வரவும், தியேட்டர் முழுவதும் மீண்டும் ஒருமுறை அதிர்ந்தது ஆரவாரத்தில்.


அனால், ஷ்யாமின் விழிகள் மட்டும் அவன் அமர்ந்திருந்த வரிசையிலிருந்து மூன்று வரிசைக்கு முன்னால் நின்றுக் கொண்டிருந்த மங்கையர் கூட்டத்தையே ஆராயும் பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தன.


“ விண்ணும் மண்ணும் தடதடக்க,
காற்றும் புயலும் கடகடக்க,
வாரான் வாரான் மலையேறி வேலய்யா! - வேல்!! வேல்!!
வேலும் மயிலும் பரபரக்க,
காடும் மலையும் வெடவெடக்க,
வாரான் வாரான் வரிசையிலே முருகையா ! - வேல்!! வேல்!! ”

ஷ்யாமின் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்தும் வகையில், ‘வேல்! வேல்!’ என்று பாடியப்படியேத் திரும்பிய வெள்ளை சுடிதார் அவளே தான்.


சில மணிநேரங்களுக்கு முன்பு, அவன் கார் மோதாமலேயே மோதிவிட்டதாக எண்ணி ஆர்ப்பாட்டம் செய்த அவளே தான். சந்தேகமே இல்லை. இதோ! அவன் கட்டிவிட்ட கைக்குட்டைக் கூட இருகிறதே அவள் கைகளில்.


ஆக, அவள் கூறி சென்ற முக்கிய வேலை இது தானா?? என்று எண்ணியவனின் விழிகளில் சுவாரசியமும், இதழ்களில் புன்னகையும் குடிகொண்டன அவனே அறியாமல்.


ரோமானிய காதல் கடவுளான குபிட்டும், தன்னுடைய வேலையை திறம்பட நிறைவேற்றிய திருப்தியுடன் அடுத்த ஜோடியை பார்க்க கிளம்பிவிட,


அவர் விட்ட இந்த காதல் அம்பைச் சரியாய் கண்டுக்கொண்டு, பெயர் கூட தெரியாத அந்த அவளை காதல் கடலில் மூழ்க வைப்பானா யூத் பிசினெஸ் ஐகானும் , நரிக்கூட்டத்தின் தலைவருமாகிய ஷ்யாம் சுந்தர்?? என்ற மில்லியன் டாலர் கேள்வி நமக்கு.

காதலின் இதம் தொடரும்…


 
Last edited:

காதல் - 2

நீல நிறக் கண்ணாடிகளால் கட்டப்பட்டிருந்த அந்த எட்டு மாடிக் கட்டிடத்தைச் சுற்றியும் தென்னை மரங்கள், அலங்கார செடிகள் மற்றும் இதமான நறுமணம் வீசும் பூச்செடிகள் என்று நடப்பட்டிருக்க, பச்சை பசேலென்று இதமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது 'ஷ்யாம் குரூப்ஸின்' சென்னை அலுவலகம்.

ஆனால், வெளியே நிலவிய இதத்திற்கு நேர்மாறாக ஷ்யாமின் அலுவலக அறையிலோ அனல் அடித்துக்கொண்டிருந்தது.

காரணம்,சற்று நேரத்திற்கு முன்பு வந்த அலைபேசி அழைப்பு! அந்த அழைப்பு தாங்கி வந்த செய்தி!

ஷ்யாமின் ஆருயிர் தம்பியும்,பாசமிகு வெண்ணிலா சித்தியின் மகனுமாகிய அரவிந்த் என்கிற ஆர்வி, மீண்டும் ஒரு முறை கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட நொடியிலிருந்து ஷ்யாமினுள் கனன்றுகொண்டிருந்தது கோபம்.

இருக்காதா பின்னே! சென்ற முறை ஆர்வி சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, இனி ஒருமுறை இது போல் நடக்காது என்று அவனிற்காக உறுதிகடிதம் எழுதிக்கொடுத்து அந்த சஸ்பெண்ட் ஆர்டரை கேன்சல் செய்தது ஷ்யாம் தான்.

ஆனால், ஷ்யாம் தந்த உறுதியை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு.. இன்று மீண்டும் சஸ்பெண்டாகி இருக்கும் ஆர்வியின் மீது அவனுக்குக் கோபம் வராமலிருந்தால் தானே அதிசயம்.

போதாக்குறைக்கு, இம்முறை அவன் மட்டும் தனித்து சஸ்பெண்டாகாமல், கூடவே அவன் தோழியும் சஸ்பெண்டாகி இருக்கிறாளாம்.

இந்த அழகில் ஷ்யாமின் சித்தியும், அப்பெண்ணின் அத்தையும் அவனைக் காண அலுவலகத்திற்கு வேறு வந்துகொண்டிருக்கிறார்கள்.

இதுபோக, சஸ்பெண்ட் ஆர்டரை கையில் வாங்கியதிலிருந்தே ஆர்வியையும், அப்பெண்ணையும் காணவில்லை என்ற கூடுதல் செய்தி வேறு, ஷ்யாமை மேலும் கடுப்பாக்கியது.

"ஸ்டிவ்! அரவிந்த் எங்கே இருந்தாலும் சரி.. அவனை உடனே கண்டுப்பிடிச்சு என் முன்னாடி கொண்டுவரச் சொல்லி நம்ம ஆட்களுக்கு இன்ஃபார்ம் பண்ணு.. ரைட் நவ்.." என்று கர்ஜனையாகத் தனது செயலாளர் ஸ்டிவ்விடம் கூறிக்கொண்டிருந்தவனின் முன்பு வந்து நின்றனர் அவனின் சித்தி வெண்ணிலாவும் அவரது தோழி சகுந்தலாவும் (ஆர்வியுடன் சஸ்பெண்டாகிய மாணவியின் அத்தை).

" உன் தம்பி என்ன வேலை செஞ்சி வச்சிருக்கான்னு பார்த்தியா ஷ்யாம்!! எப்போதும் தனியா சஸ்பெண்ட் ஆவான்.. இப்போ போதாக்குறைக்கு அந்த அப்பாவி பொண்ணு அபியையும் சேர்த்து வம்பில் மாட்டிவிட்டுட்டான்.." என்று வந்ததும் வராததுமாகப் புலம்ப ஆரம்பித்த சித்தியையும், அவரது தோழியையும் நாற்காலியில் அமரவைத்தவனோ, நிதானமாகவே பேச ஆரம்பித்தான்.

"இப்போ தான் எனக்கும் இன்போர்மேஷன் வந்துச்சு சித்தி… ஆர்வியையும் அந்த பொண்ணையும் தேடச் சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறேன்.. கிடைத்ததும் இருக்கு அவனுக்கு… நீங்க வருத்தப்படாதீங்க.."

"அவனை நினைச்சு இப்போ யார் வருத்தப்பட்டா ஷ்யாம்.. என் வருத்தமெல்லாம் அபியைப் பற்றி தான். பாவம் அவளே சூதுவாது தெரியாத பச்சை மண்ணு.. அவளையும் சேர்த்து இந்த முட்டாப்பைய கெடுக்கிறான்.." என்றார் வெண்ணிலா வருத்தமாக.

"நீதான் மெச்சிகனும் நிலா அவளை… காலேஜ் சுவர் ஏறி குதித்து வெளியே சுற்றலாமென்று ஐடியா கொடுத்ததே அவளாகத்தான் இருக்கும்.." என்றார் சகுந்தலா தன் பங்கிற்கு.

"இவளுக்கு வேற வேலை இல்லை.. அந்த பச்சை மண்ணை வையாமல் தூக்கமே வராது இவளுக்கு.."என்று தன் தோழியிடம் கூறிய வெண்ணிலாவோ. ஷ்யாமினை நோக்கி,

"ஷ்யாம் நான் ஒரு முடிவு பண்ணியிருக்கிறேன்…"என்றார் தீர்க்கமாக.

"என்ன முடிவு??" என்றான் ஷ்யாம் யோசனையாக.

" ஷ்யாம்! டிசிப்லின்னா என்ன?? அது எந்த கடையில் கிடைக்குமென்று கேட்கிற நிலைமையில் தான் ஆர்வி இப்போ இருக்கான் . அவனுக்குக் கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது. இந்த லட்சணத்தில் மூணு மாசம் சஸ்பெண்ட் வேற… இவன் சஸ்பெண்ஷன் முடிஞ்சு காலேஜ் போகும்போது அவனுக்கு ஃபைனல் செம்ஸ்ட்டர் எக்ஸாம்ஸ் அரம்பிச்சிடும். படிக்காமலேயே எப்படியும் நல்ல மார்க்ஸ் எடுத்து பாஸ் பண்ணிடுவான் தான்.. அதுல எந்த சந்தேகமுமில்லை. ஆனா, அவனுக்கு பொறுப்பு வரணும் ஷ்யாம்… அதான் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்… ஆர்வி சஸ்பெண்ட்ல இருக்க மூணு மாசமும் அவன் உன் பொறுப்பு.. அவனுக்கு பிசினஸ் பற்றியும் அதிலிருக்கும் நுணுக்கங்கள் பற்றியும் சொல்லிக்கொடு முக்கியமா டிசிப்லின், ரெஸ்பான்சிபிலீட்டி இந்தமாதிரியான வார்த்தைகளுக்கு எல்லாம் அர்த்தம் என்னனு அவனை புரிஞ்சிக்க வைக்கிறது உன் பொறுப்பு... " என்றார் தீவிர பாவனையில்.

நீளமாகப் பேசிக்கொண்டிருந்த வெண்ணிலாவை நோக்கி, "ஆர்வி இன்றையிலிருந்து என்னுடைய பொறுப்பு சித்தி… அவனைப் பற்றி நீங்கக் கவலைப் படாதீங்க…" என்றான் ஷ்யாம் மெல்லிய புன்னகையுடன்.

"டேய்.. நீ பாட்டுக்கு உன் ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்கிற போல ஜாலியா இருந்திட போற.. அவன் தப்பு பண்ணா மறக்காம அதுக்கு தண்டனை கொடுடா.. தம்பின்னு பாவமெல்லாம் பார்க்காத.." என்றார் வெண்ணிலா ஸ்ட்ரிக்ட் ஆஃபீசராய்.

"ஐ னோவ் சித்தி!!" என்றான் அதே புன்னகையுடன்.

ஷ்யாம் மற்றும் வெண்ணிலாவின் இந்த சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டிருந்த சகுந்தலாவோ, தனக்குள் ஒரு திட்டமிட்டவர் அதைச் செயல் படுத்த எண்ணி ஷ்யாமிடம் பேச ஆரம்பித்தார்.

"ஷ்யாம் தம்பி!! ஆர்விக்கு ட்ரைன் பண்ணுற மாதிரியே அபிக்கும் நீங்களே ட்ரைன் பண்ணுறீங்களா?? எப்படியும் படிப்பு முடிந்ததும் அவ தான் எங்க தொழிலை பார்த்துக்க போறா… அதுக்கு முன்னமே உங்களைப் போல ஒரு பெரிய பிசினஸ் மேன் கிட்ட பிசினஸ் கத்துக்கிட்டா அவளுக்கும் அது ரொம்ப ஹெல்ப்பா இருக்கும். அவளோட மாமாகிட்ட கத்துக்க சொன்னா அவரை நல்லா ஏமாத்தி ஓப்பி அடிச்சிடுவா.. ஆனா, நீங்கக் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் அதுவும் தொழில்னு வரும் போது ரொம்பவே ஸ்ட்ரிக்ட்னு கேள்வி பட்டிருக்கேன்.. அதுவுமில்லாமல், நானும் என் கணவரும் எங்க பொண்ணோட டெலிவரிகாக துபாய் போறோம். நாளைக்கு மோர்னிங் பிலைட்ல. அபியை நிலா வீட்ல தான் விட்டுட்டு போறதா பிளான். பட், அதுகுள்ள இப்படி இவ வம்பு பண்ணி சஸ்பெண்ட் ஆகிட்டா.. அதுவும் இனி ஆர்வி உங்க வீடுல தான் இருக்க போறான்.. அதனால அபியையும் உங்க பொறுப்பிலேயே உங்களை நம்பி விடுறேன் தம்பி… மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க" என்றார் கோரிக்கையாய்.

சகுந்தலாவின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ந்தது ஷ்யாம் மட்டுமல்ல வெண்ணிலாவும் தான்.

'யாரென்றே தெரியாத பையனை நம்பி எப்படி ஒரு வயசு பெண்ணை ஒப்படைக்க நினைக்கிறார்கள்??' என்று ஷ்யாம் அதிர்ந்தால்.

வெண்ணிலாவோ, படிப்பு முடிந்ததும் அபி தான் தொழிலைக் கவனித்துக்கொள்ளப் போகிறாள் என்ற சகுந்தலாவின் வாக்கியத்தில் அதிர்ந்து நின்றார்.

"என்ன சொல்லுற சகுந்தலா.. அபி தொழிலைப் பார்க்க போறாளா?? அப்போ ஜீவா??" என்றார் வெண்ணிலா அதிர்ந்த குரலில்.

“அவனைப் பற்றிப் பேசாதே நிலா… அவன் எங்க பிள்ளையே இல்லை.. மொத்தமா தலை மூழ்கிட்டோம்… இனி அபி மட்டும்தான் எங்களுக்கு எல்லாமே…” என்றார் சகுந்தலா, தீர்க்கமாக. இனி இதைப்பற்றிப் பேசாதே என்பது போன்ற பாவனையில்.

ஜீவா - சகுந்தலா, பிரபு தம்பதியின் ஒற்றை வாரிசு. கடந்த சில வருடங்களாகவே ஜீவாவிற்கும் இவர்களுக்கும் இடையில் சுமூகஉறவு இல்லை என்று தெரிந்தாலும், இப்படி திடீரென்று தலை மூழ்கிவிட்டேன்,இனி தன் அண்ணன் மகளான அபியிடம் கம்பெனி பொறுப்புகளைத் தூக்கிக் கொடுக்கப் போகிறேன் என்று கூறும் சகுந்தலாவைக் கண்டு பெரும் அதிர்ச்சி வெண்ணிலாவிற்கு.

அபி பண்பான பாசமான பெண் தான்! ஆனால் தொழில் செய்வதற்கு இது மட்டும் போதாதே! சாதூர்யமும், சாமர்த்தியமும் வேண்டுமல்லவா?? இன்னும் சிறுபிள்ளையென இருக்கும் அபியால் எப்படி தொழிலை நடத்த முடியும்?? அதுவும் வேலை என்று வந்துவிட்டால் வேங்கையெனப் பாயும் ஷ்யாமிடம் வேறு அவளைத் தொழில் கற்றுக்கொள்ளச் சொன்னால்?? இது எங்கே போய் முடியும்… இவன் கோபத்தை தாங்குவாளா அவள்?? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்தன வெண்ணிலாவிற்கு.

அதேசமயம், அபியையும் ஆர்வியையும் பொறுப்புள்ள மனிதர்களாக மாற்றும் திறன் ஷ்யாம் ஒருவனிற்கு மட்டுமே இருக்கிறது என்றும் நம்பியவர், இருவரையும் ஷ்யமிடம் பயிற்சிக்கு அனுப்பச் சம்மதித்தார்.

மேலும், ஷ்யாமை நம்பி ஒரு பெண்ணை தாராளமாகத் தனியே அனுப்பலாம்.. ஏனென்றால் அவன் தான் 'சாமியார்' என்று அனைவராலும் ஏக மனதாக அழைக்கப்படுபவன் ஆயிற்றே.

தன் மனதில் நினைத்தவற்றை மறையாமல் ஷ்யாமிடம் வெண்ணிலா பகிர, 'நான் சாமியாரா??' என்று எண்ணியவனின் விழிகளுக்குள் வந்து சென்றாள் அன்று சந்தித்த அந்த தியேட்டர் பெண்.

**************************

“அபிபிபி… பொறுமையா போடீ பைத்தியமே… உனக்கு இந்த மாடல் வண்டி ஓட்ட தெரியாதுதுது… ஏற்கனவே சஸ்பென்ட் ஆனது தெரிந்து என் அண்ணங்காரன் என்னை வலைவீசி தேடிகிட்டு இருக்கான்.. இப்போ எங்கேயாவது விழுந்து வாரினோம்… அவளோதான் கொன்னுடுவான்டி.. ப்ளீஸ்… ” என்று புலம்பியபடியே அந்த இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்தான் அரவிந்த்.

“ டேய் ஆர்வம்… உன் அண்ணன் அந்த ஹில்ட்டரைப் பத்தி மட்டும் பேசாதே கான்டாகிடுவேன்…” என்றவளோ, ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்க.. வண்டி வேகமெடுத்தது.

“பைத்தியமே… ஸ்பீட் கம்மி பண்ணுடி… உனக்கு வேற பேலன்ஸ் வராது… அதுவுமில்லாமல்.. என் அண்ணனை நீ பார்த்ததுகூட இல்லை… அதற்குள் அவனை ஹிட்லர்னு கூப்பிடுற.. தப்பு பண்ணினா மட்டும் தான் அவன் ஹிட்லர்.. மற்ற நேரமெல்லாம் அவன் எவ்வளவு ஸ்வீட் தெரியுமா …” என்றான் அண்ணனை விட்டுத்தராதவனாய்.

“ எவ்வளவு ஸ்வீட்னு தெரியலையே ஆர்வம்.. வேணும்னா சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லட்டுமா?? எனிஹவ், அவரை பார்க்காட்டியும் நீ சொன்னதெல்லாம் வச்சி பார்க்கும்போது.. அவர் ஒரு ஹிட்லரா தான் எனக்கு தெரிகிறார்…” என்றவள், வீலிங் செய்வதற்காக வண்டியைத் தூக்க முயல… அந்தோ பரிதாபம் அது தூக்கவேயில்லை.

அபி வண்டியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆர்வியோ, “என்னடி பண்ணிட்டு இருக்க?? ” என்றான் கேலியாக.

“பார்த்தா தெரியல… வீலிங் தூக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்… பட் யூ டோன்ட் வொர்ரி.. ஐஅம் இன் கண்ட்ரோல்..” என்று அவள் கூறவும், வண்டியின் பேலன்ஸ் தவறவும் சரியாக இருந்தது.

“அய்யயோ! சாக போகிறோமே!!” என்று கத்தியபடியே அபி ஆக்சிலேட்டரில் இருந்து கைகளை எடுத்துவிட, கணநேரத்தில் அவளை பெட்ரோல் டேங்கின் மீது நகர்த்தியவன், வண்டியை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்து, சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருந்தான்.

அரவிந்த்தின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து ஒன்று அங்கு நேராமல் தடுக்கப்பட்டது.

‘என்ன இன்னும் அடிப்படல..” என்று சந்தேகமாகக் கண்களை திறந்தவளோ, “நாம இன்னும் சாகலடா ஆர்வம்… நமக்கு ஆயுள்கெட்டி போல” என்றாள் உற்சாகமாய்.

" ****ல ஆயுள்கெட்டி..?? அறிவுகெட்டவளே … இப்போ வீலிங் ரொம்ப முக்கியமாடி… நா மட்டும் வண்டியை ஹண்டல் பண்ணலைனா இந்நேரம் நமக்குச் சங்கு தான்…” என்று கடுப்பில் அவளைக் கண்டபடி திட்டிவிட்டான் அரவிந்த்.

நொடிப்பொழுதில் மரண பீதியை காட்டியவளை அடித்துவிடும் கோபத்திலிருந்தவனிற்கு தான் கெட்ட வார்த்தையில் பேசியது கூட உரைக்கவில்லை போலும்.

ஆனால், இதுவரையில் தன்முன்பு எவ்வித மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் உபயோகிக்காதவன், இன்று இப்படிப் பேசியதில் அதிர்ந்தவளோ, “பேட் வோர்ட்ஸ் யூஸ் பண்ணியா ஆர்வி நீ??” என்றாள் மெல்லியக்குரலில்.

தான் செய்த மடத்தனத்தை அப்போது தான் உணர்ந்தவனோ, “சாரிடி… சோ சாரிடி… தெரியாம பேசிட்டேன்..” என்றான் வருந்தும் குரலில்.

கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தினால் அறவே பிடிக்காது அபிக்கு. அதனால் தான் தப்பித் தவறிக்கூட அவள் முன் எவ்வித தவறான வார்த்தைகளையும் உபயோகிக்கமாட்டான் ஆர்வி.

ஆனால், இன்று அவனே அறியாமல் பேசிவிடவே… எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்ற ஆழ்ந்த யோசனையில் நின்றிருந்தவனின் முன்பு வந்தவளோ,

“சாரி.. நா அப்படிப் பண்ணியிருக்கக் கூடாது… என்னால தானே நீயும் இன்னைக்கு பேட் வோர்ட்ஸ் யூஸ் பண்ண..” என்று பாவம் போல் கூறியவளின் பிள்ளை முகத்தைக் கண்டதும், “அச்சோ! தங்கமுத்தானி.. செல்லப்பிள்ளை..” என்று கொஞ்சத்தான் தோன்றியது ஆர்விக்கு.
இப்படி அழகாய் சாரி கேட்கையில் அங்கு கோவம் நீடித்திருக்குமா என்ன???

ஒருவழியாக இருவரும் ஆயிரமாயிரம் சாரி-களைப் பரிமாறிய பிறகு தங்களது அடுத்த வேலையைக் காண, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ‘அயோதியா’ மண்டபத்திற்குச் செல்ல… அவர்கள் இருவரும் சென்ற இடத்தின் லொக்கேஷன் பகிரப்பட்டது ஷ்யாமின் அலைபேசி எண்ணிற்கு.

****************

'வெளிச்சம் பவுண்டேஷன் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சி ' என்ற பெயர்ப்பலகையைக் கண்ட ஷ்யாமிற்கோ பெரும் வியப்பு. அவர்கள் இருவரும் இங்கு என்ன செய்கிறார்கள் என்று.

தனது வழமையான வேக நடையுடன், மண்டபத்திற்குள் நுழைந்தவனின் கண்களில் முதலில் தென்பட்டது அரவிந்த் தான்.

இப்பொழுது தான் ஒரு நடனம் முடிந்திருக்கும் போலும். அடுத்த நடனத்திற்காக வேண்டித் திரை மூடிய மேடையின் பின்புறம் ஆயத்துப்பணிகள் நடந்துகொண்டிருக்க, திரை மறைக்காத மேடையின் மறுபுறத்தில் நின்றிருந்தான் அரவிந்த.

"கல்பனா! இந்தா இந்த ஜிமிக்கியை அவகிட்ட கொடு… இல்லனா ஸ்டேஜ்ல ஆடுறதுக்கு பதில் இங்க என் முன்னே வந்து ஆடிடுவா.." என்று சிரித்தவாறு கைகளில் வைத்திருந்த ஜிமிக்கியை கல்பனாவிடம் தந்துவிட்டுத் திரும்பிய ஆர்வியோ, தனக்கு முன்னால் நின்று தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் அண்ணனைச் சற்றும் அங்கு எதிர்பார்க்கவில்லை.

"அண்ணா…நீ எங்கே இங்க…"

"அதை நான் கேட்கணும்… நீ காலேஜ் போகாம இங்கே என்ன பண்ணுற??"

" இந்நேரம் உனக்குத் தான் விஷயம் தெரிந்திருக்குமே… " என்றான் ஆர்வி, வெளிவராத குரலில்.

"சோ.. எனக்கு தெரியும்னு தெரிந்தும் என்னை வந்து பார்க்காம இங்க சுத்திக்கிட்டு இருக்க??"

"அதுவந்து… அண்ணா…."

" இட்ஸ் ஓகே… லீவ் இட்… நாம இதை அப்புறமா பேசிகளாம்…ஆமா, உன் கூட வந்தாளே அந்த பொண்ணு எங்கே.. இங்கே தான் இருக்கிறாளா?? இல்லை வேற எங்கேயுமா??" என்று கேட்டவனின் செவிகளைத் தீண்டிச்சென்றது,

சாபங்கள் கொல்லுதே…

காத்திடு கைகொடு…

உன்னையின்றி வேறியில்லை…” என்ற வரிகள்.

அதுவரையில் கருத்தில் பதியாதப் பாடலும், நடனமும் இந்த வரிகளைக் கேட்டதும் பதிய, ஷ்யாமின் கால்களும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் மேடையை நோக்கி செல்லவாரம்பித்தது.

மேடையின் அருகே சென்ற ஷ்யாமின் விழிகளில் முதலில் பட்டது ஜதிக்கேற்ப லயத்துடன் ஆடிக்கொண்டிருந்த பாதங்கள் தான்.

பாதத்தில் படிந்த விழிகள் மெல்ல மேலேறி முகத்தில் பதிய, வியப்பில் விரிந்தன ஷ்யாமின் விழிகள் அந்த வதனத்தைக் கண்டு.

சரியாக அதே நேரம் மேடையில் ஆடியவளின் விழிகளும் ஷ்யாமின் விழிகளோடு கலக்க, அவள் விழிகள் பிடித்த அபிநயங்களைக் கண்டு மனமுருகி நின்றான் ஷ்யாம்.

"நீயே வழிகாட்டவா...

தீயோடு வேகின்ற வேருக்கு நீராக வா...

நீயே கரைசேர்க்க வா..

ஆறாத காயங்கள் சாய்கின்ற தோளாகவா...

யார் பிழையோ??

யார் சதியோ??

யாரிங்கு கூற..

யாதுமென ஆனவனே..

வா துயர் தீர…

பாதை எல்லாம் பேரொளியாய்

உன் துணை கூட..

தீர்ந்திடும் காரிருளே!! "

ஏனோ அந்த பாடல் வரிகளும், அவள் நயனங்கள் காட்டிய பாவனையும் அவனிடம் ஏதோவொன்றை கூற முயல்வது போலவேத் தோன்ற… அவளது வதனத்தையே விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அந்நேரம், அவனது தோள்களைத் தட்டிய ஆர்வியோ, மேடையை நோக்கிக் கைகாட்டி.. "அண்ணா.. அவ தான் அபி… அபிதகுஜலாம்பால் அலைஸ் அபிதஸ்ரீ.." என்றான் பெருமிதத்துடன்.

"வாட்?? இவளா அந்த பொண்ணு அபி??? உன்கூட சேர்ந்து சஸ்பெண்ட் ஆனவ…" என்ற ஷ்யாமின் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி.

ஏனென்றால், ஷ்யாம் மேடையில் பார்த்தது அந்த தியேட்டர் பெண்ணை. அப்படியானால் இவள் தான் அந்த அபியா?? இனி மூன்று மாதங்கள் தன்னுடன் தன் வீட்டில் தங்கப்போகும் பெண்ணும் இவள் தானா?? என்று பலபல கேள்விகள் மனதில் எழ அசையாமல் நின்றிருந்தான் அவன்.

அதே நேரம், தனது நடனத்தை முடித்துக்கொண்டு பலத்த கரகோஷத்துடன் மேடையின் பின்புறமாக இறங்கியவளோ, நேராக ஷ்யாமிடம் வந்து, "சாரி ஜீ!!" என்று மெல்லியக் குரலில் கூற,

அவனோ யோசனையுடன் ,"ஃபார் வாட்??" என்றான் கேள்வியாக.

" உங்க பாக்கெட்ல இருந்து உங்களுக்குத் தெரியாம இரண்டாயிரம் எடுத்தேனே அதுக்குதான்…"என்ற அபியின் பதிலைக் கேட்டு, "வாட்ட்ட்??" என்று ஒருசேர அதிர்ந்து நின்றனர் அண்ணனும் தம்பியும்.

காதலின் இதம் தொடரும்…


 
Last edited:
காதல் - 3

'வாட்ட்ட்ட்??' என்று அதிர்ந்து நின்ற இருவரையும் யோசனையுடன் பார்த்தவளோ... கைகள் இரண்டையும் அவர்கள் முன் நீட்டியபடி,

"ஷாக்கை குறைங்க…ஷாக்கை குறைங்க.." என்றாள் தீவிரமாக.

நீட்டிய அபியின் கைகளைப் பற்றி அவளை தன்புறமாக இழுத்து நிறுத்திய ஆர்வியோ, "என்னடி பண்ணி தொலைச்ச??" என்றான் முணுமுணுப்பாய்.

ஆர்வியின் கைப்பிடியிலிருந்த தன் கரத்தை விடுவிக்க முயன்றபடியே பேசினாள் அபி.

"அன்னைக்கு என்னை ஒருத்தர் கார்ல இடிச்சு அக்சிடெண்ட் பண்ணினாருன்னு சொன்னேன்ல..?"

"ஆமா…"

"அது இவர் தான் ஆர்வி!"

"வாஆஆட்?? அப்போ நீ சொன்ன அந்த டால்டா மண்டையன் என் அண்ணன் தானா ??"

"அ..அண்ணன்னா??"

"ஆமா.. ஷ்யாம் அண்..." என்று அரவிந்த் கூறி முடிக்கவில்லை. அதற்குள் "இவரா அந்த ஹில்டர்??" என்று கத்தியிருந்தாள் அபி.

"என்னடி பண்ணுற? சைலண்ட்டா இரு!" என்றான் ஆர்வி. விடுபட முயன்று கொண்டிருந்தவளின் கரங்களை அழுந்த பற்றியவாறு.

அபியின் கரங்களை ஆர்வி என்னதான் வலிக்காமல் பற்றியிருந்தாலும்.. ஆட்காட்டி விரலில் அவள் அணிந்திருந்த மோதிரம் வலப்பக்கமாகத் திரும்பியிருக்க.. அதில் பதியப்பட்டிருந்த கல்லோ நடுவிரலில் குத்தி வலிக்கொடுக்க, சன்னமான குரலில் பேசலானாள் அவள்.

"சாரிடா ஆர்வம்.. எக்ஸ்ட்ரீம்லி சாரி! இவரு தான் உன்னோட அந்த ஹிட்லர் அண்ணான்னு தெரியாம நா வேற பணத்தை எடுத்துட்டேன்…" என்று கூறியவளை இடைமறித்த ஆர்வியோ,

"அபி! போதும்… நீ எந்த எக்ஸ்பிளநேஷனும் தர வேண்டாம் ஸ்டாப் பண்ணு…" என்றான். ஓரக்கண்ணால் ஷ்யாமை பார்த்தவாறு பம்மிய குரலில்.

ஆர்வியின் பார்வை போன திசையையும், குரலிலிருந்த பம்மலையும் கண்டவளோ.. நேராக ஷ்யாமிடம் திரும்பி,

"சாரி! மிஸ்டர் ஷ்யாம்! அன்னைக்கு அந்த கார் அக்சிடெண்ட் அப்போ உங்களை நா எதுவுமே பண்ணாம பெரிய மனசு பண்ணி விட்டுட்டேன்ல… ஆனா, அதற்கு அப்புறம் உங்களை மறுபடியும் நா பார்த்தேன்… பில்லா படம் பார்க்க ××××× தியேட்டர் போனேன்… அங்கே, உங்களை லிஃப்ட்ல பார்த்தேன்… அப்போ தான் எனக்கு தோணுச்சு … நீங்க என்னை ஆக்சிட்டேன்ட் பண்ணித் தப்பு பண்ணினதுக்கு உங்களை நா பனிஷ் பண்ணவேயில்லை-னு.. அதான் அதுக்கு பனிஷ்மெண்ட்டா உங்ககிட்ட இருந்து பணம் எடுத்துகலாம்னு நினைச்சேன். அதுவுமில்லாமல், உங்க கூட இருந்த அந்த வெள்ளை பன்றி ராகுலை வேற எனக்குச் சுத்தமா பிடிக்கலை. அதான் நானே அமௌண்ட் எடுத்துவிட்டேன்… இதற்காக நீங்க ஆர்வியை பனிஷ் பண்ணாதீங்க ப்ளீஸ்.." என்றாள் பாவம் போல்.

அபி கூறும் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஆர்வியோ 'நா பாட்டுக்கு சிவனேன்னு தானடி நின்னேன்.. என்னை ஏன் இப்போ கோர்த்து விடுற..' என்றான் புலம்பலாக மைண்ட் வாய்ஸில்.

"வீட்டில் சொல்லாமல் ஏமாற்றிவிட்டு படத்துக்குக் போவது, திருடுகிறது, காலேஜ் பங்க் பண்ணி மாட்டி சஸ்பெண்ட் ஆவது… இது மட்டும் தான் லிஸ்ட்ல இருக்கா… இல்லை இன்னும் வேற ஏதாவது ஹிட்டன் டேலண்ட் வச்சிருக்கீங்களா மிஸ்.அபி?.." என்றான் ஷ்யாம். தீவிர பாவனையில் கண்கள் மட்டும் சிரித்தன.

"சஸ்பெண்ட் மேட்டர்.. உங்களுக்கு எப்படித் தெரியும்???" என்றாள் அபி. முகத்தில் தோன்றிய அப்பட்டமான குழப்ப ரேகையுடன்.

"இதென்ன பிரமாதம்… இன்னும் மூன்று மாசத்துக்கு நீங்க ரெண்டு பேரும் 'சுந்தர் விலாஸ்'ல தான் ஸ்டே பண்ண போறீங்கனு கூட எனக்குத் தெரியும் … " என்றான் ஷ்யாம் சிரிப்பினூடே.

"என்ன உளறல் இது?? நா இப்போ உங்க கூட கதை அடிக்கிற மூட்-ல இல்லை மிஸ்டர்…" என்றவளோ 'வா ஆர்வி போகலாம்..' என்று அரவிந்த்தை அழைக்க, அவனோ ஆடாமல் அசையாமல் நின்றிருந்தான் திகைப்பில்.

எவ்வளவு அழைத்தும் சற்றும் அசையாமல் நின்றிருந்த நண்பனைக் கண்டவளோ, "டேய் எருமை… என்னடா எக்ஸிபிஷன்ல வச்ச மெழுகு பொம்மை மாதிரி நிற்கிற… வா போகலாம்.." என்று உலுக்க.

அந்த உலுக்கலில் சுயநினைவிற்கு வந்தவனோ, " எங்கே போகலாம்??அண்ணா கூட அவன் வீட்டுக்கா??" என்றான் நக்கலாக.

" அங்க நாம எதுக்குடா போகணும்… நம்ம வீட்டுக்கு போகலாம் வா… அத்தைக்கும் மாமாவுக்கும் வேற மார்னிங் நாலு மணிக்கு ஃபிலைட்! சீக்கிரம் எழும்பனும்! வாடா..."

"நம்ம வீட்டுக்கா?? அவன் சொன்னதை முதல்ல முழுசா கேட்டியா நீ??"

"அப்படி என்ன சொன்னாரு உங்க நோண்ணன்??"

"நாம ரெண்டு பேரும் 'சுந்தர் விலாஸ்'க்கு போறோம்! இன்னுமா புரியல உனக்கு? நம்மளோட சஸ்பென்ஷனுக்கு நமக்கான பனிஷ்மெண்ட்டா நம்ம வீட்ல இதை ஏற்பாடு பண்ணியிருக்காங்க.." - ஆர்வி.

"அது எப்படி.. நம்ம பெர்மிஷன் இல்லாம அவங்களா முடிவெடுக்க முடியும்??" என்றவளோ சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய அத்தை சகுந்தலாவிற்கு அழைக்க.

அழைப்பு இணைக்கப்பட்ட மறுவினாடி,"அபி! உன் ட்ரெஸ்சையும் ஆர்வியோட ட்ரெஸ்சையும் ஷ்யாம் வீட்டுக்கு அனுப்பிட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் இன்னும் மூன்று மாததிற்க்கு அங்கேதான் இருக்க போறீங்க… நானும் மாமாவும் நாளைக்கு காலைல ஃபிலைட்ல கிளம்புறோம். ஆர்விவோட அம்மாவும் அப்பாவும் செகண்ட் ஹனிமூன்காக 'சுவிட்சர்லாந்' போறாங்க… அதுனால அவங்களை தொந்தரவு பண்ணாம சமத்தா இருங்க.. பை! பை!" என்று ஒரே மூச்சாகப் பேசிய சகுந்தலா இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

தன்னிடம் எவ்வித கருத்துக்களையும் கேட்காமல் தானாகவே முடிவெடுத்த அத்தையின் மீதிருந்த கடுப்பை போக்க.. நேரே ஆர்வியின் முன் சென்ற அபியோ, "இந்த வயசுல ஆண்ட்டிக்கும் அங்கிள்க்கும் செகண்ட் ஹனிமூன் ரொம்ப அவசியமாடா ஆர்வி??" என்றாள் காதில் புகைவராத குறையாக.

"என்னது?? செகண்ட் ஹனிமூன்னா??"

"ஆமா… அதுவும் எங்கே போறாங்கன்னு தெரியுமா?? சுவிட்சர்லாந்! ப்பா ! சுவர்க்கம்டா அது…"

" அதெப்படி என்கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லாம இப்படி திடீர்னு போகலாம் அவங்க??"

"அது இப்போ மேட்டர் இல்லடா ஆர்வம்… உன் அண்ணாவோ வீடு நீலாங்கரைல தானே இருக்கு??"

"ஆமாம்.. இதை ஏன் இப்போ நீ கேக்குறா ??"

"ஏன்னா… உன்னை நா எத்தனை தடவை நீலாங்கரை பீச்சிற்கு கூட்டிக்கொண்டு போகச் சொன்னேன்.. உன் அண்ணா வீடு இருக்க ஏரியான்னு ஒருதரம் கூட என்னை நீ அங்கே கூட்டிகிட்டு போகல…"

" இப்போ ஏன்டி சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசிட்டு இருக்க??"

"இருக்கே! சம்பந்தம் இருக்கே! உன் அண்ணனோட வீடு நீலாங்கரைல இருக்கிற ஒரே காரணத்துக்காக அங்க போக இந்த அபி சம்மதிக்கிறாடா..." என்று கூறியவளின் தலையில் குட்டிய ஆர்வியோ,

"பீச் தானே போகணும் உனக்கு?? நா கூட்டிகிட்டு போறேன்.. அற்பத் தனமா ஒரு பீச்சுக்கு ஆசைப் பட்டு அங்கே போகணும்னு சொல்லாதடி.." என்றான் கடுப்புடன்.

அதுவரையில் அவர்கள் இருவருக்கும் தனிமையளித்து சற்று தள்ளி நின்றிருந்த ஷ்யாமோ, "உங்க டிஸ்கஷன் முடிந்ததா?? ஷால் வீ கோ நவ்??" என்றபடியே இவர்களின் அருகில் வர,

"யா!யா! முடிந்தது… வாங்க நாம போகலாம் ஷ்யாம்.. எனக்கு அங்க வர டபுள் ஓகேதான்.." என்றபடியே காரை நோக்கித் துள்ளிக்கொண்டு ஓடியவளைத் தடுத்து நிறுத்தியவனோ, அவள் கைகளிலிருந்த அலைபேசியை பிடுங்கிக்கொள்ள… சமத்தாகத் தனது அலைபேசியையும் ஷ்யாமின் கைகளில் திணித்திருந்தான் ஆர்வி.

தனது கைகளிலிருந்து அலைபேசியைப் பறித்த ஷ்யாமையே புரியாத பார்வை பார்த்துக்கொண்டிருந்த அபியை நோக்கிய ஆர்வியோ, "இனி நமக்கு ஃபோன் கிடையாது.. லாப் கிடையாது… என்டர்டைன்மெண்ட்-ன்னு எதுவுமே கிடையாது… ஒரு பீச்சுக்கு ஆசைப்பட்டு லைஃப்-அ தொலைச்சிட்டியே அபி.." என்றான் நக்கலாக.

"என்ன கொடுமைடா இது? இதையெல்லாம் நீ சொல்லவே இல்லையே"

"நீ எங்கே சொல்ல விட்ட.." என்ற ஆர்வியின் வார்த்தைகளைக் கேட்டதும், 'கொஞ்சம் அவசரபட்டுவிட்டோமோ' என்று தாமதமாக எண்ணியவளின் சிந்தனையைக் கலைக்கும் விதமான ஒலித்தது ஷ்யாமின் குரல்.

" அபி! சுந்தர் விலாஸ்ல நீங்க இருக்கப் போற இந்த மூன்று மாதமும்.. யூ டோன்ட் ஹவ் பர்மிட் டு அக்சஸ் யூர் ஓன் எலக்ட்ரானிக் கேஜெட்ஸ்… நாளைக்கே உங்களுக்கும் ஆர்விக்கும் புது மொபைல் ஃபோன் அண்ட் லாப்டாப் வந்திடும்.. இனி அதைத்தான் நீங்க யூஸ் பண்ணனும்..அதுவும் ஒன்லி ஃபார் ஆஃபீஸியல் யூசேஜ்… தென்.. நாளையிலிருந்து ஆர்வி கூட சேர்ந்து நீங்களும் ஆஃப்பீஸ் வரப்போறீங்க.. அங்க உங்களுக்கு என்ன வேலை மத்த டீடெயில்ஸ் எல்லாம் அப்புறம் சொல்லுறேன்.. " என்று நிதானமாக ஒவ்வொன்றாய் ஷ்யாம் கூறிக்கொண்டிருக்க, அதையெல்லாம் காதில் கூட வாங்காமல் நின்றிருந்தாள் அபி.

எங்கே, அவள் தான் ஷ்யாம் கூறிய 'own gadgets not allowed' என்ற வார்த்தையிலேயே ஸ்தம்பித்து நின்றுவிட்டாளே! பிறகு எங்கிருந்து அவன் கூறிய மற்ற விஷயங்களைக் கவனிப்பது.

ஷ்யாம் கூறியவற்றை எல்லாம் கேட்டும் கேட்காமல் வெறும் தலையை மட்டும் ஆட்டி கவனிப்பது போல் பாவனை செய்துகொண்டிருந்தவளின் உடல் மட்டும் அங்கிருக்க, மனமோ தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட தனது ஆறாவது விரலான அலைபேசியின் பிரிவை எண்ணி சோக கீதம் வசித்துக்கொண்டிருந்து.

"நான் இங்கே.. நீயும் அங்கே..

இந்த தனிமையில் நிமிஷங்கள்
வருஷமாவதேனோ??"

*********************

தனது எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்தவளோ, "அபி… இறங்கு.. வீடு வந்திடுச்சு…" என்ற ஆர்வியின் அழைப்பில் சுயத்திற்கு வந்தாள்.

நீலநிற விளக்கொளியில் சுவர்க்கம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த வீட்டையும், அதைச் சுற்றியிருந்த அழகான சின்ன தோட்டத்தையும் கண்டதும் ஏனோ பிடித்துவிட்டது அவளுக்கு.

அதிலும், எப்போதும் இன்னிசையெனக் கேட்டுக்கொண்டிருந்த அலை கடலின் ஓசையும், மேனியை இதமாக வருடிச் சென்ற கடல் காற்றும், அதில் லேசாகக் கலந்திருந்த உப்பு வாடையும் புத்துணர்ச்சி அளிப்பதாகவே இருக்க, அவளையும் அறியாமல் அவள் இதழ்கள் முணுமுணுத்தன 'உப்பு காத்துல.. இது பன்னீர் காலமா?..' என்ற வரிகளை.

முகத்தில் பூத்த குறுநகையுடன், கண்களை அகல விரித்து லயிப்புடன் அவ்விடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவளின், காதோரம் குனிந்து "வெல்கம் ஹோம் அபி! ஹோப் யூ லைக் திஸ் ப்ளேஸ்.." என்றான் ஷ்யாம், வசீகரிக்கும் குரலில்.

செவிகளில் தீண்டிச் சென்ற அவனது கம்பீர குரலும், கழுத்து வளைவில் பட்டுக்கொண்டிருந்த அவனது வெப்ப மூச்சுக் காற்றும் அபியின் மேனியைக் கூசி சிலிர்க்கச் செய்ய... கன்னங்கள் சிவக்க நின்றிருந்தவளோ.. மெல்லத் தன்னை கட்டுக்குள் கொண்டுவந்து,

"ரொம்பவே பிடிச்சிருக்கு மிஸ்டர்.ஷ்யாம்! இந்த மாதிரி இடத்தில் ஃபோன் இல்லாமல் தாராளமாகவே வாழ்ந்திடலாம்.." என்று உற்சாகமாகவே கூற, இருவரும் வீட்டினுள் சென்றனர்.

"வாசல்ல இருந்து உள்ள வர இவ்வளவு நேரமா மேடம் உங்களுக்கு??" என்றபடியே மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்தான் ஆர்வி.

அதுவரையில் இருந்த ஒரு வித மோன நிலை கலைந்து, தனது இயல்பிற்குத் திரும்பியிருந்த அபியோ "மேலே என்னடா பண்ணிக்கொண்டிருந்த??" என்றாள் ஆர்வமாய்.

" அங்கே தான்டி என் ரூம் இருக்கு… இதோ கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்க லெஃப்ட் சைட் ரூம் தான் இனி உன்னோட ரூம்… மாடியில் இருக்க ஈஸ்ட் ஃபேஸிங் ரூம் ஷ்யாம் அண்ணாவோடது.." என்றான் ஆர்வியும் விளக்கமாக.

"எனக்கு கிரவுண்ட் ஃப்ளோர் ரூம் வேண்டாம் ஆர்வி!! ப்ளீஸ்! எனக்குக் கடலை பார்க்கணும் … அதுக்கு மாடி ரூம் தான் சரியா இருக்கும்.. உன்னோட ரூம்மை எனக்கு தாடா… " என்று மூக்கை சுருக்கி சிறுபிள்ளையெனக் கொஞ்சும் குரலில் கேட்ட அபியின் கோரிக்கைக்கு ஆர்வி பதிலளிக்கும் முன்னே பதிலளித்திருந்தான் ஷ்யாம்.

"நோ வே அபி! ஆர்வியோட ரூம் அண்ட் என்னோட ரூம் ரெண்டும் சிங்கிள் டோர் மூலமா கனெக்ட் ஆகி இருக்கும். சோ, நீ இப்போ கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்க ரூம்லையே அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு மார்னிங்.. ஆர்.. ஈவினிங் குள்ள உனக்கு மாடியில் ரூம் ரெடி பண்ணிடலாம்.." என்றான் ஷ்யாம் பொறுமையாய்.

"ப்ளீஸ் ஷ்யாம்… நா அந்த டோர் யூஸ் பண்ணவே மாட்டேன்..ப்ரோமிஸ்.. ஆர்வி கீழேயே இருந்துப்பான்.. எனக்கு அந்த மாடி ரூம் தான் வேணும்.."

பிடிவாதமாக எப்படியோ அடம்பிடித்து ஒருவழியாக ஷ்யாமின் அறைக்குப் பக்கவாட்டிலிருக்கும் அறையை தன்னுடைய அறையாக மாற்றிக்கொண்டவளோ, குதூகலமாக அறையினுள் நுழைய..

அந்தோ! பரிதாபம்! அந்த அறையில் அவள் ஆசைப்பட்டது போல் பால்கனி ஏதுமில்லாமல் போகவே, உச்சக்கட்ட கடுப்புடன் ஆர்வியின் அறையை நோக்கிச் சென்றாள்.

"டேய் ஆர்வி!! அந்த ரூம்ல பால்கனி இல்லைன்னு ஏன்டா நீ சொல்லலை??"

திடுமென தன் அறையினுள் வந்தவளைக் கண்டு திகைத்தவனோ, மறுநொடியே சிரித்திருந்தான், அவள் கேள்வி கேள்வியில்.

"ஹாஹா.. அப்போ நீ இங்க வரச் சம்மதம் சொன்னது! மாடி ரூம் தான் வேணும்னு அடம் பண்ணினது! எல்லாமே அந்த 'sea facing view'-காக தானா??" என்றான் சிரிப்பினூடே.

"சிரிக்காதேடா! எத்தனை தடவை கேட்டேன் உன்னை… நீலாங்கரை ரிசார்ட்டிற்கு கூட்டிட்டு போகச் சொல்லி… நீ கடைசிவரை கூட்டிட்டு போகலை… அதான் இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கவும் நானும் உடனே வந்துட்டேன்… ஆனா, இப்போ அதுக்கும் பல்ப் கொடுத்தா நா என்ன பண்ணட்டும்…" என்று அழும் குரலில் கூறியவளைக் கண்டு சிரிப்பு தான் வந்தது ஆர்விக்கு.

அபி இப்படி அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து மாடி அறைக்குச் சென்றதெல்லாம் எதிறக்காக?? 'sea facing view'-வில் ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வதற்காக மட்டும்தான். அதற்காகத் தான் ஆர்வியை பல மாதங்களாக இங்கு அழைத்துவர அவள் கேட்டதும்.

இன்று அபி ஆசைப்பட்டது போலவே அனைத்தும் கைகூடி வரும் வேளையில், அவள் தங்கிய அறையில் பால்கனி இல்லையென்றால் அவள் டிசப்பாயின்ட்மெண்ட் ஆவதும் இயல்பு தானே!

"சரி! ரொம்ப ஃபீல் பண்ணாத… நா ஒரு ஐடியா தரேன்.. அதைப் பண்ணு நல்லா ஒர்க்கவுட் ஆகும்.. நீ இருக்க ரூம்ல இருந்து என் அண்ணனோட ரூமிற்கு போற கதவு மூலமா அவன் ரூமூக்கு போ.. எப்படியும் நீ 'ஏர்லி மார்னிங்' தான் ரீல்ஸ் பண்ணுவ.. சோ, அவன் எழும்முன்னே நீ அங்க போயிடு.." என்ற ஆர்வியின் ஐடியாவை கேட்ட மறுநொடி சிட்டாக அவ்விடத்தை விட்டுப் பறந்துவிட்டாள் அபி.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழும்பி தயாராகி நாலரை மணிக்கு, அவள் அறையையும் ஷ்யாம் அறையையும் இணைக்கும் கதவை மெல்லச் சத்தம் வராமல் திறந்து, ஷ்யாமின் அறையினுள் சென்றவளோ, "அய்யயோ! ஷ்யாம் நானும் உள்ளே இருக்கேன்…" என்று கத்தியிருந்தாள் கண்களை இறுக்க மூடியவாறு.

அப்போது தான் குளியலறையிலிருந்து வெளியே வந்த ஷ்யாமோ, உடை மாற்றுவதற்காக, இடுப்பில் கட்டியிருந்த டவலை கழட்டப் போக, சரியாக அந்நேரம் தனக்குப் பின்புறமிருந்து கேட்ட அபியின் குரலில் திகைத்துத் திரும்பியவனின் பார்வையில் பட்டாள் கண்களை இறுக்கமூடியிருந்த அபி.

"ஷிட்… நீ எப்போ உள்ளே வந்த?? அந்த டோர் யூஸ் பண்ண கூடாதுனு சொன்னேன்ல.." சீற்றமாக வெளிவந்தது அவனது குரல்.

ஒரு பெண்ணின் முன்பு இப்படி அரைகுறை ஆடையுடன்.. இல்லை.. இல்லை… வெறும் துண்டுடன் நிற்கிறோமே என்ற எண்ணமே ஷ்யாமை 'ஷேம்-ஷேமாக' ஃபீல் ஆக்கியது.

ஷ்யாமின் சீற்றமான குரலைக் கேட்டு, கண்களை மெல்லத் திறந்தவளோ, அவனின் மேற்சட்டையற்ற அந்த படிக்கட்டு தேகத்தை 'பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது' போலவே வெறித்துப் பார்த்து வைக்க, அவளருகே வந்தவனோ "கேட்ட கேள்விக்குப் பதில் இன்னும் வரலை அபி…" என்றான் அதே சீற்றமான குரலில்.

ஆனால், குரலிலிருந்த சீற்றம் கண்களில் துளியுமில்லை, மாறாக அவளைக் காணும்போது மட்டுமே ஏற்படும் சுவாரஸ்யம் குடிகொண்டன அவன் விழிகளில்.

"அ...அது வந்து…ஷ்யாம்... நீங்க இவ்வளவு சீக்கிரம் குளிப்பீங்கன்னு எனக்குத் தெரியாது…"

"வாட்??"

"அது.. பால்கனி… இல்லை.. ரீல்ஸ்… ம்ப்ச்.. சாரி!சாரி! ஷ்யாம்.. உங்க பிரைவட் ஸ்பேஸுக்கு உங்களோட அனுமதியில்லாமல் வந்தது என்னுடைய தப்புதான்.. சாரி ஷ்யாம்.. இனி இப்படிப் பண்ணமாட்டேன்.." என்றவளோ,

மீண்டும் சற்று தயங்கியவாறே, "அண்ட் ஒன் மோர் சாரி ஃபார் டூயிங் திஸ்" என்றுவிட்டு, அவன் அவள் என்ன கூறுகிறாள் என்று உணரும் முன்னே, அவனது வெற்று படிக்கட்டு மேனியைத் தீண்டியது மங்கையவளின் தளிர் விரல்கள்.

"இது வரைக்கும் நா ஒரு டைம் கூட ரியல் சிக்ஸ் பேக் பாடியை டச் பண்ணினதில்லை ஷ்யாம்! அதான் தொட்டுப் பார்க்க அசையா இருந்துச்சு.. உங்ககிட்ட கேட்டா நிச்சயம் நீங்க அலோவ் பண்ணமாட்டீங்கன்னு தெரியும்.. அதான் நானே தொட்டு பார்த்துட்டேன்… இதுக்கும் சேர்த்து சாரி ஷ்யாம்…" என்று கூறிவிட்டு ஒரே ஓட்டமாக தங்கள் அறைகளை இணைக்கும் கதவருகே சென்று மெல்லத் திரும்பியவளோ,

"ஷ்யாம்!! ரியலி யூ ஹேவ் அ வெரி குட் பேக்ஸ் அண்ட் பைசெப்ஸ்" என்று மென்னகையுடன் கூறி செல்ல, அவளது இந்த அடாவடித் தனத்தில், என்ன முயன்றும் காதோரம் சிவப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல் வெட்கத்தில் நின்றிருந்தான் அந்த ஆறடி ஆண் மகன்.

அவனை வெட்கம் கொள்ளச் செய்தவளோ, மூடிய கதவின் மீது சாய்ந்து , 'தான் தானா இது??ஒரு அந்நிய ஆண் மகனை அவன் அனுமதி இல்லாமல் தீண்டியது! இது எப்படி சாத்தியம்?? எந்த ஒரு ஆணிடமும் ஏற்படாத ஈர்ப்பு.. இவனிடம் மட்டும் எப்படி ஏற்படுகிறது.. ஒருவேளை நாம் தான் சரியில்லையோ??' என்ற தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள்.


காதலின் இதம் தொடரும்….
 
காதல் - 4

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பரவிய வெயிலின் உஷ்ணத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல், தன் எதிரே இருந்த தடாகத்தில் கண்களைப் பதித்தவாறு அந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்தாள் அபிதாஸ்ரீ.

'ஷ்யாம் குரூப்ஸ்' புதிதாக ஆரம்பிக்கப்போகும் மல்டி காம்ப்ளக்ஸின் மாதிரி வரைபடத்தை வாங்குவதற்காக 'மாதவ் கன்ஸ்டரக்ஷன்'-னிற்கு வந்திருந்தனர் ஆர்வியும் அபியும்.

இருவருக்கும் அந்த மல்டி காம்ப்ளக்ஸின் உட்கட்டமைப்பு பற்றியும், அதன் வடிவமைப்பைப் பற்றியும் விரிவாக கூறவேண்டும் என்று மாதவ்விற்கு ஷ்யாம் கூறியிருக்க.. அதை பற்றியிலான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த மாதவ்வையும் ஆர்வியையும் பார்த்துக்கொண்டிருந்த அபியால் என்ன முயன்றும் தூக்கம் வருவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே.. அங்கிருந்து தூங்கி வழிவதைவதை காட்டிலும், வரும் வழியில் கண்ட அந்த தடாகத்தைச் சென்று பார்ப்பதே மேல் என்று எண்ணியவள், ஆர்வி மற்றும் மாதவ் இருவரிடமும் கூறிக்கொண்டு வந்துவிட்டாள்.

தடாகத்தில் ஏராளமான அல்லி, தாமரை மலர்கள் பூத்துக் கிடந்தன! வாத்துகள், ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் செல்லும் காட்சியோ அழகோவியமாய் தெரிந்தது அபியின் ரசனை மிகுந்தக் கண்களுக்கு!

பரபரப்புடன் காட்சியளிக்கும் இந்த சிங்கார சென்னையில் இப்படி எழில் கொஞ்சும் இயற்கை சுழலில் ஒரு அலுவலகமா? உண்மையில் மிஸ்டர்.மாதவ் கிரேட் தான்! என்று வியப்புடன் எண்ணிக்கொண்டிருந்தவளின் கவனத்தை ஈர்த்தது அருகிலிருந்த புறாக்கூட்டம்.

அதில் இரண்டு புறாக்கள் மட்டும் தனித்துத் தெரிந்தது அபியின் கண்களுக்கு. அவை இரண்டும் ஊடல் கொண்ட காதல் ஜோடி போலும்! ஒன்று அவள் புறமாகத் திரும்பியிருக்க, மற்றொன்றோ அப்படியும் இப்படியுமாகப் பறந்து பறந்து அந்த திரும்பியிருந்த புறாவின் கவனத்தை தன் வசம் ஈர்க்க முயன்றுகொண்டிருந்தது.

அனேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கும் புறா பெண் புறாவாக தான் இருக்கும்! என்று எண்ணியவளின் இதழ்களில் குறுநகை தோன்ற, கண்கள் ரசனையில் மிதக்க அந்த புறாக்களின் சேட்டைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் முகத்தில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளைக் கைக்குட்டையால் துடைத்தது ஒரு கரம்.

“யாரிது??” என்று யோசித்தவாறே கைக்குட்டை தாங்கிய அக்கரத்தைத் தொடர்ந்து மேலேறிய அபியின் விழிகள் விரிந்தன ஆச்சரியத்தில், அங்கு நின்றிருந்த ஷ்யாமினை கண்டு.

"ஷ்யாம்!! நீங்க எங்கே இங்கே??" குரலில் அப்பட்டமான ஆச்சரியத்துடன் வினவினாள் அபி.

" மீட்டிங் முடிச்சிட்டு இந்த வழியா தானே போறோம்... அப்படியே உங்களையும் 'பிக்கப்' பண்ணிக்கலாம்னு வந்தேன்.." என்று ஷ்யாம் கூறிக்கொண்டே அவளருகில் அமர, நொடிப்பொழுதில் கல் இருக்கையின் இருபுறமும் கால்களைத் தொங்கவிட்ட படி அவன் புறமாகத் திரும்பி அமர்ந்தவளோ,

" ரொம்பத்தான் அக்கறை… நாலு கிலோமீட்டர் நடக்க விட்டுவிட்டு.. இப்போ கூட்டிகொண்டு போக வந்தாராம்… ம்கூம்.." என்று கழுத்தை நொடித்தவளின் தலையை மெல்லமாகப் பிடித்தவனோ,

"ஹே!! கழுத்து சுளிகிக்க போகுது பாத்து.." என்றான் இதமாக.

"ரொம்ப நல்லவரு மாதிரி ஸீன் போடாதீங்க ஷ்யாம்.. அன்னைக்கு உங்களை நான் டச் பண்ணினதுக்காக தானே இந்த ஒன் வீக்-கா எங்களுக்கு நிறையக் கஷ்டமான வேலையா தரீங்க?? இன்னைக்கும் நாலு கிலோமீட்டர் நடந்தே இங்க வர சொன்னீங்க.. பார்க்க நல்லா இருந்தா மட்டும் பத்தாது.. மனசும் நல்லா இருக்கனும்..ரொம்ப மோசமான ஆளு நீங்க… போங்க.." என்று கோபமாகக் கூறியவளோ அங்கிருந்து எழுந்துபோக முயல.. அவள் கைகள் பற்றி நகர முடியாமல் செய்திருந்தான் ஷ்யாம்.

"நான் மோசமான ஆளா?? ஓகே ஃபைன்! யாரோ வெயிட் லாஸ் பண்ண வாக்கிங் போக போறேன்னு சொன்னாங்க … அதுக்கு உதவி பண்ணலாமேன்னு பண்ணா.. என்னையவே மோசமான ஆளுன்னு சொல்லுறாங்க.. டூ பேட்.." என்றான் ஷ்யாம் சிரியாமல் சீரியஸ் டோனில்.

"உங்க ஹெல்ப் யாருக்கும் வேண்டாம்.. நான் டயட் அப்பறம் மார்னிங் வாக்கிங் போய் வெயிட் லாஸ் பண்ணிப்பேன்…" என்றவளோ மீண்டும் எழுந்துகொள்ள முயல, விடாக்கண்டன் கையை விட்டால் தானே!! இறுக்க கைகளைப் பற்றியவாறே அமர்ந்திருந்தான் அவன்.

"கையை விடுங்க ஷ்யாம்…"

"இந்த உச்சி வெயில்ல இங்க உட்கார்ந்து அப்படி என்னதான் பார்த்துகிட்டு இருந்த??"

'ங்ஞே…' இது என்ன சம்பந்தமே இல்லாத கேள்வி என்று புரியாமல் பார்த்தாலும், பதிலளிக்க தவறவில்லை அபி.

"அதோ! அங்கே இருக்கே அந்த கியூட் புறா ஜோடியோட ஜாலி லவ்-ஸ தான் பார்த்துகிட்டு இருந்தேன்.." என்றாள் துள்ளலுடன்.

"ஓஹோ!!" என்றபடியே அப்புறா கூட்டத்தைப் பார்த்தவனோ, " இந்த புறாகளோட காதல் உண்மையிலேயே ரசனையானது தான் அபி!!" என்றான் மென்மையாய்.

ஏன் இவன் குரலில் இத்தனை மென்மை?? என்று எண்ணிய அபியோ,

" உங்களுக்கு அதை பற்றியெல்லாம் கூட தெரியுமா ஷ்யாம்?? " என்றாள் ஆவலே உருவாய்.

"ம்ம்.. எல்லாம் கூகிள் ஞானம் தான்" என்றான் சன்னச் சிரிப்புடன்.

"அப்போ.. சொல்லுங்களேன் கேட்போம்.." என்று அபி கேட்க, அவனும் ஆழ்ந்த குரலில் பதில் கூறலானான்.

பொதுவாகவே, மூன்று மாத வயதை அடைந்த ஆண் மற்றும் பெண் புறாக்கள், அடுத்து வரும் வசந்த காலத்திற்குச் சற்று முன்னதாக தங்களது இணையைத் தேடத்தொடங்குமாம். அதுவும் கண்டதும் இவை காதல் வயப்படுவதில்லை.. ரொம்பவே அலசி! ஆராய்ந்து! தான் தன்னுடைய இணையைத் தேர்வு செய்யும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட இணையிடம் முதலில் சினேகம் காட்டும்! பின் அந்த சினேகம் ஆழ்ந்து அது காதலாகும்..

பெண் புறாவைக் கவர்வதற்காக ஆண் புறா சுவை மிகுந்த நல்லிரையைக் கொண்டு வரும். பெண்புறா தம் இறக்கைகளை யாசகம் கேட்பது போன்ற தொனியில் பட படத்து இரையைக் கேட்கும். இப்படி இரையூட்டியவுடன், எல்லாம் சுகமே! அந்த அற்புதமான காதலைக் கொடுத்த ஆண்புறாவை பெண்ணும், பெண் புறாவை ஆணும் ஆயுள் முழுவதும் பிரிய விரும்புவதில்லை.

இந்த ஜோடி ஒவ்வொரு வசந்த காலத் தொடக்கத்திற்கு முன்பும், ஏதோ புதிதாகக் காதலிப்பது போல, காதலை மறு அங்கீகாரம் செய்து மீண்டும் மீண்டும் தன் இணையிடமே காதல் கொண்டு மகிழும். அந்த இணை பிரிந்ததும் .. தானும் ஊன் உறக்கம் அற்று தன்னுயிரையும் மாய்த்துக்கொள்ளும் ஓர் அழகிய காதல் ஜீவன்!!

ஷ்யாம் கூற கேட்டுக்கொண்டிருந்தவளுக்கோ ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்க.. அதைத் துடைத்தவனோ,

"அபிமா.. இதற்கெல்லாம் அழலாமா?? ஜஸ்ட் ரீலாக்ஸ்.. " என்றான் கனிவாய்.

"ஹி..ஹி.. சாரி ஷ்யாம் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.. பட் உண்மையாவே இதுங்க காதல் கிரேட் தான்ல.." என்றவளோ, அதன் பிறகு ஷ்யாமுடன் பேசியவை அனைத்தும் ஸ்வீட் நத்திங்ஸ் தான். என்ன பேசினார்கள் என்பதே நினைவில்லாத அளவிற்குச் சகலத்தையும் பேசியிருந்தனர் இருவரும்.

முழுதாக நாற்பத்தைந்து நிமிடங்கள் கழித்து வந்த ஆர்வியை அழைத்துக் கொண்டு மாதவ்விடமும் விடை பெற்றுக்கொண்டு ஷ்யாமின் கார் அவனது வீட்டை நோக்கிப் பயணிக்க...

அதுவரையில் இருந்த சுகமான மனநிலை மாறி, 'சரியான மாயக்காரன்.. பக்கத்துல வந்தாலே நா நானா இருக்க மாட்டேங்குறேன்.. நாலு கிலோமீட்டர் நடக்கவைத்தவன் கிட்டையே நாற்பத்தைந்து நிமிஷமா சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்திருக்கேன்.. இனி அவன் பக்கத்திலேயே போகக் கூடாது..' என்று தன்னை தானே திட்டிய படியே சபதம் எடுத்துக்கொண்டாள் அபி.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் தனது அறைக்குள் அடைந்தவள், தன்னை இன்று அவ்வளவு தூரம் நடக்க வைத்தவனை எப்படி எல்லாம் பழிவாங்கலாம் என்பதை நான்கு மணிநேரமாக யோசித்து அதைக் குறித்தும் கொண்டு, இரவு உணவு உண்பதற்காகக் கீழிறங்கி வரவும், ரமா அக்கா செய்து வைத்திருந்த சிக்கன் மயோனீஸும் பிரியாணியும்.. அவளை வரவேற்றது.

பிரியாணியைப் பார்த்த மாத்திரத்தில் குடுகுடுவென ஓடிச் சென்று உணவு மேஜையில் அமர்ந்தவளோ, அதைத் தட்டு முழுவதும் நிரப்பிச் சாப்பிட ஆரம்பிக்கையில் அங்கு வந்து சேர்ந்தனர் ஆர்வியும் ஷ்யாமும்.

அதுவும் அபியின் எதிரில் அமர்ந்த ஷ்யாமோ, 'இது தான் உன் டயட்டா?' என்பது போலவே பார்த்து வைக்க.. பொங்கிவிட்டாள் அபி.

தன் கையிலிருந்த பிரியாணி தட்டை ஆர்வி பக்கம் தள்ளியவளோ.. "உனக்கு பிடிச்ச பக்குவதுல இருக்கான்னு டேஸ்ட் பண்ணேன்டா.. அதே மாதிரி தான் இருக்கு.. இல்லனா.. நா போய் இவ்வளவு களோரிஸ் இருக்க இந்த பிரியாணியை தோடுவேணா.. ச்சே.. ச்சே.." என்று பந்தாவாகக் கூறியவளோ, முகத்தை அஷ்ட கோணலாகச் சுளித்த படியே 'வெஜிடேபிள் சாலட்டை' உண்டு முடித்துவிட்டு தோட்டத்தை நோக்கிச் செல்ல.. அவளது சிறுபிள்ளைத் தனமான செயல்களைக் கண்டு புன்னகை கூட எட்டிப் பார்த்தது ஷ்யாமிற்கு.

தானும் உணவை முடித்துக்கொண்டு எழுந்த ஆர்வியோ, வெறும் சாலட்டை மட்டுமே உண்டுவிட்டுச் சென்ற அபியை வெறுப்பேற்றும் விதமாக குலாப் ஜமூன் கிண்ணத்துடன் தோட்டத்தை நோக்கிச் செல்ல, அவன் கண்களில் பட்டாள் சோகமே உருவாய் அமர்ந்திருந்த அபி.

"உனக்கு எதுக்கு-டி இந்த பில்ட்டப் எல்லாம்… இப்போ யாருக்கு லாஸ்… உனக்கு தானே… என்ன டேஸ்ட் தெரியுமா பிரியாணி..??" என்று சப்பு கொட்டுவது போல் பாவனை செய்தவனோ, அதற்கு அபியிடமிருந்து அவன் எதிர்பார்த்த எதிர்வினை வராமல் போகவே, அவள் அருகில் அமர்ந்து.. "அபி என்னடா.." என்றான் வாஞ்சையுடன் அவள் தலையில் மென்மையாகத் தடவியபடியே.

"எனக்கொரு உதவி பண்ணுவீயா ஆர்வி??"

"ஹே!! என்ன?? உதவி அது இதுன்னு பேசிட்டு.. என்ன செய்யணும்னு சொல்லு செய்றேன்.."

"பேச்சு மாறமாட்டியே??"

"ஏன்டி இப்படி கேக்குறா? ஏதும் ஏடாகூடமான வேலை பண்ணி வச்சியிருக்கியா என்ன?? "

"ச்சே!ச்சே!"

"பின்னே??"

"அது… அதுவந்து.. நீ ஜீவா கிட்ட பேசணும் ஆர்வி…" என்றாள் தயங்கிய படியே.

"அதுமட்டும் என்னால சத்தியமா முடியாது அபி… நீ வந்து சாப்பிடு… அந்த சாலட் பத்தாது உனக்கு.."

"ப்ளீஸ் டா … நா அவனை திட்டிட்டேன்.. என் கால்ல எடுக்க மாட்டேங்குறான்… நீ பண்ணா நிச்சயம் எடுப்பான்… எனக்காக பண்ணுடா .. ஆர்வி ப்ளீஸ்டா ஜீவாகிட்ட பேசுடா…"

"அதுமட்டும் நிச்சயம் முடியாது அபி!!" என்று கூறிய ஆர்வியோ கோபத்தை கட்டுப்படுத்தும் விதமாகத் தனது கைகளை இருக்க மூடியவன், திரும்பியும் பாராமல் வீட்டினுள் செல்ல,

"டேய்… நீ அவனுக்குக் கால் பண்ணுற வரைக்கும் நா சாப்பிடவே மாட்டேன்டா… ஆர்வம் நல்லா கேட்டுக்கோ… என் பானை வயிறு எவ்வளவு சாப்பிடும்னு உனக்கே தெரியும்.." என்று வேகமாகக் கூறியவளோ ஆர்வியை முந்திக்கொண்டு தனது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

'பிரியாணியை நினைக்காதே! நினைக்காதே!' என்று அதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தவளிற்கு எவ்வளவு முயன்றும், பிரியாணியைக் கேட்டு அலறும் வயிற்றைச் சமாளிக்க முடியாமல் போகவே, மெல்லப் பூனை போல் பதுங்கி பதுங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து நடந்து கிச்சனிற்குள் சென்று, தனது மொபைல் ஃபோனின் டார்ச் வெளிச்சத்தைப் பயன்படுத்தி பிரியாணியைத் தட்டில் போட்டு, ஹெட் ஃபோன்ஸை காதில் மாட்டிக்கொண்டு, தனது ஃபோனில் 'டர்கிஷ் சீரீஸ்சை - turkish series' பார்த்துக்கொண்டே நின்றவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தவளோ… திடீரென்று கீச்சனில் பரவிய வெளிச்சத்தைக் கண்டு பதறி ஒரு கையில் பாதி தின்ற சிக்கன் பிஸுடனும், மறு கையில் ஃபோனுடனும் திரும்ப… அங்கே கைகளைக் கட்டியவாறு நின்றிருந்தான் ஷ்யாம்!

"ஷ்யாம்!! நீங்களா??" என்ற அபியின் முகத்தில் தோன்றிய பாவனையைக் கண்டு உண்டான சிரிப்பை மிகவும் சிரமப்பட்டுக் கட்டுப் படுத்தியவனோ, " இதான் உனக்கு டைனிங் ஹால்லா??" என்று அழுத்தமாய் கேட்டபடியே அவளை நெருங்க.

அபியோ, 'அய்யயோ!! கிட்ட வாறானே.. நா வேற இவன் பக்கத்துல இருந்தாவே.. நானா இருக்க மாட்டேனே!! அபி.. பீ கண்ட்ரோல்! பீ கண்ட்ரோல்!' என்று தனக்கு தானே கூறிக்கொண்டே, "ஷ்யாம்! போதும் கிட்ட வராதீங்க.. ஸ்டாப்" என்றாள் தற்காப்பாய். அவளிடமிருந்து அவனைக் காப்பதற்காக.

அபி கூறி கேட்பவனா ஷ்யாம்?? அதிலும் இந்த விஷயத்தில்! 'நிச்சயமாக இல்லை' என்று கூறும் விதமாக மேலும் அவளருகில் சென்று ஒருவர் மூச்சுக் காற்று மற்றொருவர் மீது படும் அளவிற்கு நெருங்கி நின்றவனோ,

"நாளைக்கு ஆர்வி கூட பார்க் போறீயாமே வாக்கிங்.. அப்படியா??"

"ம்.. ஆமா.. நீங்கக் கொஞ்சம் தள்ளி நில்லுங்க முதல்ல.." என்று அபி கூற, வேண்டுமென்றே அவளை இன்னும் நெருங்கியவனோ,

"நாளைக்கு உன்னை வாக்கிங் நா கூட்டிகிட்டு போறதா டிசைட் பண்ணிட்டேன்.." என்றான் ஆழ்ந்த குரலில்.

"எதே.. நீங்களா… வேண்டவே வேண்டாம் சாமி...அங்க உள்ள கேர்ள்ஸ் எல்லாம் உங்களைப் பார்த்தா அப்படியே மயக்கம் போட்டிடுவாங்க… " என்றாள் சீரியசாய்.

அபியின் பேச்சைக் கேட்டு பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தவனோ, "ஹாஹா… டூ ஃபன்னி.. பீ ரெடி அட் மார்னிங் 5'o கிளாக் ஃபோர் அ வாக் அபி" என்று கூறியபடியே, அவள் இதழோரம் ஒட்டியிருந்த மயோனீஸை துடைத்தவனோ, அவள் கைகளிலிருந்த பாதி தின்ற சிக்கன் பீஸை எடுத்துச் சாப்பிட்டவாறே குறுநகையுடன் மாடியேறினான் ஷ்யாம்.

அவன் தீண்டிச் சென்ற இதழ்களை மெல்லத் தடவிய படியே, தன் கையிலிருந்த சிக்கன் பீஸை அபேஸ் செய்து சாப்பிட்டுவிட்டுச் செல்பவனையே 'அட மலைக்குரங்கே..' என்றபடி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அபி.


காதலின் இதம் தொடரும்…



eiMWA2I87789.jpg
 
Last edited:
காதல் - 5

சிகப்பு நிற டி-ஷர்ட், கருநீல ட்ராக்ஸ், கால்களில் சாம்பல் வண்ணம் ஷூ, கைகளில் கட்டிய கருப்பு நிற ஸ்மார்ட் வாட்ச், கழுத்தில் தொங்கிய ப்ளூடூத் ஹெட் செட் சகிதம் ஷ்யாமிடம் அனுமதி வாங்காமல், தன் அறையலிருக்கும் கதவின் வழியே அவன் அறைக்குள் நுழைந்தாள் அபி.

அங்கோ! ஷ்யாம் அன்று போலவே இன்றும் குளியலறையிலிருந்து துண்டுடன் வெளியில் வர, அதைப் பார்த்த மாத்திரத்தில் கண்களை மூடியவாறு மறுபுறம் திரும்பியவளோ,

"வாக்கிங் போகலாம்னு சொல்லீட்டு.. இன்னும் கிளம்பாம இருக்கீங்க?? நா ஹால்ல வெய்ட் பண்றேன் சீக்கிரம் வாங்க ஷ்யாம்!" என்று கூறிவிட்டு குடுகுடுவென அவனைத் திரும்பியும் பாராமல் ஓடினாள் அபி.

சரியாக பத்து நிமிடங்கள் சென்று தனது அறையிலிருந்து வெளியே வந்தவனின் கண்களோ அபியைத் தேட… அவளோ ஹாலின் மூலையில் நின்றவாறு 'வார்ம் அப்' செய்கிறேன் பேர்வழி என்று கைகளையும் கால்களையும் நீட்டி மடக்கி விதவிதமாக வித்தைக் காட்டிக்கொண்டிருந்தாள்.

"வார்ம்-அப் எல்லாம் முடிஞ்சதுனா கிளம்பலாமா??"

"ம்.. முடிஞ்சாச்சே! நா இப்போ பக்காவா ரெடி! வாக்கிங் போகலாம் வாங்க" என்றாள் குதூகலமாய்.

அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த பூங்காவிற்கு காரில் சென்று சேர்ந்தனர் இருவரும்.

'காரில் வாக்கிங் போறாங்களா?? இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லையே இருந்திருக்கலாமே!' என்ற எண்ணம் நமக்கு எழுந்தாலும்.. வேறு வழி இல்லை.. நம் அபியின் மேக்(Make) அப்படி! நம்மால் ஒன்றும் செய்ய முடியாது! பாவம் ஷ்யாம்.. தானாக வந்து சிக்கிக்கொண்டான்.

சுமார் பதினைந்து நிமிடங்கள் நீண்ட கார் பயணம் முடிந்தது, அந்த 'கம்யூனிட்டி பார்க்கின்' வாயிலில்.

சதுர வடிவ பூங்கா அது! அதன் மத்தியில் முக்கோண வடிவில் வேலி போன்று அமைத்து அதில் பலவிதமான மரங்கள் மற்றும் கண்கவர் வண்ண மலர்களைக் கொண்ட செடிகளை வளர்ந்திருந்தனர் அதன் பாதுகாவலர்கள். அதைச் சுற்றியும் நடைப்பயிற்சி மேற் கொள்வதற்கான பாதை அமைக்கப்பட்டிருக்க… ஆங்காங்கே எளிய விதமான உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகளும் இருந்தது.

ஆக மொத்தம், காலைநேர நடைப்பயிற்சிக்கு ஏற்ற இடமாகத் தான் இருந்தது அபி தேர்ந்தெடுத்திருந்த பூங்கா.

உடலை வருடும் இதமான மரங்களின் காற்றும், அதிலிருந்து வெளியாகும் 'ஆக்சிஜன்' வாய்வும் நடைப்பயிற்சி செய்பவர்களைப் புத்துணர்வாக உணர வைத்துக்கொண்டிருக்க, இருவரும் நடைபாதையில் நடந்தனர்.

அபி, எதிரே நடந்து வரும் அனைவரிடமும் நின்று பேசிக்கொண்டே வர, ஷ்யாமின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகப் பறக்கத் தொடங்கியது.

இருக்காத பின்னே! ஆமை கூட இவர்களை விட வேகமாக நடந்து செல்லும் போல்! அபியோ, நடந்து வரச் சொன்னால் அசைந்து வந்து கொண்டிருந்தாள் அபி ஷ்யாமின் கைகளைப் பற்றிக்கொண்டு வேடிக்கை பார்த்தவாறே.

"அபி! நீ இங்கே வாக்கிங் வந்திருக்கிற நினைப்பு இருக்கா?? என்னமோ சுத்தி பார்க்க வந்த மாதிரி பராக்கு பார்த்துகிட்டு வர??"

"யார் இப்போ இங்கே வாக்கிங் வந்தது ஷ்யாம்?? எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடிக்கும்! லாஸ்ட் வீக் ஆர்வி கூட வரும் போதே நான் இந்த இடத்தை நோட் பண்ணினேன்… அதான் இப்போ உங்களோட வந்தேன்.. அங்கே பாருங்க சூரியனை… பெரிய ரெட் கலர் பால் மாதிரி எவ்வளவு அழகா இருக்கு! இந்த 'ஸ்கை வாக்கர்ல' ஆடிக்கொண்டே அதை பார்க்கிற ஃபீல் இருக்கே! ஆஹா!அற்புதம்!" என்று கூறியவாறே அபி அந்த 'ஸ்கை வாக்கர்' என்று அழைக்கப்படும் உடற்பயிற்சி சாதனத்தில் ஏறி நடப்பது போலக் கால்களை ஆட்ட, ஷ்யாமோ அவளை அங்கேயே இருக்கும் படி கூறிவிட்டு தனது ஜாக்கிங்கை தொடர்ந்தான்.

சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவளின் காதுகளில் மாட்டியிருந்த ஹெட் செட்டின் வழியே கசிந்துகொண்டிருந்த பாடலோ, அவள் இதயத்தைச் சிலிர்க்க வைக்க.. அபியின் கண்களோ அவளைச் சுற்றியிருந்த அனைத்தையும் 'அவுட் ஆஃப் ஃபோகஸில்' வைத்துவிட்டு, ஷ்யாமை மட்டுமே 'ஃபோகஸ்' செய்தவாறு இருந்தது.

'இவன் தான்..

என் இதழோடு சிரிப்பவனோ!!

என் இரவோடு விழிப்பவனோ!!

என் இமையாக துடிப்பவனோ!!

என் சுமையாக இருப்பவனோ!!

என் கூந்தல் காட்டில்

தொலைந்திடுவானோ!!

என்னைக்

கூறு போட வருபவனோ!!

இந்த சிறுக்கி

மனசை பிடித்திடுவானோ!!

என் ஆசை பொறுக்கி

ஆயுள் வரை…இவன்! இவன் தான்!...'

பாடலில் லயித்தவாறு கனவில் உழன்றுகொண்டிருந்தவளின் அருகில் வந்து சுடக்கிட்டு அவளைச் சுயநினைவிற்குக் கொண்டு வந்த ஷ்யாமோ,

"இனியாவது நடப்பியா? இல்லை இப்படியே கிளம்பலாமா?" என்றான் எதார்த்தமாக.

ஆனால், அபியோ அவன் தன்னை தான் கிண்டல் செய்கிறான் என்று நினைத்துக்கொண்டு,

"என்ன?? அதற்குள் வீட்டுக்கு கிளம்பனுமா? நோ சான்ஸ்.. உங்களுக்கு மட்டும் தான் ஜாக்கிங் பண்ண தெரியும்னு நினைப்போ? நா ஜாக்கிங் பண்ணிப் பார்த்ததில்லையே?? இப்போ பார்பீங்க பாருங்க..” என்று வீராவேசமாகக் கூறியவளோ, குடுகுடுவென ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல், வேகமாக அந்த பூங்காவை முழுவதையும் இரண்டு சுற்று சுற்றிவிட்டு ஷ்யாமிடம் வந்து 'எப்படி நம்ம ஜாக்கிங்' என்று கேட்பது போன்ற பார்வையைப் பார்த்து வைக்க, ஷ்யாமிற்கோ சிரிப்பை அடக்குவது பெரும்பாடானது.

"என்ன ரன்னிங் ரேஸ்-ஆ ஓடின??" என்றான் சிரியாமல்.

"எதே?? ரன்னிங் ரேஸ்-ஆ?? என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா உங்களுக்கு??" என்றாள் சிலிர்த்துக்கொண்டு.

"ச்சே!ச்சே! ஆனா, நீ பண்ணினதிற்கு பேரு ஜாக்கிங்கே இல்லை தெரியுமா?? ஜாக்கிங் ஒரு ஆர்ட் மாதிரி.. ஒரே சீரான வேகத்தில் ஓடனும்.. முக்கியமா நம்ம பிரீதிங்(breathing) ஸ்பீட்டை கரெக்ட் லெவல்-ல மெயின்டெய்ன் பண்ணனும்.. இல்லைனா அதுவே ஆபத்தாகிடும்.." என்றான் நிதானமாக.

"போதும்! போதும்! நிறுத்துங்க ஷ்யாம்! இந்த அபிக்கு இங்கிலிஷ்-ல பிடிக்காத ஒரே வார்த்தை அட்வைஸ் தான்.. இப்போ பாருங்க கரெக்ட்டா பண்ணுறேன்.. அதுவும் பேக் வார்ட் ஜாக்கிங்(backward).." என்றவளோ ஷ்யாமை பார்த்தவாறே பின்னோக்கி ஓடியவளின் பின்புறமிருக்கும் வளைவின் கீழேயிருந்த கம்பியைத் தாண்டி செல்லும் விதமாகப் பாதை அமைக்கப்பட்டிருக்க, அதை கவனியாதவளோ, அந்த கம்பியில் கால்களை நுழைக்க… அவள் ஓடிவந்த வேகத்தில் கால்கள் கம்பியின் கீழே மாட்டி இழுக்கப்பட்டது.

அதன் விளைவாய்,அபியின் முட்டியில் 'சதக்' என்ற ஒலி எழும்ப.. கண்களை இருட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.

அபி கீழே விழும் முன்னே ஓடிவந்து அவளைப் பிடித்திருந்த ஷ்யாமோ, அருகிலிருந்த இருக்கையில் அவளை அமர்த்தி, தானும் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து,ஷூவை கழட்டி கால்களை ஆராய்ந்தவாறே, அபியிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தான் அவளது பதற்றத்தைத் தணிக்கும் விதமாக.

"இதுக்கு தான் சொன்னேன் .. எப்பவும் தெரியாத விஷயத்தை தெரிஞ்ச மாதிரி பண்ணாதேன்னு! இப்போ யாருக்கு கஷ்டம் உனக்கு தானே!!"

"அப்போ.. எனக்கு வலிச்சா.. உங்களுக்கு அது கஷ்டமில்லையா ஷ்யாம்?? இதுவே ஆர்வியும், ஜீவாவும் இருந்தா துடிச்சிருபாங்க.." என்று முகத்தை சுருக்கியவாறு சொன்னவளின், முட்டியில் ‘ஸ்ட்ரைன் ரீமுவல் ஸ்பிரேயை’ அடித்தவாறே, "நீ பண்ணுற சேட்டைகளுக்கு எல்லாம் உன்னை அடிக்காம இருக்கேன்னு சந்தோசப்படு.. ஆமா, அது யாரு ஜீவா??அன்றைக்குச் சித்தியும் உன் அத்தைகிட்ட இந்த ஜீவாவைப் பற்றித் தான் பேசினாங்க.." என்றான் கேள்வியாய்.

"ஆண்ட்டி அத்தை கிட்ட ஜீவாவைப் பத்தி என்ன சொன்னாங்க ஷ்யாம்??" என்று பதற்றத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவளின் விழிகளோ சட்டென்று மேலே சொருக.. 'ம்..ம்..' என்று சுயநினைவற்று அனத்த ஆரம்பித்த அபியைக் கண்ட ஷ்யாமிற்கோ ஒரு நொடி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

அதற்குள், அவர்கள் அருகே கூடி விட்டனர் அங்கிருந்தவர்கள்.

"காத்து வரட்டும் கொஞ்சம் வழி விடுங்கப்பா!! தண்ணீர் கொஞ்சம் கொடுங்க.." என்று விதவிதமான குரல்கள் சுற்றியும் ஒலிக்க, எதுவும் ஷ்யாமின் மூளைக்குள் செல்லவில்லை. அவன் கவனம் முழுவதும் சுயநினைவற்று தன் மடியில் இருப்பவளின் மீது தான் பதிந்திருந்தது.

வெறுமனே அனத்திக் கொண்டிருந்தவள் திடீரென்று வலிப்பு வந்தது போல் கை கால்கள் ஒரு பக்கம் இழுக்க, தனது மேற்சட்டையைப் பிடித்து மேலே தூக்கியவாறே வாய் கோண, உடல் உதற ஷ்யாமின் மடியில் படுத்திருந்தாள் அபி.

அவளை அப்படிக் கண்டதும் உலகமே இருண்டது போல் தோன்றியது ஷ்யாமிற்கு. இதுவரை அவன் அப்படி அதிர்ந்து போய்.. அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் நின்றதில்லை. ஆனால், இன்றோ அவன் கைகளில் ஓர் உயிர்.. அதுவும் அவன் உயிரானவள் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டுத் திகைத்து நின்றான் ஷ்யாம்.

இருந்தும், இது செயல் பட வேண்டிய தருணம் என்று உணர்ந்தவனோ, அபியின் கைகளையும் கால்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள இறுக்கி நீட்டியிருந்த உடல் மெல்லத் தளர கண்களைத் திறந்தவளின் பார்வையோ ஷ்யாமின் மீதே நிலை குத்தி நின்றது.

"ஷ்யாம்!!" என்று உயிர் உருக அழைத்தவாறே மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் அபி. ஆனால், இம்முறை அவள் கண்கள் ஆழ்ந்த நித்திரையில் மூடிக்கொண்டது.

தன் மடியில் சிறுபிள்ளையென உறங்குபவளை அலேக்காக தூக்கியவனோ, காரின் முன் இருக்கையில் அமர வைத்து சீட் பெல்ட்டை மாட்டிவிட்டு, அங்கு உதவியவர்களிடன் நன்றி உரைத்துவிட்டு காரை எடுத்தான்.

மருத்துவமனையை நோக்கி கார் விரைந்து கொண்டிருக்க, அவன் அருகில் அதுவரையில் நித்திரையிலிருந்த அபியோ, மெல்ல தன் கண்களைத் திறந்து, "என்ன ஆச்சு ஷ்யாம்?? நா எப்படி காருக்கு வந்தேன்??" என்றாளே பார்க்கலாம்.. பிபி எகிறியது ஷ்யாமிற்கு… இருந்தும் தன்னை கட்டுபடுத்தியவனோ,

"அபி! இப்போ எப்படி இருக்க??" என்றான் இதமாக.

"எனக்கென்ன .. நா நல்லாயிருக்கேன் ஷ்யாம்! ஆனா நீங்க கேட்பதை பார்த்தா .. எனக்கு பார்க்ல பிக்ஸ் வந்துச்சா என்ன??" என்றாள் விழிகள் விரிய.

"அப்போ உனக்கு இதுக்கு முன்னமே இப்படி ஆகி இருக்கா??"

"ஆமா, நா செகண்ட் இயர் காலேஜ் படிக்கும் போது.. படியில இருந்து கீழே விழுந்து கால் உடைஞ்ச அப்போ இதே மாதிரி பிக்ஸ் வந்துச்சு.."

"உனக்கு தான் உடம்புக்கு முடியாதுன்னு தெரியும்ல.. அப்புறம் என்ன இழவுக்கு இந்த வாக்கிங் எல்லாம்??"

"ஏன் கோபப்படுறீங்க??"

" கோபப்படாம பின்னே.. உன்னை அப்படிப் பார்த்தும் எனக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சுடி.." என்றவன் சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு அவளை இழுத்து அணைத்திருந்தான்.

மிக அருகில் ஷ்யாமின் முகத்தைக் கண்டவளின் இதயமோ படுவேகமாக துடிக்க, அதற்கு இணையாகத் துடித்தது ஷ்யாமின் இதயமும்.

இந்த துடிப்பின் வேகம், தனக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தினால் தானா என்று எண்ணியவளின் கண்களின் ஓரம் ஈரம் சுரந்தது அவனின் மெய் அன்பினை கண்டுவிட்ட ஆனந்தத்தில்.

அதன்பின் இருவரும் சேர்ந்து மருத்துவரைச் சந்தித்து, அப்சர்வேஷனிற்காக மாலை வரை மருத்துவமனையிலேயே இருந்துவிட்டு மாலை வீட்டை நோக்கிச் சென்றனர்.

அபிக்கு பயப்படும் படி ஒன்றுமில்லை என்றும் காலில் ஏற்பட்ட அந்த 'சுலீர்' வலியினால், எங்கே இதற்கு முன்பு வந்தது போல் திரும்பவும் தனக்கு பிக்ஸ் வந்துவிடுவோமோ என்று அவளாகவே நினைத்துப் பயந்ததின் விளைவு தான் தற்போது பிக்ஸ் வரக் காரணம் என்று கூறிய மருத்துவரோ, காலில் ஏற்பட்ட சுளுக்கு சரியாக இரண்டு நாள் ஆகும், அதுவரையில் அதிகம் காலுக்கு அழுத்தம் தராமல் பார்த்துக்கொள்ளும்படி கூற, அபிக்கு எப்போதும் பிக்ஸ் வந்தால் ஏற்படும் தலைவலியைப் பற்றி கூறி அதற்குண்டான மருந்துகளையும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.

ஆர்வியின் தந்தை வழி சொந்தத்தில் நடைபெறும் விழாவிற்காக சொந்த ஊரிற்குச் சென்றிருந்த ஆர்வியோ, அபிக்கு நடந்ததைக் கேள்விப்பட்ட மறுநொடியே அங்கிருந்து கிளம்பி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். கூடவே, அவளுக்கு அழைத்தது நன்றாக அர்ச்சிக்கவும் தவறவில்லை ஆர்வி.

ஒருவழியாக, ஆர்வியிடம் பாவம் போல் பேசி சமாளிக்க முயன்று தோற்றவளோ..நிச்சயம் அவன் வந்து நன்றாகத் திட்ட போகிறான்.. அதைச் சமாளிக்க நமக்குத் தெம்பு வேண்டும் என்று எண்ணி, சாப்பிடுவதற்காகக் கீழே போகவேண்டும்.. அதற்கு முன்னால் முக்கிய கடமையையும் முடிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே, 'ரெஸ்ட் ரூம்' செல்வதற்காக எழுந்துகொள்ள முயன்றவளின், காலில் மீண்டும் அதே 'சுலீர்' என்ற வலி தோன்ற.. கண்களில் கண்ணீர் வர நின்றுகொண்டிருந்த அபியின் அருகே ஓடிவந்தான் ஷ்யாம்.. அவன் கைகளில் அவளுக்காக உணவிருந்தது.

"ஹே! அபி.. காலுக்கு அழுத்தம் கொடுக்க கூடாதுன்னு டாக்டர் சொன்னாரே.. மறந்திட்டியா? என்ன பண்ணுது? ரெஸ்ட் ரூம் ஏதும் யூஸ் பண்ணனுமா??" என்றான் அவள் தேவையை உணர்ந்தவனாய்.

அபியும் 'ஆம்' என்று தலையசைக்க, எவ்வித சிரமமும் இல்லாமல் அவளைத் தூக்கி சென்று குளியலறையில் இறக்கிவிட்டவனோ, அவள் வந்ததும் மீண்டும் அவளைத் தூக்கி வந்து படுக்கையில் அமர வைத்தான்.

பின், தான் கொண்டுவந்திருந்த உணவை அவளுக்கு ஊட்டி விட்டு.. அவள் அதை உண்டு முடித்ததும்… போட வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து அவளைப் போட வைத்தவன், அவள் படுக்க உதவினான்.

போர்வையை மெல்லப் போர்த்தி, நெற்றியில் இதமாக முத்தமிட்டு "குட் நைட் அபி! நல்லா தூங்கி எழு.. காலைல எல்லாம் சரியாகிடும்.." என்றான் ஆழ்ந்த குரலில்.

அவனது நெருக்கமும், அந்த குரலும், அவன் இன்று காட்டிய அக்கறையும், தானக்காக துடித்த துடிப்பும் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து அபியை என்னவோ செய்ய, 'குட் நைட்' என்று முத்தமிட்டுச் சென்றவனின் கைகளை பற்றியிருந்தாள் அவள்.

"என்னடா?? எதுவும் வேணும்மா??"

"ம்ம்ம்ம்!"

"என்ன?"

" என் மேல ஏன் இவ்வளவு அக்கறை காட்டுறீங்க ஷ்யாம்?"

"ஏன்னா… உன்னை இங்க என்னை நம்பி தான் அனுப்பி இருக்காங்க.. நீ என் பொறுப்பு அதான்.."

"அதுமட்டும் தானா??" என்றவளின் விழிகளோ, ' இல்லை அதற்கும் மேல் நீ எனக்கு முக்கியம்னு சொல்லு..' என்று கேட்பது புரிந்தும், "அவ்வளவு தான்" என்றான் அவன்.

"ஆனா, எனக்கு அப்படி இல்லை ஷ்யாம்.. இன்றைக்கு முதல் முதலா பதினோரு வருஷம் கழிச்சு.. நா என் அம்மாவோட கதகதப்பை உங்க கிட்ட உணர்ந்தேன்!" வலி நிவாரணி மாத்திரையின் விளைவால் பாதி மயக்க நிலையில் குழறலாகப் பேசினாள் அபி சுயநினைவற்று.

"அம்மாவா??" என்றவனுக்குத் தெரியுமே.. அபி தாய் தந்தை அற்றவள் என்பதும். அவள் தன் அத்தையின் பராமரிப்பில் வளர்வதும்.

"ஆமா, அம்மாவே தான்! அவங்க இறக்கும் போது எனக்குப் பத்து வயசு தான் ஷ்யாம்.. திருவிழாவுக்காக அத்தை வீட்டுக்கு போய்விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது ஆக்சிடென்ட்… எல்லாம் முடிஞ்சது.. ரொம்ப சந்தோஷமான குடும்பம் தெரியுமா எங்களுடையது.. ஆனா அந்த சந்தோஷம் எல்லாம் ரொம்ப நாள் நிலைக்கவில்லை ஷ்யாம்…அன்னைக்கு ஜீவா மட்டும் அடம் பண்ணி என்னை அத்தை வீட்டிலேயே இருக்க வைக்கவில்லைனா.. நானும் அப்போதே போய் இருப்பேன்.." என்று விரக்தியில் கூறியவளின் தலையை வருடியவனோ,

"அம்மா அப்பா எப்போதும் உன் கூட தான் இருப்பாங்க .. நீ எதையும் நினைக்காம இப்போ கண்ணை மூடி தூங்கு பார்போம்...." என்றான் மென்மையாய்.

"எனக்கும் இன்றைக்கு தான் அது தெரிந்தது ஷ்யாம்!!" என்று மெல்லிய புன்னகையுடன் கூறியவளோ, தொடர்ந்து பேசலானாள்.

" அம்மா அப்பா போனதுக்கு அப்பறம் அத்தையும் மாமாவும் என்னை ரொம்பவே நல்லா பாத்துகிட்டாங்க ஷ்யாம்… அதுவும் ஜீவா.. அவனுக்கு சின்னதுலிருந்தே நான் தான் உயிர்.. எனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான் தெரியுமா?? நா ஒன்றுமே பண்ணியதில்லை அவனிற்க்காக.. என்னால் தான் அந்த அழகான குடும்பத்துக்குள்ள பிரச்சனை.. என் மேல அவங்க வச்ச அளவுகடந்த பாசமே இப்போ எங்கள் அனைவருக்கும் வில்லன் ஆகிட்டுச்சு.. நா எல்லாவற்றையும் சரி பண்ணிவிடுவேன் ஷ்யாம்.. என்னை நம்புகிறீங்க தானே??"

"நம்புகிறேன்டா!" கண்களில் ஏக்கத்தைத் தேக்கிக் கேட்பவளிடம் வேறு என்ன தான் கூற முடியும் ஷ்யாமாலும்.

"ரொம்ப தேங்க்ஸ் ஷ்யாம்! இன்றைக்கு நீங்க என்னை பார்த்துகிட்டது எனக்கு என் அம்மாவே கூட இருந்து பார்த்துகிட்ட மாதிரி இருந்துச்சு.. என்னோட அம்மாகிட்ட நான் உணர்த்த அதே கதகதப்பை உங்ககிட்டேயும் உணருறேன் ஷ்யாம்.. உங்க கூட இருக்கும்போது ரொம்பவே கம்ஃபோர்ட்ட்டா ஃபீல் பண்ணுறேன் .. எப்படி சொல்லுறதனு தெரியலை.. ஆனா, நீங்க எப்பவும் என்கூடவே இருங்கனும் போலவே இருக்கு.. இருப்பீங்களா ஷ்யா….ம்…" என்றவாறே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள் அபி. ஷ்யாமுடன் மனம் விட்டுப் பேசியதன் விளைவாய்.

தன் நினைவின்றி பேசியவற்றை எல்லாம் அபி அறிந்திருக்கவில்லை என்றாலும், முழு சுயநினைவில் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஷ்யாமின் மனதிலோ பலவித மாற்றங்கள்.

அவளால் அவள் அத்தை குடும்பத்தில் என்ன பிரச்சனை?? என்று தெரியாவிட்டாலும்.. இனி அவளை எவ்வித துன்பங்களும் நெருங்காமல் அரனாய் பாதுகாப்பாய் நாமிருக்க வேண்டும் என்ற உறுதியுடன் அவளருக்கிலேயே நாற்காலியில் அமர்ந்து அவளைப் பார்த்தவாறே உறங்கிப் போனான் ஷ்யாம்.

காதலின் இதம் தொடரும்…

 
காதலே - 6

காலையில் கண் விழித்த அபிக்கு, இரவு என்ன நடந்தது என்பது துளியும் ஞாபகமில்லை.

எதோ பேசினோம், என்பது மட்டும் ஞாபகத்திலிருக்க… அது என்னவென்று மறந்துவிட்டது.

'அப்படி என்ன தான் பேசியிருப்போம்! ' என்று தீவிர சிந்தனையிலிருந்தவளின் முன் வந்து நின்றான் ஆர்வி.

ஐந்து நாள் நிகழ்ச்சி என்று சென்ற நண்பன் ஒரே நாளில் திரும்ப வந்த மகிழ்ச்சியில், "டேய்!! ஆர்வம்… எப்போ வந்தடா??" என்றாள் அபி மகிழ்வாய்.

"நா வந்தது இருக்கட்டும் … மேடம் நேத்து எங்கேயோ விழுந்து சில்லறை பொறுக்கினீங்களாமே!! இன்ஃபர்மேஷன் வந்துச்சு …"

"நீ வாய மூடு மேன்.. அடிபட்டு கிடக்கிறவகிட்ட இப்படித்தான் பேசுவாங்களாடா எருமை??பாசமா ஒரு விசாரிப்பு கூட இல்லை.."

"சரி சீரியஸ்ஸாவே கேட்கிறேன்.. உனக்கு அறிவு இருக்கா இல்லையா?? எவனாவது பின் வாக்கில் ஜாக்கிங் போவானாடி??"

"நா போவேன் ஆர்வி!! பிகாஸ் நான் தான் லெஜெண்ட் ஆச்சே!!" என்றவளை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்துக்கொண்டிருந்த ஆர்வியின் பார்வையை புரிந்துகொண்டு, அவன் திருவாயிலிருந்து அடுத்து அற்புதமான வார்த்தைகள் வரும் முன் தானே முந்திக்கொண்டு பேசலானாள் அபி.

"என்னைப் பார்த்தா பாவமா தெரியலையா உனக்கு??" பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு கால் சுளுக்கிற்காகப் போட்டிருந்த கட்டினை காட்டினாள் அபி.

"நிச்சயமா பாவமாயில்லை அபி.. உனக்கு ஏதாவது ஆச்சினா எங்க நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சு பாருடி… உன்னோட குறும்பு, விளையாட்டுத் தனம் எல்லாம் சரி தான்… ஆனா எல்லாத்துளையும் கவனம் வேணும்ல.. "

" உன்னால தான் என் கவனம் சிதறுச்சு ஆர்வி!" மீண்டும் பாவம் போல் முகத்தை வைத்து பாவனையாகச் சொன்னாள் அபி.

"எதே???" - ஆர்வி

"ஆமாடா… நா கேட்டும் நீ ஜீவா கிட்ட பேசலைன்னு ஃபீலிங்-ல எனக்குக் கவனம் சிதறிடுச்சு.."

"கொஞ்சமாச்சும் லாஜிக் இருக்கான்னு பாருடி நீ பேசுறதுல.."

"லாஜிக் எல்லாம் எனக்குத் தெரியாது… கடைசியா கேக்குறேன் .. நீ ஜீவாக்கு கால் பண்ணுவீயா இல்லையா???"

" இல்லை!!"

"அப்போ.. போ.. நா இனி டேப்லெட் சாப்பிட மாட்டேன்.. அப்படி நான் டேப்லெட்ட ஸ்கிப் பண்ணா என்ன ஆகும்னு தெரியுமா?? எனக்குத் திரும்ப பிக்ஸ் வரும் .. சொல்ல முடியாது.. ஒருவேளை சிவியர்ரா வந்து நா போய்ச் சேர்ந்தாலும் சேர்ந்திடுவேன்.." என்று அபி கூறி முடிக்கும் அவளது வாயை கைகளால் மூடியிருந்தான் ஷ்யாம்.

"என்ன பேச்சு பேசுற நீ??" அதட்டலாக வந்தது ஷ்யாமின் குரல்.

தன் வாயை மூடியிருந்த கைகளை மெல்ல விலக்கியவள் பேசலானாள்.

"உண்மையைத் தான் சொன்னேன் ஷ்யாம்.. எனக்கு மைண்ட் ஸ்ட்ரெஸ்ல இருந்தா திரும்ப பிக்ஸ் வர சான்ஸ் இருக்கு.. அதைச் சொன்னாலும் இந்த ஆர்வி புரிஞ்சிக்க மாட்டேங்குறான்.." என்ற அபியின் குற்றச்சாட்டிற்கு ஷ்யாம் பதிலளிக்கும் முன் பதிலளித்திருந்தான் ஆர்வி.

"இப்போ என்ன?? நா அவனுக்கு கால் பண்ணி பேசணும்.. அதானே!! சரி பேசுறேன்.. நீ எதையும் நினைச்சு குழம்பி.. திரும்ப எதையாவது இழுத்து வச்சிடாத.."

"உண்மையாவா ஆர்வி??"

"ஆமா!! உண்மையா தான்! அவன் கிட்ட என்ன சொல்லணும் அதை சொல்லு??"

"தேங்க்ஸ்டா ஆர்வம்... ராகினி அக்கா வளைகாப்புக்குப் போக சொல்லு.. அங்க அத்தையும் மாமாவும் என்ன பேசினாலும் கண்டுகொள்ளாமல் பங்க்ஷனை ஒழுங்கா அட்டெண்ட் பண்ண சொல்லு.. அப்புறம் முக்கியமா நா ஃபோன் பண்ணா அட்டெண்ட் பண்ண சொல்லு.." என்றவளது கைகளை பற்றியவனோ,

"தேங்க்ஸ் எல்லாம் சொல்லுறாங்க பெரிய மனுஷி.. உன்னை மாதிரி என்னால அவனை உடனே ஏத்துக்க முடியாட்டியும்.. முயற்சி பண்ணுறேன் அபி.. உனக்காக.." என்று மென்மையாகக் கூறிவிட்டு, தனது அலைபேசியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று வெளியேற..

மொழி புரியா படத்தை 'சப்-டைட்டில்' இல்லாமல் பார்ப்பது போல் முழித்துக்கொண்டிருந்தான் ஷ்யாம்.

"இவன் யார் கிட்டப் பேச இப்படி வேகமா போறான்??" ஷ்யாமின் கேள்வியில் அவன் புறமாகக் கவனத்தை திருப்பினாள் அபி.

" ஜீவா கூட!! அவனை விடுங்க ஷ்யாம்.. நா உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்.. நாளைக்கு ஆஃபீஸ் வர மாட்டேன் .. வெளியே ஒரு வேளை இருக்கு… சோ அங்கே போறேன்"

"கால் இருக்க நிலைமையில் இது ரொம்ப அவசியமா.. ஒரு வாரத்துக்கு.. வீட்டை விட்டு எங்கேயும் போகக் கூடாது.. "

"பிளீஸ் ஷ்யாம்.. இந்த குழந்தை பிள்ளையைப் பார்த்தா பாவமா இல்லையா??"

"இல்லை.. நா சொன்னது தான்.. ஒன் வீக் நீ கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும்.. அதுக்கு அப்புறம் வெளியே போய்களாம்.." என்று ஷ்யாம் உறுதியாய் கூறிவிட, அபி எவ்வளவு முயன்றும் அவனிடம் சம்மதம் வாங்க முடியாமல் போனது.

அதன்பிறகு, ஆர்வியை அழைத்துப் பேசச் சொல்ல.. அவனாலும் ஷ்யாமிடமிருந்து சம்மதம் வாங்க முடியவில்லை.

ஒரு வழியாய் ஒரு வாரம் கழித்து, ஆர்வியுடன் போவதானால் அபி வெளியே செல்லலாம் என்று ஷ்யாம் கூற, ஆர்வியை இழுத்துக்கொண்டு பறந்துவிட்டாள் அபி.

ஆர்வியின் கருநீல 'யமஹா ஃபேஸர் 25' ஹைவேயில் சீறிக்கொண்டிருக்க, அவனுக்குப் பின்புறமிருந்த அபியோ தீவிர யோசனையில் ஈடுபட்டிருந்தாள்.

அவர்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்த பிறகும், தன் யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தவளின் தோள்களை உலுக்கி சுயநினைவிற்கு அவளைக் கொண்டு வந்தான் ஆர்வி.

"அப்படி என்ன தீவிர யோசனை மேடம்??"

"இந்த அழகா இருக்கப் பசங்களாம் ஏன்டா ரொம்ப டெரர்ரா இருக்காங்க??"

"யார் இப்போ அப்படி இருக்கிறது??"

"வேறு யார்.. உன் நோண்ணன் தான்.. ஒரு சமயம் பால் கோவா மாதிரி அவ்வளவு ஸ்வீட்டா இருக்கார்.. ஆனா, சில சமயம் திடீர்ன்னு அவரோட ஹிட்லர் அவதாரத்துக்கும் வந்திடுறார்.. அவர் சொல்லுவதைத் தான் நாம கேட்கவேண்டுமாம்.. நாம சொன்னா அவர் அதைக் கேட்க மாட்டாராம்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை.. அவரை போலவே எங்க பிள்ளைங்க வந்து அவரை டார்ச்சர் பண்ணினால் தான் தெரியும்.. என் கஷ்டம் என்னன்னு.."

தன் போக்கில் பேசிக்கொண்டிருந்த அபியையை இடைநிறுத்தியது ஆர்வியின் கேள்வி.

"ஹே! என்ன சொன்ன?? என்னமோ பிள்ளைங்கன்னு சொன்னீயே?? என்ன அது?"

ஆர்வி கேட்டதும் தான், அதுவரையில் தான் என்ன கூறிக்கொண்டிருந்தோம் என்பதே அபிக்கு புரிய.. 'என்ன?? எங்க பிள்ளைகளா??நானா இப்படிப் பேசினேன்??' என்று ஆயிரமாயிரம் கேள்விகள் எழ திகைத்து நின்றாள் அபி.

காதலின் இதம் தொடரும்...

 
Last edited:
காதலே - 7

அபியின், திகைப்பெல்லாம் கணப்பொழுது தான். உடனே தன்னை சமன் செய்தவளோ, "டேய்! ஏதாவது லூசு மாதிரி உளராம வா.. ரம்யா மிஸ்ஸை பார்க்கப் போவோம்…" என்று அழைக்க,

ஆர்வியோ, "எனக்கு என்னமோ அப்படி தான் கேட்டுச்சு.. சரி விடு .. நீ போய் ரம்யா அக்காவை பார்த்திட்டு வா. எனக்கு வெளியே ஃப்ரெண்ட்ஸ் கூட மீட்டிங் இருக்கு.உன் புண்ணியத்தில் எப்படியோ இன்னைக்கு நானும் ஃப்ரீ.. கிளம்பும்போது மறக்காம கால் பண்ணுடி! பிக்கப் பண்ணிக்குறேன்.." என்று கூறிவிட்டுச் செல்ல, அபியோ திகைத்து நின்ற தனது மனதை ஒருநிலைப் படுத்திக்கொண்டு ரம்யாவைப் பார்க்கச் சென்றாள்.

அந்த அறை முழுவதும் அவ்வளவு தூய்மையாக இருந்தது. ஒரு இண்டு இடுக்கில் கூட தூசின்றி அத்தனை சுத்தம். இதற்குக் காரணம் ரம்யா மிஸ் தான் என்று அறிந்தவளோ, வாயிலிலிருந்தே 'ரம்யா மிஸ்! ரம்யா மிஸ்!' என்று அழைத்துக்கொண்டுச் செல்ல, அவள் எதிரே வந்தாள் ரம்யா.

மஞ்சளும் பச்சையும் கலந்த சுடிதாரில் தேவதையென வந்த ரம்யாவை பார்த்ததும், எப்போதும் சொல்லும் அதே வசனத்தை இன்றும் சொல்லியிருந்தாள் அபி "மிஸ்! நீங்க ரொம்ப அழகு!".

ரம்யாவிற்கு இது பழக்கப்பட்ட ஒன்று தான் என்பது அவளது புன்னகையிலேயே தெரிந்தது. அபியைப் பற்றி தான் ரம்யா அறிவாளே.. கிட்டத்தட்ட அபியின் பதிமூன்று வயதிலிருந்தே அவளை ரம்யாவிற்கு தெரியும்.

காலங்கள் ஓடினாலும் இன்றும் முதல் நாள் பார்த்த போது கூறிய அதே வசனத்தை அச்சு பிசகாமல் அப்படியே கூறும் அபியைக் கண்டு வாஞ்சை பெருகியது ரம்யாவிற்கு.

சிலர் வயதால் சிறியவர்களாக இருந்தாலும் மனதால் பெரியவர்களே! மதிப்பும் மரியாதையும் ஒருவரின் வயதைக் கொண்டு மட்டும் வந்துவிடுவதில்லை.. அவரது குணாதிசயங்களையும் நற்பண்புகளையும் கொண்டு தான் வரும்.

அந்த வகையில் பார்த்தால் அபியும் ஜீவாவும் அவளைப் பொறுத்த வரையில் வைரங்கள். யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.. தனது சுக துக்கங்களில் தன்னுடனிருந்த இருவரையும் 'எப்போதும் நான் விட்டுதர மாட்டேன்' என்கிற மனநிலையில் ரம்யா.

இருக்காதா பின்னே! திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் கணவனை இழந்து, மீண்டும் தாய் வீட்டிற்கு வந்தவளை ஊரே ராசியில்லாதவள் என்று தூற்றும் போது.. அவளை அரவணைத்த இரு தூய்மையான உள்ளங்கள் ஜீவாவும் அபியும் தானே.

சில சமயங்களில், எல்லாம் நம் கைமீறிப் போகும்போது.. இனி அவ்வளவு தான் எதுவுமே செய்ய முடியாது என்கிற நிலையிலிருந்தாலும், ஒன்றுமில்லை எல்லாம் சரியாகிவிடும்.. உன்னுடன் நானிருக்கிறேன் என்கின்ற நம்பிக்கையைத் தர ஒரு ஜீவன் உடனிருந்தால் போதும்! அந்த நம்பிக்கையைப் பற்றிக்கொண்டே நாமும் முன்னேறிவிடுவோம்!

அதே போன்றதொரு நம்பிக்கையைத் தான் ரம்யாவிற்கு தந்திருந்தனர் ஜீவாவும் அபியும்.

அபியின் பதினெட்டு வயதில் ஜீவாவுடன் சேர்ந்து துடங்கியது தான் 'வெளிச்சம் பவுண்டேஷன்' என்கிற அறக்கட்டளை.

அதன் மூலம் இன்று பயன்பெறுபவர்கள் ஏராளம். வாழ்க்கை துடங்கும் முன்னே முடிந்து விட்ட விரக்தியில் வாழ்ந்து கொண்டிருந்த ரம்யாவிற்கு பற்றுக்கோலாக அமைந்ததும் இதே அறக்கட்டளை தான்.

வாழ்க்கை பலருக்கும் பலவிதமானதாக அமைகிறது. இதில் கொடுமை என்னவென்றால் உடலில் ஏற்படும் உடலியல் மற்றும் மனவியல் மாற்றங்களைக் கட்டுப்படுத்த நம்மால் முடியாது என்கிற அடிப்படை எண்ணம் கூட அற்று, தன் மகன் ஒரு திருநங்கை, மகள் ஒரு தருநம்பி அல்லது தங்கள் பிள்ளை ஒரு ஓர்இன சேர்க்கையாளன் என்பதை இங்கு பெரும்பாலான பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை வீட்டை விட்டுத் துரத்துவது தான் கொடுமையிலும் கொடுமை.

இதற்கு சமூகமும் அதன் ஏச்சு பேச்சுகளும் ஒரு காரணமாக இருந்தாலும்.. மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் மிக முக்கிய காரணம்.

என்று மூன்றாம் பாலினத்தவரையும் சக மனிதனாக மதித்து விசித்திரமாய் பார்க்காது கடந்து சொல்கிறோமோ அன்று தான் இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிட்டும்.

ஆனால்,தங்களை மட்டுமே நம்பி இவ்வுலகில் ஜனித்திருக்கும் ஓருயிர்.. அதன் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களை ஏற்கவும் முடியாமல் உதாசீன படுத்தவும் முடியாமல் சிக்கி தவிக்கையில்.. அதற்கு மனதளவில் தைரியமளிக்க வேண்டிய சமயத்தில் எதோ நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்கின்ற அற்பக் காரணத்தினால், வீட்டை விட்டு வெளியே துரத்தினால் பாவம் என்ன தான் செய்யும் அந்த ஜீவன்?? பாவமில்லையா??

இவ்வாறு வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவுவதற்காக உருவாகப்பட்டது தான் இந்த 'வெளிச்சம் பவுண்டேஷன்'.

வெளிச்சம் பவுண்டேஷனின் நிருவாக பொறுப்பு முழுவதும் ரம்யாவையே முழுவதுமாக பார்த்துக்கொள்ளும்படி ஒப்படைத்தனர் ஜீவாவும் அபியும். அதை எவ்வித குறைகளுமில்லாமல் திறம்பட நடத்தியும் வருகிறாள் ரம்யா.

ரம்யாவிற்கு வீட்டில் வரன் பார்க்க, 'எனக்கு கல்யாணம் வேண்டாம்' என்று ஒரே பல்லவியை மீண்டும் மீண்டும் பாடுபவளை மறு(திரு)மணத்திற்கு ஓத்துக்கொள்ள வைக்கவேண்டித் தான் வந்திருக்கிறாள் அபி என்னும் சூரப்புலி.

"மிஸ்.. எங்கே ஆளையே காணோம்.. வாட்ஸ்-அப் கூட வரவில்லை.. ரொம்பத் தேடினேன் உங்களை.." என்ற அபியின் கேள்வியில், தன்னுடைய மௌனத்தையும் கவனித்துக் கேட்கும் இந்த அன்பு மெய் சிலிர்க்க வைத்தது ரம்யாவிற்கு.

"ஒன்றுமில்லையடா அபி!! கொஞ்சம் ஸ்ட்ரெஸ்.. அதான் எல்லா சோசியல் மீடியாவிலிருந்தும் வெளியே வந்துட்டேன்.. "

"என்ன மிஸ் நீங்க?? எவ்வளவு ஸ்ட்ரெஸ் இருந்தாலும் நாலு ட்ரோல் வீடியோ.. அஞ்சு மீம்ஸ் பார்த்தா.. அந்த ஸ்ட்ரெஸ் ஓடி போகபோகுது.. அதை விட்டுவிட்டு இப்படி எல்லா பிளாட்ஃபோரம்-ல இருந்தும் பிரேக் எடுக்கிறது சரியில்லை.."

"சரிங்க அபி மேடம்.. இனி இப்படிப் பண்ணலை.. ஈவினிங் வீட்டுக்குப் போனதும் வாட்சப் வரேன்.. போதுமா??"

"அது போதுமே!!"

"மிஸ்.. நம்ம ட்ரஸ்ட்ல உள்ளவர்களுக்கு இந்த மாத இறுதியில் கவுன்சிலிங் வைக்கலாம்னு பிளேன் பண்ணியிருக்கேன்.. நீங்க அதற்கான ஏற்பாட்டை பாருங்க.. அப்படியே இந்த ஜீவா பய கிட்டையும் சொல்லிடுங்க…"

"கவலையே படாத அபி .. எல்லாம் நா பார்த்துக்கிறேன்.. ஆமா, இன்னுமா நீங்க ரெண்டு பேரும் பேசல??"

"ஆமா மிஸ்.. அவன் தான் என் நம்பரை ப்ளாக் பண்ணி வச்சியிருக்கான்.. இருக்கட்டும்.. எவ்வளவு நாள் தான் என் கூட பேசாம சார் இருப்பாருன்னு.."

" இந்த வீம்புக்கு ஒரு குறையும் இல்லை.. ஒழுங்கா சீக்கிரம் சமாதானம் ஆகுங்க.."

"கண்டிப்பா மிஸ்.. ராகினி அக்கா வளைகாப்புக்கு அவன் போகட்டும்.. அப்போ தான் நானும் பேசுவேன் அவன்கிட்ட.." என்றவள் அதன் பிறகு சிறிது நேரம் ரம்யாவிடம் பேசி கொண்டிருந்துவிட்டு விடைபெற, அவளுக்கு அலைபேசியில் அழைத்திருந்தான் ஷ்யாம்.

"ஹலோ! சொல்லுங்க ஷ்யாம்.."

"எங்கே இருக்க?? போன வேலை முடிந்ததா?? ஆர்வி கூட இருக்கிறான் தானே??"

" அம்மாடி.. எத்தனை கேள்வி?? கொஞ்சம் மூச்சு விடுங்க ஷ்யாம்.. ஆர்வியை ஒரு வேலை விஷயமா வெளியே போக சொல்லியிருக்கேன்.. என்னுடைய வேலை முடிஞ்சிடுச்சு.. நா இப்போ பஸ்-ல வந்துகிட்டு இருக்கேன்.."

"என்ன?? கால் இன்னும் குணமாகலை.. அதற்குள்.. உன் சேட்டையைக் காட்ட அரம்பிச்சிட்டியா??இப்போ எதுக்கு பஸ்ல அலைஞ்சு காலை ஸ்ட்ரைன் பண்ணுற?? " என்ற ஷ்யாம் குரலின் டெசிபெல் அளவு கூடவும், சுதாரித்துக் கொண்ட அபியின் மூளையில் புதிய திட்டம் ஒன்று தோன்ற.. அதைச் செயல்படுத்த எண்ணி,

"ஷ்யாம் நீங்க இப்போ எங்கே இருக்கீங்க??" என்றாள் ஆர்வமாய்.

" நியர் மேட்டுப்பாளையம்.. ஏன்??"

"நானும் இப்போ கே.கே நகர் கிட்டே தான் இருக்கேன்.. நீங்க அப்படியே மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் வந்திடுங்க.. நாம சேர்ந்து IPL பிராக்டிஸ் மேட்ச் பார்க்க சேப்பாக்கம் போகலாம்.. பிராக்டிஸ் மேட்ச்க்கு என்ட்ரி டிக்கெட் கூட கிடையாதாம் .. நாம ஜாலியா போகலாம் ஷ்யாம் .. இந்த ஆர்வி இருந்தா அவனைக் கூப்பிட்டு இருப்பேன்.. எனக்கு ஸ்டேடியம்ல போய் மேட்ச் பார்க்க.. ஆசை.. போகலாமா ஷ்யாம்??"

"இப்போ என்ன.. உனக்கு மேட்ச் பார்க்கணும் அவ்வளவு தானே!! விடு.. சென்னையில் நடக்கிற முதல் மேட்ச் டிக்கெட் உன் கையில் இன்னைக்கு நயிட் இருக்கும்.. ஒழுங்கா வீட்டுக்கு போ.. இல்லைனா.. பஸ் ஸ்டாப்ல இறங்கு.. நா வரேன் பிக்கப் பண்ண.."

"ஒன்னும் வேண்டாம்.. நானே போய்கிறேன்… ஆனா, உங்களுக்கு என் மேல பாசமே இல்லைன்னு மட்டும் நல்லா தெரியுது ஷ்யாம்.. இதுவே ஜீவாவோ, ஆர்வியோ இருந்திருந்தா நா சொன்னதும்.. ஓகே சொல்லியிருப்பாங்க.."

எதற்கெடுத்தாலும் அந்த ஜீவா பெயரையும் ஆர்வியையும் உள்ளிழுக்கும் அபியைக் கண்டு கோபம் தான் வந்தது ஷ்யாமிற்கு.. அதை ஒருவகையில் பொறாமை என்று கூடச் சொல்லலாம். தன்னை விட அவர்கள் இருவருக்கும் அவள் முன்னுரிமை தருவது பிடிக்காது.. உடனே தானே அவளுடன் வருவதாக ஒப்புக்கொண்டான் ஷ்யாம்.

"சரி நானே வரேன்.. எங்கே வெய்ட் பண்ணட்டும்??"

" நீங்க எங்கேயும் வெய்ட் பண்ண வேண்டாம்.. நா இப்போ அசோக் பில்லர்ல தான் இருக்கேன் .. 5E பஸ்ல வந்துகிட்டு இருக்கேன்.. நீங்க நேரா.. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் வந்திடுங்க.. நாம சேர்ந்து போகலாம்!!"

"வாட்?? பஸ்லையா??"

"ஆமா.. மாம்பலம் வரை பஸ்.. அப்புறம் ட்ரெயின்.. கார்ல போனா என்ன கிக் இருக்கு?? இப்படி போனா தான் ட்ராவல் பண்ணுற ஃபீல் வரும்.. சீக்கிரம் பஸ் ஸ்டாப் வாங்க நீங்க... நா பஸ் கிட்டே வந்ததும் கால் பண்ணுறேன்.. நீங்க அதுல ஏறிடுங்க.. சரியா??"

"சரி!சரி! வரேன்" என்ன செய்யக் காத்திருக்கிறாளோ என்கிற பீதியுடன் வருவதாகச் சொன்னான் ஷ்யாம்.

மேட்டுப்பாளையம் அருகே அபி வந்துகொண்டிருந்த பஸ் வரவும், அந்த பக்கம் அதிகம் பரிச்சயம் இல்லா காரணத்தினாலும், ஷ்யாமிடம் எல்லா ஏரியாவும் தெரியும் என்பது போல் பில்டப் செய்து வைத்ததினாலும் தனக்கு எதுவும் தெரியாது என்பது கடுகளவும் வெளியே கசியக் கூடாது என்று தனது தோழியிடம் பில்லரில் இருந்து மேட்டுப்பாளையம் எத்தனையாவது ஸ்டாப் என்று கேட்டு, எண்ணிக் கொண்டே வந்தவள்.. இடையில் ஒரு நிறுத்தத்தை எண்ணாமல் விட்டிருக்க, பஸ் மேட்டுப்பாளையத்தில் நிற்கவும் ஷ்யாமிற்கு கால் செய்து,

" ஷ்யாம்.. இப்போ ஒரு பஸ் வரும் பாருங்க.. அதுல தான் நான் இருக்கேன்.. ஏறுங்க" என்று சொன்னாள்.

"எனக்கு முன்னாடி ஒரு பஸ் நிற்குதே அதுவா??"

"அதுயில்லை ஷ்யாம்.. இனி வரும் பாருங்க.. குழந்தை பிள்ளைக்கு சொல்லுற மாதிரி உங்களுக்கு சொல்லணும் போல.." என்று சலித்துக்கொண்டே அபி ஜன்னலின் புறம் திரும்ப.. அங்கே நின்று கொண்டிருந்தான் ஷ்யாம்.

அபி சுதாரித்து அவனை அழைக்கும் முன் பஸ் கிளம்பிவிட, அவசரமாக தன் அருகே அமர்ந்திருந்த பாட்டியிடம் 'இது எந்த நிறுத்தம்' என்று விசாரிக்க, அவரோ 'மேட்டுப்பாளையம்' என்றார்.

'ஐயோ.. சொதப்பிட்டியே அபி!' என்று மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டவள்.. உடனே ஷ்யாமிற்கு அழைத்து விஷயத்தைக் கூற, அவன் காய்ச்சி எடுத்துவிட்டான் அவளை.

"நா வேற பஸ்ல ஏறிட்டேன் அபி.. நீ தி.நகர் டிப்போ-ல இறங்கு.." என்று ஷ்யாம் கூறவும்,

"அய்யயோ! ஷ்யாம்.. நா அடுத்த ஸ்டாப்பில் இறங்கி.. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து வந்துகிட்டு இருக்கேனே!! இப்போ என்ன பண்ணுறது??" என்றாளே பார்க்கலாம்.. ஷ்யாம் அயர்ந்துவிட்டான் அவள் செயல்களில்.

அதன் பிறகு அபி வேறு ஒரு பேருந்தில் ஏறி, கண்ணம்மாபேட்டையில் இறங்க, அங்கு ஏற்கனவே அபி கூறியபடி இறங்கியிருந்தான் ஷ்யாம்.

இரண்டு இரயில் ஏறி, ஒருவழியாக இருவரும் சேப்பாக்கம் வந்து சேர்ந்தனர்.

இடையில் ரயிலில் விற்ற சமோசாவை வேறு 'மேட்ச் பார்க்கும் போது ஸ்னாக்ஸ்' என்று அபி வாங்கியிருக்க, அந்த சமோசா பாக்கெட்டை கையில் வைத்தவாறு, 'எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க..' என்று துள்ளிக்கொண்டு வந்தவளை வரவேற்றது இழுத்து மூடிய சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் பெரிய கதவு.

"என்ன ஷ்யாம் டோர் லாக் ஆகியிருக்கு??" என்றாள் அப்பாவியாய்.

ஷ்யாமும் என்னவென்று புரியாமல் அங்கிருப்பவர்களிடம் விசாரிக்க, அப்போது தான் தெரிய வந்தது.. 'கொரோனா கட்டுப்பாடு காரணமாக பிராக்டிஸ் மேட்ச் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை' என்பதும், அதைப் பற்றிய தகவல் அனைத்து IPL அதிகாரப் பூர்வமான சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது என்றும்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் அபியோ, 'நமக்குக் கட்டம் சரியில்லை போல.. எல்லாமே இப்படி பல்ப் கொடுக்குதே.. சே!! இந்த இன்ஸ்டா-ல தானே கிடையா கிடந்தோம்.. இதை எப்படி கவனிக்காமல் விட்டோம்?? இப்போ இவன் வேற திட்டுவானே.. சரி சமாளிப்போம்' என்று தனக்குள்ளேயே பேசியவாறு ஷ்யாமை நோக்கி 'ஈஈஈ..' என்று இளிக்க..ஷ்யாமோ,

"என்ன இவ்வளவு தானா உன் பிளான்.. இல்லை இன்னும் வேற எதுவும் சிரிப்பு காட்ட பிளான் பண்ணியிருக்கியா??" என்றான் கண்களில் சிரிப்புடன்.

'என்ன இவன் நம்மள திட்டமா நார்மல்லா பேசுறான்' என்று எண்ணியவள், "கிண்டல் பண்ணாதீங்க ஷ்யாம்!!" என்றாள் சிணுங்கலாய்.

சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிரவுண்ட்டை மட்டும் எட்டி பார்த்துவிட்டு, அபி வாங்கிய சமோசாவைச் சாப்பிட்ட வாறே வீட்டை நோக்கிக் கிளம்பினர் இருவரும்.

என்ன தான் போட்ட திட்டங்கள் அனைத்தும் சொதப்பலாக முடிந்திருந்தாலும், இந்த நாள் அபி மற்றும் ஷ்யாமின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது என்னவோ உண்மை.

காதலின் இதம் தொடரும்…


 
Status
Not open for further replies.
Top